ரிசோதனைக் கூடத்தில் மும்முரமாக இருந்தவனின் பக்கத்தில் சட்டென்று பிரசன்னமானாள் வேகா. ‘‘எனது எண்ணையும் இணைத்து விட்டாயா?’’ என்றாள்.

திடுக்கிட்டுத் திரும்பியவன், ‘எப்படி நுழைந்தாய்? அழைப்புகளைத் தடுத்து வைத்திருக்கிறேனே?’’ மெய்நிகர் பிம்பமாக நின்றிருந்தவளிடம் அதிர்ந்தான்.

“கணவனே! வினாவுக்கு வினா பதிலாகக் கூடாது. என் வினாவுக்கு ஆம்-இல்லை என்றாவது சொல் பார்ப்போம்.’’

குனிந்து நெற்றியை விரல்களால் தேய்த்து விட்டு, “ஆம் என்று சொல்ல ஆசைதான். ஆனால் இல்லை…” என்று அவன் முடிப்பதற்குள், “இல்லை என்ற பதில் ஏற்றுக்கொள்ளப்படாது கணவா” என்றாள்.

இவர்களைக் கவனிக்க அவகாசமின்றி மற்றவர்கள் தத்தம் திரையில் மூழ்கியிருந்தார்கள். ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த விண்கலத்தின் முப்பரிமாண ஒளிக்கற்றைப் பிம்பம் அந்தப் பிரமாண்ட கூடத்தின் நடுவே அலையாடியது. ஒரு வாரத்தில் விண்ணேகத் தயாராக இருந்த அதன் இறுதிக்கட்டப் பணிகளில் அனைவரின் சிரத்தையும் குவிந்திருந்தன. தலைமை விஞ்ஞானி யோக் தன் கனவு ஒரு வாரத்தில் மெய்யாகப் போகிறது என்ற சிலிர்ப்பில் இருந்தான். அண்டங்களின் வரலாறு மாறப்போகிறது என்பதை நினைக்கும் போதே உடலுக்குள் செல்கள் பரபரத்தன. மூச்சை இழுத்து விட்டு, நிதானப்படுத்திக்கொண்டு, காரியத்தில் கண்ணாய் இருந்தவனைத்தான் கண்கண்ட மனைவி காற்றலைத் தொடர்பில் வந்து கலைத்தாள்.

“உன்னைக் கட்டிக்கொண்ட நாளாய் ஏதாவது தொந்தரவு செய்திருக்கிறேனா?”

“இல்லை. நீ ஓர் அற்புதப் பிறவி. என் வரம். என் பாக்கியம்.” கன்னத்தைக் கிள்ளினான். பிம்பத்தின் அப்பகுதி ஒளி மட்டும் நடுங்கி, சீரானது.

“போதும் அங்கு உன் பாவ்லா பாசம். இங்கு எனக்கு வலிக்கவில்லை. நானும் உன்னுடன் வரத்தான் போகிறேன்.”

“இதென்ன மற்றொரு நாட்டுக்குச் சுற்றுலாவா? கிரகப் பயணம் கண்ணே! அதுவும் தேடல் பயணம். ஆபத்து நேரிடலாம்” என்று சமாதானத் தொனியில் பேசினான்.

“அதே! என் பிரியத்திற்குரிய கணவனை ஆபத்திலும் பிரிய மாட்டேன் என்பதை நாம் இணையும்போதே வாக்குறுதி அளித்திருக்கிறேன் கண்ணா” என்றாள்.

“உனக்கு இந்த விண் பயணத்தின் முழு நோக்கமும் திட்டமும் தெரியுமா? விளையாட எனக்கு அவகாசம் இல்லை. புரிந்துகொள்ளேன்.”

அண்டவெளியில் சுற்றும் கிரகங்களில் வேறு ஏதேனும் உயிரினங்கள் இருக்கலாம் என்ற உத்தேசக் கருத்தை எத்தனை நூற்றாண்டுகளாகப் பேசிக்கொண்டிருந்திருப்பார்கள். எத்தனை எத்தனை முயற்சிகள் செய்திருப்பார்கள். பல ஒளி ஆண்டுகள் தாண்டியிருந்த கிரகங்கள் சிலவற்றில் எட்டிப்பார்த்தும் வந்தாகிவிட்டது. கல்லும் மண்ணும் கொண்டுவந்து ஆராய்ச்சி செய்ததுதான் மிச்சம். உயிரினங்களுக்கான ஆதாரம் ஊர்ஜிதமாகக் கிடைத்தபாடில்லை.

சென்று வந்தது அப்படி என்றால், ‘இருளில் தட்டு பறந்து வந்தது’, ‘கோளம் பாய்ந்து சென்றது’ என்றவர்களின் வாக்குமூலங்கள் எல்லாம் யூகத்துடனேயே முடிந்துவிட்டன. இருந்தாலும் தொன்றுதொட்டு இடைவெளி விடாமல் முயற்சி மட்டும் தொடர்ந்தபடிதான் இருந்தது. மத்திய விஞ்ஞான கேந்திரத்தின் தலைமை விஞ்ஞானியான யோக் தனது கணினிப் பின்னலில் ஒலிக்கற்றை ஒன்று வித்தியாச அலையில் பயணிப்பதை ஒருநாள் யதேச்சையாகக் கேட்கப்போக, அதைப் பின்தொடர்ந்து பல மாதங்கள் ஆராய்ந்ததில் அது வேற்று உயிரினங்களின் ஒலிதான் என்று தர்க்க ரீதியாக முடிவானது.

அந்த ஆராய்ச்சி வளர்ந்து முற்றி, அந்த ஒலி புறப்பட்ட கிரகத்திற்குச் செல்ல விண்கலமும், அதில் பயணிக்க நால்வரும் என்ற பயணத்திட்டம் அரசாங்கத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, தலைமைப் பயணியாக அவனே செல்வது என்று முடிவானது. அது கிளம்ப ஒருவாரம் இருக்கும் நிலையில் `நானும் உடன் வருவேன்’ என்று கணவனைத் துரத்திக்கொண்டிருந்தாள் வேகா.

“உனது அடையாளங்களை உள்ளிட்டுப் புகுந்து, திட்ட அறிக்கை முழுவதையும் வாசித்துவிட்டேன். உன்னுடன் பயணிப்பவர்களை இறுதி நேரத்திலும் மாற்றி அமைத்துக்கொள்ள உனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அடிக்கோடிட்டு வைத்திருக்கிறேன். பார்க்கிறாயா?”

“வேண்டாம். அது அவசரகால அனுமதி. பயணிக்கு ஆரோக்கியக் கேடு, மரணம் இப்படி ஏதாவது நிகழ்ந்தால்…”

“கணவா! நானும் வருவேன். காரணத்தை உருவாக்கு. இங்கு நம்மைப் பார்த்து, பார்த்து எனக்கு அலுத்துவிட்டது. அந்நிய கிரகத்தினர் எப்படி இருக்கின்றனர் என்பதை நான் நேரில் காண வேண்டும். அங்குள்ள கணவர்களாவது மனைவியின் சொல்பேச்சைக் கேட்பவர்களா என்பது எனக்குத் தெரிய வேண்டும்.”

“படம் எடுத்து அனுப்புகிறேனே. வேண்டுமானால் இங்கு இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் அமர்ந்துகொள். நேரலையில் அவர்களுடன் பேச ஏற்பாடு செய்கிறேன்.”

“வேண்டாம். நானும் வருவேன்” தீர்மானமாகச் சொன்னாள்.

அயர்ச்சியுடன் பார்த்தான். எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தான். விளக்கு எரிந்தது. பேராபத்து நேரங்களில் கிரகத்தின் முக்கியமானவர்களை அழைக்கும் ரகசிய சமிக்ஞை விளக்கு.

“அவசர அழைப்பு. பிறகு பேசுவோம்” என்றான்.

“மாய்மாலம் செய்து என்னைத் தட்டிக்கழிக்க நினைக்காதே. அத்துடன் உன்னை…” முடிக்கும் முன்பே அவளது பிம்பத்தை உறைநிலையில் நிறுத்திவிட்டு, இராணுவத் தலைமையிலிருந்து வந்த அழைப்பை ஏற்று, “முகமன்” என்றான்.

“அவசரம்! உன்னை அழைக்க விண்ணூர்தி வருகிறது. உடனே கிளம்பு” என்றார் இராணுவத் தலைவர்.

பேராபத்தோ என்ற அச்சம் ஏற்பட்டது. “நிலைமையின் அவசரத்தைச் சிறு குறிப்பாகச் சொன்னால் தங்களைச் சந்திக்கும்போது திகைக்காமல் இருப்பேன்.”

“சொல்கிறேன். ஆனால் நீ சந்திக்கப்போவது என்னை அல்ல; விருந்தினர்களை.”

“விருந்தினர்கள்?”

“சற்றுமுன் கலம் ஒன்று வந்து இறங்கியுள்ளது. அதில் இரு ஏலியன்ஸ்.”

o-O-o

இல்லத்திற்குள் புயலாகப் புகுந்தான். எந்திர சேவகனை வசவுடன் ஏவலிட்டபடி உடற்பயிற்சி உடையில் மூச்சிறைக்கக் குதித்துக் கொண்டிருந்தாள் வேகா. இவனைப் பார்த்ததும், “என்னை உறைய வைத்துவிட்டு, அங்கு யாருடன் கதைக்கப் போய்விட்டாய்? தலைமையகத்தில் புதிய அதிகாரியாக அமர்த்தியிருக்கிறாயே அவளிடமா?”

நுழைந்த அவசர வேகம் குறையாமல், “நீ பார்க்க வேண்டும் என்று சொன்னாயே, உடனே கிளம்பு” என்றான்.

“உன் கவனத்தைக் கலைக்கும் அவளை நான் ஏன் பார்க்க வேண்டும்?” என்றாள் கோபமாய்.

“சட்! ஏலியன்ஸைச் சந்திக்க வேண்டும் என்றாயே. உனக்கு மூன்று நிமிடமே அவகாசம். வா.”

சடுதியில் முகம் மலர்ந்து, “எனக்கும் அனுமதி வாங்கி விட்டாயா? தெரியும். நீ என் உள்ளம் கவர் கள்வன்” என்றபடி ஓடிவந்து வியர்வையுடன் அவனைக் கட்டிப்பிடித்து, “மூன்று நிமிடமா, அடுத்த வாரம்தானே பயணம்?” என்றாள்.

“நாம் போக வேண்டாம். அவர்களே வந்து விட்டார்கள்.”

“ஏலியன்ஸா? இங்கா?”

“இராணுவத் தலைமையகமும் விண் மையமும் அப்படித்தான் தகவல் அனுப்பியுள்ளன. என்னை அங்கு விரையச் சொல்லிக் கட்டளை. போகும் வழியில் உன்னையும் இழுத்துச் செல்ல வந்திருக்கிறேன். விண்ணூர்தி வெளியில் காத்திருக்கிறது” என்று அவசரப்படுத்தினான்.

அடுத்த நான்காவது நிமிடம் அவர்கள் இருவரையும் சுமந்துகொண்டு விண்ணூர்தி பறந்தது. “ஹா! நம்பவே முடியவில்லை. நானும் ஏலியன்ஸைச் சந்திக்கப்போகிறேன்” அவனுடன் மேலும் நெருங்கி உரசியபடி அமர்ந்துகொண்டாள்.

செம்மணலும் அதே நிற மலைகளும் நிறைந்திருந்த வெளியில் அந்நிய கிரகத்தின் விண்கலம் வந்து இறங்கியிருந்தது. வினோத வடிவமைப்புடன், சிறு குன்று உயரத்திற்கு இருந்த அதன் கீழே சில சக்கரங்கள் இருந்தன. ஆனால் முக்காலி போல் தரையில் ஊன்றியிருந்த மூன்று உலோகக் கால்களின் மேல் அக்கலம் நின்றிருந்தது. அடை காப்பதுபோல் இராணுவ ஊர்திகள் அந்த அந்நியக் கலத்தைச் சுற்றிப் பெரு வட்டம் இட்டிருந்தன.

இராணுவ அதிகாரியிடம் “வெறும் கலம்தானே இருக்கிறது. ஏலியன்ஸ் என்று சொன்னது யார்?” என்று கேட்டான்.

“இரண்டு உயிரினங்கள். நாங்கள் அனைவரும் பார்த்தோம். கதவுக்கு வெளியே நின்றிருந்தன. எங்களை நோக்கி அதன் கைகளை உயர்த்தி அசைத்தன. இப்பொழுதுதான் உள்ளே சென்றன.”

கதவு திறந்திருந்தது. உள்ளே வெளிச்சம் தெரிந்தது. “ஏதாவது சொல்லி உடனே அவர்களை வெளியே வரச்சொல்” என்று அவனைப் பிடித்துக்கொண்டு குதித்தாள் வேகா.

“என்ன சொல்லி… என்ன மொழியில்?”

“நம்மை நோக்கி அவர்கள் என்னவோ பேசினார்கள். ஒலியைக் கேட்டோம். ஆனால், நாம் இதுவரை அறியாத மொழி” என்றார் அந்த அதிகாரி. அவரது முகத்தில் வியப்பு இன்னும் பாக்கி இருந்தது.

“அவர்கள் எப்படி இருந்தார்கள்?” என்று கேட்டு முடிப்பதற்குள், “அதோ வெளியே வருகிறார்கள் பார்” என்றாள் வேகா.

அவ்விரு உருவங்களும் கலத்தின் வாசலில் இருந்த ஏணியில் கீழிறங்கின. தரையில் கால்கள் பதிக்க முடியாமல் மிதந்து, மிதந்து மெல்ல நடந்து, சமாளித்து நின்றன. புஸுபுஸுவென்று அவர்களை மூடியிருந்த வெள்ளை ஆடை அக்கிரகத்தினரின் விண்கல உடையாக இருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.

“அவர்களது உருவமே வித்தியாசமாக இருக்கிறது. ஏன் நிலையாக நிற்காமல் மிதப்பதைப் போலவே இருக்கிறார்கள்” என்று கேட்டாள் வேகா.

“நமது ஈர்ப்பு சக்திக்கும் அவர்களது பெளதிக வடிவமைப்புக்கும் இடையிலான வித்தியாசமாக இருக்கலாம்.” அவர்களை நோக்கி இவனும் சினேக சமிக்ஞை காண்பித்தான். அவ்விருவரும் கைகளை உயரத் தூக்கி ஆட்டினர்.

“நான் அவர்களை நெருங்கப் போகிறேன்” என்றான்.

“நாங்கள் ஓரிருவர் உடன் வரட்டுமா?” என்று கேட்ட அதிகாரியிடம், “வேண்டாம். நமது ஆயுதங்களைக் கண்டு அவர்கள் அச்சமுறலாம்.”

“இதோ பார், என் கையில் ஒன்றுமில்லை. நான் வருகிறேன். தொட்டுப் பார்க்க வேண்டும்” ஒட்டிக்கொண்டாள் வேகா.

அவர்களை நோக்கி நடக்கும்போது, “உன்னை ஏன் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து இங்கு வைத்திருக்கிறார்கள் தெரியுமா?” என்று கேட்டாள்.

“ஐ ஜி வலை. அதன் மூலகர்த்தா நான் என்ற காரணமாக இருக்கலாம்.”

“ச்சே! என்னைக் கட்டிக்கொண்ட அதிர்ஷ்டம் என்று சொல்வாய் என நினைத்தேன்.”

அவர்களை நெருங்கினார்கள். யோக், “முகமன்” என்றான். பதில் வந்தது. அவ்வொலியை அவனது உடலுடன் பொருத்தப்பட்டிருந்த கையடக்கக் கருவி கடத்தி, நொடியில் விவரம் அளித்தது. “கிடைத்துவிட்டது! இவர்களது கிரகம், இவர்களது மொழி யாவும் நமது இண்டெர் கேலக்ஸி வலையில் உள்ளது. இனி இவர்களுடன் உரையாடலாம். இக்குட்டி எந்திரன் உதவுவான்.”

அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிறு குழந்தையின் ஆர்வத்துடன் வேகா அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். “இரண்டில் அதுதான் பெண் என்று நினைக்கிறேன்.”

“ஹலோ! என் பெயர் கத்-பிசி08. இவள் சக பயணி சுவா-எஃப்சி01” என்றான் ஆண்.

“நல்வரவு. எங்களது கிரகத்தை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” அண்ட வரலாற்றில் ஏலியன் கிரகத்தைக் கண்டுபிடித்த முன்னோடியாகத் தான் அமையப்போவதில்லை என்றொரு சிறு வருத்தம் அவனது கேள்விக்குள் ஒளிந்திருந்தது.

“ஏலியன்களைத் தேடுவது எங்களது பல நூற்றாண்டு முயற்சி. அது கனிந்து இன்று இங்கு வந்து நிற்கிறோம்.”

“அதையும் தாண்டி ஒரு கதை இருக்கிறது. இவர்களிடம் ஒளிவு மறைவின்றி அனைத்தையும் சொல்லிவிடு கத்” என்றாள்.

“சுவா – அதானே உங்கள் பெயர்? இவர் யார் உங்கள் கணவரா?” என்று கேட்டாள் வேகா.

“ஆம். இனி அப்படித்தான்.”

தன் கணவனிடம், “கணவனாகப்பட்டவன் மனைவியை உடன் அழைத்துச் செல்வதுதான் அண்டத்தின் விதி. பார்த்துக்கொள்” என்றாள் வேகா.

“அது என்ன கதை மிஸ்டர் கத்?” என்று கேட்டான் யோக்.

“சொல்கிறேன். நீங்கள் எங்களுக்கு அடைக்கலம் அளிப்பதாக வாக்குறுதி அளிக்க வேண்டும்.”

“உனக்கு அநியாயத்திற்குத் தயக்கம். வந்தது வந்து விட்டோம். சொன்னால்தானே அவர் முடிவெடுக்க முடியும். நானே சொல்லிவிடுகிறேன்” என்றாள் சுவா. தலையசைத்து அமைதியாக நின்றான் கத்.

“உங்கள் கிரகத்துக் கணவர்கள் மனைவியின் பேச்சை எப்படிப் பதவிசாகக் கேட்டுக் கொள்கிறார்கள். இவரிடம் ஒரு வேலை ஆவதில்லை. ஒத்தாசைக்கு எந்திரன் ஒருவனைத் தந்திருக்கிறார். அதுவும் இவரைப்போலவே முணுமுணுப்பு. அதைப் பெண் வெர்ஷனாக மாற்ற வேண்டும்” என்றாள் வேகா.

“முதலில் அவர்களது கதையைக் கேட்போம். பிறகு அவர்களிடம் உனது குறைகளை வேண்டிய மட்டும் புலம்பிக்கொள்.”

“ஐயா! நாங்கள் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சக ஊழியர்கள். என் தந்தைதான் தலைமை விஞ்ஞானி. எந்திரங்களுடன்தான் பணி என்றாலும் மனம் என்ன உலோகமா? இவனிடம் காதல் வயப்பட்டுவிட்டேன். ஆனால் எங்கள் திருமணத்திற்கு எதிரியாக நிற்கப்போவது என் தந்தை. அதில் எங்களுக்கு ஐயமில்லை.”

“புரியவில்லை. அவர் ஏன் எதிரியாக வேண்டும்? நீங்கள் இணைவதில் அவருக்கு என்ன பிரச்னை?” கண்களைச் சுருக்கிக் கேட்டான் யோக்.

“நாங்கள் இருவரும் இருவேறு சாதியினர். எங்களது பெயர்களில் உள்ள பின்னொட்டுக்கூட அதன் குறியீடுதான்” என்றான் கத்-பிசி08.

“சாதியா… அது என்ன யோக்?”

“பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு என்று சொல்லலாம். நாம் அதை ஒழித்துப் பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. அகராதியில் இருந்தே அவ்வார்த்தையை அழித்துவிட்டோம்” என்றவன் அவர்களிடம் திரும்பி, “நீங்கள் கதை விடுகிறீர்களா? இந்த அண்டத்தில் இன்னும் அப்படி ஒரு கிரகமா? ஏலியன்களைவிட எனக்கு இது அதிக வியப்பளிக்கிறது.”

கத் பதில் அளித்தான். “நாங்கள் சொல்வது சத்தியம். அப்பட்ட உண்மை. அரசாங்கம் யாசகம் இட்ட ஒதுக்கீட்டில் கல்வி கற்று, பணியில் விற்பன்னன் ஆகிவிட்டேன். ஆனால் என் பெயரின் பின்னொட்டு என்னை விடாமல் துரத்தும் இழி அடையாளம். எங்கள் இருவரையும் அது இணைய விடாது. துரத்தும். கொல்லும்.”

“என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தோம். எங்களது கிரகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் விண்வெளி நிலையத்திற்கு ஆறுமாத காலப் பணியில் எங்களை ஒன்றாக அனுப்ப முடிவானது. அப்பொழுதுதான் இவன் இப்படி ஒரு கிரகம் இருக்கிறது. அதில் உயிர் நடமாட்டம் தென்படுகிறது. அடைக்கலம் கேட்டுப் பார்ப்போம் என்று அழைத்து வந்துவிட்டான்” என்றாள் சுவா-எஃப்சி01.

வாய் பிளந்து நின்றான் யோக். “இண்டர் கேலக்ஸி வலையில் உள்ள டிஜிட்டல் காப்பகத்தில் பண்டைய காலத் திரைப்படம் ஒன்றைப் பார்த்திருக்கிறேன். அதில் உள்ள கதையைப் போல் இருக்கிறது இது.”

“எங்களுக்கு அடைக்கலம் வேண்டும். நாங்கள் இங்கு எங்காவது ஓர் ஓரத்தில் குடில் அமைத்து உங்களுக்குத் தொந்தரவு இன்றிப் பிழைத்துக் கொள்கிறோம்” என்றான் கத்.

“முடியாது” என்றான் யோக்.

“என்ன இது, இப்படி இரக்கமில்லாமல் யோக்?” என்றாள் வேகா.

“உங்களுக்கு அது சாத்தியமில்லை என்கிறேன். முதலில் உங்களால் இங்கு நிலையாய் நிற்கவே முடியவில்லை. ஆயுளுக்கும் இப்படி மிதந்தபடி குடும்பம் நடத்துவது வசதிப்படாது. பாருங்கள், உங்களது அங்கங்களுக்கும் எங்களது அங்கங்களுக்கும் ஆறு வித்தியாசங்களையாவது என்னால் சொல்ல முடிகிறது. அதனால் விண்கல உடையிலிருந்து நீங்கள் வெளியில் வந்தால் இங்குள்ள காற்று உங்களது சுவாசத்திற்கு உகந்ததாக இருக்கும் என்ற உத்தரவாதமில்லை. உங்களது கலத்தில் உணவு தீர்ந்தபின் என்ன உண்ணப்போகிறீர்கள்?”

“அவர்களை அச்சுறுத்துகிறாய்” என்றாள் வேகா.

“இல்லை. யதார்த்தத்தைச் சொல்கிறேன். ஏலியன் கிரகத்தைச் சுற்றிப் பார்க்கலாம். படமெடுத்துக்கொள்ளலாம். நாம் இணைந்து வாழ்வதற்கான சாத்தியத்தை உருவாக்குவது இன்னும் பல நூற்றாண்டுக் கால ஆராய்ச்சி.”

“எப்படியாவது உதவுங்கள். நாங்கள் திசை மாறிப் பறந்ததை எங்கள் கிரகத்தில் கண்டுபிடித்திருப்பார்கள். எங்களது விவகாரமும் வெளிச்சமாகியிருக்கும். நாங்கள் திரும்பினால் காலடி பதித்த நொடி சடலமாக்கிவிடுவார்கள்” கண்ணீர் உகுத்தாள் சுவா.

“போகட்டும். மரணத்திலாவது ஒன்றிணைவோம்” அழுதான் கத்.

“இந்த வசனத்தையும் நான் அதில் கேட்டிருக்கிறேன்” என்றான் யோக்.

“ஏதாவது செய். உதவு. இது ராஜ மாதாவின் அரச கட்டளை” என்றாள் வேகா. நம்பமுடியாமல் அவளைப் பார்த்தான் யோக்.

சில நிமிடங்கள் யோசித்துவிட்டு “ஓர் உபாயம் தெரிவிக்கிறேன்” என்றவன், தலைமை நிலையத்திற்குத் தகவல் ஒன்று அனுப்பினான். வெள்ளி நிறத்தில் இரண்டு பட்டைகளை அதிகாரி ஒருவர் கொண்டு வந்தார். சில எண்கள் பதிக்கப்பட்டிருந்தன.

வேகா ஆவலுடன் கேட்டாள், “அவை என்ன?”

“கால எந்திரம்” அவர்களிடம் அவற்றை நீட்டி, “இவற்றில் உள்ள எண்களை உள்ளிட்டு காலத்தின் முன்னும் பின்னும் நீங்கள் பயணிக்க முடியும். உகந்த ஆண்டு ஒன்றைத் தீர்மானியுங்கள். உங்களது விண்கலம் தரையிறங்கியதும் இதைப் பயன்படுத்தி அந்த ஆண்டுக்கு ஓடி, காலத்தில் மறைந்துவிடுங்கள். உங்கள் கிரகத்தில் நீங்கள் நலமாய் நீடுழி வாழ வாழ்த்துகள்!”

“கால எந்திரமா… இந்தப் பட்டையா? நம்பலாமா?”

“நிச்சயமாக. நாங்கள் வெற்றிகரமாகப் பரிசோதித்துவிட்டோம். நீங்கள் நம்பலாம்.”

“இதுதான் உங்கள் உபாயமா?”

“இதுதான் இப்பொழுது என்னாலான உதவி. உங்களை உங்கள் கிரகத்தில் தற்சமயம் காக்க இது உதவும்.”

“ஆத்மார்த்த நன்றி. எங்கள் குழந்தைகளுக்கு பின்னொட்டு இல்லாமல் உங்கள் பெயர்களை இடுவோம்” என்று உணர்ச்சி வசப்பட்டான் கத்.

“விடைபெறுகிறோம்” என்று ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள் சுவா.

அன்றிரவு தூக்கத்தில் திடீரென்று விழித்து, கணவனை உலுக்கினாள் வேகா. “அவர்கள் எந்த கிரகம் என்று விலாசத்தை விசாரிக்க மறந்துவிட்டோமே!”

“வழியனுப்பும்போது விசாரித்துவிட்டேன். பால் வீதியில் பூமி.”

oOo

(ஆனந்த விகடன் ஆகஸ்ட் 10, 2021 இதழில் வெளியான சிறுகதை)

-நூருத்தீன்

ஓவியம்: ஸ்யாம் (நன்றி)


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment