ஷிர்க்கின் அசல் காரணம்

by பா. தாவூத்ஷா

நூஹ் (அலை) அவர்களின் கௌமுகள் (சமூகம்) செய்த ஷிர்க்கின் அசல் காரணம்

இமாம் புகாரீ தம்முடைய சஹீஹிலும் தப்றானீ முதலியவர்கள் தங்களுடைய தப்ஸீர்களிலும் வஸீமா கஸஸ் அன்பியாவிலும் பின்

காணுமாறு வரைந்திருக்கிறார்கள்: நூஹ் (அலை) அவர்களின் வர்க்கத்தாரிலும் சில சாலிஹீன்கள் காணப்பட்டார்கள். அவர்கள் மரணமடைந்ததன் பின் மனிதர்கள் அன்னவர்களின் சமாதியினருகே உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். பிறகு காலம் செல்லச் செல்ல அன்னவர்களின் படத்தை எழுதவும் அவர்களேபோல் உருவச்சிலை செய்யவும் ஆரம்பித்தனர். எனவே, சமாதியின் அருகே தாமதித்திருப்பதும் அதைத் தொட்டு முத்தமிடுவதும் மனத்தினாலோ அல்லது கையை உயர்த்தியோ சமாதியின் பக்கம் வேண்டுதல் செய்வதும் இவ்வாறு இணை வைப்பதற்கும் விக்கிரக வணக்கத்துக்கும் மூல வேர்களாய்க் காணப்படுகின்றன.

இதனால்தான் நம் நாயகம் (ஸல்) அவர்கள், “ஏ ஆண்டவனே! எனக்குப்பின் என்னுடைய சமாதியை வணங்கும் ஸ்தலமாகச் செய்யாதிருப்பாயாக!” என்று துஆ கேட்டிருக்கிறார்கள். இக்காரணம் பற்றியே யாரேனும் நாயகமவர்களின் ரௌலா முபாரக்கென்னும் கப்ரையோ, அன்பியா, சாலிஹீன், சஹாபாக்கள், அஹ்லெபைத் முதலியவர்களின் சமாதிகளையோ தரிசிப்பாராயின், அப்பொழுது அதைத் தொடுவதோ அல்லது மனத்தில் எதையேனும் எண்ணிக்கொண்டு அதை முத்தமிடுவதோ கூடாதென உலமாக்கள் தீர்மானித்திருக்கிறார்கள்; எனவே, உலகத்தில் காணக்கிடக்கும் தாது வஸ்துக்களுள் ஹஜரெ அஹ்வத் என்னும் கஃபாவிலுள்ள கறுப்புக் கல்லைத் தவிர வேறொன்றையும் முத்தமிடுவது கூடாது. இந்தக் கறுப்புக் கல்லை முத்தமிடுவது சம்பந்தமாயும் ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் சொன்ன விஷயமொன்று சஹீஹைனில் பின்வருமாறு காணக்கிடக்கின்றது:

“நீ ஒரு கல்லென்பதை யான் அறிவேன். மேலும், நீ எந்த நன்மையையும், தீமையையும் செய்துவிடப்போவதில்லை. நாயகம் (ஸல்) அவர்கள் மாத்திரம் உன்னை முத்தமிடாமல் இருந்திருப்பார்களாயின், யானும் உன்னை முத்தியிடமாட்டேன்.”

இதன் பயனாகவே பைத்துல்லாவில் காணப்படும் ஹதீம் என்னும் ஸ்தலத்தின் இரண்டு பக்கங்களையும் கஃபாவின் நான்கு சுவர்களையும் மகாமெ இப்ராஹீம் என்னும் ஸ்தலத்தையும் பைத்துல் முகத்தஸில் காணப்படும் ஸக்ராவையும் அன்பியா, ஸாலிஹீன் முதலியவர்களின் சமாதிகளையும் முத்தம் இடுவதும் அவற்றின் மீது கையை வைத்து மிக்க சந்தோஷத்தினால் முகத்தில் தடவிக்கொள்வதும் சுன்னத்துக்கு முற்றும் முரணான காரியமென்று உலமாக்கள் தீர்மானித்திருக்கிறார்கள். நாயகம் (ஸல்) அவர்களின் மிம்பர் என்னும் படி இருந்த காலத்து, கௌரவத்தின் காரணமாய் ‘அதைத் தொடுவது கூடுமா, கூடாதா?’ என்று உலமாக்கள் அபிப்பிராய பேதங் கொண்டிருக்கும் போது, சமாதியின் விஷயத்தைச் சொல்ல வேண்டியதேயில்லை.

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் இம்மாதிரி தொடுவதும் முத்தமிடுவதும் பித்அத் என்றும் மக்ரூஹென்றும் கூறுகிறார்கள். ஒரு சமயம் அதா (ரஹ்) அவர்கள் அவ்வாறு செய்துகொண்டிருந்தததை இமாம் மாலிக் அவர்கள் கண்டு, அவர்களினின்றும் (அந்த அதாவின் வாயிலாய்) ஹதீதின் ரிவாயத் செய்வதையே விட்டுவிட்டார்கள் என்றொரு விஷயம் தெரியக்கிடக்கிறது.

ஆனால், அப்துல்லா பின் உமர் அவர்களே அவ்வாறு செய்தார்கள் என்று ஆதாரமாகக் கொண்டு, இமாம் அஹ்மதும் அவரைச் சார்ந்தவர்களும் நாயகத்தின் மிம்பரைத் தொடுவது கூடுமென்று கூறியுள்ளார்கள். எனினும் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரைத் தொடவோ அல்லது முத்தமிடவோ கூடாதென இவர்களெல்லாரும் ஒருமித்தே விலக்கியிருக்கிறார்கள். மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஷிர்க் செய்வதை எவ்வாறு கண்டித்துக் கொண்டிருந்தார்கள்; இதற்கு (ஷிர்க்குக்கு) எம்மாதிரி வைரியாய் இருந்தார்கள்; ஆண்டவனின் இணையில்லா ஏகதெய்வக் கொள்கையை எவ்வளவு மேலாய் உலகத்தின்பால் எடுத்தோதிச் சென்றார்கள் என்பதை மிக நன்றாய் உணர்ந்திருந்தார்கள்.

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>

Related Articles

Leave a Comment