ன்று உலக நிகழ்ச்சிகளுள் மிகவும் பிரதானமான ஸ்தானத்தைப் பலஸ்தீனம் அடைந்திருக்கிறது. ஐக்ய நாட்டுச் சபை அநியாயமான தீர்ப்பளித்ததனால் விளைந்த விபரீதம் சொல்லி முடியாது. யூதர்களை அங்கேதான் அமர்த்தவேண்டுமென்றும், அவர்களுக்காக ஒரு நாட்டை உண்டு பண்ணி விட வேண்டுமென்றும் இன்று கிறிஸ்தவ நாடுகளாகிய அமெரிக்கா போன்றவை தோள் தாங்கி நிற்பதன் அக்கிரமமான செய்கையை உலகமே கண்டிக்கிறது.

நம் வாசக நேயர்கள் ஜெரூஸலம் என்னும் பரிசுத்தமிக்க பைத்துல் முக்கத்தஸ் நகரம் முஸ்லிம்கள் கைக்கு எப்படிக் கிடைத்ததென்பதையும், அந்நகரிலோ அல்லது பலஸ்தீனின் வேறெப் பகுதியிலுமோ யூதர்களுக்கு உரிமை அறவே கிடையாதென்பதையும் பைபிள் ஆதாரத்தைக் கொண்டும் சரித்திர நிகழ்ச்சிகளைக் கொண்டும் இக்கட்டுரை நிரூபிக்கின்றது.

oOo

பனீ இஸ்ராயீல்களென்றும், இஸ்ரவேலர் சந்ததியாரென்றும் ஆண்டவனின் பிரியத்துக்கு ஏகபோக உரிமை பெற்றவர்களென்றும் பெருமையடித்துக்கொண்டு, உலகத்தில் இல்லாத அநியாயங்களையும் பொல்லாத அக்கிரமங்களையும் சதா புரிந்துகொண்டு, கொடிய வட்டியைத் தொழிலாக நடத்திவரும் யூதர்கள் – எஹூதிகள் சிரியாவிலும், மத்திய ஆசியாவிலும் பலஸ்தீன் பகுதிகளிலும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சர்வ ஆதிக்கமும் பெற்றிருந்தனரெனினும், உரோமாபுரி ஏகாதிபத்யத்தின் ஆட்சிக்கே அடிமைப்பட்டுக் கிடந்தனர். அச்சமயத்தில் அவதரித்த தீர்க்க தரிசியாகிய ஈஸா (அலை) அவர்கள் ஒரு சமயம் அந்த ஜெரூஸலம் என்னும் பைத்துல் முக்கத்தஸுக்கு விஜயஞ் செய்தபோது (பைபிள் ஆதாரப்படி) அங்குள்ள யூதர்கள் ஆண்டவன் பெயரால் அவனுடைய பரிசுத்த ஆலயத்திலேயே புரிந்துவரும் சொல்லொணா அக்கிரமங்களை அகற்றினார். பைபிள் புதிய ஏற்பாடு, மத்தேயு 21 ஆம் அதிகாரத்தில் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது :

“இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களு மாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து … நீங்களோ ஜெப வீட்டைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்.” (மத். 21: 12, 13)

இச்சம்பவத்தைக் கொண்டு பார்க்குமளவில், யூதர்களை நல்வழியில் திருப்பவென்று அவர்களுக்கு “ராஜா”வாக அவதரித்த இயேசுவே அந்த அயோக்கிய யூதர்களின் அக்கிரமத்தைச் சகிக்கமுடியாமல் அவர்களைப் பரிசுத்த ஆலயத்திலிருந்து விரட்டியடித்தார் என்று நன்கு புலனாகின்றது. இவ்வளவோடு அந்த யூதர்களும் நிறுத்திக் கொள்ளவில்லை; இயேசு (ஈஸா நபி)க்கும் பல இடையூறுகளை அவ்யூதர்கள் இழைத்தார்கள். முடிவாக அவர் ஜெரூஸலத்தின்மீதும் அங்கிருந்த எஹூதிகள் மீதும் எவ்வளவுக் கடுங்கோபங் கொண்டுவிட்டா ரென் றால், அந்நகரத்தைச் சபிக்க ஆரம்பித்துவிட்டார்:

“எருசலமே, எருசலமே, தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கி விடப்படும்” – (மத். 23: 37, 38).

பின்பு தேவாலயத்தை நோக்கி அவரே கூறுகிறார்:

“இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராத படிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப் போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” – (மத். 24: 2).

மேற்குறிப்பிட்ட பைபிள் மேற்கோள்களைப் படித்துப் பார்த்தால், “ரக்ஷகராக” அவதரித்ததாகக் கிறிஸ்தவர்கள் நம்பிக்கை கொள்ளும் அவர்களுடைய “தேவ குமார”ரே யூதர்களின் மீது அள்ளிச் சொரிந்த சாபக் குவியல் இன்னதென்று நன்கு விளங்கக் கிடக்கிறது. இப்படியாக இயேசுவால் சபிக்கப்பட்ட அக்கிரம ஜாதியார்களை அதே எருசலேம் (பைத்துல் முக்கத்தஸ்) நகரத்துக்குள்ளே மீண்டும் கொண்டுவந்து வலியத் திணிக்கத் துவஜம் கட்டிக் கொண்டிருக்கிற கிறிஸ்தவ நாடுகளின் போக்கைப் பார்த்தால், அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கே துரோகம் இழைப்பதாகவும், அவரிட்ட சாபத்துக்கு அறை கூவுவதாகவும் காணப்படுகிறது. என்னெனின், அக்கிறிஸ்தவர்கள் நிஜமாகவே தங்கள் தேவ கட்டளையை வேத ஆக்ஞையைப் பின்பற்றி நடக்கக் கூடியவர்களாயிருப்பின், முதலாவதாக யூதர்களுடன் உறவு கொள்ள மாட்டார்கள்; இரண்டாவதாக, அவர்களுக்காகப் பரிந்து பேசமாட்டார்கள்; மூன்றாவதாக, அக்கொடியரை மீண்டும் அதே ஜெரூஸலத்துக்குக் குடியேற்ற மாட்டார்கள்; கடைசியாக முஸ்லிம்களைப் பகைத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். எனவே, இன்று பலஸ்தீனப் பிரிவினைக்கும், யூதக் குடியேற்றத்துக்கும் சாதகமாக ஐ.நா. சபையில் நீண்ட பிரசங்கங்கள் புரிந்து, உபகாரமான (?) வோட்டுக்களைப்போடும் கிறிஸ்தவ நாடுகள் ஏசுநாதருக்கும், அவர் பைபிள் வேதத்துக்கும் விரோதமாகவே காரியம் நிகழ்த்துகின்றன ரென்பது தெளிவாகிறது.

இவ்வண்ணமாகக் கிறிஸ்துவால் சபிக்கப்பட்ட ஜெரூஸலம் பின்னர்க் கிறிஸ்தவர்கள் கைக்குள் வந்துவிட்டது. யூதர்கள் அடியோடு விரட்டப்பட்டு விட்டனர். ஆனால், அவ்வாறு கிறிஸ்தவ ஆதிக்கத்தின் கீழ் வந்த பைத்துல் முக்கத்தஸ் நெடு நாட்கள் மட்டும், அஃதாவது, கி.பி. 637-ஆம் ஆண்டுவரை அவர்களிடமே யிருந்து வந்தது. அதுகாலை இஸ்லாம் உதயமாகிக் குலபாயெ ராஷிதீன் என்னும் முதல் நான்கு கலீபாக்களின் ஆட்சியின்போது வளர்ச்சியுற்று வந்தது. இரண்டாவது கலீபாவாகிய உமருப்னுல் கத்தாப் (ரலி) ஆட்சியின் போதுதான் இந்த ஜெரூஸலம் முஸ்லிம்களின் கைக்குள் வந்து, இன்றளவும் அவர்களுடைய ஆளுகைக்கு உட்பட்டிருக்கிறது.

இஸ்லாத்துக்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்து படையெடுப்புக்களை ரோம ராஜ்ஜியம் கைக் கொண்டபோது, தற்காப்பினிமித்தம் உமர் (ரலி) படைகளை வடக்கே அனுப்பி வைத்தார்கள். முஸ்லிம்கள் கையில் பலத்த தோல்வியைப் பெற்றுக்கொண்ட அர்த்தபூன் என்னும் ரோம தளபதி சில வீரர்களுடன் ஜெரூஸலத்துக்குள் சென்று ஒளிந்து கொண்டான். அவ்வமயம் நிகழ்ந்த சில போர்களில் பலஸ்தீனத்தின் முக்கிய பட்டணங்களாகிய ஜாபா, நப்லூஸ், ரம்லா, கஸா, ஏக்கர் முதலிய நகரங்கள் முஸ்லிம்களின் கீழ்வந்து விட்டன. பின்பு எல்லா முஸ்லிம் படைகளும் சேர்ந்து ஜெரூஸலத்தை முற்றுகையிட ஆரம்பித்துவிட்டன. முற்றுகையின் பலத்தை உணர்ந்த அந்த ரோம தளபதி இரகசியமாகத் தப்பி வெளியேறி எகிப்துக்கு ஓடிப்போய் விட்டான்.

அப்பால் அந்நகரிலிருந்த அதிபதியாகிய ஸுப்ரோனியஸ் என்பவர் முஸ்லிம்களுடன் சமாதானம் செய்து கொண்டு, அப்பரிசுத்தமான பைத்துல் முக்கத்தஸை முஸ்லிம்களிடமே விட்டு விடுவதாகவும், ஆனால் அதைக் கலீபாவின் கையில்தான் ஒப்படைக்க முடியமென்றும் கூறினார். இது செய்திகேட்ட உமர் (ரலி) மிக எளிய, பழைய, கிழிந்த ஆடைகளுடன் ஒட்டகத்திலேறி பைத்துல் முக்கத்தஸ் சென்று சேர்ந்தார்கள். அவர்கள் ஜெரூஸலத்தில் செய்து கொண்ட உடன்படிக்கையின் விவரம் உலகப் பிரசித்தமானது. கிறிஸ்தவர்களுடைய எல்லா நலன்களும் உரிமைகளும் அவ்வப்படியே காப்பாற்றப்பட்டதுடன், நல்ல சலிகைகளும் மத தாராளப் புது சுதந்தரங்களும் வழங்கப்பட்டன. அத்தீர்மானமான உடன்படிக்கையில் வரையப்பட்டுள்ள ஒரு முக்கியமான ஷரத்து என்னவென்றால், “கிறிஸ்தவர்களுடன் கூட யூதர்கள் ஜெருஸலேமின் எல்லைக்குள் வசிப்பது கூடாது” என்பதாகும். எனவே, ஹிஜ்ரீ 15-ஆவதாண்டிலே (கி.பி 637) வரையப்பட்ட இந்த இறுதி யொப்பந்தப்படியுங்கூட யூதர்களுக்கு அங்கே இடமில்லையென்பது பெறப்படுகின்றது. அன்று முதல் இன்று வரை முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மட்டுமே பைத்துல் முக்கத்தஸில் உரிமையுண்டே யொழிய, யூதர்களுக்கு ஒன்றுமில்லை.

அதன் பின்னர் அந்தக் கிறிஸ்தவர்கள் எப்படியாவது பைத்துல் முக்கத்தஸை முஸ்லிம்களின் ஆதிக்கத்தினின்று பிரித்துவிட வேண்டுமென்று ஒருமுறை இருமுறையல்ல, பதினொரு முறை அநியாயமாகச் சிலுவையுத்தம் புரிந்தனரென்பதும், ஒவ்வொரு முறையும் அவர்கள் தங்கள் முயற்சியில் படுதோல்வியே பெற்று வந்தார்களென்பதும் சரித்திரம் கூறும் சான்றாகும்.

இவ்வண்ணமாக ஜெரூஸலத்தின் மீதும் பலஸ்தீன் மீதும் தங்கள் ஏகபோக ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள அரும்பாடுபட்ட கிறிஸ்தவர்கள் படுதோல்வி யடைந்திருக்க, சென்ற 1918-இல் முடிந்த முதல் மஹா யுத்தத்தின் இறுதியில் ஆங்கிலேயக் கிறிஸ்தவர்கள் தங்களுக்கே உரிமையில்லாத பலஸ்தீனத்துக்குள், அறவே நுழையக்கூடாதென்று சென்ற 2000 ஆண்டுகளாய்த் தடுக்கப்பட்டிருக்கும் “ஆண்டவனின் குழந்தைகள்” என்று தங்களைப் பெருமை பாராட்டிக் கொள்ளும் எஹூதிகளைக் கொண்டு வந்து குடியேற்றினர். இந்த இரண்டாவது மஹா யுத்தம் முடிந்த பிறகோ ஐ. நா. சபையினர் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் பலஸ்தீனை யூதர்களுக்குப் பார்த்து கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்கின்றனர். காலத்தின் போக்கையும், ஐக்ய நாடுகளின் கேடுகாலத்தையும் பார்த்தால் உலகில் நியாயமோ, தெய்வ நீதியோ நீடித்து நிற்பதற்கான அறிகுறிகளைக் காணோம்.

சரித்திர உண்மைகளைக் கொண்டு பார்க்கப் போனால் இதுவரை யூதர்களுக்கு ஆண்டவன் நல்வழியைக் காட்டியதாகத் தெரியவில்லை. இப்போது கிறியதவர்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்களுக்கு இச்சகம் செய்வதைப் பார்த்தால், பரிசுத்த நகரமாகிய பைத்துல் முக்கத்தஸ் இனி எதிர்காலத்தில் எவருடைய நல்லாதிக்கத்துள் வந்து உலகத்துக்கு உணர்ச்சியை யூட்டுமென்பதை இனி வரப் போகும் சரித்திரம் மட்டுமே காட்ட முடியும்.

-பா. தாவூத்ஷா

தாருல் இஸ்லாம், ஜனவரி 1948 (பக்கம் 39-41)

Related Articles

Leave a Comment