மெரிக்காவில் கொரோனா வந்திறங்கிய நாளாய் அந்நோய்க்கு ஆளானவர்கள், மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்று இன்று முதலாம் இடத்தை எட்டிவிட்டது அந்நாடு. அனைத்து விஷயத்திலும் தானே முன்னோடியாக இருக்க வேண்டும், உலகத்தில் தானே ‘நம்பர் ஒன்’-ஆக இருக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் எண்ணமும் அரசியல் செயல்பாடுகளும் அப்படியொன்றும் இரகசியமானதல்ல. ஆனால், இந்த கொரோனா விஷயத்தில் மட்டும் தான் கடைசி பெஞ்சில் இருக்கத்தான் அமெரிக்கா ஆசைப்பட்டிருக்கும். அந்த எண்ணத்தில் மண் அள்ளிப்போட்டுவிட்டது கொரோனா வைரஸ். ஏப்ரல் 12, 2020 வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்துக்கும் அதிகம். மரணமடைந்தவர்கள் 20,614.

இத்தனைக்கும் இத்தாலியில் இந்நோய் பரவத் தொடங்கியபோது அம்மக்கள் அலட்சியமாக நினைத்ததைப்போல் அமெரிக்கர்கள் எண்ணவில்லை. உலகெங்கும் அழையா விருந்தாளியாய் நுழையத் தொடங்கிவிட்ட கொரோனாவைப் பற்றிய அச்சமும் அது பற்றிய விழிப்புணர்வும் அவர்களிடம் இருக்கத்தான் செய்தன. ஆனால் அதிபருக்குத்தான் அசாத்திய நெஞ்சுரம். அந்த வைரஸ் சீனத் தயாரிப்பு, நாம் பலவான் என்று பேசிக்கொண்டிருந்தார். இந்தியாவுக்குப் பயணம் சென்று பிரதமரை நெஞ்சாரத் தழுவி நட்பு பாராட்டிக்கொண்டிருந்தார். அவர் திரும்பி வந்து சேர்ந்த நேரத்தில் அமெரிக்காவை வைரஸ் ஆரத் தழுவி, ஆட்டத்தைத் தொடங்கிவிட்டது கொரோனா.

ஒரு சில மரணச் செய்திகள் வரத் தொடங்கியதுமே வீடடங்கு உத்தரவு வெகு தூரமில்லை என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். அவசியப் பொருள்களை மளமளவென்று வாங்கிச் சேகரிக்க முனைந்து சூப்பர் மார்க்கெட்டுகளில் பெரும் கூட்டம், அபரிமிதமான விற்பனை. டாய்லெட் பேப்பர்கள் விற்றுத் தீர்ந்து தட்டுப்பாடாகி மக்கள் பரிதவித்த செய்தியெல்லாம் இந்தியர்கள் வியப்பதற்கான செய்தி. எதிர்பார்த்ததைப் போலவே, வீடடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அது படிப்படியாய் இறுக்கப்பட்டு, வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா, கேளிக்கை, விளையாட்டு நிகழ்ச்சிகள் என்று பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்திற்கும் தடை ஏற்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் உலகமே எதிர்பார்க்காத ஒன்றுதான் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு.

டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளாய் அவரது அரசியல் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் தனி ரகம். அவரது கட்சிக்காரர்களும் அரசவை நிபுணர்களுமேகூட ரூம் போட்டு சுவரில் தலையை முட்டிக்கொள்ளும் சிறப்பு ரகம். கொரோனா பிரச்சினையின் முழு வீரியத்தைத் தாமதமாக உணரத் தொடங்கியபின், அதிரடி செயல்பாடுகள் என்று அவர் எடுக்கும் முடிவுகள், அளிக்கும் பேட்டிகள் எல்லாம் World Health Organization (WHO) உட்பட பலருக்கு மேலும் தலைவலியை உருவாக்கி விட்டன. முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது, சர்வ சாதாரணமாய்ப் பொய்த் தகவல்களைத் தெறிக்க விடுவது என்று வழக்கமாய் அமையும் அவரது பேட்டிகளை அசாதாரணமான இக்காலகட்டத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஊடகத்தினர் கொதித்துப் போய்விட்டார்கள். ‘பொறுத்தது போதும், அவர் சொல்வதை அப்படியே நாம் மக்களுக்கு அளிக்காமல், அவர் தரும் தகவல்களின் நம்பகத்தன்மையை விசாரித்துதான் வெளியிட வேண்டும்’ என்று ட்வீட் செய்துள்ளார் மிகா (Mika Brzezinski) என்ற தொலைக்காட்சி தொகுப்பாளினி.

அதிபர்தான் அப்படியே தவிர, அமெரிக்கா உருவாக்கி வைத்துள்ள “ஷிஸ்டம்” மோசமடையவில்லை என்பதே இந்த அனைத்திலும் ஆறுதல். அதன் நிர்வாகச் செயல்பாடுகள் பெருமளவு ஒழுக்கமுடன்தாம் நடைபெறுகின்றன என்பதுதான் இந்தியா போன்ற நாடுகளுக்கும் அதற்கும் உள்ள மாபெரும் வித்தியாசம். மாநிலங்களும் மருத்துவர்களும் இதரத் துறையினரும் படு உக்கிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள். அதிபரை எதிர்த்து முகத்துக்கு எதிரே கேள்வி கேட்கும் சுதந்திரம் இன்னும் பறிக்கப்படவில்லை என்பதால் அரசின் செயல்முறைகளை ஊடகங்கள் விமர்சித்து, இந்த நேரத்தில் அடுத்து எதைப் பற்றி கவலைப்பட வேண்டுமோ, பேச வேண்டுமோ அதைப் பேசுகிறார்கள்.

நிகழ்வுறும் மரணங்கள் பெருஞ் சோகம் என்பது ஒருபுறமிருக்க, கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதாரச் சீரழிவுதான் இன்று அமெரிக்கர்களின் இராத் தூக்கத்தை மேலதிகம் கெடுத்துக்கொண்டிருக்கிறது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் வேலையின்றிப் போனவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே அறுபது இலட்சம். வேலையில்லாதவர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டத்திற்கு வந்து குவிய ஆரம்பித்துள்ள உதவிகோரல் விண்ணப்பங்களின் அடிப்படையில் தொழிலாளர் துறை இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது அமெரிக்கா கேள்விப்பட்டிராத எண்ணிக்கை. முன்னர் பொருளாதாரம் மந்தகதியில் இருந்ததாகக் கருதப்படும் காலகட்டங்களில் கூட இரண்டு ஆண்டு எண்ணிக்கையைக் கூட்டினால் அச்சமயம் பாதிக்கப்பட்டவர்கள் இதில் பாதி மட்டுமே என்று ஒப்பீட்டையும் தெரிவித்துள்ளது அத்துறை.

‘சந்தேகமேயில்லை. இது மாபெரும் எண்ணிக்கை’ என்று மெய்க் கவலையுடன் தலையை ஆட்டும் பொருளாதார வல்லுநர்கள் இது மேலும் அதிகரிக்கும் என்று கருத்து வேறுபாடின்றி ஒப்புக்கொள்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை இரண்டு கோடியை எட்டும் என்கிறது ஒரு கணிப்பு. “ஒட்டுமொத்த பொருளாதாரமும் திடீரென கருந்துளைக்குள் விழுந்துவிட்டதைப் போல் உள்ளது” என்று கேத்தி போஸ்ட்ஜான்சிக் (Kathy Bostjancic) கூறியுள்ளார். ஆக்ஸ்போர்டு பொருளாதாரப் பிரிவில் அமெரிக்க நிதிப் பொருளாதார தலைமை நிபுணர் இவர். இவற்றையெல்லாம் உணர்ந்து, மத்திய இருப்பு நிதியிலிருந்து 2.3 டிரில்லியன் டாலர்களை நிதி உதவியாக நிறுவனங்களுக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் வழங்கி, சரியும் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கும் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. அதாவது 2,300,000,000,000 டாலர்கள்.

பொது மக்கள் பலர் பத்திரிகைகளுக்கு அளிக்கும் பேட்டிகள் வேகமாக மாறிவரும் சராசரி அமெரிக்கரின் வாழ்க்கை நிலையை பிரதிபலிக்கின்றன. சோகமும் நிச்சயமற்றத்தன்மையும் அதில் இழையோடுகின்றன. கணவர், இரண்டு மகன்கள் கொண்ட சிறு குடும்பத்தின் தலைவியான திருமதி கிளார்க், “எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டிருக்கிறோம். விரக்தியடைந்திருக்கிறோம். இந்நிலை அடுத்து எங்கு இட்டுச் செல்லும் என்று எனக்குத் தெரியவில்லை. மாதா மாதம் செலத்த வேண்டிய தொகைகளைச் செலுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டோம். வீட்டு அடமானத் தொகையை மட்டும் செலுத்துகிறோம். அதனால் வீட்டை இழக்க மாட்டோம் என்பது மட்டுமே ஆறுதல்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அரசாங்கம் வழங்கும் நிதியுதவியிலிருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சிறு தொகை ஒன்று வந்து சேரும். “அது அந்த குடும்பங்கள் நெருக்கடியிலிருந்து தப்பிக்க உதவும். மக்களைப் பொருளாதாரப் பேரழிவிலிருந்து காப்பாற்றி, குடும்பத்தைப் பராமரித்து மீள உறுதி செய்யும்” என்று சான் பிரான்சிஸ்கோவின் மத்திய ரிசர்வ் வங்கியின் மூத்த துணைத் தலைவர் ராபர்ட் ஜி. வாலெட்டா (Robert G. Valletta) கூறியுள்ளார். “கடுமையான இந்நெருக்கடியின் போது இந்த உதவி நிதி மளிகை வாங்க, வாடகை செலுத்த, மக்களுக்கு உதவும்; நிறுவனங்கள் முற்றிலும் முடங்கிவிடாமல் தொடர்ந்து இயங்க வழி செய்யும்; நோயிலிருந்து நாடு மீளும்போது பெரும் சரிவிலிருந்து இது காப்பாற்றும்” என்கிறார் பொருளாதார வல்லுநர் கேத்தி பரேரா (Cathy Barrera).

“பணம் செலவழிப்பதில் எங்களது முன்னுரிமைகள் மாறிவிட்டன. உணவுப் பொருட்களுக்குச் செலவழிக்கிறோம். முன்னர் ஆன்லைனில் திரைப்படம் வாடகைக்கு எடுப்போம். அதை நிறுத்திவிட்டோம்” என்று மற்றொரு அமெரிக்கர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குடும்பத்திலும் நிகழும் இத்தகு சிறு மாற்றங்கள் அதன் பின்னணியில் உள்ள பெரும் நிறுவனங்களையும் சங்கிலித் தொடராய் பாதிக்கப் போகின்றன. அதற்கான அடையாளங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன.

உலகின் மிகப் பெரும் திரைப்பட அரங்கு நிறுவனமான AMC திவாலாகும் நிலையை எட்டிவிட்டது; மஞ்சள் கடுதாசி அளித்துவிடும் என்கின்றன இன்றைய செய்திகள். மார்ச் 16 முதல் மூடப்பட்ட திரையரங்குகள் ஆகஸ்ட் வரை மீண்டும் திறக்கப்படும் சாத்தியம் இல்லை என்பதால் அந்நிறுவனம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதாம். அண்மையில் சஊதி அரேபியாவில் தொடங்கப்பட்ட திரையரங்குகள் இந்த AMC நிறுவனத்தைச் சார்ந்தவைதாம். இது ஓர் உதாரணம் மட்டுமே. கொரோனாவிலிருந்து நாடும் உலகமும் மீண்ட பிறகே ஒவ்வொரு நிறுவனமும் எந்நிலையிலிருக்கிறது என்ற உண்மை நிலை தெரியவரும்.

ஆக-

இப்படியெல்லாம் பொருளாதாரம் சார்ந்த கவலை, நிதியுதவி, மீட்புத் திட்டம், பொது மக்கள் சந்தித்துள்ள இழப்புகள், ஊடகங்களில் அவை குறித்த பேச்சு என்ற மெய்யான கரிசனமும் உருப்படியான செய்திகளும் கேள்விகளாக, விவாதங்களாக அமெரிக்காவிலும் உலகின் இதர நாடுகளிலும் நடைபெற்றுக்கொண்டிருக்க, இந்தியாவில் மட்டும் இவையெல்லாம் பேசுபொருளாகக்கூட இன்னும் உருவாகவில்லை! மட்டுமின்றி, இறைவனின் மாபெரும் சோதனை இறங்கியிருக்கும் இக்காலகட்டத்தில்கூட மத, இன வெறுப்புணர்வு அரசியலில் ஈடுபட்டுள்ள அரசாங்கமும் அதன் மகுடி இசைக்குக் கட்டுப்பட்ட நாகமாய் பொதுஜன ஊடகமும் திசைமாறி நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு இவர்கள் இழைக்கும் அநீதியை என்னவென்பது?

கொடுங்கோல்!

-நூருத்தீன்

புதிய விடியல் ஏப்ரல் 16-30, 2020 இதழில் வெளியான கட்டுரை

அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்


Creative Commons LicenseThis work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment