சாபமிட்டார் வானவர்! “அவனுக்கு இறையருள் தூரமாகட்டும்”.

“ஆமீன்” (அப்படியே ஆகட்டும்) என்று அதை ஆமோதித்தார் இறைத் தூதர்.

திரையிலும் நாடகத்திலும், கதையிலும் கட்டுரையிலும் கண்டும் வாசித்தும் கடந்துவிடுவதைப் போன்ற சாபமன்று இது. குறைந்த அளவு கவனத்தைச் செலுத்தினாலே போதும், நெஞ்சம் திடுக்கிட்டு அஞ்ச போதுமான தகவல்கள் அடங்கியுள்ள நபிமொழியின் பகுதி அது. அல்லாஹ்வினிடமிருந்து இறை வசனங்களைச் சுமந்து வரும் வானவர் ஜிப்ரீல் (அலை) சாபமிடுகிறார். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அந்த துஆவிற்கு “ஆமீன்” உரைக்கிறார்கள். எனில் அது அல்லாஹ்வின் அங்கீகாரத்தைப் பெறும் சாத்தியம் அத்தனையும் நிறைந்த துஆ! எனும்போது நாம் அச்சத்தில் உறைய அது போதாது?

அத்தகு அபாக்கியவான் யார்? அவனுக்கு எதிராக இந்த சாபம் ஏன்? எதற்கு? எப்படி?

அந் நிகழ்வை கஅப் பின் உஜ்ராவின் (ரலி) அறிவிப்பு இவ்விதம் விவரிக்கிறது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் மிம்பரைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள். நாங்கள் அதனை கொண்டு வந்து வைத்தோம். அவர்கள் முதல் படியில் ஏறும்போதும் ”ஆமீன்” என்று கூறினார்கள். இரண்டாவது படியில் ஏறும்போதும் ”ஆமீன்” என்று கூறினார்கள். மூன்றாவது படியில் ஏறும்போதும் ”ஆமீன்” என்று கூறினார்கள். அவர்கள் இறங்கியபோது நாங்கள் ” அல்லாஹ்வின் தூதரே நாங்கள் இதுவரை கேட்டிராத ஒரு விஷயத்தை உங்களிடமிருந்து இன்று கேட்டோமே” என்று கூறினோம். அதற்கு நபியவர்கள் ”ஜிப்ரீல் (அலை) அவர்கள் எனக்குக் காட்சி தந்து ”எவன் ரமளான் மாதத்தை அடைந்தும் அவனுக்கு பாவமன்னிப்பு வழங்கப்படவில்லையோ அவனுக்கு (இறையருள்) தூரமாகட்டும்” என்று கூறினார்கள். நான் ”ஆமீன்” (இறைவா இதை ஏற்றுக் கொள்வாயாக) என்று கூறினேன். இரண்டாவது படியில் நான் ஏறும்போது ”யாரிடம் (நபியாகிய) நீங்கள் நினைவு கூறப்பட்டும் உங்கள் மீது அவன் ஸலவாத்து சொல்லவில்லையோ அவனுக்கு (இறையருள்) தூரமாகட்டும்” என்று கூறினார்கள். நான் ”ஆமீன்” என்று கூறினேன். நான் மூன்றாவது படியில் ஏறும்போது ”எவனிடம் அவனுடைய பெற்றோர்கள் இருவருமோ அல்லது இருவரில் ஒருவரோ முதுமைப் பருவத்தை அடைந்து (அவர்களுக்குப் பணிவிடை செய்வதின் மூலம்) அவன் சொர்க்கம் செல்லவில்லையோ அவனுக்கு (இறையருள்) தூரமாகட்டும்” என்று கூறினார்கள். நான் ”ஆமீன்” என்று கூறினேன். (நூல் : ஹாகிம் (7256) பாகம் : 4 பக்கம் : 170)

இந்த நபிமொழியில் முதலாவதாக இடம் பெற்றுள்ளவரைப் பற்றி மட்டும் இக் கட்டுரைக்காக இங்கு நாம் கவனம் செலுத்துவோம். அல்லாஹ் தன்னுடைய அருளின் வாயில்களைத் தாராளமாகத் திறந்து வைக்கும் ரமளான் மாதம் இது. சதா சர்வ நேரமும் நம்மை அலைக்கழிக்கும் ஷைத்தான்களுக்கு விலங்கிட்டுக் கட்டிவைத்து, ‘எங்கே, இம்மாத்திற்குரிய நல்லறங்களைத் தடையின்றி புரியுங்கள் பார்ப்போம்’ என்று நமக்கு மாபெரும் சலுகை அளிக்கப்பட்டுள்ள தருணமிது. விளையாட்டு மைதனாத்தில் எதிரியை பலவீனமாக்கிவிட்டு, ‘அடித்து ஆடி வெல்’ என்றால் அது எப்பேர்பட்ட வாய்ப்பு?


அதை அப்படியே அலட்சியப்படுத்திவிட்டு, அல்லாஹ்வின் பாவமன்னிப்பை ஈன்றெடுக்க முயற்சி எடுக்காதவனைப் பார்த்து ‘உச்சு’ கொட்டி வெறுமே வருத்தப்பட்டு கடந்துவிட முடியாது, அவன் இறையருளுக்குச் சற்றும் இலாயக்கற்றவன் என்பதை வலியுறுத்தி எச்சரிக்கும் நபிமொழி இது.

நெருங்கிய உறவினர் ஒருவர் சென்னையில் அரசாங்கப் பணியில் மிக உயர்ந்த பதவியில் இருந்தார். என் தந்தை ஒருமுறை அவரிடம், “நேரம் தவறாமல் தொழுது விடு. மதிய உணவு இடைவேளையின்போது அந்நேரத்திற்குரிய தொழுகையை நீ நிறைவேற்றும்போது, உன்னைக் காண வருபவர்களை ஏதேதோ காரணங்களுக்கு நிறுத்தி வைக்கும் பியூன், இச் சமயத்தில் ‘ஸார் இறைவணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றார்’ என்று நிறுத்தி வைத்தால், உனக்கு அது பெருமையையும் மதிப்பையும்தான் ஈட்டுமே தவிர எவ்விதத்திலும் பங்கத்தை அளிக்காது” என்று அறிவுறுத்தினார்.

கடமைகளான தொழுகையிலும் நோன்பிலும் அலட்சியமாக இருந்த அவருக்கு, பணி ஓய்விற்குப் பிறகு தொழுவதில் நாட்டம் ஏற்பட்டு, அதற்கான வாய்ப்பு அமைந்து போனாலும் உடல்நலக் குறைபாடுகளால் நோன்பு நோற்கும் பாக்கியம் அவருக்கு இல்லாமலே போய்விட்டது. பிற்கால சூழ்நிலை நோன்பிலிருந்து விலக்குபெறும் தகுதியை அவருக்கு அளித்தாலும் முற்காலத்தின் அத்தனை ஆண்டுகளிலும் நோன்பைத் தவறவிட்டது வெறும் பரிதாபத்திற்குரிய செயலா என்ன?

இதற்கு நேர்மாறான ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த, எனக்கு மிகவும் அணுக்கமான நண்பர் அவர். பல ஆண்டுகளாக இன்னதென்று கண்டுபிடிக்க முடியாதபடி அவரது வயிற்றில் ஒரு நோய். பார்க்காத மருத்துவம் இல்லை. ஆயினும் நிரந்தர குணமின்றி, பெரும்பாலான மாதங்கள் பெரும் உபாதையுடனேயே அவருக்குக் கழியும். அதனால் நோன்பு நோற்க முடியாத சூழ்நிலை. ரமளான் மாதங்களில் தொழுகையில் சந்திக்கும்போது அவரது முகத்தில் அதிகப்படியான சோகம் மறைக்க இயலாமல் தென்படும். ஆனால் கடந்த ஆண்டு, அவரது முகத்தில் புது களை. விசாரித்தபோது, ‘மருத்துவரின் ஆலோசனையைச் சற்று உதாசீனப்படுத்திவிட்டு, முயன்று பார்க்கலாமே என்று முதல் சஹ்ர் செய்தேன். ஏதும் பிரச்னையின்றி அன்றைய நோன்பு கழிந்தது. தொடர ஆரம்பித்தேன். என்னவோர் ஆனந்தம் தெரியுமா? சரியாக விவரிக்க என்னிடம் வார்த்தையில்லை’ என்று அவர் மெய்யுறுகி விவரிக்க, விவரிக்க என் கண்கள் பனித்துவிட்டன. இத்தனைக்கும் வட அமெரிக்காவில் நாங்கள் வசிக்கும் பகுதியில் ஜுன் மாதங்களில் நோன்பு பதினெட்டு மணி நேரம்.

வெறுமே பட்டினி கிடப்பதன்று ரமளான். அது வழிபாடு! உடலையும் உள்ளத்தையும் கழுவிப் பரிசுத்தப்படுத்தப்படுத்தும் ஆன்ம சிகிச்சை.

ரமளான் மாதம் வந்ததுமே ஒவ்வோர் ஊரும் முஹல்லாவும் மஸ்ஜிதும் புதுப் பொலிவு பெறுவதையும் மிகப் பெரும்பாலான முஸ்லி்ம்கள் மத்தியில் ஆன்மப் புத்துணர்ச்சி பொங்குவதையும் காண முடியும், நம்மிடமும் உணர முடியும். ஆனால் அவை யாவும் கலாச்சார சம்பிரதாயங்களினால் நவீன வடிவு பெற்றிருக்கும் இஃப்தார் விருந்துகளிலும் இரவுத் தொழுகைக்குரிய வாத விவாதங்களிலும் சஹர் நேர ஒலி/ஒளி நிகழ்வுகளிலும் திசை மாறிப் போகாமல் காக்க வேண்டிய புதுப் பொறுப்புக்கு நாம் ஆளாகியுள்ளோம். ஏனெனில் இத்தகு கவனச் சிதறல்களினால், ரமளானை அடைந்தும் பாவமன்னிப்பை அழுது கோரி அடையும் வாய்ப்பை நாம் தவறவிட்டு விட்டால், இக் கட்டுரையின் ஆரம்பித்தில் பார்த்த ஹதீஸ் குறிப்பிடும் சாபத்திற்கு உரிய ஒருவராக இடம்பெறும் பேராபத்தில் அல்லவா அது முடியும்? ஈடு செய்யக்கூடிய நஷ்டமா அது?

மாறாக நோன்பு நோற்கும் இம் மாதத்தில் நமது கவனத்தை அப்படியே ஒருமுகப்படுத்த அற்புதமான கையேடு உள்ளது. குர்ஆன்!

அப்படியான குர்ஆனுடன் இந்த ரமளான் மாதத்தில் நமது தொடர்பும் பிணைப்பும் ஓய்வின்றி அதிகப்பட வேண்டுமில்லையா? இரவு நேரத் தொழுகையின் வாயிலாகவும் ஓதி அர்த்தம் உணர முற்படுவதன் மூலமாகவும் நமது நேரத்தை குர்ஆன் ஆக்கிரமிக்க வேண்டும். அவ்வாறன்றி இணைய உலகின் சோஷியல் தொடர்புகளில் இரவின் நிமிடங்கள் வீணாகுமானால் அது அளவற்ற பேரிழப்பு!

ஏனெனில் ரமளானின் சட்ட விவரங்களைக் குறிப்பிடும் குர்ஆன் வசனங்கள் போக, ரமளான் நோன்பின் முக்கிய நோக்கமாக அல்லாஹ் நமக்கு அறிவிப்பது ஒன்றே ஒன்றுதான். தக்வா எனும் இறையச்சம்.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (குர்ஆன் 2: 183)

என்ற இந்த வசனத்தில் இடம் பெறும் ‘தக்வா’ இதர மொழிகளில் எளிதில் பெயர்க்கமுடியாத அரபி வார்த்தை. இறையச்சம், இறை பக்தி, இறை நெறி அறம் என்றெல்லாம் ஓரளவு அவற்றைப் பொருள் உணர்ந்துகொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் நம்மிடம் பெரும் பலவீனப்பட்டுக் கிடக்கும் விஷயங்கள் இவை. இந்த ரமளானில், இதற்கெனவே கடமையாக்கியுள்ள நோன்பில் அவற்றை மீட்டெடுப்பதில் நாம் கவனக் குறைவாகிவிட்டால், பிறகு எப்பொழுதான் அதைச் செய்யப் போகிறோம்?

-நூருத்தீன்

சமரசம் 1-15 ஜுன் 2017 இதழில் வெளியான கட்டுரை

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment