மிஸ்ரின் புதிய சுல்தான்

ஐபக்கை ஷஜருத்துர் விவாகம் செய்து கொண்டவுடனே முதலில் செய்த காரியம் இதுதான்: மிஸ்ரின் மக்களுக்குத் தம்முடைய விவாகத்தைப்பற்றி அறிக்கை விடுத்தார். அவ்வறிக்கையைப் படித்த மக்கள்

அதிசயத்தால் பிளந்த வாயை மூடு முன்னே இன்னோர் அதிசய அறிக்கையைப் பிறப்பித்தார்; கலீஃபா அவர்கள் பெண்ணொருத்தி ஸல்தனத்தின் ஆட்சியை நிர்வகிக்கக் கூடாதென்று விரும்புவதால், மிஸ்ரை இன்றுமுதல் தம்முடைய கணவராகிய, இதுவரை நமக்கு அத்தா பேக்குல் அஃஸகிராகவும் சஷ்னிகீராகவும் இருந்து வந்த, முஈஜூத்தீன் ஜபக்கென்னும் பிரதான வஜீரே சுல்தானாக இருந்து ஆட்சி செலுத்துவார் என்பதுதான் இந்த இரண்டாவது அறிக்கையின் சாராம்சமாகும். ராஜதந்திர நிபுணத்துவத்தில் ஷஜருத்துர்ருக்கு இணையானவர் எவருமிலர் என்று மிஸ்ரிகள் கருதி வந்ததனாலும் அவ்வம்மையார் என்ன செய்தாலும் அஃது அந் நாட்டு நன்மைக்காகத்தான் இருக்குமென்பதை யாவரும் நம்பியதனாலும் இந்த இரண்டு அறிக்கைகளுக்கும் உட்கருத்து என்னவாய் இருக்கக்கூடுமென்பதை யோசித்துக் கொண்டும், ஷஜருத்துர் செய்ததெல்லாம் சரியென்று எண்ணிக்கொண்டும் வாளா இருந்துவிட்டார்கள்.

வழக்கப்படி புர்ஜீகளுக்கு இந்த நடவடிக்கைகள் என்று மில்லாப் பெரிய வயிற்றெரிச்சலை உண்டுபண்ணிவிட்ட தென்றாலும், இன்னொரு பஹ்ரீயுங் கூட ஷஜருத்துர்மீது பெரிய ஆத்திரம் கொண்டுவிட்டார். அவர்தாம் நம் சுத்த வீரர் ஜாஹிர் ருக்னுத்தீனாவார். இன்றுவரை ஷஜருத்துர்ரின் எல்லா நடக்கைகளுக்கும் முற்றமுற்ற உடந்தையாயிருந்து வந்த அவர் இப்போது இப்படித் திடீரென்று மனம் மாறியதற்குக் காரணம் இரண்டுண்டு; முதலாவதாக, ஷஜருத்துர் மறுமணம் செய்துகொண்டதை ருக்னுத்தீன் விரும்பவில்லை. இரண்டாவதாக, அப்படி மணந்துகொண்டவர் மிஸ்ரில் எத்தனையோ பிரமுகர்களிருக்க அவர்களுள் ஒருவரைக் கணவராகத் தேர்ந்தெடுத்திருக்கலாம்; அல்லது, பஹ்ரீ மம்லூக்குகள் ஒருவரையே மணக்க வேண்டுமென்று ஷஜருத்துர் நாடியிருந்தால், இதுவரை எத்தனையோ வகைகளில் சர்வசங்க பரித்தியாகமும் புரிந்து சிவை யுத்தத்தைக் கூட ஜெயித்துக் கொடுத்த தம்மை – ஸாலிஹின் பிரேதத்தை மூமிய்யாவாக்கத் துணைபுரிந்த ருக்னுத்தீனை, பிரேதத்தை உயிருள்ளதாக நடிப்பதற்கு உயிர்கொடுத்த ருக்னுத்தீனை, ஸல்தனத்துக்குச் சத்தியம் செய்துகொடுத்த ருக்னுத்தீனை, இறுதிவரை ராஜபக்தியுடனிருந்த ருக்னுத்தீனை, தூரான்ஷாவைப் பழிதீர்த்து ஷஜருத்துர்ரை சுல்தானாவாக்கிய ருக்னுத்தீனை – மணந்திருக்க வேண்டும். இவற்றையெல்லாம் அறவே மறந்து, ஒரு தியாகமும் பிரமாதமாகப் புரிந்திராத ஒரு முஈஜுத்தீனை ஷஜருத்துர் மணப்பதென்றால், ஜாஹிர் ருக்னுத்தீன் உள்ளங் குளிர்ந்தா போவார்? எனவே, இந்த வீரருக்கு சுல்தானா மீது ஆத்திரம் ஜனித்தது நியாயந்தான்! ருக்னுத்தீன் ஆத்திரமடைந்தபோதினும், அதற்காகத் தம்முடைய வெறுப்பை வெளியிட்டுக் கொள்ளவில்லை. சுல்தான் ஸாலிஹால் மம்லூக்காக விலை கொடுத்து வாங்கப்பட்ட அன்றிலிருந்து இன்றுவரை மிஸ்ரின் ஸல்தனத்துக்காக ருக்னுத்தீன் எங்ஙனம் மவுனமாகவும், தங்கடமையை யுணர்ந்தும் பணிபுரிந்து வந்தாரோ அங்ஙனமே இப்போதும் மெளனமாகவே யிருந்துவிட்டார்.

கலீஃபாவின் தூதுவன் காஹிராவை விட்டு வெளியேறிய பின்னர் ஷஜருத்துர் இப்படித் தந்திர மார்க்கங்களைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தமையால், புர்ஜீகள் சில ஆட்களைத் தேர்ந்தெடுத்து, பாக்தாதுக்குச் சென்று கலீஃபாவிடம் இந்த மாறுதல்களைத் தெரிவித்துவிட்டு வரும்படி திட்டஞ்செய்து அனுப்பி வைத்தார்கள். எனவேதான், கலீஃபாவுக்கு அவருடைய தூதன் செய்தி கொண்டு போனதற்கு அடுத்த நாள் ஷஜருத்துர் மறுமணம் புரிந்துகொண்டதையும், அக்கணவரையே மிஸ்ரின் சுல்தானாக ஆக்கிவிட்டதையும் கலீஃபா கேள்வியுற நேர்ந்தது.

அன்று அரசவை கூடியதும், ஷஜருத்துர் தாம் போட்ட திட்டப்படி நாடகத்தை ஒழுங்காய் நடித்தார். அரியாசனத்தினின்றும் எழுந்து நின்றுகொண்டு கீழ்க்கண்ட பிரசங்கத்தைப் புரிந்தார்:-

“ஏ, காஹரா வாசிகளே! மந்திரிகளே! அமீர்களே! பிரதானிகளே! எல்லாம் இறைவன் நாடியபடியே நடக்கும் என்பதை நீங்களெல்லீரும் நன்குணர்ந்தே யிருக்கின்றீர்கள். நேற்று நாம் எவரும் எதிர்பாராதவகையில் அமீருல் மூஃமினீன் கலீஃபா அவர்களிடமிருந்து என்ன தாக்கீது வந்துதென்பதை உங்களெல்லீர்க்கும் நாம் வாசித்துக் காட்டினோம். அதில் எம்மீது இரு குறைகள் கூறப்பட்டிருந்தன: முதலாவதாக ஒரு பெண்பிள்ளை ஆட்சி செலுத்துவது; இரண்டாவதாக அந்தப் பெண்பிள்ளை விதவையாயிருப்பது. எனவே, இவ்விரு குறைகளையும் நீங்களே களையவேண்டுமென்றும், இல்லாவிட்டால் கலீஃபா அவர்கள் தாமே வேறொரு சுல்தானை நியமித்தனுப்பி விடுவதாகவும் கூறியிருக்கிறாரகள். ஸல்தனத்தின் மக்களாகிய நீங்களோ, உங்களுக்குப் பிடித்தமானவரையே ஆட்சிப்பீடத்தில் வைத்திருக்கப் போவதாகவும், கலீஃபா தேர்ந்தெடுக்கிற சுல்தானை ஏற்கப் போவதில்லை யென்பதாகவும் அபிப்பிராயங் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நாம் நன்கறிவோம்.

“எனவே, கலீஃபாவுக்கும் குறையில்லாமல், உங்களுக்கும் அதிருப்தியில்லாமல் மத்திபமான ஒரு வழியை நாம் கடைப்பிடிப்பதாக உறுதி பூண்டோம். நீங்களெல்லீரும் நேசிக்கிற நம்முடைய அத்தா பேக்குல் அஃஸகிர், வஜீரெ முஅல்லம் முஈஜுத்தீன் ஐபக் அவர்களையே சட்டப்படி மணந்துகொண்டு விட்டோம். எனவே, கலீஃபா அவர்களுக்கு இருந்துவந்த ஒரு வருத்தம் – அஃதாவது, நாம் இன்னம் விதவையாகவே இருந்துவந்த ஒரு குறை – நீங்கிற்று. அடுத்தபடியாக, ஆண் பிள்ளையாகிய அவரையே உங்கள் விருப்பத்துக்கேற்ப சுல்தானாக ஆக்கிவிட்டால், கலீஃபா அவர்கள் பாராட்டுகிற இன்னொரு குறை – அஃதாவது, மிஸ்ரின் ஸல்தனத்தை ஒரு பெண்பிள்ளை நடத்துகிறாளென்னும் இழுக்கு – அகன்றுவிடுமென்றும் நாம் கருதுகிறோம். மிகவும் தீர்க்கமாக யோசித்தே, மிஸ்ரின் நன்மைக்காகவும் மிஸ்ரிகளின் மேன்மைக்காகவும் ஸல்தனத்தின் சுபிக்ஷ­த்துக்காகவும் நாம் இந்தத் தீர்மானத்தை முடிவு செய்திருக்கிறோம்.

“நீங்களெல்லீளரும் என்னை அளவு கடந்து நேசிக்கிறீர்களென்பதையும் நானே சுல்தானாவாக இருக்கவேண்டுமென்று பெரிதும் விழைகிறீர்களென்பதையும் நான் மிக நன்றாயறிவேன். எனினும், என் செய்யலாம்? துருக்கி நாட்டவளாகிய நான் ஒரு பெண்ணாகவல்லவோ பிறந்துவிட்டேன்; கலீஃபா அவர்களும் என் பிறப்பைக் கருதியேயன்றோ நான் சுல்தானாவாய் இருக்கக்கூடாதென்கிறார்! – இப்பொழுதும் உங்களுக்கொன்றும் குறையேற்பட்டு விடவில்லை. என்னுடைய முழுப் பொறுப்பையும் நானே என்கையில் வைத்துக்கொண்டிருக்கும் வண்ணம் நீங்கள் செய்துவிட்டபடியால், இந்த அரியாசனத்தின்மீது நான் நேரில் அமராவிட்டாலும், எம்முடைய பர்த்தாவாகிய முஈஜ் என் சார்பாக இங்கமர்ந்து ஆட்சி புரிவார். ஒன்றும் தவறு நடந்துவிடாதவாறு நான் திரைமறைவிலிருந்தே எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளுகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்டவனிருந்து நம்மையெல்லாம் நேரான வழியில் சீராக நடாத்துவான். உங்களெல்லீரின் அனுமதியின் மீது நான் என் தலையில் சூடியிருக்கிற இக் கிரீடத்தை ஸாஹிபுல் ஜலாலுல் மலிக் முஈஜுத்தீன் ஐபக் அவர்களுக்கே சூட்டுகிறேன். அல்லாஹு அக்பர்!”

சிலர் கண்களில் கண்ணீர் தளும்பியது. சிலர் மெய்துவண்டிருந்தனர். எனினும், ஸாஹிபத்துல் ஜலாலத்தில் மலிக்கா ஷஜருத்துர் அக்கணமே அரியாசனத்தினின் றிழிந்து, முஈஜுத்தீன் சிரத்தின்மீது கிரீடத்தைப் பொருத்திவிட்டு, அவருடைய கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு, “இம் மிஸ்ரின் க்ஷே­மத்துக்காகவும் ஸல்தனத்தின் பாதுகாவலுக்காகவும் யான் என் உடல் பொருள் ஆவியாகிய அனைத்தையும் தத்தம் செய்யக் கடவேனாக என்று எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலாவின் மிது ஆணையாக இந்த சுல்தானுல் முகர்ரம், ஷாஆலம், ஜலாலுல் மலிக் முஈஜுத்தீன் ஜபக் அவரகளிடம் அறுதியிட்டு உறுதி கூறுகிறேன்!” என்று எல்லார் காதிலும் விழும்படியாக ராஜவிசுவாசப் பிரமாணம் செய்துகொடுத்தார். அக்கணமே அரசவையிலுள்ள அத்தனை பேரும் ஒவ்வொருவராக இவ்விதமாக ராஜவிசுவாசப் பிரமாணம் செய்துகொடுத்தனர்: சுல்தான் முஈஜுத்தீனும் பிரமாணப் பிரதிக்னையைக் கூறிவிட்டு, அரியாசனத்தில் ஏறியமர்ந்துகொண்டு விட்டார் எல்லாரும் புது சுல்தானுக்கு வாழ்த்துக் கூறி, சோபனமும் பாடினார்கள்.

ஆண்டவன் நாடினால், கடலைத் திடலாக்குவான்; திடலைக் கடலாக்குவான்.

இவ்விதமாக, அன்று காலையில் சாதாரண வஜீராகவும் மம்லூக்காகவும் சுல்தானாவின் சிப்பந்தியாகவும் மைமமூனாவின் கணவராகவும் தம் வீட்டை விட்டுப் புறப்பட்டு வந்த முஈஜுத்தீனுக்கு அன்றைப் பகலுக்குள்ளே ராஜயோகம் பிறந்து, அவரை எகிப்து தேசத்துக்கே ராஜாவாகவும் ராணி திலகம் ஷஜருத்துர்ரின் கணவராகவும் உயர்த்தி வைத்துவிட்டது! ஆண்டவன் நாடினால், கடலைத் திடலாக்குவான்; திடலைக் கடலாக்குவான்.

காஹிராவோ, அல்லோலகல்லோலப் பட்டுக் கிடந்தது. மாட்சிமை தங்கிய சுல்தானா ஷஜருத்துர் தம் சுயநலம் காரணமாகவோ, ஆட்சியின் மீதுள்ள மோகத்தாலோ பட்டத்துக்கு வரவில்லை யாகையால், கலீஃபா குற்றங் கண்டுபிடித்ததும், மிகவும் பெருந்தன்மையுடனும் கண்ணியத்துடனும் ஓர் ஆண் பிள்ளையின் கையில் ஸல்தனத்தை ஒப்படைத்து விட்டாரென்று எல்லாரும் மெச்சிப் புகழ்ந்து பேசிக் கொண்டார்கள்.

அடிமையாய் வளர்ந்த ஒரு பெண்பிள்ளை சுல்தானாவானதை நாம் முன்னம் வருணித்தபோது, நீங்கள் உங்கள் தலைகளைச் சொறிந்து கொண்டு, ‘பேந்தப் பேந்த’ விழித்தீர்களே! இப்போது முஈஜுத்தீனுக்கு வந்த யோகத்தை – இதுவரை முன்பின் கேள்விப்பட்டிராத யோகத்தைக் கேட்டுவிட்டு என்ன சொல்லப் போகிறீர்கள்? ஐபக்குக்கு அடித்த இந்த ராஜ யோகத்துக்கு என்ன பெயர் சொல்வீர்கள்?

அது என்ன பெயராகவும் இருந்துவிட்டுப் போகட்டும். முஈஜுத்தீன் ஐபக் இப்போது மலிக்குல் முஈஜ் என்று அழைக்கப்பட்டார். பாக்தாதிலே கலீஃபா முஸ்தஃஸிம் பில்லாஹ் ஐயூபி வம்சத்துப் பேர்வழி யாரையாவது மிஸ்ரின் சிம்மாசனத்தில் அமர்த்த வேண்டுமென்று ஆராய்ச்சி செய்வதற்கு முன்னமேயே ஷஜருத்துர் மாற்றுத் தந்திரத்தை வெகு லாவகமாகச் செய்து முடித்துவிட்டார்.

சுல்தானாகப் பதவியேற்ற பின்னர் முஈஜுத்தீன் அன்று மாலை தமதில்லம் ஏகவில்லை. வீட்டிலே தன் மைந்தன் நூருத்தீன் அலீயுடன் கொஞ்சிக் குலவிக்கொண்டிருந்த மைமூனாவுக்கு அரண்மனையில் நடந்த மாறுதல்களெதுவும் தெரியமாட்டாது. எனவே, இரவு வந்ததும் தன் செல்வக் குழந்தை நூருத்தீன் அலீக்கு மைமூனா உணவுகொடுத்துப் படுக்க வைத்துவிட்டு, அரண்மனைச் சேவகத்துக்குப் போன தன் கணவரின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கிய வண்ணம் இருந்தாள். நேற்றைத் தினம் கலீஃபாவிடமிருந்து தாக்கீது வந்ததிலிருந்து சுல்தானா மிகவும் கவலையுற்றுப் போயிருப்பதாக முஈஜுத்தீன் மைமூனாவிடம் முன்னமே கூறியிருந்தமையால், இன்று ஏதும் விசேஷமாக ஆலோசிப்பதற்காகத் தன் கணவரை ராணியார் இருத்திக்கொண்டிருக்கக் கூடுமென்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள். எனினும், நேரம் செல்லச் செல்ல மைமூனாவுக்குக் கவலையதிகரித்தது. தூக்கமும் வரவில்லை. எனவே, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டுவாயில் முகப்பில் வந்து நின்று கொண்டாள்.

வஜீரின் இல்லமாகையால், காவலாளிகள் அல்லுபகல் அனவரதமும் வீட்டை மாறிமாறிக் காவல் புரிவதுண்டு. அந்தக் காவலருள் ஒருவனை மைமூனா அழைத்து, அரண்மனைக்குச் சென்ற தன் கொழுநர் ஏன் நள்ளிரவாகியும் திரும்பவில்லையென்று சிறிது கலக்கத்துடன் வினவினாள். காவலனுக்கு அரண்மனையில் அன்று நடந்த நிகழ்ச்சிகள் யாவும் தெரியுமாதலால், மைமூனாவுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் திகைத்தான். முஈஜுத்தீன் ஷஜருத்துர்ரை மணந்துகொண்ட கதையையும் அதன் காரணமாக அவர் சுல்தானாகிவிட்ட அதிசயத்தையும் மைமூனாவிடம் சொன்னால், அம்மாதுக்கு எப்படியிருக்கும்?

“யா, உம்மு நூருத்தீன்! வஜீர் அவர்கள் இன்று ஏதோ அவசர அலுவலின் நிமித்தம் இரவு முழுதும் அரண்மனையிலேயே தங்கிவிடப் போவதாகக் கேள்வியுற்றேன். தாங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாது போய்ப் படுத்துறங்குங்கள்! விடிந்த பின்னர் அவர் வருவார். அரண்மனைச் சேவகமென்றால், இந்த உபத்திரவந்தான்!” என்று அந்தக் காவலாளி நாஜூக்காகப் பேசினான்.

மைமூனாவுக்கு இந்தப் பதில் மனச்சாந்தியை அளிப்பதற்கு மாறாக, மன வேதனையையே யூட்டிற்று. படுக்கையில் மீண்டும் சென்று படுத்துக்கொண்டு, அந்த அம்மை யோசித்தாள்: ஷஜருத்துர் பட்டத்துக்கு வந்து இத்தனை நாட்களாகியும், முஈஜுத்தீன் அத்தாபேக் உத்தியோகத்தையும் பிரதம வஜீர் உத்தியோகத்தையும் இத்தனை நாட்களாகப் பார்த்து வந்தும், இதுவரை ஒரு முறையாவது அரண்மனையில் இராத் தங்கியதில்லையே! சூரியாஸ்தமனம் ஆனவுடனேயே தம் ஆசை மனையாட்டியுடன் கூடிக் குலவ வீடுதிரும்பி விடுவது வழக்கம். இத்தகைய வழக்கத்துக்கு விரோதமாக இன்று முஈஜுத்தீன் அரண்மனையிலேயே இரவைக் கழிக்கப் போகிறாரென்று கேள்விப்பட்டதும் மனவேதனையடைந்தாள். ஷஜருத்துர்ருக்கும் முஈஜுத்தீனுக்குமிடையே கள்ளவொழுக்க மிருப்பதாகப் பரம இரகசியமாகச் சிலர் பொய் வதந்தியை முன்னமெல்லாம் குசுகுசு வென்று பேசிவந்தது மைமூனாவின் காதுகளுக்கும் எட்டியிருந்தமையால், இன்றிரவு அவர் வீடு திரும்ப மாட்டாரென்ற திடுக்கமூட்டும் செய்தி அதிக நடுக்கத்தைத் தந்தது.

தன் கணவனிடம் மகா மோசமாக நடந்துகொள்ளுகிற மனைவியுங்கூட, அவன் வேறொரு மடந்தையுமடன் கூடிக் குலவுவதைக் காணச் சகிக்க மாட்டாள். உலகத்தின் வேறெந்த விதமான பொறாமையும் இம் மாதிரியான காதற் பொறாமையுடன் போட்டியிட முடியாது. இஃது உலக இயற்கை; இன்ஸான் இயற்கை. இப்படியிருக்க, மிகவும் அன்பொழுகும் காதலுடனே களிப்பு மூட்டிவந்த தன்னுடைய கணவர் முஈஜூத்தீன் ஷஜருத்தர்ரின் சாகசங்களுக்கு இரையாகிப் போய்விட்டால், தன்னுடைய கதியும் தன் செல்வச் சிறுவன் நூருத்தீனின் கதியும் யாதாகி விடுமோவென்று மைமூனா கவலைப்பட்டதில் வியப்பென்ன இருக்கிறது? ஷஜருத்துர்ரின் மாயவலைக்குள் அவர் விழுந்துவிட்டால், எங்ஙனம் மீள்வார்? பாராளும் சுல்தானாவின் மோகனப் புன்னகைக்கு முஈஜுத்தீன் பலியாகி விட்டால், எவரால்தான் என்ன செய்ய முடியும்?

மைமூனா விடிகிற வரையில் தூங்கவேயில்லை. ஷஜருத்துர், ஒர் அடிமைப்பெண்ணாய் இருந்த காலத்திலேயே ஒரு பெரிய ஐயூபி சுல்தானை மயக்கி மணந்துகொண்ட கதையை மைமூனா கேள்விப்பட்டிருப்பதால், இப்போது சுல்தானாவாய் இருந்து கொண்டு, கணவனை இழந்த விதவையாக வாழ்ந்து வரும் போது, தம் கீழே குற்றேவல் புரிகின்ற ஒரு சாதாரண ஐபக்கை மயக்கி விடுவது பிரமாதமான காரியமா? என்று மைமூனா நினைக்கும்போதே நெஞ்சின் மீது பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டது போன்ற அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது. விடிகிற நேரத்திலாவது கணவர் வீடு திரும்பலாம் என்று கொஞ்சம் நம்பிக்கை கொண்டிருந்த அந்தப் பெண்பிள்ளை வருகிற தூக்கத்தையும் கலைத்துக்கொண்டு, இன்னம் ஏதேதோ சிந்தித்து மனம் நொந்தாள். ஷஜருத்துர்ரின் சாகசத்துக்கு முஈஜ் இரையாகிவிட்டால், என்ன நேருமென்பதை மனனம் செய்து பார்த்தாள்:-

“அரசனைப் பார்த்த கண்ணுக்கு என் புரு­ஷனைப் பார்த்தால்… போலிருக்கிறது என்று எவளோ ஒருத்தி சொன்னாளாமே அந்தக் கதையாக என்னுடைய கணவர் அரசியின் மோக வலைக்குள்ளே சிக்கிவிட்டடால், என்னைக் கண்ணெடுத்துத்தான் காண்பாரா? நாடாளும் சுல்தானாவின் பெருமையும், அவருடைய ‘தயவைப்’ பெறும் பாக்கியமும் கிடைக்கப்பெற்ற என் கணவர், ஏழையாகிய என்னை எப்படி மதிப்பார்? ஏ, ஆண்டவனே! நீயே தான் அபலையாகிய என்னையும் என் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும். ஷஜருத்துர்ருக்கு நீயே சீக்கிரம் மறுமணம் செய்துகொள்ள வேண்டுமென்னும் அறிவைக் கொடுத்து, என் கணவர் அவளுடைய வலைக்குள்ளே வீழாமல் காப்பாற்றித் தந்தருள வேண்டும்!”

முஈஜுத்தீன் வீட்டிலே மைமூனா இப்படி மனம் நைந்து கொண்டிருக்கும்போது, சுல்தான் முஈஜுத்தீன் அந் நேரத்திலெல்லாம் அரண்மனைக்குள் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதைக் கவனிப்போம்:-

ஷஜருத்துர் முஈஜுத்தீனையே விவாகம் செய்துகொள்ளப் போவதாகச் சொன்னபோது அவர் முதலில் மறுத்தபோதினும், சுல்தானாவின் அதிகாரத்துக்குத் தம்முடைய சுயமரியாதையைப் பலிகொடுக்க நேர்ந்துவிட்டது. மேலும், விஷம் ஏறுகிற வேகத்தில் ஷஜருத்துர்ரின் எல்லா வேலைப்பாடுகளும் விருவிருவென்று ஒன்றையடுத்து மற்றொன்று வெகு விரைவில் தொடர்ந்து நடந்துகொண்டே சென்றது. முதலில் சுல்தானாவின் புருஷராக முஈஜ் உயர்ந்தார். அன்று பிற்பகலுக்குள் அவர் மிஸ்ரின் சுல்தானாகவே உயர்ந்துவிட்டார். மாலை நேரத்திலோ, புதுமண வாழ்வு வாழவேண்டிய நிலையை எட்டிவிட்டார். ஸாலிஹை இழந்து பலநாள் சென்று மறுமணம் புரிந்து கொண்ட ஷஜருத்துர் அன்றிரவு மிகவும் உள்ளக் களிப்புடனே ‘மதுமதி’ யென்னும் உண்டாட்டயர்தலைக் கொண்டாடினார் என்பதை நாம் விவரித்துக் கூறத் தேவையில்லை.

பொழுது புலர்கிற நேரத்திலே காஹிரா நகரின் பாதுகாவலன், “ஸாஹிபத்துல் ஜலாலத்தில் மலிக்கா, மலிக்காத்துல் முஸ்லிமீன் ஷஜருத்துர்ருல் முஸ்தஃஸிமா, உம்முல் மலிக்குல் மன்ஸூர் கலீல், இஸ்மத்துத் துன்யா வத்தீன் ஆட்சி செலுத்துகின்ற இந்தக் காலத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் இம் மிஸ்ரின் ஸல்தனத்துக்கு யாதொருவிதமான குறையும் வராமல் பாதுகாத்து ரக்ஷித்தருள்வானாக!” என்றே நாள் தவறாமல் வைகறை யாமத்திலே பாடிக்கொண்டு செல்வதை மைமூனா பலமுறை கேட்டிருக்கிறாள். இன்று கொஞ்சமும் தூங்காமலே இரவு முழுவதையும் கழிக்க நேர்ந்த அவள் நகர்ப் பாதுகாவலனின் பாட்டுச் சப்தம் கேட்டுத் தன் செவியைத் தாழ்த்திக் கேட்டாள். அவனது பாராட்டு வழக்கத்துக்கு விரோதமாக அமைந்திருந்தது:

“ஸாஹிபுல் ஜலாலுல் மலிக், மலிக்குல் முஸ்லிமீன், முஈஜுத்தீன் ஐபக் ஆட்சி செலுத்துகிற இக் காலத்தில் எல்லாம் வல்ல இறைவன் இம் மிஸ்ரின் ஸல்தனத்துக்கு யாதொருவிதமான குறையும் வராமல் பாதுகாத்து ரக்ஷித்தருள் பாலிப்பானாக!” என்னும் புதிய பாராட்டைக் கேட்டதும் வாரிச் சுருட்டியெழுந்தாள் மைமூனா.

“என்ன! என் கணவர் மிஸ்ரின் சுல்தான்!” என்று பித்துப் பிடித்தவள் போலே பிதற்றிக்கொண்டு வாயிலண்டை ஓடினாள். மறுமுறையும் நகர்க் காவலனின் அதே பாராட்டை அவள் கேட்டபடியால், ஒன்றும் புரியாமல் திகைத்துப் போயினாள். இடுப்புக்குக் கீழேயிருந்த நரம்புகள் பலஹீன முற்றுப்போய் விட்டமையால், அந்த வீட்டு முகப்பிலேயே பொத்தென்று குந்திவிட்டாள், நம் மைமூனா.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment