ஜூலை 2050.
மணி அடிக்கும் சப்தம் கேட்டு விஜே கண் விழித்த போது மணி காலை 4:30. கண்ணைத் திறக்க முடியாமல் தூக்கம் அப்பியிருந்தது. வீட்டின் மைய கம்ப்யூட்டருடன் இணைந்திருந்த அந்த போன் போன்ற வஸ்து, நாலு முறை ஒலித்து விட்டு அழைத்தவருக்குப் பதில் அளிக்கும்முன் தன் தூக்கம் கலைந்து கட்டிலின் பக்கத்திலிருந்த பட்டனைத் தட்டினான்.
“ஹலோ விஜே ஹியர்” என்று அவன் சொன்னதை சீலிங்கில் இருந்த மைக்ரோஃபோன் துல்லியமாய் மறுமுனைக்கு அனுப்ப அதற்குள் அந்த அறையின் சுவரில் வரையப்பட்டிருந்த கட்டம் திரையாய் உருமாறியது. அதில் அவன் நண்பன் ஜி.
“ஹப்பா, எழுந்திட்டியா. எங்கே பேச முடியாம போயிடுமோன்னு நினைச்சேன். நான் டில்லியிலிருந்து பேசறேன். ஆறு மணி ப்ளைட்ல பெங்களூரு போறேன். மதியம் இரண்டு மணிக்கு ஒரு முக்கியமான மீட்டிங். சாயந்தரம் ஆறு மணிக்கு சென்னை வர்ரேன்.”
“சந்தோஷம். எத்தனை நாள் விஜயம்?”
“முடிவு பண்ணலே. உன் மனைவி கன்ஸீவ் ஆகியிருக்கிறதா, நாலஞ்சு மாசத்துக்கு முன்னால போன் பண்ணும்போது சொன்னியே, டெலிவிரி ஆயிடுச்சா?”
“இன்னும் ஒரு வாரத்துல ஆயிடும். அவ திருச்சியிலே இருக்கா.”
“நல்லது. நான் ஈவினிங் உன்னை மீட் பண்றேன். நிறைய பேசணும். பை.” அவசரமாகத் தகவல் தொடர்பு முடிந்த நொடி, திரை சுவரானது. மைக்ரோஃபோன் உறக்க நிலைக்கு மாறிக்கொண்டது.
ஜியிடம் தெரிந்த பதட்டத்தை விஜே கவனிக்கத் தவறவில்லை. அவனிடம் பேசி நாலைந்து மாதம் ஆகியிருக்கும். திடீரென்று இன்று போன் செய்து, மனைவியைப் பற்றி விசாரிக்கிறான், மாலை சென்னை வருகிறேன் என்கிறான். என்ன அவசரம்? புரியவில்லை. ஆனால் தூக்கம் முற்றிலுமாய்க் கலைந்து போய், நெடுநாள் கழித்து நண்பனை நேரில் சந்திக்கப் போகும் மகிழ்வுமட்டும் மனதிற்குள் இலேசாய் எட்டிப்பார்த்தது.
இருவரும் ஒன்றாய்ப் படித்து வளர்ந்த இணைபிரியா நண்பர்கள். ஏறக்குறைய ஒரே வயது. தந்தையின் மறைவுக்குப் பிறகு அவரது நிறுவனத்தை முழு அளவில் கவனிக்க இறங்கி, சென்னையிலேயே விஜே ஸ்திரமாகிவிட, ஜி டில்லியிலுள்ள ஓர் இன்டர்நேஷனல் கெமிக்கல் கம்பெனியில் இணைந்து, முன்னேறி, இன்று டைரக்டர் ஜி. டில்லியிலேயே திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகி விட்டிருந்தான். விஜேவுக்குப் பல வருடங்கள் குழந்தையின்றி, பல மருத்துவத்திற்குப் பின் அவன் அனைவி கருவுற, அரசாங்கம் நிர்ணியித்திருந்த ஒரு குடும்பத்திற்குண்டான ஒரே வாரிசு உருவானது.
அடுத்த அரை மணி நேரம் புரண்டு படுத்தும் தூக்கம் பிடிக்காமல், எழுந்து பாத்ரூமில் நுழைந்தான். டைல்ஸ் பதித்து, நறுமணம் வீசும் பளிச் டாய்லெட். முடித்துவிட்டு வெளியில் வர, பசித்தது. கிச்சனில் நுழைந்தான். தம் புராதன வடிவமைப்பு மாறிப்போய், ஸ்டீல் பளபளப்புடன் அடக்கமாய் அமைந்திருந்தன குளிர்சாதனப் பெட்டகம், அடுப்பு, பாத்திரம் துலக்கும் இயந்திரம். அனைத்திலும் சிறுசிறு திரைகள், சில பொத்தான்கள். அறையின் மையமாய் இருந்த சதுரத் திரையொன்றில் விரல்களால் தொட “மெனு” உயிர்பெற்றது. அது கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல, டோஸ்ட்டர் போன்ற கருவியிலிருந்து சுடச்சுட இட்லியும், சட்னியும் அருகிலிருந்த மற்றொரு கருவியிருந்து தேநீரும் நிரம்பி வந்தன.
எடுத்துக்கொண்டு, ஹாலின் ஓரத்திற்கு வந்து சன்னலின் வினைல் திரையை விலக்க, நாற்பத்தைந்து அடுக்கிற்குக் கீழே, கார்களும் பஸ்களும் குட்டி குட்டியாய் விரைந்து கொண்டிருந்தன. சாலைகளில் பிரகாச விளக்கொளி. திரும்பி நின்று ‘டி.வி… வெதர் சேனல்’ என்று அவன் பேசியதும், சுவரில் பதிந்திருந்த திரை உயிர்பெற்று வானிலை அறிக்கை தெரிந்தது. கண்ணுக்குத் தெரியாத ஸ்பீக்கர்களிலிருந்து மிகச் சன்னமாய் உறுத்தாமல் பரவிக்கொண்டிருந்தது டிவியின் ஆடியோ.
வானுயர்ந்த கட்டிடங்களுடன் சென்னை பிரமாண்டமாகியிருக்க, பெயர் மாறாத இராயப்பேட்டையில் கோபலபுரம் – பீட்டர்ஸ் ரோடு சந்திப்பில் அமைந்திருந்தது அவன் இருந்த அந்த காந்தி டவர்ஸ். ஒவ்வொரு சாலையிலும் பலப்பல டவர்கள். ஒவ்வொரு டவருக்குள்ளும் குடியிருப்பு, வியாபாரத் தளங்கள், நீச்சல் குளம், உடற்பயிற்சி நிலையம், செயற்கை விளையாட்டு மைதானம் என ஒவ்வொன்றும் சிறு சிறு நகரங்கள். அதையெல்லாம்விட பெரும் ஆச்சரியம், ஒவ்வொரு கட்டிடத்திலும் அனைத்து குழாய்களிலும் 24 மணி நேரமும் சுத்தமான நீர்!
காலையாகாரம் முடித்து, தயாராகி, லிப்டில் அடித்தளத்தை அடைந்தான் விஜே. அரசாங்க பஸ்களில், சப்தமின்றி ஏஸி இயங்க, மாணவர்களையும், அலுவலர்களையும் அழைத்துச் செல்ல ‘புஸ்’ என்று சிறு பெருமூச்சுடன் அவை நின்றுகொண்டிருந்தன. புகை கக்காத மின்சார பஸ்கள். பார்க்கிங்கில் இருந்த தன்னுடைய மின்சார காரில் ஏறி சாலையை அடைந்தான். மாடு, ஆட்டோ, சைக்கிள் இல்லாத துப்புரவான சாலையில் தூசு, புகை, இரைச்சலில்லாமல் வாகனங்கள் வேகமாய் வழுக்கி விரைந்துக் கொண்டிருந்தன.
ஆயிரம் விளக்கில் திரும்பி கீழே நகரும் சிக்னல் டிராபிக்கை தவிர்த்து, அண்ணாசாலையின் மேலே சிக்னலின்றி அமைக்கப்பட்ட எக்ஸ்பிரஸ்வேயில் கலக்க, இரண்டு நிமிடங்களில் 120 கி.மீ, வேகத்தில் நான்காவது டிராக்கில் வாகனம் மிதந்தது. நெருக்கமான உயர்ந்த கட்டிடங்களுக்கு இடையே நூறாண்டுக்கும் முந்தைய 14 அடுக்கு LIC கட்டிடம் மட்டும் அபத்தமாய் நின்றுகொண்டிருந்தது. அதை அரசாங்கம் நினைவுச் சின்னமாக்கியிருந்தது.
சிங்காரச் சென்னை; ஹைடெக் கிராமங்கள்; பன்மடங்கு ஹைடெக்கான நகரங்கள் என்று புதுப்பொலிவுடன் முன்னேறும் நாடுகளின் முதல் வரிசையில் இடம் பிடித்திருந்தது இந்தியா. அடுத்த பத்தாண்டுகளில் வல்லரசு நாடுகளின் வரிசையில் இந்தியாவை அமர்த்தியே தீருவோம் என்று ஆளும் ஜனநாயக கட்சி உறுதி அளித்திருந்தது. சுபிட்சம் பெருகி, வளமான, உன்னதமான இந்தியாவில் இரண்டே இரண்டு கட்சிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு – ஆளும் ஜனநாயக கட்சி, எதிர் கட்சியாக குடியரசுக் கட்சி.
அண்ணாநகருக்குப் பிரியும் கிளை சாலையில் வெளிவந்து ஆபீஸ் கட்டிடத்தை அடைந்தான் விஜே. தனது கட்டை விரலை கதவுக்குப் பக்கத்திலிருந்த ரீடரில் ஒத்த, அது ஆரூடம் பார்த்துவிட்டு கதவைத் திறந்தது. இரைச்சலில்லாமல், அரட்டையில்லாமல், சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது அலுவலகம். வேலையில் மூழ்கும் நேரம், திருச்சியிலிருந்து அழைப்பு என்றது கைப்பேசி கருவி. மனைவி பேசினாள். “சனிக்கிழமை ஆயிடும்னு சொல்றாங்க விஜே. வெள்ளிக்கிழமை அட்மிட் ஆகச் சொல்றாங்க, வெள்ளிக்கிழமை காலைல வர்றீங்களா?”
டெலிவரிக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. “நான் சனிக்கிழமை காலை வந்துடறேனே, இங்க கொஞ்சம்…”
அவள் மறித்தாள். “பிஸினஸ் தானே?. அது வெய்ட் பண்ணும். எனக்கு நீ பக்கத்துல இருக்கணும். முதல் பிரசவம், அதுவும் ஒரே பிரசவம். நல்லபடியா ஆகணுமே, நீ பக்கத்துல இருந்தாதான் எனக்குத் தெம்பு. புரிஞ்சுக்கோ விஜே.”
யோசித்தான். பிறகு “இன்னிக்கு சாயந்தரம் ஜி வரான். காலையில் என்னிடம் பேசினான். ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னான். என்னன்னு தெரியலே. அவன் எத்தனை நாள் இருப்பான்னு தெரியலே. ஐ வில் டூ ஒன் திங். அவன் வந்ததும், நான் நாளைக்கு போன் பண்றேனே.”
சிணுங்கினாள். “நீ சொல்லு. அவன் புரிஞ்சுப்பான். ஐ வில் வெயிட் ஃபார் யூ. பை தி பை, ஜியை நான் விசாரிச்சேன்னு சொல்லு.”
ஆனால் மறுநாள் மாலையே திருச்சிக்கு பயணிக்கும்படி இருக்கும் என்பது அவனுக்குத் தெரியவில்லை.
oOo
மாலை ஐந்து மணிக்கு ஜி அழைத்தான். “நான் கிளம்பிட்டேன். கார்லேருந்து பேசறேன். எட்டு மணிக்கெல்லாம் வந்துடுவேன்,” என்றான். சொன்னதைப்போல் மூன்று மணி நேரத்தில் அவனது கார் சென்னை காந்தி டவர்ஸை அடைந்தது. நாடெங்கும் நெடுஞ்சாலைகள் மகாநதியாய்ப் பரவி, இரு பிரிவுகளிலும் ஐந்து லேன்களுடன் அமைக்கப்பட்டு, சிக்னல் இல்லாத, குண்டு குழிகளற்ற சாலைகள் பயணத்தை மிகவும் எளிதாக்கி விரைவுபடுத்தியிருந்தன.
காபியை உறிஞ்சிக் கொண்டே ஜி கேட்ட முதல் கேள்வி, “எப்ப உன் மனைவிக்கு டெலிவரி?”
“காலைல தான் பேசினேன், சனிக்கிழமையாம். வெள்ளிக்கிழமை அட்மிட் ஆகச் சொல்லியிருக்காங்க.”
“தேங்க் காட், இன்னிக்கு செவ்வாய்க்கிழமை. அனேகமா நாம நாளைக்கு திருச்சிக்குப் போறோம், நீ ஒத்துக் கொண்டால்.”
“என்ன விஷயம், புரியும்படியா சொல்லேன், எதுக்கு அவசரமா நாளைக்கே திருச்சி?”
“சொல்றேன் விஜே. பெரிய விஷயம், நிதானமா பேசணும், அதுக்கு முன்னாலே, நல்லா சாப்பிடணும், செம பசி.”
சென்னையின் இரவு வெளிச்சமாய் இருந்தது.
பாரதி சாலை வழியே செல்ல, ஜாம்பஜார் மார்க்கெட், ஜாம்பஜார் டவர்ஸாக இருபத்தைந்து மாடி உயரத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. முழுவதும் ஏஸியுடன், வழுக்கும் பளிச் தரையுடன், ஈ மொய்க்காத, நாற்றமில்லாத ஜாம்பஜார். பிரஸிடன்ஸி காலேஜ் அருகில், பீச் ரோடில் அமைந்திருந்த, புஹாரீஸ் அடைந்தார்கள்.
நீள உயர்ந்த தூண் மேல் கூடையைக் கவிழ்த்து வைத்தது போல், புஹாரீஸ் அமைந்திருந்தது. முழுவதும் கண்ணாடி; சுழலும் உணவகம். தூணுக்குள்ளிருந்த லிப்டில் ஏறி, ரெஸ்டாரெண்ட்டை அடைய, சிப்பந்தி பணிவுடன் அழைத்துச் சென்றான். கீழே தூரத்தில் விளக்கொளியில் மெரீனாவும், உல்லாசமாய் மனிதர்களும் தெரிய, கடல் இருட்டாய் இருந்தது. உணவுக்கான ஆர்டரைப் பெற்றுக்கொண்டு சிப்பந்தி நகர, ‘இப்போ சொல்’ என்பது போல் விஜே ஏறிட்டான்.
“உனக்கு இந்த இந்தியா பிடிச்சிருக்கா?”
சிரித்தான். “வொய் நாட்? ரொம்ப பிடிச்சிருக்கு. வந்தே மாதரம், ஜெய் ஹிந்த்.”
ஜி தனது முகத்தில் எந்தப் பாவமும் இல்லாமல், “நீ இந்த அரசாங்கத்தைப் பத்தி என்ன நினைக்கிறே?”
“இட்ஸ் ஜஸ்ட் ஃபைன். குழப்பறியே, கம் அவுட் ஜி.”
“நம்ம முன்னேற்றம், ஆளப்படும் விதம், இதப்பற்றி?”
“நீ என்ன கேட்கிறேன்னு தெரியலே. பட் இட்ஸ் ஸில்லி. நாம எப்படி இருந்தோம் தெரியுமா? நேத்து பழைய தமிழ் படம் ஒன்னு பார்த்தேன். ஐம்பது வருஷத்துக்கு முந்தைய படம் – அதுவும் சேரியை மையமா வெச்சு. அதோ எதிர் டேபிள்ல ஒரு பையன் உட்கார்ந்திருக்கானே அவன் கிட்டே சேரின்னா என்னன்னு கேளேன். முழிப்பான். நாம எவ்வளவு சாதிச்சிருக்கோம் தெரியுமா? ஜஸ்ட் இந்த முப்பது வருஷமா, இந்த ஒரே கட்சி ஆளற இந்த முப்பது வருஷமா, எவ்வளவு தூரம் வந்திருக்கோம் தெரியுமா? அடுத்த பத்து வருஷத்துலே நாமளும் ஒரு வல்லரசு நாடு. தே ஆர் ஸிம்ப்ளி டூயிங் கிரேட். மக்களை மதிச்சு மக்களுக்காக நடத்தப்படுது இந்த அரசாங்கம்.”
“நீ சொல்றது சரி. முப்பது வருஷத்துக்கு முந்தி அமெரிக்காவில் கிடைச்ச அத்தனை சொகுசும், வசதியும்… அதெல்லாம் அப்ப கனவு, இப்ப நமக்கு சாத்தியமாகிவிட்டது.“
“இந்த நூற்றாண்டு துவங்கும்போது நம்ம நாடு எப்படி இருந்தது? பரிதாபகரமான நிலையில். அப்பல்லாம் அஞ்சு வருஷத்துல மூன்று முறை அடிச்சுகிட்டு தேர்தல். ஒவ்வொரு அரசாங்கமும் புரிந்த ஊழல், எல்லாரையும் கோவணம் கட்டற அளவுக்குத் தள்ளிக்கிட்டு போனப்ப யார் கிட்டேயாவது 2050-ல இப்ப நாம இருக்கிற மாதிரி யாராவது கதை எழுதியிருந்தா, நக்கலா சிரிச்சிருப்பாங்க. பட், இப்ப அதான் உண்மை. யாருமே எதிர்பார்க்காத ஒரு புரட்சி! மற்றுமொரு விடுதலைப் போராட்டம் போல், அஞ்சு வருஷத்துக்கு நாடு படாத பாடு பட வேண்டியிருந்தது. அதனால் என்ன? 2018-லேருந்து இந்த அரசாங்கம் வந்து, திருப்பி போட்டாற் போல எல்லாத்தையும் மாத்திட்டாங்க.”
ஜி அமைதியாக கேட்டுக் கொண்டிருக்க, “இப்பவும் அமெரிக்கா மத்த சில ஐரோப்பிய நாடுகள்ல இருக்கிற அளவுக்கு நாம இல்ல. பட், இடைவெளி எவ்வளவு? ஜஸ்ட் பத்து வருஷ இடைவெளி. சாதிச்சிடுவோம், இதே நிலையில இருந்தா சாதிச்சிடுவோம்.”
“இதுக்கெல்லாம், நாம ஒரு விலை கொடுத்திருக்கோம், விஜே.”
“நத்திங். எல்லோரும் உழைக்கிறாம் – சின்சியரா. அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாங்க, நாம வளர ஈசியா இருந்துச்சு.”
“அதுல எந்த அபிப்ராய பேதமும் இல்லே. விஷயம் வேறு. புரட்சி நடத்தி ஆட்சிக்கு வந்தவங்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையா இருந்தது என்ன தெரியுமா? மக்கள் தொகை. பாப்புலேஷன்! கட்டுப்படுத்த முடியலே. மக்கள் ஆசைப்பட்டாங்க – ஆண் குழந்தை இருந்தா ஒரு பொண்ணு வேணும். பெண் குழந்தை இருந்தா ஒரே ஒரு ஆண் வேணும். அந்தக் காலத்திலே அவங்க வெச்சிருந்த ஒரு குழந்தை ஒரு வாரிசு, வெறும் விளம்பரம். அது ஒரு பெரிய சேலஞ்ச் ஆயிடுச்சு.”
“அப்ப மக்கள் கிட்டே கல்வியறிவும் பத்தலியே. இப்பக் கல்வியறிவு நூறு சதம். குடும்பக் கட்டுப்பாடு திட்டமும் சக்ஸஸ். லேட்டஸ்ட் புள்ளி விபரம், 85 சதவிகித இந்திய குடும்பத்திலே இப்ப ஒரு குழந்தை தான். விரைவில் அது நூறு சதம் ஆகிடும்.”
“நாம கொடுத்த விலை அதுதான் விஜே. நம்ம உறவு! நம்ம இரத்த சொந்தம். இன்னும் பத்து வருஷத்துலே தமிழ்லே உறவு அறிவிக்கிற பல சொற்கள் வழக்கொழிஞ்சு, அப்பா, அம்மா, மகன், மகள், தாத்தா, பாட்டிங்கிற இந்த ஆறு சொற்கள் மட்டுந்தான் பாக்கியிருக்கப் போவுது. இதோட சேர்ந்து அழியப்போறது மனிதன் தோன்றிய நாள் முதலா இருந்து வந்த பாசம். இரண்டே பாசம் மட்டும் தான் மிச்சமிருக்கும். பெற்றோர் பாசம், பிள்ளைப் பாசம். எவ்ரிதிங்க் எல்ஸ் வில் பி டெட். நோ அண்ணன், தம்பி, அக்கா, தங்கை பிஸினஸ். சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, அண்ணி, மன்னின்னு யாரும் கிடையாது.”
“அப்படி ஆசைப்படறவங்க இன்னும் ஒன்று பெத்துக்கட்டும். ஒன்லி திங்க், வசதி நலிந்துவிடும். ஒரு குழந்தைக்கு காலேஜ் வரை படிப்பு இலவசம். ஒரு குழந்தைக்கு அதிகமா இருந்தா, முதல் குழந்தை படிப்பு செலவுலே அம்பது சதம், அடுத்த குழந்தை செலவு முழுவதும் கொடுக்கணும். எஜுகேஷன் செலவு எவ்வளவு தெரியுமா? ஒரு குழந்தைக்கு, சராசரி தனிநபர் வருமானத்துலே பாதி. யோசிச்சுப் பாரு. ஸோ, எவ்ரிபடி இஸ் வித் ஒன் அன்ட் ஒன்லி சைல்ட்.”
“அதான் விஜே. நீ, நான், ஏன் எல்லோரும் அப்படிதான் நினைச்சுட்டு இருக்கோம். குடும்பக் கட்டுப்பாடு நம் ஒத்துழைப்புலே வெற்றியடையலே. நாம் எல்லாம் வற்புறுத்தப்பட்டு – நம்முடைய ஒப்புதல் இல்லாமல் வற்புறுத்தப்பட்டு – அது வெற்றியடைஞ்சுட்டு இருக்கு.”
“நீ என்ன சொல்றே?”
“அதுக்குத்தான் நான் உன்னை நேர்ல பார்க்க வந்திருக்கேன். சொல்லணும். என் மண்டை வெடிக்கிற ஒரு விஷயத்தைச் சொல்லணும். நாம் ஒரு மாற்றத்தைத் தோற்றுவிக்கப் போகிற விஷயம், உறவுகனை நிலை நிறுத்தப் போகிற விஷயம். அதை இங்க பேசறது நல்லதில்லே. ப்ளாட்டிற்குப் போகலாம்.”
அழைத்துச் சென்று பழைய கதையொன்றைச் சொன்னான்.
oOo
பிப்ரவரி 2019
டாக்டர் அதுல் பிரதமரைச் சந்திக்க அழைப்பு வந்தது. அதுல் தமிழகத்தைச் சேர்ந்த மிக புத்திசாலியான டாக்டர். மூலிகை மருந்தில் அதிக கவனம் செலுத்தி, சிறியதாய் ஓரிரு புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளில் வெற்றியும் பெற்று, அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தவர். அவரைப் பிரதமர் சந்திக்க அழைப்பு வந்து டெல்லி விரைந்திருந்தார்.
“வெல்கம் டாக்டர் அதுல். சில நாட்களுக்குமுன் நீங்க உள்நாட்டுத் துறை அமைச்சரை ஒரு விழாவில் சந்திச்சபோது தெரிவிச்ச ஒரு விஷயம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் கேள்விபட்டது உண்மை என்றால், அது நம்ம நாட்டு தலைவிதியை மாத்தப் போகிற ஒரு மாபெரும் விஷயம். உண்மைதானா?”
“நிச்சயமா. அது தற்செயலா நான் கண்டுபிடிச்ச ஒரு மூலிகை மருந்து. ஓர் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அதை செலுத்திவிட்டால், அதன் பிறகு அவர்கள் ஒரு குழந்தையை உருவாக்கிற சக்தியை நிரந்தரமா இழந்து விடுவார்கள். பட், இது நம்ம நாட்டுக்கு எப்படி…”
“சொல்றேன் டாக்டர். ஒரு பெண் கர்ப்பமடைந்த பிறகு இதை செலுத்தினால்?“
“அந்தக் கருவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லே. முழுவதும் ஆரோக்கியமா அந்தக் குழந்தை பிறக்கும். ஆனால், அதற்குப் பிறகு அவள் மீண்டும் தாய் ஆகக் கூடிய வாய்ப்பை இழந்துவிடுவாள்.”
“இப்ப உங்க கேள்விக்கு வருவோம். மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருந்த நம்ம நாட்டை ஒரு பெரிய சாதனையா மாற்றி, மெதுவா முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு போய்ட்டு இருக்கோம். தரமான, முழுவதும் முன்னேற்றமடைந்த இந்தியா நமது இலட்சியம். நம்ம நாட்டுல புரையோடிக் கிடக்கிற அத்தனையையும் மாற்ற வேண்டியிருக்கு. ஆனா, முக்கியமான பிரச்சினை மக்கள் தொகை. நம்முடைய பல எதிர்காலத் திட்டங்களுக்கு முக்கிய இடையூறா இது நம்மை பயமுறுத்துது.”
“ஸோ?”
திகிலுடன் வந்தக் கேள்வியை பிரதமர் கையமர்த்தி, “நோ, நீங்க பயப்படற மாதிரி நான் நினைக்கலே. இப்ப ஒரு குடும்பம் ஒரு வாரிசுன்னு தீவிரமா பிரச்சாரம் பண்ணினாலும், நம்மால்
எந்தச் சட்டம் போட்டும் அதை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் நிர்பந்தப்படுத்தலாம். அதை, உங்க மருந்து மூலமா நிர்பந்தப்படுத்தப் போறோம்.
எய்ட்ஸ் அளவிற்கு மோசமான ஹெப்படைட்டிஸ் நோயைத் தடுப்பூசி மூலமா கட்டுப்படுத்த முடியும் என்று எல்லா குழந்தைக்கும் அதை அளிக்க ஆரம்பித்தோம். பிரசவமாகும்முன் அதை அந்தத் தாய்க்கே போட்டுடலாம், குழந்தைக்குத் தேவையில்லேன்னு சில டாக்டர்கள் கண்டுபிடிச்சு நிரூபிக்க, இப்ப அதைதான் நாம செஞ்சுட்டு இருக்கோம். உங்களுக்குத் தெரியும், தரக்கட்டுப்பாடு காரணமா எல்லா தடுப்பு மருந்துகளும் அரசாங்க நிறுவனம்தான் தயாரித்து நாடெங்கும் வினியோகிக்குது. எங்களுடைய திட்டம் – ஹெப்படைடிஸ் தடுப்பு மருந்தோட சேர்த்து இந்த மருந்தையும் ஒரே மருந்தா பிரசவமாகும் பெண்ணுக்குச் செலுத்திடணும். அதன் பிறகு அந்தத் தாயை வேறு குழந்தை பெறாமல் தடுத்திடலாம்.
“டாக்டர் அதுல். இந்த நாட்டின் அபார வளர்ச்சிக்குத் துணையிருக்கப் போகும் உங்க கண்டுபிடிப்பு துரதிர்ஷ்டவசமா ஒரு மடிஞ்சு போன ரகசியமா மாறணும். ராணுவ ரகசியத்துக்கு இணையான ஒரு விஷயம் இது. இந்தத் திட்டத்துக்கு மக்கள் ஒத்துப்பாங்க என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆனால், அவங்களோட சிறந்த எதிர்காலத்துக்கான இந்தத் திட்டம், அவங்க மேலே அவங்க அறியாமல் நாம் நிச்சயமா திணிக்கப் போறோம். நல்லதுக்கான சில விஷயத்தை வற்புறுத்தி நடைபெற வைப்பது எதுவும் தப்பில்லை என்பது இந்த அரசாங்கத்தின் கருத்து. பல விஷயங்களை அதைப் போல வற்புறுத்திதான் நாம முன்னேறிட்டு இருக்கோம். உங்களைக் கௌரவப்படுத்த எங்களுடைய மந்திரிசபை காத்திருக்கு.“
அடுத்த இரு வாரங்களில், டாக்டர் அதுல், மதிப்பிற்குரிய மத்திய அமைச்சர் டாக்டர் அதுல் ஆகிப்போனார். தனது கண்டுபிடிப்புக்கு அவர் உட்படுத்திய முதல் இந்தியப் பிரஜை அவரின் மனைவி. அவரது கண்டுபிடிப்பு யாருமறியா ரகசியமாக, அன்றிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
ஏப்ரல் 2021
டாக்டர் அதுலுக்கு இரண்டு வருடங்களில் அது நடந்தது. அவரது ஒரே மகன், இரண்டு வயது மகன், விளையாடிக் கொண்டிருந்தவன் படியிலிருந்து தவறி விழ, மண்டையில் படுகாயம். அதிக இரத்தம் இழந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் இறந்து போனான். இயற்கை இலேசாய் தனது ஆளுமையை நிரூபித்த நேரம் அது. கதறியழும் மனைவியைச் சமாளிக்க இயலாதவராகி கலங்கி நின்றார் டாக்டர் அதுல்.
சுள்ளென்று அந்த உண்மை அவரைச் சுட்டது. இனி தனது குடும்பத்திற்கு வாரிசு இருக்கப் போவதில்லை என்ற உண்மை அவரது நெஞ்சை வலிக்க வைத்தது. துக்கம் நிரந்தரமாய் நிலைத்துவிடும் என்ற நிலை உண்டான பின், பிரதமரைச் சந்தித்தார், பேசினார். இந்தத் திட்டத்தின் பாதகத்தை உணர்த்தினார். நிதானமாய்க் கேட்டுக்கொண்டார் பிரதமர். ஆனால் அந்தக் கோரிக்கை மறு சிந்தனையின்றி ஒதுக்கித் தள்ளப்பட்டது; முற்றிலுமாய் நிராகரிக்கப்பட்டது. அதைவிட முக்கியமாய், அரசாங்க ரகசியம் அவர் மூலமாய் எந்த நிலையிலும் வெளிவரக்கூடாது என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மனம் வெறுத்துப்போய், தனது அமைச்சர் பதவியை அதுல் ராஜினாமா செய்தார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் அவரைச் சுற்றி ரகசியக் கண்காணிப்பு வளையம் விழுந்தது. அவரது ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு தொடர்பும் மிக நெருக்கமாய்க் கண்காணிக்கப்பட்டன. பொது வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி வாழ முடிவெடுத்து ஒதுங்கிய போதும் அது தொடர்ந்தது. அரசாங்கக் கழுகுப் பார்வை தொடர்ந்து வர, ஒரு கைதி போல் உணர ஆரம்பித்தார் டாக்டர் அதுல்.
துடிப்புடன் இருக்கிறார்கள், சிறப்பாய்ச் செயல்படுகிறார்கள். அவர்களின் குறிக்கோளில், இலட்சியத்தில் மாபெரும் உன்னதம் நிறைந்திருக்கிறது. ஆனால், இலட்சியத்தை அடைய எந்த மூர்க்கத்திற்கும் தயாராய், எவ்விதக் கருணைக்கும் இடமின்றி இருக்கும் இவர்களிடம் சிக்கிய தனது மருந்தையும் அதிலிருந்து மக்களையும் காப்பது எப்படி? டாக்டர் அதுல் யோசிக்க ஆரம்பித்தார். மனதில் ஒரு கனல் உருவாகி எரிய ஆரம்பித்தது. ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என்ற கனல்.
ஜூன் 2050
அது அடங்க ஏறக்குறைய முப்பது வருடங்களாயின. அவரது மருந்திற்கு அவரே மாற்று கண்டுபிடிக்கும் முயற்சி வெற்றியடைந்தபோது, யுரேகா என்று கத்தாமல், வெற்றி வெற்றி என்று குதிக்காமல், விண்ணோக்கி தலையுயர்த்தி, கண்களை மூடிக்கொள்ள, இரு விழிகளிலிருந்தும் மெலிதாய் நீர்க்கோடு.
அடுத்து நம்பகமான வெளியுலகத் தொடர்பு தேவை என்ற நிலையில்தான், அவருக்கு ஜியின் அறிமுகம் ஏற்பட்டது. அது ஒரு தெய்வாதீனம். ஜியின் கெமிக்கல் நிறுவனம் தங்களது பொன் விழா ஆண்டை கொண்டாடும் வகையில் டில்லியில் ஒரு கான்பிரன்ஸ் நடத்த, ‘மூலிகை மருந்தின் சக்திகள் – அது எக்காலத்திற்கும் உகந்ததா?’ எனும் தலைப்பில் பேச டாக்டர் அதுல் அழைக்கப்பட்டார். அப்பொழுது ஜியுடன் அவருக்கு ஒரு தொடர்பு உருவாக, அதைச் சரியான முறையில் அவர் பற்றிக்கொண்டார்.
தனது சொற்பொழிவு தகவல்களுடன், ஜியின் நேரடிப் பார்வைக்கு நடந்தவை அனைத்தையும் விவரிக்கும் குறிப்பை இணைத்து அனுப்பினார் டாக்டர் அதுல். குறிப்பிட்ட நாளன்று அவரது சொற்பொழிவு முடிந்து, மேடையிலுள்ள நாற்காலியில் தனதருகில் அமர்ந்த ஜியிடம், இயல்பாய் மெல்லிய குரலில் அவர் தனது உரையாடலைத் தொடர்ந்தார்.
“அத்தனையும் உண்மை ஜி. என்னுடைய மருந்து இந்த நாட்டுக்கு நல்லது செய்ததா, கெட்டது செய்ததா என்று நான் வாதாட விரும்பவில்லை. ஆனால், ஒரு மனிதனோட உரிமையை அவன் அனுமதியில்லாமல் பறிக்க நான் காரணமாயிட்டேன். ஆக, இந்தக் கண்டுபிடிப்பு அதற்கு நிவாரணமா அமையலாம்.”
“எப்படி டாக்டர்?”
“இப்போ ஹாஸ்பிடல்ல பிரசவம் நடைபெறுவதற்கு முன்னால், தடுப்பூசி என்கிற பேர்ல எல்லோருக்கும் ஊசி செலுத்தப்படுது. ஆனால் அதுக்கு முன்னால் நான் இப்போ புதுசா கண்டுபிடிச்சிருக்கிற மருந்தை செலுத்தினால் அடுத்து அவங்க செலுத்தப்போற மருந்தோட வீரியத்தை முற்றிலுமாய்ச் செயலிழக்கச் செய்ய முடியும். ஒரு புது பிரசவத்திலே இதைப் பரிசோதித்துப் பார்க்கணும். மீண்டும் அந்தத் தம்பதிக்குக் குழந்தை உண்டானால், தேர் இஸ் இட். பிறகு இதை ஒரு மௌனப் புரட்சியா பிரபலப்படுத்தலாம். உங்க நிறுவனம் இதை உற்பத்தி செஞ்சு, ஒருத்தருக்கு, அவங்க மற்றவங்களுக்குன்னு வினியோகிக்க, ஒரு சைன் டிஸ்ட்ரிப்யூஷன் ஏற்படுத்தலாம். மறைமுகமா ஒரு பாதிப்பை ஏற்படுத்திய என் மருந்தை, மறைமுகமா இந்த மருந்து முறியடிக்கும்.”
“ஏன், இதை நேரிடையா மக்களிடம் விளம்பரப்படுத்தி செயல்படுத்த முடியாதா டாக்டர்?”
“நீங்க இந்த அரசாங்கத்தோட வலிமையை குறைச்சு மதிப்பிடுறீங்க ஜி. இங்கு குழுமியிருக்கும் கூட்டத்திலே எத்தனை பேர் அரசாங்க ஒற்றர்கள்னு என்னாலே சொல்ல முடியும். இந்த முப்பது வருஷமா நான் அதிகம் பட்டுட்டேன். நான் ஒரு சுதந்திர கைதி. என் முதுகிலே எந்நேரமும் ஒரு துப்பாக்கி முனை அழுத்திட்டிருக்கு. உங்க நிறுவனத்தின் இந்த நிகழ்ச்சி சரியான நேரத்திலே எனக்குக் கிடைச்ச ஒரு நல்ல வாய்ப்பு. அதனாலதான் நீங்க என்னைக் அழைத்தபோது எந்த மறுப்பும் இல்லாமல் சம்மதிச்சேன். இத்தனை வருஷமா நான் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் அவையும் அரசாங்க நிகழ்ச்சிகள்.
“உலகம் முழுவதும் பல கண்டுபிடிப்புகள் சிலரின் சுயநலத்திற்காக மக்களை அடையாமல் போகுது. அல்லது என்னுடையதைப் போல தவறா திணிக்கப்படுது. நாற்பது வருஷத்துக்கு முந்தி
மூலிகையின் மூலமா தயாரிக்கப்படுற ஒரு மாத்திரையில் எய்ட்ஸிற்கு நிவாரணம் அளிக்க முடியும்னு ஒரு செய்தி வந்தது தெரியுமா?”
“பட், அது போலின்னு நிரூபிக்கப்படாமல் போயிடுச்சே.”
“கரெக்ட். அந்த முயற்சியில் இறங்கியவர் யாருமில்லை, என்னுடைய தந்தைதான். தனது கண்டுபிடிப்பு உண்மைதான்னு அவர் தீவிரமா நம்பினார். ஆனால் அவர் எடுத்த முயற்சிகள் அத்தனையும் அவருக்கு எதிராகவே அமைந்தன. பிறகு அவர் தனது இறுதி காலத்தின்போது மனநிலை சரியில்லாமல் இறந்து போனார். அவருக்கு மனநிலை சரியில்லாதது மட்டும் கொஞ்சம் அதிகமா விளம்பரப்படுத்தப்பட்டு, கடைசியிலே அவரது கண்டுபிடிப்பு வெளியே வராமலே போயிடுச்சு. என் தந்தை மேலே எனக்கு அபார நம்பிக்கை உண்டு. அவரது கண்டுபிடிப்பு தவறா அமைய வாய்ப்பில்லே என்பது என் அபிப்ராயம். ஆனால், அவருடைய இறுதிகால நிலையை எனக்கு எதிரா அரசாங்கம் பயன்படுத்தற வாய்ப்பு அதிகம். என்னுடைய கண்டுபிடிப்பு ஒன்று மக்களுக்கு எதிரா இந்த அரசாங்கம் பயன்படுத்துகிறதுன்னு நான் சொல்ல ஆரம்பித்தால் அடுத்த நொடி, எனக்குப் பைத்தியக்கார முத்திரை குத்தி, முழுசா முடிச்சிடுவாங்க. அதனாலே ஒரு மாற்று தயாரிக்கிற வரைக்கும் எனக்கு பொறுமை தேவைப்பட்டது. நௌ ஐ ஹவ் டன் இட்.”
“நான் என்ன செய்யட்டும்?”
”முதல்லே இதைப் பரீட்சிக்கணும். அதுக்கு உங்க உதவி தேவை.”
அனைத்தையும் கேட்டு முடித்த விஜே, “யெஸ் ஜி. நாளை மாலை நாம திருச்சி போறோம்.”
சென்றார்கள். அடுத்த மூன்றாவது நாள் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
ஜனவரி 2051
கதவைத் திறந்து உள்ளே நுழைந்த விஜேயைக் கட்டிப்பிடித்து முகம் முழுக்க சிவப்பாய் வரவேற்றாள் அவள் மனைவி.
“என்ன செம மூடு போல.”
“நான் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன்.”
“நாளைக்கு என்னுடைய பர்த்டே. எப்பவும் போல நான் மறந்துடுவேன். நீ கிஃப்ட் கொடுத்து திகைக்க வைப்பே, பட், இப்ப அது முடியாது. என் கம்ப்யூட்டரே நான் கிளம்பும்போது ஞாபகப்படுத்தி அனுப்பியது.”
பொம்மை ஒன்றை கையில் பிடித்துக் கொண்டு, இவனைக் கண்டதும் சிரித்த மகனை கட்டிலில் இருந்து வாரி எடுத்து முத்தமிட, “நோ விஜே. இது ரியலி உங்களுக்கு ரொம்ப சர்ப்ரைஸான பர்த்டே கிஃப்ட், யூகிக்க முடியாது.”
யோசித்தான். என்ன தரப் போகிறாள். அவளைப் பார்த்தான். புதிதாய்ப் பூத்த ரோஜா போல், அப்பொழுதுதான் குளித்து, உடுத்தி, பளிச்சென்றிருந்தாள்.
“என்ன அது? நீயே சொல்லிடு.”
“நமக்கு மற்றொரு குழந்தை விஜே.”
உண்மையிலேயே இன்ப அதிர்ச்சி அவனைத் தாக்கியது. டாக்டர் அதுலின் கண்டுபிடிப்பு நிச்சயமாகிவிட்டது. ஆனந்தத்தில் அவளைத் தூக்க, “ஓ மெதுவா, முதல்லே ஜி-யிடம் பேசுங்க.”
“நிச்சயமா, உடனே பேசணும்.”
ஜி உடனே கிடைக்கவில்லை. ஆபீஸில் அவனது கம்ப்யூட்டருடன் தொடர்பு கொண்டு, அது இவன் யார் என்று வினவ, தனக்கென அவன் கொடுத்திருந்த அடையாள எண்ணை தெரிவித்தான். அவனது அரசாங்க அடையாள எண்ணைக் கேட்டு கம்ப்யூட்டர் சரி பார்த்துக்கொண்டு, “தங்களுக்கு ஒரு செய்தி காத்திருக்கிறது” என்றது.
“விஜே. டாக்டர் எனக்கு நேற்று ஒரு தகவல் தந்தார். நம்முடைய உற்சாகத்தைப் பறிக்கிற தகவல். ஒரு முக்கியமான வேலையா நான் வெளியில் போறதால இதில் மெஸேஜ் பதிவு செஞ்சு வெச்சிருக்கேன். ஏதாவது ஆச்சுன்னா ஆதாரமா இருக்கட்டுமே. டாக்டர் தனது சமீபத்திய கணிப்பு நிச்சயமானதுன்னு உறுதிப்படுத்தறார். அவர் கொடுத்தாரே மாற்று மருந்து, அது தாயை அடுத்து மலடாக்காமல் தடுத்திடுது. அரசாங்கம் பிறகு செலுத்தும் மருந்தோட வீரியத்தைச் செயலிழக்க வைக்குது என்பதெல்லாம் சரி. உன் மனைவி விரைவில் கர்ப்பமடையலாம். ஆனால்…,”
சற்று நிறுத்தி மறுமுனை தொடர்ந்தது. ”ஆனால் சைட் எஃபெக்ட்டா, அல்லது அவருடைய புது கண்டுபிடிப்பில் ஒரு குறையா, எப்படி வேணும்னாலும் சொல்லலாம். அது பிறக்கிற ஒவ்வொரு குழந்தையையும் பாதிச்சிடும்னு திட்டவட்டமா நம்பறார். அதாவது தாயை காக்கிற மருந்து குழந்தையைப் பாதிக்குது. புதுசா பிறக்கிற குழந்தை நிரந்தர இம்பொடென்ட் விஜே. அந்தக் குழந்தைக்குத் தாயாகவோ, தகப்பனாகவோ ஆகும் தகுதி இல்லவே இல்லை.”
அதிர்ச்சி காதில் அறைந்தது. புதிதாய்த் தொற்றிய இன்பத்தை புதுச் செய்தி முற்றிலும் அழிக்க, பலவீனமாய் உணர்ந்தான். “தன்னால் இதை சரிப்படுத்திட முடியும்னு டாக்டர் நம்பறார். முடியும், அவராலே முடியும். இவ்வளவு தூரம் வந்த அவராலே இந்தப் பிரச்சினையையும் சரி பண்ண முடியும். முயற்சி பண்ணப் போகிறேன் என்கிறார். ஆனால், அது எத்தனை நாள், எத்தனை மாசம், எத்தனை வருஷம் – அதான் தெரியலே விஜே.”
தன்னிரக்கம் தோன்றியது. இலக்கில்லாமல் கோபம் வந்தது. எதிரே பாதை மூடிக்கிடப்பதாய்த் தெரிந்தது. சோர்வாயச் சரிந்தான். இப்பொழுது அபாயகரமான கட்டத்தில் இருப்பதாய்த் தோன்றியது. பிறக்கும் அனைத்தும் மலடானால்? நினைக்கவே சகிக்காமல், “நோ” என்று பலமாய்த் தலையாட்டினான்.
மறுநாள் காலை ஜி தொடர்பு கொண்டான். “எங்கே போய்ட்டே ஜி? என் மனைவி இப்போ கர்ப்பம். சந்தோஷத்தைப் பரிமாறலாம்னு பேசினால், நீ வெச்சிருந்த மெஸேஜ், எல்லாத்தையும் கவுத்திடுச்சு. வாட் இஸ் திஸ், எல்லாமே அவ்வளவுதானா?”
“இல்லை! நேற்று மிக முக்கியமான அப்பாயின்ட்மென்ட். மிஸ்ராவை சந்திக்கப் போயிருந்தேன்.”
“யார் மிஸ்ரா?”
“குடியரசு கட்சி, நம்ம நாட்டின் எதிர் கட்சி, முப்பது வருஷமா எதிர்கட்சியாகவே இருந்துட்டு, இன்னமும் ஆட்சியைப் பிடிக்க போராடிட்டு இருக்கே, அதனோட தலைவர். அப்புறம் என்ன கேட்டே, எல்லாமே அவ்வளவு தானான்னா? இல்லே விஜே. இனிமேல்தான் எல்லாமே.”
-நூருத்தீன்
இந்நேரம்.காம்-ல் 24 அக்டோபர் 2012 அன்று வெளியானது
Photo by Alexander Wende on Unsplash