லக வீரர் நெப்போலியன் போனப்பார்ட்டைப் பற்றி எல்லாச் சரித்திர முணர்ந்தவர்களும் நன்கறிவரெனினும், அவர் இஸ்லாத்தின் மீது மட்டற்ற அபிமானம் பூண்டவரென்பதைப் பலர் அறியாதபடி கிறிஸ்தவ சரித்திராசிரியர்கள் திரையிட்டு விட்டார்கள். இக்கட்டுரை அத்திரையைக் கிழித்தெறிகிறது.

ஒரு மிகச் சாதாரண ஸிப்பாஹியாக விளங்கிப் பின்னொரு காலத்தில் மிகப் பெரிய சக்ரவர்த்தியாக உயர்ந்த தனிப் பெரும் கீர்த்திமிக்க பெரியார் நெப்போலியன் என்பதை எல்லாச் சரித்திர மாணவர்களும் நன்கறிவர். அவர் பிரான்ஸ் தேசத்துக்கும் ஐரோப்பா கண்டத்துக்கும் எங்ஙனம் பெரிய வெற்றிச் சிங்கமாகவும் பிரிட்டனுக்கும் பிரஷ்யாவுக்கும் மாபெருந் தலைவலியாகவும் விளங்கி வந்தாரென்பது சரித்திர நூல்கள் தரும் தகவல்களிலிருந்து நன்கு விளங்குமென்றாலும் அந்த உலக வீரர் நெப்போலியன் இஸ்லாத்தின் மீது மட்டற்ற வாஞ்சை மிக்கவராகவும் அபிமானம் பூண்டவராகவும் விசுவாசம் கொண்டவராகவும் இருந்து வந்தாரென்பதை அநேகம் பேர் அறியமாட்டார்.

ஐரோப்பா கண்டத்தையும் கிரேட் பிரிட்டனையும் பதினைந்து ஆண்டுகட்குள் கலக்குக் கலக்கென்று பெருங்கலக்குக் கலக்கிவிட்ட அந்த மாபெரும் வீரரைப்பற்றி ஏற்கெனவே வயிற்றெரிச்சல் கொண்டு நிற்கும் கிறிஸ்தவ சரித்திராசிரியர்கள், அவர் இஸ்லாத்தின்மீது கொண்டிருந்த அபிப்ராயத்தை அடியோடு அமுக்கி அழுத்தி மறைத்து வைத்து விட்டார்கள். எனினும், சமீபகாலமாக முஸ்லிம் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்ததன் பயனாக, நெப்போலியன் இஸ்லாத்தைப் பற்றி என்ன அபிப்ராயங் கொண்டிருந்தார் என்பதை வெளிச்சத்துக்குக் கொணர்ந்து விட்டார்கள்.

சமீபத்தில், சென்ற 1953 மார்ச் மாத “இஸ்லாமிக் ரெவ்யூ” என்னும் ஆங்கில மாசிகையில் டாக்டர் ஷஹீதுல்லா என்னும் பெரியார் “இஸ்லாத்தைப் பற்றி நெப்போலியன் (கூறியிருப்பவை)” என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றை வரைந்திருக்கிறார். அந்நீண்ட கட்டுரையின் சாரத்தை இங்கு எடுத்தெழுது முன், நெப்போலியனைப் பற்றி நீங்கள் சாதார ணமாகத் தெரிந்து கொண்டிருந்த உண்மையைக் கொஞ்சம் விளக்க வேண்டும். கவனமாய்ப் படித்துப் பாருங்கள்:-

போப்பாண்டவரும் நெப்போலியனும்

நெப்போலியன் ரோமன் கத்தோலிக்க மதத்தில், இத்தாலியை அடுத்த கார்ஸிகா தீவில் 1769-இல் பிறந்தவர். 1796-இல் அவர் 27 வயதையடைந்த போதுதான் முதன்முதலாக வெளியுலகுக்கு அறிமுகமானார். அப்போது இத்தாலியில் நடந்த யுத்தத்தில் அவர் சாதாரண ஸோல்ஜராக இருந்து, மிகவும் திறம்படப் போர்புரிந்து அங்கிருந்த ஆஸ்ட்ரியர்களை விரட்டியடித்தமையால் நற்கியாதி பெற்றார். பிரான்ஸ் தேச ராஜப்புரட்சிக் கலகம் நடந்து ஓய்கிற தருணத்தில் அவர் ஜெனரல் பதவிக்கு உயர்ந்துவிட்டார். குழப்பமிகுந்து காணப்பட்ட பிரான்சு தேசத்தை நல்ல ஸ்திதிக்கு உயர்த்தி வைக்க வேண்டிய மகத்தான பொறுப்பு நெப்போலியனின் தலைமீது வந்து வீழ்ந்தது. அந்த மாவீரரும் சற்றும் சளைக்காமல் பிரான்சு தேசத்தை எவ்வளவு சிறந்த முன்னணிக்கு மிகக் குறுகிய காலத்துக்குள் கொணர்ந்து சேர்த்தாரென்றால், இன்றும் அந்நாடு அவருக்கு எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறது.

இவ்வாறு கீழே வீழ்ந்து கிடந்த பிரான்ஸ் தேசத்தை தூக்கி நிறுத்திய வாலிப நெப்போலியன் முழுக்க முழுக்கப் பக்கா ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவராகவே விளங்கி வந்தாரென்பதை மறவாதீர்கள். பிரெஞ்சு ராஜப் புரட்சிக் கலகத்துக்குப் பின் அமைந்த சட்டசபையொன்று, உள்நாட்டு மாதா கோவில்களில் பாதிரிமார்களை நியமிக்கும் பொறுப்பு முற்றும் பிரெஞ்சுக்காரர்களின் கரத்திலேயே இருக்க வேண்டுமென்றும், இந்த விஷயங்களில் அன்னிய இத்தாலி தேசத்தின், ரோமாபுரியில் வீற்றிருக்கும் போப்பாண்டவருக்கு எவ்வித அதிகாரமும் இருக்கத் தகாது என்றும் சட்டமொன்று நிறைவேற்றியதன் பயனாய், பிரெஞ்சு மாதாகோவில் நிர்வாகம் போப்பாண்டவரின் ஆதிக்கத்தினின்று துணிக்கப்பட்டுவிட்டது. ஆனால், நெப்போலியன் பதவிக்கு வந்ததும், அவருக்குக் கத்தோலிக்க மதத்தின் மீதிருந்த மட்டற்ற பற்றுதலாலும், அம்மதம் ஐரோப்பாவின் சகல நாடுகளையும் எவ்வளவு வன்மையாய் ஆட்கொண்டிருக்கிறது என்பதை நன்குணர்ந்திருந்தமையாலும், பிரெஞ்சு மக்களெல்லாருமே அந்த மதக்கோட்பாடுகளுக்கு எப்படி அடிபணிந்து பயபக்தி விசுவாசத்துடன் இருந்தனரென்பதை அறிந்திருந்தமையாலும், பிரான்ஸ் தேசம் தம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் ஐக்கியப்பட்டு நிற்க வேண்டுமென்றால், முதன்முதலில் தம் குடிஜனங்களை மாதா கோவில் விஷயத்தில் ஒற்றுமைப்படுத்தி ஏக சகோதரக் கிறிஸ்தவர்களென்ற அபிமானத்தை வேரூன்றச் செய்தால் மட்டுமே முடியுமென்று தெரிந்துகொண்டுவிட்டமையாலும், முற்சொன்ன போப்பாண்டவருக்கு எதிர்ப்பான சட்டத்தைத் தகர்த்தெறிந்து, அப்போது ரோமாபுரியில் போப் பதவி வகித்த ஏழாவது பயஸ் என்னும் போப்பாண்டவரிடம் பேச்சுவார்த்தைகள் நிகழ்த்தினார். இதனால் அந்தப் போப்பும் நெப்போலியனும் எவ்வளவு அன்னியோன்னியர்களாகப் போய் விட்டார்களென்றால், போப்பாண்டவரின் ஆசீர்வாதத்தாலேயே தாம் இப்படியெல்லாம் வெற்றிக்குமேல் வெற்றிபெற்று நற்கியாதி பெறும் வீராதி வீரராக உயர்வதாக மனப்பூர்வமாய் எண்ணிக்கொண்டார்.

இவ்வளவுடன் நிற்கவில்லை. 1804-ஆம் ஆண்டு மே மாதத்தில் நெப்போலியன் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டார். அவர் எவ்வளவு பெரிய கத்தோலிக்க மத அபிமானியாகப் போப்பாண்டவரால் கருதப்பட்டாரென்றால், அந்த ஏழாவது பயஸ் என்னும் போப் பாரிஸ் நகரில் நிகழ்வுற்ற அந்தச் சக்ரவர்த்தி முடிசூட்டு விழாவுக்கு விஜயம் செய்து அம்மகத்தான சம்பவத்தின்போது தலைமை வகிக்கும்படியும் தூண்டப்பட்டார்! போப் என்னும் மிக உயர்ந்த மதகுரு ஒரு மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு விஜயஞ் செய்வதென்பது இலேசான விஷயமா?

இதிலிருந்து போப்புக்கும் நெப்பொலியனுக்கும் எவ்வளவு சிநேகமும் மதானுஷ்டான ஒற்றுமையும் இருந்திருக்குமென்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

இங்ஙனமெல்லாம் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்து மதத்தின் பெரிய தூண் போன்று விளங்கிவந்த அந்தச் சக்கரவர்த்தி நெப்போலியன் வாட்டர் லூ யுத்தத்தில் (1815) பிரிட்டிஷாரிடம் தோல்வியடைந்து, ஸெயிண்ட ஹெலெனா என்னும் ஆபிரிக நடுக்கடல் தீவுக்கு நாடு கடத்தப்பட்ட பிறகு 1815 முதல் 1818 வரை அவரைப்பற்றி வரையப்பட்ட வாழ்க்கைக் குறிப்பில் என்ன எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? இதோ பாருங்கள் அவர் கத்தோலிக்க மதத்தைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் கொண்டிருந்த நிஜ அபிப்பிராயங்களை அவருடனிருந்த ஒரு நண்பர் எப்படி வெளியிடுகிறாரென்று:-

நெப்போலியன் கூறுகிறார்:- “என்னைப் பொறுத்த வரையில், இயேசு என்பவரொருவர் இவ்வுலகத்தில் இருந்தாரென்பதையே என்னால் நம்பமுடியவில்லை… நான் பைபிளைப் படித்தேன்; மோஸே (மூஸா) ஒரு சக்தி வாய்ந்த மனிதராயிருந்தார்; யூதர்களோ கயவர்களாகவும் பயங்கொள்ளிகளாகவும் மூர்க்க முரடர்களாகவும் காணப்படுகின்றனர். லூத்தைப் பற்றியும் அவருடைய மகள்களைப் பற்றியும் வருகிற கதையைப் பார்க்கினும் மிகவும் குரூரமான, வேறொன்று எங்காவது இருக்க முடியுமா?… பூமியைச் சுற்றி வானலோகக் கிரஹங்கள் ஓடவில்லையென்று விஞ்ஞானம் விளக்கியிருப்பதைக்கொண்டு பார்க்குமளவில், (கிறிஸ்து) மதம் ஒரு பேரிடியைப் பெற்றுக்கொள்கிறது.”

ஆனால், இஸ்லாமோ!

“இத்தாலியிலுள்ள ராஜகுமாரனொருவன் ஒரு பாதிரியிடம் சென்று, நரகத்திற்குச் சென்ற தன் சுற்றத்தார்களை எப்படிச் சுவர்க்கத்துக்கு மீட்பிக்கலாமென்று கேட்டான். அதற்கு அந்தப் பாதிரி கொஞ்சம் லஞ்சம் தரச் சொன்னார். அப்படியே அந்த ராஜகுமாரனும் பாதிரியாரின் கையிலே ஒரு தங்க நாணயத்தை வைத்து அழுத்தினான். இந்த நாணயத்தைப் பெற்று மிகவும் திருப்தியுற்ற அந்தப் பாதிரி, ‘ஏ என் எஜமானே, முப்பது ஆவிகள் இப்போது நரகத்திலிருந்து சுவர்க்கத்துக்குள் நுழைவதை நான் காண்கின்றேன்’, என்று கத்தினார். ‘அவர்கள் சுவர்க்கத்துள் நுழைந்துவிட்டதை நீங்கள் காண்கிறீர்களா?’ என்று அந்த இளவரசன் வினவினான். ‘நிச்சயமாக நான் காண்கின்றேன், என் எஜமானே!’ என்று அவர் பதிலீந்தார். ‘அப்படியானால் உமக்கு நான் கொடுத்த தங்க நாணயத்தைத் திருப்பி எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில், அந்த ஆவிகள் மீண்டும் நரகத்துக்குத் திரும்ப மாட்டா, அல்லவா?’ என்று எதிர்த்துச் சொன்னான். பார்த்தீர்களா, பாதிரிகள் எப்படி மக்களை ஏமாற்றுகிறார்களென்பதை? மதங்களெல்லாம் மாயாஜால வித்தைகளின்மீதே நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. திரியேகத்துவமென்பதை எவரும் செவியேற்கச் சித்தமாயில்லையெனினும், கிறிஸ்து மதம் அக்கொள்கைமீதே நிற்பாட்டப்பட்டிருக்கிறது. இயேசு தம்மைக் கடவுளின் குமாரனென்று கூறிக்கொண்டார்; ஆனால், அவர் தாவீதின் சந்ததியில் தோன்றியவராவார்! நான் முஹம்மதின் மதத்தையே சிறந்ததென்று தேர்ந்தெடுக்கிறேன். நம்முடைய மதத்தில் உள்ள பித்துக் கொள்ளித்தனத்தை விட அந்த மதத்தில் குறைவான பித்துக் கொள்ளித்தனமே காணப்படுகின்றது. மேலும், துருக்கியர் நம்மை ‘விக்கிரஹத் தொழும்பர்க’ளென்றே அழைக்கின்றனர்.”

மிஸ்ரில் நெப்போலியன்

நெப்போலியன் சக்ரவர்த்தியாக உயர்வதற்கு முன், பிரிட்டிஷ் கடற்படைகளை எப்படியாவது நொறுக்கித் தள்ளி, தூரக் கிழக்கு நாடுகளில் பிரிட்டன் ஸ்தாபித்துக் கொண்டருக்கும் சாம்ராஜ்யத்தைத் தவிடுபொடியாக்கிவிடுவதென்று கங்கணங் கட்டினார். அவருக்கு மைசூர் திப்பு சுல்தான் அழைப்பு விடுத்தாரென்பதும், அவ்வழைப்பை ஏற்று நெப்போலியன் இந்தியாவுக்கு வந்தாரென்பதும், வரும்வழியில் அவர் நீலநதி தீரத்தில் நடந்த கடற்படைப் போரில் தெய்வாதீனமாய் பிரிட்டிஷாரிடம் தோல்வியுற்று மீண்டும் பிரான்சுக்கே திரும்பிவிட்டாரென்பதும் சரித்திரங்கண்ட வுண்மை. அவர் நீல நதிப் போரில் தோல்வியுறுமுன் எகிப்து தேசத்தில் பாடியிறங்கி, இஸ்கந்திரியா (அலெக்ஸாண்ட்ரியா) துறைமுகப் பட்டிணத்தில் தங்கியிருந்தார். இது 1798-ஆம் ஆண்டில் நிகழ்வுற்ற சம்பவம். அவர் எகிப்து தேசத்துக்கு வந்து சேர்ந்தபோது அவரை மிகவும் நேசித்த மிஸ்ர் முஸ்லிம்கள் அவருக்கு “ஸுல்தானுல் கபீர்” என்று பட்டப் பெயரிட்டழைக்கலாயினார்கள். இன்றுங்கூட முஸ்லிம் சரித்திர ஏடுகளில் நெப்போலியனின் சிறப்புப் பெயர் ஸுல்தானுல் கபீர் என்றே பொறிக்கப்பட்டு வருகிறது. அப்படி முஸ்லிம்களால் நேசிக்கப்பட்ட அந்தப் பெரிய வீரர் 2-7-1798 அன்று விடுத்த அறிக்கையொன்றில்,

“அருளாளனும் அன்புடையோனுமாகிய ஆண்டவனின் திருநாமத்தால். அவனை யன்றி (வணக்கத்துக்குரிய வேறு) தெய்வமில்லை. அவனுக்கு மகனும் கிடையாது; வேறு துணைவரின் உதவியின்றியே அவன் ஆளுகின்றான்,”

என்று “பிஸ்மில்லாஹ்”வும், கலிமா தய்யிபும் போட்டுத் தொடங்கியிருக்கிறார்.

சமீபத்தில் காலஞ்சென்ற ஜார்ஜ் பெர்னாட்ஷா என்னும் பேரறிஞர் இஸ்லாத்தின் மாண்புபற்றி என்னென்ன நற்சாட்சிகளை வரம்புமீறிப் பொழிந்து தள்ளியிருக்கிறாரென்பதை நான் சென்ற 1950 டிசம்பர் மாத மீலாத் மலரில் விசேஷக் கட்டுரையாக வரைந்து உங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறேன். அந்த பெர்னாட்ஷா இந்த நூற்றாண்டில் இஸ்லாத்தைப் புகழ்ந்த தினுசு அப்படியிருக்க, 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலக வீரர் நெப்போலியன் இஸ்லாத்துக்கு அளித்திருக்கும் கீர்த்திமாலை எப்படியிருக்கிறதென்பதைப் பாருங்கள்! “போன பார்ட்டும் இஸ்லாமும்” (Bonaparte et l’Islam) என்னும் பிரெஞ்சு நூலிலிருந்து, முற்குறிப்பிட்ட டாக்டர் ஷஹீதுல்லா என்னும் ஆராய்ச்சியாளர் எடுத்தாளும் மேற்கோள் இது:-

முஹம்மத் (சல்) எப்படிப்பட்டவர்?

“ஆண்டவனிருக்கிறானென்பதை மூஸா நபி தம்முடைய கவ்ம்களுக்கு மட்டுமே வெளியாக்கினார்; இயேசு கிறிஸ்துவோ ரோம ராஜ்யத்துக்கு மட்டுமே வெளிப்படுத்தினார்; முஹம்மதோ பழைய கண்டத்துக்கு முற்றும் வெளிப்படுத்தினார்…”

“இயேசு பிறந்து ஆறு நூற்றாண்டுகள் கழிந்த பின்புங்கூட அரேபியா தேசம் விக்கிரஹத் தொழும்புள்ளேதான் மூழ்கிக் கிடந்தது. ஆனால், அப்போது முஹம்மத் தோன்றியே இப்ராஹீம் நபியின், இஸ்மாயீல் நபியின், மூஸா நபியின், ஈஸா நபியின் ஆண்டவனை மட்டுமே மக்கள் வணங்க வேண்டுமென்று சீர்திருத்த வேண்டியதாயிற்று. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் திரியேகத்துவத்தின் அர்த்தந்தான் என்னவென்று ஆரியர்களும் இன்னம் சில இனத்தினர்களும் குழப்பத்தைக் கிளப்பிக் கீழ்நாடுகளில் அமைதியின்மையை உண்டுபண்ணி விட்டார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் மண்ணிடைத் தோன்றிய முஹம்மத், ஒரே ஆண்டவனைத் தவிர்த்து வேறெவ்விதமான கடவுளும் கிடையாது என்றும், அந்த ஏக இறைவனுக்குத் தந்தையுமில்லை, மைந்தனுமில்லை என்றும், (கிறிஸ்து மத) திரியேகத்துவக் கொள்கை விக்ரஹ வணக்கத்தையே உண்டுபண்ணிவிடுமென்றும் ஆணித்தரமாய் அறைந்துவிட்டார்…”

“முஹம்மத் (இறுதியில்) ஓர் இளவரசராயிருந்தார். தம் நாட்டு மக்கள்களையெல்லாம் தம்மைச் சூழும்படி செய்துகொண்டார். சில ஆண்டுகளுக்குள் முஸ்லிம்கள் இந்த உலகத்தின் பாதி விஸ்தீரணத்தை ஜெயித்துக் கொண்டார்கள். பொய்யான தேவதைகளின் உயிரையெல்லாம் அவர்கள் போக்கடித்தார்கள்; மிக அதிகமான விக்கிரஹங்களை அவர்கள் சிதைத்தார்கள்; மூஸாவையும் ஈஸாவையும் பின்பற்றியவர்கள் பதினைந்து நூற்றாண்டுகளில் செய்து முடிக்க முடியாத பெரிய வித்தையான போலிக் கடவுள் ஆலயங்களைத் தகர்ப்பதென்னும் வித்தையை அவர்கள் பதினைந்து ஆண்டுகளில் நிறைவேற்றித் தீர்த்தார்கள். முஹம்மத் ஒரு மிகப்பெரிய மனிதராகவே இருந்திருக்கிறார். அவர் உண்டுபண்ணக் காரணமாயிருந்த பெரும் புரட்சி மட்டும் அப்போதிருந்த சூழ்நிலைகளால் வெற்றிகரமாகாமலிருந்திருக்கும் பக்ஷத்தில், உண்மையாகவே அவர் ஒரு கடவுளாகவே போயிருப்பார். அவர் தோன்றிய காலத்தில், தலைமுறை தலைமுறையாகவே பன்னெடுங்காலமாக அரபிகள் தங்களுக்கிடையே உள்நாட்டுக் கலகங்களை விளைத்துக்கொள்ளும் பேருபத்திரவப் பெருஞ்சேற்றுள் மூழ்கிக்கிடந்தார்கள். அண்டை அயல் நாடுகள் முஸ்லிம்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்த பின்னரே, அவை சாதிக்க முடியாத காரியங்களைச் சாதித்து முடித்தன. காதஸிய்யா யுத்தமும்… யுத்தமும் ஆக்ஸஸ் நதி தீரத்தின்மீதும் சீனாதேச எல்லையிலும் முஹம்மத் நபியின் ஞானப் பேரொளியை நிலைநாட்டும்படி முஸ்லிம்களுக்குத் துணைபுரிந்தன. அஜ்னாதைனும் யர்முக்கும் முறையே ஸிரியாவையும் எகிப்தையும் முஸ்லிம்களின் ஆதிக்கத்தின்கீழ் வரும்படி உதவி புரிந்தன. அந்த யுத்தங்களில் மட்டும் அவர்கள் தோல்வியைப் பெற்றிருந்தால், காலித்களும் ஜரார்களும் அம்ருகளும் தோற்கடிக்கப்பட்டுப் பாலைவனங்களுக்குத் திருப்பியடிக்கப்பட்டிருந்தால், அந்த அரபிகள் நிச்சயமாக மீண்டும் நாடோடி வாழ்வின் பக்கமே திருப்பப்பட்டுப் போயிருப்பார்கள். அவர்களுடைய பாட்டன் பூட்டன்மார்களைப் போல அவர்களும் மிகவும் ஏழ்மையாளர்களாகவும், கண்ணராவியான வாழ்வு வாழ்பவர்களாகவுமே போயிருப்பார்கள்; முஹம்மத், அலீ, உமர் என்னும் நாமங்களெல்லாம் இந்த உலகத்துக்குத் தெரியாமலே அழிந்துப்பட்டுப் போயிருக்கும்…”

முஸ்லிம்கள் கல்வி ஞானத்துக்கும், சித்திரகலைக்கும், விஞ்ஞானத்துக்கும் பரம விரோதிகளாவர் என்று கிறிஸ்துமத பிரசாரகர்கள் கொஞ்சமும் நெஞ்சு துணுக்குறாமல் கயிறு திரிப்பதை உதாரண பூர்வமாக நெப்போலியன் தவிடுபொடியாக்குவதைப் பாருங்கள்;

“பாத்தியர்களும் ஸித்தியர்களும் மங்கோலியர்களும் டார்ட்டார்களும் துருக்கியரும் பொதுவாகவே விஞ்ஞானத்துக்கும் கலைகளுக்கும் எதிரிகளாகவே விளங்கிவந்தனரென்றாலும், அரபிகள் மீது அக்குற்றச்சாட்டைச் சுமத்துவதோ, அல்லது சிறப்பாக முஹம்மதின் தலைமீது அந்தப் பழியைப் போடுவதோ அறவே தகாது. பனூ உமையா வம்ச முதல் கலீபா முஆவியா ஒரு கவிஞராய் விளங்கி வந்தார்;… அவருடைய மகன் எஜீதும் ஒரு கவிஞனே. முஸ்லிம்கள் கவித்துவத்தை ஆண் வீரத்தன்மைக்குச் சமமாகப் பாவித்தார்கள். மன்சூர், ஹாரூன் ரஷீத், மாமூன் முதலிய கலீபாக்கள் கலைகளையும் விஞ்ஞானங்களையும் வளர்த்தார்கள். அவர்கள் இலக்கியத்திலும் ரசாயனத்திலும் கணித சாஸ்திரத்திலும் மட்டற்ற பிரியம் வைத்திருந்தார்கள்… காஹிராவிலிருந்த நூல் நிலையத்தில் 1000 வால்யூம்கள் வான சாஸ்திர கிரந்தங்களாகவும் லக்ஷத்துக்கு மேற்பட்ட வால்யூம்கள் பல திறப்பட்ட வேறு அறிவு ஆராய்ச்சி புஸ்தகங்களாகவும் விளங்கிவந்தன. கார்டோவா (கர்த்தபா)விலிருந்த நூல் நிலையத்தில் 3 லக்ஷத்துக்கு அதிகமான வால்யூம்கள் இருந்தன. கலீபாக்களின் ஆட்சியின் கீழே விஞ்ஞானங்களும் கலாஞானங்களும் ஐந்து நூறாண்டுகள் வரை மிக அபூர்வமாய் வளர்ச்சியைப் பெற்றுக்கொண்டதுடன், நல்லவிதமான முற்போக்கையும் பெற்று வந்தன. ஆனால் மங்கோலியர்களின் படையெடுப்பின் காரணமாக அவையனைத்தும் சிதறுண்டு போயின…”

பலதார மணம்

“ஒருவன் எத்தனை மனைவிகள் வரை மணக்கலாம் என்னும் எண்ணிக்கையை முஹம்மதே குறைத்தார்; அவருக்கு முன் ஒருவன் மணந்து கொள்ளும் மனைவிகளுக்கு வரையறையே கிடையாது. எவன் பணக்காரனோ அவனே மிக வதிகமான மனைவியரை மணப்பது வழக்கம். எனவே, அவர் பலதார மணத்தை மட்டுப்படுத்தினார். ஆண்களை விடப் பெண்கள் ஒன்றும் அதிகமாகப் பிறந்து விடவில்லை; அப்படியானால், இந்த விஷயத்தில் ஏசு கிறிஸ்து உபதேசித்ததைப் பின்பற்றாமல், ஆண்மட்டும் அதிகமான பெண்களை மணக்கலாமென்று ஏன் முஹம்மத் உபதேசிக்க வேண்டும்? ஐரோப்பாவிலுள்ள அரசாங்க சட்டசபைகள், அவை கிரேக்கர்களுடையதாய் இருப்பினும், ஜெர்மானியர்களுடையதாய் இருப்பினும், ரோமர்களுடையதாய் இருப்பினும், பிரெஞ்சு ஸ்பானிய பிரிட்டிஷாருடையதாகவே இருப்பினும் அவையெல்லாம் ஏக தாரத்தையே சட்டமாக்கின. மேல் நாட்டிலே எப்போதுமே பலதார மணம் அங்கீகரிக்கப்பட்டதில்லை. ஆனால், சரித்திரபூர்வமாக எல்லா யூதர்களும் அஸ்ஸீரியர்களும் அரபிகளும் பார்ஸிகளும் டார்ட்டார்களும் ஆபிரிக்கர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை மணந்திருந்தார்கள். இந்த வேற்றுமைக்குக் காரணம் பூகோள அமைப்பே என்று சிலர் கூறுகின்றனர். ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் எத்தனையோ தினுசான பல்வேறு திறப்பட்ட மனிதர்கள் வசிக்கிறார்கள்; பலதார மணம் ஒன்று மட்டுமே அவர்களை ஒரு தொகுதியாக வெற்றிகரமாய்க் கட்டுப்படுத்த முடியும்; இதனால் கறுப்பன் வெள்ளையனையோ, வெள்ளையன் கறுப்பனையோ – வெறுத்தொதுக்க முடியாது. பலதாரத்தின் விளைவாக அக்குழந்தைகள் (பல நிறப்பட்டவை) ஒரே தகப்பனுக்கோ அல்லது ஒரே தாய்க்கோ பிறக்கின்றன; எனவே, கறுப்பனும் சிவப்பனுமாகப் பிறக்கும் சகோதரக் குழந்தைகள் ஒரே விரிப்பின் மீது அமர்ந்து மிக வாஞ்சையுடன் உணவருந்துகின்றன. மேலும், கீழ் நாடுகளில் இன்னவர்ணத்தினனைவிட இன்ன நிறத்தினன் உயர்ந்தவனென்ற வேற்றுமை கிடையாது. இந்தக் கொள்கையை வெற்றிகரமாய் நிலைநாட்டுவதற்கு ஒருவன் நான்கு மனைவியரை மணப்பதே போதும் என்று முஹம்மத் கருதினார். ஆண்களை விடப் பெண்கள் அதிகமாயில்லாதபோது,* ஓர் ஆண் எங்ஙனம் நான்கு மனைவியரை மணப்பது நீதமாகும்? என்று நீங்கள் வினவலாம். வாஸ்தவத்திலேயே பலதார மணமென்பது பணக்காரர்களிடையே மட்டுமே நிலவிவரும் வழக்கமாயிருக்கிறது…”

* நெப்போலியன் வாழ்ந்த அந்த 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஆண்களும் பெண்களும் சரிசரியாயிருந்திருக்கலாம். அதனால் நெப்போலியன் இப்படி வாதித்திருக்கக் கூடும். ஆனால், ஏகதாரத்தை வைத்துக்கொண்டு மாரடிக்கும் மேனாட்டுப் பேர் வழிகள் என்ன கதியில் இதுகாலை இழிந்து கிடக்கிறார்களென்பதை நாம் 1949 நவம்பர் இதழின் தலையங்கக் கட்டுரையில், “அந்தோ மேனாட்டு நாகரிகமே” என்னும் தலைப்புக் கொடுத்து எழுதியிருப்பதை மீட்டும் படித்துப் பார்த்து உண்மையை உணர்வீர்களாக. 1950-இல் உலகம் எப்படி இருக்குமென்பதை நெப்போலியன் உணர்ந்திருக்க முடியாதல்லவா? (பதிப்பாசிரியர்)

“நம்முடைய குடியேற்ற நாடுகளில் உள்ள கறுப்பர்களுக்கு நாம் சுதந்திரம் அளிக்க நிஜமாக விரும்புவோமானால், அங்கே நிலவும் நிறவேற்றுமைத் திமிரை நாம் ஒழித்துக்கட்ட விழிம்புவோமானால், நம்முடைய சட்ட விற்பன்னர்கள் பலதார மணத்தையே அனுமதித்துத் தீரவேண்டும்.”

அடிமைகள்

“கீழ்நாடுகளிலே அடிமைத்தனமென்பது மேனாடுகளிலுள்ள அர்த்தத்தில் அனுஷ்டிக்கப்பட்டதில்லை. அங்கே ஓர் அடிமை தன் எஜமானின் சத்துக்கு வாரிஸாகப் போகி றான்; அவ்வெஜமானின் மகளையே மணந்து கொண்டும் விடுகின்றான். பாஷாக்களுள் மிகப் பெரும்பான்மையோர் அடிமைகளாகவே இருந்திருக்கிறார்கள். மிகப் பெரிய பெரிய வஜீர்கள், எல்லா மம்லூக் சுல்தான்கள், அலீ பே, முராத் பே, இன்னம் அனேகரெல்லாரும் அடிமைகளாகவே முதலில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் எஜமானர்களின் இல்லங்களில் மிகவும் கீழ்த்தரமான குற்றேவல்களைப் புரியும் இழிய சிப்பந்திகளாக இருந்தே, காலம் செல்லச் செல்ல அவர்களுடைய வல்லமைக்குத் தக்கபடி அல்லது சகாயத்துக்கு ஒத்தபடி உயர்வை யடைந்தார்கள். இதற்கு நேர்மாறாக, மேனாட்டிலே அடிமையென்பவன் சதாசர்வ காலமும், எப்போதுமே ஓரு வீட்டு வேலைக்காரனாகவே விளங்கி வந்திருக்கிறான்; அவனே ஏணி மரத்தின் கீழ்ப்படியாய்க் காணப்பட்டு வருகிறான். ரோமர்கள் அடிமைகளை உரிமை விடுத்திருக்கிறார்கள்; ஆனால், அப்படி உரிமை பெற்ற அடிமைகள் சாதாரணப் பிரஜைக்குச் சமானமானவர்களாக எப்போதுமே கருதப்பட்டதில்லை. இது சம்பந்தமாகக் கீணாடுகளுக்கும் மேனாடுகளுக்குமிடையே எப்படிப்பட்ட கருத்து வித்தியாசம் காணப்பட்டதென்றால், சுல்தானுல் கபீரின் படைகளிலுள்ள வீரர்கள் எல்லாரும் அடிமைகளல்லர் என்று மிஸ்-ரீகளுக்குப் புரிய வைப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியதாய்ப் போயிற்று. ஒரு குடும்பத்திலுள்ள தந்தையானவன் அக்குடும்பத்தின் முதல் நீதிபதியாக விளங்குகிறான்; அவனுடைய மனைவிகள் மீதும், மக்கள் மீதும், அடிமைகள் மீதும் அவனுக்கே மகத்தான உரிமை இருந்து வருகிறது. ஓரில்லத்திலுள்ள தந்தையின் சொந்த விவகாரங்களில் தலையிட்டுக் குடும்பத்தில் குழப்பத்தை விளைக்கத்தக்க வகையில் எந்த முஸ்லிம் அரசாங்கமும் விஷமம் பண்ணத் துணிவதில்லை. உள்நாட்டுக் கலகங்கள் விளையும் போதுங்கூட அவனுடைய மனைவிகள் பரிசுத்தமிக்கவர்களாகவே கருதப்படுகிறார்கள்; மரியாதைக்குரியவர்களாகவும் நடத்தப்படுகிறார்கள்.”

நெப்போலியன் கண்ட கனவு

நெப்போலியன் ஒரு மிகப் பெரிய உழைப்பாளி; மற்ற எல்லா உழைப்பாளிகளையும் போலவே அவரும் பெரிய கனவு காண்பவராகவே விளங்கி வந்தார். அப்படிப்பட்ட கனவுலகிலே சஞ்சரிக்கும்போது அவர் ஒருமுறை இப்படி எழுதினார்:-

“இவ்வுலகத்திலுள்ள எல்லா நாடுகளின் படித்த மேதாவிகளையும் அறிவாளிகளையும் ஒன்று திரட்டி ஐக்கியப்படுத்தி, குர்ஆனின் போதனைகளை மட்டும் அடிப்படையாய்க் கொண்டு ஒரேவிதமாக ஆட்சிமுறையை நிலைநாட்டி, நான் வெற்றி காணும் நாள் வெகு தூரத்திலில்லை என்றே கருதுகிறேன். ஏனென்றால், குர்ஆனின் போதனைகள் ஒன்று மட்டுமே உண்மையாவையாகவும், அவை மட்டுமே மனிதர்கள் சந்துஷ்டியின் பக்கல் கொண்டு சேர்க்கததக்க வெற்றி மிக்கனவாகவும் காணப்படுகின்றன.”

இந்தக் கனவில் அந்த ஸுல்தானுல் கபீர் வெற்றி காணவில்லையெனினும், ஸெயிண்ட் ஹெலெனாத் தீவில் அவர் உயிர் துறக்கும்போது பக்கா முஸ்லிமாகவே உயர் நீத்தாரென்றே தெரியவருகிறது.

ரோமன் கத்தோலிக்கராய்ப் பிறந்து, போப்பாண்டவரின் ஆசீர்வாதத்தால் சக்கரவர்த்தியாகி, உலகப் பெரும் வீரருள் தலைசிறந்தவராய் உயர்ந்து தம் 56-ஆம் பிராயத்தே உள்ளமுடைந்து உயிரிழந்த நெப்போலியன் ஓர் உண்மை முஸ்லிமா? அல்லவா? என்பதை நீங்களே யூகித்து முடிவு செய்து கொள்வீர்களாக.

-N.B. அப்துல் ஜப்பார்

(தாருல் இஸ்லாம் – ஜூன் 1953)

Related Articles

Leave a Comment