இந்த கில்ர் சம்பந்தமாய் தப்ஸீர் ரூஹுல் மஆனீயில் என்ன காணப்படுகிறது என்பதைப் பின்னே கவனிப்பீர்களாக: “அப்துல்லா பின் முபாரக் அவர்கள் சொல்லுகிறார்கள்:- யான் ஒரு சமயம் யுத்த மைதானத்திலிருந்தேன். என்னுடைய குதிரை மரணமடைந்து கீழே வீழ்ந்தது; அது சமயம்
ஒருவர் மிக்க அழகு வாய்ந்தவராகவும் மணமுள்ளவராகவும் காணப்பட்டார். மேலும், அவர் என்னை நோக்கி, ‘நீர் உமது குதிரையின்மீது சவாரி செய்யப் பிரியப்படுகிறீரா?’ என்று வினவ, அதற்கு நான் ஆம் என் விடையிறுத்தேன். உடனே அவர் என்னுடைய மரணமடைந்திருந்த குதிரையின் நெற்றியில் கையை வைத்து … ஓதினார். உடனே செத்துப்போயிருந்த என் குதிரை ஆடி அசைந்து எழுந்தது. பிறகு அந்த மனிதர் என் கையில் அதன் லகாத்தைப் பிடித்துக் கொடுத்து என்னை ஏறும்படி சொன்னார். எனவே, நான் என் குதிரையின்மீது ஏறி என்னுடைய சகாக்களினிடையே போய்ச் சேர்ந்தேன்.”
எனவே, இவ்வாறு வந்த குதிரையை உயிர்ப்பிக்கச் செய்தவர் கில்ர் (அலை) அவர்களாய் இருக்கலாமெனக் கொள்ளப்படுகிறார்கள். என்றாலும், இது சம்பந்தமாய் ரூஹுல் மஆனீயென்னும் தப்ஸீரில் கூறப்பட்டிருப்பதைச் சிறிது கவனிப்பீர்களாக. (ஹாபிஸ்)
“மேலே இப்னு முபாரக் அவர்களின் வாயிலாய்ச் சொல்லப்படுகின்ற இக் கதையை அவர் சொல்லியிருப்பார் என்பதை யாம் ஒத்துக்கொள்ள முடியாது. ஏனெனின், இக் கதையின் வாக்கியங்களை நீங்கள் சிறிது நிதானித்துக் கவனிப்பீர்களாயின், இஃது உண்மையானதாய் இருக்க முடியாது என்பதை எளிதில் நன்கு தெரிந்து கொள்ளுவீர்கள்.”
இதன் பயனாய் இப்னு முபாரக் அவர்கள் பேரால் கூறப்படும் வார்த்தையின் உண்மையைத் தெரிந்துகொண்டீர்கள். இஃது ஒருபக்கல் கிடக்க. ‘கில்ர் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் உண்மையிலேயே ஜீவித்துக்கொண்டிருப்பார்களாயின், ஏன் நாயகமவர்களை வந்து கண்டுகொள்ளவில்லை? ஹஜரத் ஜிப்ரீல் (அலை) அவர்களே தஹியத்துல் கல்பீ (ரலி) அவர்களின் கோலத்தில் நபிகள் (ஸல்) அவர்கள் சமுகம் வந்து ஹாஜிராயிருக்கும்போது, இவர்கள் மாத்திரம் ஏனோ வந்தார்களில்லை? ஏன் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த யுத்தங்களில் வந்து கலந்துகொண்டார்க ளில்லை?’ என்று கேட்கப்படும்போது, சிலர் உவைசுல்கர்னீ அவர்களும் நஜ்ஜாஷீயும் நாயகமவர்களை நன்குணர்ந்தவர்களாயிருந்தும், நபிகள் (ஸல்) அவர்கள் சமுகத்தில் ஹாஜிரானார்களில்லை என்று விடையிறுக்கின்றனர். மற்றும் சிலர், நாயகம் (ஸல்) அவர்களுக்கும், கில்ர் (அலை) அவர்களுக்கும் கில்ர் மூஸா (அலை) இவ்விருவர்களிடையே காணப்படும் சம்பந்தமே போல்தானிருக்கிறது என்றும் கூறுகிறார்கள். ஆகையால், இவ்வாறு கூறுபவர்களுக்கு அதே தப்ஸீரில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பதையும் கவனிப்பீர்களாக. (ஹாபிஸ்)
“நிச்சயமாகவே கில்ர் (அலை) அவர்களை, நாயகம் (ஸல்) அவர்களின் சமுகத்தில் வந்து ஹாஜிராகாத உவைசுல்கர்னீ, நஜ்ஜாஷீ போன்றவர்களின் தொகுதியில் கொண்டு சேர்ப்பது நியாய வரம்பினின்று நெடுந்தூரம் அப்பால் சென்றது ஆகும் என்பது மறைவானதன்று. மேலும், யாரேனும் கில்ர் (அலை) மூஸா (அலை) இவர்களிடையே காணப்படும் சம்பந்தமேபோலதான், அவர்களுக்கும் நம் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இடையேயும் தெரிகிறது என்று எண்ணுவாராயின், அவர் தம்முடைய இஸ்லாத்தைப் புதுப்பித்துக் கொள்ளல்வேண்டும்.”
மேலே சொல்லப்பட்ட இவ் வாக்கியங்களினால் கில்ர் (அலை) அவர்களை உவைசுல்கர்னீ போன்றவர்களுடன் சேர்க்கக் கூடாதென்பதை நன்கு உணர்ந்து கொண்டீர்கள். இதுவுமல்லாமல், “(ஏ நபீ!) உமக்கு முன்னுண்டான எந்த மனிதருக்கும் (இவ்வுலகில்) எக்காலமும் இருக்கும்படியான நீண்ட ஆயுளைக் கொடுத்திருக்கிறோமில்லை,” என்று ஆண்டவனே தன் திருமறையில் விளம்பியிருக்கும்போது, இந்த கில்ர் (அலை) அவர்கள் மாத்திரம் இன்னமும் எவ்வாறு உயிருடன் ஜீவித்துக்கொண்டிருத்தல் முடியும் என்று கேட்கப்படுமாயின், இதற்குச் சொல்லப்படும் விடைகளையும் இவ்விடைகளுக்குத் தப்ஸீரின் ஆசிரியர் சுட்டிக் காட்டும் விடையையும் சிறிது கனிப்பீர்களாக. (ஹாபிஸ்)
“ஆண்டவன் சொல்லியிருக்கும் நீண்ட ஆயுள் என்னும் சொல்லுக்கு எக்காலமும் முடிவே அடையாத அப்படிப்பட்ட நீண்ட ஆயுளைக் குறிக்கும். இங்கு கில்ர் (அலை) அவர்களின் ஆயுட் காலமோ அவ்வாறில்லை. எனவே, அவர்களுட் சிலர், கில்ர் அவர்கள் தஜ்ஜாலைக் கொன்றுவிட்டு மரணமடைவார்கள் என்றும் இன்னமும் சிலர் குர்ஆன் எடுபட்டுப்போகும் அப்படிப்பட்ட நாளையில் காலகதி அடைவார்களென்றும் வேறு சிலர் இறுதிக் காலத்தில்தான் காலமாவார்களென்றும் இன்னமும் பலவாறாகவும் அதற்கு ஜவாபு கொல்லுகிறார்கள். எனவே இஃது எவ்வளவு உறுதியான விடையாய் இருக்கிறதென்பதை நீங்களே கவனித்துக் கொள்வீர்களாக.”
எனவே, குர்ஆனின் ஆயத்துக்கு விடை சொல்லி யிருப்பவர்களின் வாக்கியங்களின் உறுதியைத் தப்ஸீரின் ஆசிரியர் சொல்வதேபோல் ஒரு சிறிது நன்கு தெரிந்துகொண்டிருப்பீர்கள். எனவே, அதற்குப் பின் சில ஹதீதுகள் கில்ர் (அலை) அவர்கள் சம்பந்தமாய்க் கிடைப்பதாயும் இவையே தங்களுக்குப் போதுமென்றும் ஆகையால் வேறு யாரும் சொல்ல வேண்டியது ஆவசியகமில்லையென்றும் சிலர் கூறிக்கொண்டு, கில்ர் (அலை) அவர்கள் இன்னமும் உயிருடன் இவ்வுலகின்கண் ஜீவித்துக்கொண்டிருப்பதாய்க் கூறிக்கொண் டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஏற்றாற்போல் சில பொய்யான வாக்கியங்களையும் கட்டி வைத்துக்கொண்டு, இவை நாயகமவர்களின் உண்மையான வாக்கியங்களேயென உரைத்துக்கொண்டும் வருகிறார்கள். ஆகையால், ‘உண்மையிலேயே ஏதாவது நாயக வாக்கியங்கள் இது விஷயத்தில் காணப்படுகின்றனவா? இவையெல்லாம் உண்மையான ஹதீதுகள் தாமா?’ என்னும் விஷயத்தில் இந்த ரூஹுல் மஆனீயின்கண் என்ன சொல்லப்படுகின்ற தென்பதை ஆராயவேண்டுமாயின், இதையம் கவனிப்பீர்களாக. (ஹாபிஸ்)
“கிலர் (அலை) அவர்கள் விஷயமாய்ச் சில ஹதீதுகள் காணப்படுகின்றன.எனவே, அவைகள் எங்களுக்குப் போதும் என்று சிலர் கூறுகின்றனர். உங்களுக்குச் சில ஹதீதுகளின் நிலைமையை இதன் முன்னமே விளக்கிக் காட்டியிருக்கின்றோம். அன்றியும் இங்கு இப்னு கைய்யிமுல் ஜௌஸீ அவர்களின் ஒரு வாக்கியத்தையும் வரைகிறோம். அஃதாவது, கில்ர் (அலை) அவர்கள் சம்பந்தமாகவும் அவர்கள் ஜீவித்திருக்கிறார்கள் என்பது சம்பந்தமாகவும் கூறிக்கொண் டிருக்கும் ஹதீதுகளெல்லாம் பொய்யான வாக்கியங்களேயாகும். இதன் சம்பந்தமாய்ச் சரியான ஒரு ஹதீதும் கிடையவே கிடையாது. இல்லை, இந்த ஹதீதுகள் சரியானவைதாம் என்று எவரேனும் சொல்வாராயின், இதை ருஜுப்பிக்க வேண்டுவது அவரது கடமையாகும்.”
உண்மையில் ஹதீதுகள் இருக்கின்றனவா, இல்லையா வென்பதைப்பற்றி எமக்கொன்றும் கவலையில்லை. இல்லை, இஃதெல்லாம் எப்படியாவது போகட்டும்; மஷாயிகுகளெல்லாம் கில்ர் (அலை) அவர்கள் இன்னமும் உயிருடன் இருந்து வருகிறார்களென்று, இஜ்மாஃ செய்திருக்கிறார்கள். இதையேதான் இப்னு ஸலாஹ், நவவீ போன்ற பெரியார்கள் வரைந்திருக்கிறார்கள். எனவே, இதனை ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று சொல்லப்படு மாயின், “இந்த மஷாயிகுகளின் இஜ்மா-வை ஒத்துக்கொள்ள முடியாதென்று வேறொரு விஷயம் சொல்லப்படுகிறது.” ஏனெனின், ‘இந்த சூஃபிய்யாக்களென்னும் மஷாயிகுகளெல்லாம் பற்பலவிதமான அபிப்ராயபேதங் கொண்டிருக்குங் காலையில், இவர்களெல்லாரும் சேர்ந்து இஜ்மாஃ செய்து விட்டார்களென்றால், யாரே ஒப்புக் கொள்வர்?’ என்றும், ‘இந்த இஜ்மா-வை எல்லாரும் ஒத்துக் கொள்ள முடியுமா? முடியாதா? என்னும் விஷயமாய் இந்தத் தப்ஸீர் ரூஹுல் மஆனீயில் என்ன காணக் கிடக்கின்றது’ என்றும் கேட்பீர்களாயின், அதையும் பின்காணுமாறு உணர்ந்து கொள்வீர்களாக. (ஹாபிஸ்)
“ஷெய்க் சத்ருத்தீன் இஸ்ஹாக்குல் கூனவீ என்பவர் தம்முடைய ‘தப்ஸிரத்துல் முப்ததா வ தத்கிரத்துல் முன்தஹா’ என்னும் நூலில் சொல்லுகிறார்: நிச்சயமாகவே கில்ர் (அலை) அவர்கள் ஆலமெமிதாலில் இருக்கிறார்கள். (இவ்வுலகிலில்லை). மேலும், அப்துர் ரஜ்ஜாகுல் காஷீ பின்காணுமாறு கூறுகிறார்: கில்ர் என்றால் விரிக்கும் ஒரு பொருளுக்கும், இல்யாஸ் என்றால் மூடிக்கொள்ளும் ஒரு வஸ்துவுக்கும் சொல்லப்படுகின்றன. (எனவே, கில்ர் என்றால் தனியாய்ப் பிரத்தியேகமான ஒரு மனிதனைக் குறிக்காது). இதனுடன் நில்லாது இன்னமும் சிலர், கில்ர் என்றால் அஃதொரு மேலான தரஜாவாகும்; இதனைச் சில சாலிஹான நல்ல மனிதர்களும் அடைகிறார்கள் இது மூஸா (அலை) அவர்கள் காலத்தே ஜீவித்துக் கொண்டிருந்த கில்ர் (அலை) அவர்களின் மர்த்தபா (உயர்பதவி) ஆகும் என்று கூறுகிறார்கள். இந்த மஷாயிகுகளான இன்னவர்களினிடையே இத்தனை விதமான விகற்பங்களைக்கொண்ட வாக்கியங்களை யெல்லாம் வைத்துக்கொண்டு, இவர்களெல்லாம் கில்ர் (அலை) அவர்கள் ஜீவித்திருக்கிறார்கள் என்று இஜ்மாஃ செய்து விட்டார்கள் என்றால், இஃது எப்படி இஜ்மாஃ ஆகும்? இல்லை, இப்னுஸ் ஸலாஹ், நவவீ போன்றவர்களெல்லாம் ‘இஜ்மாஃ செய்திருக்கிறார்கள்’ என்று சொல்வதனால், இதனை நாம் ஏற்றுக் கொள்ளலாம்; ஆனால், ஷரீஅஅத்தின் ஆதாரங்களான (கிதாப், சுன்னத், இஜ்மாஃ, கியாஸ் என்று சொல்லப்படும் இந் நான்கில் ஒன்றான) இஜ்மாஃ-வாக இதனை ஓத்துக் கொள்ளல் முடியாது. ஆனால், எதிரியானவன் ஷரீஅத்தின் இஜமாஃ-வையேதான் வேண்டிநிற்பான். இதுவுமல்லாமல், அவ்வெதிரியானவன் ஷெய்குகளின் இஜ்மாஃ-வையே இஜ்மாஃ என்று முதன் முதலாய் ஒத்துக்கொள்ள மாட்டான்…”
(தொடரும்)
Image courtesy: jayicesight.deviantart.com
<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License