நூன்முகம்

by பா. தாவூத்ஷா

அன்பின் மிக்க பெரியீர்! ஒவ்வொரு வாரமும், இல்லை, இரண்டு பெருநாட்களிலும் ஓதும் குத்பாக்கள், முஸ்லிம் வர்க்கத்தினர்பால் மேன்மேலும் புத்துணர்ச்சியை உண்டு பண்ணிக்கொண்டு செல்லவேண்டுமென்னும் கருத்துக் கொண்டே நிர்மாணம் செய்யப்பட்டன. ஆனால், ஒவ்வொரு மனிதனுக்கும்

தனித்தனியே இவ்வுணர்ச்சியை உண்டு பண்ணுவது சாத்தியமாகாது என்பதற்காகவே இவ்வித குத்பாக்கள் பொதுக் கூட்டங்களுக்கென ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இந்த குத்பாக்களெல்லாம் அனேகமாய் இவ் விந்தியாவின்கண் பொதுமக்கள் விளங்கிக்கொள்ள முடியாத அன்னிய அரபுமொழியிலேயே ஓதப்பட்டு வருகின்றன. இதுவுமல்லாமல், இந்த குத்பாக்கள், சமீப சில காலத்துக்குமுன் ஒரு சில பாலார்களால் வரைந்து அச்சியற்றப்பட்டனவாய்க் காணக்கிடக்கின்றன. இதன் பயனாய் இக் காலத்தில் நம் முஸ்லிம் நேயர்களுக்கு எடுத்து ஒதவேண்டிய அனேக விஷயங்களெல்லாம் சொல்ல முடியாதவாறு அடிபட்டுப் போகின்றன.

உண்மையைக் கவனிக்குமிடத்து, இம்மாதிரியான குத்பாக்களெல்லாம் வெறும் சம்பிரதாயத்துக்காகவேதான் ஓதப்பட்டு வருகின்றனவென்று கொள்ள வேண்டியதாய்க் காணப்படுகின்றன. இதற்குத் தோதாய்ச் சில பெரிய மனிதர்கள் எனப்படுபவர்கள் இந்த ஜுமுஆவுக்குப் போய் ஒன்றும் பிரயோஜனம் பெறப் போவதில்லையென்னும் பாவனையாய் ஜுமுஆவுக்கே வராமல் இருந்து விடுகின்றனர். ஆனால், இப்படிப்பட்ட இவர்கள் பெருநாட்களான இருநாளைக்கு மாத்திரம் ‘உலகத்தோடொட்ட ஒழுகென்று’ கூறப்படும் முதுமொழிக்கொப்ப வந்து சேர்ந்து விடுகின்றனர். இப்படியான நாட்களிலும் சிலர் வராமலே இருக்கின்றனர் என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டியதின்று.

இஃது ஒருபக்கல் கிடக்க. எம்பிரான் (ஸல்) அவர்கள் தொழுகையை ஜமாஅத்துடன் தொழவேண்டுமென்று ஏற்பாடு செய்து, தாங்களே அந்த இமாமத்தையும் செய்துகொண்டு வந்தார்களென்பதை நீங்கள் நன்குணர்ந்து கொண்டிருக்கின்றீர்கள். பிறகு இந்த இமாமத்தென்னும் வேலையைச் சகல மனிதர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அப்படிப்பட்ட பெரிய மனிதர்களுக்கே கொடுத்துச் சென்றார்கள். இதன் கருத்து என்னவெனின், இமாமென்பவர் தம்மைப் பின்பற்றித் தொழும் மனிதர்களுக்கு நல்லுபதேசத்தைச் செவ்விய முறையில் செய்பவராய் இருக்க வேண்டுமென்பதே. இதனால்தான் பள்ளியில் கூடியிருக்கும் மனிதர்களுள், அல்லாஹ்வின் வேதத்தை நன்றாக ஒதுபவர், அவர்கள் ஓதுவதில் சமமாக இருந்தால் நபிவழியை நன்றாக அறிந்தவர், அதிலும் அவர்கள் சமமாக இருந்தால் முதலில் ஹிஜ்ரத் செய்தவர், அதிலும் சமமாக இருந்தால் இஸ்லாத்தை முதலில் ஏற்றவர் (அல்லது வயதில் மூத்தவர்) தொழ வைப்பதே நல்லதெனச் சட்டமும் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால், நமது பள்ளிவாயில்களுள் புகுந்து பார்ப்போமாயின், தொழ வைக்கக்கூடிய மனிதர்களுள் எத்தனை மனிதர்கள் நாம் மேலே சொல்லி வந்ததேபோல் இருந்து வருகின்றார்கள் என்பதை நீங்களே நன்குணர்ந்து கொள்வீர்கள். இம் மாதிரியான மேலான மனிதர்கள் இல்லையென்று எண்ணுகின்றீர்களா? இல்லை! இதற்கெல்லாம் நமது கவனக் குறைவே முதற்காரணமாய் இருக்கின்றது. மேலே குறிப்பிட்டுக் காட்டிய மனிதர்களே போலுள்ளவர்கள் இமாமத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பார்களாயின், முஸ்லிம்கள் தற்சமயம் காணப்படுவதேபோல் க்ஷீண தசைக்கு வந்திருக்கமாட்டார்கள் என்பது திண்ணம்.

இல்லை! இந்த ஒரு காரியம் மட்டுமன்று, நீங்கள் செய்யும் மார்க்க சம்பந்தமான ஒவ்வொரு காரியத்தையும் நாயகம் (ஸல்) அவர்கள் எந்நோக்கத்தைக் கொண்டு நிர்மாணம் செய்து சென்றார்களோ, அதனை ஒரு சிறிதேனும் ஆராய்ச்சி செய்து அதன்படி செய்துவரத் தலைப்பட்டிருப்பீர்களாயின், அன்னிய நாட்டு அரசர்கள் முஸ்லிம்களாகிய நம்மீது ஆதிக்கம் செலுத்தும் சந்தர்ப்பமே ஏற்பட்டிராது என்றெண்ணலாம். ஆனால், என்ன செய்வது? ஒவ்வொரு காரியத்தையும் நாம் கவனித்து அதன் தத்துவங்களை உள்ளபடி உணர்ந்து கொள்வதை விட்டுவிட்டோம்!

குர்ஆனின் போதனை ஒருபக்கம் இருக்கிறதென்றால், அதன் கருத்தை உணர்ந்துகொள்ளாத காரணத்தால் நாம் மற்றொரு பக்கம் சென்று கொண்டிருக்கின்றோம். அன்றியும் நமது முஸ்லிம்களாய முன்னோர்கள் மற்ற வகுப்பார்களுக்கு ஒரு முன்மாதிரியாய் நின்று திகழ்ந்ததை எல்லாம் நாம் மறந்து, அன்னிய மதத்தவர்களையே இதுசமயம் நமக்கு முன்மாதிரியாய்க் கொண்டு நடக்க எத்தனித்துவிட்டோம். இவ்விஷயங்களைச் சிறிது ஆழ்ந்து கவனிக்கும்போது, நாம் வெட்கித் தலைகுனியாமல் இருப்பதற்கில்லை.

இஸ்லாமல்லவோ ஆண்டவனுக்குப் பொருத்தமான மார்க்கம்! நாமல்லவோ இவ்வகிலத்தார்க்கு முன்மாதிரியானவர்கள்!

எனவே, முஸ்லிம் நேயர்காள்! இனியேனும் நமது மார்க்கச் சட்டங்களின் நுண்ணிய நுட்பங்களைக் கண்டு முன்னோர்களான பெரியார்கள் சென்ற மேலான பாதையில் சீராக நடந்து செல்ல முன்வர மாட்டீர்களா? இஸ்லாமல்லவோ ஆண்டவனுக்குப் பொருத்தமான மார்க்கம்! நாமல்லவோ இவ்வகிலத்தார்க்கு முன்மாதிரியானவர்கள்! ஏனோ இதைக் கவனிக்கின்றீர்களில்லை!

நண்பீர்! நான் இதுகாறும் சொல்லிக்கொண்டு வந்ததிலிருந்து, இக்காலத்துக்குப் பொருத்தமான முறையில் ஒரு குத்பாவை எழுதி எடுத்தோதிவிட்டால், அதுவே போதுமானதென்று சொல்வதாய் எண்ணிவிடற்க. இதுவும் ஒரு சிறு காலத்துக்குள் பயனற்றதே போல்தான் நின்று விடும். ஒவ்வொரு ஜுமுஆவின் போதும் என்ன விஷயத்தைப் பொதுமக்களான எமது முஸ்லிம் நேயர்களுக்கு எடுத்தோத வேண்டுமோ, அதை குத்பா ஓதும் கதீப் அவர்களின் நாவினாலேயே சொல்ல வேண்டும். இதுதான் மனிதர்களுக்கு உண்மையில் பயன் அளிக்கக்கூடியதாகவும் மானிடர்களுக்குள் உணர்ச்சியை உண்டுபண்ணக் கூடியதாகவும் இருக்கின்றது. இவ்வளவு சக்திவாய்ந்த மனிதர்களை இமாமத்துக்கு ஏற்பாடு செய்து விடுவீர்களாயின், நீங்களே வெற்றி பெற்றவர்கள்.

ஆனால், இது சர்வ சாதாரணமாய் உண்டாய்விடும் என்றெண்ண வேண்டாம்; இதற்கு நுங்களின் முயற்சியே முக்கியமாக வேண்டற்பாலதாய் இருக்கின்றது. எனினும், இவ்வித ஒருவகைப் புத்துணர்ச்சி உண்டாக வேண்டுமென்ற நன்னோக்கத்தைக் கொண்டே இந்தத் தமிழ் “குத்பா பிரசங்கம்” என்னும் ஒரு சிறிய நூல் எழுதி வெளியிடப்பட்டிருக்கின்றது. இதில் சொல்லப்படும் கருத்துகளை நீங்கள் கவனிப்பீர்களாயின், குத்பாவின் இரகசியங்கள் இப்படிப்பட்டவையா என்பதை உணர்ந்து இன்புறுவீர்கள்.

இஃது ஒருபுறம் கிடக்க. இங்கு இன்னமுமொரு விஷயத்தை அவசியமாய்க் கவனிக்க வேண்டியதாய் இருக்கின்றது. இவ்வாறு அரபு அல்லாத வேறு மொழியில் குத்பாவை ஓதுவது கூடுமா? கூடாதா? என்பதை நீங்களும் உணர்ந்துகொள்ள ஆற்றலுடையவர்களாய் இருப்பீர்கள் என்று எண்ணியே இதன் தொடர்பான விஷயங்களைப் பின்னே காணுமாறு வரைகின்றேன்; கவனிப்பீர்களாக:

நமது உலமாக்களுள் இம்மாதிரியான குத்பாக்களை ஓதுவது கூடாதென்று சொல்லுபவர்கள் தங்களுக்கு ஆதாரமாய் இரண்டு காரணங்களைக் கூறி வருகின்றனர்: முதலாவது, குத்பாவை அரபு அல்லாத மொழியில் ஓதலாமென்று அனுமதி கொடுத்துவிடப்படுமாயின், ஒவ்வொரு நாட்டினரும், உதாரணமாகத் துர்க்கிஸ்தான், ஈரான், குர்திஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, ஜாவா, பர்மா, இந்தியாவின் ஒவ்வொரு கோணத்திலும் காணப்படும் மனிதர்கள் அனைவரும் தங்கள் தங்களின் தாய்மொழியிலேயே குத்பாவை ஓத எத்தனித்து விடுவர். இவ்வாறு இவர்கள் செய்வதென்றால் சிறிது காலத்துக்குள் அவ்வரபு வாக்கியங்களே இல்லாமல் மறைந்துவிடும். இதுவுமல்லாமல், நபிகள் (ஸல்) அவர்களும் அவர்களின் நேயர்களும் தாபியீன்களும் உலமாக்களும் அவுலியாக்களும் பண்டைக் காலம்தொட்டு இதுவரை அவ்வரபு மொழியிலேயே குத்பாவை ஓதிவந்திருக்கின்றனர். எனவே, நாமும் அன்னவர்களேபோல் அரபுமொழியிலேயே ஓதி அந்த மொழி அழிந்து போகா வண்ணம் காப்பாற்றிக்கொண்டு வரவேண்டும்.

இரண்டாவது, நாம் அரபு அல்லாத வேறு மொழிகளில் குத்பா ஓதுவதென்றால், அது நம் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்துக்கு விரோதமாகும். என்னெனின், அன்னவர்கள் அரபுமொழியிலேயே தங்கள் குத்பாவைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இது மட்டுமா? அரபு அல்லாத வேறு மொழிகளில் குத்பா ஓதலாமென்று சொல்லிவிட்டால், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய மனத்தில் தோன்றியதையெல்லாம் குத்பாவென்று சொல்லத் தொடங்கிவிடுவான். எனவே, இதன் பயனாய் நமது மார்க்கத்துக்கு ஒவ்வாத எவ்வளவோ வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, இவை நமது மார்க்கத்தைச் சேர்ந்தவைதாம் என்று கூறுவான். எனவே, இம்மாதிரியான கஷ்டங்கள் நமது மார்க்கத்தில் வந்து நுழைந்து கொள்ளாமலிருக்கும் பொருட்டு நமது குத்பாவை அரபுமொழியிலேயே ஓதி, சுன்னத்தின்படி நடந்துவர வேண்டும்.

எனவே, இவ்விரண்டு விஷயங்களும் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியனவாகவேதாம் காணப்படுகின்றன. ஆகையால், நான் இது சம்பந்தமாய்ச் சில விஷயங்களைச் சொல்ல வேண்டியவனாய் இருக்கின்றேன். குத்பா அரபு அல்லாத மொழிகளில் ஓதப்படுவதனால் அரபுமொழிக்கே மோசம் வந்துவிடுமெனக் கூறும் கூக்குரல் அனேக நாளாய் நடந்துகொண்டுதான் வருகின்றது. இதனால்தான் முதன் முதலாய் ஷாஹ் வலீயுல்லா அவர்களும் ஷாஹ் ரபீஉத்தீன் சாஹிப் அவர்களும் குர்ஆன் ஷரீபின் அரபு வாக்கியங்களுக்குத் தங்கள் தாய்மொழியான உர்தூவில் மொழிபெயர்த்தபோது எத்துனையோ மௌலானாக்களெல்லாம் கூடிக் கூக்குரலிட்டனர். இவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் தங்களின் மாபெருங் கைங்கரியத்தைச் செய்து முடித்துச் சென்றார்கள். எனவே அதுசமயம் வெறுக்கப்பட்ட தப்ஸீர்களானவை இதுகாலைக் “கொட்டை“ எழுத்துக்களில் விளம்பரப்படுத்தி வியாபாரம் செய்யப்பட்டு வருகின்றன.

இதனுடன் நில்லாமல், எத்தனையோ மௌலானாக்கள் இதுகாலைக் குர்ஆனின் அரபு வாக்கியத்துக்கு மாத்திரம் தங்கள் தாய்மொழியில் மொழிபெயர்ப்பதுடன் நில்லாமல், அதற்கு விரிவான வியாக்கியானங்களும் தங்கள் தாய்மொழியிலேயே வரைந்தும் வந்திருக்கின்றனர். இந்த குத்பாவின் விஷயமாய்க் குர்ஆனே போல் அவ்வளவு அழுத்தமாய்க் கண்டிக்காமல் இருப்பினும் அரபு அல்லாத வேறு மொழிகளில் குத்பா ஓதுவது சுன்னத்துக்கு விரோதமானதென்றும் இம்முறை கைக்கொள்ளப்படுமாயின், அரபுமொழிக்கே மோசம் வந்துவிடுமென்றும் பொதுமக்களின்பால் சிலர் வீண் கிளர்ச்சியை உண்டுபண்ணிக் கொண்டிருக்கின்றனர். இதுவும் இன்னமும் சில காலத்துக்குள் நில்லாமற் போய்விடுமென்பது திண்ணம்.

அரபுமொழி நம்மை விட்டு நீங்கி விடுமென்றால், அஃது எப்படி நீங்கிவிடும்? முஸ்லிம்களாகிய ஒவ்வொருவரும் தத்தம் தொழுகைக்குள் கட்டாயமாய் அரபுமொழியில் கிராஅத் ஓதியே தீரவேண்டுமென்று வற்புறுத்தப்பட்டிருக்கும்போது, குர்ஆனின் அரபு வாக்கியங்கள் நம்மைவிட்டு நீங்கிவிடவா போகின்றன? இல்லை. இதையும் விட்டுவிடுங்கள். இவ்வுலகின்கண் எத்தனையோ கோணங்களில் எண்ணத்திலடங்காத அரபு மதரஸாக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றில் கல்வி பயில்வதற்காக ஒவ்வோர் ஆண்டிலும் இலட்சக்கணக்கான அரபு படிக்கும் மாணவர்கள் தங்கள் கல்வியைப் பூர்த்தி செய்துகொண்டு, தமக்குப் பயனான பட்டங்களையும் பெற்றுக்கொண்டு வருகின்றனர். தொழுகையின் நேரங்களை அறிவிக்கும் பொருட்டு இவ்வுலகத்தின்கண் எங்கும் அரபு மொழியிலேயே பாங்கென்னும் அதான் கூப்பீடு கூவப்படுகின்றது. இதுவுமல்லாமல், குர்ஆன் ஒன்றே எக்காலத்திலும் அழியாத ஒரு பரிபூரணப் பொக்கிஷமாய் அரபுமொழியில் அமைந்திருக்கின்றது. இத்தகைய காரணங்களினாலெல்லாம் அரபுமொழி நிலை நிற்காது, இந்த குத்பாவினால்தான் நிற்குமென்று வாதாடப்படுமாயின், இது மனமுரணான வார்த்தையாகும் என்பதை நீங்களே நன்கு தெரிந்து கொள்வீர்கள்.

இரண்டாவதாக, இந்த குத்பாவை அரபுமொழியில் ஓதுவது சுன்னத்தென்பதைக் கவனிப்போம்: நாயகம் (ஸல்) அவர்கள் அரபுமொழியிலேயேதான் குத்பா ஓதிக்கொண்டிருந்தார்கள்; ஆகையினால், நீங்களும் அரபுமொழியிலேயேதான் குத்பா ஓதவேண்டுமென்று கூறுகின்றீர்கள். அப்படியானால், ‘நபிகள் (ஸல்) அவர்கள் அரபுமொழியிலேயே உரையாடிக் கொண்டிருந்ததேபோல் சுன்னத்தை நாடி நீங்கள் ஏன் அரபுமொழியில் உரையாடிக் கொண்டிருப்பதில்லை?’ என்று வினவ வேண்டியதாய் இருக்கின்றது. உரையாடுவது உலக விஷயமாகும்; உலக விஷயத்தில் எம்மொழியை உபயோகிப்பினும் குற்றமின்று. ஆனால், மார்க்க விஷயத்தில் ஓதக்கூடிய எல்லா விஷயங்களும் அரபுமொழியிலேயேதான் இருக்க வேண்டுமெனச் சொல்லப்படுமாயின், அதுவும் சரிதான். இஃது உண்யைாய் இருக்குமாயின், எத்தனையோ பட்டணங்களிலும் கிராமங்களிலும் நின்றிலங்கிக் கொண்டிருக்கும் மஸ்ஜித்களில் நமது மேன்மை பொருந்திய மௌலானாக்கள் மார்க்கம் தொடர்பான உபதேசத்தைத் தங்கள் தங்களின் தாய்மொழியிலேயே செய்துகொண்டு வருகின்றனர். ஆனல், எம்பிரான் (ஸல்) அவர்களும் அவர்களின் உண்மையான கலீஃபாக்களும் அரபுமொழியிலல்லவோ உபதேசம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்? இந்த நமது பெரியார்கள் மாத்திரம் ஏனோ சுன்னத்துக்கு விரோதமாய் மார்க்கப் பிரசங்கங்களைத தங்கள் தாய்மொழிகளில் செய்ய வேண்டும்? முதன் முதலாய் இதனை ஆட்சேபம் பண்ணி இன்னவர்கள் அரபுமொழியிலேயே தங்கள் பிரசங்கங்களையும் செய்யும்படி கட்டாயப்படுத்த வேண்டும்.

எனவே, சர்வ சாதாரணமாய்ச் சொல்லக்கூடிய உபதேசங்களிலெல்லாம் சுன்னத்தைக் கவனியாது, உர்தூவிலும் பர்மீயிலும் மலாயிலும் மலையாளத்திலும் கன்னடத்திலும் பஞ்சாபியிலும் தெலுங்கிலும் உபதேசங்களைச் செய்துகொண்டு, அவசியமாய் மனிதர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய இந்த குத்பாவின்போது செய்ய வேண்டிய உபதேசத்தை மாத்திரம் ஏனோ அரபுமொழியில்தான் ஓதவேண்டுமென்று பிடிவாதம் பண்ண வேண்டும்? எனவே, சுன்னத்திற்கும் ஃபகீஹிய்யீன்களின் கூட்டங்களின் சட்டங்களுக்கும் முரணாயில்லாத முறையில் ஹம்து சலவாத்தையும் உபதேசங் கேட்பவர்களுக்கு அவசியமில்லாத சில விஷயங்களையும் அரபுமொழியிலேயே ஓதிவிட்டு, மிகுதியிருக்கும் உபதேசங்களைத் தங்கள் தங்களின் தாய்மொழியில் சொல்லி விஷயத்தை உணரும்படி செய்ய வேண்டியதே அவசியமானதென்று எண்ணுகிறோம்.

எனவே, இந்த குத்பா சம்பந்தமாய் நாம் ஏதோ இவ்வுலக சம்பந்தமான பலனை அடைய வேண்டும் என்று எண்ணித்தான் நமது எல்லா முஸ்லிம்களையும் இவ்வாறு தூண்டுகின்றோம் என்றெண்ணி விடாதீர்கள். எப்படியேனும் எமது முஸ்லிம் நேயர்கள் முன்னுக்கு வர வேண்டுமென்பதே எமது முக்கிய விருப்பமாகும்.

இதுவுமல்லாமல் 1925-ஆம் ஆண்டு ஷஃபான் மாதம் கல்கத்தாவில் ஜம்யிய்யத்துல் உலமாவின் மகாநாடொன்று கூடிற்று. அவ்வமயம் அச்சபைக்கு மௌலானா செய்யித் சுலைமான நத்வீயவர்கள் தலைமை வகித்தார்கள் என்பதை அனேகமாய் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அதுசமயம் அவர்கள் அங்குக் கூடியிருந்த மாபெரும் மௌலானாக்களின்முன் சில விஷயங்களை எடுத்தோதினார்கள். ஆனால், அங்குக் கூடியிருந்தவர்களுள் யாரும் அதனை ஆட்சேபம் பண்ணாமல் அப்படியே ஒப்புக்கொண்டார்கள். மௌலானா அவர்கள் பிரசங்கம் பண்ணிக்கொண்டு வரும்போது சில விஷயங்களைக் குறிப்பிட்டுப் பேசினார்கள். அந்தக் குறிப்பை மாத்திரம் பின்னே தருகின்றோம். கவனிப்பீர்களாக:-

“இதே தோரணையில் குத்பாவைச் சீர்திருத்த வேண்டியதும் ஒரு முக்கியமான காரியமாகவே காணப்படுகின்றது; அஹ்லெ ஹதீஸ் உலமாக்களும் மற்றும் அனேக ஆலிம்களும் உர்தூவில் குத்பா ஓதலாமென்பதை ஒத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், இன்னமும் சில உலமாக்கள் அரபு அல்லாத மொழியில் குத்பா ஓதுவதென்றால் தயங்குகின்றனர். எனவே, உர்தூவுடன் சிறிது அரபையும் சேர்த்துக்கொண்டு ஓதுவதென்றால் யாருக்கும் விகற்பமில்லாமல் இந்த குத்பாவின் விஷயம் மிக எளிதில் சீர்திருத்தம் அடையுமென்று என்ணுகிறேன்.

இது தொடர்பான விகற்ப வியவகாரங்களில் தலையிடுவது பாபமன்று என்று கொள்ளப்படுமாயின், நிச்சயமாய் யான் ஒரு விஷயத்தைச் சொல்லாமலிருப்பது முடியாது. அரபு அல்லாத மொழிகளில் குத்பா ஓதுவது கூடாதென்று கூறிக்கொண்டிருப்பவர்களிடம் ‘ஸலஃப் ஸாலிஹீன்களெல்லாம் அரபுமொழியிலேயேதான் குத்பாவை ஓதிக்கொண்டு வந்தனர்’ என்று கூறுவதைக் காட்டிலும் அவர்களுக்கு வேறொன்றும் ஆதாரமில்லை. இதுவுமல்லாமல், ஸலஃப் ஸாலிஹீன்களின் ஆதாரங்களைத் தேடுபவர்கள் இன்னமும் சில விஷயங்களைக் கவனித்தல் வேண்டும்.

ஸலஃப் ஸாலிஹீன்கள் அரபுமொழியிலேயே குத்பாவை ஓதிக்கொண்டிருந்ததுடன் நில்லாது, அன்னவர்கள் எந்தப் புத்தகத்தையும் பாராது சுயமே மின்பரில் நின்று குத்பாவை அரபுமொழியிலேயே பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள்; அன்றியும், அவர்கள் எதையும் மனப்பாடம் பண்ணிவைத்துக் கொண்டு அதை வந்து மின்பரில் ஒப்பிக்க மாட்டார்கள். சுயமே தங்களுக்குப் படுவதையே சொல்லுவார்கள். மேலுமவர்கள் ஒரு வித இராகத்தைக் கொண்டு கவிகளேபோல் தாலாட்ட மாட்டார்கள். குர்ஆனையும் ஹதீதையும் வைத்துக்கொண்டு, அதுசமயம் அங்குக் கூடியிருக்கும் அவர்களுக்கு என்ன சொல்ல வேண்டுவது உசிதமென்று கண்டார்களோ, அதையே சுருக்கமாய்ச் சொல்லுவார்கள். மேலும், அந்த குத்பாக்களில் அக்கால சுல்தான்களின் பெருமையும் புகழ்ச்சியும் காணக்கிடக்காமல் இருந்தன. எனவே, மேலே சொன்ன இத்தனை விஷயங்களையும் ஒரு சிறிதும் கவனியாது, குத்பாவென்பது அரபுமொழியிலேதோன் ஓதப்பட வேண்டுமென்று மாத்திரம் வற்புறுத்திக்கொண்டிருப்பது சரியன்று.

ஆகையால், அரபுமொழியிலேதான் குத்பா இருக்க வேண்டுமென்று வற்புறுத்தப்படுவதில்லையாயின், அனேக பலன்கள் மனிதர்களுக்கு உண்டாவதல்லாமல், ஒரு பித்அத்தை ஒப்புக்கொண்டு, அனேக பித்அத்துக்களின் ஆபத்தினின்றும் நாம் தப்பிக்கொள்ளலாம். எனவே, ஜம்யிய்யத்துல் உலமாவுக்கு நான் ஒரு யோசனை சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன்: அஃதாவது, வருஷா வருஷம் இமாம்களுக்கு முக்கியமாய் வேண்டற்பாலனவான விஷயங்களை குத்பாக்களின் சூரத்தில் அடிக்கடி பிரசுரம் பண்ணி வெளியாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.”

இதுதான் மௌலானா அவர்களின் பிரசங்கத்தின் ஒரு துண்டு. இதனை ஜம்யிய்யத்துல் உலமாக்களின் மௌலானாக்களின் முன்னிலையிலேயே எடுத்தோதினார்கள். இது வட இந்தியாவின் மாபெரும் மஹானான மௌலானா செய்யித் சுலைமான் நத்வீ அவர்களின் மேலான அபிப்ராயமாகும். ஆனால், இத்தென்னாட்டுக் கொன்றும் ஆதாரமான மனிதர்கள் இல்லை என்றெண்ணி விடாதீர்கள். ஏனெனின், தென்னாட்டுத் திலகமும் தீனின் ஆலவிருட்சமும் பேரானந்தப் பொக்கிஷமும் கல்விக் கடலுமான வேலூர் மௌலானா மௌலவீ அப்துல் ஜப்பார் ஹஜ்ரத்தவர்களின் அபிப்பிராயத்தையும் பின்னே தருகின்றோம்; கண்டு களி்ப்பீர்களாக:-

ஜனாப் மௌலானா அப்துல் ஜப்பார் ஹஜ்ரத் அவர்கள் குத்பா தர்ஜுமா விஷயமாய்ப் பண்டாரவாடைக்குக் கொடுத்த அரபி ஃபத்வாவின் மொழி பெயர்ப்பு:-

வினா:- ஏ மேலான உலமாக்களே! நம் ஊர்களில் சாதாரணமாய் ஓதப்பட்டுவரும் அரபி குத்பாவுக்கு அரபு அல்லாத வேறு மொழிகளில் மொழி பெயர்த்துச் சொல்வது நமது ஹனஃபீ மதுஹபின்படி கூடுமா; கூடாதா? கூடுமாயின், மக்ரூஹ் தன்ஜீ ஹுடனா; தஹ்ரீமுடனா? அல்லது மக்ரூஹே இல்லாமலா? இங்குள்ள சிலர் இம் மாதிரி மொழிபெயர்த்தோதுவது மக்ரூஹென்றும். வேறு சிலர் மக்ரூஹ் இல்லாமலே கூடுமென்றும் கூறுகின்றனர். எனவே, தங்கள் ஃபத்வாவைக் கொண்டு இம் மாதிரியான விகற்பங்களை ஒருவாறு தீர்த்துக் கொள்ளலாமென எண்ணுகின்றோம். ஹனஃபீ மதுஹபின்படி இதற்கென்ன விடை என்பதை விடுத்து ஆண்டவனிடம் நற்கூலி பெறுவீர்களாக.

விடை:- புகழடங்கலும் ஆண்டவனுக்கே உரியது….. அஜமீ தேசமாகிய நம் நாட்டின்கண் காணப்படும் கற்றோர்கள் குத்பா தர்ஜுமா செய்வது கூடுமா கூடாதா என்னும் விஷயத்தில் அபிப்பிராய பேதங்கொண்டு, சிலர் இம்மாதிரி செய்வது கூடுமென்கின்றனர்; மற்றும் சிலர் இதை மறுக்கின்றனர். மறுக்கின்றவர்கள் காட்டும் அத்தாட்சியாவது, நியமமாயும் நிரந்தரமாயும் அரபுமொழியிலேயே ஓதிக்கொண்டு வந்ததற்கு இது மாற்றமாயிருக்கிறது என்பதேயாம் (முஸப்பா ஷர்ஹ் முஅத்தா….. உம்ததுற் றிஆயா பீஹல்லி ஷர்ஹில் விகாயா…..).

சிலர் தர்ஜுமா செய்து ஓதுவது கூடுமென்கின்றனர். மேலும் இவர்கள் சொல்லுவதாவது: உபதேசமும், உணர்ச்சியும் மனிதர்களுக்குச் செய்ய வேண்டியது குத்பாவிலுள்ள ஸுன்னத்தாகும் (ஆலம்கீரி………). மேலும் குத்பாவென்று சொல்வதே உபதேசத்தைக் குறித்ததாகும். (தஹ்தாவீ ஷர்ஹெ மராகில் பலாஹ்……). இன்னமும் மனிதர்களுக்கு குத்பாவின் கண்ணே சமயத்துக்குத் தக்கவாறான உபதேசங்களைச் சொல்லவேண்டும். அதிலேயே அன்னவர்களுக்கு மார்க்கக் கிரியைகளையும் கற்பித்தல் வேண்டும் (ஹிதாயா….).

“(நமது) நபிகள் நாயகம் (ஸல்) (குத்பா ஓதுவான் வேண்டி) மனிதர்களின் முன்னிலையில் முன்னோக்கி நின்றார்கள்; மானிடர்களோ (அவர்களை நோக்கிக் கொண்டு) அமர்ந்திருந்தனர். பிறகு நாயகமவர்கள் அந்த மானிடர்களுக்கு உபதேசம் புரிந்தார்கள்; அவர்களுக்கு ஏவலைப் புரிந்தார்கள்……” (புகாரீ).

எனவே, உபதேசம் என்பது அரபு அல்லாத மொழியில் சொன்னால்தான் நமது தேசங்களுக்கு உண்மையில் உபதேசமாகும். மேலும் ஃபிக்ஹுவின் மேதாவிகள் இந்த குத்பாவில் உபதேசம் என்பதை எம்மாதிரி ஆவசியகமானதாய்க காணப்படுகிறது என்று வற்புறுத்திக் கூறியிருக்கின்றனரோ, அஃதே போல் குத்பாவில் அரபுமொழிதான் முக்கியமாய் இருக்க வேண்டுமென யாரும் வற்புறுத்தியதாய்க் காணப்படவில்லை. அல்லாமலும் நமது இமாம் அபூஹனீஃபா அவர்கள் தொழுகையின்கண் ஓதப்பட்டுவரும் அரபு கிராஅத்தை அரபு அல்லாத மொழியிலும் ஓதலாமெனச் சொல்லிவிட்டுப் பிறகு அவ்வாறு ஓதுவது சரியென்று தாம் எண்ணவில்லை என்று திரும்பிக் கொண்டார்கள். ஆனால், இம்மாதிரியே குத்பாவையும் (தாய்மொழியில்) ஓதலாமென்று சொல்லிவிட்டு, இதையும் கூடாதென மறுக்கவில்லை. இதனாலும் குத்பாவை அரபு அல்லாத மொழிகளினாலும் ஓதலாமென்று தெரிந்து கொள்ளுகிறோம்.

ஆனால், சிலர் இந்த குத்பாவானது தொழுகையின் இரண்டு ரக்ஆத்களின் ஸ்தானத்தில் அப்படியே அமைந்திருப்பதால், இந்த குத்பாவையும் அரபுமொழியிலேதான் ஓதவேண்டுமென யுக்திவாதம் பேசுகின்றனர். இது, தெரியாத மனிதர்களின் தவறேயாகும். ஏனெனின், ஒரு மனிதன் வுலூ என்னும் பரிசுத்தமில்லாமல் குத்பா ஓதுவானாயின், மக்ரூஹுடன் அது கூடிப்போம். மேலும் குத்பாவில் கிப்லாவை முன்னோக்காது மனிதர்களின் பக்கம் முன்னோக்கி நிற்றல் வேண்டும். தொழுகையிலோ இவ்விரண்டு விஷயங்களுமில்லாது ஒன்றுமே முடியாது. எனவே, குத்பாவும் தொழுகையும் ஒன்றாகுமா? ஆகமாட்டா என்பதை நன்கறிந்து கொள்வீர்களாக. மேலும் சாஹிபுல்பதாவா கூறுவதாவது:- “பார்ஸீ மொழியைக் கொண்டு குத்பா ஓதுவது ஆகுமான காரியமேயாம்.” இதுவுமல்லாமல், மராகில் பலாஹ் என்னும் நூலில் “அரபைக் கற்றிருக்கும் ஒருவன் பார்ஸீ மொழியில் குத்பா ஓதுவானாயின், அதுவும் கூடும்,” என்று காணப்படுகிறது.

இம்மாதிரியான வாக்கியங்களைக் கண்ணுறும்போது மக்ரூஹ் என்பதில்லாமலே குத்பாவென்பது அனுமதிக்கப்பட்டதாகும் என்றே தெளிவாய் விளங்குகின்றது. ஆனால், இம்மாதிரியான குத்பா தர்ஜுமா செய்வது கூடாதென்பவர்கள் ஃபுகஹாக்களான முன்னோர்களின் வார்த்தைகளைக் கொண்டும் ஹதீதைக் கொண்டும் மெய்ப்பிப்பார்களாயின், அதையும் யாம் ஒப்புக்கொள்ளத் தலைசாய்க்கின்றோம்.

மேலும் எமது ஆசிரியரான ஷம்ஸுல் உலமா மௌலானா அப்துல் வஹ்ஹாப் சாஹிப் கிப்லா அவர்களும், “அரபுமொழியில் ஓதுவது நல்லதெனச் சொல்லிக் கொண்டிருந்தனர்,” என்பதும் ஷேக் அப்துல் ஹக் (ரஹி) அவர்களும் ஷர்ஹி சபறுஸ் ஸஆதாவென்னும் நூலில் “குத்பாவானது அரபுமொழியில் இருப்பது நலமே; ஆயினும், இமாம் அபூஹனீஃபா அவர்கள் அரபு அல்லாத மொழியில் குத்பா ஓதுவது ஆகுமென்றும் சொல்லியிருக்கின்றனர்,” என்று சொல்லியிருப்பதும் வாஸ்தவமே. ஆயினும், இவ்விருவர்களும் குத்பா என்பது அரபுமொழியில்தான் இருத்தல்வேண்டும், இல்லையேல் குத்பாவே கூடாதென்று கூறினார்களில்லை.

இஃதொருபுறம் கிடக்க, நந் தேயங்களில் ஓதப்பட்டுவரும் குத்பா அடங்கலின் ஆதியிலும் அந்தத்திலும் குர்ஆனின் ஆயத்துகளும் நபிகள் பெருமானின் வாழ்த்தும் குர்ஆனின் கண்ணே காணப்படும் ஏவல் விலக்கல்களுள் சிலவும் அரபுமொழியிலேதான் ஓதப்படுகின்றன. இதைக் காணும்போது ஆட்சேபிப்பவர்களுக்கு எந்தவிதமான அத்தாட்சிகளுமில்லை என்றே கூறலாம். ஏனெனின், தர்ஜுமாவை வேண்டாமென்பவர்கள் ஒரு சிறிதேனும் குத்பாவில் அரபு வாக்கியங்கள் இருந்தே தீரவேண்டும் என்று வாதித்து வருகின்றனர். அன்னவர்களின் வேண்டுகோளின்படியும் எல்லா குத்பாக்களிலும் ஆதியிலும் அந்தத்திலும் அரபு வாக்கியங்களே ஓதப்படுகின்றன. இடையே இருப்பவைகளெல்லாம் மனிதர்களுக்குண்டான புத்திமதிகளும் உபதேசங்களுமாம். இம்மாதிரியாய்ச் செய்த பின்னரும் இன்னவர்களுக்கு என்ன ஆட்சேபம் இருத்தல் முடியும்?

இவ்வாறே தான் தர்ஜுமா செய்து ஓதவேண்டுமென்று மேலே காட்டிவந்த ஹதீதினால் நன்றாய் விளங்கிக் கொள்ளுகிறோம். இது மட்டுமா? இன்னமும் ஒரு நாயக வாக்கியத்தைக் கவனித்துக் கொள்வீர்களாக:

“வெள்ளியன்று நாயகமவர்கள் (ஸல்) குத்பா ஓதிக்கொண்டிருக்கும்போது ஒருவர் மஸ்ஜிதில் வந்து நுழைந்தார். அவரை நோக்கி, ‘நீர் தொழுது கொண்டீரா?’ என்று நபிகள் நாயகம் கேட்க, அவர் இல்லையென மறுமொழி கூறினார். ‘(சரி) நீர் இரண்டு ரக்ஆத்தைத் தொழுது கொள்வீராக,’ என நபி(கள் நாயகம்) சொன்னார்கள்….” அபூதாவூத்.

“நாயகம் (ஸல்) (ஒருநாள்) மின்பரினின்று இறங்கியபோது ஒருவர் ஏதோ தம்முடைய நாட்டத்தைப்பற்றி வினவலாயினர். அதற்காக நாயகமவர்கள் அவரது வேண்டுகோளைத் தீர்த்ததன் பின் தொழுகைக்காகச் சென்றார்கள்.” அபூதாவூத்.

இம் மாதிரியான நாயக வாக்கியங்களை எல்லாம் கண்ணுறும்போது குத்பாவுக்கும் தொழுகைக்கும் இடையே சில நேரத்தைப் பிரிக்கச் செய்யலாம் என்று ஏற்படுவது ஒரு பக்கல் கிடக்க, நல்ல விஷயங்களாயின், எந்நேரத்திலும் எங்கும் சொல்லலாம் (தொழுகையில் தவிர) என்று ஏற்படுகின்றது திண்ணம்.

இந்த குத்பாவே வெறும் வேஷத்துக்காகவும் சம்பிரதாயத்துக்காகவும் ஏற்படுத்தப்பட்டதன்று. எனவே, இந்த குத்பாவில் தர்ஜுமா செய்வது எந்தவிதமான மக்ரூஹும் இல்லாமலேயிருத்தல் அவசியமாகும். மேலும் இதற்கு உதவியாய், “ஒரு மனிதன் அரபுமொழி அறிந்தவனாயிருந்தும், ஆதியிலும் அந்தத்திலும் அரபு வாக்கியங்களை ஓதிவிட்டு, இடையே உண்டானவைகளைப் பார்ஸீ மொழியிலேயே ஓதுவானாயின், பாதகமில்லை,” என்று அபூயூசுஃப் (ரஹி) கூறியிருக்கின்ற ஒரு வார்த்தை “முஹீத்”தென்னும் கிரந்தத்தில் காணக்கிடக்கின்றது.

இம்மாதிரியான விஷயங்களினாலெல்லாம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனின், எங்கு குத்பா அரபுமொழியில் நடந்துகொண்டு வருகின்றதோ, அங்கு அப்படியே இருந்து வரலாம். அஃதேபோல் வேறெங்கேனும் குத்பாவின் தர்ஜுமா செய்யப்பட்டு வருமாயின், அதுவும் அப்படியே நடந்து வரவேண்டும். ஏனெனின், இதற்கு விரோதமாய் வேலைசெய்யத் துணியும்போது ஒன்றுமறியாத பாமர ஜனங்களிடையே அளவில்லாத சங்கடங்களுண்டாகும்………..

ஆனால், நமது தற்காலத்தைக் கவனிக்கும்போது குர்ஆன் ஆயத்தைக் கொண்டும் ஏனை ஹதீதுகளைக் கொண்டுமே குத்பாவின் வாயிலாய்ப் பொதுமக்களுக்குத் தக்க விதமான உபதேச மொழிகளை மொழிவதே மேலானதாகும். இதுவே குத்பாவின் தத்துவத் தாத்பரியமும் ஆகும். ஆண்டவன் அதிகம் அறிந்தவன்.

எழுதியவர்,
அப்துல் ஜப்பார் (அபா அன்ஹு).

எனவே, எது எப்படியாயினும், இந்த குத்பா சம்பந்தமான இவ்விஷயம் நன்னோக்கம் உள்ள மனத்தைக் கொண்டு பார்க்கப்படுமாயின், இதை நமது தாய்மொழியில் ஓதுவது தவறாகமாட்டாது. ஆனால், இம்மாதிரியாய் அவசியமாய் ஓத வேண்டியதுதான் என்று கூறாமலிருப்பது முடியாதென்பது திண்ணம். எனவே, நண்பர்களாகிய நுங்களுக்கு நற்காலம் பிறக்கவேண்டுமாயின், நுங்களின் தாய்மொழியிலேயே குத்பாவை ஓதும்படி ஏற்பாடு செய்வீர்களாக. இல்லையேல், ஜுமுஆவில் வந்து சாய்ந்து உறக்கங்கொள்வதேபோல் எப்போதும் உறங்கிக் கொண்டுதானிருக்கப் போகின்றீர்கள். இன்னமும் உறக்கங் கொண்டிராமல் விழித்துக்கொள்ள ஆண்டவனே நல்லுதவி செய்யவேண்டும். இதற்கான பிரயாசையை நஞ்சோதர முஸ்லிம்களாகிய நீங்களே முழுதும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இங்ஙனம்:
தங்கள்,
ஹாபிஸ் முஹம்மது யூசுப் (பாகவீ)

சென்னை,
தா. இ. ஆபீஸ்,
20-1-1930.

 

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>

Related Articles

Leave a Comment