ஹிஜ்ரீ ஒன்பதாம் ஆண்டு. மக்காவின் வெற்றிக்குப் பின் மதீனாவில் அப்பொழுதுதான் ஆசுவாசமான நிலை பரவியிருந்தது. அரேபியாவின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கோத்திரத்தினர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை வந்து சந்தித்துக் கொண்டிருந்தார்கள். யெமனில் துஜீப் என்றொரு குலம். துஜீபுக்கு அப்தா என்றொரு பெயரும் இருந்தது. இவர்கள் சகூன் எனும் கோத்திரத்தின் கிளைப் பிரிவு. சகூன் கிந்தா எனும் கோத்திரத்தின் கிளை. கிந்தாதான் யெமனில் மிக உயர்ந்த கோத்திரம்.

இத்தகு உயர் குலமான துஜீபைச் சேர்நத 13 பேர் கொண்ட குழுவொன்று மதீனாவை நோக்கி கிளம்பியது. அவர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய ஸகாத்தையும் தங்களுடன் எடுத்துக் கொண்டு வந்து நபியவர்களைச் சந்தித்தார்கள். ஸகாத்தைச் செலுத்த வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, நபியவர்களை நேரில் சந்திப்பதில் அவர்களுக்கு சொல்லி மாளாத மகிழ்ச்சி.

“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் சொத்திலிருந்து இறைவனுக்குச் செலுத்த வேண்டிய வரியை எடுத்து வந்திருக்கிறோம். பெற்றுக் கொள்ளுங்கள்” என்று ஸகாத்தைச் சமர்ப்பித்தார்கள்.

நபியவர்களோ, “இதையெல்லாம் எடுத்துச் சென்று உங்கள் பகுதியிலுள்ள ஏழைகளுக்கே பகிர்ந்து அளியுங்கள்” என்றார்கள்.

“அங்குள்ள ஏழைகளுக்கெல்லாம் போதிய அளவு அளித்துவிட்டோம். மிஞ்சியதைத்தான் எடுத்து வந்திருக்கிறோம் அல்லாஹ்வின் தூதரே!”

அபூபக்ரு (ரலியல்லாஹு அன்ஹு) இந்நிகழ்வை ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார். “அல்லாஹ்வின் தூதரே! துஜீப் குலத்தினர் கொண்டு வந்ததைப் போல் வேறு எந்த குலத்தினரும் இதுவரை எடுத்து வந்ததில்லை” என்றார்.

“நேர்வழி அல்லாஹ்வுக்கு உரியது. ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கு நேர்வழியை அவன் நாடிவிட்டால், அந்த மனிதனுடைய உள்ளத்தில் அல்லாஹ் ஈமானை எளிதாகப் பதித்து விடுவான்” என்று பதில் அளித்தார்கள் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்).

அடுத்து அந்த மக்கள் குர்ஆனைப் பற்றி விளக்கங்கள் கேட்டுப் பயின்றார்கள்; நபியவர்களின் வழிமுறைகளைப் பயின்றார்கள்; கேட்டுக்கேட்டு வாங்கி ஞானத்தை அள்ளிப் பருகிக் கொண்டே இருந்தார்கள். அவர்களுடைய ஆர்வமும் பண்பும் நபியவர்களை மிகவும் கவர்ந்து விட்டது. பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை அழைத்து, “இவர்களைச் சிறப்பாகக் கவனிக்கவும்” என்று பணிக்க, அந்தத் தூதுக் குழுவினருக்கு அருமையான விருந்தோம்பலும் வாய்த்தது.

சில நாட்கள் கழிந்ததும் யெமனுக்குத் திரும்பத் தயாரானது குழு. மற்ற குழுக்கள் மதீனா வந்து தங்கியிருந்து திரும்பும் நாட்களை விட இந்த துஜீப் குலத்தினர் குறைவான நாட்களே மதீனாவில் தங்கியிருந்ததால், ‘ஏன் அவசரமாய்க் கிளம்புகிறீர்கள்?’ என்று வினவப்பட,

குதூகலமாய் இருந்த அவர்கள் தங்களது உணர்ச்சிகளை மறைக்கவில்லை. “நாங்கள் விரைந்து எங்கள் மக்களிடம் திரும்பிச் செல்ல வேண்டும். அல்லாஹ்வின் தூதரை நாங்கள் சந்தித்ததையும் கற்ற கல்வியையும் பெற்ற ஞானத்தையும் அனைத்து அனுபவத்தையும் அவர்களிடம் சொல்ல வேண்டும்; பகிர வேண்டும்.”

மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு நபியவர்களிடம் விடைபெற வந்தது அக்குழு. தம்மைத் தேடி வந்தவர்களுக்கு பரிசுகள் அளித்து அனுப்புவது நபியவர்களின் வழக்கம். தோழர் பிலாலை அழைத்து, அவர்களுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கும்படி கூறிவிட்டு அக்குழுவினரிடம், “உங்களுடன் வந்தவர்கள் வேறு யாராவது என்னைச் சந்திக்காமல் இருக்கிறார்களா?” என்று விசாரித்தார்கள் நபியவர்கள்.

அவர்களுடன் சிறுவர் ஒருவர் வந்திருந்தார். அவரைத் தங்களது ஒட்டகம், சுமையாவற்றுக்கும் காவலாய் அமர்த்திவிட்டு, நபியவர்களைச் சந்திக்க வந்திருந்தது துஜீப் குழு. சிறுவர் என்பதால் அவரையும் தங்களுடன் ஊருக்குள் அழைத்துச் செல்லுமளவிற்கு அவர்கள் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆனால் நபியவர்களுக்குச் சிறுவர், பெரியவர் என்ற பேதம் ஏது?

 “அவரை என்னிடம் அனுப்புங்கள்” என்று நபியவர்கள் அவர்களிடம் தெரிவித்தார்கள்.

தங்களது கூடாரத்திற்குத் திரும்பிய அவர்கள், அச்சிறுவரை அழைத்து, ”தம்பி! நாங்கள் நபியவர்களைச் சந்தித்துப் பழகிப் பேசி விடை பெற்றும் வந்துவிட்டோம். உன்னையும் அவர்கள் காண விரும்புகிறார்கள். நீயும் போய் பார்த்துப் பேசிவிட்டு வா” என்று அனுப்பி வைத்தார்கள்.

கிளம்பினார் அந்தச் சிறுவர். அல்லாஹ்வின் தூதரை நேரில் சந்திக்கப் போகிறோம், அவரிடம் பேசப் போகிறோம் என்றதுமே அவரது மனத்தில் ஒரு முக்கியக் கோரிக்கை உருவாகியிருந்தது. அதை எப்படியும் நபியவர்களிடம் கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்று அவரது மனதில் தீர்மானமாகியிருந்தது. வந்து நபியவர்களைச் சந்தித்தார்.

“அல்லாஹ்வின் தூதரே! அப்தா குலத்தைச் சேர்ந்தவன் நான். உங்களை வந்து சந்தித்தார்களே தூதுக் குழுவினர் அவர்களுடன்தான் நானும் வந்தேன். அவர்களுடைய கோரிக்கைகளை எல்லாம் தாங்கள் நிறைவேற்றியதாக நான் அறிந்தேன். அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய கோரிக்கையையும் தாங்கள் தயவுசெய்து நிறைவேற்றி வைப்பீர்களா?”

“என்ன அது?” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அக்கறையாய் வினவினார்கள்.

“எனது கோரிக்கை என் நண்பர்களுடையதைப் போலன்று. எப்படியாவது சிறப்பான முஸ்லிம்களாக ஆகிவிட வேண்டும் என்று அவர்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். தங்களுடைய ஸகாத்தை கொண்டு வந்திருந்தனர். நான் எனது ஊரிலிருந்து ஒரே ஒரு கோரிக்கையுடன்தான் வந்திருக்கின்றேன். தாங்கள் எனக்காக, அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும். அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டும். என் மேல் பரிவு கொள்ள வேண்டும். எனது உள்ளத்தைச் செல்வந்தனாக்க வேண்டும்.”

உள்ளத்தால் செல்வந்தன்?

சிறுவரா அவர்? எத்தகைய ஞானம், எத்தகைய தீர்க்கமான சிந்தனை இருந்தால் இத்தகைய கோரிக்கை பிறக்கும்? உள்ளம் செல்வத்தால் நிறைந்து விட்டால் உலகமே அதில் அடங்கி விடுமே! அதன் பின் ஒரு மனிதனுக்கு வேறென்ன தேவை இருக்க முடியும்?

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்து போனார்கள். உடனே இறைவனிடம் ஆழ்ந்து இறைஞ்சினார்கள். “என் இறைவா! இவரை மன்னிப்பாயாக. இவர் மேல் பரிவு கொள்வாயாக. இவரை உள்ளத்தால் செல்வந்தனாக ஆக்கி வைப்பாயாக.”

சற்று யோசித்துப் பாருங்கள். ஒரு கோரிக்கையை முன் வைக்கிறீர்கள். அதுவும் அல்லாஹ்வின் தூதரிடம் முன் வைக்கிறீர்கள். அதை அவர்கள் ஏற்று உடனே இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள். நம் வாழ்நாளுக்கும் இது ஒன்று மட்டும் போதாது?

அவருடைய சகாக்களுக்கு அளிக்கப்பட்டதைப் போன்ற பரிசுப் பொருட்கள் அச்சிறுவருக்கும் அளிக்கப்பட்டன. பெற்றுக் கொண்டு அமைதியாய் ஊர் திரும்பினார் அவர்.

மாதங்கள் கழிந்தன. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தமது இறுதி ஹஜ் யாத்திரையின்போது அந்த மக்களை மினாவில் சந்திக்க நேர்ந்தது. அவர்களிடம், “உங்களுடன் என்னைச் சந்திக்க வந்த அந்தச் சிறுவர் எங்கே?” என்று அக்கறையாய் விசாரித்தார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவரைப் போல் யாரையும் இதுவரை கண்டதில்லை. அவரைப் போல் தன்னிறைவும் மனநிறைவும் கொண்டவர் யாரையும் நாங்கள் கேள்விப்பட்டதுகூட இல்லை. அல்லாஹ் அவருக்கு என்ன அளிக்கின்றானே அதைக் கொண்டு அவர் பரிபூரண திருப்தி அடைகிறார். உலகளவு பொருட்களை வைத்துக்கொண்டு அதை யாராவது பங்கிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தால் கூட அவர்கள் பக்கம் இவர் தமது பார்வையைக் கூடத் திருப்புவதில்லை.”

“அல்லாஹ்விற்கே புகழனைத்தும். முற்றிலும் அப்படியான நிலையிலேயே அவர் மரணிப்பார் என்று நான் நம்புகிறேன்” என்று நபியவர்கள் கூற அவர்களில் ஒருவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. “அதென்ன அப்படியான நிலை?” என்று கேட்டே விட்டார்.

நபியவர்கள் விளக்கம் அளித்தார்கள். ஒரு மனிதனுடைய கவலை, ஆசை, முன்னீடுபாடு ஆகியன அவனது வாழ்க்கையின் பல நிலைகள். அதில் அவனது மனம் அலைந்து கொண்டேயிருக்கும். அத்தகைய ஏதாவதொரு நிலையில் அவன் இருக்கும்போது அவனை மரண நேரம் நெருங்கலாம். உலக நிலையில் ஒருவன் இறந்து அழியப்போகிறான் எனும்போது புகழுக்குரிய அல்லாஹ் அதில் அதிகம் அக்கறை கொள்வதில்லை.

எந்த நிலையில் நம்மை மரணம் நெருங்க வேண்டும் என்பதற்கு இதில் பாடம் உள்ளது. அந்தச் சிறுவர் அதிபுத்திசாலி. தெள்ளிய அறிவு அவருக்கு இருந்திருக்கிறது. இந்த உலகின் பொன்னும் பொருளும் செல்வமும் ஒரு பொருட்டே அல்ல என்பதை அந்த இளவயதிலேயே அவருக்கு உணர முடிந்திருக்கிறது. மறுமையின் செல்வம், அதன் ஈடேற்றம்தான் அவருக்குப் பிரதானமாய் இருந்திருக்கிறது. அதை அடைய வேண்டுமெனில் இவ்வுலகில் மனத்தளவில் செல்வந்தனாக உயர்ந்துவிட்டால் போதுமென்ற ஞானம் அமைந்துவிட, அதற்கான சிபாரிசை யாரிடம் பெற வேண்டுமோ அந்த மாமனிதரிடம் கேட்டார்; பெற்றார்; உயர்ந்துவிட்டார்.

அவரை மக்கள் கவனித்துக் கொண்டே இருந்தார்கள். அந்தச் சிறுவர் எங்கள் மத்தியில் மிகச் சிறந்த மனிதனாக உருவாகி வளர்ந்தார். உலகின் சொகுசு எதையும் அவர் சிறிதளவு கூட விரும்பவேயில்லை. இறைதூதரின் மறைவிற்குப் பிறகு யெமனில் சில மக்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறினர். அச்சமயம் மக்களையெல்லாம் அழைத்து, கடின உரையாற்றினார் அவர். அல்லாஹ்வையும் ஈமானையும் நினைவுறுத்தி மக்கள் வழிகெட்டுப் போகாமல் மிகவும் பாடுபட்டார் என்று அவர்கள் தெரிவித்ததை வரலாற்று ஆசிரியர்கள் கவனமாய்க் குறித்து வைத்திருக்கிறார்கள்.

அபூபக்ரு (ரலியல்லாஹு அன்ஹு) கலீஃபாவாக பொறுப்பேற்றுக் கொண்டதும், அந்தச் சிறுவரை நினைவுகூர்ந்து அவரைப் பற்றி விசாரித்துக் கொண்டேயிருப்பார்கள். அவர்களுடைய ஆட்சியில் ஸியாத் இப்னு லபீத் என்பவர் யெமனில் ஆளுநராக இருந்தார். அந்தச் சிறுவரைப் பற்றி விவரித்து அவருக்குக் கடிதமெழுதி, அவரைச் சிறப்பாகக் கவனித்துக் கொள்ளும்படி பரிந்துரைத்திருந்தார் கலீஃபா.

அவர்மீது கலீஃபா அபூபக்ருவுக்கு எத்தகு அபிமானமும் அக்கறையும் இருந்திருந்தால் அவ்விதம் எழுதியிருப்பார்? அதற்கு அடிப்படைக் காரணம் உண்டு. தங்களது கவனத்தை இறை நேசர்களின்மீது குவித்திருந்தவர்கள் தோழர்கள்.

அனைத்து முஸ்லிம்களுக்கும் அவர் சிறந்ததோர் உதாரணமாக அமைந்துபோய், வரலாற்றுக் குறிப்புகளில் சிறப்புமிக்க இடத்தை அவர் பெற்றிருந்தாலும் அவரது பெயர் மட்டும் எங்குமே பதியப்படவில்லை! இவ்வுலக வாழ்க்கையில் புகழும் ஒரு செல்வம் இல்லையா? அதனால் அந்தச் செல்வத்தைக்கூட அவர் விரும்பமாட்டார் என்பதால் அவரது பெயரே எதிலும் இடம்பெறவில்லை போலும்.

அதனால் என்ன? இறைவனின் உவப்பு வாய்த்த பிறகு மற்றவை ஒரு பொருட்டா என்ன?

உலகின் மிகச் சிறந்த செல்வந்தனாய் வாழ்ந்து மறைந்தார் அத்தோழர்.

ரலியல்லாஹு அன்ஹு.

-நூருத்தீன்

அல்ஹஸனாத் அக்டோபர் 2016 இதழில் வெளியான கட்டுரை

Related Articles

Leave a Comment