இஷ்டபூர்த்தி

by நூருத்தீன்

“முடிவு உன் இஷ்டம்” என்றாள் பியான்கா. அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தான் விஜய். பின்னே, இரவு உணவுக்குக் கோழி சுடுவதில் முனைப்பாக இருந்தவனை அழைத்து, `என் கணவனைச் சுட்டுக் கொல்வாயா’ என்று கேட்டால்?

`அவள் இதுவரை பேசியது உண்மையா, விளையாட்டா, அல்லது என்னைச் சோதிக்கவா?’

அவளது முகத்தைப் பார்த்தான். எந்த அறிகுறியும் இல்லை. `சூடாக ஒரு கப் காபி’ என்று கேட்ட இயல்பில் இருந்தது.

இரவு உணவுக்கு லேசான காரத்துடன் சுட்ட கோழி, தேனில் வறுத்த கேரட்டுகள், க்ரீமில் மசித்த உருளைக்கிழங்கு, சாலட், சோறு, இத்தாலிய பிரட் என்று தகவல் அனுப்பியதற்கு எசமானி பியான்கா உயர்த்திய கட்டை விரலைப் பதிலாக அனுப்பியிருந்தாள்.

எசமானர்களுக்கு ஆறரை மணிக்கு மேசையில் உணவு இருக்க வேண்டும். எக்காரியமும் நொடி பிசகக் கூடாது. மணியைப் பார்த்தான். இரண்டு மணி நேரம் இருந்தது. இப்பொழுது ஆரம்பித்தால் சரியாக இருக்கும். சமையலறைச் சுவரில் பதித்திருந்த தொலைக்காட்சியை இயக்கிவிட்டு, வேலையில் மூழ்கினான்.

சியாட்டிலில் காற்று வலுவடைந்திருந்தது. அடுத்த இருநாள்களில் சூறைக்காற்றும் மழையுமாக அது மாறப்போவதைப் பரபரப்பாக அறிவித்தபடி இருந்தார் வானிலையாளர். ஆண்டிற்கு 150 நாள் மழை பெய்யும் சியாட்டிலில் வானம் பொத்துக்கொண்டு ஊற்றுவதில்லை. வலுவான தூறலும் அதைவிடச் சற்றுத் தூக்கலும் என்பதே வேக அளவு. கோடைக்காலத்தை ஒட்டிய நான்கு மாதங்களைத் தவிர, மப்பும் ஈரமுமான நகரம். ஏதேனும் ஓர் ஆண்டில் குளிர்காலத்தில் வானிலை தீவிரமடைவது உண்டு.

காற்றின் வேகம் 70 மைல் – 112 கி.மீ – ஆக்ரோஷத்துடன் இருக்கும், மின் தடை ஏற்படும், மரங்கள் வீழும், மலைச்சரிவு ஏற்படும் என்ற அச்சுறுத்தல்களுடன் வண்ணங்களில் மாநில வரைபடத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். தொடர்ந்த காட்சிகளில் பல்பொருள் அங்காடிகளில் உணவுப்பொருள்கள் விற்றுத் தீர்ந்திருந்தன. பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொள்ள வாகனங்களின் நீண்ட வரிசை.

கழுவிக்கொண்டிருந்த காய்களை நீரில் போட்டுவிட்டு குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தான். நிறைந்திருந்தது. `வீ ஆர் குட். இரண்டு வாரங்களுக்குப் பிரச்சினை இல்லை.’

யூடியூபில் தமிழ்ப் பாடல்களுக்கு ரிமோட்டைத் தேய்த்த நேரத்தில்தான் ஹோசெ வந்து, “விஜே, எசமானியம்மா அழைக்கிறார்கள்” என்றான்.

மெக்சிகன் ஹோசெ மட்டுமன்றி அவர்கள் அனைவருக்கும் விஜய்யை ‘விஜே’ என்று அழைப்பது எளிதாக இருந்தது.
தடித்த குளிர் ஆடையைப் போர்த்தியபடி, படுக்கை அறையின் வெளிப்புறம் இருந்த பால்கனியில் அமர்ந்திருந்தாள் பியான்கா. குளிர்காலம் என்பதால் நாலரை மணிக்கே சூரியன் மறைந்து இருள் சூழ ஆரம்பித்திருந்தது. மலைபோல் உயரமான பகுதியில் கட்டப்பட்டிருந்தது அந்த வீடு. வாஸ்தவத்தில் சிறு மாளிகை. கீழே விரிந்திருந்த நகரில் போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்தபடி வாகனங்கள். தூரத்தில் நகர்ப்புறத்தின் உயரமான கட்டடங்களில் விளக்குகளின் மின்மினி.

“உட்கார்” என்றாள்.

எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவன் அணிந்திருந்த மெல்லிய ஜாக்கெட் போதாமல் குளிரெடுத்தது.

“உனது உதவி தேவை” நேராகப் பேச்சைத் தொடங்கினாள். பதிலுக்குக் காத்திராமல், “மத்தாயோவைக் கொல்ல வேண்டும்” என்றாள்.

“மத்தாயோ?”

“ஆம்! என் கணவன் மத்தாயோ. சுட வேண்டும்.”

“மேடம்! தவறான ஆளை அழைத்திருக்கிறீர்கள். நான் சமையலறையில் இறைச்சி சுடுபவன்…” என்றவனை மறித்து, “வீட்டின் இந்த இடத்தில்தான் ஒட்டுக் கேட்கும், கண்காணிக்கும் சாதனங்கள் இல்லை. கணவனும் வீட்டில் இல்லை. நமக்குப் பத்து நிமிடம் அவகாசம். விவரிக்கிறேன். முடிவு உன் இஷ்டம்.”

பதற்றத்தில் குளிர் மறந்து வியர்க்கத் தொடங்கியிருந்தது. திகைப்பு விலகாமல் அமர்ந்திருந்தான். அவளே தொடர்ந்தாள்.

“ஒரு கதை சொல்லட்டுமா விஜே?”

சேஷம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விஜய், சியாட்டில் போதை மாஃபியாவின் சிற்றரசன் மத்தாயோவிடம் சமையல்காரனாகச் சேர்ந்தது வியப்புக்குரிய குறுங்கதை. விஜய் சேஷம்பாடியை விட்டுக் கிளம்பியது இயக்குநர் வெற்றிமாறனைப் போல் தானும் கோலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்ற வெறியுடன். ஆனால், அடையாளமற்றுப் போன படங்கள் ஒன்றிரண்டில் துணை இயக்குநராகி அவனது முயற்சி முடிந்துபோனது. சூழ்நிலை விரட்டியடிக்க, கனவைப் பிறகு தொடர்வோம் என்று அமெரிக்காவுக்கு ஒரு நடை வந்துவிட்டான்.

சியாட்டில் நகரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்நொகாமி நீர்வீழ்ச்சி. குற்றாலம் போல் அதில் தலையைக் காட்ட முடியாதென்றாலும் கண்ணுக்கு ஈர்ப்பான சுற்றுலாத் தலம். அங்கு உருவான சிறு ஊரில் உனா என்ற பெயரில் இந்திய உணவகத்தை ஆரம்பித்தார் கேரளத்து சேட்டன். தென்னிந்திய உணவு வகைகள் அதன் மெனு. இந்தியரல்லாத வாடிக்கையாளர்களுக்கும் அதன் ருசி மிகவும் பிடித்துப்போய்ப் பிரபலமாகி விட்டது உனா.

முறைப்படியான முழுநேர ஊழியர்கள் இருந்தபோதிலும் தற்காலிக சுற்றுலா, வணிக விசாவில் வரும் இந்தியர்களும் பணியாளர்களாகச் சிறிது காலம் இருந்து டாலர் ஈட்டிச் செல்வது நடக்கும். விஜய்யும் சேட்டனின் உறவினனும் சென்னையில் நண்பர்கள். அந்த சிபாரிசில் அவனுக்கு உனாவில் வேலை அமைந்தது. தேவைக்கு ஏற்ப துணைச் சமையலாளன், உணவு பறிமாறுபவன் எனப் பணி.

ஒருநாள் மத்தாயோ தன் மனைவி பியான்கோவுடன் வந்திருந்தான். “என் மனைவியின் பிறந்தநாள். இன்றைய விருந்துக்கு இந்த உணவகம் அவளது தேர்வு. அவளது மனத்தையும் நாவையும் பூரிக்கச் செய்யும் உணவுகளைச் சொல்.” ஸ்பானிஷ் வாடை கலந்த ஆங்கிலத்தில் பேசினான்.

பேரழகிக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் பொருந்தி, கவனத்தைச் சிதறடிக்கும் தோற்றத்தில் இருந்தாள் பியான்கா. மத்தாயோவுக்கு அவளைவிட இருபது வயதாவது அதிகம் இருக்கும். நெடுநெடுவென்று ஆறு அடிக்கும் அதிகமான உயரம். படிய வாரிய தலையும் டிஷர்ட்டும் ஜீன்ஸுமாக இருந்தாலும் செல்வந்த மிதப்பு தெரிந்தது. மற்றபடி அவன் ஒரு மாஃபியா டான் என்று சத்தியமிட்டுச் சொன்னாலும் நம்புவது கஷ்டம்.

சிக்கன் பிரியாணியும் கேரளத்து பொரித்த மீனும் தேங்காய் இறால் கறியும் அவர்கள் இருவரையும் மயக்கத்தில் ஆழ்த்திவிட்டன. கண்களைச் செருகி “சிம்ப்ளி டெலிஷியஸ்” என்றாள் பியான்கா.

“என் நாவில் உணவுத் திருவிழா ஒன்றை நிகழ்த்திவிட்டாய் மேன்” என்றான் மத்தாயோ.

பெருமையுடன், “இன்றைய சமையல் என்னுடையது. மெக்ஸிகன், சைனீஸ் வகைகளிலும் நான் விற்பன்னன்” என்றான் விஜய்.

தாராளமான தொகையை டிப்ஸாக அளித்தான் மத்தாயோ. அவனைப் பற்றி விசாரித்தாள் பியான்கா. கதைச் சுருக்கத்தைச் சொன்னான்.

“புகழ்பெற வேண்டிய சினிமா டைரக்டர் இங்கு அடுப்படியிலா?” என்றாள்.

“வயிற்றுப்பாடு. கனவு தொலையவில்லை மேடம். விசா முடிந்துவிடும். சில மாதங்களில் சென்னை சென்றபின் முயற்சி தொடரும்.”

மத்தாயோவிடம் ஸ்பானிஷில் ஏதோ சொன்னாள்.

“ரியல்லி?” வியப்புடன் கேட்டான் மத்தாயோ.

“ஆம்” என்றாள் தீர்மானமாக.

“என் இல்லத்தரசியை உனது சமையல் அடிமையாக்கிவிட்டது. உனது விசா காலம் முடியும்வரை எங்கள் இல்லத்தின் தலைமை செஃப் ஆக உன்னை நியமித்துவிட்டாள்” என்று சொல்லிவிட்டு அவன் தெரிவித்த ஊதியத் தொகை நம்ப இயலாத இலக்கம்.

“ஐயோ! சேட்டனுக்கு நான் என்ன சொல்வேன்?” என்றான்.

மத்தாயோ அழைத்ததும், கஸ்டமர் பிரச்சினையோ என்று மேசைக்கு விரைந்த சேட்டன், மத்தாயோவை அடையாளம் கண்டு திகைத்துவிட்டான்.

“ஐ’அம் டேக்கிங் விஜே” என்றான்.

திகைப்பு அதிர்ச்சியாக மாறி, “என்னடா விஜய், அவனிடம் போதை விற்கப் போகிறாயா?” என்று தமிழில் கேட்டான்.

அதன் அர்த்தம் புரியாமல், “அந்தம்மா என் சமையலில் மயங்கி விழுந்துட்டாங்க சேட்டா” என்று சிரித்தான் விஜய்.

“நாளை அவனை வந்துவிடச்சொல்” என்று அத்துடன் பேச்சை முடித்தான் மத்தாயோ.

எதிர்ப் பேச்சுக்குத் துணிவின்றித் தலையாட்டினான் சேட்டன். அவர்கள் சென்ற பின், சேட்டன் தெரிவித்த மத்தாயோவின் பின்னணி முதலில் அதிர்ச்சி அளித்தாலும், விஜய் சமாளித்துக்கொண்டான்.

“எனக்கு வேலை சமையலறையில். அவன் என்ன விற்றால் எனக்கென்ன? மீன் வித்த காசு நாறாது சேட்டா. நாலு மாசத்தில் நல்ல பணம் தேறும். அத்துடன் சியாட்டிலுக்கு டாட்டா. கலைப்புலி தாணு சாரிடம் அழைத்துச் செல்கிறேன் என்று கூட்டாளி வாட்ஸ்அப் அனுப்பியிருக்கிறான்.”

“தெரியும் மேடம். சொற்ப ஊதியத்தில் இருந்தவனை இங்கு அழைத்து வந்து கை நிறைய அள்ளித் தந்து வைத்திருக்கும் கதை. அதற்காக…” என்றவனை, “இது வேறு கதை” என்று தடுத்தாள்.

ஐபோனில் நேரத்தைப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தாள். “பொலோனியா தெரியுமா? இத்தாலியில் உள்ளது. அழகான நகரம். சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான ஊர். நிறைய சிறப்பு உண்டு. கிரிமினல் குற்றங்களுக்கும் குறைவில்லை. இத்தாலியில் பொலோனியாவுக்கு அதில் இரண்டாம் இடம். என் தந்தையின் தொழிலும் மத்தாயோவின் தொழிலும் ஒரே ஜாதி. அடிக்கடி வருவான். சிநேகமாகத்தான் இருந்தார்கள். ஏதோ ஒரு பரிவர்த்தனை பிசகி இருவருக்கும் இடையில் எழுந்த வாக்குவாதம் மோதலாகி, சுட்டுவிட்டான் மத்தாயோ. இந்த நெஞ்சைப் பார்.”

திகைத்து, பார்வையைத் தவிர்த்தவனிடம், “இதில் சாய்ந்து உயிரை விட்டார் என் தந்தை. அப்பொழுது என் வயது பதினேழு. `ஐயோ! தவறிழைத்துவிட்டேன். உன்னைப் பாதுகாத்து வாழ்க்கை அளிக்கிறேன்’ என்று என்னை இங்கு தூக்கிவந்து குடும்பம் நடத்துகிறான். பரிகாரம் செய்கிறானாம்.”

விஜய்க்கு மற்றவை புரிந்தது. அவள் எழுதும் இத்தாலிய ரிவெஞ்ச் கதையில் என்னை ஒரு முக்கியமான கதாபாத்திரம் ஆக்குகிறாள். இதென்ன சோதனை? அமெரிக்க ஜெயிலில் பீட்சாவா, பர்கரா? பலவிதக் குழப்பங்களும் அதிர்ச்சியும் ஒன்றாகக் கலந்து, “மேடம்! உங்களது கதை கேட்டு எனது மனம் சோகத்தில் ஆழ்கிறது. நான் இப்படி எல்லாம் திரைக்கதை எழுதி மசாலா தடவிப் படமாக்க விரும்பும் கற்பனையாளன். சோப்ளாங்கி. உங்களுக்கு நம்பகமான உதவியாளர்கள் நிறைய கிடைக்கலாம். எனக்கு அடுத்த மாசம் இங்கு தங்கும் இருப்புக் காலம் முடிவடைகிறது. ஊருக்குப் போக ஷாப்பிங்கில் நான் பிஸி.”

“விஜே… விஜே… நீ அடுத்த மாதம் போகிறாய். தெரியும். அதனால்தான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.”

அவனுக்கு அழுகை வந்தது. `அப்படியே அழுவதா, முகத்தைக் கைகளில் பொத்தி விம்முவதா?’ முடிவெடுப்பதற்குள் தொடர்ந்தாள்.

“அடுத்த மாதம் திருமண ஆண்டு விழாவுக்கு இங்கு நண்பர்களை அழைக்கப்போகிறான். அவர்களுள் நட்புக் கோட் அணிந்த அவனுடைய பரம விரோதிகளும் உண்டு. அவகாசத்திற்குக் காத்திருக்கிறார்கள். எனது திட்டம் எளியது. பழைய டெக்னிக். ஆனால் உதவும். வரவேற்பறைக்கு வரும் நடைபாதையில் உள்ள சிறு மேசையின் மேல் எனது இந்த சேசியா கைப்பையை மறந்ததைப்போல் விட்டுவிடுவேன். பார்ட்டியில் கணவனுடன் நிற்கும் என்னிடம் நீ அதைக் கொண்டு வந்து தர வேண்டும்” என்று அங்கு காபி டேபிளின் மீதிருந்த சிவப்புக் கைப்பையைக் காண்பித்தாள்.

“நாற்பத்து நாலாயிரம் டாலர் கைப்பையை அசட்டையாக விட்டுவந்ததைக் கவனமுடன் எடுத்து வந்து தந்த உன்மீது என் கணவருக்கு அன்பு அதிகமாகும் விஜே.”

“நாற்பத்து நாலாயிரம் டாலரா?”

“என்ன செய்ய? முதலைத் தோலுக்கு அவ்வளவு விலை சொல்கிறார்கள். இதுவும் என்னைப் போல் இத்தாலி சரக்கு. அது கிடக்கட்டும். அந்தப் பையின் உள்ளே ரூஜெர் எல்ஸிபி மேக்ஸ் வைத்திருப்பேன். கைக்கு அடக்கமான துப்பாக்கி. உள்ளங்கையில் பொத்திக்கொள்ளலாம். அதை எடுத்துக்கொள். பையை என்னிடம் கொடு. உனது நேர்மையைப் பாராட்ட என் கணவன் உன்னைக் கட்டி அணைப்பான். அது அவன் பாணி. நன்கு அறிவேன். அச்சமயம் சிறு களேபரமும் இருளும் சூழ ஏற்பாடு செய்திருப்பேன். அவனை நெஞ்சோடு அழுத்திச் சுடு. துப்பாக்கியைத் துடைத்துவிட்டுக் கீழே எறிந்துவிடு. சற்று விலகி நின்றுகொள். போதும். அவ்வளவே உன் பணி. அவனை இந்த நெஞ்சோடு நான் சாய்த்துக்கொள்வேன். மற்றவை என் பொறுப்பு. நிறைய ரிகர்சல் செய்திருக்கிறேன்.”

வீசிய குளிர் உதவாமல் அவனது மேனி வியர்த்தது.

“இதில் உனக்கு என்ன பலன்? கேட்க மாட்டாயா? கிட்டே வா” என்றாள்.

தயங்கியவனை இழுத்து, போர்த்தியிருந்த கம்பளியைத் தளர்த்தி, கழுத்தைக் காண்பித்தாள். “வைர நெக்லஸ். வெள்ளைத் தங்கத்தில் கோக்கப்பட்டது. தொண்ணூறாயிரம் டாலர். உன் ஊர் பணத்திற்கு எட்டு மில்லியன் இருக்குமா?”

கண்களில் ஒளி மின்ன, “நான் இதை எப்படி எடுத்துச் செல்வேன்?”

சில நொடி அமைதியாக இருந்தாள். புன்சிரிப்புடன் அவனைப் பார்த்தாள். “ஸ்மார்ட் மேன். இப்பொழுதுதான் பிஸினஸ் பேசுகிறாய். சரியாகப் பேசுகிறாய்.”

தன்னையறியாமல் தான் அவளது திட்டத்திற்கு ஒத்துக்கொண்டு விட்டோமோ? தன் இரு உள்ளங்கைகளையும் இணைத்து, விரல்களைப் பினைத்தபடி அமர்ந்தவனிடம், “நீ சரியாகச் சொன்னாய். எடுத்துப் போக முடியாது. அதற்கான ரொக்கம் இந்தியாவில் நீ சொல்லும் நபரிடம் அளிக்கப்படும். ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு நீ காரியத்தில் இறங்கலாம். போலீஸ் மத்தாயோவின் விரோதிகளிடம்தான் சந்தேகப்படும். விசாரிக்கும். அதற்குள் கிளம்பி நீ இந்தியா சென்றுவிடலாம். உன்னைப் பத்திரமாக அனுப்பி வைக்க நான் பொறுப்பு.”

“விஷயம் மத்தாயோவுக்குத் தெரிந்துவிட்டால்?”

“வாய்ப்பில்லை. அவனது கவனம் நம்மீது விழாமல் திசை திருப்ப வேறு ஏற்பாடுகள் செய்திருக்கிறேன். குளிராக இருந்தாலும் இந்த பால்கனிக்கு உன்னை அழைத்த காரணம் தெரியுமா?”

“இல்லை.”

“இங்குள்ள சுவர்களுக்குத்தான் கண்ணும் செவியும் இல்லை. அன்றைய நாள் நான் மறந்து வைக்கப்போகும் கைப்பைக்கு அருகிலும் கேமரா கிடையாது. மற்றபடி இவ்வீட்டில் எங்கெல்லாம் கேமராவின் உளவுக் கண்கள் இருக்கின்றன என்பது எனக்கு அத்துப்படி. இரண்டு நாள் அவகாசம். நிதானமாக யோசி. முடிவு உன் இஷ்டம்” என்றாள் பியான்கா.

அடுத்த இரண்டு நாள்களும் தூக்கம் தொலைந்துபோனது. இரவு தப்பித்து ஓடிவிடலாமா என்றுகூட யோசித்தான்.

`எங்கு போவது? எப்படிப் போவது? டிரக் மாஃபியாவின் குடும்பத்தில் கொலைச் சதி என்று சியாட்டில் போலீஸில் பிராது கொடுத்தால் எடுப்பார்களா? இவ்வளவு திட்டமிட்ட கிராதகி என்னைக் கண்காணிக்காமலா இருப்பாள்? ஹோசெ என்னைப் பார்ப்பதே வேவுப் பார்வை போல்தான் இருக்கிறது.’

வானிலை அறிவிப்பைப் பொய்ப்படுத்தாமல் கடும் காற்று சியாட்டிலைச் சூழ்ந்து அடித்தது. கூடவே மழை. அதைவிடச் சீற்றமாக அவனது மனத்திற்குள் புயல். பியான்காவோ எதுவுமே நடக்காததுபோல் மத்தாயோவுடன் சிரிப்பும் உரசலும் ரொமான்ஸுமாக இருந்தாள்.

`அவளுக்குத் தெரியாமல் விஷயத்தை அவனிடம் சொல்லிவிடலாமா? அவன் எனது விசுவாசத்தைப் பாராட்டி அந்த வைர நெக்லஸில் பாதி கொடுத்தால்கூடப் போதும்.’

`சை! இது என்ன பினாத்தல். உயிரோடு ஊர் சேர்ந்தால் போதாது?’

தலை வலித்தது. கபாலம் முழுக்க அச்சம் கலந்த குழப்பம். சூடான காபியுடன் நெற்றியைப் பிடித்தபடி அமர்ந்திருந்தவனிடன், ஹோசெ வந்தான்.

“மத்தாயோ அழைக்கிறார்.”

அடிவயிற்றைக் கலக்கியது. “என்னவாம்?” என்று கேட்டது அவனுக்கே கேட்கவில்லை.

“அலுவலக அறையில் காத்திருக்கிறார்” என்று சென்றுவிட்டான்.

அச்சத்தில் செயலற்று அமர்ந்திருந்தான். போனை எடுத்து அவசரமாகத் தன் அம்மாவிற்கு வாட்ஸப்பில் தகவல் அனுப்பினான்.

`நல்லாருக்கியா? அப்பாவை நல்லாப் பாத்துக்கோ.’ இருந்தா அப்புறமா பேசறேன் என்பதைத் திருத்தினான். ‘முடிஞ்சா அப்புறமா பேசறேன்.’

மத்தாயோ தனது சிறிய மேசைக்குப் பின்னால் இருந்த நாற்காலியில் புன்முறுவலுடன் அமர்ந்திருந்தான். ஐபேடும் தங்க நிறத்தில் அரையடி உயரத்தில் ஒரு கூண்டும் தவிர மேசை சுத்தமாக இருந்தது. சற்றுத் தள்ளி பக்கவாட்டில் இருந்த நாற்காலியில் சலனமற்ற முகத்துடன் பியான்கா. அவளது மடியில் சிவப்பு சேசியா கைப்பை. கைகள் அதை இறுக்கமாகப் பற்றியிருந்தன.

“உட்கார்.”

மேசையின் எதிர்ப்புறம் இருந்த நாற்காலியில் சட்டென்று அமர்ந்தான். நடுங்கத் தொடங்கிய கால்களைச் சமாளித்து மறைக்க அது வசதியாக இருந்தது.

“ஒரு கதை சொல்லட்டுமா விஜே?”

`நாசமாப்போச்சு. நீயுமா?’

“பழைய கதை. அனேகமாக நீயும் கேள்விப்பட்டிருக்கலாம். உலகில் பலருக்கும் பிடித்த கதை. எனக்கும்.”

விஜய்யின் உள்ளங்கால் சாக்ஸிற்குள் வியர்த்தது.

“ஃப்ரென்க் ஸ்டாக்டன் தெரியுமா? இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய அமெரிக்க எழுத்தாளர். அவர் 1884ஆம் ஆண்டு எழுதிய கதை `தி லேடி ஆர் தி டைகர்.’ இன்றும் அது பிரபலம்.”

‘தெரியாது’ என்று தலையை ஆட்டினான்.

“ஒரு ராஜா. அவன் பாதிக் காட்டுமிராண்டி. குற்றவாளிகளுக்கு அவன் அளிக்கும் தீர்ப்பு வினோதம். ஆம்பி தியேட்டருக்குக் குற்றவாளி அழைத்து வரப்படுவான். எதிரே ஒரே மாதிரியான இரண்டு கதவுகள் இருக்கும். ஒரு கதவின் பின்னால் பசியுடன் புலி. அடுத்ததன் பின்னால் ராஜா தேர்ந்தெடுக்கும் அழகிய பெண். குற்றவாளி இரண்டில் ஒரு கதவைத் திறக்க வேண்டும். அதன் பின்னால் புலி என்றால் குற்றவாளி உடல் சின்னாபின்னமாகிச் சாவான். நிற்பது பெண் என்றால் ராஜா அவளை அவனுக்கு ஜாம்ஜாமென்று திருமணம் செய்து அனுப்பிவைப்பான்.

அப்படியான அந்த ராஜாவின் அழகிய மகளைக் காதலித்துவிட்டான் அவனுடைய பணியாள். விடுவானா ராஜா? ஆனாலும் தான் வகுத்த நீதியிலிருந்து அவன் தவற விரும்பவில்லை. எல்லோருக்கும் அளிப்பதைப்போல் அந்தக் காதலனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இளவரசி தன் செல்வாக்கைப் பயன்படுத்தி எந்தக் கதவுக்குப் பின் புலி, எந்தக் கதவுக்குப் பின் பெண் என்று தெரிந்துகொண்டாள். பொறாமை பெண் குணமாச்சே. ராஜாவின் மகள் மட்டும் விலக்கா? தன் காதலனுக்கு மனைவியாகிவிடும் வாய்ப்புள்ள அந்தப் பெண்ணின் மீது அவளுக்குப் பொறாமை ஏற்படுகிறது.

ஆம்பி தியேட்டருக்கு அழைத்து வரப்படுகிறான் அந்த அழகிய இளைஞன். இளவரசியைப் பார்க்கிறான். அவனுக்கு மட்டும் தெரியும்படி வலது கையால் சைகை புரிகிறாள். அந்தக் கதவைத் திறக்கிறான் இளைஞன்.

இளவரசி பொறாமையால் தன் காதலனைப் புலிக்குப் பலி கொடுத்தாளா? என்ன இருந்தாலும் என் காதலனாயிற்றே என்று காப்பாற்றினாளா?

அவன் எந்தக் கதவைத் திறந்திருப்பான் என்று நீ நினைக்கிறாய் விஜே?”

“இளவரசி காதலனைக் காப்பாற்றியிருப்பாள். என்ன இருந்தாலும் பெண்ணுக்கு இளகிய மனசாச்சே.”

“பெண்களின் பொறாமையும் பொல்லாதது ஆச்சே. அவன் திறந்தது எந்தக் கதவு? உன் இஷ்டம் உன் முடிவு என்று வாசகர்கள் பூர்த்தி செய்துகொள்ள விட்டுவிட்டார் ஃப்ரென்க். இன்றளவும் அந்த முடிவிற்கு இரண்டு கட்சிகள். வாத விவாதங்கள்.”
“எனக்குச் சோகமான முடிவுகள் பிடிப்பதில்லை. நல்ல முடிவைப் பூர்த்தி செய்துகொள்கிறேன். இன்றைய டின்னருக்கு என்ன விரும்புகிறீர்கள்?”

மத்தாயோவின் புன்னகை மறைந்தது. “உன்னிடம் ஏன் இந்தக் கதையை இப்பொழுது இழுத்து வைத்துச் சொன்னேன் என்று நீ கேட்கவில்லையே?”

வெளியே சீற்றத்துடன் அடித்துக்கொண்டிருந்த காற்றின் ஓசை கண்ணாடி ஜன்னல்களையும் கதவுகளையும் மீறிச் சன்னமாகக் கேட்டது. விஜய்யின் மனத்திலோ பேரிரைச்சல். ஐபேடைத் திறந்து வீடியோ பதிவொன்றை ஓடவிட்டு விஜய்யின் பக்கம் திருப்பினான்.

“மங்கலான படப் பதிவிற்கு மன்னிக்கவும். சற்றுத் தொலைவில் எதிர்ச் சுவரில் மரங்களுக்கு இடையில் பதித்திருந்த கருவி. அதனால் இதற்குமேல் ஜூம் செய்ய இயலவில்லை.”

பால்கனியில் பியான்கா அவனுடன் பேசிய காட்சிப் பதிவு அது. ஒலி பதிவாகவில்லை. அமர்ந்திருந்த விஜய் எழுந்து பியான்காவைக் காதோரம் நெருங்கிய நொடியில் காட்சியை நிறுத்தினான் மத்தாயோ. கேமராவின் கோணத்தில் விஜய் அவளது கன்னத்தை முத்தமிடும் தோற்றத்தில் இருந்தது அக்காட்சி.

பதறி அலறினான் விஜய். “இது நீங்கள் நினைப்பதுபோல் இல்லை. என்னால் விளக்கம் அளிக்க முடியும். வேண்டுமானால் மேடமிடம்…”

“கேட்டுவிட்டேன் விஜே. உனக்கு அவளது கழுத்தில் இருந்த வைர நெக்லஸின் மேல்தான் கண், வேறு ஏதும் தப்பிதமாக நீ நடக்கவில்லை என்கிறாள். நான் அவளை நம்ப முடியும். ஏனெனில் மோசமான சூழலில் என்னை நம்பி வந்தவள், இன்றும் அன்பு மழை பொழிகிறாள்.”

`அடேய்! உன் மண்டையில் போதை வஸ்துவா, களிமண்ணா? உன்னைப் போட்டுத்தள்ளப் பார்க்கிறாள்’ என்பதை முழுங்கிவிட்டு, “அது இல்லை. என் தரப்பை ஒருமுறை கேட்டுவிடுங்கள்” என்றான் பரிதாபமாக.

“உனக்கு என் வைடூரிய மனைவியின் மீது திருட்டுப் பூனைக் கண்ணா, அல்லது அவளது வைர நகையின் மீது கள்ள ஆசையா என்பது தெரியாது. விசாரித்தால் நீ மேலும் சமாளிக்கப் போகிறாய். அதற்குப் பொய்களைக் கலப்பாய். அதையெல்லாம் பிரித்து ஆராய எனக்குப் பொறுமை இல்லை.”

“ஆண்டவா! அதனால்…”

“உன் விதியை நீயே தேர்ந்தெடுப்பது நல்லது என்று தோன்றியது.”

ஓரத்தில் இருந்த கூண்டை மேசையின் மையத்திற்கு நகர்த்தினான் மத்தாயோ. கிராமபோன் ரிக்கார்டுகள் சுழலும் மேசை போன்ற ஒன்றின் மீது அது பொறுத்தப்பட்டிருந்தது. வலை ஏதுமின்றி இரண்டு கதவுகள் மூடியிருந்தன.

“ஸ்பெயினில் பழங்காலப் பொருள் விற்பனை நிலையத்தில் வாங்கினேன். முன்னொரு காலத்தில் எகிப்திய அரசி வைத்திருந்ததாம்.”

பேசிக்கொண்டே கூண்டின் இரண்டு கதவுகளையும் திறந்து முகப்பை விஜய்யின் பக்கம் திருப்பினான். ஒன்றில் மத்தாயோவின் ரிவால்வர். மற்றொன்றில் பியான்காவின் வைர நெக்லெஸ்.

அடுத்து அவன் என்ன சொல்லப்போகிறான் என்பதை ஓரளவு யூகித்துவிட்டான் விஜய். “பாஸ்! சார்! ஐயா! நான் சொல்ல வருவதை ஒரு நிமிடம் கேளுங்கள்…” என்று அவன் பேசியதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், கதவுகளை மூடிச் சுழல விட்டான். விர்ரென்று பல சுற்றுச் சுற்றி நின்றது கூண்டு.

“ஏதேனும் ஒரு கதவைத் திற விஜே. வைர நெக்லெஸ் என்றால் என் சந்தேகம் தவறு. நீ புண்ணியாத்மா. சுமார் ஒரு லட்சம் டாலர் அதன் விலை. என் சந்தேகத்திற்கு அது அபராதம். உனக்கு அன்பளிப்பு; விடுதலை. இந்தியா சென்று இதை ஒரு கதையாகக்கூட நீ சினிமா எடுக்கலாம்.”

கதவு மற்றதாக இருந்தால் என்ன முடிவு என்பது விஜய்க்குத் தெரிந்துவிட்டது. காதில் சங்கு ஒலித்தது. “மேடம், நீங்களாவது சொல்லுங்களேன். இதென்ன கண்ணாமூச்சி விளையாட்டா இப்படியெல்லாம் சான்ஸ் எடுக்க? உயிர். போனால் வராது.”

அவனைக் கண்ணுக்குக் கண் பார்த்தாள் பியான்கா. சில விநாடிகள்தான். திரும்பிவிட்டாள். கண்கள் சிமிட்டியதைப் போல் தோன்றியது. இல்லையோ. ஒருவேளை கற்பனையோ. ஆனால் இரக்கம் தென்பட்டது. ஏதோ சொல்ல வருகிறாளோ. வேறொன்றும் பேசாமல் மடியில் இருந்த கைப்பையை இறுக்கிப் பிடித்திருந்தாள். கேவிக்கேவி அழ ஆரம்பித்தான் விஜய்.

“எமோஷன்கள் எனது அவையில் செல்லுபடி ஆவதில்லை விஜய். கோ அஹெட். எந்தக் கதவு? முடிவு உன் இஷ்டம்?”

சட்டென்று அது தோன்றியது. `துப்பாக்கிக் கதவாகவே இருந்தால்தான் என்ன? எடுத்து சட்டென்று மத்தாயோவைச் சுட்டுவிட்டால்? ஒன்று அவன் சாக வேண்டும். அல்லது நான். பிழைக்கும் வாய்ப்பு மூன்றில் இரண்டு மடங்காகும்.’ வாய்ப்புக் கணக்குப் பேசியது மனம்.
விஜய் கூண்டின் கதவை நோக்கிக் கையை நீட்டினான்.

தனது பாக்கெட்டிலிருந்து வேறொரு ரிவால்வரை எடுத்து மேசையின் மீது வைத்தான் மாத்தாயோ. தனது கைப்பைக்குள் கையை நுழைத்தாள் பியான்கா. வெளியே அசுரத்தனமாக வீசியது காற்று.

அவன் கதவைத் திறந்த அந்த மைக்ரோ நொடியில் சியாட்டில் நகரின் மின்சாரம் தடைபட்டு நகரைச் சூழ்ந்தது இருள்.

அந்த அறையில் ஒரே ஒரு தோட்டா பாய்ந்து ஒலித்தது.

oOo

(ஆனந்த விகடன் டிசம்பர் 13, 2022 இதழில் வெளியான சிறுகதை)

-நூருத்தீன்


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

5 comments

சலாஹுத்தீன் December 10, 2022 - 1:35 am

ஜெஃப்ரி ஆர்ச்சரின் Twist in the tale கதை ஒன்றை படித்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. சிறப்பான எழுத்து நடை. கடைசி வரி வரை சஸ்பென்ஸ். யூகிக்க முடியாத திருப்பங்கள்.

ஃப்ரென்க் ஸ்டாக்டனின் கதையில் இரண்டு கதவுகள்தான். நூருத்தீனின் கதையில் மூன்று துப்பாக்கிகள்!

Reply
நூருத்தீன் December 10, 2022 - 3:25 am

மிக்க நன்றி.

Reply
அப்துல் ரஹ்மான் December 10, 2022 - 8:41 am

இளவரசி, பரிசு புலிக்குக் கொடுத்தாளா அல்லது காதலனுக்கு கொடுத்தாளா?

அதுக்கான பதிலே தொங்கிக் கொண்டிருக்குபோது துப்பாக்கி குண்டுக்கு இரையானது யாரென இன்னொரு தொங்கலா? ஏன் சார் எங்கள் மீது இத்தனை கொலைவெறி?. யோசித்து தூக்கம் வராமல் மண்டை குழம்பப் போகிறோம்.

அருமை. கொரிய இயக்குநர் கிம் கி டுக் போன்று முடிவை வாசகர்கள் அவரவரின் விருப்பத்துக்கேற்ப, அவரவரின் மனநிலைக்கேற்ப யூகிக்க விட்டுள்ளீர்கள்.

Reply
P Khaja Mohaideen December 14, 2022 - 5:00 am

An excellent thriller suspense crime novel ..
Free flow in words..
Congratulations

Reply
அஸ்ரப்கான் December 16, 2022 - 8:49 am

இந்த சஸ்பென்ச நாங்க எப்படி பூர்த்தி செய்வது…சூப்பர்

Reply

Leave a Comment