இஸ்லாம் என்பது எம் முஸ்லிம்கள் பின்பற்றி யொழுகும் சன்மார்க்கத்தைக் குறித்துக் காட்டுவதாயிருக்கிறது. இச்சொல், “இறைவனுக்கு முற்ற முற்ற அடி முடி சாய்த்தல்” என்றும், இம்முழு முடி சாய்த்தலால் “அடியான் ஆண்டானுடனும் அவனடியார்களுடனும் சமாதானத்துடன் சாந்தி பெறுதல்” என்றும் பொருள் கொள்ளும். இச்சன்மார்க்கத்தின் பெயர் ‘இஸ்லாம்’ என்றே இறைவனாலே இயம்பப் பெற்றுள்ளது.
“இன்று நான் நுங்களுக்காக நுங்கள் சன்மார்க்கத்தைப் பூர்த்தி செய்துவிட்டேன்; இன்னம் நுங்கள் மீது எனது அருட்கொடையையும் பரிபூரணமாக்கி விட்டேன்; மேலும் நுங்களுக்காக நான் இஸ்லாத்தை (நுங்களுக்குரிய) சன்மார்க்கமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்” (குர்ஆன், 5:3).
எனவே, இதனை ‘முகம்மதிய மதம்’ என்று அழைப்பது தகாதென்றே அறிஞர் அறைவர். இஸ்லாம் என்பது முஹம்மது நபியால் சுயமே உற்பத்தி செய்துவிடப்பட்ட ஒரு நூதன மதமன்று. மனிதன் இத்தரணியில் தோன்றியது முதலே இஸ்லாமும் உடன் தோன்றியிருக்கிறது. என்னெனின், இறைவன் ஏவிய வண்ணம் அடிபணிந்து முடி சாய்த்து நடக்கும் அடியான் அவனுடனும் அவனடியார்களுடனும் சாந்தி மயமாய விசிராந்தியையடையப் பெறுகிறான் என்னும் தத்துவம் நூதனமாய்ப் பதினான்கு நூற்றாண்டுகட்கு முன்னேதான் இக்குவலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டதென்று சொல்வது சரியன்றே!
மானிடன் தோன்றியது முதலே உடன் தோன்றியுள்ள இந்தச் சாந்தி சமயத்தை இம்மேதினியில் அவ்வக் காலத்தே அவ்வத் தேயத்தே அவதரித்துள்ள, ஆண்டவனனுப்பிய தீர்க்க தரிசிகளெல்லாம் (குர். 35:24; 10:47; 40: 78) உபதேசித்திருந்தும், கால அடைவிலே மக்கள் தங்கள் சொந்தக் கருத்தைப் புகுத்தி, அந்தப் பரிசுத்த சமயத்தைப் பாழ் படுத்திவிட்டனர்.
இறுதியாகப் பதினான்கு நூற்றாண்டுகட்கு முன்னே அரப் நாட்டுத் தலைநகராய திரு மக்காவிலே அவதரித்த மஹான் முஹம்மத் நபியவர்கள்—(இவர்கள் மீது இறையருளும் அவனது ஆசீர்வாதமும் வந்திறங்கக் கடவன!)—பிற்காலத்தில் மானிடக் குறும்பால் கொண்டுவந்து நுழைக்கப்பட்ட இடைச் செருகல்களனைத்தையும் களைந்து, சுத்த சுயமாய அந்தப் பண்டைச் சாந்தி மார்க்கத்தை என்றென்றும் சிதைவுறாவாறு நிலைபெறுத்திச் சென்றார்கள். “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னான”’ என்னுமா போன்று, பண்டைக் காலத் தேவைக்கு வேண்டுவனவாயிருந்து, பிற்காலத் தேவைக்கு வேண்டாதனவாய் விட்ட விஷயங்களெல்லாம் விலக்கப்பட்டு, இக்காலத்துக்கும் இனி எக்காலத்துக்கும் வேண்டப்படும் சகல விஷயங்களும் சாங்கோபாங்கமாய்க் குர்ஆன் மஜீதிலே—இறையருளால் முஹம்மத் நபிக்கு இறங்கிய திருமறை ‘குர்ஆன்’ என்று அழைக்கப்படுகிறது—விளக்கப்பெற்றுள்ளன.
முஹம்மத் நபி அவதரித்த காலத்தில் தேசாதேசப் போக்குவரவுச் சாதனம் மிக்குப் பெருகி, அங்கங்கே யிருந்த மக்களெல்லாம் ஒரு நாட்டாருடன் இனியொரு நாட்டார் நெருங்கிப் பழக நேர்ந்துவிட்டமையின், வெவ்வேறு தேயத்துக்கு வெவ்வேறு நபி தேவையென்னும் அவசியம் இல்லாதே போய்விட் டது. எனவேதான், இந்த முஹம்மத் நபி இவ்வுலகனைத்திற்கும் பொது நபியாயே அனுப்பப்பெற்றுள்ளாரென இறைவன் தன் திருமறையில் பலபடப் புகன்றிருக்கின்றான். (21: 107 ; 22: 67).
இஸ்லாத்திலே எல்லாக் காலத்துக்கும் எல்லா நாட்டுக்கும் எல்லா மக்களுக்கும் தேவைப்படும் எல்லா நல்ல விஷயங்களும் முழுமையாய் முற்றுறத் துலக்கப்பட்டிருத்தலினால் (39: 27), இந்த நபிக்குப் பின்னே இனியொரு நபி அவதரிக்க வேண்டிய அவசியமில்லாதே போய் விட்டமையான், இவரே இறுதி நபி யென்று குர் ஆன் ஷரீப் கூறி விட்டிருக்கிறது (33:40).
சமயவுறுதியும் சரியை கிரியைகளும்
இஸ்லாத்தில் சித்தாந்தமென்றும், அனுஷ்டானமென்றும் இருபெரும் பிரிவுகளுள. சித்தாந்த மென்னப்படும் சமய நம்பிக்கையில்லாது அனுஷ்டான மென்னப்படும் கிரியைகளால் மட்டும் பயன் விளைவதில்லை; கிரியைகளில்லாது வெறு நம்பிக்கையால் மட்டுமேயும் கோரிய பலன் கிட்டுவதில்லை. ஆதலால், நம்பிக்கையென்ற ஈமான் என்னும் அகமும், கிரியையென்ற இஸ்லாம் என்னும் புறமும் ஒன்று சேர்ந்ததேதான் பரந்த இஸ்லாமாகும். இரண்டையும் தனித் தனியே பிரித்தலியலாது; ஒன்றுடனொன்று விரவியே இவை நிற்கும். “ஈமான்” என்னும் நம்பிக்கைப் பகுதியில் ஏழு அம்சங்களும், “இஸ்லாம்” என்னும் கிரியைப் பகுதியில் ஐந்து அம்சங்களும் உண்டு. அவை:—
ஈமானின் 7 அம்சங்கள்:
- ஒரே இறைவனிருக்கிறான். இவனுக்கு இணையானவனேனும் துணையானவனேனும் எவனுமேயில்லை. எனவே, எவ்விதப் படிமப் பூசையும் இஸ்லாத்திலில்லை. இறைவனைப் பார்க்கினும் வேறு பொருள்களிடத்து—அவை மனைவியேயாயினும், மக்களேயாயினும், பொன்னேயாயினும், பொருளேயாயினும், பதவியேயாயினும், பட்டமேயாயினும்—மிகவாய பிரியம் வைக்கின், அதுவுங் கூட இணைத்துப் பூசித்தலென்றே கொள்ளப்படுகிறது. ஏக இறைவனுக்கு மனைவியாதல், மக்களாதல் இல்லை; என்னெனின், இவன் ஆணுமல்லன்; பெண்ணுமல்லன். சுருக்கிச் சொல்லின், “இறைவனைப் போன்றதைப் போன்றதுகூட எதுவுமே இங்கில்லை, என்பது குர்ஆனின் கூற்று (42 : 11).
- இறைவனுடைய ஏவல்களை இப்பிரபஞ்சத்தில் நிறைவேற்றி வைக்கும் தேவதூதர்கள் (மலக்குகள்) இருக்கிறார்கள். நபிமார்கட்கு இறைவனறிவிப்புக்களைக் கொணர்ந்தளிப்பவரும் ஒரு சிறந்த மலக்கேயாவர்.
- இறைவன் திருமறைகள் இவ்வுலக மக்கட்கெல்லாம் அருளப்பட்டே யிருக்கின்றன. அவையனைத்தும் கால அடைவிலே அழிந்தோ பழுதுபட்டோ பற்றாமலோ போய் விட்டமையான், இறுதியாகக் குர்ஆனே எவ்வித மாற்றமேனும் திருத்தமேனும் இல்லாது இப்பூவுலகுக்கெல்லாம் இறுதியாய பொதுமறையாயிருந்து வருகிறது.
- எல்லாக் காலத்திலும் எல்லா நாட்டிலும் இறைவன் தூதர்கள்—நபிமார்கள்— அவதரித்துள்ளார்கள் (10:47; 40:78). எல்லா நபிமாருக்கும் இறுதியில் தோன்றிய முஹம்மத் நபியே இறுதி நபியாயிருக்கிறார்கள் (33 : 40).
- இறுதித் தீர்ப்பு நாள் ஒன்று வரும் (2:4); அன்று அவரவர் செய்துள்ள நன்மை தின்மைகட்கு ஏற்றவாறு சம்மானம் அல்லது சிக்ஷையளிக்கப் பெறுவர்.
- சரியான நல்லது எது! சரியான தீயது எது? என்னும் அளவை ஆண்டவனிடத்தேதான் இருக்கிறது.
- நியாயத் தீர்ப்புக்காக அனைவரும் அந்த நடுத்தீர்வை நாளன்று ஆண்டவன் திருமுன்பினில் கொண்டுவந்து சேர்க்கப் பெறுவார்கள்.
சுவர்க்கப் பேரானந்தம்
அதுபொழுது நன்மை மிகுந்தவர்கள் சுவர்க்கத்துக்கும், தின்மை நிறைந்தவர்கள் நரகத்துக்கும் அனுப்பப் பெறுவார்கள். சுவர்க்கவாசிகள் மேன்மேலும் அங்கேயுள்ள ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டே. சென்று, முடிவாக இறைவனது முழுப்பிரீதிக்கும் ஆளாகி (39: 20) அவனது அண்மையிலே யிருந்து, அவ்வெல்லாம் வல்ல அல்லாஹ்வின் திவ்ய தரிசனத்தால் விளையும் பேரானந்தப் பெருக்கத்தைப் பெற்றுத் திளைத்திடுவார்கள். நரகவாசிகள் அவர்களிழைத்த தின்மைகளின் களிம்பு தீரும்வரை அந் நரகத் தீயிலே வெதுப்பப் பெற்று, இறுதியிலே புடமிடப்பட்ட பொன்னேபோல் அழுக்கு நீங்கிப் பரிசுத்தர்களாகி, அதற்கப்பாலே அவ்வான்மவுலகினில் முன்னேறிச் சென்று, முடிவிலே முன்னர்ச் சென்ற புண்ணிய ஆத்மாக்களுடனே சேர்ந்து, அவர்களடையும் அல்லாஹ்வின் திவ்ய தரிசனப் பேரானந்தத்தை யடைவார்கள். எனவே, இஸ்லாத்தில் கருமமென்பதும் ஜன்மமென்பதும் இல்லையென்பது தெளியப்பெறும்.
இஸ்லாத்தின் கிரியைகள்
மீக் கூறியவாறாயுள்ள ஈமானுக்கு—சமயவுறுதிக்கு உரிய ஏழு அம்சங்களுக்குப் பின்னே, இறைவன் பிரீதியையும் அவனது தரிசன மகிமையையும் அடைய ஐந்து அனுஷ்டான கிரியைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவையாவன:
- இறைவன் ஏகனே யென்பதற்குச் சிறிதும் முரணில்லாது எல்லா முஸ்லிம்களும் நடந்து கொள்ளுதல் வேண்டும்.
- நாடோறும் ஐந்து வேளைகளில் அல்லாஹ்வை நினைத்து வணங்கித் தொழுதல் வேண்டும்.
- ஐம்பது ரூபாய்க்கு மேற்பட்ட முதலுடைய ஆண் பெண் அனைவரும் ஆண்டுதோறும் தம்பாலுள்ள “ஆஸ்தி”யினின்று இரண்டரைச் சதவிகிதம் ஏழைகட்குத் தானமாயீதல் வேண்டும்.
- ஆண்டுக்கொரு முறை ரமலான் மாத முழுதும் வயது வந்த ஆண் பெண் அத்தனை பேரும் பகல் வேளைகளில் உண்ணாநோன்பு நோற்றிடுதல் வேண்டும்.
- போதிய பொருட் பெருக்கமுள்ள செல்வர்களெல்லாம் ஆயுளில் ஒருமுறையேனும் திரு மக்கா சென்று, ஆங்குள்ள ஆதியாலயமாகிய கஃபாவைத் தரிசித்தல் வேண்டும். கஃபா வென்பது ஒரு நீள் சதுரக் கருங்கற் கட்டிடமேயாம்; அதனுள்ளே ஏதொரு படிமமேனும் படமேனும் வேறெதுவேனும் இல்லையேயில்லை. இதுவே ஏக இறைவனை வணங்க இத்தரணியில் நிருமிக்கப்பட்ட ஆதியாலயமென இயம்பப் பெற்று வருகிறது. இந்தக் கஃபா இப்றாஹீம் நபியால் சற்றேறக் குறைய நாலாயிரம் ஆண்டுகட்கு முன்னே, அதற்கு முன்னர்க் கிலமாய்க் கிடந்த அடிப்படை மீது புதிதாய் நிருமிக்கப்பட்டுள்ளது.
ஏக சகோதரத்வம்
இஸ்லாத்துக்குரிய மூலக் கோட்பாடு இறைவன் ஏகனே என்பதாயிருக்கிறது. அகத்திலும் புறத்திலும், சித்தாந்தத்திலும் அனுஷ்டானத்திலும் ஆண்டவன் ஒருவனேதான். எக்காரணத்தைக் கொண்டும் இறைவனுக்கு இணைவைத்து, அல்லது படிமம் நிறுவிப் பூசிப்பது கூடாது. இறைவன் ஏகனே என்னும் கோட்பாட்டை யொட்டி, அடுத்தபடியில் இப்பாருலக மக்களெல்லாம் ஏக சகோதரக் குழுவினரே என்னும் கொள்கை ஏற்பட்டிருக்கிறது. மனிதனுக்கு மனிதன் மேன்மை தாழ்மையில்லை : வெள்ளையன் கறுப்பன், மாநிறத்தான் மஞ்சணிறத்தான், காக்கேசியன் மங்கோலியன் நீகிரோவன் என்ற ஜாதி அல்லது இன வேறுபாடு இஸ்லாத்தில் இல்லை. இச்சன்மார்க்கத்தில் தீண்டாமை பாராமை போன்ற எத்தகை வருணாச்சிரமமும் இல்லை. பிறவியால் எவனும் வேறெவனையுங்காட்டில் உயர்ந்தவனல்லன். “நிச்சயமாக, உங்களுள்ளே அல்லாஹ்வினிடத்து மிகவு மேம்பட்டவன் உங்களுள்ளே அவன் மாட்டுள்ள அச்சத்தால் தன் கடமையில் வழுவாதிருப்பவனே யாவான்,” என்பது குர்ஆன் கூற்று (49: 13).
பெண்களின் பெருமை
இஸ்லாத்தில் பெண்களின் நிலைமை ஆண்களுக்கு நிகராகவே உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது. அஞ்ஞான காலத்தில் ஆடுமாடுகளே போல் நடாத்தப்பட்டுவந்த பெண்ணினம் இப்பால் ஆண்களுக்குச் சமமென இஸ்லாம் ஆக்கிவைத்து விட்டது. ஆயின், குடும்பச் சுமையை ஏற்றுப் பராமரிப்பது ஆடவர் கடமையாதலினாலும், பெண்டிரின் மேனியமைப்புப் பொதுவாய் ஆடவன் உடலமைப்பைப் போல் உரம் பெற்றில்லாமையாலும், இவர்கள் வமிசப் பெருக்கத்துக்கென இறைவனால் வேறு விதமே படைக்கப்பட்டிருத்தலினாலும், ஆண்கள் பெண்களைப் பார்க்கினும் மிகச் சிறிதே மேலாக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம் மாதர்கள் இவ்வுலக காரியங்களில் மட்டுமின்றி, ஆன்மிக விஷயங்களிலும் ஆடவருக்கு நிகராகவே அமர்த்தப்பெற்றுள்ளார்கள். உலகப் பொருள்களை இப்பெண்மணிகள் சம்பாதிக்கலாம், சுவீகரிக்கலாம், வைத்துக்கொள்ளலாம், விற்கலாம், வாங்கலாம், வினியோகிக்கலாம். இன்னம் எத்தகைய கண்ணியமுள்ள தொழிலும் நடத்தலாம். மனைவியரின் சொந்தச் சொத்தில் கணவருக்குக் கூடத் தலையிட உரிமையில்லை. பெண்கள் தாய்தந்தையரின் சொத்திலே பாகம் பெறுவதுடன், விதவைகளாகி விட்டால் கணவரின் சொத்திலும் பங்கு பெறுகிறார்கள்.
திருமணமும் பிரிவினையும்
பெண்மணிகள், அவர்களனுமதியின்றி எவருக்கும் மணமுடித்து வைக்கப்படுவது கூடாது. மண முடிவுக்கு முன்னே மாப்பிள்ளை அப்புதுப்பெண்ணுக்குத் திருமணக் கட்டணமென்னும் மஹ்ர்த் தொகையொன்று கொடுக்கவேண்டும். இஃது, அவளை மணக்கோலத்தின் பொழுதே ஒரு சொந்தச் சொத்துக்கு உரியவளாயுயர்த்தி வைப்பதாயிருக்கிறது. முஸ்லிம் மாதர்—கணவர் மனைவியரை விவாக விலக்குச் செய்வதேபோல்—கணவர்பாலிருந்து விவாக விலக்குப் பெற உரிமை பெற்றுள்ளார்கள். விதவா விவாக மென்பது பதினான்கு நூற்றாண்டுகட்கு முன்னரே முஸ்லிம் மாதருக்கு உரிமையாக்கப்பட்டிருக்கிறது.
ஒழுக்கம்
இனி, இஸ்லாத்தில் கணவர்-மனைவியர் ஒழுக்கம், குடும்பப்பொறுப்பு, சமுதாய நலன் எல்லாம் செவ்வன் செய்துவைக்கப் பட்டிருப்பதுடனே, வியபிசாரம், மது பானம், சூது பொருதல், வட்டிவாங்கல், கொலை, களவு ஆகிய வெல்லாமும் அடியுடன் தடுக்கப்பட்டுள்ளன. மனிதன் தீயதை யகற்றி நல்லதைச் செய்து, இப்பௌதிகவுலகிலும் அவ்வான்மவுலகிலும் முன்னேறுதற்குரிய எல்லா நல்லவழிகளும் இஸ்லாத்தில் வகுக்கப்பட்டுள்ளன.
கல்வி
கல்வித் துறையில் இஸ்லாம் செய்துள்ள சீர்திருத்தம் மிகவும் மெச்சற்குரியதாயிருக்கிறது. அறிவு சீனாவிலிருப்பினும், முஸ்லிம் ஆணும் பெண்ணும் அக்கல்வியை நாடிச் சென்று பயிலல் அத்தியாவசியமாகும். (இது நபி பெருமான் திருவாக்கு). எனவே, கல்வி கற்பதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தகை வேற்றுமையும் பாராட்டப் படுவதில்லை. கல்வியறிவே யில்லாதிருந்த அக்கால அஞ்ஞான அரபிகள் சடிதியிலே சகலகலா வல்லுநர்களாக உயர்ந்து, இருளடர்ந்து கிடந்த அக்கால ஐரோப்பாக் கண்டத்துக்குள்ளே கல்வியறிவைச் சுமந்து சென்று சுடரொளியைக் கொளுத்தி விட்டார்கள். எழுதப்படிக்கத் தெரியாதிருந்த உம்மீ நபிக்கு ஆதியில் ஆண்டவனறிவித்த ஏவல் கல்வி கற்கச் சொன்னதாயே யிருக்கிறது.
“படைத்த உமது ரக்ஷகனது திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக; அவன் மனிதனை உதிரக்கட்டியினின்று உண்டு பண்ணினான். ஓதுவீராக, இன்னம், உம்முடைய ரக்ஷகன் மாபெருங் கண்ணியம் வாய்ந்தவனாயிருக்கிறான். அவன் எழுதுகோலைக் கொண்டு எழுதக்கற்பித்தான்; மனிதனுக்கு அவன் அறியாதிருந்ததை அறியக் கற்பித்தான்” (96:1-5) என்னும் இவ்வைந்து திருவாக்கியங்களே இறைவனால் முஹம்மத் நபிக்கு முதன்முதலா யறிவிக்கப்பட்ட திருமறைச் சுலோகங்களா யிருக்கின்றன.
இஸ்லாத்துக்கு முன்னே குருகுலங்களிலும் மடாலயங்களுள்ளுமே புகுந்து கிடந்த கல்வி பொதுமக்கட் சொத்தாய்ப் பகிரங்கத்துக்குக் கொண்டுவரப்பட்டு, பல்கலைக் கழகங்கள் வாயிலாய்ப் புகட்டப்படுமாறு முதன் முதலாகச் செய்தவர்கள் அக்கால அரப் முஸ்லிம்களே யாவார்கள். இன்றும் எகிப்து நாட்டுக் கெய்ரோவில் இலங்கிவரும் “அல் அஜ்(z)ஹர்” என்னும் இஸ்லாமிய பல்கலைக் கழகமே இப்பாருலகில் மிகமிகப் புராதன, ஓராயிரமாண்டுகட்கு மேற்பட்ட வயது முதிர்ந்த சர்வகலாசங்கமாயிருக்கிறது. ஸ்பெயின் தேயத்தில் அவ்வரபிகள் விதைத்த வித்தே இதுகாலை அம்மேனாடெங்கணும் விஞ்ஞானக் கலைகளாய்க் கொடி படர்ந்தோடுகின்றன. பூமி உருண்டையென்பதையும், மேற்குக் கோளத்தில் ஒரு பெரிய பூபாகம் உண்டென்பதையும் முஸ்லிம் கல்விச்சாலையிலிருந்தே கொலம்பஸ் கற்று வெளிப்பட்டாரென ஸ்பெய்ன் முஸ்லிம் சரிதை சான்று பகர்கின்றது.
அரசியல்
அரசியற்றுறையில் இஸ்லாம் குடியாட்சிக்குரியதாயே யமைந்துள்ளது. இதன் தலைவர் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். இவர், ஆலோசகர்களாய அமைச்சர்களின் பரியாலோசனையைக் கேட்டே ஆட்சி புரிவார். அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதரும் வகுத்துள்ள நியாயப் பிரமாண முறைப்படி ஆட்சி செலுத்தும் வரையே இவர் இஸ்லாமியக் குடியரசுத் தலைவராயிருப்பார். அந்த நியதி முறையை இவர் மீறிவிடுங்கால், இவருக்குரிய தலைமைப் பதவியினின்று வீழ்த்தப்பட்டு விடுவார். இஸ்லாத்தின் தற்காப்பிற்காக இவர் போர் தொடுக்கலாம். ஆனால், இஸ்லாத்தை ஏனையவர் மீது சுமத்தவேனும், வலுச்சண்டைக்குச் செல்லவேனும் எந்த முஸ்லிமுக்கும் அனுமதியில்லை. “சமய விஷயத்தில் சற்றும் கட்டாயம் கூடாது” என்பது இறைவனாணை (2:256).
எனவே, இஸ்லாம் வாட் படைத் துணைகொண்டே எங்கும் பரத்தப்பட்ட தென்பது வீண்பழியேயாகும். தற்காப்புப் போரிலும் எதிரியிழைக்கும் அழிவினளவுக்கே முஸ்லிம்களும் அவ்வெதிரிக்கு அழிவை விளைக்கலாம். எதிரி சமாதானத்தை விழைந்தால், அவ்விழைவு வஞ்சக நோக்குடனே பிறந்திருப்பினும், முஸ்லிம்கள் அக்கணமே அப்பகைவனது கோரிக்கைக்கு இணங்கிப் போதல் வேண்டும். ஏனென்றால், ‘இஸ்லாம்’ என்னும் சொல்லே ‘ஸலாம்’ (சாந்தி) என்னும் மூலத்திலிருந்து பிறந்த வார்த்தையா யிலங்குகிறது. ஸலாத்தை விரும்பும், ஸலாத்தை நல்கும் மார்க்கமே இஸ்லாம். அப்படிப்பட்ட ஸலாத்தைப் பிறர்க்களிப்பவனே முஸ்லிம்.
-பா. தாவூத்ஷா
மதுரைத் தமிழ்ச் சங்கம் பொன் விழா மலர் 1956
அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்