“எல்லாம் தற்செயல்” என்று பாடத்தை முடித்தார் புரொஃபஸர் டார்வின்.
வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டி, இருபது ஆண்டுத் தாம்பத்யத்திற்குப் பிறகு பிறந்த தங்களுடைய மகனுக்கு வெங்கடாசலம் என்று பெயரிட்டார்கள் டார்வினின் பெற்றோர்.
பக்தியும் ஆச்சாரமுமாக வளர்ந்த வெங்கடாசலம், கல்லூரியில், ஓர் அசந்தர்ப்பத்தில் டார்வினின் கோட்பாட்டின் மேல் தடுக்கி விழப்போய், அத்துடன் அவர் பாதை மாறி, திசை மாறி, அரசு கெஸட்டில் பெயரும் மாறி, டார்வின் ஆகிவிட்டார்.
“அப்படிச் சொல்லிவிட முடியாது ஸார்” என்று ஒரு குரல் எழுந்தது.
“ஆஹ்! மீண்டும் ஆஷ்” என்றார் டார்வின்.
“இவனுக்கு எதிர் குரல் கொடுப்பதே வேலை” என்று தன் நண்பிக்கு வாட்ஸ்அப்பில் மெஸேஜ் அனுப்பியவாறே அலுத்துக் கொண்டான் சக மாணவன் வருண். புரொஃபஸருக்கும் ஆஷிற்கும் இடையிலான வாக்குவாதம் வகுப்புப் பிரசித்தம்.
“அனைத்தையும் படைத்தவன் ஒருவன் இருக்கிறான். அதானே ஆஷ்?”
“நிச்சயமாக” என்றான் ஆஷ்.
“இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நானும் சொல்கிறேன்” என்று புன்னகைத்தார் டார்வின்.
“ஐயோ! இந்த வசனத்தை எத்தனை முறை கேட்பது” என்று தலையில் அடித்துக்கொண்டான் வருண்.
அந்தக் கல்லூரிக்கு வெளியே இருநூறு மீட்டர் தொலைவில் ஓர் ஒப்பனை நிலையத்தின் எதிரே, பாதையோரமாக, பழைய மாருதி கார் இளைப்பாறியபடி நின்றிருந்தது. உள்ளே இருவர் அமர்ந்திருந்தனர். காரின் கண்ணாடிகள் அனைத்தும் கறுப்பு நிறமாக இருந்ததால் உள்ளே வெளிச்சம் மந்தப்பட்டிருந்தது. இருந்தாலும் அவர்கள் இருவரும் கண்ணைக் குளிர்விக்கும் கண்ணாடி அணிந்திருந்தனர். ஸ்டைல் அவர்களுக்கு முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும். அல்லது, தாங்கள் செய்யப் போகும் கொலைக் காரியத்திற்கு அந்த முகத் தோற்றம் சரியானதாக இருக்கும் என்றும் அவர்கள் நினைத்திருக்கலாம்.
“ஸைலென்ஸர் மாட்டிட்டியா?” என்று கேட்டான் ஒருவன்.
பதில் பேசாமல் தனது பிஸ்டலைக் காட்டினான் இரண்டாமவன். நீளமான மூக்குடன் பளபளத்தது பிஸ்டல்.
“ஒரே ஷாட்தான் உனக்கு அனுமதி. என்ன ஆச்சுன்னு மக்கள் சுதாரிப்பதற்குள் நம்ம கார் போயிடனும். பார்ட்டியும் காலியாயிடனும்.”
“குறி தப்பாது. ஷாட்டும் ஒன்றுதான். இதோபார்” என்று காட்டினான். பிஸ்டலில் ஒரே ஒரு தோட்டா மட்டும் இருந்தது.
கல்லூரி அறையில், “ஸார், சாத்தியப்படாத பரிணாமக் கோட்பாட்டிற்காக ப்ராபப்லிட்டி தியரியைக் காற்றில் பறக்க விடுகிறீர்கள்” என்று வாதித்துக் கொண்டிருந்தான் ஆஷ்.
“இருபது ஆண்டுகள் ஆஷ். என் பெற்றோர் இருபது ஆண்டுகள் வேண்டினர். ஒரே ஒரு வரம் தானே? அதை நிறைவேற்ற உன் கடவுளுக்கு ஏன் அவ்வளவு காலம் தேவைப்படுகிறது? உருவாகாமல் கிடந்த நான் உருவான அந்த நொடியும் தற்செயல் மட்டுமே.”
“இல்லை ஸார். ஒவ்வொரு நிகழ்வும் அது நிகழக்கூடிய ஒவ்வொரு நொடியும் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டவை. ப்ரீ டிஸைண்ட்.”
எரிச்சலை அடிக்கியபடி, “நீயும் காட்டப் போவதில்லை. அந்தக் கடவுளைக் காணும்வரை நானும் நம்பப் போவதில்லை” என்றார் டார்வின்.
“கண்டாலும் அவரை அண்டம் கடத்தி விடுவீர்கள்” என்ற ஆஷின் பதிலில் அவனது முயற்சியை மீறி நையாண்டி எட்டிப் பார்த்துவிட்டது.
“எதை வைத்துச் சொல்கிறாய்?”
“உயிரினங்களின் மரபணுக்களை வரிசைப்படுத்தி, ஒப்பிட்டு இன்னதிலிருந்து இன்னது பரிணாம வளர்ச்சி அடைந்தது என்கிறீர்கள். இல்லையா?”
“ஆமாம். அதுதான் உண்மை. அதற்கென்ன?”
“அக்டோபஸின் மரபணுக்கள் முற்றும் தனித்துவம் வாய்ந்தவை, அவை நகலெடுக்க முடியாத ஒரிஜினல் என்றதும் அதை வேற்று கிரகவாசி என்கிறீர்களே புரொஃபஸர்?”
“ஆஷ். நீ பரிமாணக் கோட்பாட்டை நுனிப்புல் மட்டும் மேய்கிறாய்.”
“நீங்கள் அந்தளவிற்குக்கூட ஏக சக்தியை உணர மறுக்கிறீர்களே” என்றான் ஆஷ். அவனை வெற்றுப் பார்வை பார்த்தார் புரொஃபஸர் டார்வின்.
காருக்கு வெளியே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் டிரைவர் ஸீட்டில் அமர்ந்திருந்தவன். “இன்னும் கொஞ்சம் நேரம்தான். பார்ட்டி வந்துவிடும்” என்றான்.
பிஸ்டலை வருடிக்கொண்டே “உம்” என்றான் இரண்டாமவன்.
எத்தனையோ அட்டூழியங்களைச் சகாய விலைக்குச் செய்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த டீலிங் அவர்களுக்குப் பெரிய அதிர்ஷ்டம். அவர்கள் கனவில்கூட நினைக்காத தொகை. நேற்று அவர்களை டாக்டர் ராம்பால் அழைத்திருந்தார். நகரின் கில்லாடி டாக்டர்களின் பட்டியலில் முதல் இடம் அவருக்கு. ஏகப்பட்ட சொத்து கொட்டிக் கிடந்த பணக்காரர். புறநகரில் அமைந்திருந்த அவரது பங்களாவில் இவர்களை வரவழைத்துச் சந்தித்தார்.
ஒரு ஃபோட்டோவையும் பெட்டி நிறையப் பணத்தையும் கொடுத்து, “இது பாதித் தொகை. வேலை முடிஞ்சதும் மறுபாதி.”
இரண்டாமவன் ஃபோட்டோவையே உற்றுப் பார்த்திருக்க, “சொல்லுங்க டாக்டர். என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் முதலாமவன்.
“முடிச்சிடனும். என் பெயர் எக் காரணம் கொண்டும் வரக்கூடாது. நான் பேஷண்டுக்குச் செய்யும் ஆப்பரேஷன் போல் உங்களது காரியம் தொழிற் சுத்தமாக இருக்க வேண்டும்.”
“கவலைய விடுங்க டாக்டர். கரெக்டா நடந்துடும். இதோ இவன் அசகாய ஸ்நைப்பர்.”
கிளம்பி வரும்போது காரில் பணத்தை முகர்ந்த இரண்டாமவன், “மணக்குது” என்றான்.
“நோயாளிங்க கொடுத்த காசு. டெட்டால் நாற்றமாக இருந்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை” என்றான் முதலாமவன். இருவருக்கும் சிரிப்புப் பொங்கியது.
சிரித்துக் கொண்டே, “நமது டிஸ்கஷனை இன்னொரு நாள் வைத்துக் கொள்வோம். நான் வீட்டிற்குக் கிளம்பிகிறேன்” என்று அன்றைய வகுப்பை முடித்தார் டார்வின்.
“உங்களுக்குச் சிரிப்பாக இருக்கலாம் ஸார். ஆனாலும் சொல்கிறேன். பிறப்பு, இறப்பு, அவ்வளவு ஏன், ஓர் இலை உதிர்ந்து விழுவதுகூடத் தற்செயல் இல்லை. குறிக்கப்பட்டிருக்கு.”
“எங்கே ஆஷ்? எந்த செர்வரில்? எந்த டேட்டாபேஸில்?” என்று எரிச்சலை அடக்கிக்கொண்டு கேட்டார் டார்வின்.
“பாதுகாக்கப்பட்ட ஏட்டில்” என்று மேலே கையைக் காட்டினான்.
“இதற்குமேல் உன்னோடு முடியாது. ஐ அம் டன் ஃபார் தி டே” என்று கிளம்பினார் புரொஃபஸர்.
“பார்ட்டி வருகிறது பார்” என்றான் முதலாமவன்.
வெளியே வெறித்துப் பார்த்த இரண்டாமவன், “ச்சே பார்ட்டின்னு சொல்லாதே. ஒரு மரியாதை இருக்கனும்” என்று தடுத்தான்.
“தொழிலைக் கவனி. எமோஷனல் ஆகாதே. நேற்று நீ ஃபோட்டோவைப் பார்க்கும்போதே உன் பார்வையைக் கவனித்துவிட்டேன்” என்றவன் பதட்டமானான். “வர்றா பாரு.”
ஒப்பனை நிலையத்தின் கதவைத் திறந்துகொண்டு ராம்பாலின் மனைவி வெளியே வந்தாள். அவளது கிறங்கடிக்கும் அழகைப் பார்த்த இரண்டாமவன், “இவ்ளோ பணமும் கொடுத்து இந்த அழகை விலைக்கு வாங்கலாம். கொல்லச் சொல்றானே பாவி.”
“அது நமக்குத் தேவையில்லாதது. சுடுடா” என்று காரை ஸ்டார்ட் செய்தான் முதலாமவன்.
இரண்டாமவன் சுட்டான்.
அந்த நொடியின் மைக்ரோ செகண்டில் அந்த காரைக் கடக்க நேர்ந்த புரொஃபஸர் டார்வினின் மார்பில் புல்லட் பாய்ந்தது. பொத்தென்று பைக்குடன் விழுந்தார். சாலையில் பரவிய குருதியில் இலையொன்று பறந்து வந்து விழுந்தது.
-நூருத்தீன்