இஸ்லாத்தின் சரித்திரத்திலே ஷஜருத்துர்ரின் வாழ்க்கை என்பது மிகவும் வின்னியாசமாகவும் வியக்கத்தக்கதாகவும் விளங்கிவருகிறது என்பதைப் பன்முறையும் நாம் முன்னே எடுத்துக் காட்டியிருக்கிறோம்.

ஆனால், அவ்வம்மையார் மிஸ்ரை ஆட்சி புரிந்த மேன்மைகளைப்பற்றி இதுவரை விவரிக்கவில்லை. ஆயின், உலக சரித்திராசியரியர்கள் அனைவருமே இறும்பூதெய்தி, சுல்தானா ஷஜருத்துர்ரின் சீரிய ஆட்சித் திறனைக் கண்டு வியந்து புகழக்கூடிய விதமாக அவ் அம்மையார் என்ன செய்துவிட்டார்?

எட்டாவது மகா சிலுவை யுத்தத்திலருந்து மிஸ்ரையும் பைத்துல் முக்கத்தஸையும் காப்பாற்றிய அந்த ஒரே தியாகச் செயலுக்கே ஷஜருத்துர்ரை ஒவ்வொருவரும் போற்றிப் புகழ்ந்து பெருமையடைய வேண்டுமென்றாலும், ‘அரசி’ என்னும் முறையில் அம் மாதரசி எங்ஙனமெல்லாம் இஸ்லாத்தின் அரசியல் கொள்கைகளுக்குக் கொஞ்சமும் மாற்றமில்லாமல் நடந்துகொண்டார் என்பதை நாம் சிறிது ஆராய வேண்டுவது மெத்த உத்தமாகும்.

ஸாலிஹ் மன்னரை மணந்தது முதலே ஷஜருத்துர்ருக்கு மிஸ்ரின்மீது ஆட்சி செலுத்தும் உரிமை கிடைத்துவிட்டது என்றாலும், மலிக்குல் அஷ்ரபை வீழ்ச்சியடையச் செய்து, முஈஜுத்தீன் ஐபக்கைப் பலஹீனமடையச் செய்த பின்னர் அப் பெண்ணணங்கு மிஸ்ரின் ஏகபோக ஆட்சியைக் கடைப்பிடித்த பொழுது செய்துகாட்டிய மாபெரிய திறமைகள் இருக்கின்றனவே, அவற்றையே சரித்திராசிரியர்கள் பெரிதும் மெச்சிப் புகழ்கின்றார்கள். ஷஜருத்துர்ரின் நேரிய ஆட்சித் திறனையும் கூரிய ராஜதந்திரங்களையும் முஸ்லிம்கள் மட்டும் புகழ்ந்து பேசவில்லை; ஆயின், இஸ்லாத்தின் எதிர்மதவாதிகளும் கிறிஸ்தவ நூலாசிரியர்களுங்கூடப் போற்றிப் புகழ்கிறார்கள்.

கலீஃபா முஸ்தஃஸிம் பில்லாஹ்வின் இறுதிக் காலத்தில் பாக்தாத் வீழ்ச்சியடைந்த கதையையும் அந்த கலீஃபா பட்டபாடுகளையும் இறுதியிலே அநியாயமாய் அவர் மாண்டுபோன விவரத்தையும் விரிவான நூலிலே கண்டுகொள்க.

சிலுவை யுத்தம் முடிவடைந்த பிறகு தூரான்ஷா பட்டமேறியது முதல், மைமூனாவுக்குத் தலாக்கு வாங்கிக் கொடுக்கிறவரையில் ஷஜருத்துர் சிம்மாசனத்தில் தொடர்ச்சியாய்க் குந்துவதற்குச் சநதர்ப்பம் வாய்க்க வில்லை. ஆனால், இதுபோதோ, முஈஜுத்தீன் ஐபக்கை ஷஜருத்துர் மூலையிலே குந்தவைத்துவிட்டு, தாமே ஏகபோக சுல்தானாவாக அரியாசன மீதிருந்து ஆட்சியை நடாத்த ஆரம்பத்துவிட்டார். கலீஃபாவோ, பாக்தாதிலே தம்முடைய பழைய வஜீராகிய ஜகரிய்யாவை இழந்துவிட்ட காரணத்தால், புதிய வஜீராக முவய்யித்துத்தீன் முஹம்மத் பின் அல்கமி என்னும் ஒரு ஷீஆ வஜீரை நியமித்துக்கொண்டு, சொல்லொணா உள்நாட்டுக் குழப்பத்துக்கும் பேராபத்துக்கும் பலியாகி, ஹிலாக்கூ என்பவனின் முற்றுகைக்கு ஆளாகி, தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கே துடியாய்த் துடித்துப் பறந்துகொண்டிருந்தார். எனவே, அவர் இப்பொழுது மிஸ்ரை மீண்டும் ஷஜருத்துர்ரே கைப்பற்றிக்கொண்டு ஏகபோக ஆட்சி செலுத்த ஆரம்பித்ததையும் கவனிக்க முடியவில்லை. கவனித்தாலும், ஒன்றும் செய்துகொள்ள இயலவில்லை. அந்த கலீஃபா தாம் நியமித்தனுப்பிய ஐயூபி சுல்தான் மலிக்குல் அஷ்­ரப் மாயமாய் மறைந்து போனதைப்பற்றியும் கவலைப்பட முடியவில்லை.

கலீஃபாவுக்கும், அவர் வாழும் தலைநகராகிய பாக்தாதுக்குமே பேராபத்து வந்து சூழ்ந்துகொண்டிருக்கையில், மிஸ்ரைப் பற்றிச் சிந்திக்கத்தான் அவகாசமேது? அல்லது அதைப்பற்றித்தான் கவலை ஏது? “ஏ, ஆண்டவனே! என்னைக் காப்பாற்று; என் நகரைக் காப்பாற்று; கலீஃபா என்னும் என் பட்டத்தைக் காப்பாற்று,” என்று ஆலாப்பறந்து துடித்துக்கொண்டிருந்த முஸ்தஃஸிம் பில்லாஹ் எப்படித் தம் மீசையை முறுக்கிக்கொண்டு மீண்டும் ஷஜருத்துர்ரின்மீது பாணந் தொடுக்க முடியும்? அந்தோ, அவதியுற்ற கலீஃபாவே!

பாக்தாதின் நிலமையை ஷஜருத்துர் நன்கு உணர்ந்து கொண்டமையாலும் இனிமேல் அந்த கலீஃபாவிடமிருந்து எவ்விதமான பாணமும் வரமுடியாது என்பதைத் தெரிந்துகொண்டமையாலும் முஈஜுத்தீனின் வாலை ஒட்ட நறுக்கிவிட்டமையாலும் மீண்டும் பழைய பஹ்ரீ தலைவரான ஜாஹிர் ருக்னுத்தீனின் பேருதவியைப் பெற்றுக்கொண்டு விட்டமையாலும் அவ்வம்மை மன நிம்மதியுடனே சிம்மாசனத்தில் வீற்றிருந்து உலகம் மெச்சும் உன்னத ஆட்சியைப் புரியத் தலைப்பட்டுவிட்டார். ஒரே ஒரு மிஸ்ரி பொதுமகன்கூட ஒரு குற்றமும் கற்பிக்க முடியாதவகையில் வரிச்சுமை மிகமிக இலேசாய் இருந்தது.

ஷஜருத்துர் அரண்மனைக்குள் நுழைகிற வரையில் மிகவும் சாதாரண அனாதையாகவும் அபலையாகவும் நாட்கடத்தியமையால், பொதுமக்களின் தினசரி வாழ்க்கைக்கு என்னென்ன நன்மைகளை அரசாங்கம் வழங்க வேண்டுமென்ற குறை நிறைகளை நன்குணர்ந்திருந்தார். எனவே, இப்பொழுது ஏகபோக ஆட்சியை மேற்கொண்ட அந்த சுல்தானா பலப்பல தர்ம மருத்துவமனைகளைக் கட்டுவித்தார். மனிதர்க்கு மட்டுமின்றி, மிருகங்களுக்கும் சிகிச்சையளிக்கும் மிருக வைத்தியசாலைகளைக் கூட நிர்மாணித்தார். பள்ளிகளையும் மத்ரஸாக்களையும் கட்டுவித்து, தம் கல்வி ஞானத்தின் உதவிகொண்டே தக்க உபாத்தியாயர்களையும் முன்ஷீகளையும் தேர்ந்தெடுத்து அப்பள்ளிகளில் அமர்த்தினார்; சுல்தான் ஸாலிஹ் நஜ்முத்தீன் அரைகுறையாய் விட்டுச்சென்ற பெரியபெரிய கல்வித்திட்டங்களை மிகமிக உன்னதமாய்ப் பூர்த்திசெய்து வைத்தார்.

வழிப்போக்கர்களுக்கும் ஏழைப் பிரயாணிகட்கும் பேருதவியாய் இருப்பான்வேண்டி, பாலைவனச் சோலைகளிலே நல்ல மன்ஜில்களைக் கட்டுவித்தார். பணக்காரர்களிடமிருந்து கிரமமான வழியில் ஒழுங்காக ‘ஜகாத்’வரியை வசூலிப்பதற்காக நாணயமான உத்தியோகஸ்தர்களை நியமித்து, ‘பைத்துல் மால்’ என்னும் பொது கஜானாவைச் செல்வக்குவட்டால் நிரப்பிவிட்டார். நிரப்பிய செல்வங்களை ஒழுங்கான வழியில் மேற்சொன்ன உன்னதமான திட்டங்களுக்குச் செலவிட்டார். ஏழைகளுக்கு இரங்கினார். எதிர் மதவாதிகளை மிகவும் தயாளமாகவும் அன்புடனும் நடாத்தினார். கிறிஸ்தவர்கள் மிஸ்ரின்மீது படையெடுத்து வந்தார்கள் என்பதற்காக, தலைமுறை தலைமுறையாக மிஸ்ரிலே ராஜவிசுவாசத்துடன் ஒழுகிவந்த எந்த ஒரே ஒரு கிறிஸ்தவரையும் பழிவாங்கியதில்லை. யூதர்கள் மாகொடிய வட்டித்தொழிலை மிஸ்ரிலே நடத்தக் கூடாதென்று மட்டுமே தடுக்கப்பட்டனரன்றி, முஸ்லிம்களின் வன்பகைஞர்கள் என்பதற்காக எப்பொழுதுமே தண்டிக்கப்பட்டதில்லை. மேலும், எந்த ஜாதியினரும், எந்த மதத்தினரும் வெகு தாராளமாகவே மிஸ்ர் முழுதும் ஒன்று போல் நடாத்தப்பட்டார்கள்.

குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் அவரவர் இழைத்த குற்றத்துக்கேற்ற தண்டனையே வேற்றுமையின்றி வழங்கப்பட்டதன்றி, தயவுக்காகவோ தாக்ஷிண்யத்துக்காகவோ பெரிய இடத்து ஸிபாரிஷுக்காகவோ, அல்லது வேறு மதத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவோ கடுகளவேனும் வேற்றுமையோ, வித்தியாசமோ, சலிகையோ சிபாரிஷோ காட்டப்படவே இல்லை. ஷஜருத்துர் சட்டமியற்றுவதில் எவ்வளவு நிபுணத்துவம் வாய்க்கப்பெற்றிருந்தாரோ அவ்வளவு நிபுணத்துவமும் திறமையுமே அச் சட்டத்தை அமல் நடத்துகிற வகைகளிலும் காட்டிவந்தார். சிலுவை யுத்தத்தை முன்பு வெல்வதற்கு பஹ்ரீகள் எப்படி ஷஜருக்கு ஊன்றுகோலாய்த் திகழ்ந்துவந்தார்களோ, அப்படியே இப்பொழுது அந்த சுல்தானாவின் ஏகபோக இனிய ஆட்சிக்கு உறுதுணையாய் நின்றிலங்கினார்கள். ஷஜருத்துர்ரின் ஆட்சி மகிமை எப்படியிருந்ததென்றால், சுருக்கமாகச் சொல்லவேண்டுமாயின், குர்ஆன் ஷரீ­பிலும் ஹதீது ஷ­ரீபிலும் கூறப்பட்டுள்ள அத்தனை சிறந்த அழகிய அம்சங்களும் ஒருங்கு சேர்ந்து மிளிர்ந்து ஒளி வீசினவென்றே செப்பலாம். இஸ்லாம் தோன்றிய காலத்திலே புரியப்பட்ட ராஷிதீனான முதல் நான்கு கலீஃபாக்களின் நேரிய தன்மைகள் முற்றுமே அவ்வம்மையாரின் மிஸ்ர் ஆட்சியில் சுடர் வீசினவென்று கூசாமற் கூறலாம்.

ஷஜருத்துர்ரின் சொந்த விஷயங்களிலும் சொந்த நடவடிக்கைகளிலும் குடும்ப வியவகாரங்களிலும் எவரேனும் குற்றம் கற்பித்தாலும் கற்பிக்கமுடியுமேயன்றி, சுல்தானா என்கிற ஹோதாவில் மிஸ்ரின் ஸல்தனத்துக்கு ­ஷஜருத்துர் இன்ன தீமையைத்தான் இழைத்துவிட்டார் என்று சுட்டிக்காட்டுதற்கு ஒன்றுமே இல்லாமற் போய்விட்டது. “சிலுவை யுத்தத்தை நாம் ஜெயிக்க முடியாமற் செய்த சிறு பெண்பிள்ளை ஷஜருத்துர்!” என்னும் சகிக்கொணா ஆத்திரத்துடன் அவ்வம்மையாரின் சரித்திரத்தை வரைய ஆரம்பித்த பலப்பல கிறிஸ்தவ ஆசிரியர்கள்கூட அந்த சுல்தானா நேரிய ஆட்சி செலுத்தவில்லை என்று எங்குமே குறிப்பிடவில்லை. ஷஜருத்துர் மீது கடும் பகைமையுணர்ச்சி இருந்தும் அக் கிறிஸ்தவ சரித்திராசிரியர்கள், ஷஜருத்துர்ரை “நேர்மையான அரசி” என்றும் “புகழ்மிக்க சுல்தானா” என்றும் “மதியூகியான மன்னர் பிராட்டி” என்றும் இன்னம் என்னென்னவோ புகழ்மாலைகளை எல்லாம் சூட்டியும் வானளாவ மெச்சிப் புகழ்ந்து பலபல பக்கங்கள் எழுதியுள்ளார்கள். ஆனால், அவர்களுக்கிருக்கிற வயிற்றெரிச்சலில், ஷஜருத்துர் முஈஜுத்தீன்மாட்டும் மைமூனாவின்மாட்டும் நடந்துகொண்ட விதத்தையே கயிறு திரித்துக் கட்டிவிட்டு உளம் பூரிக்கிறார்கள். ஆனால், ஷஜருத்துர் அந்த ஐபக்கிடமும் அவர் தம் மனைவியுடனும் நடந்துகொண்ட ஒரே நடக்கைக்காக அவ் வம்மையை எவரும் அடியோடு வெறுத்துத் தாக்கத் துணிவதில்லை. என்னெனின், ஒரு ராஜ்ஜியத்தை மிகவும் ஒழுங்காகவும் நீதியாகவும் நெறியாகவும் நேர்மையாகவும் உன்னதமாகவும் பிரமாதமாகவும் அபாரமாகவும் இஸ்லாமிய கொள்கைகளுக்கு இயையவும், அணுவளவும் நேர்மை தவறாது அழகிய ஆட்சி புரிவதில் ஷஜருத்துர்ருக்கு இணை ஷஜருத்துர்ரேதான் என்பதை எவரே மறுக்கவல்லார்? அல்லது முஸ்லிம்கள் அந்த ஒரு துருக்கி நாட்டுப் பேரணங்கைப்போல் திவ்ய ஆட்சி செலுத்திய வேறோர் ஆடவரைத்தான் காட்ட இயலுமோ?

சுல்தானா ஷஜருத்துர்ரைப் பற்றிச் சில பேராசிரியர்கள் வழங்கியுள்ள நற்சாட்சிகளைப் பாருங்கள்:-

“Shajaruddur is famous as THE ONLY WOMAN to sit on the throne of Egypt in the Muslim Period” (மிஸ்ரிலே முஸ்லிம்கள் ஆட்சிசெலுத்திய காலத்தில் அரியாசனத்தின்மீது அமர்ந்த ஒரே ஒரு கீர்த்திமிக்க பெண்மணி ஷஜருத்துர்ராகவே இலங்கி வருகிறார்,” என்று ‘என்ஸைக்ளோபீடியா இஸ்லாம்’ குறிப்பிடுகிறது.)

“Shajaruddur, the wife of Ayub, a woman of great Capacity and Courage” (ஐயூபி சுல்தானின் மனைவி ஷஜருத்துர் மிகவும் திறமைவாய்ந்த தைரியசாலியான பெண்மணி,” என்று ஸையித் அமீரலி வருணிக்கிறார்.)

“Princess Shajaruddur was an exceedingly able woman… she was one of the famous women… she possessed the very useful quality of exercising power… the beautiful Circassian, a woman of grate ability and of commanding influence…” (“ராணி ஷஜருத்துர் அளவுமீறிய சாமர்த்தியசாலி… கீர்த்தி வாய்ந்த பெண்களுள் ஒருத்தி… அதிகாரத்தை ஒழுங்காய்ப் பிரயோகிக்கிற உத்தமகுணம் படைத்தவள்… கட்டழகியான காக்கேசிய மங்கை, அசகாய சூரத்தனமும் அபார செல்வாக்கும் வாய்க்கப் பெற்றவள்,” என்றெல்லாம் ஒரு கிறிஸ்தவ, இஸ்லாத்தின் எதிர்மதவாதியாகிய ரெ. கானன் ஸெல் என்னும் பாதிரியார் வருணிக்கிறார்.

ஷஜருத்துர்ரின் ஆட்சி நிழலில் மிஸ்ர் பெற்றுக்கொண்ட பெருமைகளைப் பற்றிப் பல்லாயிரக்கணக்கான நூல்களைக்கூட எழுத முடியும். ஆனால், நம்முடைய சுல்தானைவைப் பற்றி நாமே பெருமை பாராட்டி மிகைபட எழுதக்கூடாது என்பதற்காக இவ்வளவுடன் நிறுத்திக் கொள்ளுகிறோம்.

இங்ஙனமெல்லாம் சுல்தானா ஷஜருத்துர், மலிக்காத்துல் முஸ்லிமீன் ராஜ்ய பரிபாலனம் புரிந்து வரும்பொழுது முஈஜுத்தீன் ஐபக் என்ன செய்துகொண்டிருந்தாரென்று நீங்கள் வினவலாம். இங்கிலாந்தில் சென்ற நூற்றாண்டில் அரசு செலுத்திய விக்டோரியா மகாராணி அம்மையாரின் கணவனார் ஆல்பெர்ட் எனபவர் எப்படித் திரைமறைவில் வாழ்க்கை நடத்தினாரோ, அப்படியே ஷஜருத்துர்ரின் ஏகபோக உன்னத ஆட்சியின் போதெல்லாம் முஈஜுத்தீன் ஐபக் “சுல்தானாவின் கணவர்” என்னும் ஹோதாவில் அக்ஞாத அரண்மனை வாசம் செய்துவந்தார். மைமூனாவையும் அவர் தலாக்குக் கொடுத்துவிட்ட காரணத்தாலும், அரண்மனையை விட்டு வெளியேறி என்ன செய்வது என்னும் கவலையாலும் சகலகலாவல்லி ஷஜருத்துர்ரின் கணவராய்ப் பரிணமிக்கிற பாக்கியமே போதும் என்னும் பரம ஆத்ம திருப்தியாலும் அவர் அரண்மனைக்குள்ளேயே சகலவித சுக போகங்களையும் நுகர்ந்து கொண்டு நல்வாழ்க்கை வாழ்ந்துவந்தார்.

புர்ஜீகளின் மாட்டு அவர் மட்டற்ற பாசத்துடனே நடந்துகொள்கிறார் என்னும் ஒரே காரணத்துக்காக முஈஜுத்தீனின் கரத்திடையிருந்து மிஸ்ரின் செங்கோலை ஷஜருத்துர் வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டதாலும் இப்பொழுது அந்த அம்மையே எவரையும் கலக்க வேண்டிய ஆவசியகமின்றித் தாமே துல்லிய ஆட்சிப் பரிபாலனம் நடாத்தி வந்தமையாலும் முஈஜுத்தீனுக்கும் மிஸ்ரின் ஸல்தனத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாமலே போய்விட்டது. சும்மா கிடந்த அவரை ஷஜருத்துர் முன்னம் எப்படி வெகு சுலபமாக சுல்தானாக உயர்த்தினாரோ, அதைவிடச் சுலபமாகவே சுல்தானாயிருந்த முஈஜுத்தீனை அந்த ராணியார் வெறும் பதுமை மனிதராகத் தாழ்த்திவிட்டார். எனினும், ஷஜருத்துர்ரையும் ராஜபோகத்தையும் உதறித் தள்ளிவிட்டு வெளியேறுதற்கு முஈஜுத்தீனுக்குத் தைரியமும் பிறக்கவில்லை; பேராசையும் விடவில்லை. “பூட்டிய செக்கு எல்லை விட்டுப் போகா எருதாயினார்” முஈஜுத்தீன் ஐபக். என்னெனின் அவர் ஷஜருத்துர்ரைப் பகைத்துக்கொண்டோ வெறுத்துக்கொண்டோ அரண்மனையைவிட்டு வெளியேறி என்னதான் செய்வது? கட்டிய மனைவியையம் கைகழுவி விட்டுவிட்டார். இனி ராஜபோக சுகத்தையும் உதறித் தள்ளிவிடுவதனால் வேறு என்ன லாபத்தைத்தான் அவர் உலகில் அடைய முடியும்? அந்தோ, பாபம்! பரிதாபம்!!

அன்று மைமூனாவைத் தலாக்குச் சொன்ன பிறகு முஈஜுத்தீன் மிகவும் மனவேதனையுற்று விட்டார் என்பதை நாம் கூறத் தேவையில்லை. எனினும், அவரால் சுயமே என்னசெய்ய முடியும்? சென்று போனதை வீணே நினைந்து நினைந்து நெஞ்சம் புண்ணாவதைவிட, அரண்மனையின் இன்ப வாழ்க்கையிலாவது மூழ்கித் திளைத்து மனந்தேறலாம் என்னும் ஆத்ம திருப்தியுடன் சும்மா இருந்துவிட்டார். அல்லாமலும், அவருக்கு இனியொரு பெரிய பயமும் வாட்டிக்கொண்டே இருந்தது: அதாவது, அன்று ஷஜருத்துர்ருக்கும் அவருக்கும் இடையே புர்ஜீகளைப் பற்றிய விஷயமாகவும், முன்பு தூரான்ஷா படுகொலை புரியப்பட்ட விஷயமாகவும் நடந்த சம்பாஷணை அவருடைய உள்ளத்தை விட்டுச் சற்றும் அகலவே இல்லை.

அன்றியும், எந்த நேரத்திலாவது தம்மை ஷஜருத்துர் ருக்னுத்தீனுக்குக் காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்ற அச்சமும் பெரிதும் அவரைக் கலக்கிக்கொண்டே இருந்தது. எனவே, ஐபக் தம்முடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காவது சப்த நாடியையும் ஒடுக்கிக்கொண்டு, “குந்தினையா குரங்கே, உன் சந்தடி யடங்க,” என்னுமா போன்று, இருக்கிற இடம் தெரியாதபடி அரண்மனையின் அந்தப்புர மூலையில் முடங்கிக் கிடந்தார். முன்னம் ஷஜருத்துர் முஈஜுத்தீனை அறைகூவி அழைத்ததுபோல், இப்போது அந்த சுல்தான் சுல்தானாக எல்லாராலும் கருதப்படுவதற்கு மாறாக, சுல்தானாவின் கணவராகவே மதிக்கப்படலாயினார்.

மைமூனாவின் சம்பவத்துக்குப் பிறகு முஈஜுத்தீனுக்கும் ஷஜருத்துர்ருக்கு இடையே குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமையென்பது அவ்வளவாக இல்லாமலே போய்விட்டது. என்னெனின், மைமூனாவைத் தலாக்குச் சொல்ல நேர்ந்த பழிபாவத்தை எண்ணியெண்ணி முஈஜுத்தீன் மனம் புண்ணாகிக் கொண்டிருந்தார். ஷஜருத்துர்ருக்கோ, முஈஜுத்தீனின் நடவடிக்கைகள்மீதும் குணங்களின் மீதும் நாளுக்குநாள் சந்தேகம் வலுத்துக்கொண்டே சென்றது. உலகம் போற்றக் கூடிய உன்னத சுல்தானாவாக ஏகபோக ஆட்சி செலுத்தும் திறமைமிக்க அந்த ஷஜருத்துர் ஸ்திரீ-புருஷ தாம்பத்திய வாழ்க்கையிலே இல்லறத்தை இனிதாய் நடத்த முடியாத தன்மைக்கு இழிந்து விட்டார். முஈஜுத்தீனை இப்பொழுது வெறுத்து ஒதுக்குதற்கு ஷஜருத்துர் மனங்கொள்ளவில்லை என்றாலும், முன்போலெல்லாம் அக் கணவருடன் சிருங்கார வாழ்க்கை நடத்த இயலவில்லை. அரசாங்க உபத்திரவங்களில் சிந்தையைச் செலுத்தவும் நேரத்தைக் கடத்தவுமே ஷஜருத்துர்ருக்கு அல்லும் பகலும் அறுபது நாழிகையும் நேரம் பற்றாமலிருந்தபடியால், ‘இல்வாழ்க்கை என்னும் இயல்புடைய வான் சகட’ இன்பத்தை நுகர்வதற்கு அவகாசமில்லாமற் போய்விட்டது.

மேலும், எவ்வெப்படியெல்லாம் இஸ்லாமிய ஆட்சியை மிகவும் மேன்மையாக நுழைப்பது என்னும் சிந்தனாவுலகிலேயே அவர் சதா சஞ்சரித்துக் கொண்டிருந்தார். தம் ஆட்சியைப்பற்றி எவருமே குறைகூற முடியாதபடி சர்வமும் அமைந்திருக்க வேண்டுமே என்றுதான் அவர் இராப் பகலா ஏங்கித் தவித்தார். ‘பொதுமக்களின் நலனுக்காகவே அரசாங்க அலுவல்களை ஏற்கிறோம்; எங்களுக்கே உங்கள் வாக்கைக் கொடுங்கள்,’ என்று கூறித் தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்க மாளிகையுட் புகுந்த பின்னர் ஏகபோக சர்வாதிகாரிகளாய் மாறி மண்டைக் கிறுக்குடன் ஆணவம் பேசும் அகம்பாவ அதிகாரிகளே போலில்லாது, அம் மக்களின் க்ஷேமலாபம் ஒன்றயே பிரதானமாகக் கருதுகிற ஒரு சுயநலமற்ற ராணி திலகத்துக்குக் குடும்ப வாழ்க்கையின் சிற்றின்பம் எப்படி உண்மையின்பம் பயக்கும்? முன்பெல்லாம் அவர் முஈஜுத்தீனை மயக்கிய மாயசக்தி இப்பொழுது அரசியல் காரணத்துக்காக ஒரு மூலையில் மழுங்கிப்போய்க் கிடந்தது.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment