ருக்னுத்தீன் பேசப் பேச, ஷஜருத்துர்ருக்குத் துக்கம் பீறிக்கொண்டு வந்தது. அவர் மனம் பல விஷயங்களைச் சிந்தித்தது. ஸாலிஹ் காலம் சென்றதையும் தமக்குப் பிறந்த ஒரே சிசு கலீல் முன்னமே மரணமடைந்து போனதையும் இப்போது தூரான்ஷா ருக்னுத்தீனின்
கோபத்துக்குப் பலியானதையும் மாறி மாறி நினைத்து அவலக் கண்ணீர் அதிகம் உகுக்கத் தொடங்கினார். தம் உள்ளத்தை வருத்திய உதவாக்கறை சுல்தான் கொல்லப்பட்டதில் அவரொன்றும் அதிருப்தியுறவில்லை. ஆனால், ஐயூபிகளின் வம்சம் வேறு சந்ததியின்றி இத்துடன் தொலைந்ததே என்றுதான் வருந்தினார். எந்த ஐயூபிகளிடம் இந்த ஸல்தனத்தை மீட்டுக்கொடுக்க அவர் ஸாலிஹின் பிரேதத்தை மறைத்து வைத்தாரோ, அந்த ஐயூபிகளின் சந்ததி இப்படிவந்து குன்றுமுட்டிய குருவியே போலாய் விட்டதே என்றுதான் கலங்கினார். சென்ற பத்து வருடங்களுக்கு முன்னால் அபூபக்கர் ஆதில் வீழ்த்தப்பட்ட சம்பவத்தையும் அந்த ஸ்தானத்தில் ஸாலிஹ் அமர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தையும் ஷஜருத்துர் ஞாபகப்படுத்திக் கொண்டார். ஆனால், இப்போது எவரை அரியாசனத்தின் மீது அமர்த்துவது? வேறு ஐயூபி யாரிருக்கிறார்?
குனிந்த தலையை நிமிர்த்தாமல் இத்தனை யோசனையும் புரிந்த ஷஜருத்துர் மெல்லத் தம் நேத்திரங்களை உயர்த்தி, எதிரே சோர்ந்து நிற்கும் ஆஜானுபாகுவாகிய அதிவீரதீர ருக்னுத்தீனைப் பார்த்தார். கையெலாம் உதிரக் கறையும் மேலெலாம் வேர்வை நீரும் முகமெலாம் அவலச் சோகமும் நிரம்பிக் கிடக்க, ருக்னுத்தீன் பேசாமல் கனிவுடன் ஷஜருத்துர்ரை உற்று நோக்கிக் கொண்டே இருந்தார். பரிபூரண நிச்சப்தம் நிலவியிருந்தது.
இறுதியாக, ஷஜருத்துர் ஒருவாறு தொண்டையைச் சிறிது கனைத்துக் கொண்டு, மிருதுவாகப் பேசுகிறார்:
“ருக்னுத்தீன்! சென்ற ஷஃபான் மாதத்தின் நாளிலே தூரான்ஷாவுக்காக என்னிடம் செய்து கொடுத்த ராஜ விசுவாசப் பிரமாணத்தை நீர் இறுதி வரை முற்றும் காப்பாற்றியே கொடுத்தீர் என்பதற்கு அந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வே சாட்சியாய் இருக்கிறான்! நீர் என்ன செய்வீர்? அல்லது நான் தான் என்ன செய்ய முடியும்? எல்லாம் விதியே. ஆண்டவன் வேறு விதமாக நாடியிருக்கும் பொழுது, நாம் எவ்வளவுதான் முயளன்ற போதினும், அவன் விருப்பத்துக்கு மாற்றமாக எதைச் சாதிக்க முடியும்? ஆனால், நீரும் நானும், மற்றும் நாட்டுப் பற்று மிக்கவர்களும் கண்ணுட் கருமணியேபோல் காத்து ரக்ஷித்த இந்தப் பெரிய ராஜ்யம் இன்று ஆளுவதற்கு நாதியில்லாமற் போய் விட்டதே! என்றுதான் நான் வருந்துகிறேன். இதற்கு என்ன செய்வது?”
ருக்னுத்தீன் புன்முறுவல் பூத்தார்.
“யா ஸாஹிபா! இதுவும் ஒரு கேள்வியா? சுல்தான் ஸாலிஹ் ஷாமுக்குச் சென்றிருந்தபோது, இந்த ஸல்தனத்தின் மீது யார் ஆட்சி செலுத்தினார்? இன்று இந்த மிஸ்ரில் உள்ள மக்களெல்லாரும் யாரை நேசிக்கிறார்கள்? ஆண்டவன் சுல்தான் ஸாலிஹைத் தன்னிடம் அழைத்துக் கொண்டபோதே இந்த ராஜ்யத்தைத் தங்களுக்குத் தானே அளித்தான்? தாங்கள் தாமே தயா விஷயமாக இதை அந்தத் தூரான்ஷாவுக்குப் பிச்சை இட்டீர்கள்? அதை அவன் போட்டுவிட்டு, நீல நதிக் கரையில் பிணமாய்க் கிடக்கும்போது, தாங்கள்தாமே இந்த அரசுக்கு வாரிஸ்? தங்களைவிடச் சிறந்த ராஜதந்திரி வேறு எவரே எங்களுக்குத் தலைவராய்க் கிடைக்கப் போகின்றார்? மிஸ்ர் வாசிகள் தங்களையே சுல்தானாவாக ஏற்றுக்கொள்ளத் துடியாய்த் துடிக்கிறார்களே!”
“ஏன் நீர் வீணே முகஸ்துதி செய்கின்றீர்? என் கணவரையும் ஒரே மைந்தன் கலீலையும் இழந்த பின்னர் இந்த ஸல்தனத்மீது எனக்கென்ன உரிமை இருக்க முடியும்?”
“யா ஸாஹிபா! யான் ஏன் தங்களை வீணே முகஸ்துதி செய்ய வேண்டும்? உண்மையைத்தானே உரைக்கின்றேன்? தங்கள் கணவர் இல்லாவிட்டால் என்ன? கலீலே இல்லாவிட்டால்தான் என்ன? தங்களுக்கு இந் நாட்டை ஆட்சி புரிய உரிமை இல்லையா? அல்லது திறமைதான் இல்லையா? சாமர்த்தியம் இல்லையா? அல்லது ராஜதந்திர நிபுணத்துவம் இல்லையா? தங்களைவிட விவேகமோ, சாமர்த்தியமோ, சதுரப்பாடோ உள்ள வேறு எவருடைய பெயரையாவது தாங்கள் சொல்லுங்களே!”
“என்ன இருந்தாலும் நான் ஒரு பெண் பிள்ளை; அதிலும் அடிமையாக இங்கு வந்து நுழைந்தவள்; அதிலும் இப்போது நான் கைம்பெண். என்னை எப்படி சுல்தானாவாக நீங்கள் ஏற்கமுடியும்? நான் முன்னம் இந்த நாட்டை நிர்வகித்த சந்தர்ப்பம் வேறு; இப்போது என்னை நிர்வகிக்கச் சொல்கிற சூழ்நிலை வேறு. என்னெனின், முன்னம் நான் என் கணவரின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செலுத்தினேன்; அவர் சார்பாகவே லூயீயை எதிர்த்துப் போர் நிகழ்த்தினேன்; பிறகு சுல்தான் உயிர் துறந்ததும் தூரான்ஷாவின் பிரதிநியாக இருந்து ஏனையவற்றைக் கவனித்தேன். இங்ஙனமிருக்க, இப்பொழுது யான் எப்படி இந்நாட்டு ஸல்தனத்தை ஏற்பது?”
“யா ஸாஹிபா! தாங்கள் ஏற்பதைப் பற்றியோ, அல்லது ஏற்க விழையாததைப் பற்றியோ நான் தர்க்கிக்க விரும்பவில்லை. ஆனால், நாம் பெரும்பான்மையான மக்கள் விரும்புகிறவரைத் தாமே ஸல்தனத்துக்கு உயர்த்த வேண்டும்?”
“இல்லை, இல்லை. வாரிஸில்லாமல் ஒரு ஸல்தனத் காலியாய்ப் போய்விட்டால், அந்நிலைமையை நம் கலீபாவுக்குத் தெரியப்படுத்தி, அவர் எவரை நியமிக்கிறாரோ, அவரையே நாம் ஏற்க வேண்டும்.”
|
“யா ஸாஹிபா! மிஸ்ரின் மக்களுக்குப் பிடித்தமான சுல்தானை, அல்லது சுல்தானாவை மிஸ்ர் மக்கள் தேர்ந்தெடுக்காமல், எங்கோ வெகு தொலைவில் பாக்தாதில் முடங்கிக் கிடக்கிற கலீபா தேர்ந்தெடுக்க வேண்டுமோ? கலீபாவைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்கள் நாட்டை ஆள்வதற்குத் தகுதி வாய்ந்தவரை எங்களால் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். எங்களை ஆட்சி புரிவதற்கு எங்கள் பிரதிநிதிதான் வேண்டுமேயொழிய, கலீபா தேர்ந்தெடுத்து அனுப்புகிற பிரதிநிதி எங்களுக்குத் தேவையில்லை! இதை நான் மட்டும் கூறவில்லை; மிஸ்ர் மக்கள் எல்லாரின் ஏகோபித்த அபிப்பிராயத்தையே யான் தெரிவிக்கிறேன். உருப்படாத சுல்தான்களை நாங்கள் சம்பாதிக்கவும் வேண்டாம்; ஒவ்வொரு முறையும் இந்த மாதிரியான புரட்சிக்கலகம் புரிய நேரவும் வேண்டாம். இன்றைய நிகழ்ச்சிகளைக் கண்டு நம் எதிரி லூயீ சிரித்த சிரிப்பு என் நெஞ்சை இன்னம் பிளந்துகொண்டிருக்கிறது. கண்டவரும் நம்மைப் பார்த்து இன்னமும் கைகொட்டிச் சிரிக்கவா வேண்டும்? பத்து வருஷங்களுக்கு இடையில் இரண்டு புரட்சிக் கலகங்கள் விளைந்து, இரண்டு சுல்தான்கள் கொல்லப்பட்டது போதாதா? யா ஸாஹிபா! தாங்கள் எங்கள் விருப்பத்தை நிறைவேற்றி அரியாசனம் ஏறத்தான் வேண்டும். தாங்கள் உண்மையாகவே இந் நாட்டின் க்ஷேமத்தைக் கருதுவதாய் இருப்பின், தங்களைத் தவிர வேறு எவரையும் இந்தப் பதவிக்கு உயர்த்த வேண்டுமென்று தாங்கள் கூறமாட்டீர்கள். என்னெனின், யான் கூறுவனவெல்லாம், மெய்யா, அல்லது பொய்யா என்பதைத் தங்கள் மனச்சாட்சியே நன்கறியும்!”
ஷஜருத்துர் இதற்கென்ன பதில் சொல்வார்? பேசாமல் வாய்புதைந்து நின்றார்.
“யா ஸாஹிபா! இந்த விஷயத்தில் தாங்கள் என் ஒருவனின் பேச்சை நம்பாவிட்டால், இன்றே இம்மிஸ்ரின் பிரபலஸ்தர்கள் அனைவரையும் ஒன்று கூட்டுகிறேன். அவர்கள் எல்லாரும் என்ன அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட பின்னராவது என் வார்த்தைகளை நம்புவீர்களா? தெருவில் விளையாடிக்கொண்டிருக்கிற சிறுவரைக் கேட்டாலும், ‘ஷஜருத்துர் தாம் எங்களுக்குத் தேவை!’ என்றல்லவோ சொல்லி ஆர்ப்பரிப்பார்கள்!”
“ருக்னுத்தீன்! உமது பிரியத்தையும் என்மீது நீர் கொண்டிருக்கிற வாஞ்சையையும் நான் அன்புடனே ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், எனக்குச் சிறிது அவகாசம் அளியும். எல்லாவற்றையும் தீரத்தெளிய யோசிக்கிறேன். பிறகு என் முடிவைத் தெரிவிக்கிறேன்.”
ஷஜருத்துர் இப்படிப் பேசியதைக் கேட்டதும், ருக்னுத்தீன் மகிழ்ச்சியின் பெருக்கத்தால் தம்மிரு உள்ளங் கைகளையும் தேய்த்துக் கொண்டார்.
“யா ஸாஹிபா! தாங்கள் தீரத் தெளிய யோசிக்கவேண்டுவது என்ன இருக்கிறது? நாங்களல்லவோ யோசிக்கவேண்டும்? எங்கள் முடிவைத்தான் ஏற்கெனவே தெரிவித்து விட்டேனே!”
“உங்கள் முடிபா!”
“ஆம்; பஹ்ரீ மம்லூக்குகளான எங்கள் முடிபு மட்டுமல்ல; மிஸர் மக்களான எல்லாரின் முடிவும் அதுதான். அந்த உருப்பபடாத பயல் சுல்தானாக ஆட்சி செலுத்திய காலத்திலேயே நாங்கள் முடிவு கட்டிவிட்டோம், தங்களையே சுல்தானாவாக ஆக்கி விடுவதென்று. எனவே, இன்று நடந்த கலகம் தூரான்ஷாவை வீழ்த்துவதைவிடத் தங்களை ஸல்தனத்துக்கு உயர்த்துவதற்காகவே நிகழ்த்தப்பட்டது என்பதைப் பணிவுடன் யான் தெரியப்படுத்திக் கொள்ளுகிறேன்.”
“அப்படியானால், கலகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே நீர் ஏன் என்னிடம் இதைத் தெரிவிக்கவில்லை?”
“தெரிவிப்பதற்காகத்தான் சென்ற இரவு தங்களைக் காண ஓடோடியும் வந்தேன். ஆனால், தங்களுக்கும் அந்த மூர்க்கனுக்கும் இடையே நிகழ்ந்த துக்ககரமான சம்பாஷணையை எட்ட நின்று கேட்டு விட்டேன். எனவே, தங்கள் உப்பைத் தின்று வளர்ந்த இந்த உடலைத் தங்களுக்காகவும், தங்களின் க்ஷேமத்துக்காகவும் அர்ப்பணித்து விடுவதென்று முடிவுசெய்தேன். எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, வந்து பார்த்தேன். தங்களைக் கைதுசெய்வதற்காக அப் பாவிகளான புர்ஜீகள் கதவிடித்துக்கொண்டு நின்றதைத் கண்டேன். என் உதிரம் கொதித்துவிட்டது. எனவே, அந்தத் துரோகி மம்லூக்குகளை முதலில் என் வாளுக்கு இரையாக்கினேன். தங்கள் அறைக்கும் என் இனத்தைச் சார்ந்த ஒரு மம்லூக்கைக் காவல் வைத்தேன். கோழி கூவிவிட்டமையால், என் தீவுக்கு விரைந்து சென்று, எல்லாரையும் படைதிரட்டிக் கொண்டு புறப்பட்டேன். பிறகு இப்போது தான் தங்களைக் காணும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன். என்மீது தவறென்ன இருக்கிறது, மலிக்கா!”
பேசுவதை முற்றும் பேசிவிட்டு, இறுதியாகத் தம்மை ‘மலிக்கா!’ என்று ருக்னுத்தீன் விளித்ததைக் கண்டு, வியப்புற்று விட்டார் ஷஜருத்துர். என்னெனின், வாய்ப்பேச்சு வாயிலிருக்கும் போதே, தம்மையும் மறந்து ருக்னுத்தீன் ‘மலிக்கா!’ (அரசியே!) என்று விலாசமிட்டு விளித்துவிட்டால், ஷஜருத்துர்ருக்கு எப்படி இருந்திருக்கும்?
“பேச்சு வாக்கிலேயே என்னை நீர் சுல்தானா வாக்கிவிட்டீரே!” என்று புன்னகையுடன் புகன்று நின்றார் ஷஜருத்துர்.
“யா மலிக்கா! தங்களை ‘மலிக்கா’ என்று விளிப்பதிலேயே யான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உலகத்தில் இஸ்லாம் வேரூன்றிய பின்னர் இன்றுவரை தங்களைப் போன்ற சர்வசக்தி படைக்கப்பெற்ற வேறு எந்த மலிக்காவை ஆண்டவன் சிருஷ்டித்துள்ளான்? மிஸ்ர் வாசிகள் செய்த புண்ணியத்தால் அல்லவோ தங்களை அவன் இங்கனுப்பி வைத்தான்! ஆயுளெல்லாம் ஜொலிக்க வேண்டுமென்பதற்காகவே அல்லவோ தங்கள் திரு முகத்தில் அரச தேஜஸ் ஒன்றையும் சேர்த்துப் படைத்திருக்கிறான், எல்லாம் வல்ல இறைவன்?”
ருக்னுத்தீனுடைய இவ் இறுதி வார்த்தைகளைக் கேட்ட ஷஜருத்துர் மயிர்க்கூச் செறிந்தார். சுமார் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னே சாமுத்திரிகா லக்ஷண விற்பன்னர் அஜீஸ் என்பவர் யூசுபிடம் கூறியதாகக் கேள்விப்பட்ட அதே வார்த்தைகளை இப்போது ருக்னுத்தீனும் உச்சரித்ததைக் கேட்டு, ஷஜருத்துர் மேனி சிலிர்த்தார்; மனமுங் குளிர்ந்தார். அவர் உள்ளத்துள்ளே இலக்ஷக் கணக்கான எண்ணங்கள் ஓடிப்பாய்ந்தன. சுல்தானின் மனைவியாய்ப் போனதால் மட்டும் தம்மை சுல்தானாவென்று முன்னமெல்லாம் எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்த ஷஜருத்துர், இப்போது சுயமாகவே சுல்தானாவாக உயர்த்தப்படுவதைக் கண்டு திக்பிரமை கொண்டுவிட்டார்.
எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல ஷஜருத்துர்ரின் வாழ்க்கையில் இதுவரை நிகழ்ந்திருந்தும் இப்போது வந்து வாய்த்திருக்கும் அற்புதமான பெரிய அதிருஷ்டத்தை மனவொருமையுடன் சிந்திக்கவும் முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். ஆச்சரியமும் அற்புதமும் விசித்திரமும் மிக்க, ஒருவருக்கும் விளங்காத வின்னியாச வாழ்க்கையே இதுவரை வாழ்ந்து வரும் ஷஜருத்துர்ருக்கு இந்தப் புதிய கட்டம் மேலும் பெரிய புதிராக விளங்கியதில் என்ன அதிசயம் இருக்கிறது?
“என் முகத்தில் அப்படிப்பட்ட அரச தேஜஸ் என்ன வீசுகிறதோ! எனக்கொன்றும் புலப்படவில்லையே!” என்று இறுதியாக ஷஜருத்துர் வாய்திறந்தார்.
“பெரிய மனிதர்கள், தங்களுடைய பெருமையைத் தாங்களே தெரிந்துகொள்ள முடியுமா? — சரி. யான் மற்ற ஏற்பாடுகளைக் கவனிக்கிறேன். இனியும் இந்த அரியாசனத்தைக் காலியாய் வைத்திருப்பது கூடாது!” என்று பேசிக்கொண்டே, ருக்னுத்தீன், மாட்சிமை தங்கிய மன்னர் பிராட்டியின் திருமுன்பினில் நின்று மரியாதையாய்ப் பின்னிடைவதுபோல், முதுகைக் காட்டாமல் முகம் பார்த்தபடியே வெளியேறினார்.
முன்னம் அரண்மனைத் தாதியாக ஊழியம் புரிந்த காலத்தில் சுல்தான் ஸாலிஹ் ஷஜருத்துர்ரிடம் அன்பு சொரிந்தபோது அவ் வரண்மனைத் தோட்டத்தில் அந் நாரிமணி எப்படித் திகைத்துவிட்டாரோ, அதனினும் மாபெருந் திகைப்பே இவ் வம்மையாரை இதுபோழ்தும் கவிந்துகொண்டுவிட்டது. இப்படித் திடீர் திடீரென்று வாய்ப்புகள் ஒன்றையடுத்து ஒன்று தாவிக்கொண்டே வந்தால், ஏன் திகைப்பு ஏற்படாது? “அறத்திடு பிச்சை கூவி யிரப்போர் அரசோ டிருந்தர சாளினும் ஆளுவர்,” என்பது பொய்யாமோ?
ஐயூபி வம்சத்தில் உதித்த தூரான்ஷாவுக்குக் கொடுத்து வைக்காத பாக்கியம், அந்த ஜயூபிகளின் அரண்மனைக்குள் கேவலம் ஓரடிமையாக வந்து நுழைந்த ஷஜருத்துர்ருக்குக் கொடுத்து வைக்கப்பட்டிருந்தது! அவ்வம்மையார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ருக்னுத்தீன் எப்படியும் அவரை இப்போதே ஏகபோக சுல்தானாவாக உயர்த்தி வைத்து விட்டார் என்பதை உணர்ந்த ஷஜருத்துர் ஆனந்த உவகைக் கண்ணீர் உகுத்துவிட்டார்.
அல்லாஹுத் தஆலா தான் நாடியவருக்கு நாடாளும் பெருமையை யளிக்கிறான்!
தொடரும்…
-N. B. அப்துல் ஜப்பார்