அது ஓர் அழகிய பொற்காலம் – 4

by நூருத்தீன்

ஒருவருக்கு ஆளுநர் பதவி அளிக்க வேண்டும் என்று நினைத்தால், அவரை வெகு உன்னிப்பாய்க் கண்காணிப்பார் உமர் (ரலி). சிலரை சில நாள்களில் எடைபோட்டு விடுவார்.

சில வேளைகளில் அது நீண்ட காலம் எடுப்பதும் உண்டு. ஆனால் பொறுமையுடன் கண்காணிப்பு தொடரும்.

உமர் தேர்ந்தெடுத்த ஆளுநர்களின் தனிச் சிறப்புகளை வரலாற்று ஆசிரியர் ஒருவர் சிறு பட்டியலாய் அளிக்கிறார். ‘வலுவான ஈமான், இஸ்லாமிய அறிவு, அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை, முன்மாதிரியாக அமையத்தக்க நன்னடத்தை, வாய்மை, பதவிக்குரிய தகுதி, துணிவு, வீரம், உலகின் மீது பற்றற்ற தன்மை, தியாகம் புரியும் ஆவல், அடக்கம், அறிவுரைகளுக்கு செவிமடுக்கும் தன்மை, கருணை, பொறுமை, வெற்றிகொள்ளும் ஆர்வம், பணிவு, உறுதியான மனோதிடம், நீதி, பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமை …’ என்று மூச்சுவாங்க வைக்கும் நீண்ட பட்டியல். இத்தகு சிறப்புள்ள ஆட்சியாளர்கள் இருந்தார்களா என்று நாம் வியந்து வியர்க்கலாம்.

இந்தச் சிறப்புகளில் என்னென்ன எவரிடம் அமைந்துள்ளன, எந்தளவு அமைந்துள்ளன என்பதைக் கண்காணித்து அறிவதில் உமருக்கு (ரலி) அசாத்தியத் திறமை.

ஒருமுறை மதீனாவந்து உமரைச் சந்தித்தார் அஹ்னஃப் இப்னு ஃகைஸ் (ரலி). “இங்கேயே தங்கு” என்று அவரை தங்கச் சொன்னார் உமர். ‘என்ன ஏது என்று தெரியாது. ஆனால் கலீஃபாவின் அன்புக் கட்டளை’ என்று தங்கிவிட்டார் அஹ்னஃப். நாள், வாரம், மாதம் என்று ஓடி, ஓர் ஆண்டு கழிந்திருக்கும். பிறகு ஒருநாள் அவரை அழைத்தார் உமர்.

“அஹ்னஃப்! நான் ஏன் உன்னை இங்கு என்னுடன் மதீனாவில் தங்கவைத்தேன் தெரியுமா? உன்னைக் கண்காணிக்க! இன்றுவரை உனது செயல்பாடுகளை பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். நீ புறத்தளவில் மிகவும் நல்லவனாய் எனக்குப் படுகிறாய். உனது அகமும் அதைப்போன்றே இருக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் நமது சமூகம் அறிவார்ந்த நயவஞ்சகர்களால் கெட்டுப்போகும் என்று நாங்கள் கூறுவது உண்டு.”

அறிவற்ற நயவஞ்சகனைவிட புத்திசாதுர்யமும் மார்க்க அறிவும் நிரம்பிய நயவஞ்சகன் இஸ்லாமிய சமூகத்திற்கு பெரும்கேடு விளைவிப்பான் என்று அச்சப்பட்டார்கள் நபியவர்களின் தோழர்கள். மிகையற்ற அச்சம் அது. நபித் தோழர்களுக்குப் பிறகான இஸ்லாமிய வரலாற்றிலும் சரி, சமகாலத்திலும் சரி, சான்றுகள் மிக அதிகம்.

அஹ்னஃப் இப்னு ஃகைஸை (ரலி) ஆளுநராக நியமித்துவிட்டு, அவருக்கு உமர் சில அறிவுரைகள் கூறினார்.

“ஓ அஹ்னஃப்! அதிகம் சிரிப்பவர் கண்ணியத்தை இழக்கிறார்; அதிகம் பரிகாசம் புரிபவர் தம் மதிப்பை இழக்கிறார். எவர் எதுவொன்றை அதிகமாகப் புரிகிறாரே அதைக்கொண்டே அறியப்படுவார்.

“அதிகம் பேசுபவர் தவறு இழைக்கிறார். அதிகம் தவறு இழைப்பவர் மேண்மைக் குணத்தை இழக்கிறார்; மேண்மையை இழப்பவர் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை இழக்கிறார். எவர் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை இழக்கிறாரோ அவர் ஆன்மீக வாழ்வில் இறந்துவிடுகிறார்.”

அதெல்லாம் அந்த காலத்தில் அஹ்னஃபுக்கு கலீஃபா சொன்ன அறிவுரை என்று ‘உம்..’ கொட்டிக்கொண்டே மேலோட்டமாய்ப் படிக்காமல் மற்றொருமுறை அதை வாசித்தால், காலாகாலத்திற்கும் மக்களுக்குப் பொருந்தும் கருத்துகள் அதில் அடங்கியிருப்பது தெரியும். சமகாலத்தில் நமக்கு இது எவ்வளவு முக்கியம் என்பதும் புரியும். குறிப்பாய் அந்த இறுதி வாக்கியம்! அல்லாஹ்வைப் பற்றிய அச்ச உணர்வு நமக்கு எந்தளவு இருக்கிறது என்று நமது சட்டைப் பொத்தான்களைக் களைந்து நம் நெஞ்சைத்தொட்டு நாம் கேட்டுக்கொண்டால் நம்முடைய ஆன்மீக வலிமையின் யோக்கியதை நமக்குப் புரியாது?

பரிகாசம் எல்லை மீறக்கூடாது என்று உமர் அறிவுறுத்தினாரே? அதன் பாதகத்தை மெய்ப்படுத்தும் நிகழ்வொன்றும் நடந்தது. ஒருவரைக் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு நிர்வாகியாக அனுப்பியிருந்தார் உமர். அந்த ஊரில் அம்ரு இப்னு ஹய்யான் இப்னு பகீலா என்பவர் ஒரு பெரும்புள்ளி; ஹீரா பகுதி மக்களின் தலைவர் அவர். அவரிடம் வந்து தங்கினார் உமர் அனுப்பிவைத்த நிர்வாகி. அவருக்கு உணவும் இடமும் அளித்து சிறப்பான விருந்தோம்பல் புரிந்தார் அம்ரு இப்னு ஹய்யான்.

அந்த நிர்வாகியிடம் அளவுக்கு மீறிய நையாண்டித்தனம் இருந்தது. தாம் விருந்தினராய்த் தங்கியிருந்த இடத்தில் சகட்டுமேனிக்கு கேலிப்பேச்சு, சிரிப்பு என்று நையாண்டி புரிந்தவர், ஒரு கட்டத்தில் அது எல்லைமீறி, உணவருந்திய தமது கையை அம்ரு இப்னு ஹய்யானின் தாடியில் துடைத்துவிட்டார். பெருத்த அவமானமடைந்தார் அம்ரு இப்னு ஹய்யான்.

கிளம்பி நேரே உமரிடம் சென்றார். “ஓ அமீருல் மூஃமினீன். இஸ்லாத்திற்குமுன் நான் கிஸ்ராவுக்குப் பணிவிடை செய்துள்ளேன்; சீஸருக்கு பணிவிடை செய்துள்ளேன். அவர்களிடமெல்லாம் நான் அச்சப்பட்டதில்லை; அவமானமடைந்ததில்லை. ஆனால் தங்களது ஆட்சியில் அவ்விதம் நேர்ந்துவிட்டது.”

“அது எப்படி?” என்று வினவினார் உமர்.

“தாங்கள் அனுப்பிவைத்தீர்களே நிர்வாகி, அவர் என்னுடன் தங்கினார். அவருக்கு உணவு வழங்கினேன்; அவரது தேவைகளை நிறைவேற்றினேன்; செவ்வனே கவனித்துக்கொண்டேன். அவருக்கோ ஏகப்பட்ட நையாண்டி குணம். இறுதியில் உணவு உண்ட தம் கைகளை எனது தாடியிலே துடைத்து விட்டார்.”

மிகுந்த கோபமடைந்த உமர், அந்த நிர்வாகியை உடனே மதீனாவுக்கு வரவழைத்தார். “என்ன இது? உமது தேவைகளை கவனித்துக்கொண்டவரின் தாடியிலேயே கை துடைத்தீரோ? அல்லாஹ்வின்மீது ஆணையாகக் கூறுகிறேன். முன்னுதாரணம் ஆகிவிடுமே என்ற அச்சம்மட்டும் என்னைத் தடுக்காதிருப்பின், உமது தாடி உரோமத்தில் ஒன்றே ஒன்றை மட்டும் விட்டுவிட்டு மீதம் அனைத்தையும் பிடுங்கி எறிந்திருப்பேன். இத்துடன் தொலைந்துபோகவும். இதற்குபின் எனக்காக நீர் எந்தப் பணியும் செய்யமுடியாது.”

ஊரையே அடித்து உலையில் போட்டாலும், புகார், வழக்கு, தீர்ப்பு எனும் அனைத்தையும் துடைத்து எறிந்துவிட்டு, ‘சூடு, சொரணை’ கிலோ என்ன விலை எனும் சார்பு அரசியல் நிகழ்காலத்தில் யதார்த்தமாகிவிட்டது.

பதவியைப் பிடுங்கிக்கொண்டு அந்த நிர்வாகியை விரட்டி அடித்தார் உமர் (ரலி).

அது ஓர் அழகிய பொற்காலம்!

(ஒளிரும்)

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 1-15, ஜனவரி 2013

<<பகுதி 3>>  <<பகுதி 5>>

<<முகப்பு>>

Related Articles

Leave a Comment