பிரான்ஸ் தேசத்து மன்னரும் மற்றையோரும், இனிமேல் சிலுவை யுத்தத்தைக் கனவிலும் கருதுவதில்லையென்னும் வைராக்கியத்துடனே மிஸ்ரைக் கைவிட்டுத் தரை மார்க்கமாக வெளயேறிச் சென்று விட்டார்கள். கடுங்ககோடையின் முதிர் வேனிலின்த

கிப்பினூடே அவர்கள் சுருண்டு சுருண்டு விழுந்து கொண்டு நெடுவழியேகினார்கள். போப்பாணடவரின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டுவந்த “முனிவர் லூயீ”யின் கதி இத்தகைய பரிதாபகர முடிபையெல்லாம் சுவைக்க நேர்ந்தது.

மிஸ்ரிலோ, இப்போது சுல்தானா ஷஜருத்துர்ரின் மனங் குளிர்ந்த ஆட்சி எல்லா மக்களின் உள்ளத்துள்ளும் பரம திருப்தியையேயூட்டிவந்தது. பழைய ஐயூபிகளின் ஸல்தனத் நடந்த காலத்தில் மக்கள் எத்துணை மகிழ்ச்சியுடனே உயிர் வாழ்ந்தார்களோ, அதனினும் அதிகமான களிப்புடனேதான் இப்போது காணப்பட்டார்கள். சமீபத்தில் நடந்த சிலுவை யுத்தத்தால் விளைந்த எல்லா வகைச் சீர்கேடுகளும் செவ்வன் செப்பனிடப்பட்டன. எங்குப் பார்த்தாலும் மக்கள் தங்கள் சுல்தானாவைப் பற்றிப் புகழ்ந்தே பேசிக்கொண்டார்கள். மிகவும் தாழ்ந்த ஸ்திதியிலிருந்து மிக்க உச்சத்தை ஷஜருத்துர் எட்டியிருப்பதால், ஏழை மக்களின் பங்காளியாகவே அவர் காட்சியளித்து வருகிறாரென்று எல்லாரும் ஏகோபித்து மனமகிழ்ந்து பூரித்து வந்தனர். அதிருப்தியென்பது எப்படிப்பட்டவர் உள்ளத்திலும் எழவே கிடையாது. கலகத்தில் தப்பிப் பிழைத்த புர்ஜீ மம்லூக்குகள் தாங்கள் பெற்றுக்கொண்ட படிப்பினையால் இப்போது சப்த நாடியும் அடங்கிப்போய் ஒடுங்கிவிட்டார்கள். பஹ்ரீகளும் தங்கள் நிலைமையைக் கெடுத்துக் கொள்ளக் கூடாதென்பதற்காக, ஸாலிஹ் நஜ்முத்தீனின் ஆட்சிக் காலத்தில் எங்ஙனம் ஒழுகி வந்தார்களோ, அங்ஙனமே இப்போதும் மிக மிக நன்றாக ஒழுகிக் கொண்டார்கள்.

அரண்மனை இதுபோது அமைதி குடிபுகுந்ததாகக் காட்சியளித்தது. குற்றவாளிகளுக்குக் கிரமமான தண்டனை விதிக்கப்பட்டது. நிரபராதிகள் விடுதலையளிக்கப் பெற்றார்கள். நிலவரி முதலியன பளுவில்லாது நிதானமாக விதிக்கப்பட்டன. பஹ்ரீ அமீர்கள் சுல்தானாவுக்கு எல்லாத் துறைகளிலும் உதவி புரிந்து வந்தனர்.

மஸ்ஜித்களிலே வெள்ளிக்கிழமை ஜுமுஆத் தொழுகைகளுக்கு முன்னர் ஓதப்படும் குத்பா பிரசங்கங்களிலே சுல்தானாவின் பெயர் வாசிக்கப்பட்டு, அவருக்கு இறைவனின் துணை இருக்கட்டுமென்று துஆ கேட்கப்பட்டது; எல்லாரும் ‘ஆமின்’ கூறினார்கள். அவ் வம்மையாரின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களின், “ஷஜருத்துர்ருல் முஸ்தஃஸிமா, அஸ்ஸாலிஹா, அல் மலிக்காத்துல் முஸ்லிமீன், உம்முல் மலிக்குல் மன்ஸூர் கலீல்” – (பாக்தாதில் அப்போது ஆட்சிசெலுத்தி வந்த முஸ்தஃஸிம் என்னும் கலீபாவின் ஊழியப் பெண், ஸாலிஹ் ஐயூபியின் மனைவி, முஸ்லிம்களின் அரசி, மன்ஸூர் கலீல் என்னும் அரச குமாரரின் அன்னை) என்று ஷஜருத்துர்ரின் பட்டம் பொறிக்கப்பட்டது. சுல்தானா விடுக்கும் அரசப் பிரகடனங்களில் அவருடைய கையொப்பத்துக்குக் கீழே “முஸ்தஃஸிமிய்யா, அஸ்ஸாலிஹய்யா, உம்முகலீல், இஸ்மத்துத் துன்யா வத் தீன், மலிக்காத்துல் முஸ்லீமீன்”என்று பொறிக்கப்பட்டன. அத்தாணி மண்டபத்துள்ளே சுல்தானா நுழையும்போது, முற்கூறிய பட்டங்கள் அடுக்கி உச்சரிக்கப்பட்டு, பராக்குக் கூறப்பட்டுவந்தது.

ஸீனாய்ப் பாலைவனத்தில் திசை தெரியாமல் அலைந்து திரிந்த அபலையும் அனாதையுமாய் விளங்கிய ஒரு சாதரண அடிமைப்பெண் இப்போது மலிக்காத்துல் முஸ்லீமீனாகவும் இஸ்மத்துத் துன்யா வத் தீனுமாவும் ஏகபோக சுல்தானா ஸாஹிபாவாகவும் உயர்ந்தோங்கி வளர்ந்துவிட்டார். இஃது இறைவனின் திருவிளையாடல், அல்லது திருவுளச்சித்தம் என்பதை எவரே மறுக்க வல்லார்?

ஷஜருத்துர் சுல்தானா என்னும் நிலைமையை எட்டிய பினனர், தாமாகவே பலப் பல மாறுதல்கள் விளைந்தன: அவருடைய வதனகமலம் பன்மடங்கு வசீகரண சக்தியைப் பெற்றுக்கொண்டது. வயது இருபத்தெட்டாகியிருந்தும், கன்னி கழியாத பெண்ணின் அங்க லக்ஷணங்களே அன்னவர்பால் இலங்கிக்கொண்டிருந்தன. ஒரே ஒரு குழவியை மட்டுமே பெற்றிருந்தமையாலும் அதிகநாள் தாம்பத்ய வாழ்க்கை நடத்தாமையாலும் துருக்கி நாட்டுப் பிறப்பாகையாலும் பதவிக்கேற்ற ஆடையணிகலங்களும் ரவையாபரணங்களும் பூட்டப்பட்டிருந்தமையாலும் அவர் கைம்பெண்ணாகக் காட்சியளிக்காமல், ஜகத்ஜோதியுடன் ஜொலித்து வந்தார். கண்ட ஆடவரும் கணநேரத்தில் தம்சிந்தையைப் பறிகொடுக்கும் சிறப்புடனே திகழ்ந்துவந்தார்.

சுருக்கிச் சொல்லவேண்டுமாயின், அவ்வரசி ஒரு ஸ்வர்ண பிம்பமே போல் இலங்கிக்கொண்டிருந்தார் என்றேதான் கூறியமைதல் வேண்டும். மிஸ்ர் தேசத்திலே இதுவரை எத்தனையோ ராஜகுமாரிகளும் மன்னர் பத்தினிகளும் வேறு கட்டழகிகளும் எழிலில் இணையற்றுக் காணப்பட்டு வந்தனரென்றாலும் இந்த ஷஜருத்துர் அவ் வெல்லாக் கட்டழகிகளுள்ளுளம் சிகரம் வைத்தாற்போன்ற சிறந்த வனிதையாய் மிளிரத் தொடங்கினார். இன்றுங்கூட மிஸ்ரின் சரித்திரத்தில் ஷஜருத்துர்ரைப் போன்ற அவ்வளவு ரூபலாவண்ய செளநதர்ய மாது புராதன காலத்திலும் தற்காலத்திலும் முற்காலத்திலும் வாழ்ந்தது கிடையாதென்றே பற்பலர் கூறுகிறார்கள்.

அரண்மனை அடிமையாய் வாழ்ந்தபோதே சுல்தான் ஸாலிஹின் ஹிருதயத்தைத் தம் வயம் ஈர்க்கத்தக்க ஜொலிப்புடன் ஷஜருத்துர் சோபித்துக் காணப்பட்டு வந்திருக்க, இப்போது ஒப்புவமையற்ற சர்வாதிகார சுல்தானாவாக இலங்கி வரும் மலிக்கா எத்தனை பேரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டாரென்பதை நாம் வருணிக்கவும் வேண்டுமோ?

ஷஜருத்துர் சுல்தானாவாக உயர்ந்து ஒரு சில நாட்களில் தம்முடைய பிரத்தியேக க்ஷேமத்துககாகவும் பாதுகாவலுக்காகவும் எவரை ஏற்படுத்திக் கொள்ளலாமென்று ஆழமாகச் சிந்திக்கலாயினார். ருக்னுத்தீனையே அவ்வாறு அமைத்துக் கொள்ளலாமென முதலிலே எண்ணினார். ஆனால், அவயவத்திலோ, அங்கத்திலோ பழுதுள்ள ஒருவரை சுல்தானா அந்தரங்கக் காரியதரிசியாக நியமித்துக்கொள்வது கூடாதாகையால், ருக்னுத்தீனின் அந்த இழுக்குள்ள ஒற்றைக்கண் குறுக்காய் நிற்க ஆரம்பித்தது. எனவே, ருக்னுத்தீனை நியமிக்க ஷஜருத்துர் விரும்பவில்லை.

ஆனால், அந்த அரண்மனையிலே மற்றொரு பஹ்ரீ அமீர் மிகுந்த சாந்தகுணத்துடனும் ஆழ்ந்த அறிவு விவேகத்துடனும் அரசாங்க ஊழியத்தில் அளவுக்கு மீறிய பாசத்துடனும் நம்பிக்கைக்கு முற்றமுற்ற லாயிக்குடனும் வாழ்ந்து வந்தார். சர்வ சாதுவாகவும் பலாட்டியராகவும் சுல்தானாமீது அன்பு கெழுமியவராகவும் நற்குண நல்லொழுக்க சிகாமணியாகவும் விளங்கிய அந்த பஹ்ரீ அமீருக்கு முஈஜுத்தீன் என்று நாமம் வழங்கலாயிற்று. சுல்தான் ஸாலிஹ் ஷாமுக்குப் புறப்பட்டுச் செல்லுமுன்னே இந்த பஹ்ரீ அமீரை அந்த சுல்தான் ஒரு மந்திரியாகவுங்கூட நியமித்துச் சென்றிருந்தார். மந்திரி சபையிலிருந்த அத்தனை மந்திரிகளையும் விட இந்த முஈஜுத்தீனே மிகவும் நல்லவராகவும் கெட்டிக்காரராகவும் மதியூகியாகவும் திகழ்ந்து வந்தமையால், சுல்தானாவின் கவனம் இவரின் பக்கல் ஈர்க்கப்பட்டதில் வியப்பில்லை. கவனம் ஈர்க்கப்பட்டதுடனே, இவரை ஷஜருத்துர் நேசிக்கவும் தொடங்கினார். எனவே, பிரதம மந்திரி என்னும் உயர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. சிம்மாசனாதிபதியின் பக்ஷத்துக்கு இலக்காகிறவர்களின் யோகத்தைப்பற்றிச் சொல்லவா வேண்டும்?

பிரதம மந்திரியாக முஈஜுத்தீன் உயர்த்தப்பட்டதுடனே, யுத்த சேனாதிபதியென்னும் சிறந்த கெளரவ ஸ்தானமாகிய, அத்தாபேக்குல் அஃஸக்கிர் என்னும் கண்ணியத்துக்கும் தூக்கப்பட்டார். எனவே, சுல்தானாவின் அந்தரங்கக் காரியதரிசியாகவும் பிரதம மந்திரியாகவும் அத்தாபேக்குல் அஃஸக்கிராகவும் முஈஜூத்தீன் இதுபொழுது ஒரேமூச்சிலே பதவிவகிக்க ஆரம்பித்தார். அதனுடனே, சுல்தானாவுக்குச் சித்தஞ் செய்யப்படும் உணவுப் பண்டங்களை முதலில் உருசிபார்க்கும் உத்தியோகத்தையும் முஈஜுத்தீனே கண்காணிக்கலாயினார். சுல்தானா உணவருந்து முன்னம், அதில் விஷமோ, அல்லது வேண்டாத பதார்த்தமோ சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று முதலில் உருசிபார்த்துச் சொல்லும் பிரத்தியேக உரிமை முழுதும் முஈஜுத்தீனுக்கு மட்டுமே இருந்துவந்தது. இந்த உருசிபார்க்கும் உத்தியோகத்தின் நிமித்தமாகச் சஷ்னிகீர் (அரசகுமாரருக்கு அல்லது அரசகுமாரிக்கு ருசிபார்த்துச் சொல்பவர்) என்னும் சிறப்புப் பெயரை இந்த அமீர் பெற்றுக்கொண்டார்.

எனவே, நாளடைவில் சுல்தானாவின் வலக்கர வஜீர் திலமாகவும் அந்தரங்கக் காரியதரிசியாகவும் பிரத்தியேக நண்பராகவும் உற்ற துணைவராகவும் அந்த முஈஜுத்தீன் விளங்கத் தலைப்பட்டார். ஐபக் என்னும் வம்சத்தில் உதித்த காரணத்தாலும் உத்தியோகத்தின் காரணமாகவும் இவரை “வஜீரெ முஅல்லம், அத்தாபேக்குல் அஃஸக்கிர், சஷ்னிகீர், முஈஜுத்தீன் ஐபக்” என்றே இவரைச் சரித்திராசிரியர்கள் அழைக்கிறார்கள். சுருக்கமாக இவரை “ஐபக்” என்றும் கூறுவதுண்டு; நாமும் அவ்வாறே ஐபக்கென்றே இனி அழைக்கலாம்.

கொடை வள்ளல்களின் பெருமையைக் கவிவாணர் வளர்ப்பதுபோலவும் வளர்பிறை தினந்தினம் வளர்ந் துயர்வது போலவும் ஐபக்கின் பெருமை நாடோறும் நன்கு வளர்ந்து வந்தது. அதனோடு ஸல்தனத்தின் ஆட்சி சம்மந்தமான சகல அந்தரங்க விஷயங்களும் சுல்தானாவுக்கும் ஐபக்குக்கும் மட்டுமே தெரிந்திருந்தன. மேலும், எந்த விஷயத்தில் முடிவு செய்வதாயிருந்தாலும் ஐபக்கின் அபிப்ராயமே பெரும்பாலும் நிலவி வந்தது. ருக்னுத்தீன் போன்ற வேறு பஹ்ரீ தலைவர்கள் ஐபக்குக்குக் கிடைத்த அதிருஷ்டத்தைக்கண்டு அழுக்காறுகொண்டாலும் தங்கள் இனத்தைச் சார்ந்தவரே அவ்வுயரிய அந்தஸ்த்தில் அமர்த்தப்பட்டிருப்பதில் பூரண திருப்தியே அடைந்தார்கள். புர்ஜீகளுக்கு இது சொல்லொணாப் பேரிடியை உண்டுபண்ணிவிட்ட போதினும், செய்வ தின்னதென்று புலப்படாமல் சும்மா இருந்தார்கள். சுல்தானாவின் ஆட்சித் திறனிலோ, அல்லது ஐபக் கூறுகிற மந்திராலோசனையிலோ எவ்விதக் குறைவும் ஏற்படாதவரை எவர்தாம் என்ன செய்யமுடியும்?

இவ்விதமாக இறைவனது கிருபையால் காஹிராவிலே சுல்தானா ஷஜருத்துர் பலர் மெச்சும் வகையிலே பலபடச் சிறப்பாக ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தார்.

சுல்தானா யாதொருவிதத் தவற்றொழுக்கத்திலும் இறங்கி விடவில்லையாதலால், அவர் அபகீர்த்தியொன்றும் அடைந்து விடவில்லை. மேலும், முஈஜுத்தீன் ஐபக் விவாகமானவராதலாலும் ஒரு மைந்தனைப் பெற்றிருந்தமையாலும், இரா நேரங்களில் அவர் சுல்தானாவுடன் சேர்ந்திருப்பதில்லை யாகையாலும் ஷஜருத்துர்மீது பழிச்சொல்லை எவரும் கட்டிவிட முடியவில்லை. அரசியென்னும் அச்சமும், அவர்மீது எல்லா மக்களும் கொண்டிருந்த அன்பும் ஷஜருத்துர்ரை மேலும் மகிமையடையச் செய்தன. ஐபக்கோ ஆண்டவனுக் கஞ்சி, சுல்தானாவின் ஊழியராகவே தம்மைக் கருதிக் கொண்டு, சதாசர்வ காலமும் உண்மையுடனே உழைத்து வந்தார்.

சுல்தானாவைக் கொண்டு ஐபக்கும், ஐபக்கைக் கொண்டு ஷஜருத்துர்ரும் பரஸ்பரம் புகழும் பெருங் கீர்த்தியும் அடைந்தார்கள். சுல்தானாவும் தாம் மற்றொரு விவாகம் புரிந்துகொள்ள வேண்டுமென்னும் அவசியம் சிறிதும் இல்லாதே நாட்கடத்தி வந்தார். என்னெனின், தமக்கு திருமண பாக்கியம் இல்லையென்றும், இதனாலேதான் தங் கணவர் ஸாலிஹ் நஜ்முத்தீனை அகாலத்திலே இழக்க நேர்ந்ததென்றும் ஷஜருத்துர் தமக்குள்ளே எண்ணிக்கொண்டார். இரண்டாவது கணவரை மனந்து கொண்டால், திரும்பவும் கணவரை இழக்க நேர்ந்தால், என் செய்வது? என்று வருந்தியதாலும், அவர் மறுமணம் புரிந்துகொள்ளவில்லை. அன்றியும், ராஜபோக வாழ்க்கையின் சகலவிதமான சுகானந்தங்களையும் தெவிட்டத் தெவிட்ட அனுபவித்து வரும்போது, சிற்றின்பத்துக்காக மறுமணம் புரிந்துக்கொள்ள வேண்டுமென்ற அவசியமேதும் அவருக்கு ஏற்படவில்லை. கண்ணிப் பெண்ணாகவும் அடிமையாகவும் இருந்த காலத்திலேயே நெடுநாள் மட்டும் விவாகம் செய்துகொள்ளாமலிருந்த ஷஜருத்துர், இதுபோது ஏகபோக சுல்தானாவாகவும், கைம்பெண்ணாகவும் இருக்கையில் விவாகம் செய்துகொள்வானேன்?

எனவே, ஷஜருத்துர் பட்டத்துக்கு வந்து முதலாண்டு முடிகிறவரையில் அவர் கைம்பெண்ணாகவே இருந்து வந்தார். அவர் என்றைக்காவது விவாகம் செய்து கொள்ள மாட்டாரா? அவருக்குக் கணவராகும் அப்படிப்பட்ட பெரும்பேறு தத்தமக்குக் கிடைக்க மாட்டாதா? என்று காஹிராவின் பிரமுகர்கள் அத்தனைபேரும் இரங்கியேங்கிக்கொண் டிருந்தார்கள்.

சுல்தானாவின் வாழ்க்கை இவ்விதமாகவெல்லாம் நிகழ்ந்து வந்தது.  

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>

Related Articles

Leave a Comment