சியாட்டில் லாக்டவுன்

by நூருத்தீன்

கொரோனா பரவத் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை சியாட்டிலில் மட்டும் 175 பேர் மரணமடைந்துள்ளார்கள். 6,500 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகத்தோடு ஒட்டி வாழ் என்றாகிவிட்டது இவ்வூர். பரபரவென இருக்கும் சாலைகள் வெறிச்சோடிவிட்டன. சிறு தொழில் வியாபாரிகள், இழுத்து மூடியுள்ள தங்களின் கடைகளைப் போக்கிரிகளிடமிருந்து காப்பாற்ற, கண்ணாடி ஜன்னல்களின் மேல் மரப்பலகை வைத்து அடைத்துவிட்டார்கள்.

சியாட்டில் நகர மையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 3,30,000 பேர் பணியாற்றுகிறார்கள், 88,000 மக்கள் வசிக்கிறார்கள் என்பது புள்ளிவிவரத் தகவல். அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலானவர்களுக்கு, `வீட்டிலிருந்து வேலை’ என்றாகிவிட, உணவகங்கள், பார்கள், ஹோட்டல்கள் என அனைத்தும் அடைபட்டுப் போய் அங்கெல்லாம் பணிபுரிபவர்களின் நிலைமைதான் மோசம், பரிதாபம்.

வேலையின்மை காப்பீட்டு வசதி என்ற ஒன்று இங்கு உண்டு. மார்ச் மாதத்தில் இறுதி இரண்டு வாரங்களில் மட்டும் அந்தக் காப்பீட்டைக் கோரியுள்ளவர்களின் எண்ணிக்கை 3,17,400. பிப்ரவரி மாதத்தில் அந்த எண்ணிக்கை 12,300 மட்டுமே எனும்போது, இந்த ஒரு நகரில் மட்டும் வேலை வாய்ப்பில் ஒரே மாதத்தில் கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கம் எத்தனை மடங்கு பெரியது என்பதை உணர முடியும். அப்படியானால் உலகம் முழுவதும்?

விளையாட்டு நிகழ்ச்சிகள், வணிக மாநாடுகள் போன்றவை ரத்தாகி, அவை ஏற்படுத்தியுள்ள பொருளாதார இழப்பு 172 மில்லியன் டாலர் வரை இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது Downtown Seattle Association (DSA). சியாட்டிலில் சுற்றுலா கப்பல் பயணங்கள் முக்கியமானவை. வசந்த காலமும் கோடை காலமும்தான் அதற்கு பிஸியான மாதங்கள். அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் அது முழுதாக ரத்தாகி விடுமானால், அந்த இழப்பு 900 மில்லியன் டாலரை எட்டும் என்று கவலைப்படுகிறது DSA.

{youtube}9XlyPNyLhFs|600|450|0{/youtube}

வீடடங்கு உத்தரவால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மட்டுப்படத் தொடங்கியுள்ளது என்கின்றன தரவுகள். ஆனால், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வர மேலும் அதிக அவகாசம் தேவை. அதனால் மே மாதம் 4 -ம் தேதி வரை வீடடங்குங்கள் – stay-at-home – என்று தமது உத்தரவை நீட்டித்துள்ளார், ஆளுநர் ஜே இன்ஸ்லீ.

கவலையை ஒரு கண்ணிலும் கேமராவை மறு கண்ணிலும் வைத்துக்கொண்டு, வெறிச்சோடிவிட்ட சியாட்டில் நகர வீதிகளையும் நகர மையப் பகுதிகளையும் படம்பிடித்து வெளியிட்டுள்ளது Downtown Seattle Association. ‘மீண்டு வருவோம். அது வண்ணமயமாக இருக்கும்’ என்கின்றது அதிலுள்ள நம்பிக்கை வாசகம் ஒன்று.

சியாட்டில் மட்டுமன்று. உலகமே மீண்டு வர வேண்டும். அனைவரின் வேண்டுதலும் அதுவே!

-நூருத்தீன்

நன்றி: #MyVikatan

விகடன்.காம் -இல் ஏப்ரல் 4, 2020 வெளியான கட்டுரை


Creative Commons LicenseThis work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment