பிலிப்பைன்ஸ் நகர வீதிகளில் ‘டொப், டொப்’ என்று சரமாரியான துப்பாக்கி சப்தம். ‘தொப், தொப்’ என்று வீதியெங்கும் விழும் சடலங்கள். ஏதோ கேங்ஸ்டர் சினிமா படத்தின் சண்டைக் காட்சிகளின் ஷுட்டிங்கோ என்று பார்த்தால் நிசமான துப்பாக்கி! நிசமான ஷுட்டிங்! நிசமான சடலங்கள்!
‘ரோத்ரிகோ வந்துட்டேன்னு சொல்லு’ என்று பிலிப்பைன்ஸைத் தெறிக்க விட்டிருக்கிறார் ரோத்ரிகோ. அப்பேற்பட்ட ‘தாதாவா’ ரோத்ரிகோ என்று விசாரித்தால், ‘வாயைக் கழுவு. அவர் பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி’ என்கிறார்கள்!
ரோத்ரிகோ துதெர்தெ (Rodrigo_Duterte) பிலிப்பைன்ஸ் நாட்டின் 16ஆவது ஜனாதிபதியாக ஜுன் 30, 2016இல் பதவியேற்றார். அதற்குமுன் தாவோ (Davao City) எனும் நகரில் ஏழு முறை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 22 ஆண்டுகள் மேயராகப் பணிபுரிந்த பழுத்த, செல்வாக்குகள்ள அரசியல்வாதி ரோத்ரிகோ. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் திக்குமுக்காடும் அளவிற்கு மக்களின் ஆதரவு கிட்டி, தமக்கு அடுத்து நிலையில் இருந்த வேட்பாளரைவிட 66 இலட்சம் வாக்குகள் அதிகம் பெற்று, அவருக்கு அமோக வெற்றி.
பதவியேற்ற கையுடன், கோப்புகளில் கையெழுத்திட்டாரோ, இல்லையோ, காவலர்களை அழைத்து, ‘போட்டுத் தள்ளுங்கள் அவர்களை! சுட்டுக் கொல்லுங்கள் நாய்களை’ என்ற உத்தரவிட்டுவிட்டார். அவர்களும், ‘அப்படியே ஆகட்டும்’ என்று உத்தரவுக்குக் கீழ்படிந்து ஒரே மாதத்தில் 465 நபர்களைச் சுட்டுத் தள்ளியுள்ளார்கள்.
‘என்ன கொடுமை இது? நாடா இல்லை சுடுகாடா?’ என்ற பதட்டமான கேள்விகளுக்குப் பின்னே பெரிய வலைப் பின்னல் விளக்கமே இருக்கிறது.
போதை மருந்து வியாபாரம் பிலிப்பைன்ஸில் மிகப் பெரிய புற்று நோய். இந்தப் பிரச்சினை இல்லாத நாடே இல்லை என்ற போதிலும் இவ் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும் நாடுகளுள் பிலிப்பைன்ஸும் ஒன்று. தலைமுறையையே அழித்து நாட்டின் தலைவிதியையே நாசமாக்கும் இந்தப் பழக்கத்தையும் தொழிலையும் எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தேர்தல் களத்தில் குதித்தார் ரோத்ரிகோ. தம்முடைய தேர்தல் பிரச்சாரத்தின்போதே இதை அவர் தெளிவாகத் தெரிவித்துவிட்டார். அது வெற்று தேர்தல் வாக்குறுதி போலன்றி, இப்பொழுது அவரது வெற்றிக்குப் பிறகு அந்த வாக்குறுதி எழுத்துக்கு எழுத்து உண்மை என்பதை மக்கள் வெறிக்க வெறிக்க வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
போதை மருந்து வியாபாரிகள், ஏஜென்ட்டுகள், போதை மருந்தை பாவிப்பவர்கள் என்று தேடித் தேடி சுட ஆரம்பித்துள்ளது பிலிப்பைன்ஸ் காவல்துறை. பிடித்தோம், சுட்டோம் என்று வெறும் செய்தியாக அறிவிக்காமல், கை கால்களைக் கட்டி, டேப்பால் வாயை ஒட்டி, ரத்தம் தோய்ந்த சட்டைகளுடன், கொல்லப்பட்டவர்களின் குற்றங்களை அறிவிக்கும் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு கிடக்கும் சடலங்களின் படங்களை வெளியிடுகிறார்கள். அவை பன்னாட்டு ஊடகங்களில் பரவிக்கிடக்கின்றன.
‘என்னுடைய ஆட்சியில் குற்றங்களுக்கு முடிவு கட்டுவேன்; அதற்கான போலீஸின் நடவடிக்கையை நான் எதிர்க்க மாட்டேன்’ என்று தம்முடைய நடவடிக்கைகளை முன்னறிவிப்பு செய்துவிட்டுத்தான் களத்தில் இறங்கினார் ரோத்ரிகோ. விஷயம் அது மட்டுமில்லை. இத்தகு அதிரடி நடவடிக்கைகளைக் காவல்துறை மட்டும்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. தப்பைத் தட்டிக் கேட்க வேண்டும் என்ற நாட்டமுடையவனா நீ? வா! வந்து சுட்டுத்தள்ளு என்று நல்லொழுக்க சிட்டிசன்களுக்கும் லைசென்ஸ் அளித்துவிட்டார் அவர். தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, “குற்றவாளி உங்களைக் கொல்வதற்குச் சண்டையிட்டால் நீங்கள் அவனைக் கொல்லலாம். முடிந்தால் போலீஸை அழையுங்கள். அல்லது உங்களிடம் துப்பாக்கி இருக்கிறதா, நீங்களே சுட்டுத் தள்ளுங்கள். உங்களுக்கு என் முழு ஆதரவு” என்று சொல்லிவிட்டார்.
போதாது? தீபாவளி பட்டாசுபோல் துப்பாக்கி வெடித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் இப்படியான தடாலடி நடவடிக்கைகளால் அப்பாவிகளும் கொல்லப்படுகிறார்கள் என்று பெரும் ஆட்சேபனையும் கூக்குரலும் எழுந்துள்ளன. போதை மருந்து ஏஜெண்ட் என்று பொதுமக்களுள் ஒருவனைச் சுட்டுக் கொன்றுள்ளார்கள். ‘அவர் அப்பாவி. ரிக் ஷா ஓட்டிப் பிழைப்பவர்’ என்று அந்த இறந்தவரின் சடலத்தை மடியில் கிடத்தி கதறி அழும் அவன் பெண் நண்பியின் படமும் இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது.
அதைப்பற்றி ரோத்ரிகோ அலட்டிக் கொள்ளவே இல்லை. மாறாக, ‘இதைக் குற்றவாளிகள் ஓர் எச்சரிக்கையாகக் கருத வேண்டும். இப்படியெல்லாம் அநியாயமாக நீ சாகக்கூடாது என்று விரும்பினால் பாதிரிகளிடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் நம்பிக்கை வைக்காதே. அவர்களால் உன் சாவைத் தடுக்க முடியாது. மரியாதையாக வந்து சரணடைந்துவிடு. உயிர் பிழைப்பாய்’ என்று சொல்லிவிட்டார்.
தம்முடைய தேர்தல் பரப்புரையில் தாம் மக்களுக்கு அளித்த பாதுகாப்பு உணர்வின் காரணத்தால்தான் இத்தகைய அமோக வெற்றியைச் சந்தித்தேன் என்கிறார் அவர். ‘உங்களது நடவடிக்கைகளை இரட்டிப்பாக்குங்கள். மும்மடங்காக்குங்கள். போதை வியாபாரி, அவர்களது பண வினியோகஸ்தன், ஏஜெண்ட் ஆகியோரில் கடைசி ஒருவன் வரை சரணடைந்தோ, கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டோ, பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டோ முடியும்வரை உங்களது ஆட்டத்தை நிறுத்தாதீர்கள்,’ என்று ஜுலை 25 அன்று அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
முறையான விசாரனையின்றிக் கொடுங்கோல் பாணியில் நிகழும் கொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மனித உரிமை அமைப்புகளிடம், ‘எமது நிர்வாகம் சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலைகளுக்கு எதிரானதே’ என்று சம்பிரதாயமான மறுப்பு அறிவிப்பை மட்டும் அளித்துவிடுகிறார்கள்.
“இது நெருக்கடியோ, இக்கட்டோ அல்ல. அவர்கள்மீது அரசாங்கம் தொடுத்துள்ள போர்! இந்தக் குற்றவாளிகள் ஏன் உயிர் வாழ வேண்டும்?” என்பது ரோத்ரிகோவின் கேள்வி.
போதைப் பழக்கம் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள நாசத்தைக் கண்டு, தாம் மேயராக இருந்த காலத்திலேயே, மிகவும் கோபத்துடனும் ஆத்திரத்துடனும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தெருவில் திரியும் லோக்கல் வியாபாரிகளைக் களைவதில் மட்டும் அரசாங்கம் ஈடுபடவில்லை. அதன் ஆணிவேரான முதலைகளைப் பிடிப்பதில் படு தீவிரமாக இருக்கிறது. ‘எங்களது அரசாங்கம் போதை மருந்துகளின் நாசத்திலிருந்து மக்களைக் காப்பாற்றச் செயல்படுகிறது. அதில் ஈடுபடும் குற்றவாளி எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் சரி. அவன் காலி’ என்று ரோத்ரிகோ அறிவித்துள்ளார்.
இவன் என் மாமா, அவன் என் மச்சினன் போன்ற அரசியல் செல்வாக்கெல்லாம் ரோத்ரிகோவிடம் செல்லுபடி ஆவதில்லை. அல்புரா (Albuera) என்ற நகரின் மேயர் ரோலண்டோ எஸ்பினோசா (Rolando Espinosa Sr.). இவருடைய மகன்தான் அந் நகரின் போதை மருந்து சப்ளை மன்னன். போலீஸ் ரகசியமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு மேயரின் ஐந்து பாதுகாவலர்களையும் ஊழியர்களையும் கைது செய்துவிட்டு, மேயருக்கும் அவருடைய மகனுக்கும் ‘நீங்கள் சரணடைய 24 மணி நேரம் கெடு. இல்லையா, கண்ட இடத்தில் சுட்டுக் கொல்வோம்’ என்று அறிவித்தது.
அலறி அடித்துக்கொண்டு அடுத்த நாளே சரணடைந்தார் மேயர். ஆனால் அவருடைய மகன் இன்னும் அகப்படவில்லை. இதனிடையே மேயரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு கிளப்பிப் பார்த்திருக்கிறார்கள். போலீஸுக்கும் அவர்களுக்கும் அங்கொரு துப்பாக்கிச் சண்டை நடந்து ஆறு பேரைக் கொன்று சண்டையை முடித்துள்ளார்கள். செய்தியாளர்களை அழைத்து, அவர்களுக்கு அளிக்கும் பேட்டியின் மூலமாக மேயரின் மகனுக்கு தகவல் அளித்துள்ளது போலீஸ். “உன் தந்தை சரணடைந்துவிட்டார். நீயும் சரணடைந்துவிடு கெர்வின். இல்லையென்றால் நீ சாக நேரிடும்.”
கொத்துக் கொத்தாகக் கொன்று குவிப்பதால் என்ன பயன்? போதை மருந்துக்கு அடிமையானவர்கள் திருந்திவிடுவார்களா என்ற கேள்வி தோன்றுமில்லையா? இதுவரை இலட்சம் பேர் போலீஸிடம் சரணடைந்து, தாங்கள் இனி போதை மருந்து பயன்படுத்தப் போவதில்லை என்று சபதம் செய்துள்ளனர் என்கிறது போலீஸ். அந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதிரடி என்ற பெயரில் இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் கொலைகளை மனித உரிமை அமைப்புகளும் மற்றவர்களும் ஐ.நா போன்ற அமைப்பிடம் முறையிட்டால் என்னாவது? ம்ஹும்! அதற்கெல்லாம் அவர் அஞ்சுவதாக இல்லை. கெட்ட வார்த்தையில் ஆங்கிலத்தில் ஐ.நா. வைத் திட்டி, ‘மத்திய கிழக்கில் நிகழும் படுகொலையைத் தடுக்க அவர்களுக்கு வக்கில்லை; ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்கள் வெட்டப்படுவதைத் தடுப்பதற்கு ஒரு விரலைக் கூட உயர்த்தத் துப்பில்லை. அவர்களை வாயைப் பொத்திக் கொண்டு போகச் செல்லுங்கள்’ என்று ஒரு பேட்டியில் காறித் துப்பியிருந்தார். இதனிடையே, அமெரிக்காவும் ஐ.நா. வின் மனித உரிமை அமைப்பும் சட்ட நடவடிக்கை இன்றி பிலிப்பைன்ஸ் அரசாங்கம் போதை மருந்து குற்றவாளிகளைக் கொல்வதை நிறுத்த வேண்டும் என்று கடுமையாக வற்புறத்த, கோபம் பொத்துக் கொண்டது ரோத்ரிகோவுக்கு. நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் பத்திரிகையாளர்களை அழைத்து சுடச்சுட பேட்டியளித்தார்.
‘அமெரிக்க போலீஸ் கறுப்பர்களைத் தன்னிஷ்டத்திற்குச் சுட்டுக் கொல்கிறது. அவையெல்லாம் அவர்களுக்கு மனித உயிர்கள் இல்லையா?’ என்று அமெரிக்காவைத் திட்டியவர், சிரியாவில் வான்வெளித் தாக்குதலில் சிதிலமடைந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு உறைந்துபோய் ஆம்புலன்ஸில் அமர்ந்திருக்கும் சிறுவன் உம்ரான் தக்னீஷின் புகைப்படத்தைக் காட்டி, ‘இதையெல்லாம் தடுத்துக் கிழிக்க அமெரிக்காவுக்கும் ஐ. நா. வுக்கும் வக்கில்லை. அநியாயமாகக் கொல்லப்பட்டுக் கிடக்கும் அந்தப் பிணங்களின் நாற்றத்தைப் பற்றி அந்த அமைப்புகளில் இருக்கும் எவனாவது பேசினானா? தலையிட்டானா? அந்த ***மகன்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நம் நாட்டுப் பணிகளில் அவர்கள் தலையிடுவதாக இருந்தால் ஐ. நா. விலிருந்து பிலிப்பைன்ஸ் விலகும்’ என்றும் அறிவித்துவிட்டார்.
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் போன்ற இந்த நடவடிக்கைகள் நாட்டைச் சுத்தம் செய்யுமா, சுடுகாடாக்குமா? என்ற கேள்விக்கு அவரது முந்தைய பதவியில் பதில் ஒளிந்துள்ளதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. தாவோ நகரின் மேயராக அவர் 22 ஆண்டுகாலம் பதவி வகித்தாரில்லையா? அந்தத் தாவோ நகரம் ஒரு காலத்தில் குற்றங்களின் தலைநகரம். அந்த நகரிலும் சர்ச்சைக்குரிய தமது அதிரடி நடவடிக்கையைப் பிரயோகித்திருக்கிறார் மேயர் ரோட்ரிகோ. 1995 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆண்டுக்குள் குற்றங்களின் எண்ணிக்கையை அடிமட்டத்திற்குக் கொண்டுவந்து, தென்கிழக்கு ஆசியாவிலேயே தாவோ மிகவும் அமைதியான நகரம் என்று பெயர் பெற்றுவிட்டது. அதனால், “The Punisher” என்ற பெயரில் வெளியான ஆங்கிலப் படத்தின் டைட்டிலை அவருக்குச் செல்லப் பெயராக ஆக்கியது The Times பத்திரிகை.
இப்படியான ரோட்ரிகோவின் செயல்பாடுகள் அதிரடியா, அராஜகமா, சர்வாதிகாரமா என்ற விவாதம் ஒருபுறம் இருக்கட்டும். ‘அவர்களைச் சுடாதீர்கள்; என்னை வேண்டுமானால் சுடுங்கள்’ என்று குற்றவாளிகளிடம் மண்டியிடுவதுபோல் பாசாங்கு செய்யும் நம் நாட்டுப் பிரதமரின் பேச்சு வீரமா, பசப்பு வசனமா?
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம்-ல் 04 செப்டம்பர் 2016 வெளியான கட்டுரை