சுட்டு விரல் சிகிச்சை

பின்னிப் பிணைந்த, ஒற்றுமையான சமூகம் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிநாதம். ஐவேளை கூட்டுத் தொழுகை, உறவினர்களுடன் பேண வேண்டிய கட்டாய உறவு, கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள், அண்டை வீட்டாரிடம் கொள்ள வேண்டிய நட்பு என்று சமூக வாழ்க்கையின் அங்கத்தில் ஏதொன்றையும் விட்டுவிடாமல் சட்டமாகவும் அறிவுரையாகவும் கடமையாகவும் இஸ்லாம் தெரிவித்துவிட்டது.

ஆள்பவனாகட்டும் குடிமகனாகட்டும் – ஒவ்வொரு முஸ்லிமும் தினசரி வாழ்க்கையில் சக மனிதருக்கு அளிக்க வேண்டிய முன்னுரிமை, இணக்கம், அனுசரிப்பு, விட்டுக்கொடுத்தல் ஆகியன ஏராளம். அதனால் யதார்த்தமாகவே பொதுநலவாதியாக, பொது நலனே பிரதானம் என்பவராகத்தான் அவர் தம் அன்றாட நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆனால் இதன் முரண்நகை என்னவெனில் ஒவ்வோர் ஆன்மாவும் சுயநலம் பேணும் போதுதான் இந்தப் பொதுநலன் சாத்தியமாகிறது. இதென்ன அபத்தம்? கேள்வி எழுகிறதல்லவா? இது நீளமாக, மிக விரிவாக எழுதப்பட வேண்டிய சங்கதி. ஆனால் இஸ்லாமிய வரலாற்றில் இரத்தினச் சுருக்கக் குறிப்பு ஒன்று உண்டு.

நபியவர்களின் அணுக்கத் தோழரான உமர் (ரலி), மற்றொரு தோழரான ஹுதைஃபா இப்னுல் யமான் (ரலி) அவர்களைச் சந்தித்து, குடிமுழுகும் கவலையுடன் சந்தேகம் ஒன்றைக் கேட்பது வழக்கம். உமரின் வரலாற்றை மேலோட்டமாக அறிந்தவராகவே இருந்தாலும் போதும், அவரின் அந்தக் கவலையில் இதற்கான விடை அத்தனையும் ஒளிந்துள்ளதை அறியலாம். உமர் அப்படி என்ன பெரிய கேள்வியைக் கேட்டார் என்பதை அறியும் முன், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் கையாள வேண்டியிருந்த முக்கியமான ஒரு கூட்டத்தைப் பற்றி அறிவது அல்லது நினைவூட்டிக் கொள்வது அவசியம்.

முஹம்மது நபி (ஸல்) மதீனாவுக்குப் புலம் பெயர்ந்த பின், அங்கிருந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்று இணைவது விறுவிறுவென நடைபெற்றது. காலங்காலமாக வெட்டுப்பழி, குத்துப்பழி என்று கிடந்த அவ்ஸ், கஸ்ரஜ் மதீனாவின் இருபெரும் சமூகங்கள். அவ்விரு குலத்து மக்களும் மற்றவர்களும் தங்களுக்கு இடையே இருந்த தலைமுறைக்காலப் பகையைத் தூக்கி எறிந்துவிட்டு, மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த முஸ்லிம்களையும் தங்களது சகோதரர்களாக ஆக்கிக்கொண்டு, தங்களின் ஏகோபித்த தலைவராக முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஏற்றுக்கொண்டார்கள். மதீனாவில் புத்துலகு ஒன்று உருவாக ஆரம்பித்தது. அதற்குமுன் யாரும் கனவும் கண்டிராத உலகு.

அச்சமயம் மதீனாவில் செல்வக்குப் பெற்றிருந்த தலைவர்களுள் ஒருவன் அப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல். யத்ரிபின் அரசனாகக் கூடிய நிலையில் இருந்தவன் அவன். வெண்ணெய் திரண்டு கிரீடம் அவனது தலைக்கு ஏற இருந்தபோது அதைச் சுக்கு நூறாகப் போட்டு உடைத்தது மக்காவிலிருந்து வந்து சேர்ந்த இந்த இஸ்லாமிய மீளெழுச்சி. அதை ஏற்று ஊரே மாறி, அஞ்ஞானப் பண்பாடுகள் வீழ்ச்சியுற்றுப் பெரும் மாற்றங்களைக் கண்டவுடன் தன் ஏமாற்றத்தை அடக்கிக்கொண்டு, வேறு வழியின்றி ‘நானும் முஸ்லிம்’ என்று போர்வையைப் போர்த்திக் கொண்டான் அவன். அப்போர்வையை விலக்கி, அவனுடைய நயவஞ்சக முகத்தை, வேடத்தை நபியவர்களும் மற்றவர்களும் அறிந்துகொள்ள உதவிய முக்கிய நிகழ்வாய் ஒன்று அமைந்தது.

மதீனாவில் யூதர்களும் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பனூ கைனுக்கா என்றொரு குலம். அவர்களுடன் அப்துல்லாஹ் இப்னு உபைக்கு நெடுங்காலமாய் அரசியல் நட்பு இருந்து வந்தது. அவனுக்கு உவப்பான நேச அணியினர் அவர்கள். நபியவர்கள் மதீனாவுக்கு வந்தபின் அந்நகரத்து மக்களிடம் தங்களது முந்தைய சேட்டைகளும் கயமைகளும் பலிக்காமல்போய், பெரும் வெறுப்பில் இருந்தார்கள் யூதர்கள்.

ஒரு கெடு வாய்ப்பில் அந்த பனூ கைனுக்கா யூதர்கள் முஸ்லிம்களுடன் தாங்கள் ஏற்படுத்தியிருந்த ஒப்பந்தத்தை மீறி, முஸ்லிம் பெண்மணி ஒருவரின் மானத்திற்குப் பங்கம் ஏற்படுத்திவிட, அதைத் தொடர்ந்த கலகத்தில் இரு தரப்பிலும் உயிர் பலி ஏற்பட்டு, நபியவர்களின் தலைமையில் திரண்ட முற்றுகைக்கு அக்குலம் சரணடையும்படி ஆனது. அடுத்து, தங்களுக்குக் கிடைக்கப்போகும் தண்டனையை நன்கு உணர்ந்த அவர்கள் தங்கள் சார்பாய் நபியவர்களிடம் பேச சிபாரிசுக்குத் தேர்ந்தெடுத்த முஸ்லிம்கள் அப்துல்லாஹ் இப்னு உபை, உபாதா பின் அஸ்ஸாமித்.

தோழர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி), பனூ கைனுக்காவின் நேச அணியுடன் இருந்தவர்தாம். இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில் யூதர்களுடன் கட்டிப்பிடித்து, கைகோர்த்து எதரிகளுடன் போரிட்டிருக்கிறார்தாம். ஆனால் அந்தப் பழைய நேசமெல்லாம் இஸ்லாம் என்ற மார்க்கத்தில் புகுந்தபின் இரண்டாம் பட்சம், முதல் முழு அடிபணிதல் அல்லாஹ்வுக்கும் அவனுடைய நபிக்கும் என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தார். எனவே நபியவர்களிடம் நேரடியாகத் தமது நிலையைத் தெரிவித்துவிட்டார்.

“அல்லாஹ்வின் தூதரே! எனது முழுமையான விசுவாசமும் அடிபணிதலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதுருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் மட்டுமே. இந்த நிராகரிப்பாளர்களிடம் எனது நேச உறவை முறித்துக்கொள்கிறேன்”

அப்துல்லாஹ் இப்னு உபை?

‘ஏற்கெனவே கிரீடம் போச்சு. இப்பொழுது தனது ஆதரவுக் கோத்திரமும் தொலைந்து போய்விட்டால் தன் கதி நிர்கதியாகிவிடுமே?’ என்ற பெரும் கவலை அவனுக்கு. நபியவர்களிடம் சென்றவன் அவர்களது போர்க் கவசத்தைப் பிடித்து உலுக்கி, “எனது நட்புக் கோத்திரத்துடன் நல்லவிதமாய் நடந்து கொள்ளுங்கள்” என்றான். கடும் சினம் கொண்ட நபியவர்கள், “என்னை விடு” என்றார்கள்.

“தாங்கள் அவர்களிடம் நல்லவிதமாய் நடந்து கொள்வேன் என்று சொல்லாதவரை விட மாட்டேன். ஒரு காலத்தில் அவர்களின் 700 வீரர்கள் என்னுடைய எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றியிருக்க, அவர்களை ஒரே நாளில் அழித்துவிட நீர் வந்தீரோ? மாறி மாறித் தோன்றும் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கைக் கொண்டவன் நான்” என்றான்.

“அவர்கள் இன்றைய தினம் உன்னுடையவர்கள்” என்று இறுதியில் அனுமதியளித்தார்கள் நபியவர்கள்.

ஹிஜ்ரீ மூன்றாம் ஆண்டு மற்றொரு நிகழ்வு. பலம் வாய்ந்த 3000 போர் வீரர்களுடன் மதீனாவிற்குப் படை திரட்டி வந்து கொண்டிருந்தனர் குரைஷிகள். திரண்டுவரும் படைகளை நகருக்குள் வரவிட்டுப் போரிடுவதா, நகருக்கு வெளியே சென்று எதிர்கொள்வதா என்று ஆலோசிக்கப்பட்டு, இறுதி முடிவாக உஹது நோக்கிப் புறப்பட்டது முஸ்லிம்களின் படை. மூவாயிரம் எதிரிகளை எதிர்கொள்ள சுமார் ஆயிரம் போர் வீரர்கள் நபியவர்கள் தலைமையில் திரண்டிருந்தனர். மதீனாவை விட்டுக் கிளம்பிய படை, மறுநாள் உஹது களத்தை அடையும் நேரம் நிறம் காட்டினான் அப்துல்லாஹ் இப்னு உபை.

தன் சொல்பேச்சு கேட்கும் 300 வீரர்களுடன் சடாரென்று கிளம்பி, ‘எனக்குப் பிடிக்கலே; நான் வீட்டிற்குப் போகிறேன்’ என்று மதீனா திரும்பிவிட்டான்! போர்களத்தில் சகாக்களை அனாமத்தாய் அப்படி விட்டுவிட்டுத் திரும்புவது எத்தகைய துரோகம், நயவஞ்சகம்? தெரிந்திருந்தும் தெளிவான திடசித்தத்துடன் அதைச் செய்தான் அவன்.

“ஏன்? என்னாச்சு? எதற்கு இப்படி?” விசாரித்தார்கள் தோழர்கள். அதற்கு அவன் கூறிய காரணம், “நபியவர்கள் என் பேச்சிற்கு முக்கியத்துவம் அளிக்காமல், சிறுவர்களின் வார்த்தைகளுக்கு இணங்கிவிட்டார். எனவே நாங்கள் ஏன் இந்த இடத்தில் நம்மை மாய்த்துக் கொள்ள வேண்டும்?”

அப்படி என்ன பேச்சு?

மதீனா நகருக்குள் இருந்து கொண்டு எதிரிகள் நெருங்கியதும் போரிட வேண்டும் என்று கருத்து கொண்டிருந்தவர்களுள் அப்துல்லாஹ் இப்னு உபை ஒருவன். மற்றவர்கள் நகருக்கு வெளியே சென்று எதிரிகளை எதிர்கொள்ள வேண்டும் என்றனர். ஆனால் தீர கலந்து ஆலோசித்து முடிவு எடுத்த பிறகே அனைவரும் கிளம்பினார்கள். தவிரவும் அல்லாஹ்வின் தூதர் ஒரு விஷயத்தில் முடிவெடுத்தபின் அதற்கு வேறு என்ன மறுப்பு, எதிர்ப்பு?

இதைப்போல் பின்னர் நிகழ்வுற்ற போர்கள், இதர நிகழ்வுகள் என்று ஒவ்வொன்றிலும் எத்தகைய கூச்சமோ, அவமானமோ, இறையச்சமோ இன்றி படு அப்பட்டமாய்த் தனது நயவஞ்சகத்தைப் பறைசாற்றி, நயவஞ்சகர்களின் தலைவனாகிப் போனான் அப்துல்லாஹ் இப்னு உபை. மனிதகுல பொற்காலத்தில் உலக மாமனிதருடன் வாழும் நற்பேறு கிடைத்திருக்க, அந்தப் பெருமை எதுவுமே உணராமல் ஈனனாய் அவன் மாறிப் போனது பெரும் அவலம். ஏன் அப்படி? கலிமாவின் தொடர்பு நுனிநாக்குடன் முடிந்து போனதால்! அப்துல்லாஹ் இப்னு உபையும் அவனுடைய கூட்டத்தாரும் நயவஞ்சகத்தின் இலக்கணம் ஆகிப்போனர்கள்.

அப்துல்லாஹ் இப்னு உபையைப் போன்ற பகிரங்க நயவஞ்சகனை எல்லோருக்கும் அடையாளம் தெரிந்திருந்தாலும் மற்றும் பலர் அதை மறைத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக முஸ்லிம்களுடன் கலந்திருந்தனர்; நடமாடிக் கொண்டிருந்தனர், அவர்கள் யார் யார் என்ற குறிப்புகளை ஏக இறைவன் தன் நபியவர்களுக்குத் தெரிவித்திருந்தான். ஆனால் நபி (ஸல்) அதை வெளிக்காட்டாமல் அவர்களுடன் ராஜதந்திர உறவை அமைத்துக்கொண்டார்கள்.

நயவஞ்சகர்களுக்கு மறுமையில் எத்தகைய நிரந்தர இழிவும் தண்டனையும் காத்திருக்கின்றன என்பது குறித்த விபரங்களும் விண்ணிலிருந்து இறங்கத் தொடங்கின, நபியவர்களின் அறிவிப்புகளும் அவ்வப்போது வெளியாகின. ஆனால் அவற்றையெல்லாம் கேட்டு கதிகலங்கிப் போனதென்னவோ தோழர்கள்தாம். காரணம் இருந்தது.

தன்னளவில் ஒவ்வொரும் பேணவேண்டிய அறத்தையும் ஒழுக்கத்தையும் நேர்மையையும் வாய்மையையும் இங்கிதத்தையும் இறை வசனங்களும் நபியவர்களின் அறிவிப்புகளும் போதித்த அதே நேரத்தில், அறிந்தோ அறியாமலோ நம் ஒவ்வொருவர் மனத்திலும் ஏற்பட்டுவிடக்கூடிய நயவஞ்சகத்தையும் அவை சுட்டிக்காட்டி எச்சரித்தன. அந்த எச்சரிக்கை தோழர்களை நடுங்க வைத்தது. அவர்கள் ஒவ்வொருவரும், ‘நான் தூயவன், நான் உண்மை முஸ்லிம். இந்த எச்சரிக்கையும் தண்டனைகளும் அதோ அந்த நயவஞ்சகர்களுக்கு’ என்று கருதாமல் எங்கே தாம் அந்த நயவஞ்சகர்களுள் ஒருவரோ என்றுதான் தலையைப் பிடித்துக்கொண்டு வருந்தினார்கள்.

‘பிறர் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்கக் கூடாது’ என்ற ஆராய்ச்சியிலும் விதண்டாவாதாங்களிலும் இறங்காமல் ‘நான் அப்படி இருந்து விடக்கூடாதே’ என்று கவலையில் மாய்ந்தார்கள். தங்களது ஒவ்வொரு செயலையும் நடவடிக்கையையும் தங்களது ஆயுள் முழுவதும் சுயமதிப்பீடு செய்வதையே வாடிக்கையாக்கிக் கழித்தார்கள்.

ஏன்? சுயநலம்! அப்பட்ட சுயநலம். மறுமையில் தீயை விட்டுத் தங்களைக் காத்துக்கொள்ளும் பிரயத்தனம். அதன் விளைவு என்னாயிற்று? ஒப்பற்ற உன்னதச் சமூகமாக அது உருவாயிற்று.

இக்கவலை கொண்டிருந்தோரின் ஆக உயர்ந்த உதாரணம்தான் உமர் இப்னுல் கத்தாப் (ரலி). சொர்க்கத்திற்கு உரியவர்கள் என்று நபியவர்களால் அடையாளம் காண்பிக்கப்பட்டவர்களுள் ஒருவரான உமருக்கு நபியவர்களின் நன்மாராயம் அளித்திருக்க வேண்டிய மகிழ்வைவிட, ‘எங்கே தாம் நயவஞ்சகர்களுள் ஒருவரோ’ என்ற பேரச்சமே சதா வாட்டியது.

நயவஞ்சகர்கள் யார் யார் என்று இறைவன் தெரிவித்திருந்ததை நபியவர்கள் ஒரே ஒரு தோழரிடத்தில் மட்டுமே பகிர்ந்திருந்தார்கள். அவர்தாம் ஹுதைஃபா இப்னுல் யமான் (ரலி). அதனால் உமர் அவரைச் சந்தித்து, ‘தம் பெயர் அப்பட்டியலில் இருக்கிறதா?’ என்று கேட்பது வழக்கம். பட்டியலில் உள்ள பெயர்களை இறுதி வரை ஹுதைஃபா இப்னுல் யமான் எவரிடமும் தெரிவித்ததே இல்லை. ஆனால், அதில் உமரின் பெயர் இல்லை என்பதை மட்டும் அவரிடம் உறுதிப்படுத்துவார்.

சக முஸ்லிமின் ஈமானையும் நயவஞ்சகத்தையும் உரசிப் பார்த்துக் கூக்குரலிடுவதைவிட, இக்கவலை சுயநலமாய் நம் ஒவ்வொருவருக்கும் பிரதானமாய் அமைவதல்லவா கட்டாயம். அச்சுயநலமல்லவா சமூகப் பொதுநலனுக்கு வழிகோலும்.

(மறுமை நாளில் தன்) சுமையைச் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்;
அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அழைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் – அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்து கொள்ளப்படாது
எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர்.
எவர் பரிசுத்தமாய் இருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார்;
அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்லவேண்டியுள்ளது. (குர்ஆன் 35:18)

-நூருத்தீன்

சமரசம் 1-15 ஜூன் 2021, வெளியான கட்டுரை

அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்

Related Articles

Leave a Comment