கில்ர் (அலை) – 1

கில்ர் (அலை) அவர்கள் இஸ்லாத்துக்கு முன்னேயே மரணமடைந்தனர்.

சில மனிதர்கள், கில்ர் (அலை) அவர்கள் அவுலியாக்களுக்கெல்லாம் நகீபாய் (தலைவராய்) விளங்கிக்கொண்டிருக்கிறார்கள்

என்றும், எனவே, இவர்கள் உலகத்தின்கண் தோன்றியிருக்கின்ற அவுலியாக்களையெல்லாம் அறிகின்றனர் என்றும் கூறுகிறார்கள். இதற்கெவ்வித ஆதாரமுமில்லை. (இவ்வாறு ஹயாத்தாயிருப்பதாய், இமாம் தப்தாஜானீ அவர்களால் இயற்றப்பட்டிருக்கும் கிரந்தங்களுள் ஒரு பெரிய கிரந்தத்தில் எவ்வித ஆதாரமுமின்றி வரையப்பட்டிருப்பதைக் கண்டு யானும் ஆச்சரியப்பட்டேன். ஹாபிஸ்).

ஆனால், உண்மையைக் கவனிக்குமிடத்து, கில்ர் (அலை) அவர்கள் நாயகம் (ஸல்) அவர்களின் மூலமாய் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னமேயே மரணமடைந்து விட்டார்களென்றேதான் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. ஏனெனின், அவர்கள் இவ்வுலகின்கண் ஜீவித்துக் கொண்டிருந்திருப்பார்களாயின், நிச்சயமாய் நபிகள் திலகம் அவர்களைக்கொண்டு ஈமான் கொண்டிருப்பார்கள். அன்றியும், நபிகள் நாதரின் (ஸல்) ஜிஹாதென்னும் யுத்த களங்களுக்கு அவர்களுடன் சென்றிருப்பார்கள். இவ்வாறு செய்ய வேண்டுமென்பதை ஆண்டவன் அதுசமயம் கட்டாய ஃபர்லாகச் செய்திருந்தான். மேலும், நம் வள்ளலவர்களுடன் மக்கா மதீனா முதலிய விடங்களில் ஜீவித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். எம் பெருமானாரவர்களும் அவர்களின் அன்னியோன்னிய நண்பர்களான சஹாபாக்களும் யுத்தங்களுக்குச் சென்றபோதும், அன்னவர்கள் கஷ்ட நிவாரணங்களுக்காக எடுத்துக்கொண்ட பிரயாசைகளின் போதும் இவர்களும் கலந்துகொண்டிருந்தார்களானால், சர்வ சாதாரணக் குஃப்ஃபார்களின் கப்பல்களைக் கடலின் ஆபத்துக்களினின்றும் காப்பாற்றிக்கொண்டிருப்பதைக் காட்டினும் மிக மேலான காரியத்தையே செய்திருப்பார்களென்பதை நாம் தங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. மேலும், முற்காலத்தில் தோன்றிய முஷ்ரிகீன்களின் மத்தியிலேயே இவர்கள் மறைந்து கொண்டிருக்கவில்லை யென்றால், மிக உன்னதப் பதவியையடைந்த இந்த இஸ்லாம் மதத்தவர்களிடம் ஏனோ இவர்கள் மறைந்துகொண்டிருத்தல் வேண்டும்?

இஃதொரு பக்கல்கிடக்க. முஸ்லிம்களுக்கு இவ்வுலக சம்பந்தமாயும் மறு உலக சம்பந்தமாயும், தீன் சம்பந்தமாயும் துன்யா சம்பந்தமாயும் எவ்வளவு விஷயங்களைக் கூறவேண்டுமோ, அவ்வளவையும் நம் நபிகள் திலகமவர்களின் வாயிலாய் இறைவன் நமக்கு எடுத்துச் சொல்லியிருக்கின்றான். இவை போதாவென்றா வேறு நபிமார்களை ஆண்டவன் இன்னமும் யாருக்கும் தெரியாமல் இவ்வகிலத்தில் ஜீவத்திருக்கும்படி செய்திருக்கிறான்? இல்லை! இல்லை! ஏனெனின், நம் நயினாரவர்கள் இதற்காகத்தான், “மூஸா (அலை) மரணமடையாது ஹயாத்தா யிருப்பார்களாயின், நீங்கள் அவர்களையே பின்பற்றியும், என் வார்த்தையைக் கேளாது என்னை விட்டுவிடுவீர்களாயின், நீங்கள் வழி கெட்ட வகுப்பார்களைச் சேர்ந்தவர்களாவீர்கள்,” என்று திருவுளமானார்கள்.

மேலும் எம்பெருமானாரவர்கள், இப்ராஹீம், மூஸா, நூஹ் முதலிய உலுல் அஜ்ம்களில் சேர்ந்தவர்களாகவும், இல்லை! ரசூல்மார்களுக்கே மேலானவர்களாகவும், தலைவர்களாகவும், இல்லை! ஆதத்தின் மக்களுக்கே செய்யிதாய்த் தோன்றியவர்களாகவும் இருந்துகொண்டு, இவர்களே இவ்வும்மத்துகளின் கவாஸ் அவாம்களான மனிதர்களின்பால் மறைவா யிருக்கவில்லையென்றால், ஹஜரத் கில்ர் (அலை) அவர்கள் நாயகமவர்களைவிட மேலானவர்களாய் இல்லாமலிருந்தும், ஏன் மறைந்துகொண்டிருக்கவேண்டும்? இதுவுமல்லாமல், கில்ர் (அலை) அவர்களுக்கு முடிவில்லாத நீண்ட ஆயுள் அளிக்கப்பட்டிருக்கின்றதென்றால், வள்ளல் (ஸல்) அவர்கள் இது சம்பந்தமாய் ஏனோ ஓர் அக்ஷரத்தையேனும் சொல்லிச் சென்றார்களில்லை? சில மனிதர்கள் கில்ர் (அலை) அவர்கள் நகீப் அவுலியாவென்று சொல்லுகிறார்கள். ஆகையால், அவர்களிடம் நாம் கேட்கவேண்டிய தென்னவெனின், அவுலியாக்களக்கெல்லாம் நகீப்கள் சஹாபாக்களாவர். ஆனால். கில்ர் (அலை) அவர்களோ சஹாபியாயிருந்தார்களில்லை. இவ்வாறிருக்கும்போது அவர்கள் நகீப் அவுலியாவென்று எப்படி ஆய்விட்டனர்?

ஆதலின், கில்ர் (அலை) அவர்கள் சம்பந்தமாய்ச் சொல்லப்படும் ரிவாயத்துக்களும் கதைகளும் எந்த விதமான ஆதாரமுடையனவாக இல்லையென்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். இவ்வார்த்தையைக் கூறுகிறவர்களெல்லாம், இருளில் கல்லைப் போட்டு எதிரியைக் கொன்றேன் என்று சொல்பவர்களுக் கொத்தவர்களாகவே காணப்படுகிறார்கள். ஏனெனின், சிலர் ‘நெடுந்தூரத்துக் கப்பால் ஒரு மனிதனைக் கண்டதாகவும், அவர் தாம் கில்ர் என்று எண்ணிக்கொண்டதாகவும் கூறுகின்றார்.’ பிறகு பகிரங்கமாய் ‘நான் கில்ரைக் கண்டேன்’ என்று வெளியில் வந்து கூறுகின்றார். இவ்வாறே ரவாபிஜ்களுள் யாரேனும் நெடுந்தூரத்துக் கப்பால் ஒருவரைக் காண்பாராயின், அவரை இவர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த இமாம் முன்தலிர் மஃசூமாய் ஆக்குகின்றார்; அதற்குமேல் என்ன என்ன கூறலாமென்று எண்ணுகின்றார்களோ, அவை எல்லாவற்றையும் தாராளமாய்க் கூறுகிறார்கள்.

ஒரு சமயம் இமாம் அஹ்மத்பின் ஹன்பல் அவர்களிடம் ஒருவர் வந்து, கில்ர் (அலை) அவர்கள் சம்பந்தமாய்ச் சில விஷயங்களைப் பேசினார். இதைக் கேட்டவுடன் இமாமவர்கள், “உமக்கு மறைவாயிருக்கும் இவரைக் குறித்து யார் இவ்விஷயத்தைச் சொன்னாரோ, அவர் நீதமாய் நடந்து கொண்டவராய்க் காணப்படவில்லை,” என்று கூறினார்கள். எனவே, இதை உற்றுக் கவனிக்கும்போது, இஃதொரு வீணான எண்ணமென்றே கொள்ளவேண்டியதாயிருக்கிறது, இது சம்பந்தமான பிரச்சினையை நாம் மற்றோரிடத்தில் மிக விரிவாய் விளக்கிக்காட்டியிருக்கிறோம்.

மேலும், குத்பென்றும், கௌதன்றும், பர்த்ஜாமிஃ என்றும் சொல்லுபவர்களின் கருத்து, இந்த நமது உம்மத்தில் காணக்கிடக்கும் எல்லா மனிதர்களைக் காட்டினும் ஒவ்வொரு காலத்திலும் ஒரு மேலான மனிதரிருக்கின்றார், அவரையேதாம் இவ்வாறு அழைக்கின்றோம் என்றிருக்குமாயின், அதனை நாம் மறுக்கவில்லை. உண்மையிலேயே ஒருவர் இவ்வாறு மேலானவராயிருக்கலாம்; இவ்வாறே மேலான பெரியார்கள் இருண்டு பேருமிருக்கலாம், நான்கு பேருமிருக்கலாம். இல்லை, ஒருகூட்டத்தினரே யிருக்கலாம். இதிலொன்றும் ஆச்சரியமில்லை. ஒரு சிலருக்குச் சில விஷயங்கள் தெரியலாம்; வேறு சிலருக்கு வேறு சில விஷயங்கள் தெரியலாம்; வேறு சிலருக்கு வேறு சில விஷயங்கள் தெரிந்திருக்கலாம். இன்னமும் சிலருக்கு இவைகளல்லாத இன்னமும் சில காரியங்கள் தெரிந்திருக்கலாம். இதுவுமல்லாமல் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மனிதரே மிகப் பிரதான மேலான ஞானத்தைப் பெற்றிருக்கலாமென்று வைத்துக் கொண்ட போதிலும், இவருக்கு குத்ப் என்றும் கௌத் என்றும் ஜாமிஃ என்றும் பெயர் வைப்பது ஆதாரமற்ற ஒரு பித்அத்தான காரியமாகும். இம்மாதிரியான பெயரை ஆண்டவன் கூறியிருக்கின்றானில்லை; சலஃப் சாலிஹீன்களும், அயிம்மயே சலஃப்களும் எங்கும் சொல்லியிருப்பதாய்க் காணக் கிடைக்கவில்லை. ஆனால், முன்னோர்களான பெரியோர்கள் இவ்வண்ணமான ஓர் உயர்பதவி பெற்றவர் இருக்கலாமென்று சந்தேகங்கொண்டிருந்தனர். ஆனால், இவ்வாறான ஆதாரமற்ற நாமங்களைச் சொல்லிக்கொண்டிருந்தனரில்லை.

இங்கு இன்னமுமொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டியதாயிருக்கிறது. அஃதென்ன வெனின், இந் நாமத்தை ஒத்துக்கொண்டு, இதன்மீது பக்திகொண்டவர்கள் கூறுகிறார்கள்: “அக்தாபின் பரம்பரையானது இமாம் ஹஸன் இப்னு அலீ இப்னு அபீதாலிப் அவர்களினின்றுமே தாம் ஆரம்பமாய் நடந்துகொண்டு வருகிறது. இதுதான் இன்னமும் தொடர்ச்சியாய் நடந்துகொண்டு வருகிறது.”

இவ் வெண்ணமும் வாக்கியமும் விஷயமும் சுன்னத் ஜமாஅத்தார்களின் கொள்கைக் கொத்ததாய்க் காணப்பட மாட்டாது. மேலும், ராஃபிளிய்யாக்களின் எண்ணப்படி இதை ஒத்துக்கொள்ளவும் முடியாது. இஃதெல்லாம் ஒரு பக்கல் கிடக்க, ஹஜரத் அபூபக்ர் ஸித்தீக், உமர் பாரூக், உதுமான் துன்னூரைன், அஸதுல்லாஹில் காலிப் ஹஜரத் அலீ, இவர்களல்லாத மற்றும் மேதாவிகளான முஹாஜிரீன்களும், அன்சார்களும் (ரலி) எங்குச் சென்றுவிட்டார்கள்? ஏனோ இன்னவர்கள் இத் தோரணையில் வந்தார்களில்லை? ஹஜரத் ஹஸன் (ரலி) அவர்களோ நபிகள் பிரான் மரணமடைந்த பொழுதுதான் பாகுபாடு செய்து பகுத்தறியும் சக்தியை யடைந்திருந்தா்கள். இஃதெல்லாம் ஓர் ஆச்சரியமென்றெண்ணி விடாதீர்கள்!

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment