ங்களுக்கு அறிமுகமான நாளிலிருந்தே அவர் இரண்டு ரூபாய் டாக்டர்தான். பால்ய பருவத்தில் நான் வசித்தது, உருண்டு புரண்டு வளர்ந்தது எல்லாம் மவுண்ட் ரோடு அலங்கார் தியேட்டருக்குப் பின்னால் இருந்த தெருவில். அங்கு எங்களுக்கு அடுத்த வீட்டில் டாக்டர் ஷபீயுல்லாஹ் குடிவந்து டிஸ்பென்ஸரியும் ஆரம்பித்தார்.

வாணியம்பாடிக்காரர். எம்.ஜி.ஆர்., சிவாஜி டபுள் ஆக்ஷன் ரோல் போல் அச்சு அசலாக அவருக்கொரு ட்வின் பிரதர். அந்தச் சகோதரருக்கு அவர்களது ஊரின் பிரத்தியேகத் தொழிலான லெதர் பிஸினஸ். அதைக் கவனித்துக்கொண்டு அவர் பெரியமேட்டில் வசிக்க, இவர் – டாக்டர் – எப்படி எங்கள் ஏரியாவைத் தேர்ந்தெடுத்து எங்களுக்கு அடுத்த வீட்டில் குடிவந்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் வந்த சில நாள்களிலேயே அங்குச் சுற்றுமுற்றும் வசித்த அனைவருக்கும் குறிப்பாக அப் பகுதியில் வசித்த ஏழை கூலித் தொழிலாளிகளுக்கும் ரிக்ஷா ஓட்டுனர்களுக்கும் எளியவர்களுக்கும் மிகவும் நெருக்கமான இரண்டு ரூபாய் டாக்டராகி விட்டார்.

வெகு அபூர்வமாகத்தான் ஊசி போடுவார். மற்றபடி நாடி பார்த்து, நெஞ்சாங் கூட்டை ஸ்டெத்தால் செவியுற்று, நாக்கை நீட்ட வைத்து டார்ச் அடித்துப் பார்த்து, ‘இந்தா ரெண்டு நாளுக்கான மருந்து. மூன்று வேளை சாப்பிடு’ என்று மாத்திரைகளை பேப்பரில் அவரே பொட்டலம் கட்டிக் கொடுத்தனுப்புவார். பெரும்பாலான காய்ச்சல், சளி, வயிற்றுவலி போன்றவை அதிலேயே சரியாகிவிடும்.

நாள், நட்சத்திரம், சுபயோகம் என்றெல்லாம் தேதி குறிக்காமல் வெகு சீக்கிரத்தில் எங்களுக்கு அவர் குடும்ப டாக்டராகி, அதைவிட வெகு விரைவாக எங்கள் குடும்ப நண்பராகி, குடும்பத்தில் ஒருவராகவே ஆகிவிட்டார். அதன் பின்விளைவாக, எங்களுக்கு அந்த இரண்டு ரூபாய் ஃபீஸும் இலவசமாகிப்போனது. ஆனால் அதற்குப் பகரமாக, என் தாயார் சமைக்கும் கார சேமியா அவருக்கு வாணியம்பாடி பிரியாணிக்கு இணையாய்ப் பிடித்துப்போய், காலை ஆகாரமாக எங்கள் வீட்டில் அது சமைக்கப்படும் போதெல்லாம், அவருக்கு ஒரு டிபன் பாக்ஸில் அதைக் கொடுத்துவிட வேண்டும். சில நாள்கள் அந்த மெனு சமைக்காமல் தள்ளிப்போனால், ‘ரொம்ப நாளாச்சு போலிருக்கே’ என்று உரிமையுடன் நினைவுறுத்தி விடுவார்.

அந்தத் தெருவில் நெருங்கிய குடும்ப நண்பர்கள் மேலும் சிலர் இருந்தாலும் என் தந்தையைப் பற்றியும் தாருல் இஸ்லாம் பற்றியும் தெரிந்தபின் அவருக்கு எங்கள் குடும்பத்துடன் நட்பு பிரத்யேகமாக இறுகி, என் தந்தையிடம் அவருக்கு அளவு கடந்த மரியாதை, மதிப்பு. என் தந்தையுடன் அவரது உரையாடல் ஆன்மீகத்தில் புதைந்து, மாணவனைப்போல் அதிகமதிகம் கேள்விகளும் சந்தேகங்களும் விளக்கங்களுமாக அது நீள்வதைப் பார்த்திருக்கிறேன்.

ஒருமுறை தனது சொந்த செலவில் என் தந்தையை வாணியம்பாடிக்கு அழைத்துச் சென்று அவர்களின் கூட்டமொன்றில் பேசவைத்து அழைத்து வந்தார். பதிவு செய்து அவர் அளித்த ஆடியோ டேப்பை அபத்தமாகத் தொலைத்துவிட்டு, இன்றும் வருந்திக் கொண்டிருப்பது தனிச் சோகம்.

அவருக்குத் திருமணமானபின் சில நாள்கள் மட்டும் இந்த வீட்டில் வசித்துவிட்டு, பிறகு இவ்வீட்டை டிஸ்பென்ஸரியாக மட்டும் வைத்துக்கொண்டு, மனைவியுடன் பெரியமேடு பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டார். குடும்ப நட்பு மட்டும் இடைவெளியின்றி அது தன் போக்கில் அழுத்தமாய்த் தொடர்ந்தது.

தொடர்ந்த ஆண்டுகளில் அவருக்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. பிள்ளைப் பேறு இல்லாமல் போய், அது அவருக்கும் அவர் மனைவிக்கும் பெரும் குறையாகவே இருந்தது. பல பரிசோதனைகளுக்குப் பிறகு, ‘சரி இதுதான் இறைவன் நமக்கு விதித்தது’ என்று தம்பதியர் மனத்தைத் தேற்றிக் கொண்டால், Retinal detachment எனப்படும் கண் திரை பழுது நோய். அவசர சிகிச்சைகளுக்கெல்லாம் பிறகு பார்வை தேறினாலும் பழைய நார்மல் நிலையை அவரது பார்வை இழந்தது.

நிலைமை சீரான பிறகு டிஸ்பென்ஸரிக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். வைத்தியத் தொழில் தொடர்ந்தது. ஆனால் மனத்தளவில் மிகவும் தளர்ச்சி அடைந்திருந்தார். ஃபீஸ் மட்டும் அதே இரண்டு ரூபாய். ஆனால் அவர் இரண்டு ரூபாய் விகிதத்தில் தொடங்கியபோது சுற்றுவட்டாரத்தில் 5, 10 என்று ஃபீஸ் வாங்கிக்கொண்டிருந்த டாக்டர்களெல்லாம் 25, 50 என்ற அளவிற்கு உயர்த்தியிருந்தார்கள்.

பிறகு ஏதோ ஒரு கட்டத்தில் விலைவாசி, வாடகை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அதை ஐந்து ரூபாய்க்கு அவர் உயர்த்தினாரா, உயர்த்தலாம் என்று கருதினாரா என்பது எனக்குச் சரியாக நினைவில்லை.

நாங்களும் வீடு மாறி, தெரு மாறி, ஏரியா மாறி சுற்றி வந்தும் அவருடனான குடும்ப நட்பு மட்டும் என் தந்தையின் மரணம்வரை குறையவேயில்லை. அதன் பிறகு நான் வெளிநாடு சென்று, அண்ணன் என் தாயுடன் ஊருக்குக் குடிபெயர்ந்து பல மாற்றங்கள் நிகழ, பிறகு டாக்டரும் தம் மனைவியுடன் வாணியம்பாடிக்கே சென்று செட்டிலாகிவிட்டதாக அறிந்தேன். அவரது விலாசமும் தொடர்பும் அறுபட்டுப் போனது.

இங்கு வந்தபின், விடுப்பில் சென்னைக்குச் சென்றபோது பழைய தெருவில் உள்ளவர்களிடம் விசாரித்தும் அவரது வாணியம்பாடி தொடர்பு விபரங்கள் கிடைக்கவில்லை; யாருக்கும் அவரது விலாசம் தெரியவில்லை. தேடி ஓய்ந்திருந்த நேரத்தில் பத்து பதினைந்து ஆண்டுகளுக்குமுன் வாணியம்பாடியைச் சேர்ந்த, இங்கு software project-இல் வந்திருந்த ஓர் இளைஞரிடம் அறிமுகம் ஏற்பட்டு, டாக்டரைப் பற்றி அவரிடம் கூறி விசாரித்துச் சொல்லுங்கள் என்று கூறியிருந்தேன். சில மாதங்களில் விலாசம், ஃபோன் நம்பர் என்று அவர் மின்னஞ்சலில் அனுப்பி வைக்க எனக்கு அப்படியொரு மகிழ்ச்சி.

அடுத்த விடுமுறையில் சென்றபோது, (2008 ஆம் ஆண்டு என்பதாக நினைவு) ஃபோனில் டாக்டருக்கு இன்ப அதிர்ச்சி அளித்து, மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வாணியம்பாடி சென்று அவர் வீட்டில் இறங்கிவிட்டேன். பூர்விக சொத்தான மிகப் பெரிய வீட்டில் கணவனும் மனைவியும் தனியே வசித்து வந்தனர். என் தாயார், இரண்டாம் அண்ணன் இறந்ததெல்லாம் தெரிவித்தேன். மனதாரப் பேசினார். பழைய நினைவுகள் மீண்டு அவரது முகத்தில் பெரும் களிப்பு.

பயணத்தில் இருந்த எனக்குக் கடுமையான சளி, காய்ச்சல் தொந்தரவு. வீட்டிற்கு முன்புறம் இருந்த அறையில் சென்னையில் இருந்த அதே செட்டப்பில் டிஸ்பென்ஸரி. செக் செய்து, அதே போல் பொட்டலம், அதேபோல் மாத்திரைகள் கட்டித் தந்தார் டாக்டர் ஷபீயுல்லாஹ். வழக்கம்போல் நோ ஃபீஸ். “இந்தியா வரும்போதெல்லாம் வருவேன், தொடர்ந்து தொடர்பில் இருப்போம்” என்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டு விடைபெற்றேன்.
அந்த விடுப்பிலிருந்து திரும்பி சில மாதம் இருக்கும். வாணியம்பாடி நண்பர் ஈமெயில் அனுப்பியிருந்தார். “உங்கள் ஃபேமிலி ஃபிரெண்ட் டாக்டர் ஷபீயுல்லாஹ் இறந்துவிட்டார்”.

மீட்டெடுத்த நட்பிற்கு ஆயுள் மிச்சமில்லை.

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment