துல்ஹஜ் மாத 1–ஆவது குத்பா

اَلْحَمْدُ لله الَّذِي هَدٰيَنا السَّبِيْلَ الرَّشَادَ وَجَعَلَ لَنَا الدِّيْنَ الْاِسْلَامَ خَيْرَالْاَدْيَانِ فَمَنْ قَامَ وَجْهَهُ لِلدِّيْنِ حَنِيْفًا فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ صَحْبِهِ اَجْمَعِيْنَ اَمَّا بَعْدُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டு மென்பதை  எனக்கும் சொல்லிக் கொள்கிறேன்.

பைத்துல்லாவுக்குச் செல்லுவான் வேண்டி வழி வசதிச் சக்தியைப் பெற்றிருக்கும் அம் மனிதர்களின்மீது ஹஜ்ஜு செய்வது முக்கியக் கடமையாக்கப்பட் டிருக்கின்றது” — (3:96).

அன்புள்ள நேயர்காள்! அல்லாஹ் ஜல்லஷானுஹு தஆலா இஸ்லாம் மார்க்கத்துக்கு இட்டிருக்கும் முக்கிய கட்டளைகளுள் தனவந்தர்களுக்கு ஹஜ்ஜென்னும் மக்காவின் பிரயாணமும் ஒன்றாகும். இப்படியல்லாமல் ‘மக்காவுக்குச் செல்கின்றேன்’ என்று சொல்லிக்கொண்டு வழி நெடுகப் பிச்சையெடுத்துக் கொண்டு செல்பவர்கள் ஆண்டவனுக்குப் பாபம் செய்கின்றவர்களாகின்றனர். ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாதவாறு நோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லாததனால் குற்றமொன்றுமில்லை. போய்ச் சேருவதற்கு மட்டும் தொகையை வைத்துக்கொண்டு திரும்பி வரும்போது யாசகத்தின் வாயிலாய் வந்து சேர்ந்துவிடலாமென் றெண்ணிச் செல்பவர்களும் குற்றவாளிகளே. தம் வீட்டினின்று புறப்பட்டுச் சென்று ஹஜ்ஜின் சகல காரியங்களையும் எளிதில் முடித்துக்கொண்டு சுகமே தமது இல்லம் வந்து சேருவதற்கான சகல செளகரியங்களும் உள்ளவர்களுக்கே இந்த ஹஜ்ஜென்னும் மிக மேலான தத்துவத்தைக் கொண்டுள்ள ஸ்தல யாத்திரை மார்க்கப்படி கடமையாக்கப்பட்டிருக்கிறது.

இதுவுமல்லாமல், இஸ்லாமிய அரசாங்கங்கள் சம்பந்தமாய்ப் பரஸ்பரப் பரிசீலனை பண்ணலாமென எண்ணங் கொண்டவர்களும் இஸ்லாமிய உலகின் சகோதரத்துவத்தை வளர்க்கவேண்டுமென்று கருதுபவர்களும் ஹஜ்ஜென்னும் இம் முஸ்லிம் உலக மகா நாட்டுக்குச் செல்ல வேண்டியது அத்தியாவசியமே. இம்மாதிரியாய நோக்கங் கொண்டு ஹஜ்ஜுக்குச் செல்லும் இவர்கள் அங்கு மக்காவின்கண் வந்து கூடும் ஏனைநாட்டு முஸ்லிம்களிடம் தங்கள் இஸ்லாமிய நிலைமையையும், தங்கள் தேயத்தில் முஸ்லிம்கள் எந்நிலைமையிலிருந்து வருகின்றன ரென்பதையும் எடுத்துக் காட்டி, அவர்களுடைய தேயத்தில் முஸ்லிம்களின் நிலை எவ்வாறிருக்கின்றது? என்பதை இன்னவர்கள் தெரிந்து கொண்டு இவ்விரு தேசத்தினரும், இனியும் முஸ்லிம்கள் மேலான பதவியை அடைய வேண்டுமாயின், இல்லை, மார்க்க சம்பந்தமாய்ச் சகல முஸ்லிம்களும் முன்னுக்கு வரவேண்டுமாயின், என்ன செய்ய வேண்டுமென்பதைச் சமரசமாய்க் கலந்தாலோசனை செய்து ஒரு முடிவுக்குவர நிச்சயித்தல் வேண்டும். இம் மாதிரியான முறையில் இன்னவர்கள் கலந்தாலோசனை செய்து முடிபு செய்வதை நிறைவேற்றி வைப்பான் வேண்டி ஏகபராபரனான அவ் வாண்டவனிடமும் வேண்டிக் கொள்ளல் வேண்டும். தலைவர்களென்னப்படும் முஸ்லிம்கள் இவ்வாறு செய்யலாம் என்று மனோதிடம் கொள்வார்களாயின், இன்னவர்கள் கோரிய காரியம் சித்தியடைந்து, உலகின்பால் முஸ்லிம்கள் கெளரவம் வாய்ந்த ஒரு சமூகத்தவராய் விளங்குவார்க ளென்பதில் சந்தேகமில்லை.

ஏ முஸ்லிம் சோதரர்காள்! கஃபாவே நுங்களின் சொந்த இல்லமெனக் கொள்ளவேண்டும். தீன் துன்யாவின் சகல வியவகாரங்களும் அங்கிருந்தே தோன்றியிருக்கின்றன. இதை எக்காலமும் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்கள் மறந்து விடுவது கூடாது. உலகின்கண் காணப்படும் முஸ்லிம்களுக்குள் ளெல்லாம் எத்தனையோ விதமான எண்ணிறந்த அபிப்பிராய பேதங்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. எனினும், பிரபல பரிசுத்த கிப்லாவை முன்னோக்கித் தொழ வேண்டுமென்னும் இவ் விஷயத்தில் மாத்திரம் எந்த முஸ்லிமும் ஒரு சிறிதும் அபிப்பிராய பேதங் கொண்டவர்களாயில்லை. எனவே தான் கஃபாவைக் கிப்லாவைக் கொண்டு தொழும் எவனையும் ஒருவரும் காபிரென்று கூறக்கூடாதென நபிபெருமான் நவின்றருளி யுள்ளார்கள். எனவே, கிப்லாவை முன்னோக்கித் தொழும் அம் மனிதன் உண்மையான முஸ்லிமாவான். இவ்வண்ணம் தொழுதுகொண்டு வரும் ஒரு முஸ்லிம் மார்க்க சம்பந்தமாய் வேறு ஏதோ சில அபிப்பிராயபேதமான விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருப்பானாயின், இதனால் இவன் இஸ்லாத்தின் தாராள வட்டத்தை விட்டு வெளியில் நீங்கிவிடுவான் என்பது முடியாது.

நேயர்காள்! நம் நாயகம் (ஸல்) அவர்கள் பல வருஷங்கள் வரை மகா தைரியத்துடனும் மன உறுதியுடனும் உண்மையான பிடிவாதத்துடனும் உழைத்து, தங்கள் எதிரிகளால் ஏற்பட்ட சகலவித கஷ்டங்களையும் சகித்திருந்து, இறுதியில் ஹிஜ்ரீ 9-ஆம் ஆண்டில்தான் முஸ்லிம்கள் சுயேச்சையுடன் ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தைப் பெறும்படி செய்தார்கள். இதுதான் மக்காவின்கண் முஸ்லிம்கள் ஹஜ்ஜு செய்யச் சென்ற முதல் முறையாகும். அது சமயம் நம்பிரான் (ஸல்) அவர்கள் தாங்களும் சென்று ஹஜ்ஜு செய்ய முடியாதவர்களாயிருந்தனர். ஆனால், அதுகாலை முந்நூறு முஸ்லிம்கள்வரை சேர்த்து ஹஜ்ரத்அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களை அக்கூட்டத்திற்குத் தலைமையாகவும், ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்களை அதற்குச் சாக்ஷியாகவும் நியமனம் செய்து மக்கா முகர்ரமாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்களுடன் நபிகள் (ஸல்) அவர்கள் தங்களின் “ஹதீ” என்னும் உயிர்ப் பலியையும் அனுப்பி வைத்தார்கள். ஆனால், நம்பிரான் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரீ 10-ஆம் ஆண்டில் ஹஜ்ஜு செய்யும்பொருட்டு மக்காவுக்குச் சென்றார்கள். அது சமயம் உண்மை முஸ்லிம்கள், ஏகதெய்வக் கொடியை இவ்வுலகில் நாட்டிய வீரர்கள் ஓரிலக்ஷத்துக்கு மேலிருந்தனர். இதற்கே ஹஜ்ஜத்துல் விதாஃ என்றும் பெயர் கூறுவர். இந்த இறுதியான ஹஜ்ஜு முடிந்ததும் நபிகள் (ஸல்) அவர்கள் நமக்கென்ன வசிய்யத் செய்து சென்றார்கள்? என்பதை நன்கு கவனித்தல் வேண்டும்: —

“நீங்கள் இற்றைய நாளை, மேலும் இந்த ஸ்தலத்தை, மேலும் இம் மாதத்தை எவ்வாறு கனப்படுத்துகின்றீர்களோ, அவ்வாறே ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் உதிரத்தையும் செல்வத்தையும் கண்ணியத்தையும் பெருந் தன்மையையும் கனப்படுத்திக் கொண்டிருத்தல் வேண்டும். ஆண்டவன் நீங்கள் செய்துகொண்டு வரும் ஒவ்வொரு காரியத்தைப் பற்றியும் கேள்வி கேட்பான். எனக்குப் பின்னே நீங்கள் துன்மார்க்கத்தில் இறங்கிவிட வேண்டாம். ஒருவரை மற்றொருவர் கொலை புரியவேண்டாம். உங்களுக்குப் பெண்பிள்ளைகள்மீது பாத்தியதைக ளிருப்பதேபோல், பெண் பிள்ளைகளுக்கும் நுங்கள்மீது பாத்தியதைக ளிருக்கின்றன. நீங்கள் பெண்களிடம் ஒழுங்கான முறையில் நடந்துவரல் வேண்டும். அன்னவர்களைத் துன்புறுத்துவதும், கஷ்டப்படுத்துவதும் கூடா.

அடிமைகளை நல்ல விதமாய் நடத்திக் கொண்டு வரல்வேண்டும். நீங்கள் உண்ணுவதையே அன்னவர்களுக்குங் கொடுக்க வேண்டும். நீங்கள் உடுத்துவதையே அவர்களையும் உடுக்கச் செய்யவேண்டும். அவர்கள் ஏதேனும் தவறிழைத்து விடுவார்களாயின், அதனை மன்னித்து விடல்வேண்டும்; அல்லது அவர்களுக்கு உரிமையளித்திடல் வேண்டும். உங்களைப்போல் அவர்களும் ஆண்டவனுடைய அடியார்களாகவேதாம் இருக்கின்றனர். அரபிகள் அஜமீகளைக் காட்டினும் மேலானவர்கள், அல்லது அஜமீகள் அரபிகளைக் காட்டினும் உயர்ந்தவர்களென்று கருதிவிடவேண்டாம். ஆனால், மூஃமினான சகல மனிதர்களும் சகோதரர்களே யாவர். அன்றியும், உங்களுக்காக எனக்குப்பின்னே ஒரு வஸ்துவை விட்டுச் செல்லுகின்றேன். அதனை நீங்கள் கைக்கொள்ளூவீர் ளாயின், வழிதப்பிப் போக மாட்டீர்கள். அதுதான் குர்ஆன் ஷரீப். எனவே, இங்குக் கூடியிருக்கும் நீங்கள் இதுவரை யான் சொல்லிக்கொண்டு வந்த விஷயங்களை இங்கு வர முடியாமற்போன அன்னவர்களுக்கு அத்தியாவசியமாய்ச் சொல்லிவிட வேண்டும்.”

அதன் பிறகு நாயகம் (ஸல்) அவர்கள் அங்குக் கூடியிருந்த மானிடர்களை முன்னோக்கி, “இறுதி நாளின்போது ஆண்டவன், யான் உங்களுக்காகச் செய்யவேண்டியதைச் செய்து முடித்தேனா? என்று நுங்களிடம் கேட்பானாயின், நீங்கள் என்ன விடை யிறுப்பீர்கள்?” என்று வினவ, அங்கிருந்தவர்களெல்லாரும் ஏகோபித்து, “தாங்கள் கொணர்ந்த ரிஸாலத்தை எங்களுக்கு நல்ல விதமாய்ப் போதித்துத் தங்கள் கடமையை முடித்து விட்டீர்கள் என்றே கூறுவோம்,” என்று விடை பகர்ந்தார்கள். உடனே நபிகள் திலகம் (ஸல்) “நீங்களெல்லீரும் இதற்குச் சாஷியா யிருக்கின்றீர்கள்,” என்று அங்குக் கூடியிருந்தவர்களை முன்னோக்கிக் கூறினார்கள். மேலும் அவர்கள் கூறியதாவது :—

“ஏ மூமினீன்காள்! இந்த நமது இஸ்லாமார்க்கம் அதிக விசாலமடையும்படி மிக்க பிரயாசையுடன் நீங்கள் பிரசாரம் புரியவேண்டும். இந்த ஹஜ்ஜென்னும் காரியம் ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்களின் ஓர் உயர்ந்த ஞாபகார்த்தமாகும். அவர்கள் ஆண்டவனது வார்த்தைக்குக் கட்டுப்படுவான் வேண்டித் தங்கள் கழுத்தைக் கத்திக்குக் கீழே கூசாமல் வைத்தார்கள். அதற்கொத்தவாறாய் ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் அருமையான புத்திரரைவிட ஆண்டவனது பொருத்தமே வேண்டற் பாலதும் மேலானதுமெனக் கருதிப் பிள்ளையின் கழுத்தில் கத்தியை வைத்தார்கள். எனவே, நீங்களும் இப்ராஹீம் (அலை) அவர்களின் பரிசுத்த மேலான எண்ணத்தைப் போல் உங்களிடமுள்ள சர்வசுக செளகரியங்களைக் காட்டினும் ஆண்டவன் மீதுள்ள பக்தியையே மிகமிகப் பெரிதாய் எண்ணவேண்டும்…………”

ஆதலின், அன்புள்ள பெரியார்காள்! நீங்கள் ஒவ்வோராண்டிலும் இஸ்மாயீல் (அலை) அவர்களின் ஞாபகார்த்தமாய் ஆடு மாடு ஒட்டகங்களைக் குர்பானீ செய்கின்றீர்கள். இவ்வாறு குர்பானீ செய்வது மட்டுந்தான் அவர்களின் ஞாபகார்த்தமென் றெண்ணி விடாதீர்கள். என்னெனின், ஆண்டவன் தன் திருமறையில், “குர்பானீயின் உதிரங்களும் மாம்சங்களும் ஆண்டவனிடம் சேருவதில்லை. ஆனால், உங்களினின் றுண்டாகும் தக்வாவே அல்லாஹ்வைச் சாரும்,” என்று திருவுளமாயுள்ளான். எனவே, குர்பானீ செய்வதனால் நாம் அநேக காரியங்களைக் சாதித்து விட்டோம் என்று மனமகிழ்ச்சியடைந்து விடாது, அண்டவனுடைய உண்மையான பக்தர்களாய்த் திகழ்வதற்கு முக்கியமாய்க் காணப்படும் தக்வாவையே கைக்கொள்ள வேண்டுமென்று பெரும் பிரயாசை எடுப்பீர்களாக.

ஆண்டவனே! உன்னை அஞ்சி, உன்னுடைய பாதையில் முழுதும் அடிபணிந்து நடந்த முத்தக்கீன்களின் வர்க்கத்தாருள் எங்களையும் சேர்த்து, அன்னவர்கள் செய்து வந்த நற்காரியங்களே போல் நாங்களும் செய்ய நல்லுதவி செய்தருள்வாயாக. ஏ எங்களாண்டவனே! நாங்கள் கோரும் இக்கோரிக்கையை ஒப்புக்கொள்வாயாக. நீயோ சகல வஸ்துக்களையும் அறியக் கூடியவனாயும் வேண்டுகோள்களைக் கேட்கக்கூடியவனாயு மிருக்கின்றாய். ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلاَ رَفَثَ وَلاَ فُسُوقَ وَلاَ جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُواْ مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللّهُ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُوْلِي الأَلْبَابِ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment