வியபிசாரத்தில் ஆணும் பெண்ணும் சரிசரிக் குற்றவாளிகளே

“சேற்றைக் கண்டால் மிதிப்பான்; தண்ணீரைக் கண்டால் கழுவுவான்; அவனுக்கென்னடி?” என்பதொரு தமிழ்நாட்டுப் பழமொழி; இதன் கருத்து, ஆண்மகனொருவன் கண்ட கண்ட பெண்களுடனெல்லாம் கள்ளப்புணர்ச்சி செய்வான், அப்பால் எல்லாவற்றையும் தொலைத்துத் தலை முழுகிவிட்டு, நல்ல மனிதனேபோல் நடிக்கலாம், என்பதாயிருக்கிறது. வியபிசாரமென்பது சமுதாய மக்களின் சத்தொழுக்குக்குப் பெரியதோர் இழுக்கை விளைக்கக் கூடியதாயிருக்கிறதென்னும் உண்மையை அனைவரும் அங்கீகரிப்பர்; ஆனாலும், ஆண்கள் புரியும் வியபிசாரம் – “ஜினா” – சர்வசாதாரணமாயே இக்குவலய மக்களால் மதிக்கப்பட்டு வருகிறது. பொதுப்படையாய் நோக்குமிடத்து, பெண்கள் புரியும் வியபிசாரமே மாபெருங் குற்றமெனக் கருதப்படுகிறது. “மாமியார் உடைத்தால் மட்குடம், மருமகள் உடைத்தால் பொற்குடம்” என்னுமா போன்று, பெண்கள் “ஜினாவே” பெரியதோர் இழுக்காம்; ஆனால், ஆண்கள் “ஜினா” அத்துணைப் பெரிய குற்றமுள்ள செய்கையன்றென்றே கொள்ளக் கிடப்பது வெள்ளிடை விலங்கலேயாம்.

ஆயின், இஸ்லாம், கள்ளப் புணர்ச்சியை – “ஜினா”வை – ஆண்பெண் இரு பாலாருள் எவர் புரிந்தாலும் மாபெருங் குற்றமென்றே இயம்பி விட்டிருக்கிறது. “ஜினா“ வென்னும் வியபிசாரக் குற்றத்திற்கு நூறடி தோற் சாட்டையால் பீஷ்டத்தில் கொடுக்குமாறு குர்ஆன் மஜீத் கூறிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு பீஷ்டத்தில் நூறடி கொடுப்பதிலே ஆணும் பெண்ணும் சரிசரிக் குற்றவாளிகளாகவே கருதப்படுகிறார்கள். வியபிசாரக் குற்றத்துக்கு ஆண் அல்லது பெண்ணென்ற வேறுபாடு காணப்படாததேபோல் பணக்காரர் ஏழையென்ற வித்தியாசமும் இஸ்லாத்தில் கிஞ்சித்தும் பாராட்டப் படுவது அறவே கிடையாது. “பணக்கார வியபிசாரி பந்தியிலே, ஏழை வியபிசாரி சந்தியேல,” என்னும் பழமொழிக்கு இஸ்லாத்தில் இடமேயில்லை என்றறிக.

இந்நவ நாகரிக(?) உலகினில் வியபிசாரம் ஒரு சர்வசாராணக் குற்றமென்றே மதிக்கப்பட்டு வருவதனாலேதான் இக்குவலய முழுதும் இதுகாலை “ஜினா” வென்பது முகடு முட்டிப்போய்க் கிடக்கிறது. மக்களின் ஒழுக்கத்தை இழுக்கடையச் செய்வது இந்த “ஜினா”வாகவே இருந்து வருகிறது. பொதுவாக மேனாடுகளிலும், அவற்றைப் பின்பற்றியொழுகும் கீணாடுகளிலும் இது காலை வியபிசாரமென்பது சர்வதாராளமாயே துணிவுடன் புரியப்பட்டுவருகிறது. இஸ்லாமிய சட்டப்படி முஸ்லிம் வியபிசாரகர்களுங்கூடத் தண்டிக்கப்படுவது இது பொழுது கிடையாது; இக்காலச் சீர்கேடான, தலைகீழ் வாழ்க்கையில் வியபிசாரக் குற்றம் ஒரு பெரிய ஒழுக்க இழுக்குக் காரண பூதமென்று சமுதாயமும் தீர்ப்புக் கூறாது, பராமுகமாகவேயிருந்து வேடிக்கை பார்த்து வருகிறது. இன்னம், இக்கால உலகாயத, நாத்திக உலகினில் “கடவுளாவது கத்தரிக்காயாவது?” என்றும், “சமுதாயமாவது, கிமுதாயமாவது?” என்றும் வினவத் துணிந்து விட்டனர், அநேகமாய் எல்லாரும். இற்றை நாளுலகில் வயிறு வளர்ப்பதொன்றே இகலோக வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாயிருக்கிறது; எனவேதான், இக்கால மக்கள் ஒழுக்கத்தைப் பற்றி ஒரு சிறிதும் கவலை கொள்ளாது, உண்ணவும், உடுக்கவும், உறங்கவுமே பற்றாது, பற்றாது, பற்றாதெனப் பதைபதைத்துப் புழுவாய்த் துடிக்கின்றனர். இக்காரணத்தினாலேயே மேனாட்டு நாரிமணிகள் ஓரிரவு படுக்கைக்காகவும், போஜனத்துக்காகவும் ஒரு சில அணாக்களுக்காகத் தங்கள் கற்பை விற்று வருகிறார்கள். அம்மேனாடுகளில் பொருளாதார நிபுணர்கள் பொது மக்களின் வயிற்றுப் பசிக்குக் கால வயிற்றுக் கஞ்சிக்கு வழி செய்தால், போதுமென்றெண்ணுகிறார்கள்; ஆங்குள்ள தத்துவ ஞானிகள் அம்மக்களின் ஒழுக்கத்தை எவ்வாறு விழுப்பமடையச் செய்வதென் ஒரு வழியும் புலப்படாது திகைத்து நிற்கின்றனர்.

இஸ்லாம் மார்க்கமோ, ஆத்ம சுகிர்தத்தையே முதன்மையாய்க் கருதி, ஒழுக்கத்தையும் ஒழுங்கு செய்து வைப்பதாயிருக்கிறது. இதற்கு வேண்டிய உபகரணங்களாகவே இம்மார்க்கம் உண்டியையும் உடையையும் உறையுளையும் மதித்திருக்கிறது; அஃதாவது, உயிர் இருப்பதற்கு ஒருவனுக்கு எவ்வளவு அவசிய ஆகாரமும், உடுத்தாடையும், வசிப்பதற்கொரு நிழலும் தேவையோ அவ்வளவே ஒரு முஸ்லிமுக்குப் போதும். ஆயின், ஒழுக்கமும், ஆத்ம முன்னேற்றமுமே முதன்மையானவையாய் இருக்கின்றன. ஆதலினால்தான் பெண்மணிகளின் கற்பை – ஏன், ஆண்களின் கற்பைக்கூடத்தான் – இஸ்லாம் ஒரு விலை வரம்பிகந்த சிரோமணியென மதித்திருக்கிறது. எனவேதான் இவ்வரிய சிரோமணியைப் பழுதுபடுத்தினால், அவ்வாண்பெண் இருவருக்குமே சரிசரியான சிக்ஷையை விதிக்கிறது. இவ்வாறு நூறு நூறு தோற் கசையடி, பகிரங்க ஸ்தலத்தில் அந்த “ஜானி”களை நிறுத்தி அவர்களுடைய பீஷ்டத்தில் கொடுத்தால், ஒரே வாரத்தில் இப்பாருலகிலுள்ள வியபிசாரமனைத்தும் அழிந்தொழிந்து போய் விட மாட்டாவா?

இந் நவீன நாகரிக(?) உலகிலே “ஜினா”வென்பது “ஜாடை”யாகவே, கண்டுங் காணாதுபோல், விடப்பட்டு வருவதனாலேதான் இவ்வுலகினில் வியபிசாரம் இத்துணை மட்டும் மலிந்து காணப்படுகிறது. குர்ஆன் சட்டம் அமலில் இருந்து வரும் இப்னுசுஊத் அரசாங்கத்தில் “ஜினா“ வென்பது அறவே கிடையாது. இது காலை ஒருவன் ஒரு பத்து ரூபாய்ச் செலவில் ஓர் அரபிப் பெண்ணை மணந்துகொள்ளக்கூடும். ஆனால், ஆயிரம் ரூபாய்க்கு அவளை வியபிசாரத்துக்கு வரிப்பது முடியாது. ஏன்? நூறு சவுக்கடி, பகிரங்க ஸ்தலத்தில்; அதுவும் ஒற்றையாடையுடன் கூடிய பீஷ்டத்திலே, இப்படிப்பட்ட கடின சிக்ஷைக்குமுன்னே “ஜினா” வென்பது சொல்லிக்கொள்ளாமலே ஓடி விடாதா? கடின வியாதிக்குக் கடுமையான பரிகாரமே செய்ய வேண்டும். இப்பாருலகம் இம்முறையைச் செய்யத் துணியுமா? கசையடியை அநாகரிகமென்று கத்தும். (A drastic disease requires a drastic remedy).

-பா. தாவூத்ஷா


தாருல் இஸ்லாம், ஆகஸ்டு 1953
பக்கம்: 23, 28

Related Articles

Leave a Comment