ஞ்சை இரயில் நிலையத்தில் அன்று இரவு அப்படி ஒரு களேபரம் நடக்கும் என்று ஏகேஏ நினைத்தும் பார்க்கவில்லை. தம் இயல்புக்கு மாற்றமாகத் தாம் எப்படி அப்படி?

மனைவியின் பயணம் கடைசி நேரத்தில் தடைப்பட்டதால் தாம் மட்டும் சென்னையில் இருந்து வந்திருந்தார்.

“சாதாரண ஃப்ளுன்னுதானே டாக்டர் சொல்றார்” என்று மனைவியிடம் சொல்லிப் பார்த்தார்.

“நமக்குத் தெரியுது. இருமல் மெதுவாத்தான் நிக்குமாம். அங்கே வந்து லொக்கு லொக்குன்னு இருமினால் மக்கள் ஃப்ளூன்னு கண்டாங்களா, ஓ மைக்ரான்னு நெனப்பாங்களா? தங்கை வந்து ரெண்டு நாள் என்னைப் பார்த்துப்பா. நீங்க போய்ட்டு வாங்க”

அவரது முழுப் பெயர் என்னவென்று நண்பர்கள் யாருக்கும் தெரியாது. அனைவருக்கும் அவர் ஏகேஏ. சவூதியில் பணிபுரிந்த காலத்தில் நெருங்கிய நட்பு பாலு. இருவருக்கும் ஒரே நிறுவனத்தில் பணி. இவர் எலக்டிரிக்கல் துறையில் மேலாளர். பாலுவுக்குக் கட்டுமானப் பிரிவு. நட்புக்குக் காரணம் அதுவன்று. சினிமா, பாட்டு, புத்தகம் என்ற ஒரே அலைவரிசை ரசனை.

உழைத்து, களைத்து, ஓய்வு பெற்றதும் சென்னையில் செட்டிலாகிவிட்டார் ஏகேஏ. சேமிப்பும் வாடகைக்கு விட்டிருந்த இரு வீடுகளும் அவருக்கு மனைவிக்கும் ஜீவனம் நடத்தப் போதுமானதாக இருந்தன. ஒரே மகளுக்குத் திருமணம் செய்துவிட்டதால் கடமைகளும் நிறைவேறியிருந்தன.

ஆனால் கனவு ஒன்று இருந்தது. ஆடி கார். ஆக்டிவ்வாவில் மனைவியுடன் ஆடி ஷோரூமைக் கடக்கும் போதெல்லாம் அவர் சிலாகிப்பதைப் பார்த்து, “இப்ப எதுக்கு உங்களுக்கு இந்த ஆசை? இருப்பது போதாதா?” என்பார் மனைவி.

அது கனவுதான் என்றாலும் அதைக் காண்பது அவருக்குப் பிடித்திருந்தது. பிடித்திருந்த மற்ற இரண்டு உடற்பயிற்சி, சண்டைக் கலை. அவருக்கு உடற்பயிற்சியில் அலாதி ஈடுபாடு. அடுத்த ஒலிம்பிக்ஸில் இடம் பெறுவதைப் போல்தான் தினசரி ஜிம் பயிற்சி.

‘இந்த வயசில் வாக்கிங், இலேசான பயிற்சி போதாதா?’ என்பவர்களிடம் உருண்டு திரண்ட தோள்களைக் குலுக்கி, புன்னகைத்துவிட்டு நகர்ந்து விடுவார். சண்டையின் விதங்களை அவர் பேச ஆரம்பித்தால் கோனார் நோட்ஸ் எழுதி விடலாம். ஆனால் ஆள் பரம சாது.

பாலு தஞ்சையில் செட்டிலாகி, பொழுது போக கன்ஸ்ட்ரக்‌ஷன் பிஸினஸ் தொடங்கி, அது பிரமாதமாக அமைந்து, நேரம் கிடைக்காத அளவிற்கு பிஸியாகிவிட்டார். அவருடைய மகனும் ஆர்கிடெக்ட் பட்டத்துடன் தந்தையின் பிஸினஸில் இணைந்துவிட்டான். அவனுடைய திருமணத்திற்குத்தான் ஏகேவும் மனைவியும் போகலாம் எனத் தயாராகி, கடைசியில் அவர் மட்டும் தஞ்சை வந்து சேர்ந்தார்.

ஆடி காரில் வந்து இறங்கினான மணமகன். எல்லோரும் அவனைப் பார்க்க ஏகேஏவின் கண்கள் மட்டும் ஆடி காரில். கோலாகலமான கல்யாணம். சிறப்பான விருந்து. பழைய நண்பர்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து, இரண்டு நாள்கள் சட்டென்று ஓடி, “இன்னும் இரண்டு நாள் தங்கிட்டுப் போயேன்” என்ற பாலுவிடம், “அவ தனியா இருக்கா. நல்லானதும் அவளையும் அழைச்சுட்டு வந்து ஒரு வாரம் தங்கிட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டு அன்றைய இரவு உழவன் எக்ஸ்பிரஸைப் பிடிக்க வந்து விட்டார்.

இரயில் வர அரைமணி நேரம் இருந்தது. தண்ணீர் பாட்டிலும் வார இதழும் வாங்கிக்கொண்டு பெஞ்சில் அமரும்போது கவனித்தார். சற்றுத்தள்ளி யுவ, யுவதியர் குழு ஒன்று சிரிப்பும் கும்மாளமுமாய் நின்றுகொண்டிருந்தது. கல்லூரி மாணவர்களாக இருக்க வேண்டும். அனைவரிடமும் வயதுக்கேற்ற துள்ளல்.

புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருக்கும்போது ஒரு பெண்ணின் வீறல். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன் சக மாணவியின் துப்பட்டாவைப் பிடித்து இழுக்க, அவள் அதைத் தம் கைகளால் மார்போடு இழுத்து அணைத்துப் போராடிக்கொண்டிருந்தாள்.

ஆங்கிலத்தில் அவள் திட்டியதை உதாசீனப்படுத்தவிட்டு, அவலட்சண சிரிப்புடன் இன்னும் வேகமாக இழுக்கும் முயற்சியில் இருந்தான் அவன். அந்தக் கூட்டம் வட்ட வடிவில் நின்றுகொண்டு வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்ததே தவிர, ஒருவராவது தடுக்க வேண்டுமே.

திகைத்துவிட்டார் ஏகேஏ. மூளைச் செல்லில் அவசரச் செய்தி பறந்து, வேகமாக அவனை நோக்கிச் சென்றார். அவர் வரும் வேகத்தைப் பார்த்துவிட்டு வழிவிட்டது அந்த வட்டம். பின்னாலிருந்து சென்று அவனது தோளை வேகமாகத் தட்டினார்.

திரும்பியவன், “நீ யாரு? நீ இங்கே வரக்கூடாதே” திகைத்தாற்போல் பார்த்தான்.

பளார் என்று அறைந்தார். தடுமாறி கீழே விழுந்தான் அவன். தாவணியை எடுத்துப் போர்த்திக்கொண்டு கூட்டதுடன் பம்மினாள் அந்தப் பெண். கூட்டத்தில் பலர் இப்பொழுது ஃபோனில் விடியோ எடுக்க ஆரம்பித்தனர்.

ரோஷத்துடன் எழுந்தவன் பேண்ட்டில் மறைத்திருந்த கத்தியை எடுத்து அவர் மீது பாய்ச்ச வர, ஏகேஏ தமது வலக்கையால் அவனது மணிக்கட்டின் அருகே தடுத்து, இடது கையால் அவனுடைய முழங்கையை உட்புறமாக இழுக்க, கத்தி அவனது கழுத்துக்கே திரும்பியது. அலறிக்கொண்டே கத்தியை நழுவ விட்டான் அவன்.

அப்படியும் விடாமல் அவன் பாய்வதற்குத் தயாரானதும் தம் கைகளைக் கத்தரிபோல் வைத்து அவனது கழுத்தைப் பிடித்து இழுத்தார். கைகள் இரண்டும் மாறி நீண்டதால் உடலியல் இயக்கமும் மாறி, கைகள் இயல்பு நிலைக்கு வரும் வழியில் மாட்டியிருந்த அவனது கழுத்து எளிதாக அவரை நோக்கி வந்தது. தரையில் அவனைத் தள்ளி குப்புறப் படுக்க வைத்து, கைகளைப் பின்புறம் மடக்கிப் பிடித்து, “யாரிடமாவது கயிறு இருக்கிறதா?” என்றார்.

அவன் தலையை மட்டும் திருப்பி, “கட், கட்” என்று கத்தினான்.

“டேய், நான் இன்னும் கட்டவே இல்லே. அதுக்குள்ள என்ன கட்?”

பின்புறமிருந்து “கட்! கட்” என்று கேட்டது. சிலர் ஓடி வந்தனர். அதில் முன்னால் ஓடி வருபவரைப் பார்த்து, ‘தெரிந்த முகம் போல் இருக்கிறதே’ என்று நினைத்தார் ஏகேஏ.

அருகில் நெருங்கியவரிடம், “அட! நீங்க டைரக்டர் யுவராஜ்”

“ஆமாம் சார்! இது ஷூட்டிங். இயல்பாக இருக்கட்டும் என்று பொது இடத்தில் கேண்டிட் சண்டைக் காட்சி அமைத்திருந்தோம்” தூரத்தில் உயரமான மேடையைக் காட்டி, “அதோ கேமரா. அந்த நொடி ஹீரோ எண்ட்ரி ஆகி அவனை அடிக்கணும். நீங்க புகுந்துட்டீங்க”

ஹீரோ என்று அவர் காட்டிய திசையில் பார்த்தார். இருபது வயதில் நெடுநெடுவென்று ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

“எல்லோரும் புது முகம்”

“ஐயோ. அப்பவே கட் சொல்லியிருக்கலாமே. ஓடி வந்து தடுத்துருக்கலாமே”

“அடிச்சு நாஸ்தி பண்ணிட்டார் சார் இந்த ஆளு” சென்னை வசவு வார்த்தையை இணைத்துத் திட்டினான் அடியாள். எழுந்து அமர்ந்திருந்தான்.

உதவி டைரக்டரிடம், “இன்னிக்கு இவன் பேட்டாவை மூன்று பங்கு ஆக்கிடு” என்ற யுவராஜ், “சார் உங்க ஃபைட் வெரி நேச்சுரல். என்ன லாவகம்? ஸ்டண்ட் மாஸ்டர்கள் அப்படியே ஒடட்டும் என்று சொல்லிவிட்டார்கள். இதை அப்படியே படத்தில் யூஸ் பண்ணிக்கிறோம். ஸ்கிர்ப்ட்டை இலேசா மாத்திக்கலாம்”

அவரால் நம்ப முடியவில்லை. என்ன பேசுவது என்றும் தெரியவில்லை.

“சாருக்கு நல்ல ஜிம் பாடி. நேச்சுரலா சண்டை செய்றார். ஆக்‌ஷன் கலந்த ரோல்களில் பயன்படுத்தலாம். குணச்சித்திர வேடமும் பொருந்தும். ஃபீல்டுக்கு வந்தா நல்லா ஒரு ரவுண்டு வருவார்” என்றார் ஸ்டண்ட் மாஸ்டர்.

“சார், சினிமாவில் ஆர்வம் இருக்கா சொல்லுங்க. இந்தப் படத்திலேயேகூட சேர்த்துடலாம்”

மூளைக்குள் ஜிவ்வென்றது. ஆடி கார் சாத்தியமோ? கனவு மெய்ப்படுமோ? ஒரு படத்திற்கு எவ்வளவு வரும்? எத்தனை படம் நடிக்க வேண்டும்?

அரை நிமிடம் யோசித்தவர் இடம், வலமாக வேகமாகத் தலையாட்டினார்.

“வேண்டாம் சார். எனக்கு என் ஆக்டிவ்வா போதும்”

“ஆக்டிவ் ரோல்தான் சார். ஆக்‌ஷனும் இருக்கும்”

“சாரி நான் சொன்னது வேற. இதுக்கு விலை இருக்கு சார்”

“புரொட்யூசர் கன் பார்ட்டி சார். பேமண்ட்லாம் சிக்கல் இருக்காது” என்றான் உதவி டைரக்டர்.

“அதில்லைங்க! திரையில் சண்டை போட்டா நிஜ வாழ்க்கைல திரை விழுந்திடும். அந்தப் பொண்ணைப் பார்க்க என் மகளைப் போல இருந்துச்சு. துடிச்சு ஓடிவந்தேன் நேச்சுரலா. மேக்கப் பூசிட்டா இமேஜ் அப்பிக்கும். மனசு படம் கலெக்‌ஷனை கணக்குப் போடும். இந்த நேச்சுரல் ரௌத்திரம் போய்டும்”

“நல்லா யோசிச்சு சொல்லுங்க சார்”

சிரித்தார். “டிரெயினுக்கு நேரமாச்சு” நடந்தவர் டைரக்டரிடம் திரும்பி, “சொதப்பிட்டேன் சாரி. நீங்க அந்த ஃபைட்டை உங்க ஹீரோவை வைத்து ரீஷூட் பண்ணிடுங்க. படம் பெயர் என்ன சார்?”

“அழியாத கனா”

-நூருத்தீன்

oOo

#MyVikatan

விகடன்.காம் -இல் ஜூலை 13, 2022 வெளியான சிறுகதை


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment