ஹாவுத்தீன் யூஸுப் இப்னு ரஃபி இப்னு ஷத்தாத் (Baha ad-Din ibn Shaddad) என்பது அந்த மார்க்க அறிஞரின் முழுப்பெயர். எதற்கு நீட்டி முழக்கி என்று சுருக்கமாக இப்னு ஷத்தாத் என்று வரலாற்று நூல்களில் இவருக்குப் பெயர். ஹிஜ்ரீ ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் குர்ஆன், ஹதீத் ஆகியனவற்றை ஆழ்ந்து பயின்று, மார்க்கம் போதிக்கும் பேராசிரியராக உயர்ந்துவிட்டார்.

இவரது எழுத்தைப் பற்றியும் அருமை, பெருமைபற்றியும் அறிய வந்த மத்திய கிழக்கின் பெரும்பகுதியை ஆண்டுகொண்டிருந்த ஸுல்தான் தம்மிடம் அவரை வரவழைத்து, ‘இந்தாருங்கள்’ என்று நீதிபதி பதவியை அளித்தார். மட்டுமல்லாது அவரைத் தமக்கு நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் ஆக்கிக்கொண்டார். அது, அந்த ஸுல்தானை அருகிலிருந்து பார்த்து, பேசி, உற்றுநோக்கி, அவதானித்து என்று அவரைப் பற்றிய வரலாற்றை மிகத் தெளிவாக, விரிவாக எழுதும் அரிய வாய்ப்பை இப்னு ஷத்தாதுக்கு அளித்துவிட்டது.

அதில் ஒரு நிகழ்வு.

ஒவ்வொரு நாளும் பகலில் குறிப்பிட்ட நேரத்தில் குதிரையின்மீது சவாரி செல்வது அந்த ஸுல்தானின் வாடிக்கை. அதை முடித்துத் திரும்பி வந்ததும் அவருக்கு உணவு பரிமாறப்படும். தம்முடன் இருப்பவருடன் சேர்ந்து உண்ணுவார். பிறகு அவருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் கூடாரத்திற்குள் சென்று நண்பகல் சிறுதுயில். அது முடித்து எழுந்ததும் தொழுகை நடைபெறும். அதன் பின் காதீ இப்ன ஷத்தாதுடன் சிறிது நேரம் தனித்திருப்பார். அப்பொழுது ஹதீத் நூல்களிலிருந்தும் மார்க்கச் சட்ட நூல்களிலிருந்தும் சிலவற்றை இருவரும் படிப்பார்கள். இது என்ன வேடிக்கை? அரசர் மார்க்கம் பயில்வாரா என்றால், அந்த ஸுல்தான் அப்படித்தான்.

ஒருநாள் எப்பொழுதும்போல் தமது குதிரைச் சவாரியை முடித்துவிட்டு வந்தார் ஸுல்தான். அவருக்கு உணவு தயாரானது. அதற்குள், தொழுகை நேரம் துவங்கிவிட்டது எனத் தெரிவிக்கப்பட, “முதலில் தொழுதுவிட்டு, சற்று உறங்குவோம்” என்று ஸுல்தான் கூறிவிட்டார். பல பணிகளினால் அன்றைய நாள் அவருக்கு மிகவும் களைப்பு. அவர் உறங்கச் செல்லும்முன் முக்கியமான உரையாடலொன்றில் அவர் ஈடுபட, அது சற்று நேரத்தைக் கடத்தி அவரது களைப்பின் அளவை உயர்த்திவிட்டது. பணியாளர்களை ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு, ஓயலாம் என்று அவர் நினைத்த நேரத்தில் வந்து நின்றார் வயதான ஒரு மம்லூக் அடிமை வீரர். அந்த மம்லூக்கின் மீது உயர்ந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் ஸுல்தான். அதனால் ‘என்ன செய்தி’ என்று அவரைப் பார்த்தார். வந்த மம்லூக்கின் கையில் ஒரு மனு.

அப்பொழுது ஸுல்தான் நிகழ்த்திக் கொண்டிருந்த போரில் இராணுவ வீரர்கள் மட்டுமின்றி பொதுமக்களில் பலரும் தன்னார்வலர்களாகப் படையில் இணைந்திருந்தனர். இராணுவத்தில் எதற்கு பொது மக்கள்? அந்தப் போர் அப்படி. அதனால் மக்களுக்கு ஏற்பட்டிருந்த ஜிஹாத் வேட்கை அப்படி. காரம், மணம், குணம் நிறைந்த சுவையான நீண்ட வரலாறு அது. அப்படியான அந்தத் தன்னார்வலர்கள் சிலரின் கோரிக்கை மனுவைத்தான் அந்த மம்லூக் எடுத்து வந்திருந்தார்.

“நான் மிகவும் களைப்புடன் இருக்கிறேன். வைத்துவிட்டுச் செல்லுங்கள்; பார்க்கிறேன்” என்றார் ஸுல்தான்.

ஆனால் அந்த முதிய மம்லூக் அதைக் கேட்காமல் மனுவை ஸுல்தானின் முகத்திற்கு வெகு அருகே நீட்டி விட்டார். ‘இந்தா, இதைப் பாரு’ என்று அசந்தர்ப்பமான தருணமொன்றில் முகத்தின் எதிரே யாரேனும் எதையாவது நீட்டினால் எப்படியிருக்கும்? அதுவும் அதை அப்படி நீட்டுபவர் அடிமை எனும்போதும் நீட்டப்படுபவர் அரசர் எனும்போதும் எரிச்சலானது கோபமாக மாறும் அத்தனை சாத்தியக்கூறுகளும் அதிகமல்லவா?

கோணாத முகத்துடன் கோக்கு மாக்காய் நீட்டப்பட்ட மனுவிலிருந்த பெயரைக் கவனித்தார் ஸுல்தான், “அட இவரா. இவரது கோரிக்கை தகுந்தபடி கவனிக்கும் தகுதி வாய்ந்ததாயிற்றே.”

உடனே அந்த மம்லூக், “எனில் என் எசமானர் தமது அங்கீகாரத்தை இதில் கையொப்பமிடட்டும்” என்றார். ஸுல்தான் கண் உறங்குவதைவிட தம் காரியத்தில் கண் அவருக்கு.

“இங்கு மைக்கூடு இல்லையே” என்றார் ஸுல்தான். அப்பொழுது அகலமான தமது கூடாரத்தின் வாயிலில் அமர்ந்திருந்தார் அவர். எவரும் அவரைமீறி உள்ளே செல்ல முடியாது.

ஆனால் கூடாரத்தின் உள்ளே மைக்கூடு இருந்தது. அதை ஸுல்தான் கவனிக்கவில்லையே தவிர வெளியில் இருந்த இப்னு ஷத்தாதும் கவனித்தார்; மம்லூக்கும் பார்த்துவிட்டார். “அதோ உள்ளே இருக்கிறது பாருங்கள்” என்றார் அரசரிடம்.

அப்படியெல்லாம் அரசரை ஏவும் தோரணையுடன் பேச பண்பற்ற துணிச்சல் இருக்க வேண்டும். அதைப் பொருட்படுத்தாமல் உள்ளே திரும்பிப்பார்த்த ஸுல்தான், “அல்லாஹ்வே! ஆமாம் நீ சரியாகச் சொன்னாய்” என்றவர் இடது கையை ஊன்றி உள்ளே சாய்ந்து, வலது கையால் மைக்கூட்டை அருகில் இழுத்து, அந்த மனுவில் கையெழுத்திட்டார். வந்த வேலையைக் கண்ணும் கருத்துமாய் முடித்துக்கொண்டு மம்லூக் திரும்ப, இதையெல்லாம் அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த இப்னு ஷத்தாத், “அல்லாஹ் தன்னுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி, ‘மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்’ என்று கூறியிருக்கிறானே அதைப்போன்ற நற்குணத்தை நான் தங்களிடம் காண்கிறேன்” என்றார். குர்ஆனிலுள்ள அல்-ஃகலம் சூராவின் நான்காம் வசனம் அது.

அதற்கு ஸுல்தான், “நாமொன்றையும் இழந்துவிடவில்லையே. அவரது தேவையைப் பூர்த்தி செய்தோம். வெகுமதி சேர்ந்தது” என்று சொல்லிவிட்டார்.

இத்தகு பொறுமையும் நற்குணங்களும் அரசரிடம் குடிகொண்டிருந்தால் என்னவாகும்?

ஜெரூஸலம் வசமானது! சிலுவை யுத்தத்தில் வெற்றி சாத்தியமானது அந்த ஸுல்தான், ஸலாஹுத்தீன் ஐயூபிக்கு.

-நூருத்தீன்

ஆதார நூல்: Salah ad-Deen al-Ayubi, Vol. 2, by Dr. Ali M. Sallabi.

சத்தியமார்க்கம்.காம்-ல் 05 ஏப்ரல் 2013 அன்று வெளியான கட்டுரை

Related Articles

Leave a Comment