آلْحَمْدُ للهِ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ ذِى الْمُلْكِ وَ الْمَلَكُوْتِ وَ الْعِزَّةِ وَ الْجَبَرُوْتِ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِه وَ أَصْحَابِهِ وَ سَلَّمَ اَمَّا بَعْدُ
சகல லோகங்களுக்கும் ரக்ஷகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்; சர்வரே ஆலம் ரஸூல் (ஸல்) அவர்களுக்கே அசியும் ஆசீர்வாதமும். அப்பால் அறிந்து கொள்ளக் கடவீர்களாக:-
அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சிநடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக்கொள்கின்றேன்.
எனதன்பான சோதரர்காள்! உலகமுற்றும் வியாபித்துப் பிரபஞ்சத்தைப் பரிபாலிக்கும் ஏகநாயகனைப் புகழ்ந்து, அவனுடைய திருத்தூதரும் உண்மை நபியும் சத்திய சீர்திருத்தக்காரருமான நபிகள்பிரான் முஹம்மத் முஸ்தபா ரஸூல் (ஸல்) அவர்களை ஆசீர்வதித்ததன் பின்னே விழித்துணர்வீர்களாக. நேயர்காள்! நமக்குச் சன்மார்க்கத்தை அளிக்க அவதரித்த நபிகள் பிரான் (ஸல்) எவ்வண்ணம் தம் சீரிய வாழ்க்கையில் இருந்து வந்தார்கள் என்பதைச் சற்றே நாம் அறிந்து கொண்டு, அதன்படியே அதைப் பின்பற்றி நாமும் அனுஷ்டிக்க முயல்வோமாக. ஆதலின், உண்மையான ஹதீதில் வந்திருப்பதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) ஒவ்வொரு நேரமும் ஆண்டவன் தியானத்திலும் அவன் வணக்கத்திலுமே ஞாபகமாயிருந்தார்கள்; எந்த நேரத்திலும் நன்னீதிகளைப் போதிக்காமலும், ஆண்டவன் நாமத்தைப் பஜிக்காமலும் இருக்க மாட்டார்கள்; சிற்சில சமயங்களில் “இறை பக்தியில்லாத மனத்தினின்று வெளிவரும் (வீண்) பிரார்த்தனையை ஆண்டவன் ஏற்றுக் கொள்ளவே மாட்டான்,” என்று ஜனங்களுக்கு அறிவுறுத்துவார்கள். இந்த வாக்கியத்தில் காணப்படும் “பிரார்த்தனை” என்னும் பதத்துக்கு வணக்கம் என்றே அறிஞர்கள் பொருள் கூறுகிறார்கள். எனவே, ஆண்டவனைப் பணிந்து வணங்காமல், இகலோக நன்மைக்காக மட்டுமே “துஆ”க் கேட்கும் அடியார்களின் வேண்டுகோளை அல்லாஹ் நிராகரித்து விடுகிறான் என்பதே இதன் தாத்பரியமாகும்.
நேயர்காள்! நம் முஸ்லிம் பிரஜைகளுள் ஆண்டவனை வணங்காமல், வெறும் பிரார்த்தனை மட்டுமே புரியும் மனோ ராஜ்ய மனிதர்களும் இல்லாமலில்லை. உதாரணமாய், வாரத்துக்கொருமுறை வெள்ளியன்றும், வருடத்துக்கொருமுறை பெருநாட் காலங்களிலும், ஆண்டாண்டுதோறும் ரமலான் மாதத்தில் மாத்திரமும், விசேஷங்கள் நடைபெறும் வேறு சில சமயங்களிலும், கும்பலில் சேர்ந்து அல்லாஹ்வைத் தொழுது விட்டுக் கையை வானமளாவ ஏந்திக்கொண்டு, “ஏ ரஹ்மானே! நான் தொழாமல் இருந்ததையெல்லாம் மன்னித்து, எனக்கு உலக சம்பத்தைக் கொடு, சுவர்க்கலோகத்தைக் கொடு; ஈடேற்றத்தைக் கொடு; வாழ்வைக் கொடு,” என்றெல்லாம் சுயநலப் பிரார்த்தனை புரிந்து விட்டு, மீண்டும் ஆண்டவனை மறந்து விட்டுத் தாம் கொண்டதே கோலமென்றும் கண்டதே காட்சியென்றும் உலக மாயையுள் மூழ்கிய எத்தனையோ மக்கள் நம்முள்ளே இருக்கின்றார்கள். இத்தகைய வெள்ளி முசல்லி, ஈத் முசல்லி, வருட முசல்லி போன்றவர்களின் துஆக்களைத்தாம் ஆண்டவன் ஒப்புக்கொள்ள மாட்டான், என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்கிறார்கள்.
நண்பீர்! உண்மைக் கருத்தை உணர்ந்தீர்களா? எஜமான் இட்ட வேலையைச் செய்யாமல் கூலியை மாத்திரம் தாராளமாய்க் கேட்டால் எஜமானன் கொடுப்பானா? கஷ்டமில்லாமல் காரியம் கைவருமா? அதைப் போலவே அல்லாஹ்வை வணங்காமல், அது வேண்டும், இது வேண்டுமென்று நீண்ட துஆ மாத்திரம் கேட்டால், ஆண்டவன் தன் அருட் கொடையை அளிப்பானா? அளிக்க மாட்டான். ஆண்டவன் பொருத்தத்தையும், பிரீதியையும் பெறவேண்டுமாயின், அவனது ஆணைப்படி முற்றும் அடிபணிந்து நடந்து திருப்தி செய்தல் வேண்டும்.
நேயர்காள்! இதற்கிணங்கவே குர்ஆனில், “உங்கள் ரக்ஷகன் கூறுகின்றான்: நீங்கள் என்னிடத்தில் வேண்டிக் கொள்ளுங்கள். உங்களிடமிருந்து அதை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன் – என்னை வணங்குவதைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்வோரெல்லாரும் பிறகு அவமானப்பட்டு நரகத்தீயுள்ளே தான் நுழைவார்கள்,” என்று ஆண்டவன் கூறுகிறான்.
கருணைக்குரிய ஆண்டவனும், தன்னைப் பக்தி பூர்வமாய் வணங்கி வேண்டுதல் புரியும் பக்த கோடிகளின் துஆவைப் பூர்த்தி செய்யச் சித்தமாயிருக்கிறான். அகந்தை கொள்ளும் தூர்த்தரை ஆண்டவன் மிகவும் வெறுக்கின்றான். முஸ்லிம்காள்! ஆண்டவனைத் தொழுதுகொண்டு பெருமையடிப்பவர்களின் கதியே இப்படி இருக்கும்போது, நம்முள் ஒரு சிறிதும் ஆண்டவனைத் தொழுது வணங்காமல் அகந்தைகொண்டு திரியும் அதமர்களின் கதி என்னாம்? சற்றே சிந்தித்துச் சீர்படுங்களே.
ஆதலின், அன்பர்காள்! நீங்கள் சதா சர்வ காலமும் உலக சம்பாத்தியத்திலே கருத்தைச் செலுத்தியிருப்பதனூடே இடையிடையே ஐங்காலமும் தவறாமல் சிறிது ஆண்டவனைத் தியானித்து வணக்கம் புரியுங்களே. இவ்வாறே ஆண்டவனும், தன் திருமறையில், “நீங்கள் உலக சாதனத்தைத் தேடிச் சேமித்துக் கொண்டே என்னையும் தியானித்துப் பக்தி கொண்டாடுங்கள்,” என்றுதான் கூறுகிறானே யல்லாமல், ‘நீங்கள் தொழுது வணங்குவதற்காகவென்று அவசியமாய் உண்பதையும் குடிப்பதையும் சுகிப்பதையும் பொருள் திரட்டுவதையும் விட்டு விடுங்கள்,’ என்று கூறவில்லை. ஆத்ம சுகத்துக்காக எவ்வாறு பக்தி வணக்கம் அவசியமாய்க் காணப்படுகின்றதோ, அவ்வண்ணமே சரீர சுகத்துக்காகச் செல்வம் சேகரித்தலும், உண்டு புசித்தலும் மிகவும் அவசியமேயாகும்.
எனவே, சதா ஆண்டவனைத் துதித்துக் கொண்டு பெரும் ஆபிதாகப்போய்ப் பிரம்மசாரியாகவும் போய்விடல் கூடாது. சதா உலக சுகத்தின் பிரேமையையும், பணத்தாசையின் பித்தமும் பீடித்துப் போய் ஆண்டவனை மறந்து, கஜானா சேமித்த காரூனாய்ப் போய்விடுவதும் கொடுங்காரியமே ஆகும். நீங்கள் அல்லாஹ்வை வணங்கி ஸ்தோத்திரிப்பதற்காக உலக சாதனத்தைச் சிருஷ்டித்தானேயல்லாமல், நீங்கள் அவனைத் தொழாமல் வெறும் இகலோக இன்பத்தை மட்டும் அடைய வேண்டுமென்றே கர்த்தன் உலகத்தை சிருஷ்டிக்கவில்லை. குளிர் காய்வதற்காகத்தான் செத்தையை அரிக்க வேண்டுமல்லது, அச் செத்தையை அரிப்பதிலேயே ஆயுள் முழுவதையும் செலவிட்டு விடுதல் கூடாது: “கூளமதரிப்பதல்லால் குளிர்காய நேரமில்லையே!” என்றார் மஸ்தான் சாஹிபும்.
ஆதலின் முஸ்லிம்காள் நீங்கள் ஆண்டவனைப் பக்தி பூர்வமாய்ப் பணிந்து வணங்கிப் பரிபக்குவமடையுங்கள். அவன் காட்டித் தந்த சீரான பாதையிலே நேராகச் சென்று பரிபூரணத்தையும், ஹிதாயத்தையும் பெறுங்கள். அருள் நிறைந்தவனும் அன்புடையோனுமாகிய உலக ரக்ஷகனைப் போற்றிப் புகழந்து, சதா சிந்தித்து வந்தியுங்கள். நியாயத் தீர்ப்பைக் கியாமத்தில் அளிக்கும் ஆண்டவனையே நன்கு வணங்கி, அவனிடத்திலேயே உதவியைத் தேடுங்கள். சிராத்துல் முஸ்தகீம் என்னும் செவ்விய சன்மார்க்கத்தை அவனிடமே வேண்டிப் பெற்றுக் கொள்ளுங்கள். பண்டைப் பெரியார்களும், ஆண்டவனுடைய புராதனப் புண்ணிய பக்தர்களும் கடைப்பிடித்துச் சென்ற நேர் வழியையே நீங்களும் ஆண்வனிடம் கேட்டுப் பெறுங்கள். ஆண்டவனது கோபத்துக்கும், சாபத்துக்கும் ஆளான தீயவர்களின், துஷ்டர்களின் துன்ப மார்க்கத்தை ஒரு போதும் பின் பற்றாதீர்கள்.
ஏ எங்கள் ஆண்டவனே! எங்களுக்கு இத்தகைய சம்மானத்தையும், சன்மார்க்கத்தையும், சற்குணத்தையும், நல்லொழுக்கத்தையும், நற்சாதனத்தையும், நற்பேற்றையும் அளித்து, இகத்திலும் பரத்திலும் சுகமே மிகுந்த இன்பத்துடன் உனது “லிக்கா” வில் வாழவைக்க அருள் புரிவாயாக! ஆமீன்!
ஏ ஆண்டவனே! எங்களது இக் கோரிக்கையை நிறைவேற்றித் தந்தருள்வாயாக! எங்களெல்லாரையும் உன் குர்பானீயின் உண்மைக் கருத்தை உணரச் செய்வாயாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ ۚ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَِ
بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ
Image courtesy: daytimes.pk
<<முந்தையது>> <<அடுத்தது>>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License