புரட்சியும் கலகமும்

கதவின்மீது முழுப் பலத்துடன் முதுகைச் சார்த்தி நின்று கொண்டிருந்த ஷஜருத்துர் சிறிது நேரஞ் சென்று, வெளியே ஒரு சப்தமும் கேட்காததைக் கண்டு, அதிசயித்தார். அங்கே என்ன நிகழ்ந்த என்பதைக் கூட அவரால் யூகிக்க முடியவில்லை.

எனினும், தம் நிலைமையினின்று மயிரிழையும் அசையாமல் நின்றுகொண்டேயிருந்தார். தூரத்தில் பள்ளிவாயிலின் பாங்குமேடைமீது அதிகாலைத் தொழுகைக்காகக் கூப்பிடுபவரின் ஓங்கிய ஒலி ரீங்காரம் செய்தது. கீழ் வானமும் சிறிது சிறிதாக வெளுத்துக்கொண்டு வந்தமையால், அவ்வறைக்குள்ளேயும் கொஞ்சம் ஒளிரேகை இலேசாக வந்து நுழைந்தது. சற்று நேரத்தில் நன்றாய் விடிந்ததும், ஷஜருத்துர் சார்ந்திருந்த நிலையிலிருந்து நிமிர்ந்து நின்று, கதவின் பக்கம் முகத்தைத் திருப்பி, இடுக்கு வழியே கண்ணைப் பொருத்தி, வெளியில் எவர் நிற்கிறார் என்று பார்த்தார். பதறிய உள்ளத்துடனும் நடுங்குகிற தலையுடனும் பயந்து பயந்து பார்த்த அவர் அக்கதவிடுக்கு வழியே வெளியில் நிற்கிற உருவத்தைக் கண்டதும், ஆச்சரியத்தாலும் சந்தோஷத்தாலும் துள்ளிக் குதித்தார். என்னெனின், அங்கே ஒரு பஹ்ரீ மம்லூக் உருவிய வாளுடனே அசையாமல் நின்று காவல் புரிந்துகொண்டிருப்பதைக் கண்டார்.

ஷஜருத்துர் ஒரு வினாடியில் எல்லாவற்றையும் யூகித்துவிட்டார். புர்ஜீகள் தம்முடைய அறையின் கதவைத் தகர்த்துக்கொண்டிருந்த நேரத்தில் பஹ்ரீகள் தம்மைக் காண்பதற்காக இப்பக்கம் வந்திருக்கக் கூடும்; அப்போது புர்ஜீகள் செய்த வேலையைப் பார்த்து நடுங்கிப்போய், உடனே அவர்கள் மீது பாய்ந்து தாக்கியிருக்க வேண்டும்; நேருக்கு நேர் நின்று வாள் வீசியதில் புர்ஜீகள் கொல்லப்பட்டுப் போயிருக்க வேண்டும். பிறகு பஹ்ரீகள் தங்களுள் ஒருவனை இங்கே காவலாக நிறுத்தி வைத்துவிட்டு, வேறு ஜோலியாகப் போயிருக்க வேண்டும். எனவே, வெளியே நிற்பவனைக் கூப்பிட்டுக் கேட்டால் விஷயம் விளங்கும் என்று உள்ளம் தேறினார் பிறகு சாந்தமாக நின்றுகொண்டு, கதவைத் திறக்காமலே இடுக்கு வழியே மெல்லப் பேசினார்.

“ஏ, மம்லூக்! நான் வெளியே வரலாமா? ஆபத்தொன்றும் இல்லையே?”.

“யா ஸாஹிபா! தாங்கள் கதவைத் திறக்கவே கூடாது. மறு உத்தரவு பிறக்கிறவரையில் தங்களைவிட்டுப் பிரியக் கூடாதென்று எனக்கு அமீர் ஜாஹிர் கட்டளையிட்டிருக்கிறார்.”

“சரி, ருக்னுத்தீன் இப்போது எங்கே?”

“எனக்குத் தெரியாது. ஆனால், படை திரட்டிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.”

“எதற்காக?”

“சுல்தானை வீழ்த்துவதற்காக!”

மின்வெட்டுகிற வேகத்தில் ஷஜருத்துர்ருக்கு எல்லாம் விளக்கமாய் விட்டன. ராஜப் புரட்சிக் கலகம் ஆரம்பித்துவிட்டது என்பதையும், பஹ்ரீகள் புர்ஜீகளையும் சுல்தானையும் தீர்த்துக் கட்டுவதற்காக ஆயத்தமாகிவிட்டார்கள் என்பதையும் நன்கு புரிந்துகொண்டார்.

“எனக்குப் பசிக்கிறதே, மம்லூக்! அதற்கொன்றும் ஏற்பாடில்லையோ?”

“யா ஸாஹிபா! சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள். எல்லா ஏற்பாடுகளும் நடக்கின்றன. உணவு இங்கே வந்ததும், தங்களுக்குத் தெரிவிக்கிறேன். அப்போது தாங்கள் கதவைத் திறக்கலாம்.”

இதற்குள் சூரியன் உதயமாகி, இரண்டு நாழிகை நேரம் கடந்துவிட்டது. அரண்மனைக்குள்ளேயும் வெளியேயும் பெரிய இரைச்சல் கேட்டது. சென்ற பத்து ஆண்டுகட்கு முன்னே ஷஜருத்துர் அமீர் தாவூதின் மாளிகையில் இருந்துகொண்டு கேட்ட அதே கலகக் கூச்சலும் கலாட்டாவுமே இப்போது மீட்டும் கேட்டன. ஆனால், ஒரு வித்தியாசம்; முன்பு சற்றுத் தூரத்தில் இருந்து இந்தக் கலகத்தின் வேகத்தை நுகர்ந்தார் ஷஜருத்துர்; இப்போதோ, அரண்மனையின் அந்தப்புரத்தின் அந்தரங்க அறைக்குள் இருந்தபடியே எல்லாவற்றையும் நேரிலே பார்த்தார். எனினும், முடிவு என்னாகுமோ என்ற கவலையுடன் துடித்துக்கொண்டிருந்தார்; போனுள் சிக்கிய புலியேபோல் பதறினார்.

வெளியே என்ன நடந்தது, தெரியுமா? பொழுது புலர்ந்ததும் புலராததுமாய் இருக்கிற வேளையிலே, நீல நதியின் மத்தியிலுள்ள தீவிலிருந்து எல்லா பஹ்ரீ மம்லூக்குகளும் புற்றீசல் போல் கிளம்பிவிட்டனர். ஜாஹிர் ருக்னுத்தீன் தலைமை வகித்து முன்னம் கிறிஸ்தவர்களை எதிர்த்துப் படை திரட்டிக் கிளம்பியதையே இக் காட்சி நிகர்த்திருந்தது. ஆனால், ஒரு வித்தியாசம்; இப்போது இந்த பஹ்ரீகள் முன்போல் குதிரைகள்மீது அணிவகுத்துச் செல்லவில்லை; ஆனால், காலாட்களாகவே ஈட்டியும் வாளும் ஏந்திப் புறப்பட்டு விட்டார்கள்.

தீவிலிருந்து பஹ்ரீ மம்லூக்குகள் படையெழுவதற்கும் கோட்டையிருந்து புர்ஜீகள் படையெடுப்பதற்கும் சரியாயிருந்தது. எனவே, சற்று நேரத்தில் புர்ஜீ – பஹ்ரீப் போர் தொடங்கி விட்டது. சுல்தானின் நம்பிக்கையெல்லாம் அந்த புர்ஜீகளின் வீர பராக்ரமத்தின் மீதே முற்றும் சார்ந்திருந்தமையால், வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டு தான் அரண்மனையில் அமைதி குலைந்து அரண்டுகொண்டிருந்தார். புர்ஜீகள் வெற்றி கொள்ளப்பட்டு, பஹ்ரீகள் அரண்மனைக்குள் வந்துவிட்டால், தம் கதி என்னாகும் என்பதை நினைக்கவே சுவ்தானின் மனம் துணுக்குற்றது. ஏனென்றால், இன்றைக்குச் சரியாகப் பத்தாண்டுகட்கு முன்னர்த் தானே அவருடைய பெரிய தந்தை அமீர்களின் கோபத்துக்கு இரையாகிப் பலியானார்? அச் சரித்திரம் மீண்டு நிகழ்வதைக் கண்டு, கிறுகிறுத்துப் போனார் முஅல்லம் பாதுஷா.

நீலநதிக் கரையிலிருந்து இரு கட்சி மம்லூக்குகளும் பொருதுகொண்டே வந்து சில மணி நேரத்தில் அரண்மனை வாயிலை அண்மி விட்டனர். புர்ஜீகளுக்கு ஏராளச் சேதம் ஏற்பட்டு விட்டதென்ற செய்தி சுல்தானுக்கு எட்டியது; அதைக்கேட்டு, அவர் மனம் பாதி இடிந்துகொண்டிருக்கையிலேயே, பஹ்ரீகள் அரண்மனையின் கேந்திர ஸ்தானங்களில் நிலைத்து நின்று கொண்டனரென்றும் ஷஜருத்துர் புகுந்திருக்கிற அறைக்குக்கூட பஹ்ரீயொருவனே பாதுகாவல் அளித்து நிற்கிறான் என்றும்  அடுத்த செய்தி சுல்தானின் காதில் விழுந்தது. மிகுதிப் பாதி மனோ தைரியமும் தகர ஆரம்பித்தது. புர்ஜீகள் இனியும் பஹ்ரீகளுடன் சமாளிக்க முடியாத நிலைமையை எட்டிவிட்டார்களென்ற இறுதி இழவுச் செய்தி சுல்தானுக்கு எட்டுவிக்கப் பட்டது. மேலும், பஹ்ரீகள் வெகு ஆக்ரோஷத்துடனே அரண்மனையைச் சூழ்ந்துகொண்டு விட்டார்களென்றும், ஒரு சில புர்ஜீ அமீர்களே அதிக சிரமத்தின் மீது பஹ்ரீகளை உள்ளே பாயாதபடி தடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சுல்தான் தெரிந்துகொண்டார். சென்ற இரவில் கண்ட கனவுகள் மீண்டும் அவர் கண்முன்னே வந்து நனவாய் நின்றன; அடிவயிற்றில் புளியைக் கரைத்தன.

இனிமேல் உயிர் தப்ப வேண்டுமானால், உடனே ஊரைவிட்டு ஓட வேண்டியதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்பதை முஅல்லம் உணர்ந்தார். எப்படியாவது, அரண்மனையின் பின்புறமாகவாவது தப்பி வெளியேறிவிட வேண்டுமென்றும் பிறகு ஓட்டோட்டமாக ஒடி நீல நதியில் பாய்ந்து நீந்திப் பறந்துவிட வேண்டுமென்றும் முடிவு கட்டிக் கொண்டார். இதற்கிடையில் அரண்மனையின் கேந்திர ஸ்தானங்களில் நின்றுகொண்டிருக்கிற பஹ்ரீ மம்லூக்குகளின் கண்களில் மண்ணைத் தெள்ளிப் போடாமல் எப்படி வெளியே தப்புவதென்று ஒன்றுந் தோன்றவில்லை.

அதிருஷ்டவசத்தால் கிடைத்த அரிய அரச பதவியை ஒழுங்காகக் காப்பாற்றிக்கொள்ள வகை தெரியாத சுல்தானின் நிலைமை பார்க்கப் பரிதாபகரமாய் இருந்தது. வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகப்படுகிறவன் நாணற் புல்லைத் தாவிப் பிடித்த கதையாக, பஹ்ரீகளையும் ஷஜருத்துர்ரையும் எதிர்த்துப் பகைத்துக்கொண்ட முஅல்லம் புர்ஜீகளை நம்பி மோசம் போயினார். அந்த புர்ஜீகள் இப்போது அனலிடை வைக்கப்பட்ட பனிக்கட்டியே போல் பஹ்ரீகளின் இடையில் சிக்கிக் கரைந்தார்கள்.

நேரத்தை வீணாக்க சுல்தான் விரும்பவில்லை; சட்டென்றெழுந்து தம் ஆடைகளையெல்லாம் கழற்றி எறிந்துவிட்டு, அரண்மனை அடிமைச் சேவகர்களும் அலிகளும் உடுத்துக்கொள்ளும் நீண்ட ஜுப்பாவையும் குட்டைத் தொப்பியையும் அணிந்துகொண்டு வெறுங்காலுடன் அரண்மனையின் தாழ்வாரங்களூடே ஓடினார். அவர் அரண்மனையில் இருந்த குழப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு, பதுங்கிப் பாய்ந்தார். அதிருஷ்டவசமாக அவரை எவரும் பார்க்கவில்லை. மறு நிமிடத்தில் அரண்மனையின் கொல்லைப்புறத்தில் உள்ள மதிலேறிக் குதித்து மாயமாய் மறைந்துபோனார்.

அரண்மனையின் முன் புறத்திலோ, கலகம் கண்கொண்டு பார்க்கக்கூடியதாய் இல்லை. பஹ்ரீகளும் புர்ஜீகளும் தத்தம் எதிர் தரப்பினர் மீது இத்தனை நாட்களாக மறைமுகமாகப் புகைத்து வந்து விரோதத்தை இப்போதுதான் செயல் முறையில் காட்டச் சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றபடியால், தத்தம் ஆத்திரம் தீர வெட்டிக் குவித்தார்கள். ஆனால், பஹ்ரீகளுக்கு விளைந்த சேதத்தை விட புர்ஜீகளுக்கே நூற்றுக் கணக்கில் ஆள் நஷ்டம் ஏற்பட்டது. புர்ஜீகள் பின்வாங்கிச் செல்லச் செல்ல, பஹ்ரீகள் துரத்தித் துரத்தி விரட்டினார்கள்.

சென்ற பத்து வருட­ங்களுக்கு முன்னர் விளைந்த புரட்சிக் கலகத்தைவிட இந்தப் புரட்சிக் கலகம் பலவகைகளில் மகா புரட்சிகரமாகவே இருந்தது. ஏனென்றால், அபூபக்ர் ஆதில் அரண்மனைக்குள் கதவை அடைத்துக் கொண்டு எதிரிகளைச் சமாளிக்கப் பார்த்தார். அனால், இப்போதோ சுல்தானுக்காகவும் தங்களுக்காகவும் புர்ஜீ மம்லூக்குகள் மற்றோர் இனத்து மம்லூக்குகளை எதிர்த்துத் தாக்கினார்கள். எனவே, இந்தக் கலகம் வெறும் புரட்சிக் கலகமாக மட்டும் இல்லாமல், ஒழுங்கான யுத்தமாகவே காணப்பட்டது. சுல்தானுக்காகப் போரிட்டதாகக் கருதப்பட்ட புர்ஜீகளின் வெற்று வேட்டு பஹ்ரீகளின் உன்னதமான வீர பராக்ரமத்தின் முன்னே செல்லாதாயிற்று.

ஊர் இரண்டு பட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டமன்றோ?

பஹ்ரீகள் அரண்மனையை இரண்டு மணி நேரத்துக்குள்ளாக முற்றுகையிட்டு விட்டனர். அவர்களிடம் மற்ற புர்ஜீகள் மாட்டிக்கொண்டு உயிரிழப்பதைக்கண்டு உளங்கலங்கிய பல வேறு புர்ஜீகள் தங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓட்டமாய் ஓடி ஒளிந்தார்கள். அரண்மனைக்குள்ளும் பல கேந்திர ஸ்தானங்களில் இருந்த பஹ்ரீகள் சமயம் பார்த்து, புர்ஜீகளைப் பின்புறமாகப் பாய்ந்து தாக்கி வீழ்த்தினார்கள். சற்று நேரத்தில் ஒரே குழப்பமும் கலக்கமும் எங்கும் சூழ்ந்து கொண்டன. பல பிரேதங்கள் ஏறி மிதித்துத் தொகைக்கப்பட்டன. கால் தடுமாறி வீழ்ந்தவர் எழுமுன்னே பிணமாக்கப்பட்டனர். வில்களும் வாள்களும் ஈட்டிகளும் அம்புகளும் பறந்தன. அமீர் பக்ருத்தீன் என்னும் கிழவரை ருக்னுத்தீன் தொந்தப் போரில் பொருதுகொண் டிருந்தார்.

முன்னமே நாம், லூயீ மன்னரும் மற்றக் கிறிஸ்தவக் கைதிகளும் செங்கோட்டைக் கோபுரத்தின் பிரத்தியேகச் சிறைக்குள்ளே கொண்டுபோய் ஜாக்கிரதையாக அடைக்கப்பட்டு விட்டார்களென்று கூறினோம் அல்லவா? அந்தக் கோபுரச் சிறையின் சாளர வழியே லூயீ மன்னர் காலை முதல் நிகழ்ந்த அத்தனை நிகழ்ச்சிகளையும் கண் கொட்டாமல் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். தம்மையும் தம் படையினரையும் அதரிதிரித்துக் கலக்கிய “முஹம்மதிய மூர்க்கர்கள்” இப்படித் தங்களுக்குள்ளே ஒருவரையொருவர் எதிர்த்துக் கொலைபுரியத் தொடங்கி விட்டதைக் கண்டு மனங்களித்தார்; உள்ளம் பூரித்தார். எனவே, காலைக் கடனையும் முடித்துக் கொள்ளாமல், சிற்றுண்டியும் அருந்தாமல், அவ்விரு மம்லூக் தொகுதியினரும் ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்துவதை அந்த ஜன்னல் வழியே கண்குளிரக் கண்டு, உவகை பூத்துக் கொண்டிருந்தார். ஊர் இரண்டு பட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டமன்றோ?

அரண்மனையைச் சூழ இரு தரப்பு மம்லூக்குகளுக்கும் பெருத்த போர் நடக்கிறதென்பதைத் தெரிந்துகொண்ட ஷஜருத்துர் என்ன முடிவை ஆண்டவன் விடப் போகிறானோ என்று ஏங்கித் தவித்துப் பெருமூச்சு விட்டுக்கொண் டிருந்தார்.

லூயீயை வீழ்த்திய ருக்னுத்தீனின் வாள் முன்னே பக்ருத்தீன் எவ்வளவு நேரம் தாங்கிப் பிடிக்க முடியும்? சற்று நேரத்தில் அந்த புர்ஜீ அமீர் படுகாயமுற்றுக் கீழே வீழ்ந்தார். பக்ருத்தீனை வீழ்த்தியதும் ருக்னுத்தீன் துள்ளிப் பாய்ந்து அரண்மனையுள்ளே அம்பு வேகத்தில் பறந்தார். சுல்தான் ஒளிந்திருக்கும் அறை எங்கே என்று தேடிக்கொண்டு ஒவ்வோர் இடமாகப் புகுந்து பார்த்தார். கொதித்துக்கொண்டிருக்கும் தம் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள, சுல்தான் தமது கையில் சிக்கினால் துண்டு துண்டாகக் கிழித்தெறியலாமே என்று தவியாய்த் தவித்தார். ஆனால், தேடுகிற சுல்தான் அகப்படாமற் போகப்போக, ஆத்திரம் இன்னும் அதிகரித்தது. ஆத்திரம் அதிகரிக்க அதிகரிக்க, இன்னம் கடுமையாகத் தேட ஆரம்பித்தார். அரண்மனை முற்றிலும் சுற்றிச் சுற்றிப் பார்த்தும், சுல்தான் அகப்படவே இல்லையாதலால், பெரிய ஏமாற்றத்துடனே ஓரிடத்தில் வந்து நின்றார்.

இதற்கிடையில் புர்ஜீ மம்லூக்குகள் தங்கள் தலைவரான பக்ருத்தீன் வீழ்த்தப்பட்டு விட்டார் என்பதைக் கண்டு கொண்டபடியால், மூலைக்கு ஒருவராகப் பதுங்கி விட்டார்கள். சத்தியத்தின் முன்னே அசத்தியம் அழியக் கூடியதாயேயிருப்பதால், பஹ்ரீகள் மனம் வெறுத்து நேர்மையாக நிகழ்த்திய போரில் வெற்றி வீரர்களாக உயர்ந்தார்கள். இப்போது எல்லா பஹ்ரீகளும் ஒரே ஆத்திரத்துடனே சுல்தானைப் பழிதீர்க்க அரண்மனையுள்ளே குபீரென்று பாய்ந்தார்கள்.

ஆனல், அங்கே ருக்னுத்தீன் ஏமாற்றமுற்ற வதனத்துடனேயும் பசித்த புலியே போலவும் நின்றதைக் கண்ட மற்ற பஹ்ரீகள் பயந்து நின்றுவிட்டார்கள்.

“பேடிப் பயல் ஓடிவிட்டான்! தப்பித்து விட்டானே!” என்று தம்முடைய வாளை வளைத்துக்கொண்டே சீறினார் ருக்னுத்தீன்.

எல்லா மம்லூக்குகளின் முகத்திலும் பெரிய ஏமாற்றமே குடிகொண்டது. இவ்வளவு பிரமாதமான கலகத்தை வெற்றிகரமாய் நடத்தியும், இக் கலகத்துக்கு அடிப்படைக் காரணமாயிருந்த சுல்தானைப் பிடித்துப் பழிதீர்க்க முடியவில்லையே என்று அத்தனை பேரும் பெரும் தவியாய்த் தவித்தார்கள்.

அந்நேரத்தில் ஒரு மம்லூக் தலைதெறிக்க ஓடிவந்து, ருக்னுத்தீன் முன்னே நின்றான். மூச்சு இரைக்க இரைக்க, “அந்தப் பயல் நீலநதியின் பக்கமாக ஓடிக்கொண்டிருக்கிறான். சிக்கிரம் ஓடி வாருங்கள்! சீக்கிரம் ஓடி வாருங்கள்! நாம் இப்போதே துரத்திப் பிடிக்காவிட்டால், அவன் தப்பிவிடுவான்!” என்று அலறினான்.

காக்கைகளின் கூட்டத்தில் ஒருகல்லை எறிந்தால், அதே வினாடியில் அவை அனைத்தும் எங்ஙனம் மறைந்துவிடுமோ, அங்ஙனமே ருக்னுத்தீன் உட்பட எல்லா பஹ்ரீ மம்லூக்குகளும் அவ்விடத்திலிருந்து மாயமாய் மறைந்து விட்டார்கள். அத்தனை பேரும் மின்னல் வேகத்தில் நீல நதியை நோக்கிப் பாய்ந்தோடினார்கள். பழிவாங்க வேண்டுமென்னும் ஆத்திரம் மனிதனுக்குப் பிறந்துவிட்டால், அவன் ஜின்களின் சக்தியைப் பெற்றுவிடுகிறானன்றோ?

ஷஜருத்துர்ருக்கு இவையொன்றும் தெரியாதென்றாலும் திடீரென்று கலகம் நின்று விட்டதாகத் தோன்றியதால், இருகட்சியுள் எவரோ ஒருவர் வெற்றியும் மற்றொருவர் தோல்வியும் பெற்று விட்டார் என்பதை யூகித்துக் கொண்டு, மீண்டும் கதவிடுக்கு வழியே கண்களைப் பொருத்தி உற்று நோக்கினார். அங்கே பழைய பஹ்ரீயே நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்.

“ஏ, மம்லூக்! கதவைத் திறக்கலாமா?” என்று கேட்டார்.

“அமீர் ருக்னுத்தீனின் உத்தரவு இன்னம் வரவில்லையே?”

“நீயும் உங்கள் ருக்னுத்தீனும் எப்பாடாவது பட்டுப் போங்கள்! எனக்கு வயிற்றுப் பசி தாங்க முடியவில்லை!” என்று கூச்சலிட்டுக் கொண்டே, கதவைத் திறந்தார். ஆனால், திறந்த வேகத்தில் தலையை வெளியே நீட்டிப் பார்த்ததும் காணச் சகியாத கோரக் காட்சியைக் கண்டு, கண்களை இறுக மூடிக்கொண்டார்.

என்னெனின், ஷஜருத்துர்ரைக் கைது செய்வதற்காக வந்து கதவிடித்து மூர்க்கத்தனமாய் நடந்துகொண்ட புர்ஜீ மம்லூக்குகள் நால்வர் துண்டு துண்டாக வெட்டப்பட்டுக் கிடப்பதையும் குருதி வெள்ளம் உறைந்து போய்க் கிடப்பதையும் சகிக்கொணாத் துர்நாற்றம் வீசுவதையும் பார்த்து, உடல் சிலிர்த்து, மெய்பதறிக் கண்களை மூடிக் கொண்டார். என்னதான் சுல்தானின் மனைவியாய் இருந்தவரென்றாலும் மனிதப் பிரேதங்கள் இவ்வளவு பரிதாபகரமாய்ப் படுநாசம் பண்ணப்பட்டுக் கிடப்பதை ஒரு பெண்பிள்ளை எங்ஙனம் கண்டு சகிக்க முடியும்? பசி மயக்கமும் கோரக் காட்சியின் கொடூரத் தோற்றமும் ஷஜருத்துர்ரை மூர்ச்சிக்கச் செய்தன. அவர் அப்படியே தொப்பென்று குந்தி விட்டார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>

Related Articles

Leave a Comment