கலீஃபாவின் கட்டளைப்படி அந்தப் பிரத்தியேகத் தூதுவன் நேரே குதிரை லாயத்துக்குச் சென்று, காற்றினுங் கடிய வேகத்தில் பறக்கக்கூடிய உயர்தரமான அசுவத்தைத் தேர்ந்தெடுத்தான். வழியில் உணவுக்கு வேண்டிய பண்டங்களைச் சவதரித்துக் கொண்டு,

கலீஃபாவின் பர்மானைப் பத்திரமாக முடிந்து எடுத்துக் கொண்டு, அக் குதிரை மீதேறிக் கொக்காய்ப் பறந்துச் சென்றான். கொடும் பாலைவனங்களூடே குறுக்கு வழியாகப் பார்த்தாலும் பாக்தாதிலிருந்து காஹிரா நகர் சரியாக எண்ணூறு மைல் தூரத்திலிருக்கிறது. இவ்வளவு பிரம்மாண்டமான தூரத்தை எப்படி மூன்று நாட்களில் கடக்க முடியும்? அத் தூதுவன் ஏதொன்றையும் யோசிக்காமல் கலீஃபாவின் கட்டளையைச் சிரமேற்றாங்கித் தென் மேற்குத் திசையை நோக்கி, வில்லிருந்து விடுக்கப்பட்ட அம்பின் வேகத்திலே பறந்து சென்றான்.

ஏழு இரவுகளும் ஆறு பகல்களும் சவாரி செய்ததன் பயனாகக் கீழ் வானத்தின் கோடியிலே காஹிராவின் உயரிய கட்டிடங்களின் கோபுரங்கள் அவனுடைய கண்களுக்கு ஒருவாறு புலப்பட்டன. ஏழாவது நாள் விடிவதற்கும் அவன் காஹிராவின் எல்லைக்குள் நுழைவதற்கும் சரியாயிருந்தது.

அன்று சுல்தானா ஷஜருத்துர் வழக்கப்படி அரசவை கூட்டி, அவசரமான வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்திலே கலீஃபாவின் தூதுவன் அங்கே வந்து நுழைந்தான்.

அந்தக் காலங்களில் ஒரு சுல்தானின் அரண்மனைக்குள்ளே கலீஃபாவின் பிரதிநிதி வந்து நுழைவதென்றால், அது மிகுந்த பரபரப்பையே உண்டுபண்ணுவது வழக்கம். மேலும், அந்தச் சமயத்தில் எல்லாருமே பயபக்தியுடன் சப்த நாடியும் அடங்கி யொடுங்கிக் கைக்கட்டி, வாய் பொத்தி நின்று விடுவார்கள். தேவலோகத்திலிருந்து வானவரொருவர் இறங்கி வந்தாலும் மக்கள் அவ்வளவு அதிகமாக நடுங்க மாட்டார்கள்; ஆனால், கலீஃபாவின் பெயரைக் கேட்டால், அத்துணைமட்டும் கலங்கிவிடுவார்கள். காஹிராவின் அரண்மனை வாயிலெதிரே வந்து நின்ற அசுவத்தின் மீது கலீஃபாவின் முத்திரை பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்ட காவலாளிகள் அவ் விசேஷத் தூதனைத் தடுத்து நிறுத்தத் தைரியங் கொள்ளவில்லை. எனவே, அவன் ஒரே தாவலில் கீழே தாவிக் குதித்து, வெகு விரைவாக அத்தாணி மண்டபத்துள் நுழைந்து, ஷஜருத்துர்ரின் முன்னே அதி கம்பீரமாகப் போய் நின்றான்.

மிகவும் மரியாதைக் குறைவாகவும் தலை குனியாமலும் அகம்பாவத்துடன் வந்து படாடோபமாய் நிமிர்ந்து நின்ற அவனை சுல்தானா முறைத்துப் பார்த்தார்.

“நீ யார்?”என்று மிகக் கடுமையாகக் கடாவினார் ஷஜருத்துர்.

“ஏ சுல்தானா! நான் யாரென்பதை நீர் அறிந்திருந்தால், என்னை இவ்வளவு அவமரியாதையாய்ச் சினந்து வினவமாட்டீர். நான் பாக்தாதிலிருந்து வருகிறேன். அமீருல் மூஃமினீன், கலீஃபத்துல் முஸ்லிமீன், அபூ அஹ்மத் அப்துல்லாஹ் – அல் முஸ்தஃஸிம் பில்லாஹ் அவர்களிடமிருந்து வந்திருக்கிறேன். இந்த பர்மானை உம்மிடம் சேர்ப்பிக்கும்படி நம் கலீஃபா கட்டளையிட்டனுப்பியதால், நான் இதை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தேன்!”என்று நிமிர்ந்த தலை குனியாமல், அந்தத் தூதன் ஆணவத்தோடு பதிலிறுத்தான்.

அரசவையில் கூடியிருந்தோரனைவரும் கலீஃபாவே நேரில் வந்து நின்றுவிட்டதைப் போன்ற திகிலைப் பெற்றுக்கொண்டு, என்ன பேராபத்து இந்த ஸல்தனத்துக்கு வந்து விட்டதோவென்னும் விபரீதப் பரபரப்புடன் மெய்பதறி மயிர்கூச்செறிந்து மெளனமாய் நின்றார்கள். ஆனால், சுல்தானா ஷஜருத்துர்ரின் முகத்தில் ஒருவிதமான மாறுதலும் ஏற்படவில்லை; அல்லது கலீஃபாவின் விசேஷத் தூதனாயிற்றே என்று வந்தவனை உபசரித்து உட்காரச் சொல்லவுமில்லை. அரியாசனத்தில் அமர்ந்திருந்தபடியே அதிகார தோரணையில் முஈஜுத்தீனை முறைப்பாகத் திரும்பிப் பார்த்தார். முஈஜுத்தீனும் அக் குறிப்பறிந்து தூதுவன் இருகையாலேந்திக்கொண்டிருந்த கலீஃபாவின் தாக்கீதை நீட்டி வாங்கினார். சுல்தானாவுக்கு நேராக விலாசமிடப்பட்டிருக்கும் அந்த கலீஃபாவின் பர்மானை முஈஜுத்தீன் திறந்து பார்க்கத் துணியாது, அதை மரியாதையாக ஷஜருத்துர்ரிடமே கொடுத்தார்.

ஷஜருத்துர் மிகவும் அலட்சியமாக அதை இடது கையால் வாங்கிப் பார்த்தார். வெள்ளிக் கூடும் அதன் மீது பொறிக்கப்பட்டிருந்த கலீஃபாவின் முத்திரையும் படாடோபமாயிருந்தன. அவற்றை நன்றாய் உற்றுப் பார்த்துவிட்டு, நிதானமாக குப்பியைத் திறந்து, உள்ளே சுருட்டி வைக்கப்பட்டிருந்த திருமுகத்தை மெல்ல இழுத்து, சாவகாசமாய் விரித்து நீட்டிப் பிடித்து, அமைதியாகப் படித்துப் பார்த்தார். கலீஃபாவிடமிருந்து இம்மாதிரியான தாக்கீது வந்தாலும் வரக்கூடுமென்பதை முன்னமே ஷஜருத்துர் தம் யூகத்தைக் கொண்டே எதிர்பார்த்திருந்தமையால், அவரொன்றும் கலவரப்படாமல், அவ்வறிக்கையை முஈஜுத்தீனிடம் திருப்பிக் கொடுத்து, உரத்த குரலில் அதை எல்லாருக்கும் படித்துக் காட்டச் சொன்னார்.

சுல்தானாவின் அத்தாபேக்குல் அஃஸக்கிர் அங்ஙனமே அந்த கலீஃபாவின் பர்மானை உரத்த குரலில், எல்லாருக்கும் கேட்கும்படி நிதானமாக வாசித்துக் காட்டினார்:

“அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்-பாக்தாதில், அப்பாஸீ வம்சத்து கலீஃபாக்களுள், இப்போது முஸ்லிம் ராஜாங்கத்தை நிர்வகித்து வரும் கலீஃபா முஸ்தஃஸிம் பில்லாஹ்வாகிய நாம், மிஸ்ர் தேச மக்களுக்கும் அந்நாட்டு ஸல்தனத்தைக் கபடமாகக் கைப்பற்றி, சுல்தானாவாகத் தன்னைத்தானே பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கும் ஷஜருத்துர் என்னும் அடிமை விதவைக்கும் விடுக்கும் பகிரங்க அறிக்கை என்னவென்றால்:- இஸ்லாத்தின் கொள்கைகளுக்கும் கட்டளைகளுக்கும் நேர் மாற்றமான முறையில் மிஸ்ரின் ஸல்தனத்திலே ஒரு பெண்பிள்ளை சுல்தானாவாக இருந்து ஆட்சி செலுத்துவதை நாம் அங்கீகரிக்கவும் முடியாது; அல்லது மேலும் தொடர்ந்து நீடிப்பதற்கு உதவியாயிருக்கவும் இயலாது. எனவே, எமது இவ்வறிக்கை கிடைத்த மறுகணமே அந்த ஷஜருத்துர் என்னும் விதவை தன்னுடைய பதவியைத் துறந்து, ஸல்தனத்தை மறந்து, மறுபேச்சின்றி வெளியேறிவிட வேண்டும்! மிஸ்ர் மக்களாகிய உங்களுள் சுல்தானாவதற்கு யோக்கியதையோ லாயிக்கோ ஓர் ஆண் பிள்ளைக்கும் இல்லையென்றால், இங்கிருந்தாவது நாம் வேறொருவரை சுல்தானாக நியமித்து அனுப்பிவைக்கிறோம். ஆண்களையே ஆளக்கூடிய அருகதையுள்ளவர்களாகவும், பெண்களை அடங்கி நடக்க வேண்டிய அடிமைகளாகவும் அல்லாஹுத் தஆலா நம்மையெல்லாம் படைத்திருக்கும்போது, ஆண்டவனின் விருப்பத்துக்கு நேர்முரணான குபிரிய்யத்தான காரியங்களில் ஈடுபட்டிருக்கும் உங்களை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். போனதெல்லாம் போகட்டுமென்றாலும், எம்முடைய இந்தப் பிரகடனத்தைப் பார்த்த பின்னரும் நீங்கள் நேர்வழியில் திரும்பவில்லையானால், எம்முடைய கோபத்துக்கும், கொடிய நடவடிக்கைகளுக்கும் ஆளாகித் தீர்வீர்களென்று இறுதி எச்சரிக்கை விடுக்கின்றோம்!

(ஒப்பம்) அபூ அஹ்மத் அப்துல்லாஹ் – அல் முஸ்தஃஸிம் பில்லாஹ் – கலீஃபா.”

நிச்சப்தமாயிருந்த அரசவையில் கலீஃபாவின் தாக்கீதை முஈஜுத்தீன் ஐபக் வாசித்து முடித்தவுடனே சுல்தானா ஷஜருத்துர் எல்லாருடைய முகத்தையும் ஏறெடுத்துப் பார்த்தார். எவருமே அந்தத் தாக்கீதைப் பொருட்படுத்தாதையும், சுல்தானாவை “விதவை”யென்று வருணித்திருப்பதைக் கண்டு அவர்கள் கலீஃபாமீது வெறுப்புக்கொண்டு விட்டதையும் ஊகித்துணர்ந்து கொண்டு விட்டார். எல்லாரும் தம்மையே விரும்புவதாக ஷஜருத்துர் முன்னமே கேள்விப்பட்டிருந்தமையாலும் இனி கலீஃபாவுக்கு எதிராக இவர் எந்த நடவடிக்கையைக் கைக்கொண்டாலும் பொதுஜன ஆதரவு தம்பக்கலே இருக்குமென்பதை நன்கறிந்திருந்தமையாலும் கலீஃபாவின் தாக்கீதை உதாசினம் செய்வதே சரியென்று துணிந்துவிட்டார்.

“ஏ, தூதனே! கலீஃபாவின் தாக்கீதை நாம் படித்துப் பார்த்தோம் என்பதையும் அதை நாம் எல்லாருக்கும் படித்துக் காட்டினோம் என்பதையும் பாக்தாதுக்குப் போய்த் தெரிவித்து விடு! மத சம்பந்தமான விஷயத்தில், உலகிலுள்ள சகல முஸ்லிம்களுக்கும் கட்டளையிடவும் தாக்கீது பிறப்பிக்கவும் கலீஃபாவுக்கு அதிகாரம் இருக்கிறதென்று வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும், உள்நாட்டு அரசியல் விவகாரத்திலும் ஸல்தனத்தை ஆட்சி நடத்த வேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்கிற வகையிலும் எந்த கலீஃபாவுக்கும் யாதொரு வித அதிகாரமுமில்லையென்று நாம் கூறுவதாகப் போய்த் தெரிவி. மேலும், மிஸ்ர் சம்பந்தப்பட்ட வரை, மிஸ்ரின் தலைவிதியை நிர்ணயித்துக்கொள்ள மிஸ்ரிகளுக்கு மட்டுமே உரிமை இருக்கிறதென்பதையும், இவ் விஷயத்தில் பாக்தாதிலிருக்கும் கலீஃபாவை அவர்கள் கலந்தாலோசிக்க வேண்டியதோ, அல்லது கலீஃபா விரும்புகிறபடியெல்லாம் அவர்கள் கேட்டு நடக்க வேண்டியதோ ஒன்றுமில்லையென்றும் நாம் கருதுவதாகப் போய்ச் சொல்லிவிடு. மேலும், ஸல்தனத்தின் அரியாசனம் காலியாகும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் கலீஃபாவை மிஸ்ரிகள் கலந்து கொண்டுதான் சுல்தானை அல்லது சுல்தானாவைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று அவர் இன்னம் கருதிக்கொண்டிருப்பாரானால், அவர் பகற் கனவு காண்பதாகவே நாம் நினைக்கிறோம். என்னெனின், காலம் வெகு விரைவாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. அரபு நாட்டுக் கதையில் வருணிக்கப்பட்டிருக்கும் பண்டைக்கால கலீஃபா ஹாரூன் ரஷீத் பாதுஷாவின் காலமே இன்னமும் நடப்பதாக உங்கள் கலீஃபா முஸ்தஃஸிம் பில்லாஹ்வும் நினைத்துக்கொண்டிருக்கிறார் போலும்! அந்தக் காலமெல்லாம் மலையேறி விட்டதென்றும், இப்போதெல்லாம் பொதுமக்கள் விழிப்படைந்திருக்கிறார்களென்றும், தங்களுக்கு வேண்டிய ஆட்சியாளரைத் தங்கள் விருப்பத்துக்கேற்றபடி அவர்கள் நியாயமாகவே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்களென்றும், இந்த மாதிரியான ஜனநாயகக் கொள்கையில் கலீஃபா தம்முடைய ஏகாதிபத்தியத்தை அல்லது சர்வாதிகார மனப்பான்மையைக் காட்டினால், ஒருவரும் அதனை வரவேற்க மாட்டார் என்றும் இப்போதே போய் அந்த கலீஃபாவிடம் தெரிவித்து விடு! கலீஃபா சும்மாவாவது பயமுறுத்துவதையும் மிஸ்ரிகள் கேள்வியுற்றுச் சிரிக்கிறார்களென்றுங் கூறிவிடு! உங்கள் கலீஃபா தூங்கிக்கொண்டிருக்கிறார்! எல்லாவற்றுக்கும் இறுதியாக, எம்மைப் போன்ற ஒரு பெண் செங்கோலோச்சக் கூடாதென்று எந்த குர்ஆன் ஆயத்திலே கூறப்பட்டிருக்கிறதென்று யாம் கடாவுவதாக நீ போய்க் கேள்!” என்று நெடியதொரு பிரசங்கம் புரிந்தார் ஷஜருத்துர். கலீஃபாவின் தூதுவன் வாளா செயலாற்றுத் திகைத்து நின்றான்.

அப்போது ஷஜருத்துர் தம்முடைய மந்திரி பிரதானிகளை ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்துக் கொண்டே, “நீங்களெல்லீரும் எவரை இந்நாட்டின் அதிபதியாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள்? – என்னையா, அல்லது கலீஃபா பாக்தாதிலிருந்து நியமித்து அனுப்புவதாகச் சொல்லுகிறவரையா?” என்று வினவினார்.

அரசவையில் குழுமியிருந்த அத்தனை மந்திரி பிரதானிகளும், அமீர்களும் மம்லூக்குகளும் ஏகமனதாக ஏகதொனியில், “நீங்களே எங்களுக்கு வேண்டும்!” என்று கூக்குரலிட்டுக் கூறினார்கள். அத்தனை பேரும் ஒரே குரலில் கூறிய அவ்வுன்னத பதில் அத்தாணி மண்டபத்தில் ‘ஙொய் ஙொய்’ யென்று நெடுநேர மட்டும் எதிரொலியால் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது.

இந்த மாதிரியான எதிர்பாராத ஏகோபித்த அபிப்பிராயத்தைக் கேட்ட கலீஃபாவின் தூதுவன் முகத்தில் பேராச்சிரியக்குறி தோன்றிவிட்டது. இனியும் தான் அங்கே நின்றால், உதை விழுந்தாலும் விழுந்துவிடுமென்று கலக்கங் கொண்டு மெய்பதறி, வந்த வேகத்திலேயே வெளியேறிவிட்டான்.

கலீஃபாவின் தாக்கீதை இவ்வளவு துணிச்சலுடன் எவருமே – அதிலும், ஒரு பெண்பிள்ளை -எப்போதுமே உதாசினஞ் செய்ததில்லை. இனி மிஸ்ருக்கும் மிஸ்ரின் ஸல்தனத்துக்கும் பெரிய கேடுகாலந்தான் விளையப்போகின்றதென்னும் எண்ணத்துடனே அத் தூதுவன் அரண்மனையிலிருந்து வெளிவந்தான். புர்ஜீ மம்லூக்குகள் இம்மாதிரியான சந்தர்ப்பத்தையா நழுவ விடுவார்கள்? கலீஃபாவின் தூதுவனை ஷஜருத்துர் அவமானப்படுத்தியனுப்பியவுடன், சில புர்ஜீகள் முற்கூட்டியே காஹிராவின் வெளியெல்லைக்குச் சென்று நின்று கொண்டு, அத் தூதுவன் வருவதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவன் போகிற போக்கில் அவனுக்கு ஷஜருத்துர்ரைப் பற்றி வேண்டியமட்டும் விஷபோதனையூட்டி அனுப்பினால், கலீஃபாவிடம் சென்று ஒன்றுக்குப் பத்தாய்க் கோட் சொல்லி, அவரையே மிஸ்ர்மீது படையெடுத்து வரும்படி செய்துவிடலாம் என்று அந்த யூதகுணம் படைத்த புர்ஜீகள் திட்டமிட்டுக் கொண்டார்கள்.

அந்தத் தூதுவன் காஹிரா நகரை விட்டு தன் குதிரைமீது ஆரோகணித்து, சுல்தானா தனக்கும் கலீஃபாவுக்கும் இழைத்துவிட்ட உதாசினத்தையும் அவமானத்தையும் உன்னியுன்னி உருகிக்கொண்டே நிதானமான வேகத்தில் வெளியேறிக்கொண்டிருந்தான். அவன் காஹிரா நகரின் வடகிழக்கு வாயிலை நெருங்கிய தருணத்தில், அங்கே வழிபார்த்து நின்றுகொண்டிருந்த ஐந்து புர்ஜீ மம்லூக் பிரதானிகள் ஸலாம் சொல்லிக்கொண்டே கலீஃபாவின் தூதனை நிறுத்தினார்கள். முன்பின் தெரியாத ஐந்து பேர்வழிகள் நகரின் எல்லைவாயிலில் தன்னை நிறுத்துவதைக் கண்ட அத் தூதுன் முதலில் பயந்துவிட்டான். ஒருவேளை தன்னை இவ்விடத்தில் கொலைசெய்து விடுவதற்காக ஷஜருத்துர் முற்கூட்டியே இவர்களை இங்கே அனுப்பி வைத்திருக்கிறாளோவென்று கலீஃபாவின் தூதன் அஞ்சி நடுங்கியதில் அதிசயமில்லை. சொன்ன ஸலாத்துக்கும் பதில் ஸலாம் சொல்லாமல் அவன் புர்ஜீகளை வெறிக்க வெறிக்கப் பார்த்தான்.

“ஏ, கலீஃபாவின் தூதுவனே நீ ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம். நாங்கள் உன்னைத் துன்புறுத்துவதற்காக இங்குத் தேடிநிற்கவில்லை. ஆனால், அகில உலக முஸ்லிம்கள் அனைவர்க்கும் ஒப்புவமையற்ற ஒரே தலைவராய் விளங்காநிற்கும் அமீருல் மூஃமினீன் கலீஃபா அவர்களுக்கு உன்மூலமாக ஒரு தூதுச் செய்தியைச் சொல்லியனுப்பவே இங்கு வந்து இந்தக் கடுவெயிலில் காத்துக்கொண்டு நிற்கிறோம். தூதுச் செய்தியென்றால், பிரயோஜனமற்ற வீண்விஷயமன்று; ஆனால், இந்த கொடுங்கோலரசி ஷஜருத்துர்ரைப் பற்றியது,” என்று அந்த புர்ஜீகளுள் தலைவனாயிருந்த மம்லூக் கூறினான்.

“கொடுங்கோலரசி”யைப்பற்றி விஷயம் என்று அந்த புர்ஜீ கூறியதைச் செவியேற்ற தூதுவன் சட்டென்று நின்றான். என்னெனின், பாக்தாதிலிருந்து இவ்வளவு தூரம் வந்து விட்டு, ஷஜருத்துர்ரைப் பற்றி முற்றிலும் தெரிந்து கொள்ளாமல் வீணே திரும்புவதால் கலீஃபாவின் கடுங்கோபத்துக்கு ஆளாக நேருமே என்று வருந்திக்கொண்டிருந்த அவனுக்கு இந்த வியவகாரத்தை முற்றிலும் நன்றாய்த் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்னும் ஆவல் அரும்பிவிட்டது.

“அப்படிப்பட்ட முக்கியமான தூதுச் செய்தி என்ன இருக்கிறது?”என்று தூதன் படபடப்புடனே வினவினான்.

“இங்கே வெயில் தகிக்கிறது. சற்றுத் தொலைவில் அதோ இருக்கிற எங்கள் கூடாரத்துக்குள் வந்து நீ முதலில் சிரம பரிகாரம் பண்ணிக்கொண்டு, பசியாறிவிட்டு, எங்கள் செய்தியைக் கேட்கலாம். வா, போவோம்!” என்று மிகுந்த கரிசனமான வார்த்தைகளால் புர்ஜீகள் உபசரித்தார்கள். அத்தூதனும் களைத்துப் போயிருந்தபடியால், புர்ஜீகளின் அழைப்பை அங்ஙனே ஏற்றுக்கொண்டான்.

பிறகு அந்த ஆறுபேரும் அருகிலிருந்த புர்ஜீயொருவனின் கூடாரத்துக்குள் நுழைந்தார்கள். கலீஃபாவின் தூதனென்றால், கலீஃபாவே அங்கு விஜயம் செய்து விட்டதாகத்தானே அர்த்தம்! புர்ஜீகள் அத்தூதனை உபசரித்த விதத்தை வார்த்தைகளால் வருணிக்கவா வேண்டும்? பஞ்சபக்ஷண பரமான்னங்களும் அறுசுவையுடன் கூடிய நால்வகையுண்டியும் அவ்விருந்தினனுக்கு அளிக்கப்பட்டன. பாக்தாதை விட்டுப் புறப்பட்டது முதல் அரைகுறைப் பட்டினியால் வாடியிருந்த அவன் இவ் வுணவுகளை நல்லவிதமாக உட்கொண்டு பெரியதோர் ஏப்பமும் விட்டான்.
உண்ட இளப்பை உருண்டு தீர்த்துக்கொண்டவுடனே அந்தத் தூதுவன் திண்டொன்றில் சாய்ந்து குந்திக் கொண்டு,“அமீருல் மூஃமினீனுக்கு நீங்கள் விடுக்கும் பர்யாத் என்ன?”என்று சற்றுத் திமிராகவே கேட்டான். தானே கலிபா என்னும் எண்ணம் போலும் அவனுக்கு!

அந்த புர்ஜி மம்லூக்குகள் தங்களுக்குச் சாதகமான வகைகளில், சிலவற்றைக் கூட்டியும் பலவற்றைக் குறைத்தும் ஒருவாராக ஷஜருத்துர்ரின் சரித்திரத்தை ஆதிமுதல் அந்தம்வரை அறிவித்து முடித்தார்கள். இடையிடையே தங்கள் கக்ஷியைப் பிரமாதமாகத் தற்பெருமையுடன் புகழ்ந்துகொண்டும் எதிர் கக்ஷி பஹ்ரீகளைப் பொறாமையுடன் இகழ்ந்து கொண்டும் கதையை ஒருதலைப் பக்ஷமாக வருணித்தார்கள் என்பதை நாம் விவரிக்கத் தேவையில்லை.

“எனவே, ஏ தூதனே! இந்த அனாதையான பிச்சைக்காரியை எங்கள் தலைவர் அமீர் தாவூத் அடிமையாக வாங்கி வளர்த்து, வாலிபமாக்கி விட்டு, சகலவித ராஜதந்திர யுக்திகளையும் கற்பித்து, இன்று இவ்வளவு கண்ணியமும் கெளரவமும், கீர்த்தியும் கியாதியும், பேரும் புகழும், பெருமையும் மாட்சியும் மிக்க பெரிய சுல்தானாவாக உயர்ந்துவிடக் கூடிய விதத்துக்கெல்லாம் ஊக்கி விட்டமைக்கு நாங்கள் பெற்றுக் கொண்டுள்ள பிரதியுபகாரம் இதுதான். முன்பெல்லாம் இவள் ருக்னுத்தீனுடன் கள்ள நட்புக் கொண்டு, தூரான்ஷாவைக் கொன்றுவிட்டு, எங்கள் அமீர்களுள் பலரை மாளச் செய்தாள். இப்போது முஈஜுத்தீன் ஐபக்குடனே சினேகம் பூண்டிருக்கிறாள். இன்னம் என்னென்ன கேடுகாலங்களைப் புரிவதற்கு இவள் சூழ்ச்சி செய்கிறாளோ, தெரியவில்லை! பற்றாக் குறைக்கு கலீஃபாவின் பர்மானையம் கசக்கியெறிந்து விட்டாள்!” என்னும் முடிவுரையுடனே அந்த புர்ஜீகள் தங்கள் கதையைக் கூறி முடித்தார்கள்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment