முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து வேறுபாடு உள்ளது.

அடுத்த நாற்பதாண்டுகள் வரை மக்க மாநகரில் முஹம்மது (ஸல்) மற்றவர்களைப் போல சாதாரண ஒருவராகத்தான் இருந்து வந்தார்கள். அவர்களது வாழ்க்கையும் இயல்பான ஒன்றாகவே இருந்து வந்தது. ஆனால் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் மிக முக்கியமான வித்தியாசம் ஒன்று முஹம்மது (ஸல்) அவர்களிடம் இருந்தது. அந்த மக்களிடம் குடிகொண்டிருந்த அனாச்சாரம் மட்டும் அவர்களிடம் இல்லை. அறவே இல்லை. ஒழுக்கச் சீலராக, நம்பிக்கைக்கு உரியவராக, உலக மகா உத்தமராக, அந்த மண்ணில் அம்மனிதர் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்தார்.

நாற்பதாவது வயதில்தான் அவருக்கு நபித்துவம் அருளப்பட்டது. குர்ஆன் வசனங்கள் விண்ணிலிருந்து இறங்கத் தொடங்கின. மக்கத்து மக்களுள் ஒருவராக இருந்த சாமானிய அம்மனிதர், மாமனிதர் ஆகிப்போனார். அதற்கடுத்த 23 ஆண்டுகளில் உலகைப் புரட்டிப் போடும் அதிசயம் நிகழ்ந்தது! பாலைவன பூமியின் நடுவில் அமைந்த மக்க நகரில் உள்ள கருங்கல் ஆலயம், உலக மக்களும் முகங்களைத் திருப்பிக்கொள்ளும் மையப்புள்ளி ஆனது. மக்கள் அனைவருக்கும் அந்த இறுதி நபியின் சொல்லும் செயலும் அறிவிப்பும் ஆதர்சமாயின. உலகின் சொச்ச காலத்திற்குமான விதி வரம்புகள் மார்க்கமாயின.

ஒட்டகம் மேய்த்தவர்கள், விவசாயம் செய்தவர்கள், செல்வந்தர்கள், எசமானர்கள், அடிமைகள் எனப் பல தரப்பட்டவர்கள், வெவ்வேறு நிறத்தவர்கள் மீளெழுச்சியுற்ற இஸ்லாத்தில் சரிசம மனிதர்களாகி, முஸ்லிம்கள் என்ற ஒற்றை அடையாளத்துடன் நிமிர்ந்து நின்றனர். உன்னத ஞானம் சொரிந்த அந்த மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம், அத்தோழர்களுக்கு உயிரினும் மேலாகிவிட்டார்.

மிகையில்லை, வரலாறு சாட்சி.

போர்க் களங்களில் தங்களது உயிர் நீத்து நிரூபித்தவர்கள் ஒரு சாரார். நபியவர்களது உரோமத்தையும் வியர்வையையும் சேகரித்து உவகையடைந்தவர் ஒரு சாரார். நபியவர்கள்மீது தோழர்கள் கொண்டிருந்த அன்பு, பாசம், மரியாதை அவர்களது கட்டளைகளுக்கு அத்தோழர்கள் அடிபணியும் பாங்கு ஆகியன நபியவர்களது பரம எதிரிகளேகூட வியந்து மெச்சிப் புகழ்ந்த உண்மை.

அன்று அத்தோழர்கள் நபியவர்கள் மீது கொண்டிருந்த அன்பும் பாசமும் நேசமும் இன்றும் முஸ்லிம்களிடம் தொடர்கின்றன; இறுதி நாள் வரை தொடரத்தான் செய்யும். ஆனால் அவர்களுள் ஒரு தரப்பினரிடம் உள்ள பிரச்சினை வால் எது, தும்பு எது என்று ஏற்படும் தடுமாற்றம். நபித்தோழர்கள் வாழ்க்கை வெற்றியின் இரகசியம் அவர்கள் உதடுகள் உரைத்த புகழாரங்கள் மட்டுமன்று. நபியவர்கள் அருளிய ஞானம் எனும் தும்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அதில் வாழ்ந்து மரித்த அவர்களது செயல். தங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் தாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியையும் அத்திரு நபியின் அடிச்சுவட்டில் அமைத்துக்கொண்ட அவர்களது அடிபணிவு. சமரசத்திற்கு இடமேயற்ற அர்ப்பணிப்பு.

அப்படியான தராசில் இன்றைய எனது வாழ்க்கையை எடை போட்டால் அந்த முள் நகரும் திசை எனக்குள் கூச்சத்தையும் வெட்கத்தையும் ஏற்படுத்துகின்றது. எனது அக அலங்கோலத்தை எது சரி செய்யும்? இந்த ரபீஉல் அவ்வல் மாதத்திற்கு மட்டும் என்று குறுக்கிக்கொண்டு அத்திருநபியின் புகழைப் போற்றும் சம்பிரதாயமா? இந்த ஒரு மாதத்தில் மட்டும் எனக்குள் மிகைக்கும் உணர்ச்சிப் பெருக்கா?

அண்ணலாரின் அருமையும் பெருமையும் வழிமுறையும் எந்நாளும் எக்காலத்திற்குமானது ஆயிற்றே!

தம்மை அளவுக்குமீறிப் புகழ வேண்டாம் என்ற நபியவர்களின் ஹதீஸின் விளக்க ஆராய்ச்சி ஒருபுறம் நிற்கட்டும். இஸ்லாம் வாளால் பரவிய மதம் என்ற எதிரிகளின் அவதூறு ஒருபுறம் இருக்கட்டும். போரில் வென்ற வீரர்களாகவோ, வணிகர்களாகவோ முஸ்லிம்கள் குடிபெயர்ந்த ஊர்களில் வசித்த பிற சமயத்தவர்கள், அந்த முஸ்லிம்களால் கவரப்பட்டு, தாமே இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள் என்பது தானே வரலாறு; இன்றளவும் தொடரும் சான்று. அதிலல்லவா எனக்கான குறிப்பு அடங்கியுள்ளது.

எனது வாழ்க்கை அத்திருநபியின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவதில் எந்த அளவில் உள்ளது என்ற தினசரி மதிப்பீடு அல்லவா எனது அலகு.

இந்த ரபீஉல் அவ்வல் மாதத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள சம்பிரதாயங்களில் திருப்தியடைந்து எனது மெய் கவனங்கள் தொலைந்துவிடக் கூடாது, ஆதாரமற்ற விஷயங்களில் என் செயல்கள் அமைந்துவிடக் கூடாது என்பதே என் பெரும் கவலை. அது மட்டுமின்றி, கவலை கொள்ளத்தக்க மற்றொரு விஷயமும் ஒன்று உண்டு. உலக இறுதி நாள் நெருங்குவதின் அடையாளமாகப் பலவற்றை நபியவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அதில் ஒன்று கீழுள்ள நிகழ்வு:

தபூக் போரின்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூடாரத்தில் இருக்கும்போது, தம்மிடம் வந்த தோழர் அவ்ஃப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹுவிடம்,

“இறுதி நாள் வருவதற்கு முன்பு அதற்குரிய ஆறு அடையாளங்கள் நிகழும். அவற்றை எண்ணிக் கொள் …”(புகாரீ: 3176)

என்று கூறி அவர்கள் முதலாவதாகக் கூறியது தம்முடைய மரணம்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையை வாசிப்பவர்கள் கண்ணீரும் துக்கமும் இன்றி கடக்க முடியாத நிகழ்வு நபியவர்களின் மரணம்.

அம்மாபெரும் துயரம் நிகழ்வுற்ற மாதத்தை நாம் மறந்திருந்தால் அதையும் நினைவூட்டிக் கொள்வோம். அதுவும் இந்த ரபீஉல் அவ்வல்தான். அதுவும் ஒரு திங்கட்கிழமைதான்.

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 26 அக்டோபர் 2020 வெளியானது

Related Articles

Leave a Comment