கி.பி. 2096. நேரம் மாலை 7:00.

டாக்டர் ஏ.ஜே. தொடு திரையில் பட்டனைத் தட்டியதும் மேடையின் நடுவே அந்தரத்தில் பல்கலைக்கழகத்தின் மினியேச்சர் மாடல் ஒன்று நீல ஒளியில் தோன்றியது. அடுத்த முப்பது நொடிகளில் அது மறைந்து, மெல்லிய இருள்

படிந்திருந்த அரங்கின் உள் சுற்றுச் சுவர் முழுவதும் திரையாக மாறி, பிக்ஸல் குறையற்ற துல்லியத்தில் மெய்க் காட்சியாகப் பல்கழைக்கழகம் பளீரென்று படமாக விரிய, கூட்டத்தினர் அனைவரும் அதன் வளாகத்தின் நடுவிலேயே நிற்பது போலிருந்தது. அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கானவர்களும் எழுந்து நின்று ஒன்றிணைந்த லயத்தில் கைதட்ட அரங்கத்தில் மகிழ்ச்சி அலை.

‘சென்னை பல்கலைக்கழகத் திறப்பு விழா’ டிஜிட்டல் பதாகைகள் காமராஜர் சாலை நெடுகவும் அலங்கரித்தன. வானத்தில் வண்ண லேசர் ஒளி நடனமாடியது. பளபளவென்று மிளிர்ந்த துல்லிய ஆறுபாதைச் சாலையில் வாகனங்கள் வழுக்கிக்கொண்டு விரைய, அரங்கினுள் இடம் கிடைக்காத மிச்ச ஜனத்திரள் போக்குவரத்திற்கு இடையூறின்றி மெரீனா கடற்கரையில் திருவிழாபோல் குழுமியிருந்தது. அங்கு நடப்பட்டிருந்த மாபெரும் ஒளித் திரைகளில் நிகழ்ச்சியின் நேரலை. அங்கும் கரை புரண்டது உற்சாகக் கைத்தட்டல்.

டாக்டர் ஏ. ஜே. உரையாற்ற ஆரம்பித்தார். “இது இந்திய வரலாற்றின் பொன்னெழுத்துத் தருணம். கல்வியின் கலங்கரை விளக்கம் இன்று சென்னையில் தொடங்கப்பட்டிருக்கிறது. ஒருகாலத்தில் கல்வியில் மிகப் பின்தங்கியிருந்த இந்தியாவின் இன்றைய கல்வியறிவு நூறு சதவிகிதம். கல்லாதார் ஒருவரும் இல்லை என்ற நிலையை எட்டிச் சாதனை புரிந்திருக்கிறோம். அதை ஒவ்வொரு குடிமகனுக்கும் சாத்தியமாக்கி இருக்கிறோம்.”

கடற்கரையில் இருந்த கூட்டம் கவனமாக அதைக் கேட்டுக்கொண்டிருந்தது. மணலில் அமர்ந்தபடி, படுத்தபடி, பரவலாக இருந்த கடைகளின் சேர்களில் என்று எக்கச்சக்க மக்கள். நாகேந்திரன் கரும்பு ஜூஸ் கடையில் ஜூஸ் பருகியபடி நின்றிருந்தார். கடை போர்டில் ‘உரிமையாளர்: நாகேந்திரன் M.Phil.’

“இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த கல்வி அவலம் முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது. ஏற்றத்தாழ்வின்றி எவருக்கும் எந்தப் படிப்பும் எந்தத் துறையும் சாத்தியம் என்று சாதித்திருக்கிறோம். இதோ இன்று இங்கு உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகம். 239 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் இன்று முற்றிலும் புதுப்பொலிவுடன் மீண்டும் பிறந்திருக்கிறது. பட்ட மேற்படிப்பிற்காகக் கடல் கடந்து அந்நிய நாடுகளுக்கும் அங்குள்ள பல்கலைக்கழகத்திற்கும் நாம் சென்ற காலம்மாறி இதோ இன்று அவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காதா என்று ஏங்கி நிற்பதைக் கல்விப் புரட்சி என்று மட்டும் நாம் சுருக்கிவிட முடியாது.”

அரங்கின் முன் வரிசையில் அமர்ந்திருந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள் காதுகளில் மாட்டியிருந்த மொழிபெயர்ப்பான் கருவியில் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

“முண்டாசுக் கவிஞன் இன்று இருந்திருந்தால், வந்திடுவீர் எட்டுத் திக்கிலிருந்தும், கலைச் செல்வம் யாவும் பருகிச் செல்வீர் என்று பாடியிருப்பான்.” குறிப்பாய் அங்கு அவர் சிறிது நிறுத்தி இடைவெளிவிட மீண்டும் உரத்துக் கைதட்டியது கூட்டம்.

வடக்கே சேப்பாக்கம் நாவலர் நகரிலிருந்து தெற்கே விவேகானந்தர் இல்லம் வரை ஒரே வளாகமாக அகன்றிருந்தது சென்னை பல்கலைக்கழகம். கிழக்கே கடற்கரைச் சாலையிலிருந்து மேற்கே இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டு, சென்னை நகருக்குள் சிறு நகர். பைகிராப்ட்ஸ் சாலை, ஜாம்பஜார் அனைத்தையும் மினியேச்சர் மாடல்களாக்கி அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவிட்டு, தேவையான நிலத்தை அரசு கபளீகரம் செய்திருந்தது.

வளாகத்தினுள் துறை வாரியாகத் தனித் தொகுதிகள், ஒவ்வொன்றிற்கும் பல அடுக்கு நவீனக் கட்டடங்கள். கோடு வரைந்தாற் போல் சாலைகள், வானத்தை மறைக்கும் மரங்கள், நடை பாதைகளில் புல்வெளிகள் என்று நிறையப் பச்சை. ஒவ்வொரு மூலைக்கும் பயணிக்க, புகை கக்காத, இரைச்சலற்ற மின் ஊர்திகள்.

நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் நிலவிய களேபரங்களைப் பழங்கதையாக்கி பெரும் சாதனை படைத்திருந்தது புது அரசு. இரண்டாயிரத்து முப்பதாம் ஆண்டுகளில் ஏற்பட்ட புரட்சி, நாட்டையே புரட்டிப் போட்டிருந்தது. அழுக்கு அரசியல்வாதிகள் துடைத்து எறியப்பட்டு, புது இந்தியா! முணுமுணுப்பும் குறைகளும் இல்லாமலில்லை. அமுங்கியிருந்தது. இது கார்ப்பரேட் இந்தியா என்றது ஒரு தரப்பு. ரஷ்யா போல் நாட்டை நாத்திகமாக்கிவிட்டார்கள் என்றது ஒரு பிரிவு. எல்லாம் காதில் கிசுகிசுத்துக்கொண்டார்கள். புழலிலும் திஹாரிலும் நவீன வசதிகள் நிறைந்திருந்தாலும் அரச உபசரிப்பு வசதியாக இருக்காது என்ற அச்சம்.

மணி 9:00ஐ தொட்டதும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதுபோல் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. டாக்டர் ஏ.ஜே. முகத்தில் அப்பட்ட மகிழ்ச்சி. சாந்த முகத்தையும் மீறி அது பிரதிபலித்தது. ஐம்பது வயது என்று மதிப்பிடுவது கஷ்டம். முப்பத்தைந்து என்றால் எளிதில் நம்பிவிடுவார்கள். நாட்டையும் நிர்வாகத்தையும் பெரும் குழு ஒன்று ஆண்டு, நிர்வகித்து வந்தாலும் அரசாங்கத்தின் மூளை அவர்தான் என்ற பேச்சு இருந்தது. அரசின் முக்கிய முடிவுகள் எதுவொன்றும் அவரது பார்வையில் படாமல் வெளிவருவதில்லை என்றன ஊடகங்கள். கல்வி இலாகா முழுவதும் அவரது கட்டுப்பாட்டில் இருந்ததால், பாலகர் வகுப்பிலிருந்து உச்சபட்ச மேற்படிப்பு வரையிலான பாடத்திட்டங்கள் அவரது மேற்பார்வையில் வடிவமைக்கப்பட்டன.

வெளிநாட்டிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகளுக்கும் கல்வித் துறை சார்ந்தவர்களுக்கும் பிரத்யேக விருந்து ஏற்பாடாகியிருந்தது. விசாலமான பெரிய ஹாலில் பஃபே. நட்சத்திர ஹோட்டல் போல் நவீனமாயிருந்த ஹாலின் கார்ப்பெட்டுகள் காலடி சப்தங்களை உள்வாங்கிவிட, மெல்லிய பின்னணி இசையுடன் பேச்சும் சிரிப்பும் மட்டும் கலந்திருந்தன. அனைவரிடமும் கைகுலுக்கி வலம் வந்துகொண்டிருந்தார் ஏ.ஜே. கூடவே அவருடைய பால்ய நண்பனும் சென்னை பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரிவின் தலைமை அதிகாரியுமான ஷா.

தன்னுடன் கையை மட்டும் குலுக்கிவிட்டு, ‘இட் ஈஸ் மார்வெலஸ்’ என்று ஏ.ஜே.வை ஆரத்தழுவிய வெளிநாட்டு அம்மணிகளால் ஷாவுக்குப் புரையேறியது. அவரிடம் காதில், “உன் பின் முதுகில் இடுப்புக்கு மேலேயிருக்கும் மச்சத்தை லேசர் வெச்சுத் தீய்க்கிறேன் பார்” என்றார். “புகையாதே” என்று சிரித்துக்கொண்டே “ஹலோ மினோவ்” என்று நகர்ந்தார்.

“மீட் புரொஃபஸர் மினோவ். ஹார்வர்டிலிருந்து வருகை புரிந்திருக்கிறார்கள்” கையில் உணவுத் தட்டும் மறுகையில் பானமும் ஏந்தியபடி அகல கைவிரித்து வாய் திறந்த சிரிப்புடன் ஷாவை நெருங்கிய மினோவுக்கு எழுபது வயதிருக்கும். அவசரமாக இரண்டு அடி பின்வாங்கி முதுகை மட்டும் வளைத்து குனிந்து, “வணக்கம். தங்களது வருகை எங்களைப் பெருமைப்படுத்தியுள்ளது” என்றார் ஷா.

பலர் நின்றபடி, பேசிக்கொண்டே உணவருந்த சிலர் சிறு குழுவாக மேசைகளில் அமர்ந்து ஆகாரத்தில் கவனமாக இருந்தார்கள். “ஸ்டூடண்ட்ஸ் விஸா கெடுபிடிகளை இந்திய அரசு தளர்த்துமா’ என்று இடையிடையே அவர்களிடம் கவலை வெளிப்பட்டது. அவர்களை நோக்கி நகர்ந்த ஆர். ஜேவை சன்னலோரம் இருந்த மேசையில் தூரத்து விளக்கொளியில் தெரியும் மெரீனாவைப் பார்த்தபடி தனியாக அமர்திருந்த வெள்ளையுடை மனிதர் ஈர்த்தார். அருகே நெருங்கி, “ஹலோ” என்று கை நீட்டினார் ஆர். ஜே.

திரும்பி, புன்னகையுடன் பதில் “ஹலோ” சொன்ன அவருக்கு அறுபது வயதிருக்கும். கோதுமை நிறம். திடகாத்திரமான உடல். ஓரங்களில் கருப்பு மிச்சமிருக்கும் நீண்ட வெள்ளை தாடி. சில்வர் உபகரணங்களை ஓரத்தில் வைத்துவிட்டு வலது கையால் உணவருந்திக்கொண்டிருந்தவர் பதிலுக்குக் கை குலுக்க முடியாமல், “ஐ அம் ஸாரி” என்றார். ஆச்சரியத்துடன், “இட் இஸ் ஆல்ரைட்” என்ற ஆர். ஜே. யை அமருங்கள் என்று அருகிலிருந்த இருக்கையைக் காட்டினார்.

“உங்களது சாதனை பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துகள்” என்றார் அவர்.

“மிக்க நன்றி. வளாக டூர் இன்று பகலில் நடைபெற்றதே, கலந்துகொண்டீர்களா?”

“ஆம். பிரமாதம். அனைத்தும் பிரமாதம். இனி நீங்கள் அனைவரும் கற்க ஆரம்பிக்க வேண்டியதே பாக்கி.”

“என்ன?” என்றார் ஆர். ஜே. அதற்குள், அங்கு வந்த ஷா “ஹலோ” என்று சிரிக்க, “ஹலோ” என்று பதிலுக்குச் சிரித்துவிட்டு, ஆர். ஜே. விடம் திரும்பி, “யெஸ். யூ ஆல் மஸ்ட் ரீட்” என்றார்.

ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் மாஸ்டர்ஸும் சில துறைகளில் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்று பெயருக்குப் பின்னால் நீண்ட வால் இணைத்திருந்த டாக்டர் ஆர். ஜே. “எக்ஸ்க்யூஸ் மீ. கம் அகெய்ன்” என்றார்.

“எக்ஸ்க்யூஸ் மீ. ஒரே நிமிடம். தங்களுக்கு அவகாசம் இருக்கிறதா? கையைக் கழுவிவிட்டு வந்துவிடுகிறேன்.” அருகிலிருந்த பாத்ரூமிற்குள் நுழைந்தார்.

“யார் இவர்?” என்றார் ஷா.

“க்விக் செக். யார் இவர்?” என்றார் ஆர். ஜே. மேசையின் ஓரத்தில் பதிந்திருந்த தொடுதிரையைத் தட்டி எழுப்பி, விரல் ரேகை அடையாளத்தைப் பதிந்து நுழைந்து, நாற்காலியின் முதுகில் மாட்டியிருந்த விருந்தினர் அடையாள அட்டையை அதன் எதிரே ஆட்டியதும், “மொராக்கோவின் தெற்குக் கோடியில் உள்ள அஸ்ஸாவிலிருந்து வந்திருக்கிறார். அங்குள்ள கல்லூரியின் முதல்வர். அறுநூறு மாணவர்கள். இவர் பெயர் முஹம்மட் பின் இஸ்மாயீல்”.

“வட ஆப்பிரிக்கா? அஸ்ஸா? ரியல்லி? இவர் எப்படி இங்கே? யார் அழைத்தது?”

“எமராட் ஷேக்கின் பரிந்துரை. நமது பல்கலையின் இசைத்துறை ஆராய்ச்சி வளாகத்திற்கு ஐந்நூறு மில்லியன் நன்கொடை அளித்த பரோபகாரி. அதோ” என்று ஷா கைகாட்டிய திசையில், “ஹாய்” என்று தன் கையிலிருந்த கோப்பையை உயர்த்தித் தொலைவிலிருந்தே கையாட்டினார் ஷேக். அவர் அருகில் அமர்ந்திருந்த அம்மணியின் முதுகுப் பிரதேசம் ஆடைத் தட்டுப்பாட்டில் இருப்பது தெரிந்தது.

விரிந்த கண்களுடன், “நான் அவரிடம் விசாரித்துவிட்டு வரவா?” என்று அவசரமாக எழுந்த ஷாவை, “அமர். செக்யூரிட்டி க்ளியர் ஆகியிருக்கிறதா பார். வளாகத்திற்கு ஏதும் அலர்ட் வந்திருக்கிறதா?”

திரையில் மேலும் சில விவரங்களை அலசிவிட்டு, “பாதுகாப்புத் துறை அனைவரின் பின்னணியையும் சரிபார்த்துவிட்டது. பிறகே விஸா வழங்கியிருக்கிறார்கள். ஆல் க்ளீன்.”

“லுக். அவர் வருகிறார்.”

“பல பரபரப்பிற்கு இடையில் இருக்கும் தாங்கள் எனக்காகக் காத்திருப்பது மகிழ்ச்சி. காக்க வைத்ததற்கு மன்னிக்கவும்.” புன்னகையுடன் இருவரிடமும் கைகுலுக்கினார். இலக்கணச் சுத்தமாய், உச்சரிப்புப் பிழையின்றி இருந்தது அவரது ஆங்கிலம்.

“விருந்தினர் ஓம்பல் எங்கள் பாக்கியம் மிஸ்டர் முகம்மட்” என்றார் ஷா. தம் விருந்தினர் அட்டை நாற்காலியின் மறு முனையில் தொங்கியதைக் கவனித்துவிட்டு, மாறாத புன்னகையுடன் அமர்ந்தார் முஹம்மத்.

“தாங்கள் எங்களது திட்டத்தையும் கல்வியையும் பகடி செய்வதுபோல் உணர்கிறேன்.” நேரடியாக விஷயத்திற்கு வந்தார் டாக்டர் ஏ. ஜே.

தண்ணீர் க்ளாஸை மேசையின்மேல் வைத்துவிட்டு, நிதானமாகப் பேசினார் முஹம்மத். “உங்கள் நாட்டின் பிரமாதமான வளர்ச்சியை நான் பல ஆண்டுகளாகக் கவனித்து வருகிறேன். இந் நூற்றாண்டின் தொடக்கத்தில் வல்லரசாகத் திகழ்ந்த நாட்டின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, அதையே அடிப்படையாக ஆக்கிக்கொண்டு உங்களது புதுமைகளைப் புகுத்தியிருக்கிறீர்கள். உங்களது அரசியல் புரட்சிக்கு மக்கள் ஒத்துழைத்ததால் வெற்றியை எட்டி பெரும் உயரத்தைத் தொட்டிருக்கிறீர்கள். ஆனால் அவை அனைத்தும் புதை மணலில் கட்டி எழுப்பப்பட்ட கனாக் கோட்டை.”

“உலக நாகரிகத்தின் உச்சத்தை எட்டி அதன் முன்னோடியாகவும் மாறிக்கொண்டிருக்கும் எங்களைப் பற்றிய தங்களது கருத்து வினோதம்,” என்றார் ஆர். ஜே.

“தாங்கள் நாகரிகத்தில் முன்னோக்கிச் செல்லவில்லை. வேகத் தடையின்றிக் கற்காலத்திற்குத் திரும்பிக்கொண்டிருக்கிறீர்கள் என்கிறேன்.”

தன் காதோரம் சூடாவதை உணர்ந்தார் டாக்டர். கட்டுப்படுத்திக்கொண்டு, “கல்வி கற்காதவன் இன்று ஒரே ஒருவன்கூட இந்தியாவில் இல்லை. அனைவருக்கும் கல்வியைச் சாத்தியப்படுத்தியது கற்காலமா?”

“அதைத்தான் நான் பாராட்டிவிட்டேனே. அனைவருக்கும் அனைத்தையும் சாத்தியப்படுத்திவிட்டீர்கள். அதில் தொடங்குகிறது அடிப்படைப் பிழை.”

“புரியவில்லை.”

“நன்மை-தீமை, ஒழுக்கம்-கேவலம், பாவம்-புன்னியம், என்றெல்லாம் இனம் கண்டறிந்து, வளர்ச்சி கண்டது மனித சமூகம். பிறழ்வுற்ற மக்களுக்கும் இனத்திற்கும் நேர்வழி காட்டப்பட்டது.”

“நீங்கள் எங்கு வருகிறீர்கள் என்பது புரிகிறது மிஸ்டர் முஹம்மட். எங்கள் நாட்டைக் குட்டிச் சுவராக்கிய மதத்தை நாங்கள் முற்றிலும் நீக்கிவிட்டோம். மக்கள் அதைத் தனிப்பட்ட முறையில் பின்பற்றலாம். தடையில்லை. உரிமை அளித்திருக்கிறோம்.”

“நான் மத அரசியலுக்குள் வரவில்லை. அதை அவர்கள் பின்பற்ற அளித்த அனுமதியை எவ்விதம் ஒரு சாதனையாகப் பேசுகிறீர்களோ அதைப் போல் மனித சமூகம் காலா காலமாய் வெட்கித் தலைகுனிந்த பாவங்களை, இயல்பாக்கி சாதனை புரிந்துள்ளீர்கள். மிருகங்களே வெட்கப்படும் ஆபாசம் உங்கள் வாழ்க்கைமுறையாகி விட்டது. இதுதான் உங்கள் கல்விமுறை உங்களுக்குள் உற்பத்தி செய்திருக்கும் அறிவு. அதனால்தான் உங்கள் கல்வியின் அடிப்படையே தவறு என்கிறேன்.”

“வாழ்க்கை இணையாகத் தன் பாலினரையோ எதிர்பாலையோ தேர்ந்தெடுப்பது அவரவர் உரிமை. பசிக்கு ஏற்ப விரும்பிய உணவகத்தை நாடுவதைப்போல் உடல் பசிக்கு ஏற்ப விரும்பியவர்களுடன் கூடிக் கலைவதை சட்டமாக்கியது இந் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்திலேயே நாங்கள் அறிமுகப்படுத்திய புரட்சி. திருமண ஒப்பந்தம் அதற்கு ஒரு தடையாக இருப்பது மூடத்தனமில்லையா?”

“ஆணுரிமை, பெண்ணுரிமை, அவரவர் உரிமை என்று நீங்கள் அறிமுகப்படுத்தியவை எல்லாம் உரிமைகளே அல்ல. உங்கள் கையாலாகாத்தனம். கண்டித்துத் திருத்த முடியாததை, சட்டமியற்றி அடக்க முடியாததை உரிமை என்ற பெயரில் அங்கீகரித்துவிட்டு, சாதனை என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொண்டிருக்கிறீர்கள். சமூகத்திற்கு அடிப்படையான குடும்ப முறையைச் சிதைத்துவிட்டீர்கள்.”

“தவறு. புரட்சி ஏற்படுத்தியிருக்கிறோம். இன விருத்திக்கானத் திருமணச் சடங்கு என்ற உங்கள் ஆதிகாலமுறை அபத்தம். அதனால்தான் கலவிச் சுதந்திரம் அளிக்கப்பட்டவுடன் விந்தணு வங்கியும் கர்ப்பத் தாய் வேலை வாய்ப்பையும் அரசு நிர்வாகத்தில் கொண்டுவந்து செம்மைப்படுத்தி அது இன்று பெரும் ஸக்ஸஸ்.”

“நானும் மாதம் ஒருமுறை விந்து கொடை தவறாமல் அளித்துவிடுகிறேன்” என்றார் ஷா.

“இவனுக்கும் இவன் கணவனுக்கும் என்ன குறை. தாங்கள் விரும்பிய வகையில் நிறத்தில் குழந்தைகள் வேண்டும் என்று அரசாங்கத்திடம் விண்ணப்பித்து ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று வாடகைத்தாய் மூலம் பெற்று வைத்திருக்கிறார்கள். ஷேமமாய் வளர்கின்றன” என்றார் ஆர்.ஜே.

அமைதியாக, அவர்களைப் பரிதாபமாகப் பார்த்தார் முஹம்மது. “நீங்கள் பின்பற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட நாடுகளேகூட எங்கள் கல்வி முறையை மெச்சி அதைத்தானே பின்பற்றுகிறார்கள்” என்றார் ஷா.

“தெரியும். மறுக்கவில்லை. காரணம் அவர்கள் கைவசம் உள்ள ஞானம் வாய் ஓசையுடன், உச்சரிப்புடன் நின்றுவிடுகிறது. தொண்டைக் குழியைத் தாண்டிச் செல்லவில்லை.”

“யார், உங்கள் இறைவன் சொன்னாரா?”

“இல்லை, அவனின் தூதர்.”

“உங்கள் பாலை மண்ணில் உங்களுக்குச் சாத்தியமாகாததை இங்குப் பார்த்து அதனால் உங்களுக்குச் சற்றுப் பொறாமை எனில் அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” எனச் சீண்டினார் ஆர்.ஜே.

வாய்விட்டுச் சிரித்தார் முஹம்மத். ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குமுன் பாலைவெளியில் பாடம் நடத்தி மாக்களை மக்கள் ஆக்கினார் ஒருவர். இருபத்து மூன்றே ஆண்டுகள். வானுயர்ந்த கட்டடங்கள் இல்லை. பிரமிக்க வைக்கும் கல்வி வளாகங்கள் இல்லை. வெற்று மணலில் பாடம் பயின்ற அவர்கள் நாகரிகத்திலும் வலிமையிலும் உச்சபட்ச உயர்வை எட்டியது வரலாறு.”

“என்ன மந்திரக்கோல் வைத்திருந்தாரா?”

“சொன்னேனே. ரீட். அதுதான் அவர்களது அடிப்படை.”

மீண்டும் முதலில் இருந்தா.ஆயாசமாக, “யார் அந்தத் தூதர் சொன்னதா?”

“இல்லை. இறைவன்.”

“ரீட்? ஓக்கே! ஓக்கே! அதற்குத்தானே கல்வி. அதற்குத்தானே இந்தப் பணி. இந்தப் பல்கலைக்கழகம்.”

“அகெய்ன், பாராட்டுகிறேன். ஆனால் இந்தச் சீட்டுக்கட்டுக் கோட்டை கலைந்து உதிரும்முன் அடித்தளத்தைப் பலப்படுத்துங்கள். ரீட்.”

எரிச்சலை மறைத்துக்கொண்டு கவலையுடன் பார்த்த டாக்டரிடம், “என் எளிய அன்பளிப்பு” என்று சிறு நூலைத் தந்து, விரலை மேலே சுட்டினார். “அங்கிருந்து வந்தது. அதன் முதல் கட்டளை ரீட்” என்றார்.

“இதில் இருக்கிறதா?”

“ஆம். அத்தியாம் 96.”

-நூருத்தீன்

சமரசம் நவம்பர் 16-30 இதழில் (சிறு திருத்தங்களுடன்) வெளியான சிறுகதை

அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment