ருட்டுச் சாலையில் வேகமாக வந்த கார் தனியே சென்று கொண்டிருந்த அவளருகில் தாமதித்தது. கதவு திறந்தது.சட்டென்று ஒருவன் இறங்கி அவளை அப்படியே தூக்கி காரினுள் திணித்து, ஏறி கதவை மூடிக்கொள்ள மீண்டும் வேகமெடுத்த கார் இருட்டில் மறைந்தது. அனைத்தும் இருபது நொடிகளில் முடிந்துவிட்டன. அரவமின்றி, சாட்சியின்றி அச்சாலை உறங்கிக்கொண்டிருந்தது.

பின் சீட்டில் இருவர், அவர்களுக்கு நடுவே அவள். டிரைவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் திரும்பிப் பார்த்து, “யப்பா… என்னா அழகு?” என்றான்.

“அழகு ஆபத்துடா” என்றாள் அவள். வாய் குழறி, சன்னமாக ஒலித்தது.

“ஹஸ்கி வாய்ஸ். கிறங்கடிக்கிறா” என்றான் பின்னால் இருந்த ஒருவன்.

“பார்ட்டி செம போதை! கண்ணைப் பார் செருகுது” என்றான் அடுத்தவன்.

“எங்கேடா தூக்கிட்டுப் போறீங்க?” என்றாள். துப்பட்டா கலைந்திருந்தது. ஆனாலும் கேசம் படியவாரி ஏதோ யூனிஃபார்ம் கலரில் சுத்தமான ஆடை. அவளது கழுத்தில் மூக்கை உரசிய ஒருவன், “வாசனயே வித்தியாசமா இருக்கா” என்றான் கிறக்கத்தடன்.

“எனக்கு டெட்டால் ஞாபகத்துக்கு வருது” என்றான் அவன் சகா.

“உன் அப்பா ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து பார்த்து உன் மூக்கிற்கு செண்ட்டு வாசனையே தெரியாமப் போச்சுடா பரதேசி”

“இந்தா பார்! மூடுல இருக்கும்போது அப்பாவை இழுத்தே …” என்று கோபப்பட்டான்.

“வேணாண்டா! என்னை விட்டுடுங்க. நான் யாருன்னு தெரிஞ்சா பூராப் பயலும் நாஸ்தியாயிடுவீங்க. அப்படியே ஓடிடுவீங்க”

“அதெல்லாம் பிறகு நீ யாருன்னு தெரிஞ்சுக்கலாம். இப்போதைக்கு நீ அழகி. எங்களுக்குச் சேவகி” சொல்லிவிட்டு கோணல் வாயுடன் சிரித்தான் டிரைவர்.

“முடிச்சிட்டு என்னய கொன்னுடுவீங்களா?” என்று அதே குழறலுடன் கேட்டாள். “போதைல இருந்தாலும் கேள்வி எல்லாம் தெளிவானதா இருக்கு” என்றான் டிரைவர்.

அந்த நான்கு பேரின் முக இலட்சணங்களும் ஆடையும் ஆண்களுக்குத் தேவையற்ற உபரியான கழுத்து ஆபரணங்களும் அவர்கள் நற்தொழில் ஊழியர்களாக இருக்கவே முடியாது என்று சாட்சி கூறின. “தலைவரோட பண்ணைக்கு ஓட்டிட்டுப் போயிடலாமா? அங்கே யாரும் இல்லை. வேலை சுளுவாயிடும்” என்று பக்கத்தில் இருந்தவன் கேட்டதற்கு, “இந்தா வண்டி அங்கேதான் போவுது” என்றான் டிரைவர்.

பின்னால் இருந்த இருவரும் அவளிடம் சில்மிஷத்திற்கு முயல அவள் எதிர்ப்பு எதுவும் இல்லாமல் துவண்டு துவண்டு விழுந்தாள். ஒருவன் அவசரப்பட்ட நேரத்தில் அவனது செல்ஃபோன் ஒலித்தது. “ச்சை!” என்று எரிச்சலுடன் பேண்ட் பேக்கட்டிலிருந்து ஃபோனை எடுத்துவன், “ஐயோ!” என்று அதிர்ந்தான். “யாரு!” என்ற கேள்விக்கு, “தலைவரு” என்று வாயில் விரல் வைத்துக் காட்டியவன், “சொல்லுங்க தலைவரே!” என்றான் ஃபோனில்.

“ஆவுட்டும், ஆவுட்டும்” என்று தலையாட்டியவன், “இதோ வந்துர்றோம் தலைவரே” என்றான்.

“என்னாவாம்?”

“பண்ணை வீட்டுக்கு வரச் சொல்றாரு”

“ஐயோ!” என்றான் டிரைவர்.

“இப்போ என்னா பண்றது?”

“என்னைக் கொன்று பண்ணைத் தோட்டத்துல புதைச்சுடுங்க” என்றாள் அவள்.

“யேய்! கம்முனு கிட” என்று அதட்டினான் டிரைவர்.

“மெர்சல் வேணாம். நீங்கள்ளாம் வண்டியிலே இருங்க! நான் மட்டும் உள்ளே போய் தலைவரு கிட்டே பேசிட்டு வர்றேன். திரும்பிடலாம்” என்றான் ஃபோனில் பேசியவன்.

“ரைட்டு” என்றான் டிரைவர்.

புறநகரில் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தது அந்த பண்ணை பங்களா. மேடை போட்டு ஸ்பீக்கரில் கத்தினாலும் யார் காதிலும் ஒலி படாத தூரத்துத் தனிமை. நிதான வேகத்தில் நுழைந்த கார் பங்களாவின் வாசலை விட்டு சற்று தூரத்தில் நின்றுவிட, அந்த ஒருவன் மட்டும் இறங்கினான்.

“இவ சத்தம் போடாமல் பாத்துக்குங்க” என்றான்.

“உன் தலைவனை வரச்சொல்லு. நான் அவன் கிட்டே ஒரு இரகசியம் சொல்லனும்” என்றாள் அவள்.

“இவ வாயில் ப்ஸாஸ்டர் ஒட்டுங்கடா. சன்னமாப் பேசியே கொல்றா” என்று அவசரமாக உள்ளே சென்றான் அவன்.

சில நிமிடங்கள் கழித்து அவன் தோளில் கைபோட்டபடி போதையில் தள்ளாடியபடி ஏதோ சிரித்துக்கொண்டே தலைவரும் வெளியில் வந்தார். அவன் சங்கடத்துடன் அவரது ஆட்டத்திற்கு ஏற்றபடி பேலன்ஸ் செய்துகொண்டே வர, காரில் இருந்தவர்கள் வியர்த்தார்கள். அவரைப் பார்த்துவிட்டு, “ஹலோ தலைவா!” என்று காரின் உள்ளிருந்து கண்ணாடியில் தட்டினாள் அவள். உள்ளிருந்தவர்கள் அவளது தலையை அமுக்குவதற்குள், “யார்ரா அது காரிலே?” என்று குழறினார்.

‘என்னா போதையா இருந்தாலும் ஃபிகரு மட்டும் இந்த ஆந்தைக்குத் தெரிஞ்சுடுது பார்’ என்று மனத்திற்குள் கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டே, “அது தெரிஞ்ச பொண்ணு தலைவரே” என்றான்.

அவனைத் தள்ளிவிட்டு, காரை நெருங்கி கண்ணாடியை இறக்கச் சொல்லி உள்ளே பார்த்தார். அவருக்குப் புரிந்து விட்டது. “உள்ளே கூட்டியாடா. அவளிடம் பேச்சுவார்த்தை நடத்துறேன்” என்று பங்களாவுக்குள் சென்றார்.

“நாராசம்” என்று தலையின் அடித்துக்கொண்டான் டிரைவரின் சகா. “இந்தா, போ…” என்று அவளை இறக்கிவிட்டான் பின் ஸீட்டில் இருந்தவன்.

அரசியல்வாதியின் பள்ளியறைக்கு உரிய அத்தனை அம்சங்களும் குறைவின்றி அமையப்பெற்றிருந்து அந்த பெட்ரூம். “கம் ஸிட் டவுன்” என்று அவர் மதுக்கோப்பையுடன் திரும்பினால், அவள் கை கால் எக்ஸ் வடிவில் விரித்து மல்லாந்து படுத்திருந்தாள். ஒரு கணம் அதிர்ந்தவர், தொப்பை குலுங்கச் சிரித்தார். மூக்குக் கண்ணாடி மேலும் கீழும் இறங்கி ஆடியது. வழுக்கைத் தலையும் தோற்றமும் அந்தத் தலைவருக்கு சந்தானபாரதி சாயல்.

“உட்காருன்னா படுக்கறே! உன்னயத் தூக்கி கொண்டு வந்திருக்கானுங்கன்னு நெனச்சேன். கேஸா?” என்றார் சிரிப்பு அடங்காமல்.

“நீ என்னய வன்புணரப் போறியா?” என்றாள்.

“என்னயவிட நீ செம போதை போல. என்னா மருந்து அது?”

“தெரியாது. நீ வன்புணரப் போறியா?” என்று மீண்டும் கேட்டாள்.

“நீ இருக்குற தயாருக்கு அதெல்லாம் தேவை இருக்காது போலிருக்கே” என்றார்.

“வேணாம் தலைவரே! நான் சொல்றேன் கேளு. என்னையக் கொன்னு எரிச்சுடு. ஆஸிட் வெச்சிருக்கியா? அதுல முக்கிடு”

மீண்டும் அதிர்ந்து பிறகு சிரிக்க ஆரம்பித்தார். “சத்தியமா நீ புது வெரைட்டி. பொண்ணு, உன் பேரு என்ன?”

“சாம்பிள் நைன்”

“ஐயோ! உன் பேரைக் கேட்டேன். வாட் ஈஸ் யுவர் நேம்?” என்று டீச்சரைப் போல் கேட்டார்.

“அதான் சொன்னேனே. இந்தா பாரு” என்று திரும்பிப் படுத்து பின் கழுத்தைக் காட்டினாள். Sample-9 என்று பச்சைக் குத்தியிருந்தது.

“அட! சாம்பிளை சாம்பிள் பாக்குறது. இதுவும் புதுசாதான் இருக்கு” சில நிமிடங்களில் விளக்கு அணைந்தது.

oOo

தலைநகரிலிருந்து 100 கி.மீ. தொலைவில், இருவழி நெடுஞ்சாலையில் கிளைச் சாலை ஒன்று வளைந்து பிரிந்தது. ஜன சந்தடியற்ற அப்பிரதேசத்தில், ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்த புற்கள், செடி கொடிகளுக்கு இடையே பழங்கால பள்ளிக்கூடக் கட்டடம் பாழடைந்து நின்று கொண்டிருந்தது. ஊர்ந்து வந்து நின்ற காரிலிருந்து தலைவர் இறங்கினார். அந்த நால்வரையும் காரினுள் இருக்கும்படி கூறிவிட்டு, உள்ளே நுழைந்தார். கதவு மூடிக்கொண்டது.

கறுப்பும் வெள்ளையுமாக சதுரங்க அட்டைபோல் இருந்த தரையில் எண்ணி நகர்ந்து ஒரு சதுரத்தைத் தட்ட, அது மேல் எழுந்து கதவுபோல் திறந்தது. உள்ளே படிகள். அதனுள் இறங்கினார். தரை மூடிக்கொண்டது. “வெல்கம் ஸார்” என்று வரவேற்றார் வெள்ளை கோட் அணிந்திருந்த தலைமை விஞ்ஞானி. வெளித்தோற்றத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாமல், ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வருவதைப்போல், பிரம்மாண்டமாய் ஒரு பரிசோதனைக் கூடம். மெல்லிய வெள்ளை ஒளியில் பளிங்குச் சுத்தமாய் இருந்த அக்கூடத்தில் மேலும் மூன்று விஞ்ஞானிகள் நின்றிருந்தனர்.

“மிஸ்டர் ஆத்மராம். உங்கள் தகவல் கிடைத்தது. முழு வெற்றியா?”

“ஆம் ஸார். சிறு பிரச்சினையும் ஒன்று உள்ளது”

“ஸார்! எனக்கு இந்த ப்ராஜெக்ட் பிடிக்கலே. நிறுத்தனும். அழித்துவிட வேண்டும்” என்றார் உதவி விஞ்ஞானிகளில் ஒருவர்.

“இதான் பிரச்சினையா?” என்றார் தலைவர்.

“இல்லை ஸார். இவர் தனி உபாதை. நான் சொன்னது வேற பிரச்சினை” என்றார் ஆத்மராம்.

“முதல்ல வெற்றிக் கதையைச் சொல்லுங்கள். பிரச்சினைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்”

“நாங்கள் திருத்திய எழுதிய RNA மாலிக்யூலுக்கு வைரஸ் கட்டுப்பட்டு விட்டது. இரண்டு நாள்களுக்கு முன் எங்கள் பரிசோதனையில் அதை உறுதிப்படுத்திவிட்டோம். இந்த வைரஸ் வெகு எளிதாகப் பரவிவிடும்”

“பத்து வருஷத்துக்கு முன்னாடி கொரோனா வைரஸ் உலகத்தை ஆட்டுச்சே அப்படியா?” அவசரமாகக் குறுக்கிட்டார்.

“இல்லை ஸார். அதை விட பெரிய தாதா. இது தாக்கப்பட்டவரின் உமிழ்நீர், வியர்வை, இரத்தம், தும்மல், இருமல், இப்படி எதிலிருந்து வேண்டுமானாலும் மற்றவரிடம் பரவும். தொடக்கூட வேண்டாம். மூச்சுக் காற்றே போதும். காட்டுத் தீயைவிட வேகம். தாக்கப்பட்டவரின் நுரையீரலை இரண்டே நாளில் முற்றிலும் செயலிழக்க வைக்கும்.”

“க்ரேட்! வெரி க்ரேட்! அமெரிக்கா, ரஷ்யா, நார்த் கொரியா, எவன் வாலாட்டுறான்னு பார்ப்போம். இனி நாம் வல்லரசு! அசைக்க முடியா வல்லரசு! நிறைவேறியது என் கனா” தரையில் உருளாத குறையாக மகிழ்ச்சியில் குதித்தார். அவரது சிரிப்புக்கு தொப்பையும் ஆடியது.

“எப்படிச் செலுத்துவது?”

“தன்னார்வலர் வேண்டும் ஸார். அவரது உடலுக்குள் செலுத்தி, ஓர் ஊருக்குள் விட்டால் போதும்”

“இதற்கு மருந்து, தடுப்பூசி இப்படி ஏதாவது?”

இறுக்கமான முகத்துடன் தலைவரைப் பார்த்த ஆத்மராம், “இல்லை ஸார்! நாட் அவைலபிள். தடுத்து நிறுத்துவதாக இருந்தால் தாக்கப்பட்டவர் மற்றவரை நெருங்கும்முன் அவரைக் கொன்று பஸ்பமாக்கிவிட வேண்டும். ஓர் ஊரைத் தொற்றினால் அந்த ஊரையே கொளுத்தினால்தான் ஆச்சு!”

“அதனால்தான் சொல்கிறேன். இது உலக அழிவு கிருமி. இந்த ப்ராஜெக்ட்டை இழுத்து மூடிவிட வேண்டும் ஸார்” என்றார் அந்த உதவி விஞ்ஞானி.

“யோவ்! நீ வேற குறுக்கே! ஆத்மராம், இது போதும். என்னால் நோபல் தரமுடியாது. ஆனால் குடியரசு நாளில் உங்களுக்கு இந்நாட்டின் மிக உயரிய விருதை அளிக்க எனது மினிஸ்ட்ரியின் சார்பில் உத்தரவாதம் அளிக்கிறேன். ஏதோ பிரச்சினை என்று ஆரம்பித்தீர்களே?”

“நாங்கள் வெற்றிகரமாகப் பரிசோதித்த ஒன்பதாம் சேம்பிள் இந்த பரிசோதனைக் கூடத்திலிருந்து காணாமல் போய் விட்டது.”

“அதனால் என்ன? மிச்சம் எட்டு சாம்பிள்களில் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்களேன்” என்றார் தலைவர்.

“முடியாது ஸார். தோல்வியடைந்த சாம்பிள்களை ஏற்கெனவே கொன்று விட்டோம்”

“சாம்பிள்களைக் கொன்று…. வெய்ட் எ மினிட். யூ மீன் சாம்பிள்ஸ் மனிதர்களா?” என்று வியப்பும் அதிர்ச்சியும் கலந்து கேட்டார்.

“யெஸ் ஸார். கொன்று மின்சார அடுப்பில் தகனம் செய்து விடுவோம். சாம்பலை மண்ணில் புதைத்துவிடுவோம்” என்று கண்ணாடிச் சுவருக்கு மறுபுறம் இருந்த ஓர் மின் தகன அறையைக் காண்பித்தார். “இந்த ஒன்பதாம் சாம்பிள் கல்லூரி யுவதி. மிக அதிகமான ஸெடேஷனில்தான் பாதுகாத்து வைத்திருந்தோம். எப்படி தப்பித்தாள் என்றால்…”

அவசரமாகக் குறுக்கிட்டார் தலைவர். “பின்னங் கழுத்தில் Sample-9 பெயர் அடையாளமா?”

“ஆமாம் ஸார். உங்களுக்கு அவளை…” என்று உதவி விஞ்ஞானி ஆரம்பித்த கேள்வியை முடிப்பதற்குள், “யோவ்! நேற்று இரவு நான் அவளுடன் படுத்துவிட்டேன். போதையில் இருந்தாள். பாதியிலேயே செத்துவிட்டாள்” என்று கத்தியவரிடம், “அடுத்து அவளை என்ன செய்தீர்கள்?” என்று பதைத்தார் ஆத்மராம்.

“என் பண்ணையில் புதைத்து மேலே மரம் நட்டுவிட்டேன். ஐயோ! அப்போ நான்?” என்று நடுங்கினார்.

“உங்களுக்கு யாரெல்லாம் உதவி செய்தார்கள்?” என்று வியர்த்தார் உதவி விஞ்ஞானி. அனைவரும் தலைவரை விட்டு பல அடி பின் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

”நாலு பேர். வெளியில் நிற்கிறார்கள். என்னைக் காப்பாற்ற மருந்து?” அலறினார் தலைவர்.

“வெரி ஸாரி ஸார்” கோட் பாக்கெட்டிலிருந்து சைலன்ஸர் பொருத்திய துப்பாக்கியை எடுத்து தலைவரின் நெற்றிப் பொட்டில் சுட்டார் ஆத்மராம்.

“வெரி ஸாரி ஸார்” என்று அவசரமாகத் தன் துப்பாக்கியை எடுத்து ஆத்மராமின் தலையில் சுட்டார் உதவி விஞ்ஞானி.

படியேறி வெளியில் ஓடிய மற்றொரு விஞ்ஞானி, “தலைவருக்கு ஆபத்து, உங்க நாலு பேரையும் அவரசமா கூப்பிடுகிறார்” என்று கத்தினார். நால்வரும் உள்ளே ஓடினார்கள்.

-நூருத்தீன்

இந்நேரம்.காம் இணைய இதழில் மார்ச் 26, 2020 வெளியான சிறுகதை


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment