அது ஓர் அழகிய பொற்காலம் – 10

by நூருத்தீன்

ஆளுநர்களின் சிறு ஏற்றத் தாழ்வுகளுக்கும் மக்கள் புகார் அளித்தால் உமர் (ரலி) உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுத்தது சரி. அதேநேரத்தில் ஹிம்ஸ், கூஃபா பகுதி மக்கள்

தங்களுக்கு எத்தகைய சிறப்பான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டபோதும் அவர்களைக் குறைகூறுவதையே வழக்கமாகக் கொண்டிருந்ததை வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ஒழுக்க நெறிமுறைகள் மக்கள் மத்தியில் கட்டாயப்படுத்தப்படும் போதெல்லாம் ஒழுங்கீனர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் அது பொறுப்பதில்லை. சட்ட திட்டங்களுக்கு அடங்கமுடியாது, தனி மனிதச் சுதந்திரம், லொட்டு லொசுக்கு என்று மறுப்பவர்கள் எக்காலத்திலும் எந்நாட்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவ்விதம் ஹிம்ஸ், கூஃபா பகுதி மக்களிடம் மகாக் கெட்டப் பழக்கம் ஒன்று இருந்தது. யாரை ஆளுநராக நியமித்தாலும் சரி, அவர்மீது புகார் கூறுவதும் அதிருப்தியுறுவதும் அவர்களுக்கு வாடிக்கை. ‘இவரிடம் இது சரியில்லை, அது சரியில்லை’ என்று ஏதாவது உப்புச்சப்பில்லாத காரணங்கள்கூறி கலீஃபாவுக்குப் புகார்ப் பட்டியல் அனுப்பி ஆளுநரை மாற்றக் கோரிக்கை வைக்கப்படும். ஆளுநர் பொறுப்பில் உமர் நியமித்தவர்களோ மிகவும் சிறப்பு வாய்ந்த நபித்தோழர்கள். அத்தகு தரமானவர்களின் தலைமையையே சரியில்லை என்றார்கள் மக்கள். இதை அம்மக்களின் அகம்பாவம் என்பதா, விவரங்கெட்டவர்கள் என்று கைச்சேதப்படுவதா?

ஆயினும் புகார் என்று வந்துவிட்டால் உமர் விசாரிக்கத் தவறுவதில்லை. மிகப் பெரும்பாலான தருணங்களில் அனைத்தும் உள்நோக்கப் புகார்கள்; உண்மையற்றவை என்பது தெரியவரும். இருந்தாலும் அதிருப்தியுற்ற மக்கள் மேற்கொண்டு குழப்பம் விளைவிக்கக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில், ஒன்று அந்த தோழர்கள் போதும் இந்தப் பதவி என்று போர்க்களத்திற்கு விரைந்துவிடுவார்கள்; அல்லது உமர் ஆளுநர்களை மாற்றியமைப்பார்.

இவ்விஷயத்தில் ஹிம்ஸ் நகரம் உமருக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்து வந்தது. மிகுந்த யோசனையில் ஆழ்ந்திருந்தவருக்கு சட்டென நபித்தோழர் உமைர் பின் ஸஅத் (ரலி) நினைவிற்கு வந்தார். அச்சமயம் ஸிரியா பகுதியில் போர்க்களத்தில் போரிட்டுக் கொண்டிருந்தார் உமைர். பதவி நியமன அறிவிப்பு வந்து சேர்ந்தது. அவருக்கோ களத்தைவிட்டு நகருக்குள் சென்று பதவியேற்க விருப்பமே இல்லை. இருந்தாலும் என்ன செய்வது? கலீஃபாவின் கட்டளை. பதவியேற்றார்.

ஹிம்ஸுக்கு வந்து சேர்ந்ததும் மக்களைத் தொழுகைக்கு வரும்படி பள்ளிவாசலுக்கு அழைத்தார். வந்தார்கள் மக்கள். தொழுதனர் அனைவரும். முடிந்ததும் எழுந்து நின்று மக்களிடம் உரையாற்றினர் உமைர். இறைவனுக்கு நன்றியும் புகழும் உரைத்தபின்,

“மக்களே! இஸ்லாம் வலிமையான வாயில்கொண்ட ஓர் உறுதியான கோட்டை. இந்தக் கோட்டை நீதியால் கட்டப்பட்டிருக்கிறது; சத்தியம் அதன் வாயில். கோட்டை இடிக்கப்பட்டு அதன் வாயில் நொறுக்கப்பட்டால், இம்மார்க்கத்தின் புனிதத்தைக் காப்பாற்ற எந்த வழியுமில்லை. ஆட்சியாளர் சக்தியுள்ளவராய்த் திகழும்வரை இஸ்லாம் தாக்குதலுக்கு உட்படாது. ஆட்சியாளரின் வலிமை மக்களைச் சாட்டையால் கட்டுப்படுத்துவதும் அவர்களை வாளால் மிரட்டிப் பணியவைப்பதும் அன்று. மாறாய், மக்கள் மத்தியில் நீதியை நிலைநாட்டி, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதே வலிமை.”

அவ்வளவுதான் உரை. சுற்றி வளைத்துப் பேசும் நெடிய பிரசங்கம் இல்லை. ஆட்சியாளனுக்கு மக்களிடமிருந்து என்ன தேவை; மக்களுக்கு ஆட்சியாளன் என்ன செய்ய வேண்டும் என்று சுருக்கமான பேச்சு. தம் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டார் ஆளுநர் உமைர் பின் ஸஅத்.

அடுத்த ஓர் ஆண்டிற்கு அவரிடமிருந்து கலீஃபாவிற்குக் கடிதமும் இல்லை; சேகரித்த ஸகாத் வரியிலிருந்து அரசின் கருவூலமான பைத்துல்மாலுக்குப் பங்கும் செல்லவில்லை. உமருக்குக் கவலை ஏற்பட்டுவிட்டது. என்னதான் நடக்கிறது ஹிம்ஸில்? உமர் (ரலி) அவர்களுக்கு ஐயம் துளிர்விட ஆரம்பித்தது.

‘உலகக் கவர்ச்சிக்கு இரையாகிவிட்டாரா உமைர்?’

‘இருக்க முடியாதே. சிறந்தவரைத்தானே தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்தோம்.’

‘எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும் நபியவர்களைத் தவிர உலகத் தடுமாற்றத்திலிருந்து முழு பாதுகாப்புப் பெற்றவர் எவர் இருக்கிறார்.’

மாறி மாறி சிந்தனைகள். ஒருமுடிவுடன் தம் உதவியாளரை அழைத்தார். “ஹிம்ஸிலுள்ள நம் ஆளுநருக்குக் கடிதம் எழுதுங்கள். ‘அமீருல் மூஃமினீனின் இக்கடிதம் கிடைத்ததும் உடனே புறப்பட்டு வருக. வரும்பொழுது முஸ்லிம்களிடமிருந்து திரட்டிய வரிப்பணத்தையும் கொண்டு வருக’” என்று வாசகத்தையும் விவரித்தார்.

கடிதம் உமைரை அடைந்தது. ஹிம்ஸின் ஆளுநர் பதவியை இறக்கி அங்கேயே வைத்துவிட்டு, மூட்டை-முடிச்சைக்கட்டிக் கொண்டு அவர் புறப்பட்டார். அப்படியென்ன பெரிய மூட்டை, முடிச்சு? பயணத்திற்குத் தேவையான உணவு, உண்ண ஒரு பாத்திரம், தண்ணீர் அள்ளிக் கை-கால் கழுவ, ஒளு செய்ய ஒரு குவளை. அவ்வளவுதான். எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு, கையில் ஈட்டியை ஏந்திக்கொண்டு, நடைபயணமாக மதீனாவை நோக்கிக் கிளம்பினார். ஹிம்ஸிற்கும் மதீனாவிற்குமான தொலைவு தோராயமாக 1200 கி.மீ. நடந்தார் உமைர் பின் ஸஅத் (ரலி).

உமைர் மதீனா வந்து சேர்ந்தபோது, முகம் வெளுத்து, தேகம் மெலிந்து, முடி நீளமாய் வளர்ந்து பயண வேதனை அவர்மேல் படர்ந்து கிடந்தது. அவரைப் பார்த்து அதிர்ந்துபோன உமர், “உமக்கு என்னாயிற்று உமைர்?” என்று விசாரித்தார்.

“ஒன்றும் பிரச்சினையில்லையே! அல்லாஹ்வின் கருணையால் நன்றாகத்தானே இருக்கிறேன். இவ்வுலகிற்குத் தேவையான அனைத்தும் என்னிடம் உள்ளன. அவை எனது கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன.”

தேவையான அனைத்தும் எவை? மூட்டையில் இருந்த சிறிதளவு உணவும் இரண்டு பாத்திரங்களும்!

“உம்முடன் என்ன எடுத்து வந்திருக்கிறீர்?” இதர உடைமைகளையெல்லாம் தனி மூட்டையாகக் கொண்டு வந்திருப்பாரோ என்ற எண்ணம் உமருக்கு.

“அமீருல் மூஃமினீன் அவர்களே! உடைமைகள் அடங்கிய சிறு மூட்டை. உணவு உண்ண, தண்ணீர் அள்ளிக் குளிக்க, துணி அலச ஒரு பாத்திரம். ஒளுச் செய்ய, நீர் அருந்த ஒரு பாத்திரம் ஆகிய இவையே எனது உடைமைகள். இவை போதும் எனக்கு. மற்றவை இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையற்றவை. மக்களுக்கும் அத்தகைய அனாவசியத் தேவைகள் இருக்கக்கூடாது.”

“நடந்தா வந்தீர்?” என்றார் உமர்.

“ஆம் அமீருல் மூஃமினீன்”

“ஆளுநர் நீர் பயணித்து வர அவர்கள் வாகனம் ஏதும் வழங்கவில்லையா?”

“அவர்களும் தரவில்லை. நானும் கேட்கவில்லை.”

அடுத்து முக்கிய விஷயத்திற்கு வந்தார் உமர். “அரசாங்கக் கருவூலத்திற்குச் சேரவேண்டிய பணம் எங்கே?”

“நான் எதுவும் கொண்டு வரவில்லை.”

”ஏன்?”

நிதானமாகப் பதிலளித்தார் உமைர். “நான் ஹிம்ஸை அடைந்ததுமே, அந்நகரின் மக்களுள் மிக நேர்மையானவர்களை அழைத்தேன். வரியைச் சேகரம் செய்யும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தேன். அவர்களிடம் பணமும் பொருளும் சேகரமானதும் அந்நகரில் மிகவும் தேவையுடையவர்கள், வறியவர்கள் யார், யார், உதவிகள் எங்கெல்லாம் தேவைப்படுகின்றன என்று ஆலோசனை கேட்பேன். தேவையானவர்களுக்கும் வறியவர்களுக்கும் அவை உடனே பகிர்ந்தளிக்கப்படும்.”

தம் நம்பிக்கையும் தேர்வும் வீண்போகவில்லை என்பதை அறிந்ததும் அகமகிழ்ந்தார் உமர். மீண்டும் ஹிம்ஸ் சென்று பதவியைத் தொடருங்கள் என்று உமர் சொல்ல, போதும் பட்டமும் பதவியும் என்று அப்பட்டமாய் மறுத்துவிட்டுத் தமது கிராமத்திற்குச் சென்றுவிட்டார் உமைர் பின் ஸஅத் (ரலி).

அது ஓர் அழகிய பொற்காலம்.

‘ஆஹா! அக்காலம் மீண்டும் வராதா’ என்று நமக்கு ஏற்படும் ஆதங்கம் இயற்கையானது. உமரைப் போன்ற மிகச் சிறந்த ஆட்சியாளர் அமைய வேண்டும் என்று நம் ஒவ்வொருவருக்கும் அளவற்ற ஆசை ஏற்படுவதும் நியாயமான ஆசைதான். ஆனால்,

சிறந்த இஸ்லாமிய ஆட்சியாளர் வேண்டும் என்ற பேராவல் நமக்கு இருக்கிறதே ஒழிய, நாம் இறைவனுக்கு அஞ்சிய சிறந்த இஸ்லாமியக் குடிமக்களாக இருப்பதற்கான எவ்விதத் தகுதியையும் ஒழுக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வதில்லை. அந்த முதல் தலைமுறை கலீஃபாக்கள்போல் நமக்கு ஆட்சியாளர்கள் வேண்டும் என்று விரும்பும் நாம், குடிமக்களுக்கான இலக்கணமாய்த் தோழர்களைப் பார்ப்பதில்லை. கட்டுப்பாடற்ற நிகழ்கால நவீன நாகரிகக் கவர்ச்சியில் மயங்கி அதைத்தான் முன்மாதிரி என நம் மனம் நாடுகிறது. மாற்றம் எப்படி நிகழும்? இறைவனின் உதவி எப்படி வந்து சேரும்?

மாற்றம் நிகழ வேண்டும். நம் ஒவ்வொருவருக்குள்ளும் மெய்மாற்றம் நிகழ வேண்டும். அப்பொழுது மீண்டும் தானாய் மலரும் பொற்காலம். இன்ஷா அல்லாஹ்.

(நிறைவுற்றது)

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 01-15, ஏப்ரல் 2013

<<முகப்பு>>  <<பகுதி 9>>

 

Related Articles

Leave a Comment