ஓய்வேனா என்றது மழை. நனைந்த கோணியைப் போர்த்திக்கொண்டு தகரங்களுக்குக் கீழே படுத்திருந்தாள் அவள். நேற்று பெய்ய ஆரம்பித்த மழையில் இன்று அவளுக்குக் காய்ச்சலும் இருமலும் முளைத்திருந்தன. என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தான் மகன். ஒன்பது வயதிருக்கும். கிழிந்த டிரவுசரும்
எங்கிருந்தோ பொறுக்கியெடுத்த பாலிதீன் ஷீட் மழை கோட்டும் ஈரம் சொட்டின.
பசித்தது. மழை விட்டிருந்தாலாவது அம்மா தினமும் செல்லும் வீட்டு வேலைக்குச் சென்றிருப்பாள். மிச்சம் மீதி கிடைத்திருக்கும்.
தனக்குப் பசிப்பது அம்மாவுக்கும் பசிக்குமே என்று தோன்றியது. மழையைப் பார்த்தால் ஆகாது. அம்மாவுக்குத் தெரியாமல் எழுந்து நழுவி தெருவில் ஓடினான். பக்கத்துத் தெருமுனையில் ஓட்டல் இருந்தது. வாசலில் இடமும் இருந்தது. பிச்சையெடுக்க அந்த இடுக்கு அவனுக்குப் போதுமானதாயிருந்தது. நின்றிருந்த சிலருடன் சேர்ந்து தானும் கையேந்தினான்.
கண்ணாடியைத் தாண்டி உள்ளே கூட்டம். சன்னலோரம் அமர்ந்திருந்தவனின் மேசையில் ஆவி பறக்க தட்டை வைத்துவிட்டுச் சென்றான் சர்வர். அவன் அறியாத நவீன உணவு. பெயர் என்னவாக் இருக்கும்? வாய் இலேசாகத் திறந்திருக்க, ஆவலுடன் அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
உள்ளிருந்தவன் ஸ்மார்ட்ஃபோனில் அந்த உணவைப் படமெடுத்தான். ஒரு விள்ளல் வாயில் வைத்துக்கொண்டு சிரித்தபடி மற்றொரு கையால் செல்ஃபி. படங்கள் ஃபேஸ்புக்கில் உடனடியாய் பதிவேறி நிமிடங்களில் லைக் மழை பொழிந்துகொண்டிருந்தது.
பக்கத்தில் கையேந்தி நின்றிருந்த கிழவியிடம் சிறுவன் கேட்டான், ‘அது என்னா நாஷ்டா?’
-நூருத்தீன்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License