அவனுக்கு இணை வைக்காதே

by பா. தாவூத்ஷா

ஆண்டவனுக்கு அடியான் செய்யவேண்டிய கடமை அவனுக்கு இணை வையாததே.

எம்பெருமானார் (ஸல்) அவர்கள் மஆத் (ரலி) அவர்களை நோக்கிப் பின்வருமாறு திருவுளமாயதாய் ஸஹீஹ் புகாரீயில் ஒரு திருவாக்கியம் காணக்கிடக்கின்றது.

எப்படியெனின்:

“ஓ மஆதே! ஆண்டானுக் கடியான் செய்யவேண்டியதென்ன வென்றறிவீரா? என்று வினவ, ‘அல்லாஹ்வும் அவனுடைய ரசூலும் அதிகம் அறிந்தவர்கள்’ என்று (மஆத்) விடை பகர்ந்தார்கள். (அதன்பிறகு நாயகம் (ஸல்)) ‘ஆண்டானுக் கடியான் செய்யவேண்டியது, அவனுக்கு எந்த விதமாகவும் இணைவைக்காது அவனுக்கே வணக்கம் புரிவதாகும், என்று திருவுளமானார்கள். ‘அடியானுக் காண்டான் செய்வதென்ன வென்றறிவீரா?’ என்று கேட்டு, (தாங்களே) ‘மேலே சொன்ன விஷயத்தை இவர்கள் செய்வார்களாயின், அடியார்களான இவர்களை ஆண்டவன் வேதனை செய்யமாட்டான். இதுவே அடியார்களுக்கு ஆண்டவன் செய்வது,’ என்று திருவுளமாயிருக்கிறார்கள்.”

இன்னமும், ஸஹீஹ் புகாரீயில் அனஸ் பின் மாலிக் மூலமாய் மற்றொரு நாயக வாக்கியமும் காணப்படுகிறது: “(மழை ஏராளமாய்ப் பெய்துகொண்டிருந்த) ஒருநாள் ஜுமுஆவின் போது நாயகம் (ஸல்) அவர்கள் குத்பாவென்னும் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தக்கால் ஓர் அரபி வந்து நபிகள் திலகமவர்களை நோக்கி, ‘யாரசூலல்லாஹ்! பொழிந்து கொண்டிருக்கும் இம்மாரியினால் எங்கள் முதல்களெல்லாம் நஷ்டமாயின. நடக்கும் பாதைகளெல்லாம் அடைபட்டுவிட்டன. எனவே, இம்மழை நின்றுபோக வேண்டுமென்று தாங்கள் ஆண்டவனிடம் துஆ கேட்பீர்களாக!’ என்றுவேண்ட, நபிகள் (ஸல்) அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தி, ‘ஏ எஜமானேனே! இம் மழையை நீ நிறுத்திக் கொள்வாயாக. காய்ந்து கிடக்கும் மேடுகளின் மீதும், மலைகளின் மீதும், ஓடைகளின் மீதும், விருக்ஷங்களின் வேரின் மீதும் மழை பெய்யச் செய்வாயாக!’ என்று துஆ கேட்டார்கள். அக்கணமே ஆண்டவனுதவியால் மழை நின்றுபோயிற்று; மஸ்ஜிதினின்றும் வெளிப்புறப்பட்டு நாங்கள் வெயிலிலேயே வீடுசென்று சேர்ந்தோம்.”

இந்த ஹதீதினாலும் நாம் தெரிந்துகொள்ள வேண்டுவதென்னவெனின்: நம் வள்ளல் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று ஏக நாயனிடம் துஆ கேட்கும்படி வேண்டிக்கொள்ளப்பட்டிருக்கிறது; மேலும் இவ்வாறு அல்லாஹ்வினிடம் வேண்டுதல் செய்யும்படி சொல்வதேதான் வஸீலாவாகவும் கருதப்பட்டு வந்திருக்கிறது, என்பதுமே யாம்.

ஆகையால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜீவித்திருந்த காலத்தே அவர்களிடம் சென்று மழை பெய்ய துஆ கேட்க வேண்டுமென்றும், மாரியை நிறுத்த வேண்டுதல்புரிய வேண்டுமென்றும் வஸீலா தேடப்பட்டிருக்கிறது. இவ்வாறே நபிகள் (ஸல்) அவர்கள் மரணமடைந்ததன் பின் நாயகத்தின் சிறிய தந்தையரான ஹஜரத் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வஸீலா தேடப்பட்டிருக்கிறது. ஆனால் நபிகள் (ஸல்) அவர்கள் மரணமடைந்ததன் பின் அவர்களின் சமாதியினருகே சென்றோ, அல்லது வேறெவரின் கப்ரினருகே சென்றோ சஹாபாக்களான பெரியார்கள் வஸீலா தேடியதாய்க் காணப்படவில்லை. இவ்வண்ணமே கண்ணுக்குப் புலப்படாத ஒருவரைக் கொண்டும் எங்கேனும் எப்பொழுதும் வஸீலா தேடித் தங்கள் கோரிக்கைகளை அன்னவர்களிடம் கூறியதாய் யாதோர் ஆதாரமும் தென்படவில்லை. இந்த வழக்கத்தின் பிரகாரமே, ஒரு சமயம் அமீருல் மூமினீன் முஆவியா இப்னு அபூஸுஃப்யான் (ரலி) அவர்கள் யஜீத் பின் அஸ்வத் ஜர்ஷீ என்னும் பெரியாரை முன்னிறுத்தி வஸீலாவாய்க் கொண்டு, ஆண்டவனிடம் மாரியைக் கோரியிருக்கிறார்கள். இதன்படி ஆண்டவன் திருவருளால் மழையும் பொழிந்தது.

இக்காரணம் பற்றியே ஆண்டவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடக்கும் முத்தகீன்களிடமும் சாலிஹீன்களிடமும் சொந்தமாய் நாயகம் (ஸல்) அவர்களின் வம்சத்தினரிடமும் சென்று வஸீலா தேடி ஆண்டவனிடம் துஆ கேட்கச் சொல்லி வேண்டுதல் புரியலாம் என்று நம் உலமாக்களான உத்தமர்கள் உரைத்திருக்கிறார்கள். ஆனால், உண்மையான எந்த ஆலிமும் மரணமடைந்த எந்த நபியிடமும் சாலிஹிடமும் முத்தகீயினிடமும் சென்று, அன்னவர்கள் மறைவாயிருக்கும் பொழுது அன்னவரை வஸீலாவாய்க் கொண்டு தங்களின் கோரிக்கைகளை வேண்டுதல் செய்யலாம் என்று கூறியிருக்கின்றார்களில்லை. ஏனெனின், துஆ வென்பது வணக்கத்தின் முக்கியச் சாரமாகும். எனவே, இபாதத்தென்னும் வணக்கம் நாயகம் (ஸல்) அவர்களின் நடக்கையைப் பின்பற்றி அப்படியே ஒழுகி வரவேண்டிய விஷயமாகும். தங்கள் மனம்போனவாறெல்லாம் கெட்டலைந்து இதுவும் ஷரீஅத் தென்று கூறுவது பெருந் தவறாகும். ஆதலின், நாயகம் (ஸல்) அவர்களின் நேரான பாதையின்படி நடந்துசெல்வது உண்மையில் இபாதத்தென்னும் வணக்கமாகும். அவரவரின் இச்சைக்குகந்த மார்க்கங்களுக்கிசைய நடந்துகொண்டு வருவது அல்லாஹ்வுக்கு வணக்கம் செய்வதாகாது. இதனைச் சுட்டிக் காட்டியே ஆண்டவன் பின்காணும் திருவாக்கியங்களைக் கூறியுள்ளான்:

அல்லாஹ் அனுமதிக்காத அந்த ஒருவிஷயத்தை அவர்களுடைய மார்க்கத்தில் நுழைத்து மற்றொரு ஷரீஅத்தை (மார்க்கத்தை) உண்டுபண்ணிய கூட்டாளிகளிருக்கிறார்களா?” — (குர்ஆன் 42:21)

நுங்கள் நாயனைத் தாழ்மையாகவும் மிருதுவாகவும் அழையுங்கள் (கோரிக்கொள்ளுங்கள்)—நிச்சயமாகவே அல்லாஹ் வரம்பு கடந்தவர்களை நேசிக்கிறானில்லை” — (குர்ஆன் 7:55).

இதற்கொப்ப நபிகள் (ஸல்) அவர்களின் வாக்கியத்தைக் கவனிப்பீர்களாக: “சமீபகாலத்தில் என்னுடைய உம்மத்தாருள் ஒரு வகுப்பார் தோன்றுவர். அன்னவர் வேண்டுகோளின் விஷயத்திலும, பரிசுத்தமாயிருக்கும் காரியத்திலும் எல்லையைக் கடந்வர்களாயிருப்பர்.”

இஃது ஒரு பக்கல் கிடக்க. ஏதாவது கஷ்டத்தின் போதோ, அச்சத்தின் போதோ, ஒரு மனிதன் தன்னுடைய பீரிடம் சென்று, ‘இது சமயம் என்னுடைய ஹிருதயத்தை உறுதியாயும் தைரியமாயுமிருக்கும்படி செய்தருளவேண்டு’மென வேண்டிக் கொள்வானாயின், இஃது ஒரு ஷிர்க்கான காரியமென்பதில் ஒருசிறிதும் சந்தேகமில்லை. அன்றியும், இவ்வாறு வேண்டிக்கொள்ளும் இவன் நசாராக்களின் சகோதரனென்றே சொல்லவேண்டும். (இது முந்திய பிரிவில் விவரமாய் விளக்கப்பட்டிருக்கிறது.) ஏனெனின், ஆண்டவன் ஒருவனே ஒருவனுக்கு அருள் செய்பவனாகவும் கஷ்டத்தை நிவாரணம் பண்ணுபவனாகவும் மற்றும் வேண்டிய உதவிகளைச் செய்பவனாகவுமிருக்கிறான். இதற்கான வேதவாக்கியத்தைக் கவனிப்பீர்களாக:

உமக்கேதேனும் கஷ்டம் வருமாயின், அதை (அல்லாஹ்வான) அவனைத் தவிர்த்து வேறெவரும் நீக்கார். மேலும் உமக்கு நன்மை விளையுமாயின், (ஆண்டவனது) இந்த அருளையாரும் தட்டிவிடுவது முடியாது” — (குர்ஆன் 10:107).

ஆண்டவன் மனிதர்களுக்குச் செய்ய நாடியிருக்கும் அருளை எவரும் தடுக்க முடியாது. எவருக்கேனும் (கஷ்டத்தை) அனுப்புவானாயின், அனுப்பிய பிறகு அதனை எவரும் தடுப்பது முடியாது” — (குர்ஆன் 35:2).

(ஏ நபி!) நுங்களுக்கு அல்லாஹ்வின் வேதனை, அல்லது இறுதிநாள் வந்து விடுமாயின், அல்லாஹ் அல்லாதவர்களையா அழைப்பீர்கள்? என்பதைக் கவனித்துப் பார்ப்பீர்களாக. நீங்கள் உண்மையாளர்களாயின், (விடை பகருங்கள்) என்று சொல்வீராக. இல்லை! அல்லாஹ்வையேதான் (அதுசமயம்) அழைப்பீர்கள். ஆண்டவனும், உங்கள் கூப்பிட்டுக் கிணங்க அல்லாஹ் நாடுவானாயின், கஷ்டத்தை நீக்கிவிடுவான். இன்னமும் நீங்கள் இணையாக்கி வைத்திருந்த அதை (அதுசமயம்) மறந்து விடுவீர்கள்” — (குர்ஆன் 6: 40,41)

(ஏ நபி!) ஆண்டவனல்லாத அவர்களை நுங்களின் நாட்டப்படி (உதவிசெய்ய வரும்படி) அழையுங்கள்; அவர்கள் எந்தக் கஷ்டத்தையும், துன்பத்தையும் உங்களைவிட்டும் ஒரு சிறிதும் நீக்கவும் அகற்றவு மாட்டார்கள். மேலும் நீங்கள் (இணையாய் எண்ணி) அழைக்கும் அவர்களே ஆண்டவனது பொருத்தத்தைச் சமீபமான எவ்வழியா லறியலாம்? என்று தேடிக்கொண்டிருக்கின்றனர். இன்னமுமவர்கள் அவனது அருள்மீது ஆதரவு வைப்பவர்களாகவும் அவனது தண்டனைக் கஞ்சியவர்களாகவுமிருக்கின்றனர். நிச்சயமாகவே உம்முடைய ரப்பின் தண்டனை அஞ்சக் கூடியதாகவேயிருக்கின்றது, எனச் சொல்வீராக” — (குர்ஆன் 17: 56, 57).

இத்திருவாக்கியத்தின் வாயிலாய் ஆண்டவன் நமக்கு எச்சரிக்கை செய்வதென்னவெனின், ஆண்டவனைத் தவிர்த்து மலாயிக்கத்துகளையோ, அன்பியாக்களையோ, சாலிஹீன்களையோ, இன்னவர்களைப் போன்றவர்களையோ நீங்கள் அழைத்து நுங்களுக்கேற்பட்டிருக்கும் துன்பத்தையும் கஷ்டத்தையும் நிவர்த்தி செய்யும்படி வேண்டிக்கொள்வீர்களாயின், அன்னவர்கள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எந்தத் துன்பத்தையும் கஷ்டத்தையும் நீக்கிவிடுவார்களென்பதில்லை. ஆகையால், எந்த மனிதனாயினும் தன்னுடைய பீரிடம் சென்று, ‘எனக்காக ஆண்டவனிடம் தாங்கள் ஷபீ ஆயிருக்க வேண்டு’மென வேண்டிக்கொள்வானாயின், இவன் அஹ்பார்களையும் ருஹ்பான்களையும் வணங்கிக்கொண்டு வந்த நசாராக்களுடனும் யூதர்களுடனும் சேர்ந்தவனென்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், உண்மையான மூமினானவர் செய்யவேண்டுவதென்னவெனின், தங்களுக்கு வேண்டிய நன்மைகளனைத்தையும் ஆண்டவனிடமே வேண்டிக் கொள்வதேதான். தம்முடைய கஷ்டத்தை நிவாரணம் பண்ணவேண்டுமென்று அவனிடமே கோரிக்கொள்வர். ஆண்டவனுடைய அருள்மீது ஆதரவு கொண்டவராயிருப்பர். மேலும் அவனுடைய தண்டனைக்கே அனுதினமும் அஞ்சிக்கொண்டிருப்பர். ஹிருதய பரிசுத்தத்துடன் அந்த ஏக பராபரனையே பெரிதும் புகழ்ந்து அவனுக்கே வணக்கம் செய்து வருவர். எனவே, அதிகமாய் வேண்டுமெனின், ஷைகென்னும் பெரியார் தம்முடைய சிஷ்யர்களுக்கு ஏதேனும் நன்மைசெய்ய வேண்டுமென நாடுவாராயின், அவர்களுக்காக ஆண்டவனிடம் நன்மையைக் குறித்து துஆ கேட்கலாம்; இதுதான் ஷைகென்னும் பெரியார் சிஷ்யருக்குச் செய்யவேண்டிய நன்மை.

இஃதெல்லாம் ஒருபுறமிருக்க, ஏனோ இன்னவர்கள் இவ்வாறு ஷரீஅத்துக்கு முரணான வேலை செய்யவேண்டுமென்பதுதான் விளங்கவில்லை. நமது இஸ்லாம் மார்க்கத்தைக் கொண்டு வந்தவர்களும் இதைப் பரிபூரணமடையச் செய்தவர்களுமான எம்பிரான் (ஸல்) அவர்களின் தோழர்களும் ஷரீஅத்தென்பதைத் தங்களின் நடவடிக்கைகளினால் செய்து காட்டியவர்களுமான ஸஹாபாக்களே இம்மாதிரி கப்ர் வணக்கம் செய்யவுமில்லை; செய்யச் சொல்லவுமில்லை; செய்ததை ஆதரிக்கவுமில்லையென்றால், ஏனையவர்களான மற்றச் சாமான்யர்களுக்கேன் இது விஷயத்தில் இவ்வளவு அனுதாபம் என்பதுதான் விளங்குவதில்லை.

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment