اَلْحَمْدُ للهِ الْعَزِيْزِ الْجَبَّارِ الْمُتَكَبِّرِ الْمُسْتَعَانِ ذِى الطَّوْلِ وَ النِّعْمَةِ وَ الْغُفْرَانِ وَ نَشْهَدُ اَنْ لَّاَ اِلٰهَ اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ وَ نَشْهدُ اَنَّ مُحَمَّدَاً عَبْدُهُ وَ رَسُولُهُ اَمَّا بَعْدُ اَيُّهَا اَلْاِخْوَانُ
அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்கின்றேன்.
அன்பிற்குரிய அரிய முஸ்லிம் சகோதரர்காள்! கருணைக்குரியவனும் கண்ணியமிக்கவனும் மன்னிப்பவனுமான அல்லாஹுத் தஆலாவையே அனவரதமும் புகழ்வோம். பரிசுத்த வேதத்தையும் சத்திய சன்மார்க்கத்தையும் நமக்குக் கொணர்ந்தளித்த நபிகள் நாயகத்தையும் (ஸல்) நன்கு ஆசீர்வதிப்போமாக.
அதன் பின்பு முஸ்லிம் நேசர்காள்! நம்மைப் படைத்து ஆளும் ஆண்டவனை எப்போதும் வணங்குவதற்கு அதிக முயற்சி எடுப்பீர்களாக. அவனுடைய வேத சற்போதங்களைச் செவ்விதாய் உணர்ந்து, அவற்றின்படி ஒழுகக் கடவீர்களாக. ஆண்டவனது தத்துவத்தையறிந்து வணங்குவதற்கு மிகவும் அவசியமான மார்க்கக் கல்வியை நீங்களெல்லீரும் அத்தியாவசியமாய்த் தெரிந்து கொள்வீர்களாக. சகல போதனையும் மிகுந்து ஞானப் பொக்கிஷமாய் விளங்கும் நம் பரிசுத்த குர்ஆன் ஷரீபின் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள அதிகம் முயற்சி செய்வீர்களாக. நுங்கள் சிறுவர், சிறுமியர்களுக்கெல்லாம் முதன் முதலில் குர்ஆன் ஷரீபைக் கற்றுக்கொடுத்து அதன் பின்பு அதன் அர்த்தத்தையும் படித்துக் கொடுப்பீர்களாக.
வெறுமே குர்ஆனை ஓதக்கற்று, அதன் சில அத்தியாயங்களைப் பாராயணம் செய்து விடுவதால் மட்டும் ஒன்றும் பெரும் பயன் விளைந்துவிட மாட்டாது; ஆனால், எப்படியேனும் சிரமமெடுத்துச் சில குர்ஆன் வாக்கியங்களின் பொருளுணர்ந்து சித்தம் தெளிவதே முக்கியம் வேண்டத்தக்கதாகும். இந்த குர்ஆன் ஷரீபைப் பின்பற்றி, அதில் கூறிய வண்ணம் நாம் ஒழுகுவோமாயின், அதுவே நமக்கு ஹிதாயத்தாகவும் சத்திய சாந்தியாகவும் அமைந்து விடும். ஏனெனின், வேதத்துக் குடைய கர்த்தனே, “இந்த வேதமாகிறது – இதில் யாதொரு சந்தேகமில்லை – இதுவே மனித கோடிகளுக்கு ஹிதாயத் அல்லது சன்மார்க்கமாகும்,” என்று கூறியுள்ளான்.
இப்படிப்பட்ட வேதத்தின் சாராம்சத்தை நீங்கள் சுயமே கற்றத் தெளிவதென்பது முடியாதாயினும், அதனைக் கற்றுணர்ந்துள்ள மேதாவிகளிடம் சென்று ஞானம் பயில்வதே நம் மார்க்கமிட்ட கட்டளையாகும். “நீங்கள் கல்வி யில்லாமல் இருப்பீர்களாயின், கல்விமான்களிடம் சென்று கேட்டுப் படித்துக் கொள்வீர்களாக,” என்று ஆண்டவன் மீண்டும் வற்புறுத்தியுள்ளான்; கல்வியின் அத்தியாவசியத்தைப் பற்றி நம் நபிகள் நாயகம் (ஸல்) “ஞானத்தைத் தேடிக் கற்றல் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் (முஸ்லிம் மாதரின் மீதும்) முக்கியக் கடமையாக்கப் பட்டுள்ள” தென்று கூறியுள்ளார்கள். மேலும், “கல்வியானது சீனா தேசத்தில் இருந்த போதிலும் அங்கும் சென்று கல்வி கற்றுக் கொள்ளுங்கள்,” என்று வற்புறுத்திக் கூறியுள்ளார்கள் என்று ஒரு செய்தி சொல்லப்படுகிறது. இத்தகைய ஆணைகள் நம் மார்க்கக் கிரந்தங்களில் அனந்தம் மலிந்து கிடக்கின்றன.
எனவே, எம் முஸ்லிம்காள்! கல்வியென்பது நம் புறக்கண்ணைப் பார்க்கினும் அவசிய அரும்பொருளாகும். ஞானத்தைக் கொண்டுதான் இகபரத்துக்குரிய சகல விஷயத்திலும் நன்மை தின்மைகளைத் தெரிந்து கொள்ளுதல் சாலும். புறக்கண் இல்லாதவன் எவ்வண்ணம் நேர்பாதையில் சுயமே செல்ல முடியாது தட்டுக்கெட்டுப் படுகுழியுள் வீழ்வானோ, அவ்வாறே முஸ்லிம்களாகிய நாம் மார்க்க ஞானம் இல்லாமற் போனால், தர்மம் அதர்மம் இன்னவென்பதும், வாழ்க்கையின் பலாபலன் இன்னவென்பதும், ஏவல் விலக்கல் இன்னவென்பதும் ஒன்றும் புரியாமல் பாதகத்திலும், அஞ்ஞானப் படுகுழியிலுமே தாம் போய் வீழ்தல் கூடும்; பகுத்துணர்தலில்லாமல் ஆண்டவனை வணங்குபவன் தீமையைப் போதிக்கும் மாயவனாகிய ஷைத்தானுக்கு வயப்பட்டுக் கெட்டுப்போகக்கூடும். ஞானமுடையான் ஞானமில்லாத தவசியைக் காட்டிலும் ஆயிரம் ஷைத்தான்மீது ஆதிக்கம் பெற்றுவிடுவான். கல்வியைப் பற்றியே நம்மார்க்கம் அதிகம் எடுத்துப் போதிக்கின்றது. கல்வியைக் கற்பதனால் தீக்ஷண்ய புத்தியும், பகுத்துணரும் சக்தியும் அதிகரிக்கின்றன. இதனால் சுய நயப் புல்லுருவிகளின் தீயோபதேச வலையினின்று தப்பிக் கொள்ளலாம்.
இதுகாலைக் கல்வியறிவில்லாத நம் பாமர முஸ்லிம் மக்களுக்கு என்ன அனர்த்தங்களும், எத்தகைய தீமைகளும் நேர்ந்து வருகின்றன வென்பதை நீங்கள் தெரிந்து கொண்டீர்களா? கல்வியில்லாக் குறையால் எத்தனை முஸ்லிம்கள் அயல் மதவாதிகளின் கபடவலைக்கு உட்பட்டு, முர்த்தத்தாகி மதமாறிப் போய்விட்டார்களென்பதை அறிந்துகொண்டீர்களா? எத்தனை ஆயிரம் முஸ்லிம்கள் ஞானமில்லாத காரணத்தால் உடுக்கவும் உண்ணவும் ஒன்றுமில்லாத பரம ஏழைகளாகப் போய்ப் புழுப்போலே வறுமை நோயால் வாடித் துடிக்கின்றார்களென்பதைத் தெரிந்து கொண்டீர்களா? ஞானமற்று வறுமையுற்று, சுயமே சம்பாதிக்க வழிவகையற்று, பணத்தாசை பிடித்து, ஆரிய ஸமாஜிகளின் சுத்திவலையிலும் கிறிஸ்தவர்களின் தீயபிரசாரத் தூண்டிலிலும் திராவிடக் கட்சி, திராவிட முன்னேற்றக் கட்சி, கம்பயூனிஸக் கட்சி முதலியவற்றின் நாஸ்திக போதத்திலும் அகப்பட்டுக் கெட்டுப்போன ஜனக்கணிதம் இத்துணையென்பதைக் கேட்டறிந்து கொண்டீர்களா?
அந்தோ! ‘இதற்கெல்லாம் காரணமென்ன? நாம் ஏன் எல்லா ஜாதியார்களைக் காட்டினும் கீழான நிலையிலும் பாதாளத்துள்ளும் வீழ்த்தப்பட்டு இகழப்படுகின்றோம்?’ என்பவையேனும் உணர்ந்தீர்களா? எல்லா அனர்த்தத்திற்கும் மூலகாரணம் கல்வியின்மையேயாகும் என்பதில் இன்னமுமா சந்தேகம்? கல்வியில்லாமலிருப்பதன் கேடு இம்மட்டென்று தெரிந்து, இன்னமுமா நீங்கள் உறங்கிக்கொண்டு மௌனம் சாதித்திருத்தல் வேண்டும்? எப்போது விழித்தெழுந்து இடுப்பை வரிந்து கட்டிக்கொண்டு பொதுவாய் முஸ்லிம் சகோதரர்கட்கும், குறிப்பாய் நம் சிறுவர் சிறுமியர்கட்கும் கல்வி கற்பிக்கும் விஷயத்திற்கும் நம் முஸ்லிம் சமூகத்தின் தீவிர முன்னேற்றத்திற்கும் நீங்கள் உழைக்கப் போகின்றீர்கள்?
மெய்யான கல்வியில்லாது அரசியல் துறையிலுங் கூட முன்னேறுவது சாலாதே! என்றைக்கு நீங்கள் உங்கள் இஸ்லாத்தின் தற்காப்புக்காகப் பெருமித ஊக்கம்பெற்று முன் வந்து பிரசாரம் புரியப்போகின்றீர்கள்? எக்காலத்தில் நீங்கள் வெளிக்கிளம்பி உங்கள் அஞ்ஞானச் சகோதரர்களையெல்லாம் ஆரியர்களின் அசுத்தி மாயவலையை விட்டும், கிறிஸ்தவப் பிரசாரப் படுகுழியை விட்டும் கம்யூனிஸ, நாஸ்திக சாக்கடைகளை விட்டும் காப்பாற்றிக் கரையேற்றிப் புனருத்தாரணம் செய்யப்போகின்றீர்கள்?
நம் பண்டைப் பெரியார்களெல்லாம் இஸ்லாத்தின் பிரசாரத்திற்காகத் தங்கள் உடல் பொருள் ஆவியை யெல்லாம் அர்ப்பணம் செய்து உழைத்திருக்கும்போது, அவர்களுடைய சந்ததிகளாகிய நீங்களேன் தற்கால முஸ்லிம் உலகத்துக்கும் இஸ்லாம் மதத்துக்கும் ஏற்பட்டுள்ள இக்கட்டுக்களை நீக்கித் தற்காக்க முன்வந்து உழைத்தல் கூடாது?
சிறிது தேக சிரமமட்டும் எடுத்துக்கொண்டு நுங்கள் சுற்றத்தார்களுக்கும், சிறுமியர் சிறுவர்களுக்கும் சத்திய சன்மார்க்கத்தையும் தற்கால நம் பயங்கர மத நிலைமையும் அதிகம் எடுத்துப் போதித்து, உய்யச் செய்தல் வேண்டும். உங்களூர்களில், அண்டை அயலில் காணப்படும் மூடக் கொள்கைகள், பித்அத் ஷிர்க் போன்ற ஆகாத கருமங்கள், மௌட்டிய அனாசாரச் சடங்குகள் யாவற்றையும் நீக்க முயலவேண்டுமென்றே யான் கூறுகின்றேன். ஆதலின், முஸ்லிம் இளைஞர்காள்! உங்கள் சமூகத்துக்காக உழையுங்கள்! சமூகம் உயர்ந்தாலே ஜாதி முன்னேறும். உத்தம மனிதர்களாக மாறுங்கள்.
எனவே, ஸர்வமும் வல்ல ஏகபராபரன் நம்மெல்லோரையும் தன் உண்மைப் பக்தர்களாகவும் கல்வி ஞானம் உடையவர்களாகவும் அவன் பாதையில் அதிகம் ஈடுபட்டுழைப்பவர்களாகவும் உத்தமர்களாகவும் செய்தருள்வானாக! ஆமீன்!
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ الرَّحْمَٰنُِ عَلَّمَ الْقُرْآنَِ خَلَقَ الْإِنْسَانَِ عَلَّمَهُ الْبَيَانَِ
بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ
Image courtesy: ahlesunnatuljamaat.com
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License