اَلْحَمْدُ لله الَّذِي خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ وَ بَعَثَ النَّبِيِّيْنَ عَلَى الْأَرْضِ وَ نُصَلِّيْ عَلَى النَّبِيِّيْنَ الْمُرْسَلِيْنَ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ صَحْبِهِ اَجْمَعِيْنَ اَمَّا بَعْدُ
அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்கிறேன்.
நேர்வழி காட்டியாய குர்ஆனை இம் மாதத்திலே இறக்கி, இந்த ரமலான் நோன்பையும் நமக்குக் கடமையாக்கி வைத்த அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனுடைய ரஸூலையும் வாழ்த்திய பின்பு கவனிப்பீர்களாக.
“ஏ நன்னம்பிக்கை கொண்டவர்காள்! உங்களுக்கு முன்னுண்டானவர்கள் மீது நோன்பு கடமையாக்கப் பட்டிருந்ததே போல, உங்கள் மீதும் கட்டாயப் படுத்தப்பட்டிருக்கிறது: (என்னெனின்) நீங்கள் (ஆண்டவனுக்கு அஞ்சி நடக்கும்) பரிசுத்தமானவர்களாக ஆவதற்காக வேண்டியே” – (குர்ஆன் 2:183)
நோன்பின் மாட்சியையும், மாஹாத்மியத்தையும் நான் எடுத்துக் கூறப் புகுமுன்னே இதன் சில சட்டதிட்டங்களைச் சுருக்கமாய் எடுத்துச் சொல்லிவிடுகின்றேன். நோன்பின் எல்லை யாதெனின், வைகறை தொடுத்துக் கதிரவன் அஸ்தமிக்கும் வரை பகல் முழுவதும் மனிதர்கள் இச்சிக்கக் கூடிய வஸ்துக்களாகிய ஊண், குடிப்பு (ஸ்திரீ) சேர்க்கை போன்றவைகளைச் செய்வது கூடாதென்பதே யாம். பிரயாணிகளும் வியாதியஸ்தர்களும் தங்களுக்குச் செளகரியமான வேறு தினங்களிலே இந்த ரமலான் நோன்பை நோற்க அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றனர். அன்றி, அவ்விரு சாரார்களும் நோன்பு நோற்பார்களாயின், குற்றமில்லை. இவர்களுடைய செளகரியத்தை உத்தேசம் பண்ணியே வேறு தினங்களில் இவர்கள் நோன்பை நோற்கலாமென மார்க்கத்தில் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அன்றியும், நோன்பு நோற்க முடியாத அத்துணைக் கஷ்டத்தினுள் அகப்பட்ட வியாதியஸ்தர்கள் தினமும் ஒவ்வோர் ஏழைக்கு இருவேளையும் அன்னதானமளித்தல் வேண்டும். இம்மாதிரியாகவே பரிபூரண கர்ப்பவதியாயிருப்பவரும் பிள்ளைக்குப் பால் கொடுப்பவரும் செய்தால் குற்றமன்று என்றும் கூறப்பட்டுள்ளது.
முன் மார்க்கங்களின் நோன்பு
நம் இஸ்லாமிய சோதரர்களுக்கு நோன்பை கடமையாக்கும்போது, “நுங்களுக்கு முந்திய மார்க்கங்களில் நோன்பு விதியாக்கப்பட்டதே போல” என்று கூறப்பட்ட இந்த குர்ஆன் ஆயத்தினாலே முன் எல்லா மார்க்கங்களிலும் நோன்பு விதியாக்கப்பட்டிருந்ததென்பதை நாம் தெளிவாய்த் தெரிந்து கொள்ளுகின்றோம். ஆனால், சில மனிதர்கள் தாங்கள் ஈஸாவைப் பின்பற்றியவர்களாய்க் கூறிக்கொண்டு, மார்க்கமென்றால், இல்லை, நோன்பென்றால் இஃதொரு கஷ்ட சாத்தியமான காரியமெனக் கூறித் திரிகின்றனர். எனினும், அன்னவர்களின் ஞானபிதாவே நோன்பு நோற்றிருக்கின்றார் என்று அவர்களுடைய வேதத்தில் காணக்கிடக்கின்றது. மேலும், “நீங்கள் நோன்பு நோற்பீர்களாயின், உங்கள் முகலக்ஷணத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்,” என்று அந்த வேதம் கூறுகின்றது. இதுவுமல்லாமல், ஈஸாநபி அவர்களிடம் ஒருவர் சென்று, “தங்களின் சிஷ்யகோடிகள் நோன்பின் கட்டளைகளின்படி ஏன் சரிவர நடந்துவருகின்றார்களில்லை?” என்று வினவியபோது, அவர், “இப்னு ஆதம் என்னும் ஷைத்தான் இவர்களை விட்டு நீங்கிவிடுவானாயின், பிறகே இவர்கள் நோன்பு நோற்பார்கள்,” என்று விடையிறுத்தார்கள்.
எனவே, கிறிஸ்தவர்கள் நோன்பு நோற்பினும், நோற்காமற் போயினும், அவர்களுள் மேதாவிகளாய் விளங்கி நிற்கும் தத்துவ ஞான சாஸ்திரிகள் இவ்வண்ணம் நோன்புவைப்பது தேகத்துக்கு அதிக பிரயோஜனம் தரத்தக்கதாய்க் காணப்படுகின்றதென்று பற்பல வகையாலும் நன்கு விளக்கிக்காட்டி வருகின்றனர். மேலும், சில வியாதியஸ்தர்களுக்கு நோன்பு வைப்பதே நலமென வைத்தியர் கூறுகின்றனர்; அன்றியும் இரைப்பையின்கண் காணப்படும் அநேகவிதமான நோய்கள் இந்த நோன்பின் பயனாய்ப் பறந்து செல்கின்றனவென்று அப் பெரியார் அறைகின்றனர். “லங்கணம் பரமெளஷதம்” என்பது ஒரு முதுமொழியாகும்.
நோன்பின் தாத்பரியம்
நோன்பின் தாத்பரியமென்ன? இதனால் உண்டாகும் கஷ்டத்தையும் சங்கடத்தையும் ஏனோ சுமந்துகொள்ள வேண்டுமெனக் கேட்கப்படுமாயின், இதற்காகவேதான் அல்லாஹ் “நீங்கள் முத்தக்கீன்களாய் ஆகிவிடுவதற்காக” என்று அருளியுள்ளான். முத்தக்கீன் என்பதன் பொருளைச் சாதாரணமாய்க் கவனிக்குமளவில், “நீங்கள் (பாவத்தினின்று) பரிசுத்தமானவர்களாயும், தீமையை விட்டுத் தற்காத்துக்கொள்ளும் சக்தி வாய்ந்த மனிதர்களாயும் ஆய்விட வேண்டு” மென்பதை கண்டுகொள்வீர்கள். நோன்பு நோற்பதால் நல்ல மனிதர்களாய்ப் போய் விடுவது எப்படி சாலும்? நோன்பென்றாலே, ஒருவித கஷ்டத்தையும் சங்கடத்தையும் தன் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதாய்க் காணப்படுகிறதே என நீங்கள் எண்ணலாம். ஆனால், சகோதரர்காள்! சற்றே உற்றுக் கவனிப்பீர்களாக:
உலகத்தின்கண் ஒரு சிலர் உண்ணவும் குடிக்கவும் உல்லாசமாய்த் திரியவும் கூடாது வறுமையால் வாடுகின்றனர். வேறு சிலர் மேற்கூறிய சுகசாதனங்களை யெல்லாம் வகிக்கக் கூடியவர்களா யிருக்கின்றனர். ஆனால், இவர்களும் சில சமயங்களில் பிரயாணத்திலிருக்கும் போதும் வேறு சில கஷ்டமான வேளைகளில் ஈடுபட்டிருக்கும் போதும் அவ்வாறான கஷ்டத்துக்குள்ளாகும்படியான அவசியம் நேரிடுகின்றது. ஆண்டவனோ, ”நீங்கள் நோன்பு நோற்பதனால் பரிசுத்தமான நல்ல மனிதர்களாய்ப் போய்விடுவீர்க” ளெனக் கூறுகின்றான்.
‘நல்ல மனிதர்கள்’ என்று சொல்லும்போது, இதில் இரண்டுவிதத் தாத்பரியங்கள் காணப்படுகின்றன: முதலாவது, இவ்வுலக வாழ்க்கையில் நல்ல மனிதர்களாய் இருப்பதென்பதாகும்; இரண்டாவது, மனிதன் செய்த ஒவ்வொரு காரியத்துக்கும் விடை பகரவேண்டிய இறுதி நாளன்று ‘நல்ல மனிதன்’ என்ற பெயர் வாங்குவதாகும். எனவே, இங்குக் கூறப்பட்டுள்ள ‘நல்ல மனிதன்’ என்பது இரண்டு லோகங்களுக்கும் நல்ல மனிதன் என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. என்னெனின், நமது திருமறையில் உபதேசங்களெல்லாம் மறுவுலக வாழ்க்கையை மாத்திரம் இனிதுறச் செய்தற்காக மட்டிலே இறக்கப்பட்டில்லை. ஆனால், அவ்வுலக வாழ்க்கையைப் போலவே இவ்வுலக வாழ்க்கையையும் மிக எளிதாய் நடத்தவேண்டுமென நம் மறை நன்கு போதித்து நிற்கின்றது. எப்படியெனின், ஓரிடத்தில் இல்வாழ்க்கையில் ஈடுபட வேண்டுமென எம் வேதம் எச்சரிக்கை செய்கின்றது. பிறகு இதற்குச் சம்பந்தமான விவாக விமோசனம் சம்பந்தமாய் விளம்புகின்றது. மற்றுமோர் இடத்தில் வியாபார சம்பந்தமாயும் கொடுக்கல் வாங்கல் விஷயமாயும் கூறுவதுடன், கடன் வாங்கினால் கொடுத்தால் எப்படி நடக்கவேண்டு மென்பதை விளக்குகின்றது. இன்னுமோர் இடத்தில் யுத்தத்தின்போது அங்கு எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதைக் கற்பிக்கின்றது.
இவைபோன்ற இன்னமும் அநேக விஷயங்களெல்லாம் இவ்வுலக சம்பந்தமானவையாகும். எனவேதான், குர்ஆனில், “நீங்கள் பரிசுத்தவான்களாகவும் நல்லவர்களாகவும் ஆய்விட வேண்டு” மென்று இவ்விஷயம் கூறப்பட்டுள்ளது; இவ்வுலகத்திலும் நீங்கள் நல்லவர்களாய்ப் போய்விட வேண்டுமென்பதையே இது சுட்டிக் காட்டுகின்றது. ஆனால், ஒரு சிறிய காரியத்திலும் மனிதன் இச்சையின் (நப்ஸின்) அடியானாய்ப் போய்விடுகின்றான். இது விஷயத்தைக் கவனிக்குமளவில், ஆடு மாடு குதிரை முதலிய பிராணிகள் இச்சைக் கிசைந்தனவாய்த் தென்படுவதேபோல் மனிதனும் காணப்படுகின்றான். உண்மையைக் கவனிக்குமிடத்து, மிருகங்களைப் பார்க்கினும் எத்தனையோ விதத்தில் மனிதன் மேலானவனாயிருந்து வருகின்றான். என்னெனின், மனிதனோ, தனக்குள்ளிருக்கும் கெட்ட குணங்களையும், இச்சையையும் அடக்கியாளக்கூடிய அபார சக்தி வாய்ந்தவனாயிருக்கிறான். இவ்வாறு அடக்கியாளக் கற்றுத் தேறுவது இந்த நோன்பின் ஒரு நோக்கமாகும். மிருகங்களோ, இவ்வாறில்லை.
எனவே, நோன்பு நோற்பதனால் மனிதன் தன்னுடைய குணங்களனைத்தின்மீதும் ஆதிக்யமடைந்து அரசாள வேண்டுமென்பதே முக்கிய நோக்கமாய்க் காணப்படுகின்றது. இன்னம், இவ்வுலகில் வந்தடுப்பதெல்லாம், சர்வ சாதாரண சகஜமான விஷயமாகும். எந்த கஷ்டமும் துன்பமும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமானவையல்ல. பரம ஏழைகளான பரதேசிகளுக்குக் கஷ்டம் வருவதேபோல் மாபெரும் தனவந்தருக்கும் கஷ்டங்கள் வந்தே தீருகின்றன.
எனவே, நமது மாசில்லா மஹா மேலான குர்ஆன் ஷரீப் மனிதர்களை மறுவுலகுக்குப் பரிபக்குவப்படுத்துவதேபோல், இவ்வுலகிலும் நன்றாய் வாழ்ந்துவர வேண்டுமென்பதற்கான உயர்தரச் சாதனங்களை நன்றாய் எடுத்தோதுகின்றது. மிருகங்களே போலன்றி, மனிதன் ஆறறிவுடன் வாழ்தல் வேண்டும். ஆதலின், எல்லாம் வல்ல இறைவன், நாமனைவரும் நல்லவிதத்தில் இந்த ரமலான் மாத நோன்பை நோற்று இகத்துக்கும் பரத்துக்கும் உரிய சர்வ நற்சாதனங்களையும் அடைவதற்கு வேண்டிய முத்தக்கீன்களாகச் செய்தருள்வானாக. ஆமீன்!
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ حَقَّ تُقَاتِهِ وَلاَ تَمُوتُنَّ إِلاَّ وَأَنتُم مُّسْلِمُونَ
بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ
Image courtesy: freedesignfile.com
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License