ஒரு சில வரவேற்பு – 2

by admin

சுதந்தர இந்தியாவில் தா. இ. மீண்டும் உதயமாகின்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகின்றது. அது மறைந்திருந்த காலத்தில் அதன் அருமை அநேக தமிழ் முஸ்லிம்களுக்குத் தெரியவந்தது, உயிருடனிருக்குங்கால் தமிழகத்தில் கேட்பாரற்றுக் கிடந்த கவி சுப்ரமண்ய பாரதி, மாண்டபின் “அமர கவி” யான கதைதான்!

தமிழ் முஸ்லிம்களிடையே இன்று காணப்படுகின்ற ஈடிணையில்லாத அரசியல் எழுச்சிக்குத் தா. இ. மும் ஓரளவு காரணமாயிருந்தது உண்மை. உலக அமைதியையும் உள்நாட்டு விடுதலையையும் கருத்திற்கொண்டு நாம் கோரிய சுதந்தரப் பாக்கிஸ்தானும் கிடைத்துவிட்டது. இனி இவ்வுப கண்டத்திலுள்ள ஹிந்துக்களும் முஸ்லிம்களும் மற்றெல்லாப் பிரிவினரும் சுதந்தர மக்களே என்பதில் சிறிதும் ஐயமில்லை.

வட இந்தியாவிலே வல்லபாய் பட்டேல் பேசும் பேச்சும், தென்னிந்தியாவிலே ‘தினமணி’ எழுதும் எழுத்தும் “ஹிந்துஸ்தானிலுள்ள முஸ்லிம்களும் சுதந்தர மக்கள்தாம்” என்னும் எண்ணத்துக்குத் துணை செய்யவில்லையாயினும் அந்த எண்ணத்தை வலுவிலாவது வருவித்துக்கொண்டு, மற்றச் சமூகத்தாருடன் நேசப்பான்மையையம் நல்லுறவையும் வளர்ப்போமாக! ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண, நன்னயம் செய்து விடல்.” ‘சகிப்புத் தன்மை’க்குப் பேர்போனது இஸ்லாம். அதற்கு இழுக்கின்றி, ஆனால் “சுயமரியாதையை விட்டுக்கொடாமல், மற்றச் சமூகத்தாருடன் சகோதர பாவத்தை வளர்ப்போமாக. சாந்தி மார்க்கம் நம்முடையது. அதன் பெயருக்கும் பெருமைக்கும் பங்கமின்றி வாழ்வோமாக.

சுதந்தர இந்தியாவில் பத்திரிகைகளின் தேவை முன்னிலும் பண்மடங்காகப் பெருகிவிட்டது. உலக சுதந்தர நாடுகளிடையே இந்தியாவும் பாக்கிஸ்தானும் வெகுவிரைவில் மிகவும் முக்கியமான ஸ்தானத்தை வகிக்கப் போகின்றன. உலக ஜனநாயக நாடுகளிடையே இவ்விரண்டு நாடுகளும் எதிர் காலத்தில் மகத்தான சக்திகளாக மாறப் போகின்றன. எனவே, இங்குள்ள மக்கள் உலக அரசியலையும் உள்நாட்டு நிலையையும் அன்றாடம் அறிந்துகொள்வதில் அதிக அக்கரை கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லையல்லவா? மக்களின் மனவெழுச்சிக்கும் மகத்தான மாறுதலுக்கும் துணை செய்யுமாறு, தா. இ. தனது இனிய தொண்டிநிறைவேற்ற இறைவன் அருள் புரியட்டும்!

இங்ஙனம்,
எஸ். அப்துர் ரஹீம் (தாம்பரம்)


தாருல் இஸ்லாம், அக்டோபர் 1947
பக்கம்: 5, 6

Related Articles

Leave a Comment