இஸ்லாமிய அறிஞர் – பா. தாவூத்ஷா

by admin

தாருல் இஸ்லாம் இதழ் இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் தமிழக முஸ்லிம்களிடையே மட்டுமின்றி, பிற மக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு இதழாகும். பள்ளிப்பருவத்தில் நான் ஒரு கையில் குடியரசு இதழையும், இன்னொரு கையில் தாருல் இஸ்லாம் இதழையும் வைத்துக்கொண்டு சுயமரியாதைப் பிரச்சாரம் செய்தேன்” என்கிறார் கலைஞர் கருணாநிதி. “தாருல் இஸ்லாம் பத்திரிகையையும், அதன் ஆசிரியர் பா. தாவூத்ஷா அவர்களையும் நினைக்குந்தோறும் நினைக்கும்தோறும் கழி பேருவகை அடைகிறோம். தாருல் இஸ்லாம் பத்திரிகை ஆசிரியர் நம் கூட்டத்தைச் சார்ந்தவர்” என்று கூறினார் பெரியார். அன்றையக் கால கட்டத்தில் இந்த இதழுக்கென்றே முஸ்லிம்களிடையே ஒரு வாசகர் வட்டம் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சிறப்பான இதழை நடத்திய அறிஞர் பா. தாவூத்ஷா அவர்களைப் பற்றித்தான் இப்போது பார்க்கவிருக்கிறோம்.

பிறப்பு – கல்வி

அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் தாலுகாவில் நாச்சியார் கோயில் என்ற கிராமத்தில் 29.03.1885 அன்று பாப்பு ராவுத்தர் குல்ஸும் பீவி தம்பதியினருக்கு பா. தாவூத்ஷா மகனாகப் பிறந்தார். தனது தொடக்கக் கல்வியை கிராமத்திலிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்ற அவர், இடைநிலைக் கல்வியை கும்பகோணம் நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். புகழ்பெற்ற கணித மேதை இராமானுஜம் இவரது பள்ளித் தோழராக இருந்தார். தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாத அய்யர், இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் இவரது கல்லூரி ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரிப் படிப்பிற்குப்பின், தென்னாற்காடு மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் சாதாரண எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் இலாகா பரீட்சையில் தேர்வு பெற்று சப் மாஜிஸ்டிரேட் ஆகப் பதவி உயர்வு பெற்றார். ஒன்பது ஆண்டுகள் அந்தப் பணியில் இருந்தார்.

அரசியல் நுழைவு

அந்தக் காலகட்டத்தில் நாட்டில் ஒத்துழையாமை இயக்கமும், கிலாபத் இயக்கமும் உச்ச கட்டத்தில் இருந்தன. அரசுப் பணிகளில் பணியாற்றுவோர் தங்களது பணிகளிலிருந்து விலகி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வேண்டுமென மகாத்மா காந்திஜி அறைகூவல் விடுத்தார். காந்திஜியின் இந்த வேண்டுகோளை ஏற்று நாடெங்கிலும் பல அதிகாரிகளும், ஊழியர்களும் அரசுப்பணியிலிருந்து விலகி சுதந்திரப் போராட்டத்தில் குதித்தனர். 1921 ஆம் ஆண்டு விழுப்புரம் சப் மாஜிஸ்டிரேட் ஆக பணியாற்றிக் கொண்டிருந்த பா. தாவூத்ஷாவும் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டுச் சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். ஒத்துழையாமை மற்றும் கிலாபத் இயக்கங்களுக்கு ஆதரவாக நாடெங்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கதர்த் துணிகளை கை வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்னை நகரில் தெருத் தெருவாகச் சென்று அதனை விற்பனை செய்தார். தனது அரசியல் நடவடிக்கைகளுக்குச் சென்னை நகரமே ஏற்ற இடம் என்று கருதி அங்கு குடியேறினார். சிறப்பான முறையில் பணியாற்றியதன் காரணமாக சென்னை மாநகர காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை நகரசபையின் ஆல்டர் மேனாகவும் நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்திற்காக தேசகேசவன் என்ற வார இதழையும் நடத்தினார். பெரியார் ஈ.வே.ரா., சேலம் மருத்துவர் வரதராஜுலு, திரு.வி.கல்யாணசுந்தரனார் ஆகிய தலைவர்களுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார்.

எனினும், காங்கிரஸ் கட்சியை விட்டு படிப்படியாக முஸ்லிம் தலைவர்கள் விலகியபோது, பா. தாவூத்ஷாவும் 1940 ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி முஸ்லிம் லீகில் சேர்ந்தார். பெரியார் ஈ.வே.ரா.வுடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கு கொண்டார். 1941 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் (12, 13, 14, 15 தேதிகளில்) சென்னையில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் லீக் மாநாட்டில் உரையாற்றிய காயிதே ஆஜம் ஜின்னாவின் ஆங்கில உரையைத் தமிழில் மொழி பெயர்த்தார். பாகிஸ்தான் தனி நாடு பிரிவினையை ஆதரித்து நாடெங்கும் பிரச்சாரம் மேற்கொண்டார். நாட்டுப் பிரிவினைக்குப் பின்னரும், முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும். நலன்களுக்காகவும் குரல் கொடுத்தார்.

தாருல் இஸ்லாம்

பா. தாவூத்ஷா இளமையிலேயே இதழியல் துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். இயல்பாகவே அவரிடம் நாவன்மையும், எழுத்துத் திறனும் இருந்தன. இதழாசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், நாவலாசிரியர், அரசியல்வாதி, சமய அறிஞர் எனப் பன்முகத் தன்மைகளைக் கொண்டிருந்தார். தொடக்க காலத்தில் தனது மேடைச் சொற்பொழிவுகளை “சங்கக் கமலம்” “மறு கமலம்” ஆகிய தலைப்புகளில் சிறுசிறு பிரசுரங்களாக அச்சிட்டு வெளியிட்டு வந்தார். 1921 ஆம் ஆண்டு தத்துவ இஸ்லாம் என்ற மாத இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். 1923 ஆம் ஆண்டு, இந்த இதழ் தாருல் இஸ்லாம் என்ற புதிய பெயரில் வெளிவரத் தொடங்கியது. இது சில காலம் வார இதழாகவும், சில காலம் நாளிதழாகவும் வெளி வந்தது. பா. தாவூத்ஷாவின் கை வண்ணம் இதழ் முழுவதும் நிரப்பி இருந்தது. தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டு கட்டுரைகளையும், சிறுகதைகளையும் எழுதினார்.

பெரும்பாலும் சமஸ்கிருத, அரபிமொழிக் கலப்பின்றி எழுதி வந்தார். ஒவ்வொரு இதழிலும் நபிகளாரின் அமுத மொழிகளையும் (ஹதீஸ்கள்) குர்ஆன் வசனங்களையும் வெளியிட்டு வந்தார். கேள்வி பதில் பகுதி, இளைஞர் பக்கம், மங்கையர் பக்கம், சிறுவர் பக்கம் என வெவ்வேறு தலைப்புகளில் செய்திகளையும், தகவல்களையும் வெளியிட்டு வந்தார். சமாச்சாரக் கொத்து, சமாச்சாரத்திரட்டு, விசயத்திரட்டு, கலம்பகம், மாதாந்திர விசேஷம், பிரபஞ்ச விலாசம் எனப் பல்வேறு தலைப்புகளில் செய்திகளையும், நாட்டு நடப்புகளையும் தொகுத்து வழங்கினார்.

எழுத்துப் பிழைகளைத் திருத்துவதற்கென்றே செல்வராஜ் என்ற தமிழ்ப்புலவரை அலுவலகத்தில் பணி அமர்த்தியிருந்தார். இதழில் இடம் பெற்றிருந்த இத்தகைய செய்தித் தொகுப்புகள் வாசகர்களின் ஒருமித்த ஆதரவைப் பெற்றிருந்த போதிலும், சமயம் சார்ந்து அவர் எழுதிய கட்டுரைகள் உலமாக்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்தன. துருக்கியில் இஸ்லாமிய கிலாபத்தை (உதுமானியப் பேரரசு) ஒழித்து விட்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த முஸ்தபா கமால் எடுத்த சமய சீர்திருத்த நடவடிக்கைகளால் பெரிதும் கவரப்பட்ட இவர், தனது கட்டுரைகளிலும், தலையங்கங்களிலும் அந்தச் சிந்தனைகளை வெளிப்படுத்தினார்.

இஸ்லாமில் புரோகிதத்திற்கோ, புரோகிதர்களுக்கோ இடமில்லை என்றும், தற்போது உலமாக்கள் புரோகித வேலைகளையே செய்து வருகின்றனர் என்றும், திருமணம், நிச்சயதார்த்தம் சுன்னத் வைபவம் போன்ற சுப காரியங்களுக்கும் ஜனாஸா இறுதிச் சடங்கிற்கும் உலமாக்களை அழைக்கக்கூடாது; அவர்களும் போகக்கூடாது என்றும் எழுதினார். தர்கா கொண்டாட்டங்கள் (கொடி எடுப்பது, உரூஸ், சந்தனக்கூடு எடுப்பது) சகுனம் பார்ப்பது, மந்திரித்துக் கையில், கழுத்தில் கயிறு கட்டுவது, குறி பார்ப்பது, ஆருடம் பார்ப்பது, நாள் நட்சத்திரம் பார்ப்பது ஆகிய பழக்க வழக்கங்கள் இஸ்லாமுக்குப் புறம்பானவை என்றும் கண்டித்து எழுதி வந்தார். உலமாக்கள் யாசகர்களைப் போல இருக்கிறார்கள். எனவே அவர்களை உருவாக்கிய அரபுக் கல்லூரிகள் “யாசகப் பயிற்சி சாலைகள்” எனச் சாடினார்.

அரபுத் தமிழ் அப்போது தமிழக முஸ்லிம்களிடையே பழக்கத்தில் இருந்து வந்தது. (அதாவது தமிழை அரபி லிபியில் எழுதுவது) இதனைக் கடுமையாக எதிர்த்து தாருல் இஸ்லாம் இதழில் எழுதினார். வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரை தமிழில் தான் நடத்தப்பட வேண்டும். அரபியில் நிகழ்த்தினால் மக்களுக்குப் புரியாது என்று தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார். “அந்தோ பரிதாபம். இக்காலத்தில் இத்தென்னாட்டில் இந்தக் குத்பாவை என் செய்திருக்கின்றனர்? எங்கும் பொருள் விளங்காத ஒரு சம்பிரதாயச் சடங்காக அதைச் செய்து விட்டனரே” என்று எழுதினார். குத்பா பிரசங்கம் என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். அது சம்பந்தமாக “தாருல் இஸ்லாம்” இதழில் வெளி வந்த விளம்பரத்தில் பள்ளிவாசல்களில் கூடியிருப்பவர்கள் குறட்டை விட்டுத் தூங்கிய போதிலும் அரபு மொழியிலே குத்பாவை ஓதி அவர்களைத் தாலாட்டி மேலும் உறங்க வைத்தாலும் வைக்கலாமேயொழிய ஜும்ஆ பிரசங்கங்களைத் தாய் மொழியல் புரியக்கூடாது என்று தொண்டை கிழியக் கத்தித்திரிந்த முரடர்களின் காலம் அஸ்தமித்துப் போய் விட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதே நேரத்தில் இஸ்லாமையும் இறைத் தூதரையும் அவதூறு செய்யும் நோக்கில் எழுதப்பட்ட கருத்துக்களை அவர் கடுமையாகச் சாடி தனது இதழில் பதிலடி கொடுத்து வந்தார். இலங்கையிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த “இண்டிபென்டன்ட்” இதழில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சித்தரித்து ஒரு கார்ட்டூன் வரையப்பட்டதைக் கண்டித்து அவர் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்.

“இஸ்லாத்தையும், இறை தூதரையும் அவதூறு செய்தல், உண்மைகளைத் திரித்துக் கூறுதல், முஸ்லிம்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தக்கூடிய மோசமான கற்பனைகளையும், படங்களையும் வெளியிடுதல், புதிய வழக்கங்களுடன் ஒப்பிடுவதன் மூலம் பழைய மதப் பழக்க வழக்கங்களை அவதூறு செய்தல் ஆகிய செயல்களைச் செய்ய ஒவ்வொரு வாய்ப்பையும் கிறிஸ்துவ மிஷனரிகள் பயன்படுத்திக்கொள்வது சாதாரண நிகழ்ச்சியாகி விட்டது. இவற்றை ஆட்சேபித்து முஸ்லிம்கள் கிளர்ச்சி செய்யத் தொடங்கியதும் மிஷனரிகள் மன்னிப்புக் கேட்பதும், ஆட்சேபிக்கப்பட்ட புத்தகங்களையும், படங்களையும் அரசு தடை செய்வது பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி விட்டது.” (தாருல் இஸ்லாம் 19.1.1935)

அதே நேரத்தில் பெரும்பாலான உலமாக்களும் மார்க்க அறிஞர்களும் தாவூத் ஷாவின் சமயம் தொடர்பான கருத்துகளுக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். உலமாக்களில் பலர் அவரது தர்கா கொண்டாட்டங்கள் குறித்த கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத போதிலும், அவர் கையாண்ட புரோகிதர்கள், யாசகர்கள் ஆகிய வார்த்தைப் பயன்பாட்டிற்கும் திருமணத்திற்கோ அல்லது ஜனாஸா அடக்கத்திற்கோ ஆலிம்களை அழைக்க வேண்டியதில்லை என்ற கருத்துகளுக்கும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

உலமாக்களால் நடத்தப்பட்ட ஸைபுல் இஸ்லாம், தாஜூல் இஸ்லாம், தத்துவ இஸ்லாம், ஹிப்ஃபாஸதுல் இஸ்லாம், அல்கலாம் ஆகிய இதழ்களில் அவரைக் கண்டித்து காரசாரமான கட்டுரைகள் வெளிவந்தன. தாவூத்ஷாவை எதிர்க்க “இஸ்லாமியப் பாதுகாப்புச் சங்கம்” என்ற அமைப்பை உலமாக்கள் நிறுவனர். எனவே சமயக் களத்தில் பெரும் பரபரப்பும், வாதப் பிரதிவாதங்களும் ஏற்பட்டன. ஒரு கட்டத்தில் தாவூத்ஷா காதியானி இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக உலமாக்கள் குற்றம் சாட்டினர். அவரை லண்டனுக்கு அழைத்துச்சென்ற காஜாகமாலுதீன் என்பவரும் (1922 ஆம் ஆண்டு) தமிழில் மொழி பெயர்க்க அவர் தேர்ந்தெடுத்த குர்ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்பாளர் முஹம்மது அலி என்பவரும் காதியானிகளாக இருந்ததால், இந்தக் குற்றச்சாட்டு வலுப்பெற்றது.

எனினும் தாவூத்ஷா தான் காதியானி இயக்கத்தில் சேரவில்லை என பகிரங்கமாக மேடைகளிலம், எழுத்துக்கள் வாயிலாகவும் அறிவித்தார். குர்ஆன் மொழி பெயர்ப்பை வெளியிடுவதற்காக நிதி திரட்டும் பொருட்டு அவர் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்றபோது, உலமாக்கள் அந்த நாடுகளுக்கும் அவரைப் பின் தொடர்ந்து சென்று “தாவூத்ஷா ஒரு காதியானி எனவே அவருக்கு நிதி உதவி செய்யாதீர்கள்” என்று செல்வந்தர்களிடம் பிரச்சாரம் செய்தனர். எனவே, எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்காமல் அவர் நாடு திரும்ப வேண்டியதாயிற்று.

உலமாக்கள் நிலை இவ்வாறிருக்க, அன்றைய தமிழ் நாட்டிலிருந்த முஸ்லிம்களின் ஒரு சிறு பிரிவினர் சமயம், சமுதாயம் சார்ந்த அவரது கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். அவரது ஆதரவாளர்களாக மாறினர். சில ஊர்களில் நடைபெற்ற தர்கா கொண்டாட்டங்களுக்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்பட்டது. எங்களின் ஊரான கடையநல்லூரில் இருந்த தாருல் இஸ்லாம் வாசகர்கள், 1941 ஆம் ஆண்டு மக்தூம் ஞானியார் தர்காவிலிருந்து புறப்பட்டு வந்த 10ம் நாள் கொடி ஊர்வலத்தை (ஒவ்வொரு ஆண்டும் ரஜப் மாதம் 10ம் நாள் கொடி ஊர்வலமும், சந்தனக்கூடு ஊர்வலமும் நடக்கும்) தடுத்து நிறுத்தி மறியல் செய்ய முயற்சித்ததாகவும், தர்கா நிர்வாகத்தினர் காவல்துறைக்குப் புகார் செய்து மறியல் செய்தவர்களை அப்புறப்படுத்தியாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து பல ஆண்டுகள் அந்தத் தர்கா கொடி ஊர்வலத்திற்கு மலபார் ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 1952 ஆம் ஆண்டு கடையநல்லூரில் செயல்பட்டு வந்த “முஸ்லிம் மாணவர் மன்றம்” (சங்கத்தினர்) தர்கா அனாச்சாரங்களைக் கண்டித்தும் அதனைக் கைவிடக்கோரியும் ஒரு நோட்டீஸ் வெளியிட்டிருந்தது. அதன் இறுதிப் பாராவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

“சிரம் தாழ்த்தாதீர்கள் – ஜியாரத் செய்வோம்.
கரம் ஏந்தாதீர் – கடவுளின் கருணையை வேண்டுவோம்.
மண்டியிடாதீர்கள் – மரியாதை செய்வோம்
கொட்டடிக்காதீர்கள் – கொடி ஏற்றுவோம்

“பழைய பாதையைத் தகர்ப்போம்; வேண்டியது புதுப்பாதை; அப்பாதையில் பழைமை என்ற படுகுழிகளும், மூடநம்பிக்கை என்ற முட்களும், கயமைத்தனம் என்ற கள்ளிகளும், சடங்கு என்ற சகதியும், சம்பிரதாயம் என்ற இருட்டும், ஆடம்பரம் என்ற அரவங்களும், ஏமாற்றுவித்தை என்ற புதர்களும், வைதீகம் என்ற குறுகிய முடுக்குகளும் இல்லாதிருக்க வேண்டும். அத்தகைய புதுப்பாதை அமைப்போம் அதில் பூரிப்புடன் நடப்போம்.”

தமிழகத்தின் வேறு சில ஊர்களிலும் செயல்பட்டு வந்த முஸ்லிம் சங்கங்கள் குறிப்பாக நாச்சியார் கோயில் முஸ்லிம் சங்கம், கூத்தாநல்லூர் சமூக சீர்திருத்த சபை, காரைக்கால் முஸ்லிம் வித்யா சங்கம் ஆகியன சந்தனக்கூடு ஊர்வலம் என அழைக்கப்பட்ட கந்தூரி ஊர்வலத்தையும். அதனோடு தொடர்புடைய இஸ்லாமிற்கு முரணான பழக்கங்களையும். அழகுக்காகப் பெண்கள் காதுகளில் துளையிடுவதையும் கண்டித்துப் பிரச்சாரம் செய்தன. கூத்தாநல்லூரில் நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலம் அங்குள்ள சங்கத்தினரின் எதிர்ப்பால் கைவிடப்பட்டதாக ஹிஃபாஸதுல் இஸ்லாம் பத்திரிகை செய்தி வெளியிட்டது. “தாருல் இஸ்லாம்” இதழ் முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை சுட்டிக்காட்டவே இந்நிகழ்வுகளைக் குறித்துள்ளேன்.

முஸ்லிம்களைத் தாண்டியும் தாருல் இஸ்லாமின் வாசகர் வட்டம் விரிவடைந்திருந்தது சுயமரியாதை இயக்கத்தினரும் இந்த இதழை வாங்கிப் படித்து வந்தனர். பெரியார் ஈ.வே.ரா. மீலாது கூட்டங்களிலும், இஸ்லாமிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு உரையாற்றும் போது தர்கா கொண்டாட்டங்கள் இறைதூதரின் போதனைகளுக்கு முரணானது என்று விளக்குவதற்கு தாருல் இஸ்லாமில் தாவூத்ஷா எழுதிய கட்டுரைகளையே மேற்கோள் காட்டுவார்.

தமிழில் திருக்குர்ஆன்

பாகிஸ்தானைச் சார்ந்த முகம்மது அலி என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்த திருக்குர்ஆனை தமிழில் மொழிபெயர்க்க தாவூத்ஷா முயற்சிகள் மேற்கொண்டார். இதற்காக லண்டன் சென்று அவருடன் ஒப்பந்தம் செய்து விட்டு வந்தார். எனினும் குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்க்கக்கூடாது; பொருள் சிதைந்து விடும் என்று உலமாக்கள் அவரது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டனர். ஆனால் அவர் மனந்தளராது தனது முயற்சியைத் தொடர்ந்தார். தொடக்கமாக, குர்ஆனின் மூன்று அத்தியாயங்களை மொழிபெயர்த்து “குர்ஆன் தமிழ்மொழி பெயர்ப்பு” என்ற தலைப்பில் வெளியிட்டார். பின்னர் குர்ஆனின் இரண்டு பாகங்களை மொழிபெயர்த்து “ஜவாஹிருல் புர்கான்” என்ற தலைப்பில் வெளியிட்டார். இதில் 159 ஆயத்துகள் இடம் பெற்றிருந்தன. அடுத்த கட்டமாக குர்ஆனின் கடைசி பாகத்தை மொழிபெயர்த்து 1931 ஆம் ஆண்டு வெளியிட்டார். இதன் தலைப்பு “அம்மயத்” என்பதாகும். இடையிலிருக்கும் பாகங்களை விட்டுவிட்டு கடைசி பாகத்தை வெளியிட்டதேன் எனக்கேட்கப்பட்ட போது, “விளக்கவுரை விரிந்து கொண்டே போவதால் முப்பதாவது பகுதியை மொழிபெயர்த்து முடிப்பதற்கு ஆண்டுகள் பலவாகும். இறுதிப் பகுதியிலேயே தொழுகை முதலிய அனுஷ்டானங்கள் குறித்த வசனங்கள் வருவதால் இந்த முப்பதாவது பகுதியை மொழி பெயர்த்தேன்” என்று கூறினார். நான்காவது பாகத்தை (160லிருந்த 252 ஆயத்துக்கள் வரை) “சயகூலு’ என்ற தலைப்பில் வெளியிட்டார். முழு குர்ஆனையும் தொடர்ந்து மொழிபெயர்த்து விட வேண்டுமென எண்ணிச் செயல்பட்டார்.

எழுதிப் பார்த்த போது ஆறு அல்லது ஏழு தொகுதிகள் வெளியிட வேண்டிய தேவை ஏற்படும் போல் தோன்றியது. முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை 1964 ஆம் ஆண்டில் வெளியிட்டார். நான்காம் பாகம் கீழக்கரை தொழிலதிபர் சுஜபு ஆலிம் பொருளுதவியுடன் வெளியிடப்பட்டது. ஐந்தாம் தொகுதி 1967 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆறாம் தொகுதி 1967 ஆம் ஆண்டிற்குப் பின் தமிழ்நாடு வக்ப் வாரிய நிதி உதவியுடன் வெளியிடப்பட்டது. எனினும் அதனை வெளியிடக்கூடாது என உலமாக்கள் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் வக்ப் வாரிய அலுவலகத்திலேயே பிரதிகள் கட்டிப் போடப்பட்டன. பின்னர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நூலக ஆணைக்குழுத் தலைவராகப் பதவி வகித்த போது தாவூத்ஷாவின் குடும்பத்தினர் அவரிடம் சென்று இதுபற்றி முறையிட்டனர். அவர் அந்த மொழி பெயர்ப்புப் பிரதிகளை நூல் நிலையங்கள் வாங்கிட ஏற்பாடு செய்தார். ஏழாம் பாகம் இன்னும் அச்சிடப்படாமலேயே உள்ளது. அதற்குள் அவர் காலமாகி விட்டார்.

இந்த தர்ஜுமா ஒரு காதியானியால் (அதாவது தாவூத்ஷாவால்) மொழி பெயர்க்கப்பட்டது. எனவே அதனை வாங்கக்கூடாது என உலமாக்கள் தடைபோட்டதால் அவரது மொழிபெயர்ப்புத் தொகுதிகள் பெருமளவு விற்பனையாகவில்லை.

நூல்கள்

பா. தாவூத்ஷா நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்துள்ளார். அவை சமயம், சமுதாயம், வரலாறு, கதை கட்டுரை என பல்துறை சார்ந்தவைகளாகும்.

அரபுக் கதைகளை தமிழில் மொழியில் மொழிபெயர்த்து “அல்பு லைலா வலைலா” என்ற தலைப்பில் வெளியிட்டார். இந்தக் கதைகளை முதலில் ரஞ்சித மஞ்சரி இதழிலும் பின்னர் தாருல் இஸ்லாமிலும் தொடராக எழுதினார். (ஆயிரத்து ஓர் இரவுகள்)

இங்கிலாந்து மன்னர் எட்டாம் எட்வர்டு காதலுக்காக அரசு பதவியைத் துறந்த வரலாற்றை “சிம்சனா? சிம்மாசனமா” என்ற தலைப்பில் எழுதினார்.

மொகலாய ராணிகள் மும்தாஜ், நூர்ஜஹான் ஆகியோர் வரலாற்றையும் எழுதினார்.

அவர் எழுதிய புதினங்கள் (நாவல்கள்)

1. கள்ள மார்க்கெட் மோகினி
2. காதலர் பாதையில்
3. ரஸ்புதீன்
4. ஜுபைதா
5. கப்பல் கொள்ளைக்காரி
6. காபூல் கன்னியர்
7. கரளபுரி இரகசியம்
8. காதல் பொறாமையா அல்லது பொறாமைக்காதலா?
9. ஹாத்தீம் தாய்
10. மலை விழுங்கி மகாதேவன்.

“அகமது உன்னிஸா மூட்டை கட்டுகிறார்” என்ற சிறுகதைத் தொகுப்பு.

இஸ்லாமிய நூல்கள்:

1. ஸஹீஹ் புகாரி
2. நபிகள் நாயக மான்மியம்
3. நாயகத்தின் நற்குணங்கள்
4. மகான் முஹம்மது நபி (ஸல்)
5. நபி நாயகமும் நான்கு தோழர்களும்
6. இஸ்லாம்
7. ஈமான்
8. தீனுல் இஸ்லாம்
9. இஸ்லாம் – இணையில்லா சாந்தி
10. பிரார்த்தனை
11. இஸ்லாமிய ஞான போதம்
12. அபூபக்கர் சித்தீக் (ரலி)
13. உமரே பாரூக் (ரலி)
14. உதுமான் (ரலி)
15. இஸ்லாம் காட்டிய அரசியல்
16. அவ்லியாக்கள் மீது அபிமானம்
17. குத்பா பிரசங்கம்
18. மானுடர்க்கேற்ற மார்க்கம் (மொழி பெயர்ப்பு நூல்)

உடல் மன நல நூல்கள்:

1. சுவாசமே உயிர்
2. ஜீவ வசிய பரம ரகசியம்
3. மெஸ்மெரிசம்

“மண வாழ்க்கையில் மர்மங்கள்” என்ற நூல்.

பொதுவான நூல்கள்:

1. உலக அதிசயங்கள்
2. பிரபஞ்ச விநோதம்
3. நாத்திகர்களுக்கு நல்விருந்து
4. புத்துலகமைப்பு

அவர் எழுதிய மேலும் பல நூல்களின் பிரதிகள் தற்போது கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பெண்கள் விடுதலையை வலியுறுத்தி தாருல் இஸ்லாமில் “நம் சகோதரிகள்” என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதினார். முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர் என அறியப்படும் நாகூர் சித்தி ஜூனைதா எழுதிய முதல் சிறுகதை 1929 ஆம் ஆண்டு தாருல் இஸ்லாமில் வெளிவந்தது. இதுபோன்று பல புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார்.

விருதுகள்

தமிழ் எழுத்தாளர் சங்கம் 1963 ஆம் ஆண்டு இவருக்குக் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது.

கொழும்பிலுள்ள தன்ஸீம் என்ற இஸ்லாமிய அமைப்பு “இஸ்லாமிய மாவீரர்” என்ற பட்டத்தை இவருக்கு வழங்கிச் சிறப்பித்தது.

குடும்பம்

பா. தாவூத்ஷாவுக்கு 24.4.1908ல் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் சபுரா பீவி, இவர் மூலமாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. எனினும் சபுரா பீவி காய்ச்சல் கண்டு 1912ல் இறந்த பிறகு 1915 ஆம் ஆண்டு மைமூன் பீவியை மணந்து கொண்டார். இத்தம்பதியினருக்கு மூன்று புதல்வர்கள் மற்றும் நான்கு புதல்விகள்.

இரண்டாவது மகன் அப்துல் ஜப்பார் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் தந்தைக்கு உற்ற துணையாக இருந்தார். இவரும் ஒரு சிறந்த எழுத்தாளராகத் திகழ்ந்தார். “ஷஜருத்துர்” என்ற தொடர் கதையை தாருல் இஸ்லாமில் எழுதினார். இக்கதை வாசகர்களின் பெரும் பாராட்டுதல்களைப் பெற்றது. ஜப்பாரின் கடைசி மகனான நூருத்தீன் இப்போது அமெரிக்காவில் பணியாற்றுகிறார். இவரும் ஒரு சிறந்த எழுத்தாளர். சமரசம் உள்ளிட்ட பல இஸ்லாமிய இதழ்களில் தற்போது எழுதி வருகிறார்.

தாவூத்ஷாவின் மூத்த மகள் ரமீஜா பேகத்தின் கணவர்தான் முஸ்லிம் முரசின் நிறுவன ஆசிரியரான மறைந்த அப்துல் ரகீம் அவர்கள்.

மறைவு

சில ஆண்டுகள் உடல் நலிவுற்று சென்னையிலிருந்த தனது இல்லத்திலேயே முடங்கிக் கிடந்த பா. தாவூத்ஷா 24.02.1969 அன்று காலமானார். அன்று இரவு 10.30 மணிக்கு அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. பா.தாவூத்ஷா தான் வாழ்ந்த காலத்தில் மிகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தார். அவரது வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே இருந்தது. எனினும் தடைகளைத் தாண்டி அவர் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார். “தாவூத்ஷா உலமாக்களைப் பகைத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் அவருக்குக் கிடைக்க வேண்டிய புகழ் கிடைத்திருக்கும். அவர்களைப் பகைத்துக் கொண்டதால் அவரது உழைப்பு முழுமையாகச் சமுதாயத்துக்குப் பயன்படாமல் போய் விட்டது” என்கிறார் கீழக்கரை அறிஞர் தைகா சுஜபு ஆலிம். அவரது கூற்று சரி தானா? சரி என்றே எனக்குத் தோன்றுகிறது. எனினும் விமர்சனங்களைத் தாண்டி அவரது சாதனைகள் தமிழ் மக்களால் என்றும் நினைவு கூரப்பட்டுக்கொண்டே இருக்கும்.

ஆதார நூல்கள்

1. இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா – முனைவர் அ. அய்யூப்.
2. இலக்கிய இதழியல் முன்னோடிகள் – ஜே.எம்.சாலி
3. முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி – ஜே.பி.பி. மோரே.

-சேயன் இப்ராகிம்

(கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள கைபேசி : 9976735561)

நன்றி: சமூகநீதி முரசு, மார்ச் 2017

Related Articles

Leave a Comment