‘டைம் மெஷின்.’ இந்த வார்த்தையைப் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது என்ன ஏது என்று விரிவாய்த் தெரியாவிட்டாலும் பலருக்கும் அதுபற்றி குத்துமதிப்பான ஓர் ஊகம் இருக்கும். சிலருக்குக் கேள்வி தோன்றலாம்; ‘வாஷிங் மெஷின் தெரியும். இதென்ன புதுசாய் டைம் மெஷின்?’

அதற்கு ஒற்றை வார்த்தையில் பல அர்த்தங்கள் சொல்லலாம் – கற்பனை; ஆதங்கம்; ஆசை; உடான்ஸ்… இத்தியாதி.

டைம் மெஷின் எனப்படும் கால எந்திரத்தின் அடிப்படையில் பற்பல விஞ்ஞானக் கதைகள் உள்ளன. அவை எல்லாமே மனிதனின் ஆழ்மனத்தில் பதிந்திருக்கும் ஆசையின் வெளிப்பாடான கற்பனைக் கதைகள். இந்த கான்ஸெப்ட் – கருத்தைத் தொடங்கி வைத்த புண்ணியவான் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்த ஹெச். ஜி. வெல்ஸ் என்ற ஆங்கில நாவலாசிரியர். அவர் எழுதிய அறிவியல் புதினம் The Time Machine-தான் இந்தக் கருத்தின் பிதா. இதற்கெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே யாரோ யுராஷிமா டாரோ என்ற ஒரு மீனவரைப் பற்றிய ஜப்பானிய நாடோடிக் கதையிலேயே இந்தக் கருத்து ஒளிந்திருந்தது என்றும் சொல்கிறார்கள்.

என்னதான் செய்யும் இந்த டைம் மெஷின்? புதினத்திலிருந்து தொடங்குவோம்.

வெல்ஸின் நாவலில் ஆங்கில விஞ்ஞானி ஒருவர் தாம் ஒரு எந்திரம் கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார். ‘காலம் என்பது பெரிதாய் ஒன்றுமில்லை; நீளம், அகலம், ஆழம் எனும் முப்பரிமாணம் போல் அது நான்காம் பரிமாணம். இதோபார் நான் ஒரு எந்திரம் கண்டுபிடித்திருக்கிறேன். இதில் ஏறி அமர்ந்து தேவைப்படும் பட்டனைத் தட்டினால் காலத்தின் முன்னே பின்னே சவாரி செல்லலாம்; நிரூபிக்கட்டுமா? சற்றுப் பொருங்கள், இதோ வந்துவிட்டேன்’ என்று அதில் ஏறி பின்னோக்கி எட்டாம் நூற்றாண்டுக்குச் சென்றுவிடுகிறார். அங்கு அவருக்குப் பல அனுபவங்கள், சிக்கல்கள், சோதனை. அவற்றை வென்று கிளம்புகிறவர், 30 மில்லியன் ஆண்டுகள் முன்னோக்கிச் சென்று விடுகிறார். அங்கே அழியக்கிடக்கும் உலகத்தை அப்படியே ஒரு ரவுண்டு சுற்றிப் பார்த்துவிட்டு தம் வீட்டு சோதனைச் சாலைக்கு வந்து விடுகிறார் – எல்லாம் நிகழ்கால மூன்று மணி நேரத்திற்குள்! நாவல் பெரிசு. இது இங்கு நமக்குத் தேவைப்படும் கதைச் சுருக்கம் மட்டுமே!

இதன் அடிப்படையில் மக்களைத் தொற்றிக் கொண்டன ஆசையும் கற்பனையும். சில திரைப்படங்கள், பல தொலைக்காட்சித் தொடர்கள், ஏகப்பட்ட சித்திரக் கதைப் புத்தங்கள் என்று இன்றுவரை டைம் மெஷின் கிறக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சாத்தியமா?

பௌதிக வல்லுநர்கள் அது சாத்தியம் என்று உரைக்கிறார்கள். எப்படி? ஒளியின் வேகத்தை விஞ்சும், பயண ஊர்தி ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டால் டைம் மெஷின் சாத்தியமாம். ‘நம்ம ஊர்ல டைமுக்கு பஸ்ஸு, ரயிலே வருவதில்லை. இதுல ஒளியை விஞ்சும் வேகமாம்; டைம் மெஷினாம்’ என்று அங்கலாய்ப்பு நமக்கு. அதை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? ஒளியின் வேகம் என்ன?’ என்று பார்ப்போம்.

நமது நேரத்தை ஆக்கிரமிக்கும் ஸீரியல், அரசியல், சினிமா தவிர பொதுச் செய்திகளில் கேட்டிருந்திருக்கலாம்; படித்திருந்திருக்கலாம். எக்குத்தப்பான பெயர் ஒன்றைச் சொல்லி, ‘அண்டை வீட்டு கேலக்கஸியில், இந்த மாதிரியான ஒரு நட்சத்திரம் பார்த்தோம் அல்லது கிரகம் கண்டுபிடித்திருக்கிறோம். அது ஒளி கக்கியது; அல்லது ஒளி அலை வெளியேற்றியது; வெடித்தது; மத்தாப்பூ சிதறியது’ என்பன போன்ற செய்திகள். கூடவே, அந்த விண் பொருள் இத்தனை ஒளியாண்டு தூரம் என்றும் கொசுறுத் தகவல் இருக்கும்.

அதென்ன ஒளியாண்டு?

ஒளியின் பயண வேகம் ஒரு நொடிக்கு, ஒரே ஒரு நொடிக்கு இருபத்து ஒன்பது கோடியே தொண்ணூற்று ஏழு இலட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து நானூற்று ஐம்பத்தெட்டு மீட்டர். மூச்சு வாங்குதோ? அதாவது 186,000 மைல். அதன் அடிப்படையில் ஓர் ஆண்டில் ஒளியானது பயணம் செய்யக்கூடிய தூரம் 9,460,730,472,580.8 கி.மீ. அதாவது “அம்மாம் தூரத்தில் இருக்கும் நம் பக்கத்து வீட்டுக்காரர் ஸ்விட்ச் போட்டு விளக்கு எரிந்தால் அதன் ஒளி நம்மை வந்தடைந்து நாம் காண ஓர் ஆண்டு ஆகும்” என்பது பொருள். நூறு ஒளி ஆண்டுகள் எத்தனை கி.மீ. என்றால் 9,460,730,472,580.8 என்பதை 100ஆல் பெருக்கிக் கொண்டால் வரும் விடை. இந்த எண்ணை எழுதினால் கை வலிக்கும், கண்ணைச் சுற்றும், நாக்கு குழறும் என்பதால் சுருக்கமாய் ஒளி ஆண்டு.

எனவே புவியில் உள்ள நாம் இன்று அங்கு எங்கோ உள்ள ஒரு கிரகத்தின் ஒளியைக் கண்டால் அது எத்தனை ஒளி ஆண்டுகள் என்று சொல்கிறார்களோ அத்தனை ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த ஒரு நிகழ்வை, அதாவது அவர்களது கடந்த காலத்தை நாம் நிகழ்காலத்தில் காண்கிறோம். மிகவும் குழப்புகிறதோ? விஷயத்திற்கு வந்துவிடுவோம். ஒளிதான் இருப்பதிலேயே வேகம். மிக மிக வேகம். எனவே ஒளியின் வேகத்தைவிட வேகமான ஊர்தியைக் கண்டுபிடித்துவிட்டால் காலப் பயணம் இயலக்கூடும் என்பது இயற்பியல் வாதம்.

இந்தச் சிக்கல சமாச்சாரமெல்லாம் புரிந்தாலும் சரி; புரியாவிட்டாலும் சரி. டைம் மெஷின் கதைகளைப் படிக்கும்போது, அது சாத்தியமா, இல்லையா என்பது ஒருபுறமிருக்க, உள்ளத்தளவில் அனைவருக்குமே ஓர் ஈர்ப்பு உள்ளது என்பது மட்டும் உண்மை. வரலாற்றுப் படங்களும், வருங்காலம் பற்றிய science fiction படங்களும் பார்த்துப் பார்த்து கால எந்திரத்தின் மேல் ஆசை. மெய்யாகவே அந்தக் காலங்கள் எப்படி இருந்தன/இருக்கும்? நமக்கு அறிமுகமானது போல்தான் அவர்களது உடை, பழக்க வழக்கம் இருந்ததா/இருக்குமா? ஏழாம் நூற்றாண்டு அரசி ஒருத்தி அணிந்திருந்த ‘படா’ நெக்லஸ் திரையில் பார்க்கும்போது நன்றாக இருந்ததே, ஒரு நடைபோய் அந்த டிஸைனைப் பார்த்துவிட்டு, கையோடு அந்தப் பொற்கொல்லரிடமே செய்து வாங்கிவிட்டால் தேவலை, என்று ஒவ்வொருவருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசை. காலத்தின் முன்னும் பின்னும் நகர்ந்து சென்று பார்த்துவிட்டுவர யாருக்குத்தான் ஆசையில்லை?

ஆனால் பிரதானமாய், நம் அனைவரிடமும் பொதுவான ஓர் ஆசை உண்டு. இன்னொரு இன்னிங்ஸ்! நிகழ்கால வாழ்க்கைக்கு மறுவாய்ப்பு!

யாருக்குமே வாழ்க்கை தப்பு, தவறு இன்றி அமைவதே இல்லை. அதன் வினைப் பயன் வாழ்க்கையின் நிகழ்வுகளை அடுத்தடுத்து பாதி்த்துக்கொண்டே வருகிறது சங்கிலித் தொடராய். இதில் பாமரன், ஞானி என்று யாரும் விதிவிலக்கில்லை.

‘அன்று அந்த நேரத்தில் அப்படிச் செய்ததால் அல்லது செய்யாமல் போனதால் இதோ இன்று என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது’ என்ற அயர்வு. ஆயாசம் நம் எல்லோரிடமும் உண்டு. ‘அப்படியெல்லாம் இல்லை. என் வாழ்க்கை பக்கா. நான் பிறந்த நொடியிலிருந்து இப்பொழுதுவரை அனைத்தும் நலம்’ என்று சொன்னால் – சற்றுத் தள்ளிநில்லுங்கள் நீங்கள் வேற்று கிரகவாசி.

மறுவாய்ப்பு ஒன்று கிடைத்துவிட்டால் போதும்; நிகழ்ந்துவிட்ட தவறுகளை அழித்துவிட்டு புதிதாய் வாழ்க்கையைத் துவக்கலாம். மீண்டும் புதிதாய்ப் பிறக்க வாய்ப்பளித்தால், என் அனுபவம் உணர்த்திய பாடத்தால் இம்முறை சிறப்பாய் வாழ்ந்துவிடுவேன். இப்படியான எண்ணவோட்டம் நம் அனைவருக்கும் உண்டு. எனவே பின்னோக்கிச் செல்லும் தேவையும் கால எந்திரமும் ஒரு வசதியான கற்பனை நமக்கு.

கற்பனை மெய்யாகுமா? என்றாவது கிடைக்குமா? என்றால் –

உண்டு. கால எந்திரம் ஏற்கெனவே நம்மிடம் உண்டு! ஆனால் இரண்டு பிரச்சினைகள்.

ஒன்று, இந்த எந்திர வடிவமைப்பு விஞ்ஞானிகளுக்கு அலுப்பூட்டக் கூடியது; இரண்டாவது ஒளியைவிட வேகமாய்க் கடக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்களல்லவா? எனவே இதைக் காண முடியாது. உணரலாம். நம்பிக்கையுடன் அணுகினால் பயன் பெறலாம்.

இவை தவிர இன்னொரு நிபந்தனையும் உண்டு. இந்தக் கால எந்திரம் நம் நிகழ்காலத்தின் சில நாள்களில், சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கிடைக்கும். ஆகையால் அனைத்து ஆயத்தமுடன் தயாராய் இருந்து கொண்டு, ஏறி அமர்ந்துகொள்ள வேண்டியதுதான்.

இனி, நமது சின்னச்சின்ன ஆசைகளையும் அவற்றுக்கான கால எந்திர வசதிகளையும் பார்ப்போம்.

ஓர் ஆண்டு பின்னோக்கிச் சென்று என் வாழ்க்கை சிலேட்டை அழிக்க வேண்டும்; ஓர் ஆண்டு முன்னோக்கிச் சென்று என் பாதையைப் பூத்தூவி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நம் ஆசையில் ஒன்று. இல்லையா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய வழிமுறை ஹதீஸ் நூல்களில் பதிவாகியுள்ளது. துல்ஹஜ் மாதத்தின் ஒன்பதாம் நாளான அரஃபா நாள் வருகிறதில்லையா? அன்று நோன்பிருந்தால் முந்தைய ஆண்டு, அடுத்த ஆண்டு இரண்டிற்குமான பரிகாரம் கிடைத்துவிடும். அதைப்போல், முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளான ஆஷுரா நாளன்று நோன்பிருந்தால் முந்தைய ஆண்டுக்கான பரிகாரம் கிடைத்து விடும்..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய மற்றொரு அறிவுரை உண்டு. ஒருவர் ரமளான் மாதத்தில் நோன்பிருந்துவிட்டு, அதையடுத்த ஷவ்வால் மாதத்தில் ஆறு நாள்கள் நோன்பிருந்தால், கிடைக்கும் பலன் அந்த முழு ஆண்டும் நோன்பிருந்ததற்கான பலனைத் தரும். முப்பத்தாறு நாளில் ஒரு முழு ஆண்டு நோன்பு நோற்ற பலன்! பிரமிப்பாயில்லை?

நாற்பது வயதோ, அறுபதோ, எண்பதோ – நாம் இதுவரை கடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் அறிந்தோ அறியாமலோ எத்தனை பாவம், எவ்வளவு குற்றம்? யோசித்தால் இப்பொழுது புரிகிறது. அப்பொழுது தெரியவில்லையே. இள ரத்தம், அறிவு போதாமை என்று ஏதோ காரணம், நொண்டிச் சமாதானம். பின்னோக்கிச் சென்று அதையெல்லாம் அழித்துவிட்டு வரலாம் என்பது நம்மில் மிகப் பலருக்கு அடக்கமாட்டாத ஆசை, விருப்பம்.

ரமளான் மாதத்தின் கத்ரு இரவில் இந்தப் பயணத்திற்கான வழிமுறை இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள் நபிகள் நாயகம். “கத்ருடைய இரவில் திட உறுதியுடன் கைம்மாறு கிடைக்கும என்ற நம்பிக்கையுடன் தொழுபவருக்கு அவரது முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன.”

அது மட்டுமன்று. மூன்று வயது கடந்த குழந்தைகள் அனைவருமே புவியில் ஆயிரம் நாளைப் பார்த்துவிட்டனர். ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு ஆயிரம் மாதங்கள் வாழக் கொடுத்து வைக்கிறது? அதாவது 83 ஆண்டுகள், நான்கு மாதங்கள். அப்படியே 83 வயதுக்கு மேலாய் வாழ்பவர்கள் அதுவரை வாழ்ந்து இறைவனுக்கு வழிபட்டது என்பதெல்லாம் எவ்வளவு சொற்பம்? அதே அந்த ஆயிரம் மாதங்களுக்கும் நல்லறம் புரிந்த நன்மை கிடைக்க முடிந்தால்? இதையும் லைலத்துல் கத்ரு இரவு நமக்கு அளித்துவிடுகிறது. இருந்தாலும் மிக ஸ்பெஷல் பயணமில்லையா? அதனால் சிறு கண்டிஷனும் உண்டு. ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாள்களில் ஒற்றைப்படை நாளின் இரவில் தேடிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். கிடைக்கும் சன்மானத்துடன் இந்தத் தேடலின் சிரமத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் – அது ஒரு சிரமமே இல்லை.

எல்லாம் போகட்டும். எனக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு அமைந்தால் – இன்னொரு இன்னிங்ஸ் – கிடைத்தால்?

வழியுண்டு. அழைத்துச் செல்ல கால எந்திரம் உண்டு.

அல்லாஹ்வின் விருப்பத்திற்காக ஒருவர் ஹஜ்ஜை நிறைவேற்றி, அதில் அனைத்து ஒழுக்கக்கேடுகளையும் பாவங்களையும் தவிர்த்துக் கொண்டால், அனைத்துப் பாவங்களும் நீங்கியவராக அன்று, பிறந்த குழந்தையைப் போல ஹஜ்ஜிலிருந்து திரும்புவார் என்பது மற்றொரு முக்கியமான நபிமொழி்.

இங்ஙனமாக, பற்பல வழிமுறைகள் உண்டு. அவற்றுக்கான நிபந்தனைகள் உண்டு. அவை அனைத்தையும் பட்டியலிடுவதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். உலகம் உருவாக்கப்பட்டு அழிக்கப்படும் நாள் வரையிலான காலகட்டத்தை எடுத்துக்கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தால் ஒவ்வொரு மனிதனின் ஆயுள் காலமும் அற்பம். இந்தச் சொற்ப காலத்தில் அவன் நிகழ்த்தும் இறைவழிபாடுகள், அவன் புரியும் பாவங்கள், குற்றங்கள், தவறுகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பின்னதன் விகிதாச்சாரமே மிக அதிகம். மிக மிக அதிகம். இதைச் சமன் செய்ய வல்ல அல்லாஹ் அளித்துள்ள வழிமுறையே கால எந்திரம். இது காலத்தைச் சுருக்கி நம் கக்கத்துக்குள் தந்துவிடுகிறது. இதன் பயன், பலன் உத்தரவாதம் நிறைந்தது. ஏனெனில் பொய்யுரைக்காத மாமனிதர் – இறைத் தூதர் (ஸல்) – சொல்லிச் சென்றவை அவை.

இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் விஞ்ஞானியின் சோதனைச்சாலையிலிருந்து வெளிவரப்போகும் கால எந்திரத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தால் – ‘ப்ச், எனக்கு நம்பிக்கையில்லை’. என் வீட்டு வாசலில் எதிர்கால மனிதனும் வரவில்லை; அறியாவகை புது வாகனம் அரண்மனை வாயிலில் வந்து நின்றதாக வரலாற்றுக் குறிப்புகளும் இல்லை.

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 16-30, நவம்பர் 2011

Related Articles

Leave a Comment