கில்ர் (அலை) – 3

பிறகு இந்தத் தப்ஸீரில், இந்த சூஃபிய்யாக்களின் பாஷைகளையும் விஷயங்களையும் இன்னமும் இவை போன்ற ஆயிரக்கணக்கான அபிப்பிராய பேதங்களையும் அவற்றிற்குரிய மறுப்புக்களையும் சாகோப சாகையாய் எடுத்து வரைந்துவிட்டு, இறுதியில்

ஷெய்கு முஹியித்தீன் பின் அரபி அவர்களின் நீண்ட விஷயத்தையும் வரைந்து, அதற்குப் பின்தான் தம்முடைய அபிப்பிராயத்தையும் தப்ஸீரின் ஆசிரியரான அல்லாமா செய்யித் மஹ்மூது ஆலூஸீ அவர்கள் வரைகின்றார்கள். நன்கு கவனிப்பீர்களாக. (ஹாபிஸ்)

“அவற்றால் (இப்னு அரபியின் வாக்கியங்களினால்) நாம் தெரிந்துகொள்ள வேண்டியதென்னவெனின், கில்ர் (அலை) அவர்களுக்கு நபித்துவம் இருக்கிறதென்றும் அவர் உயிருடன் கியாம பரியந்தம் ஜீவித்திருக்கிறார்கள் என்றும் சொல்லும் வார்த்தையும் ஒத்துக்கொள்ளக் கூடியதன்று என்பதே. இப்படியேதான் ஈஸா (அலை) அவர்களை (உயிருடன்) பாக்கியாய்ச் செய்துவைக்கும் விஷயமும். ஆனால், ஈஸா (அலை) அவர்கள் இப்பூமியில் இறங்கியதன் பின் விவாக முடிப்பார்களென்றும் பிள்ளை பெறுவார்களென்றும் பிறகுதான் மரணமடைவார்களென்றும் நாயகமவர்களின் பரிசுத்த அறையிலேயே நாயகமவர்களுடன் அடக்கம் செய்யப்படுவார்களென்றும் பிரபல்யமாய்ச் சொல்லப்படுகிறது. மேலும், ஈஸா (அலை) அவர்கள் இவ்வுலகில் பாக்கியாய் இருக்கவேண்டுமென்பதற்காக, ஈஸா (அலை) அவர்களும் இத்ரீஸேபோல் இது சமயம் வானலோகத்திலிருப்பதற்கு என்ன காரணத்தை அப்பெரியார் கூறியிருக்கிறார் என்பதைக் கவனித்தல் வேண்டும்.”

“இதுவுமல்லாமல், நீ இம்மாதிரியான வார்த்தைகளைக் கண்டு, இவ்வளவு பெரிய மகான்களெல்லாம் சொல்லுகிறார்களே! என்று எண்ணங்கொண்டு, அவர்களுடைய வார்த்தையில் மட்டும் நீ நம்பிக்கையும் நல்லெண்ணமும் கொண்டிருப்பையாயின், கில்ர் (அலை) அவர்கள் கியாம நாள்வரை ஜீவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லக் கடவாய். ‘இல்லை, யார் சொன்னாலும் எனக்கொன்றுமில்லை. ஒரு விஷயம் உண்டு, அல்லது இல்லையென்று சொல்வதற்குப் போதிய ஆதாரங்களே எனக்கு வேண்டு’மென்று சொல்வையாயின், பெரிய மனிதர்களின் வார்த்தைகள் என்பது உன்னை ஏமாற்றிவிடவேண்டாம். ஏனெனின், எம்பிரான் (ஸல்) அவர்களைத் தவிர்த்து ஏணைய மனிதர்களின் வார்த்தைகள் சரியாயிருக்கின்றனவா? இல்லையா? என்று பார்க்க வேண்டுமேயல்லாது (மனிதர்களின் கண்ணியத்தையும், கௌரவத்தையும், தாழ்மையையும், கேவலத்தையும்) சொல்லும் மனிதர்களைப் பார்ப்பது கூடாது. மேலும், அலீ (ரலி) அவர்கள், ‘சொல்லைப் பார்; சொல்பவனைப் பாராதே’ என்று கூறியுள்ளார்கள். எனவே, (மேலே சொல்லிக்கொண்டு வந்த) இரண்டு தரப்பின் ஆதார ஆதேயங்களையெல்லாம் நீ நன்குணர்ந்துகொண்டபின், உன்னுடைய ஹிருதயத்தினிடத்தே தீர்ப்பைக் கேட்பாயாக,……… இப்னு அரபி அவர்களின் வார்த்தையால் விளங்கக் கிடப்பதாவது: ஷரீஅத்தில் கூறப்படும் தலீலும், புத்தியின் ஆதாரமும் எதை மறுக்கின்றனவோ, அஃது ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது என்பதே. அதே பக்கம்தான் யானும் சென்றுகொண் டிருக்கிறேன்.” ருஹுல் மஆனீ, 5-வது வால்யூம், பக்கம் 95-100.

(இதனால்தான் யாமும் அடிக்கடி எவ்விஷயத்துக்கும் அல்லாஹ்வும் ரஸூலும் யாது கூறியிருக்கிறார்கள்? என்னும் மெய்யான ஆதாரத்தையே ஆழ ஆராய்ந்து பாரக்கவேண்டுமென்று எம் நண்பர்கட்கு வற்புறுத்தி வருகிறோம். தாருல் இஸ்லாம் பதிப்பாசிரியர்.)

அன்புள்ள சந்தேகமுள்ள நேயன்மீர்! மேலே சொல்லிக்கொண்டு வந்ததெல்லாம் தப்ஸீர் ரூஹுல் மஆனீயின் சிற்சில பாகங்களாகும். இறுதியில் கூறிய ஆசிரியரின் சொந்த அபிப்பிராயத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டுமென எண்ணங் கொண்டுள்ள சோதரர்கள் இதைக் கொண்டுமாத்திரம் போதுமெனக்கொள்வார்களாக. சமயம் வாய்க்குமாயின், இன்ஷா அல்லாஹ், இந்தத் தப்ஸீர் ரூஹுல் மஆனீயில் காணப்படும் கில்ர் சம்பந்தமான விஷயங்களனைத்தையும் இன்னமும் எமது கைவயமிருந்து வரும் வேறுபல ஆதார ஆதேயங்களையும் பின்னே வேறு நூலின் வாயிலாய்க் கண்டுகொள்வீர்கள். ஆண்டவனே! எம் நேயர்களான முஸ்லிம்களுக்கு உண்மையை உணரந்துகொள்ளும் பகுத்தறிவின் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக. (ஹாபிஸ்)

என்னிடம் (இப்னு தைமிய்யா) ஒருவர் நேரில் சொன்ன விஷயத்தையும் தெரிந்து கொள்வீர்களாக. அஃதாவது: ‘குத்ப் பர்த்ஜாமிஃ இவர்களின் கல்வி ஞானமானது ஆண்டவனது ஞானத்துடன் போய்ப் பொதிந்து கொண்டிருக்கிறது. இவர்களின் சக்தி அல்லாஹ்வின் சக்தியுடன் சேர்ந்திருக்கிறது. எனவே, ஆண்டவன் எந்த விதமாய் அறிகின்றானோ, அவ்வாறே இவர்களும் அறிகிறார்கள். அல்லாஹ்வுக்கு எவ்வித சக்தியுண்டோ, அஃதேபோல் இன்னவர்களுக்கும் திராணியுண்டு. முதன் முதலாய் இவ் விஷயங்கள் நம் வள்ளல் (ஸல்) அவர்களிடம் காணப்பட்டன; பிறகு அவர்களினின்றும் திரும்பி இச்சக்தியானது ஹஜரத் ஹஸன் (ரலி) அவர்களுக்கு வந்தது; பிறகு அவர்களினின்றும் தலைமுறைத் தத்துவமாய்ப் புரண்டுகொண்டே எமது ஷைகு வரையில் வந்திருக்கிறது,’ என்று கூறினார். இதைக் கேட்டவுடன், அவரை நோக்கி, இவ்வாறு நிர்ணயம் கொண்டிருப்பது பகிரங்கமான குஃப்ராகும். அன்றியும் இழிவான அறியாத்தனமுமேயாகும். இந்நேரம் தாங்கள் சொல்லிக்கொண்டிருந்த விஷயங்களைக் குறித்து மற்றவர்களைப் பிறகு கவனிப்போம். முதன் முதலாய் நம் நயினார் அவர்கள் (ஸல்) சம்பந்தமாகவே இவ்வித எண்ணங்கள் வைப்பது குப்ராயக் காணப்படும்போது, ஏனையர்களைக் குறித்து நாம் கவலைகொள்வானேன்? இதன் சார்பாய் ஆண்டவன் என்ன கூறியிருக்கிறான்? என்னும் விஷயத்தை நுங்களின் தூய்மையான மூளையைக்கொண்டு கவனிப்பீர்களாக:-

(ஏ நபீ!) சொல்வீராக: ‘என்னிடம் ஆண்டவனது புதையல்களிருப்பதாய் யான் நுங்களுக்குக் கூறவில்லை. மேலும் மறைவான விஷயங்களை யானறியேன். நான் மலக்காயிருக்கின்றேனென்றும் சொல்லவில்லை’.” (குர்ஆன், 11:31)

(ஏ நபீ!) சொல்வீராக: ‘ஆண்டவன் நாடிய அந்த ஒன்றேயல்லாமல் சுயமே யானொன்றும் பிரயோஜனத்துக்கோ நஷ்டத்துக்கோ சக்தியுடையவனாயில்லை. மேலும், யான் மறைவான விஷயங்கள் அறிகிறவனாயிருப்பேனாயின், நன்மையையே அதிகப்படுத்திக்கொண்டிருப்பேன். மேலும் என்னைத் தீதென்பது தீண்டாது’.” (7:188)

(ஏ நபீ! இவர்கள் தங்கள் மனத்துக்குள் சொல்லிக்கொள்ளுகிறார்கள்): ‘நமக்கேதேனும் அதிகாரமிருக்குமாயின், இங்குச் (சண்டையில்) கொல்லப்பட்டுப் போயிருக்க மாட்டோம்”.” (3:153)

(குஃப்பார்கள்) நமக்கேதேனும் அதிகாரமிருக்கிறதா?’ என்று கூறுகிறார்கள். (எனவே) அதிகாரமடங்கலும் அல்லாஹ்வுக்குரியதே யாகும் என்று சொல்வீராக.” (3:153)

காஃபிர்களுக்குச் சிறிது குறைப்பதற்காகவும், இன்னமும் அவர்களை இழிவாக்குவதற்காகவும் உங்களுக்கு (அல்லாஹ்) உதவி செய்வான். (ஏ நபீ!) உமக்கொன்றும் அதிகாரமில்லை. நாடினால் (ஆண்டவன்) அவர்களின் பாபத்தை மன்னிப்பான்; அல்லது அன்னவர்களைத் தண்டிப்பான். நிச்சயமாய் அவர்கள் அக்கிரமக்காரர்களா யிருக்கிறார்கள்.” (3: 126, 127)

(ஏ நபீ!) நிச்சயமாகவே நீர் யாரை நேசிக்கின்றீரோ, அன்னவர்களை நீர் நேரான வழியில் நடக்கும்படி செய்து விடுவது முடியாது. ஆனால், ஆண்டவன் நாடியவர்களுக்கு நேர் வழி காட்டுவான். மேலுமவன் நேர்வழியடைந்தவர்களை மிக அறிந்தவனா யிருக்கிறான்.” (28:56)

(எனவே, பொதுவாய்க் கவனிக்குமிடத்து, ஞானமும், சக்தியும் ஆண்டவனுக் கொத்தவாறு எம்பிரான் (ஸல்) அவர்களுக்கும் இருக்கின்றன என்று கூறுவது கூடாதென்பதை மேலே காட்டிய திரு வாக்கியங்களினால் நன்கு தெரிந்து கொள்ளுகிறோம்.) ஆனால், எம்பிரான் (ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்துதான் நேரான வழியையடைய லாயிக்கானவர்களாய் ஆக வேண்டுமென்று ஆண்டவன் வற்புறுத்திக் கூறியுள்ளான். எப்படியெனின்:-

ரசூலுக்கு வழிபட்ட அவன் அல்லாஹ்வுக்கு வழிபட்டான்.” (4: 80)

(ஏ நபீயே!) சொல்வீராக: அல்லாஹ்வை நீங்கள் நேசிக்க வேண்டுமாயின், என்னைப் பின்தொடர்ந்து நடப்பீர்களாக. (அப்பொழுது) அல்லாஹ் நுங்களை நேசிப்பான்.” (3:30)

இதுவுமல்லாமல் ஆண்டவன் நம் நாயகமவர்களுக்கு வேண்டியவரை உதவி செய்யவேண்டுமென்றும், அவர்களுக்கு மரியாதை செய்யவேண்டுமென்றும், வேறு எவ்வளவோ காரியங்களை நாயகமவர்களுக்கு நாம் செய்யவேண்டுமென்றும் நமக்கு ஆண்டவன் கட்டாயப்படுத்திக் கூறியிருக்கிறான். இந்தத் தோரணையிலேயேதான், நாம் நமது உடல் பொருள் அவி. கூட்டங் குடும்பத்தினர் முதலிய சகல வஸ்துக்களையும் விட நாயகமவர்களையே மிகமிக மேலானவர்களென்று மதித்து, அதன்படி நடக்கவும் வேண்டும் என்று ஏக வல்லோன் ஏவியிருக்கிறான். உதாரணமாக, ஆண்டவனுடைய திரு வாக்கியங்களைக் கவனிப்பீர்களாக:-

மூஃமினானவர்களுக்குத் தங்களின் நப்ஸைவிட (நம்) நபியே மேலானவராயிருக்கிறார்.” (33:6)

(ஏ முஹம்மதே!) சொல்வீராக: ‘உங்கள் தந்தையர்களையும் உங்கள் சந்ததியார்களையும் உங்கள் மனைவியர்களையும் உங்கள் குடும்பத்தினர்களையும் நீங்கள் சம்பாதித்த முதல்களையும் நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்திருக்கும் வியாபாரங்களையும் நீங்கள் திருப்தியடைந்திருக்கும் வீடுகளையும் அல்லாஹ்வையும் அவனது ரசூலையும்விட அதிகம் பிரியம் வைப்பீர்களாயின், நீங்கள் அல்லாஹ்வின் தண்டனையை எதிர்பார்த்துக்கொண்டிருப்பீர்களாக.” (9:24)

இதற்கான ஹதீதையும் கவனிப்பீர்களாக:-

“என்னுடைய ஆன்மா எவன் கையிலிருக்கிறதோ, அவன்மீது பிரமாணமாக உங்களுள் ஒருவர் தம்முடைய தந்தை, மைந்தன், மற்றுமுண்டான சகல மனிதர்களையும் விட என்னையே மேலானவனாய் எண்ணி நேசிக்கும் வரை சரியான மூஃமினாகார்.”

(தொடரும்)

Image courtesy: islamicbookcenter.org

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment