வென்டிலேட்டர் ஹீரோ

by நூருத்தீன்

மெரிக்காவில் உயிரிழப்புகள் இன்னும் குறைந்தபாடில்லை. கொலைவெறி பகைவனைப்போல் தாண்டவமாடியபடி இருக்கிறது கொரோனா. இன்றைய தேதி வரை ஆறரை லட்சத்தைத் தாண்டிய நோயாளிகள்.

முப்பதாயிரத்தைத் தாண்டிய மரண எண்ணிக்கை. பெருகிவரும் நோயாளிகளுக்குத் தன்னலம் பாராமல் சிகிச்சை அளித்துவருகிறது மருத்துவ உலகம்.

இன்னதுதான் சிகிச்சை என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாத நிலை; இதோ தடுப்பூசி, தடுப்பு மருந்து என்பதற்கு வழியற்ற அவலம்; நாள்தோறும் சடசடவென்று சரியும் சடலங்கள்; அவை ஏற்படுத்தும் தாக்கத்தைத் தாங்கிக்கொண்டு மருத்துவத்தைத் தொடர வேண்டிய சவால்; இதற்கெல்லாம் இடையே குறுக்கிடும் அமெரிக்க அதிபரின் அரசியல் அபத்தங்கள், மருத்துவத் தட்டுப்பாடுகள்… இப்படி பலவற்றையும் பொருட்படுத்தாமல் போராடிக்கொண்டிருக்கிறார்கள், மருத்துவர்களும் செவிலியர்களும், அத்துறையைச் சார்ந்த மற்றவர்களும்.

சிகிச்சைபெறும் கொரோனா நோயாளிகள் பலருக்கு, சுவாசத்திற்கு உதவும் வென்டிலேட்டர் சாதனம் தேவைப்படுவதில்லை என்ற போதிலும், அது தேவைப்படும் நிலையில் உள்ளவர்களுக்கு வென்டிலேட்டர் ஓர் உயிர் காப்பான். நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருக்கும் நிலையில் நியூயார்க், கலிஃபோர்னியா மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர்கள், வென்டிலேட்டர் கையிருப்பை அதிகப்படுத்தும் முயற்சியில் மும்முரமாக உள்ளனர். அதன் தட்டுப்பாடு… மரண எண்ணிக்கையை அதிகப்படுத்தும் என்ற அச்சம் மருத்துவ உலகில் நிலவிவருகிறது.

3D அச்சு நிறுவனத்தைச் சேர்ந்த கெவின் டையர், கனெக்டிகெட் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இப்பிரச்னையைப் பற்றிய கவலை அதிகமாகி, ஏதேனும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். அந்த முயற்சியில் அவர் இறங்க, அவருடைய நண்பர்கள், அன்வர் என்பவருடன் அவருக்குத் தொடர்பு ஏற்படுத்தித் தந்தனர். சவூத் அன்வரும் கனெக்டிகெட்டைச் சேர்ந்தவர்தான். அமெரிக்க செனட் சபைக்குத் தம் மாநிலத்தவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர். அவர், செனேட்டர் என்பது மட்டுமின்றி ஒரு மருத்துவர். நுரையீரல் சிகிச்சை நிபுணர். மான்செஸ்டர் மெமோரியல் மருத்துவமனையில் தற்சமயம் முன்னணியில் நின்று சேவையாற்றிவருகிறார்.

மருத்துவர் சவூத் அன்வரும் கெவினும் பொறியாளர் ராபர்ட் கான்லெ என்பவரை உதவிக்குச் சேர்த்துக்கொண்டு காரியத்தில் இறங்கினர். மருத்துவரின் ஆலோசனையின்படி வென்டிலேட்டருக்கு உப சாதனம் ஒன்றை வெகு விரைவில் கண்டுபிடித்தனர். கிளைகளாகப் பிரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உப சாதனத்தை வென்டிலேட்டரில் பொருத்துவதன் மூலம், ஒரே நேரத்தில் பல நோயாளிகளை அந்த வென்டிலேட்டருடன் இணைக்க முடியும் என்பதைக் கண்டறிந்து அறிவித்தனர்.

அந்த வடிவமைப்பையும் தயாரிப்பு வழிமுறைகளையும், அதை எப்படிப் பயன்படுத்துவது என்ற விளக்கத்தின் காணொளியையும், மருத்துவர் சவூத் அன்வர் உடனே தமது ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். அவை அனைத்தையும் கோப்புகளாகத் தரவிறக்கி (download), யார் வேண்டுமானாலும் தயாரித்துப் பயனடையலாம் என்றானதும் அதற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துவிட்டது. ஸிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா உட்பட, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளவர்கள் அந்த வடிவமைப்பைத் தரவிறக்கியுள்ளனர்.

“உலகெங்கும் இந்தக் கொரோனா பரவியுள்ள நிலையில், அமெரிக்காவைப் போல் உயர் தொழில்நுட்ப வசதி கிடைக்காத ஏதேனும் ஒரு மூலையில் உள்ளவர்களுக்கு, இந்த வென்டிலேட்டர் உப சாதன வடிவமைப்பு உதவக்கூடும்’’ என்று கெவின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“கொரோனா நோயால் உலகமே பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், இப்படி ஒரு சேவை செய்ய வாய்ப்பு அமைந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம்” என்று தெரிவித்துள்ள மருத்துவர் சவூத் அன்வரை மருத்துவ நிபுணர்களும் அவரது தொகுதியைச் சேர்ந்தவர்களும் பாராட்டித்தள்ளுகின்றனர். அத்துடன் நில்லாமல், அவரை கௌரவிக்கும் வகையில் வெளிச்சத்திற்கு வராத நாயகனுக்கான அணிவகுப்பு (Unsung hero parade) என்ற பெயரில் அவரது இல்லம் அமைந்துள்ள வீதியில் கார்களின் அணிவகுப்பு ஒன்றை நடத்தி, அவருக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்து பெருமிதப்படுத்திவிட்டனர்.

{youtube}0UnoDz8lrxg|600|450|0{/youtube}

“COVID நோயை ஒரு போருடன் ஒப்பிட்டால், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுவாச சிகிச்சையாளர்கள் – இவர்கள்தாம் முன் வரிசை வீரர்கள். அவர்களுக்குரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். ஆதரவும் அளிக்க வேண்டும். உலகம் முழுவதும் அவர்கள் நன்கு கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் உத்தரவாதம் தேவை. ஏனென்றால், கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸ் நோய்க்கும் நமது பாதுகாப்புக்கும் இடையே, இவர்கள்தாம் அரணாக நிற்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார், மருத்துவர் சவூத் அன்வர்.

அது மட்டுமின்றி, “இது பல்முனைப் போர். இந்த நோயாளிகளை எப்படிப் பராமரிப்பது… என்ன செய்வது? எனவே, நாம் கற்றுவரும் விவரங்களின் அடிப்படையில், நோயின் பல நிலையில் உள்ள மக்களிடம் அவர்கள் இந்த நோயை எதிர்கொள்ளவேண்டிய உபாயங்களைத் தெரிவிக்கின்றேன். அவரவரும் தங்களால் இயன்றதைச் செய்கின்றனர். நான் என்னாலான சிறு பங்களிப்பைச் செய்துவருகிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அது சரியான கூற்று. கொரோனாவுக்கு எதிரான போரில் உலகிலுள்ளோர் அனைவரும் தத்தம் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ப செயல்படவேண்டிய நிலையில்தான் உள்ளோம்.

-நூருத்தீன்

நன்றி: #MyVikatan

விகடன்.காம் -இல் ஏப்ரல் 17, 2020 வெளியான கட்டுரை


Creative Commons LicenseThis work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment