அரபு மொழி கிறித்தவர்களுக்கு தேவனின் பெயர் அல்லாஹ். அல்லாஹ் என்ற இறைவனை அழைக்கும் அவர்கள் அந்த இறைவனின் ஏகத்துவத்தை நிராகரித்து நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களை அல்லாஹ்வின் மகன் எனக் கூறிக் கொள்கிறார்கள்; முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவத்தை நிராகரிக்கிறார்கள். கல்வி அறிவு நிரம்பிய அரபு கிறித்தவர் ஒருவரிடம் இமாம் இப்னுல் ஃகைய்யூம் (ரஹ்) உரையாடியுள்ளார். காலம் ஹிஜ்ரி எட்டாம் நூற்றாண்டு. தர்க்கரீதியான அந்த உரையாடல் படு சுவையான தகவல். அல்-ஸவாயிக் அல்-முர்ஸலா (الصواعق المرسلة), எனும் தம் நூலில் அதை விவரித்துள்ளார் இமாம்.
அந்த உரையாடல் அழகிய விவாதத்திற்கான உதாரணம்.
அல்லாஹ்வைப் பற்றிய கிறித்தவர்களின் இகழ்ச்சி என்று முஸ்லிம்கள் கருதும் விஷயத்தைக் குறித்து எங்களது பேச்சு திரும்பியது. என்னுடன் வாதம் புரிபவரிடம் நான் கூறினேன்: “முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பெற்ற நபித்துவத்தை நீங்கள் நிராகரிப்பது அகில உலக இறைவனை நீங்கள் வெகு மோசமாய் இழிவுபடுத்துவதாகும்.”
“அது எப்படி?” என்று கேட்டார் கிறித்தவர்.
“ஏனெனில், முஹம்மது (ஸல்) மெய்யான தூதரல்ல, நேர்மையற்ற அரசர் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அவர் மக்களை வாளால் வென்றார், உடைமைகளைக் கொள்ளையிட்டார்; அவர்களின் பெண்களையும் பிள்ளைகளையும் கடத்தினார் என்கிறீர்கள். இன்னும் அதிகமாய், தாம் செய்பவற்றையெல்லாம் இறைவன்தான் கட்டளையிட்டான் என்று அவர் அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைத்ததாகக் கூறுகிறீர்கள். ஆனால் உண்மையோ அதுவல்ல.
“முஹம்மது (ஸல்) தமக்கு இறை வசனம் (வஹீ) அருளப்படுவதாக பொய்யுரைத்தார்; அவருக்குமுன் தோன்றிய நபிமார்களின் இறைச் சட்டத்தில் சிலவற்றை நிராகரித்தும் சிலவற்றை ஏற்றுக்கொண்டும் அவற்றை அவர் பேரழிக்குவுக்கு உட்படுத்தினார்; இறை பக்திகொண்ட ஊழியர்களையும் முந்தைய நபிமார்களைப் பின்பற்றுபவர்களையும் அவர் கொன்றொழித்தார் என்கிறீர்கள்.
“இப்பொழுது இரண்டில் ஒன்றே சரியாக இருக்க முடியும். முஹம்மது (ஸல்) செய்த இவை அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக்கொண்டிருந்தான்; இவற்றை அறிந்திருந்தான், அல்லது இதைப் பற்றி அவனுக்குத் தெரியவே தெரியாது.
“முஹம்மது (ஸல்) செய்தவற்றை அல்லாஹ் அறிந்திருக்கவில்லை என்று நீங்கள் சொல்வீர்களேயானால், அல்லாஹ் அறியாதவன், அக்கறையற்றவன் என்று நீங்கள் கற்பித்ததாக ஆகும்.
“முஹம்மது (ஸல்) அவர்களின் செயல்களை அல்லாஹ் அறிந்திருந்தான் என்று நீங்கள் கூறினால், முஹம்மதை தடுக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு உண்டா இல்லையா என்று நீங்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டும்.
“முஹம்மது (ஸல்) அவர்களைத் தடுக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு இல்லை என்று நீங்கள் பதிலுரைத்தால், அல்லாஹ் பலவீனமானவன், ஆற்றலற்றவன் என்று பழிச் சொல்லாகிறது அது.
“அல்லாஹ்வுக்கு அந்த ஆற்றல் இருந்தது, ஆனால் அவன் தடுக்கவில்லை என்றால் அல்லாஹ் பாவம் புரிகிறான், அசிரத்தையாளன், அநீதியிழைக்கிறான் என்று அவன்மீது பெரும் குற்றம் சாட்டுவதாகும்.
“முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பெற்றதிலிருந்து அவர்கள் இறந்து போகும்வரை, நபியவர்களின் அனைத்து வேண்டுதல்களையும் அல்லாஹ் நிறைவேற்றியுள்ளான். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளான்; அவர்களின் அனைத்து எதிரிகளையும் அவர்கள் வெல்வதற்கு அருள் புரிந்துள்ளான்; அவர்களை எதிர்த்தவர்களை, அவர்கள் மீது பகைமை பாராட்டியவர்களை தாழ்த்தியுள்ளான். முஹம்மது (ஸல்) அவர்களின் தரம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது; அவர்களின் நன்மதிப்பு மக்களின் மனங்களில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேநேரத்தில் நபியவர்களின் எதிரிகளுடைய தரமும் மதிப்பும் நாளுக்கு நாள் குறைந்து போய்விட்டது.
“தெள்ளத்தெளிவாய் உள்ள இத்தகைய தெய்வீக உதவிகள் – இவையாவும் நீங்கள் அல்லாஹ்வின் மிகப் பெரும் எதிரி எனக் கருதும் மனிதருக்கு, மக்களுக்குப் பெரும் தீங்கிழைப்பவருக்கு இறைவனால் அருளப்பட்டதா? தயவுசெய்து சொல்லுங்கள். இதைவிட அல்லாஹ்வை இகழும் பழிச்சொல், இகழ்ச்சி ஏதேனும் உள்ளதா?”
இந்த வாதங்களினால் அந்தக் கிறித்தவருக்கு ஏற்பட்ட தடுமாற்றம் மறைக்க இயலாமல் தெளிவாய்த் தெரிந்தது.
அவர் பதிலுரைத்தார். “அல்லாஹ் என்னைக் காப்பானாக! நான் முஹம்மது (ஸல்) பற்றி அப்படிக் கூறவில்லை. அவர் ஒரு உண்மையான இறைத் தூதர். அவரைப் பின்பற்றுபவர்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் நற்பேறு பெற்றவர்கள். இதை எந்த நியாயமான மனிதனும் ஏற்றுக்கொள்வான்.”
“அப்படியானால் இந்த நற்பேற்றை நீங்களும் அடைய எது தடுக்கிறது?” என்று கேட்டேன்.
அதற்கு அவர், “அல்லாஹ்வின் ஒவ்வொரு நபியையும் பின்பற்றுபவரும் நற்பேறு பெற்றவர்தான். உதாரணத்திற்கு மூஸா நபியை பின்பற்றுபவரும் நற்பேறு பெற்றவரே,” என்று பதிலுரைத்தார்.
“இப்பொழுது நீங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக்கொண்டீர்கள். அப்படியானால் அறிந்து கொள்ளுங்கள். ‘தம்மைப் பின்பற்ற மறுப்பவர் நிராகரிப்பாளர், மறுமையில் அவருக்கு நரகம்’ என்று முஹம்மது நபி (ஸல்) அறிவித்துள்ளார்கள். நபியவர்களின் இந்த அறிவிப்பில் நீங்கள் நம்பிக்கைக் கொண்டால் நீங்கள் அவரைப் பின்பற்ற வேண்டும். அவை தவறென நீங்கள் நம்பினால், அது முஹம்மது நபி (ஸல்) நபித்துவத்தை நீங்கள் மறுப்பதாகும். உங்கள் மறுப்பு உண்மையென்றால் நபியவர்களைப் பின்பற்றுபவர்கள் நற்பேறு பெறாதவர்கள் என்றாகிறது. ஆனால் அவர்கள் நற்பேறு பெற்றவர்கள் என்று சற்றுமுன் நீங்கள்தான் கூறினீர்கள்.”
கிறித்தவர் வாயடைத்துப் போனார். எந்த பதிலும் உரைக்கவில்லை. பிறகு கூறினார், “நாம் வேறு ஏதாவது பேசுவோமே.”
-நூருத்தீன்