நபிபிரான் கற்பழிக்கத் தூண்டினாரா?

by admin

பிபெருமான (சல்) மீது குற்றங்கூறும் மேனாட்டினர் நியாய உணர்வை அடியோடிழந்து விட்டனர் என்றே காணப்படா நின்றனர். அவர்கள் நபிபிரான் சரிதைபற்றிச் செய்யப் புகுந்த குணதோஷ ஆராய்ச்சிகள் யாவும். “அம்மஹானது பெருமைக்குப் பங்கம் விளைப்பதும் பாதகமானதுமான விஷயம் எதுவாயிருப்பினும் அஃது உண்மையானதென்றே அங்கீகரிக்கப்படல் வேண்டும்” என்னும் கொள்கையினைப் பின் பற்றி யொழுதுவனவாயே யிருந்து வருகின்றன. இதற்கோர் உதாரணம் இது காலை சமீபத்தில் வெளியான “எக்ஸ்பான்ஷன் ஆப் இஸ்லாம்” என்னும் நூலில் அதனாசிரியர் கியாஷ் என்பார் எழுதியிருப்பதை எடுத்துக் கொள்ளலாம்: நபி பெருமானது ஆணையைக் கொண்டு நிறைவேறிய “சதிமானப் படுகொலைகள்” எனச் சில சம்பவங்களைக் குறிப்பிட்டு, அவற்றினிமித்தம் “மாகொடியர்”, “வன்கண்ணர்”, “நம்பிக்கைத் துரோகி” என்னும் அடைமொழிகளால் அப்பெருமானாரை இந்தக் கியாஷ் அவதூறு செய்கின்றார். இவர் தமது குற்றச்சாட்டிற்கு ஸர் வில்லியம் மூய்ரின் கிரந்தத்தினின்றே விஷயம் சேகரித்துள்ளார்; அரபு கிரந்தங்களிலிருந்தும் ஒரு சில ஆதாரங்களைத் திரட்டியிருக்கின்றார். ஆனால், அறுபதுகோடி மாந்தரால், அருந்தவச் சிரேஷடமே உருக் கொண்டு வந்தாலன்ன ஓரிணையற்ற நல்லொழுக்க சீலரெனக் கொண்டாடப் பட்டு வரும் ஒரு மஹானுபாவரைக் குறித்துக் குறை கூறத் துணியு முன்னர், தாம் எடுத்தாளும் ஆதாரங்கள் மெய்யானவைதாமா? என்று நுணுகி ஆராய ஒரு சிறிதும் முயன்றனரில்லை மிஸ்டர் கியாஷ். “சதிமானப் படுகொலைகள்” என்று இவர் குறிப்பிடும் சம்பங்கள் ஆறாகும். இறுதியாக இவ்வாசிரியர் நபிகள் திலகத்தின் மீது சுமத்தும் குற்றச்சாட்டு, வில்லியம் மூய்ரும் தனது ‘ஞானதிருஷ்டி’யில் காணாததும் ஒரு பெண்மணியைக் கற்பழிக்க நம் மஹானுபாவர் இடங் கொடுத்தனர் என்பதுமான ஒரு பொய்யான வீண்பழியே யாம். இவ்வாறு இவ்வாங்கிலேயர் சுமத்தும் குற்றச்சாட்டை யாம் ஈண்டுச் சிறிதே ஆராய்ந்து பார்க்கக் கடவோம்:

இறுதியாக, பனூமுஸ்தலிக் கிளையைச் சார்ந்த மாதரைக் கற்பழிக்க நபிகள் பெருமான் (சல்) இடங்கொடுத்தார்கள் என்று மிஸ்டர் கியாஷ் பிதற்றுவது ஒரு கொடிய பொய்ந் நிந்தனையாகும். மேலும், “எல்லா ஹதீது நூல்களும்” இச் சம்பவத்தைக் குறிப்பிடுகின்றன வென்று இவர் கூறுவது எத்துணைத் துணிகரமான புளுகாயிருக்கிறது! இஸ்லாத்தின்மீது குரோத மனப்பான்மை கொண்ட நூலாசிரியராகிய மூய்ர்தாமும் அறியாத இக்குற்றச்சாட்டிற்கு ஹதீது கிரந்தம் ஒன்றிலேனும் ஆதாரமில்லை; ‘முஸ்லிம் சைன்யத்தில் சிலர் கிறைப்படுத்தப் பட்டிருந்த சில மாதர்களைத் தாத்தகாலிகமாய் மணம்புரிந்து கர்ப்பத்தடை உபாயம் ஒன்றைக் கைக்கொள்ள விரும்பினார்கள்’ என்று அபூசஈத்குத்ரீ வாயிலாய்ப்பிறந்த செய்தி யொன்றுதான் ஹதீதுத் தொகுதிகளில் காணப்படுகிறது; ஆனால், அவர்கள் அவ்வாறு செய்தனர் என்பதற்கு ஓர் அற்ப அத்தாட்சியேனும் இல்லை. உண்மையில் அபூசஈதின் அறிக்கையானது அஜ்ல் என்னும் ஒருவகைக் கர்ப்பத்தடையைப் பற்றியதாகும்;  இவ்வறிக்கையில் பனூ முஸ்தலிக் மார்கள் எவ்வாறு நடத்தப்பெற்றனர் என்பதுபற்றி ஒரு வார்த்தையேனுமில்லை. இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தியகாலத்தில் தாத்காலிக மணங்கள் நடைபெற்று வந்தன வென்பது உண்மையாகும். குர்ஆன் ஷரீபுந்து இவ்வழக்கத்தை ஒழித்தது; ஆனால், ஒவ்வொரு சீர்திருத்தமும் முறைமையாகவும் படிப்படியாகவும் புகுத்தப்பட வேண்டியதாயிருந்தது. யுத்தக் கைதிகளை மணம்புரிதல் சம்பந்தமாக அத்திருமறை வியக்தமான விதி வகுத்திருக்கிறது. மிஸ்டர் கியாஷின் ஆதாரமற்ற அபாண்டக் குற்றச்சாட்டைப் பின்வரும் குர்ஆன் வாக்கியம் மறுத்தொழிப்பதாய் அமைந்து விளங்குகின்றது;-

“மேலும் உங்களுக்குள் எவரேனும் நன்னம்பிக்கை கொண்டு சுயேச்சைபெற்ற மாதரை மணக்கப் போதுமான சாதனம் தம்வயம் இல்லாதவரா யிருப்பின், அவர் நன்னம்பிக்கை கொண்ட பணிப்பெண்டிருள் உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமானவர்களினின்றும் (மணம் புரியக் கடவர்)…ஆதலின், அவர்களுடைய எஜமானரின் அனுமதியின் மீது அவர்களை மணம்புரிந்து, அவர்கள் சோர நாயகரை சேராமலும் வியபிசாரஞ் செய்யாமலும் கற்புடையவர்களாகவும் இருப்பின், அவர்களுக்குக் கிரமமான ஸ்திரீதனம் (மஹர்) அளியுங்கள்: மேலும் அவர்களை மணம்புரிந்ததக்கால் அவர்கள் ஒழுங்கீனமான குற்றம்புரியின், சுயேச்சை பெற்ற மாதர்க்குரிய தண்டனையில் அரைப் பங்கு அவர்கள் பெறுவார்கள்: இது உங்களுக்குள் தீமையில் வீழ்தலை அஞ்சுவோரின் பொருட்டாக விருக்கும்; மேலும் நீங்கள் விலகிக் கொள்வீர் களாயின், (அது) உங்களுக்கு நலமாகும்: மேலும் அல்லாஹ் (பாபத்தை) மன்னிப்பவனாக(வும்) அன்புடையவனாக(வும்) இருக்கின்றான்” – (4:25).

இனி, பனூமுஸ்தலிக் வர்க்கத்தினரான மாதர்களைப் பொறுத்த மட்டில் எத்தகைய விடுதலைக் கிரயமும் வேண்டப்படாமல் அவர்கள் யாவரும் விடுதலை செய்யப் பெற்றார்கள் என்பதற்கு எல்லா ஹதீது நூல்களிலும் மிகவும் தெளிவான சரித்திரச் சாட்சியங்கள் காணப்படுகின்றன; என்னெனின், அவர்களுள் ஒருவராகிய ஜுவைரிய்யா (ரலி) அம்மையார் விடுதலை பெற்று நபிகள் பெருமான் அவர்களது வாழ்க்கைத் துணைவியராகும் பாக்கியம் பெற்றார்கள்.

மேலே கூறிப்போந்த நியாயங்களால் எம்பெருமான் முஹம்மது (சல்) அவர்கள்மீது அயல் மதவாதிகள் சுமத்துவனயாவும் ஆதாரமற்ற வீண்பழிகளே என்னும் உண்மை பெறப்படும். “காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சளே” என்றும், “தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவாம்” என்றும் ஆன்றோர் கூறிச் சென்ற முதுமொழிகளுக் கிணங்க, பொறாமைக் குணம் படைத்த கிறிஸ்தவர் சிலர் இஸ்லாத்தின் மீதும் மானிடவர்க்கத்திற்கு நிகரற்ற மஹோபகாரியாய்த் தோன்றிய நபிகள் பெருமான் மீதும் வீண்பழி சுமத்துவதையே தமது மதப் பிரசாரமாய்க் கொண்டிருக்கின்றனர். இனியேனும் இவர்கள் உண்மை தெளிந்தடங்குவார்களென யாம் நினைக்கிறொம்.

-மௌ. முஹம்மதலீ

தோழன்

கொழும்பிலிருந்து வெளியாகும் இம் மாதப் பத்தரிகையின் அக்டோபர் இதழ் வரப்பெற்றோம். “கதிர்” என்னும் மாத வெளியீட்டின் ஆசிரியராயிருந்த ஜனாப் நூர் முஹம்மது என்பவர் இப்போது இத்“தோழனின்” ஆசிரியரா யிருக்கிறார். கிரவுன் 1×4 சைஸில் 4 அணா விலையில் அழகாக அச்சிடப்பட்டு வெளிவருகிறது. வருஷ சந்தா ரூ. 3. நல்ல கட்டுரைகளும் இதில் அடங்கியுள்ளன. சரித்திர ஆராய்ச்சி செய்து, முற்காலத்தில் முஸ்லிம்கள் உலகின் பல பாகங்களில் ஆட்சி செலுத்துகையில் சிறுபான்மையோருக்கு எங்ஙனம் நீதி செலுத்தி உரிமையைக் காப்பாற்றின ரென்னும் உண்மைகளைத் திரட்டித்தரும் கட்டுரையாகிய “இஸ்லாமிய ஆட்சியில் மைனாரிட்டிகள் நடத்தப்பட்ட விதம்” என்னும் வியாசத்தைப் புரபெஸர் எஸ்.ஏ. ஜாப்ரி எம்.ஏ. “டான்“ பத்தரிகையில் வரைந்துள்ளார். இதை யாவரும், குறிப்பாக விஷமப் பிரசாரம் புரிவோர் படித்துப் பார்க்கவேண்டும். இவ்வியாசம் தமிழில் பிழையின்றி நன்கு மொழி பெயர்த்துப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


தாருல் இஸ்லாம், நவம்பர் 1947
பக்கம்: 47-48

Related Articles

Leave a Comment