அது ஓர் அழகிய பொற்காலம் – 9

சிறந்த மனிதர்களை சல்லடைப்போட்டு அலசி பணியில் அமர்த்திவிட்டேன். அவராச்சு, மக்களாச்சு என்று அத்துடன் நின்றுவிடவில்லை

உமர் (ரலி). நியமனத்திற்குப் பின்னும் அவர்கள்மீது சிறப்புக் கண்காணிப்பு தொடர்ந்தது. ஆளுநர்கள் நேர்வழியிலிருந்து பிறழாமல் இருக்கிறார்களா, மக்களைச் சரியான முறையில் நடாத்துகிறார்களா, என்று சதா கவலை.

பிரசித்திப்பெற்ற உமரின் கூற்று ஒன்று உண்டு. “பொருத்தமற்ற ஒருவர் ஒரு நிமிடம் பதவியில் நீடிக்க அனுமதிப்பதைவிட தினசரி ஓர் ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டியிருக்கும் என்றாலும் அது எனக்கு உவப்பானதே. என்னுடைய ஆளுநர்கள் தீங்கிழைப்பதாகச் செவியுற்று, அவரை நான் மாற்றாமல் இருந்தால், தீங்கிழைக்கப்பட்டவருக்கு நானே தீங்கிழைத்தவன் ஆவேன்.”.

ஆளுநர்களையும் நிர்வாகிகளையும் கண்காணிப்பதற்காகவே சிலரை ரகசியமாக நியமித்து வைத்திருந்தார் அவர். தூர தேசத்தில் அவர்கள் இருந்தாலும் அவர்களது ஒவ்வொரு அசைவும் உமருக்கு அத்துப்படி. இன்று நாம் காவல்துறை கண்காணிப்பாளர் என்று சொல்கிறோமே அவ்விதம் தமக்கு முஹம்மது இப்னு மஸ்லமாவை (ரலி) நியமித்திருந்தார் உமர். ஆளுநர்களைப் பரிசோதிப்பதும் அவர்களுக்கு எதிரான மக்களின் புகார்களை விசாரிப்பதும் இவருக்கு இடப்பட்டிருந்த பணி..

ஆளுநர்கள் தங்களது இல்லங்களுக்கு வாயிற்கதவு அமைத்துக் கொள்ளக்கூடாது, வாயிற்காவலன் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது உமரின் அறிவுரை. வீ்ட்டிலுள்ளவர்களின் தனிமையைப் பாதுகாத்துக்கொள்ள திரைச் சீலை..

இதென்ன விந்தை? அது அப்படித்தான்..

ஆளுநர்கள் மக்களுக்குப் பணியாற்ற வேண்டியவர்கள். அதற்கு மக்கள் அவர்களை மிக எளிதாய் அணுகித் தங்களது தேவைகளை, குறைகளை தெரிவிக்க ஏதுவாய் இருக்கவேண்டும். கேட்டுகள் போட்டுப் பூட்டி, அதற்கும் மேலாய் வாயிற்காப்போன் வைத்து வருபவர்களை மிரள வைத்தால், பிறகு எப்படி மக்களிடம் குறை கேட்டு அவர்கள் சேவையாற்ற முடியும்? எனவே உமரின் ஆட்சியில் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்பதற்குப் பதிலாய் ‘தட்டத் தேவையில்லை; திறந்தே இருக்கும்’ என்பது திட்டம்..

இந்நிலையில் கூஃபாவில் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) தமது இல்லத்திற்கு வாயிற்கதவு அமைத்துக்கொண்டார் என்ற தகவல் உமரை அடைந்தது. கண்காணிப்பாளர் முஹம்மது இப்னு மஸ்லமாவை (ரலி) அழைத்தார் உமர். “அந்த வாயிற்கதவை கொளுத்திவிட்டு வருக” என்று அவருக்குக் கட்டளையிடப்பட்டது..

பொதுமக்களை விரட்டுவதற்கோ, தம்மை உயர்த்திக்கொள்வதற்கோ ஸஅத் பின் அபீவக்காஸ் வாயிற்கதவு அமைத்துக் கொள்ளவில்லை. அவரது இல்லம் சந்தை ஒன்றின் அருகாமையில் அமைந்திருந்தது. அங்கிருந்து எழும் இரைச்சலை ஓரளவு தடுத்துக்கொள்ளலாமே என்று கதவு அமைத்து சாத்திக்கொண்டார். அவ்வளவுதான் விஷயம். ஆயினும் கலீஃபாவின் கட்டளை நிறைவேற்றப்பட்டது. வாயிற் கதவு கொளுத்தப்பட்டது..

ஆளுநர்களுக்கு உமர் (ரலி) இட்டிருந்த மற்றொரு கட்டளை அவர்கள் மதீனாவிற்கு வருகை புரியும்போது பகலில் மட்டுமே வரவேண்டும், இரவில் வரக்கூடாது! ஏன்? அவர்கள் கொண்டுவரும் சுமையை அனைவரும் காணும் வாய்ப்பு இருக்க வேண்டும்; மறைவாய் எதுவும் நடைபெறக்கூடாது; அப்பொழுதுதான் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அவர்களைக் கேள்வி கேட்டு விளக்கம்பெற ஏதுவாக இருக்கும் என்பது உமரின் நோக்கம்..

தம்மிடம் வருகை புரியும் ஆளுநர்கள் என்ன உண்கிறார்கள், பருகுகிறார்கள், எவ்விதமான ஆடை உடுத்துகிறார்கள் என்பதையெல்லாம் கண்காணிப்பார் உமர். உலக வாழ்க்கையும் அதன் சொகுசும் அவர்களை மாற்றிவிட்டிருக்குமோ என்ற அச்சம், கவலை. வேறென்ன?.

தம் ஆளுநர்கள் அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரலி), அபூதர்தா (ரலி) ஆகியோரின் இல்லங்களுக்கு உமர் வருகை புரிந்ததை முதல் அத்தியாயத்தில் பார்த்தோமே நினைவிருக்கிறதா? தாம் சிரியாவிற்குப் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் தம்முடைய ஆளுநர்கள், நிர்வாகிகளின் இல்லங்களுக்குச் சென்று அவர்கள் வாழும் நிலையை அறிந்து அவர்களை அனுமானிப்பதும் உமருக்கு வழக்கமாக இருந்தது. அதுவும் எப்படி? எவ்வித முன்னறிவிப்பும் அற்ற எதிர்பாராத வருகை..

தம்முடன் ஒருவரை அழைத்துச் செல்வார் உமர். அவர் ஆளுநரின் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு தமக்கும் தம்முடன் வந்துள்ளவருக்கும் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்பார். ‘கலீஃபா உமர் வந்திருக்கிறார்’ என்று அறிவிப்பதெல்லாம் கிடையாது..

யாரோ ஒரு பொதுமனிதர்; ஏதோ விஷயமாக வந்திருக்கிறார் என்று அனுமதி வழங்குவார் ஆளுநர். உள்ளே அவர்கள் நுழைந்ததும்தான் ஆளுநருக்கே அவர்கள் யார் என்று தெரியும். ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துகொள்ளலாம். அதை அவர் அடையட்டும் என்று வீட்டை நோட்டமிடுவார் உமர்..

காலீத் பின் வலீதின் வீட்டைச் சென்று பார்த்தார் உமர். அங்கு அவரது கவனத்தைக் கவரும் எதுவொன்றுமே இல்லை. குறிப்பிடும்படியாய் இருந்ததெல்லாம் போர் ஆயுதங்கள் மட்டுமே. உமர் வருகை புரிந்தநேரத்தில் அதைச் செப்பனிடுவதில் மும்முரமாய் இருந்தார் காலீத்..

யஸீத் இப்னு அபீ ஸுஃப்யான் (ரலி) பலவித உணவு வகைகளை உண்டு களிக்கிறார் என்று கேள்விப்பட்டார் உமர். ஒருநாள் இரவு உணவு நேரம்வரை காத்திருந்து, சரியாக அந்த நேரத்தில் அவரது வீட்டிற்குச் சென்று, மேற்கூறியபடி அனுமதிபெற்று, அவர் வீட்டினுள் நுழைந்தார். சுவரில் அலங்காரத் திரைச் சீலைகள். கிடுகிடுவென அவற்றைத் தம் கைகளால் கிழித்தெறிய ஆரம்பித்தார் உமர். “உமக்கு என்ன கேடு! மக்கள் தங்களை வெப்பத்திலிருந்தும் குளிரிலிருந்தும் போர்த்திக்கொள்வதற்கு துணி தேவைப்பட்டுக்கிடக்க, நீர் சுவர்களுக்கு ஆடை அணிவித்து அழகு பார்க்கிறீரோ?” அவரது உணவுகளை நோட்டமிட்டு, உணவில் வரம்புமீற வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டு வந்தார் கலீஃபா..

முஜாஷா இப்னு மஸ்ஊதை (ரலி) ஒரு பணியில் அமர்த்தியிருந்தார் உமர். அவரின் மனைவி பொருள்கள் வாங்கி வீட்டை அலங்காரப்படுத்துவதாக உமருக்குத் தகவல் வந்தது. உடனே கடிதம் எழுதினார் உமர்..

“அல்லாஹ்வின் அடிமை, மூஃமின்கள் தலைவரிடமிருந்து, முஜாஷா இப்னு மஸ்ஊதுக்கு. அஸ்ஸலாமு அலைக்கும். உம் மனைவி அல்-ஃகுதைரா வீட்டை அலங்காரப்படுத்த பொருள்கள் வாங்கிக்கொண்டிருப்பதாய் அறிந்தேன். எனது இக்கடிதம் கிடைத்ததும், உன் வீட்டில் தொங்கிக்கொண்டிருக்கும் அலங்காரச் சீலைகளை கிழித்தெறியாமல் இதை கீழே வைக்கக்கூடாது என்று ஏவுகிறேன்.”.

திரைச் சீலைகள் ஆடம்பரம், அனாவசியம் என்றால், வீடுகளையே அலங்கார மாளிகைகளாக வடிவமைத்துக்கொள்ளும் நம்மைப்பற்றி என்ன சொல்வது?.

முஜாஷா சிலருடன் அமர்ந்திருந்தபோது அக்கடிதம் அவரிடம் வந்து சேர்ந்தது. அதைப்படித்த முஜாஷாவின் முகபாவனையைப் பார்த்ததுமே ‘ஏதோ விபரீதம்’ என்று புரிந்துபோனது அங்கிருந்தவர்களுக்கு. கையில் ஏந்திய கடிதம் ஏந்தியபடி இருக்க அங்கிருந்தவர்களிடம் “எல்லோரும் எழுந்து என்னுடன் வாருங்கள்” என்றார்..

அனைவரையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு விரைந்தவர் தாம் மட்டும் முதலில் உள்ளே நுழைந்தார். எதிர்பட்ட அவரின் மனைவி அவரது கோலத்தையும் முகத்தையும் பார்த்து அதிர்ந்துபோய், “என்ன ஆயிற்று உங்களுக்கு?”.

“விலகிப்போ! நான் உன்னிடம் கோபமுற்றுள்ளேன்” என்று இறைந்தார் முஜாஷா. ஒன்றும் புரியாமல் அவரின் மனைவி திகைப்புற்று விலகிச் சென்றதும், “உள்ளே வாருங்கள்” என்று தம்முடன் வந்திருந்தவர்களை அழைத்தார்..

“அவரவரும் உங்கள் கைகளுக்கு கிடைக்கும் அலங்காரப் பொருட்களை திரைச்சீலைகளைக் கிழித்தெறியுங்கள்”.

வந்தவர்களுக்கு இப்பொழுது விஷயம் புரிந்தது; உதவினர். சுவரிலிருந்த சீலைகள் எல்லாம் கிழிந்து தரையில் விழும்வரை முஜாஷாவின் கையிலிருந்த கடிதம் கையிலேயே இருந்தது..

ஸிரியாவுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த அய்ஆத் இப்னு ஃகனம் தனியாகக் குளியலறை அமைத்துக்கொண்டதாகவும் அவருக்கென பிரத்யேகக் குழு ஏற்படுத்திக் கொண்டதாகவும் உமருக்கு புகார் சென்றது. அவரை மதீனாவிற்கு வரவழைத்தார் உமர். வந்தவருக்கு கம்பளி ஜுப்பா அணிவித்து, முந்நூறு ஆடுகளை அளித்து மேய்க்கச் சொல்லிவிட்டார் உமர்..

இரண்டு, மூன்று மாதங்கள் கழிந்ததும் அவரை வரவழைத்து, உமக்கென தனிக் குளியலறை, பிரத்யேகக் குழு என்றெல்லாம் நீர் ஏற்பாடு செய்துகொண்டீர். அந்த பகட்டும், பெருமையும் உம்மிடமிருந்து அகலவே உமக்கு ஆடு மேய்க்கும் இந்த வேலை வழங்கப்பட்டது” என்று கூறி மீண்டும் அவரை ஆளுநராக நியமித்து அனுப்பிவைத்தார் உமர்.

அது ஓர் அழகிய பொற்காலம்.

(ஒளிரும்)

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 16-31, மார்ச் 2013

<<பகுதி 8>> <<பகுதி 10>>

<<முகப்பு>>

Related Articles

Leave a Comment