நபி பெருமானார் வரலாறு – இரண்டாம் பதிப்பு

by நூருத்தீன்

ந்நூலை என் தந்தை எழுதிக்கொண்டிருந்த போது நான் நடுநிலைப் பள்ளி மாணவன். தாருல் இஸ்லாம் பத்திரிகை பணி முடிவுற்றபின் அவர்களது எழுத்துப் பணிகள் குறைந்து விட்டன. வாழ்வாதாரத்திற்கு மெய்ப்பு திருத்தும் பணி. அச்சமயத்தில் பூம்புகார் பிரசுரத்தில்

நிர்வாகப் பொறுப்பில் இருந்த திரு. பரதன் இப்படியொரு நூலை வெளியிட விருப்பம் தெரிவிக்க என் தந்தை பெரும் ஆர்வத்துடன் எழுதத் தொடங்கினார்கள். ஆரம்ப அத்தியாயங்களை வாசித்துவிட்டு பூம்புகார் பிரசுரத்தினருக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. அவர்கள் அளித்த ஊக்கத்தை என் தந்தை வீட்டில் பகிர்ந்துகொண்ட செய்தியெல்லாம் இன்றும் பசுமையாக என் நினைவில் உள்ளது.

அது DTP உருவாகாத அச்சுக் காலம். தாவணி நீளத்திற்கு வரும் முதல் galley proof -இலிருந்து page set செய்து வரும் இறுதி proof வரை, அசலுடன் வைத்து ஒப்பிட்டு திருத்தம் பார்ப்பது பெரும் பணி. திருத்தியபின் என்னை உட்கார வைத்து, ஒருமுறை அசலில் இருந்து ஒவ்வொரு வார்த்தையாகவும் கமா, ஃபுல்ஸ்டாப், செமிகோலன், என்று சிறப்புக் குறியுடனும் அவர்கள் வாசிக்க வாசிக்க நான் திருத்தியதை சரிபார்க்க வேண்டும். ஏதும் விட்டுப் போயிருந்தால் தெரிவிக்க வேண்டும். இது அவர்களது அனைத்து மெய்ப்பு திருத்தும் பணிக்கும் நடக்கும். இந்த நூலுக்கும் நடந்தது. அதனால் இந்நூல் உருவாக ஆரம்பித்த போதே அதனுடன் எனக்கு ஒரு தொடர்பு.

நூலின் இறுதிப் பகுதி. நபி பெருமானார் (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை அடங்கிய அத்தியாயத்தின் திருத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திடீரென்று என் தந்தை சிறு பிள்ளையைப் போல் தேம்பித் தேம்பி அழ, சிறுவன் நான் திடுக்கிட்டு அவர்களைப் பார்த்தேன். புரியவில்லை. எனது சில சந்தேகங்களுக்கு அவர்கள் விளக்கம் அளித்தபோதும் அப்பொழுது அது எனக்கு வெகுவாகப் புரியவில்லை.

பிறகு அல்லாஹ்வின் அருளால் நபித் தோழர்களின் வரலாற்றை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததே, அப்பொழுதுதான் புரிந்தது. முன்னும் பின்னுமாக நபியவர்களின் வாழ்க்கையைச் சுற்றி சுற்றி வரும்போது அந்நிகழ்வுகளும் என் சிற்றறிவுக்கு ஏதோ சிறிது புரியும் அந்த மாமனிதரின் வாழ்க்கையும் மூளையின் செல்களை சிலிர்க்க வைத்து தங்குதடையின்றி, கட்டுப்பாடின்றி என் கண்கள் மடை திறந்தபோது அன்று என் தந்தை அழுததன் அர்த்தம் புரிந்தது. அவற்றையெல்லாம் விளக்குவதற்கு வார்த்தைகள் இல்லை. நபிபெருமானாரின் வாழ்க்கையை, அவர்களுடன் வாழ்ந்த அத்தோழர்களின் வாழ்க்கையை வாசித்து உணர்வதைத் தவிர அதற்கு வேறு வழியுமில்லை.

நூல் வெளியானது. நல்ல வரவேற்பு இருந்தது. அனைத்துப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன.

பின்னர் முப்பத்து சொச்சம் ஆண்டுகளுக்குப் பின் எனது இணைய தளத்தைத் தொடங்கியதும் அதில் அந்நூலின் அத்தியாயங்களைப் பிரசுரிக்க ஆரம்பித்தேன். சில ஆண்டுகளுக்கு முன், திடீரென்று ஒருநாள், நூல்கள், பதிப்பகங்கள் பற்றிய ஏதோ ஒரு குறுஞ்செய்தியில் சகோதரர் ஜமாலுத்தீன் பூம்புகார் பிரசுரம் மேலாளரின் தொலைபேசி எண்ணைப் பகிர்ந்திருந்தார். அதற்கு சில மாதங்களுக்குப் பிறகு வெகு சாவகாசமாக நான் அந்த மேலாளரைத் தொடர்பு கொண்டு, அறிமுகப் படுத்திக்கொள்ள, ‘நீங்கள்தான் ஜப்பார் பாயின் மகனா? அவருடைய வாரிசுதாரரை நான் பல்லாண்டுகளாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். இந்த நூலை மீள்பிரசுரம் செய்ய வேண்டும்’ என்று வெகு உற்சாகமாக அவர் பேசத் தொடங்கி, அது வளர்ந்து, அந்த முயற்சி உருப்பெற்று, அல்லாஹ்வின் பேரருளால் இப்பொழுது விற்பனைக்கு வந்துவிட்டது – நபி பெருமானார் வரலாறு.

42 ஆண்டுகளுக்குப் பின் ‘நபி பெருமானார் வரலாறு’ – இரண்டாம் பதிப்பு.

அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் பெருமையும் உரித்தாகும்.

அன்று என் தந்தை எழுதிய போது அவர்களுக்குக் கிடைத்த மூலாதாரங்களைவிட அதிகப்படியான ஆதாரபூர்வமான தகவல்கள் இன்று கிடைத்துள்ளதால் சில திருத்தங்களை மட்டும் இந்த இரண்டாம் பதிப்பில் செய்துள்ளேன். மற்றபடி அன்று அவர்கள் எழுதியது இன்றும் சுவையாக விறுவிறுப்பாக உள்ளது என்பதற்கு இந்த நூலின் முதல் பதிப்பை வாசித்துவிட்டு பேரா. பார்த்திப ராஜா சில ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்த விமர்சனம் சான்று. என் தந்தையின் நோக்கமும் இந்த நூலை முஸ்லிமல்லாதவர்கள் வாசித்துப் புரிந்துகொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்பதே. அதற்கேற்பத்தான் இந்நூல் எழுதப்பட்டிருக்கும்.

மிகவும் சிறப்பான முறையில் இந்த இரண்டாம் பதிப்பை வடிவமைத்து உருவாக்கியுள்ள பூம்புகார் டீமிற்கு எனது நன்றி. சளைக்காமல் அக்கறையுடன் ஒத்துழைத்து இந்நூல் வெளிவர உறுதுணையாக இருந்த பூம்புகார் பிரசுரத்தின் மேலாளர் அண்ணன் ஷம்சுத்தீனுக்கும் ஈகிள் பிரஸ் மேலாளர் அன்பு நண்பர் சுபாகர் ராஜாவுக்கும் எனது அன்பும் நன்றியும். பூம்புகாருடன் தொடர்புக்கு உதவிய சகோதரர் ஜமாலுத்தீனுக்கு சிறப்பு நன்றி.

நூல்: நபி பெருமானார் வரலாறு
ஆசிரியர்: N.B. அப்துல் ஜப்பார்
வெளியீடு: பூம்புகார் பதிப்பகம், 127 (ப. எண்: 63) பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை-600108.
தொலைபேசி: 044-25267543

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment