ஆகாத கருமங்கள் – 4

by பா. தாவூத்ஷா

61. குர்ஆனிலுள்ள சஜ்தாவின் ஒர் ஆயத்தை ஓதினால் இரண்டு சஜ்தாவாகத்தான் செய்ய வேண்டும்; அதுதான் சரியென்று சில பாமரப் பெண்மணிகள் நம்புகின்றனர். இதுவும் அறியாமையும் மூட நம்பிக்கையுமாகும்.

ஒரு சஜ்தாதான் திலாவத்திற்காகச் செய்ய வேண்டும்.

62. “வளையலே” அணிந்தில்லாத பெண்களின் கரத்திலிருந்தும் ஒரு நகத்திலாயினும் மருதோன்றி இலையைப் பூசிச் சிவப்பாக இல்லாத மாதரின் கரத்திலிருந்தும் தண்ணீர் வாங்கிக் குடிப்பதும் மக்ரூஹ் (அருவருப்பு) ஆகுமென்று சில பெண்கள் வாதிக்கின்றனர். இதுவும் தவறான நம்பிக்கையும் மூடக் கொள்கையுமாகும்.

63. புதிய உடைகள், புதுப் பாதரக்ஷைகள் இவைகளையெல்லாம் அணிந்து கொண்டால் ஆண்டவன் இறுதியில் இதைப் பற்றிக் கேள்விக் கணக்குக் கேட்டுத்தான் தீரவேண்டுமென்றும் ஆனால், ரஜப் மாதத்திலிருந்து ரமலான் மாதம் கடைசி ஜும்ஆ வரை இதற்கிடையிலுள்ள காலங்களில் புத்தாடை அணிந்துகொண்டால், ஆண்டவன் கேள்வி கணக்குக் கேட்கமாட்டான் என்றும் உண்மையறியாத பாமரர்கள் கருதி எத்தனையோ புதிய புதிய ஆடைகளையெல்லாம் குறிப்பிட்ட இக்காலத்துக்குள் அணிந்து கொள்ளுகின்றனர். இதுவும் மஹா கெட்ட நம்பிக்கையேயாகும். ஆண்டவன் நம் அடியார்களுக்கு அளித்துள்ள உடை, பாதரக்ஷைகளை எப்போதும் அணிந்துகொண்டாலும் யாதோர் தோஷமுமில்லை.

64. ஸ்திரீ என்பதற்கு அடையாளமாகப் பெண்களின் இடக்கரத்தில் “வளையல்” காப்புப் போன்ற ஏதேனுமோர் ஆபரணம் அவசியம் இருந்துதான் தீரவேண்டுமென்று சில பாமர ஸ்திரீகள் கருதுகின்றனர். இதுவும் தவறான நம்பிக்கையேயாகும்.

65. தொழுகையின்போது வலப் பெருவிரல் பூமியை விட்டுக் கொஞ்சம் உயர்ந்துவிட்டால் தொழுகை பூர்த்தியாகாமல் முறிந்து போகுமென்று சில பாமர ஜனங்கள் நம்பி வருகின்றனர். இதுவும் தவறான எண்ணமேயாகும். ஆனால், அவசியமில்லாமல் பாதத்தின் விரல்களை அவற்றின் ஸ்தானத்தைவிட்டு அப்புறப்படுத்தல் வீணேயாகும்.

66. சில ஸ்திரீகள் புருஷன் மரித்த வேளையில் “இத்தா” இருக்கும் காலத்தில் மட்டும் விவாகம் செய்து கொள்ள விலக்கப்பட்ட ஆடவர்களுக்குமுன் முக்காடித்துக் கொள்வதை அவசியமென்றும் மற்ற வேளைகளில் வேண்டியதில்லையென்றும் கருதுகின்றனர். இது தவறான எண்ணமாகும்.

67. சில பாமர ஜனங்கள், ஸ்திரீகள் அறுத்த மாமிசத்தைப் புசிக்கக்கூடாதென்று கொள்ளுகின்றனர். இதுவும் தப்பான கொள்கையேயாகும்.

68. பூனைகள் ஏதாவது குறும்புத்தனம் அல்லது தீமைச் செய்துவிட்டால், அந்தப் பூனையை வாலில் கறுப்பு நூற் கயிற்றால் கட்டி அடித்தலாகுமென்று சில மெளட்டிய ஸ்திரீகள் கருதுகின்றனர். நாயகமும் (ஸல்) இவ்வாறு அதை அடித்திருக்கிறார்களென்றும் கூறுகின்றனர். இது முழுத் தவறான விஷயமேயாகும். இவ்விஷயமும், இதற்காதாரமான ஹதீது உண்டென்று சொல்வதும் தவறேயாகும்.

69. பருகி எஞ்சிய எச்சில் தண்ணீரை நின்று அண்ணாந்து குடிப்பதால் அதிக நன்மை (தவாபு) உண்டென்று சிலர் நம்புகின்றனர். இதுவும் தவறான நம்பிக்கையேயாகும். இவர்கள் கூறுவதல்லாமல் வேறெங்கும் இதற்கு ஆதாரம் இல்லவே இல்லை. இவ்வாறு வேறெந்தப் பெரியார் சொன்னதாயும் தென்படவில்லை.

70. யாரையாவது திட்டிவிட்டால் நாற்பது நாட்கள் மட்டும் வைதவன் நன்னம்பிக்கை கொண்டிருப்பதை விட்டும் நீக்கப்படுகிறான் என்றும் அக்காலத்துள் அவன் இறந்துவிட்டால் ஈமான் இல்லாதவனாகப் போகிறான் என்றும் சில பாமரர்கள் கருதுகின்றனர். இதுவும் தப்பான சமாசாரமேயாகும். வைதவன் குற்றம் வேறு இருப்பினும், இதனாலெல்லாம் ஈமான் பறிக்கப்பட்டுக் காபிராக இறக்க மாட்டான்.

71. வியாபாரிகளிடம் சாமான்களை விலைக்குப் பெற்ற பின் இனாமாக அதிகமான சாமானைக் கேட்டுப் பெறுவது கூடாதென்று சிலர் கருதுகின்றனர். இதற்கு நாமம் “கொஸ்ர்” கேட்பதென்றும் இது பாபமென்றும் கூறுகின்றனர். இந்த நம்பிக்கையும் தவறானதேயாகும். ஆனால், வியாபாரியைப் பலாத்காரம் செய்து பெறுவது கூடாது. இஷ்டப்பட்டு அளிப்பானாயின் பெற்றுக்கொள்வது குற்றமாகாது.

72. சில மனிதர்கள் தலைப்பாகை கட்டிக்கொள்ளும் போது உட்கார்ந்தே கட்டிக்கொள்ளுகின்றனர். வேறு சிலர் எழுந்து நின்றுவிடுகிறார்கள். இது எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்.

73. பெருநாளைக்குப் பிறகு நோற்கக்கூடிய ஆறு நோன்புகளை நோற்க வேண்டுமானால், பெருநாளைக்கு முன்னரே ஒரு நோன்பை அனுஷ்டித்து அதன் பிறகு தான் இந்த நோன்புகளை வைத்தல்வேண்டும்; இப்படிச் செய்யாவிட்டால் அந்தப்பூரா நோன்புகளும் நிறைவேற மாட்டாவென்று பல பாமரர்கள் நம்புகின்றனர். இது பெருந் தவறேயாகும்.

74. விளக்கில் ஊற்றி எரிந்துபோய் எஞ்சிய எண்ணெய் அசுத்தமாய் விடுகிறதென்றும் அதை எதற்கும் உபயோகித்தல் கூடாதென்றும் சில பாமரர்கள் கூறுகின்றனர். இதுவும் தவறானதேயாகும். விளக்கை ஜனங்கள் கண்ட கண்ட இடத்தில் வைத்து விடுகிறார்களென்று யாரேனும் இவ்வாறு கற்பித்துப் பயப்படுத்தியிருக்கலாம். ஏனெனின், அப்படிக் காப்பாற்றி வைக்காத எண்ணெயில் நாய், எலி, பூனை முதலியவைகள் எச்சமிட்டு அசுத்தப்படுத்திவிடுதல் கூடும். இப்படி நேர்ந்தால் தான் அசுத்தமாகுமே யல்லாது எரிந்து போவதனால் ஒரு காலும் அசுத்தமாகிறதில்லை.

75. சுன்னத் என்னும் தொழுகையைத் தொழுது கொண்டு அப்படியே மஸ்ஜிதுக்குள் இருக்கும்வரை யாரிடமும் பேசாமல் மெளனமாயிருக்க வேண்டுமெனச் சில அறியாத மக்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு எவ்வித மார்க்க ஆதாரமும் கிடையாது. இல்லை, இதன்படியே ஒருவன் ஒழுகத் தலைப்படுவானாயின், இவன் அத்தியாவசியமாய்ச் செய்யவேண்டிய, சொல்ல வேண்டிய எத்தனையோ விஷயங்கள் விடுபட்டுப் போமென்பது திண்ணம். இவ்வாறான மனப்பான்மை கொள்வதே ஒரு கூடாத காரியமாயிருக்கிறது.

76. மாமிசத்தில் எலும்பில்லாவிட்டால் அதைப் புசிப்பது மக்ரூஹாகுமென்றும் அப்படிப்பட்ட இறைச்சியை வாங்கக் கூடாதென்றும் பாமரர்கள் கூறுகின்றனர். இஃதோர் ஆதாரமற்ற வாதமாகும்.

77. பிராணிகளை (தபஹ்) அறுக்கும்போது அவற்றைப் பிடிப்பவன்கூட அவசியம் “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” என்று சொல்ல வேண்டியது வாஜிபாகுமென்று சில பாமரர்கள் கூறுகின்றனர். இவ்வாறு கூற வேண்டியது வாஜிபென்று அவ்வளவு அவசியமாக எங்கும் அது கூறப்பட்டில்லை. அறுப்பவன் சொல்வதே போதுமாயிருக்கிறது; பிடிப்பவன் சொல்லவேண்டியது அவசியமில்லை.

78. ஹுக்காப் பாத்திரத்தில் ஊற்றப்பட்ட தண்ணீரும் புகையைப் பிடிப்பதனால் அசுத்தமாய் விடுகிறதென்று சில பாமரர்கள் கூறுகின்றனர்; மார்க்கச் சட்டப் படி அஃது அசுத்தமாவதில்லை. ஆனால், அதில் ஒருவித துர்நாற்றம் உண்டாய் விடுவதனால் அதை அடிக்கடி மாற்றிக் கொள்வது உத்தமம்தான்.

79. பிள்ளை பிறந்ததற்காக (அகீகாவுக்காக) அறுத்து வினியோகிக்கப்படும் ஆட்டிறைச்சியை அக்குழந்தையின் தாயும் தகப்பனும் பாட்டியும் பாட்டனும் தாத்தாவும் தாதியும் புசிப்பது கூடாதென்று சில பாமரர்கள் கருதிக் கொண்டு அதன்படியே செய்கின்றனர். இதுவும் தவறானதும் ஆதாரமற்றதுமாகும். இதற்கும் குர்பானீயின் உத்தரவைப் போல்தானிருக்கிறது. யாரும் புசிக்கலாம்.

80. பாங்கு சொல்வோருக்கு எதிராகவும் பிரார்த்தனை (துஆ) புரிவோருக்கு எதிராகவும் செல்லக்கூடாதென்றும் அது பாபமென்றும் சில பாமரர்கள் நம்புகின்றனர். இதுவும் தவறாகும். தொழுது கொள்வோருக்குக் குறுக்காகத்தான் போகக்கூடாது என்பது உண்மையேயல்லாது, ஏனையவை உண்மையாகா.

81. ரமலான் மாத பர்லான நோன்பிற்கு இரவில் (ஸஹர்) ஆகாரம் புசிப்பதேபோல், நபில் நோன்புகளுக்கு ஸஹர் கூடாதென்று சில பாமரர்கள் கூறுகின்றனர். இதுவும் பெரும் தவறான செய்கையேயாகும். இரவு ஆகார விஷயத்தில் பர்லான நோன்பும், நபிலான நோன்பும் ஒரே விதந்தானாகும். இரண்டிலும் வேற்றுமை இல்லை.

82. மலஜல விஸர்ஜனத்தின்போதும் ஸ்னானத்தின் போதும் எப்படிப்பட்ட அவசியம் நேரிட்டபோதினும் பேசக் கூடாதென்று அனேகம் பாமரர்கள் கூறுகின்றனர். ஒழுக்கத்தை கவனிக்கப் புகின், வார்த்தையாடக் கூடாதென்பது உத்தமமேயாயினும் அவசியப்படுமாயின் பேசலாம்.

83. பிரசவித்த ஸ்திரீகள் நாற்பது நாட்களுள் துடக்கினின்று பரிசுத்தமாய்விடினும் 40 நாட்கள் வரை தொழுவதே கூடாதென்று சில பெண்பிள்ளைகள் எண்ணுகின்றனர். அது தவறேயாகும். 40 நாட்களுள் சுத்தமாய்விட்ட ஸ்திரீகள் ஸ்னானம்செய்து அவசியம் தொழுதுதான் தீரவேண்டும். 40 நாட்களுக்கு மேலும் துடக்கு வந்துகொண்டிருக்குமானால் அதை ஒருவித வியாதியென்று கருதித் தொழுது கொள்ளவேண்டும்.

84. பர்ல் நோன்பாளிகள் அஸ்தமனத் தொழுகைக்கு முன்னரும், நபில் நோன்புடையவர்கள் மக்ரிப் தொழுகைக்குப் பின்னரும்தான் நோன்பு திறக்கவேண்டுமென்று சில பாமரர்கள் கூறுகின்றனர். இது தவறானதாகும். இரண்டையும் ஒரே நேரத்தில்தான் திறக்கவேண்டும்.

85. மனைவி தப்பித்தவறித் தன் புருஷனை ‘அப்பா’ (தந்தை) என்று கூறிவிட்டால், உடனே இவர்களுக்கு இடையேயுள்ள விவாகபந்தம் முறிந்து போகிறதென்று எல்லா பாமரர்களும் மிகவாகக் கருதி வருகின்றனர். இஃது ஆதாரமற்ற வீண் வாதமாகும். புருஷனும் தவறுதலாய் மனைவியைத் தாயென்றோ, மகளென்றோ அழைத்துவிட்டாலும் விவாகபந்தம் ரத்தாகிப் போகாது. ஆனால், இவை அர்த்தமற்ற வீண் வார்த்தைகளாகும். புருஷன் தன் மனைவியை நோக்கி, “நீ என் பெற்ற தாயைப் போலாவாய்” அல்லது “நான் பெற்ற மகளே போலாவாய்” என்று கூறினால்தான் விவாக விஷயத்தில் சங்கடங்கள் ஏற்படுகின்றன.

(தொடரும்)

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment