இந்திய யூனியனிலுள்ள முஸ்லிம்கள் இனி என்ன செய்வார்கள், எந்தக் கட்சியைச் சார்ந்து நிற்பார்கள், இந்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பார்களா, இந்தியாவில் ஐந்தாம் படையினராக இருந்துகொண்டு பாக்கிஸ்தானுக்கே அந்தரங்க உதவி செய்து கொண்டிருப்பார்களா? என்பன போன்ற விசித்திரமான விபரீதக் கேள்விகளைப் பலர் கிளப்பிவிட்டுக் கொண்டேயிருக்கின்றனர். ஒரு சில பொறுப்பற்ற சென்னைத் தினசரி பத்திரிகைகளும் வாரத் தாள்களும் வைக்கோற் போரில் பெட்ரோலை ஊற்றி நெருப்புப் பற்றவைப்பது பொன்ற காரியங்களைச் செய்யத் தொடங்கியிருக்கின்றன. இதுவும் விதியின் விபரீத விளையாட்டுத்தான்!
இந்தியாவிலுள்ள சகல முஸ்லிம்களும் பாக்கிஸ்தானை அடைவதற்காக அரும்பாடு பட்டது உண்மையே; அந்தப் பாக்கிஸ்தான் கிடைத்துவிட்டதும் கண்ணுக்குத் தெரிந்த உண்மைக் காட்சியே. ஆனால், இவ்வளவு பாடு பட்டுப் பாக்கிஸ்தானை அடையச் செய்த இந்திய முஸ்லிம்களைப் பரம எதிரிகளென்றும் ஐந்தாம் படையினரென்றும் ராஜாங்கத் துரோகம் இழைக்க வல்லவர்களென்றும் குழப்பத்தையே சதா விரும்புகிறவர்களென்றும் ஹிந்துக்களை அடியோடு ஒழித்துவிடப் பாடுபடுகிறவர்களென்றும் பொய்ப் பிரசார மூலம் இழிவுபடுத்தத் துணிவது மிகவும் அற்பமானதும் புத்திசாலித்தனமற்றதுமாகும். முஸ்லிம்கள் தங்களுக்குச் சட்படப்படி உரிமையாயுள்ள பாக்கிஸ்தானை விழைந்து பெற்றுக்கொண்ட அந்த ஒரு குற்றத்துக்காக (?) முஸ்லிம்களைப் பரமவிரோதிகளென்று திரித்துக் கூறுவது ஈடு இணையற்ற பொய்ப் பிரசாரமேயாகும். இந்திய அரசாங்கத்தின் அதிகயுன்னதப் பதவியில் வீற்றிருக்கும் ஸ்ரீ படேல் போன்றவர்களே இம்மாதிரியான விஷமத்துக்கு ஆக்கமோ ஊக்கமோ அளிப்பது பெருந் தவறாகும்.
இந்தியாவில் வசிக்கின்ற எந்த முஸ்லிமும் தற்போது இங்கு நிலைபெறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு விரோதியல்லன். ஏனென்னறால், சென்ற ஏழு அல்லது எட்டாண்டுகளாக இங்குள்ள முஸ்லிம்கள் பாக்கிஸ்தானுக்காகப் பாடுபட்டு வந்தகாலத்தில் அவர்கள் தங்கள் குறியில் பெற்றி பெற்று விட்டால், தாங்கள் ஹிந்துஸ்தானிலேயேதான் இருக்கவேண்டியவர்களாய் விடுவார்கள் என்னும் உண்மையை உணர்ந்தே அந்த உரிமைப் போராட்டத்தில் பங்கு பற்றி வந்தனர். அவர்கள் இந்தியா முழுதையும் பாக்கிஸ்தானாக்கி முஸ்லிம் அரசாங்கத்தை ஸ்தாபித்துவிட வேண்டுமென்றோ, அல்லது முதலில் பாக்கிஸ்தானைப் பெற்றுவிட்டுப் பின்னர் நாளடைவில் ஹிந்துஸ்தானையும் சிறுகச் சிறுகப் பாக்கிஸ்தானுடன் இணைத்துவிட வேண்டுமென்றோ சதி செய்தனரில்லை. எனவே, பாக்கிஸ்தான் ஏற்பட்டுவிட்ட இந்தக் காலத்தில் இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள்மீது அவநம்பிக்கை கொள்வதும் அவர்களை விரோதிகளாகவே பாவிப்பதும் அல்லது பாவிக்கும்படி தூண்டி விடுவதும் பெரிய பாவமான செயல்களாகும். பாக்கிஸ்தான் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென்று உழைத்த ஹிந்துஸ்தான் முஸ்லிம்கள் ‘இப்போதும் பாக்கிஸ்தான் மீதேதான் ராஜபக்தி விசுவாசத்துடனிருக்கின்றனர், ஹிந்துஸ்தான்மீது பகைமை பூண்டு நிற்கின்றனர்’ என்று சில பொறுப்பற்றவர்கள் கூறுவது, அல்லது நினைப்பது எதைப் போல் இருக்கிறதென்றால், பாரபக்ஷமின்றி ஸெஷன்ஸ் கோர்ட்டில் வழக்கைத் தீர விசாரித்துத் தக்க நீதியைச் செலுத்துகிற நீதிபதியைப் பார்த்து, “அவர் அந்தக் குற்றாளிக்குப் பரமவிரோதி; ஆகையால்தான் இம்மாதிரியான தீர்ப்புக் கூறினார்!” என்று பிதற்றுவதற்கு ஒப்பாகவே இருக்கின்றது. எனவே, முற்கூறிய நீதிபதியைப் போல நாம் நியாயமிருந்த கக்ஷிக்குச் சாதகமாகத் தீரப்புச் சொன்னோம்; அந்த நியாயத்தை உலகம் முழுதுமே ஏற்றுக் கொண்டது. அவ்வளவுடன் நம் வேலையும் பூர்த்தியாய் விட்டது. இதற்காக எம்மை உலகம் உள்ளளவும் பகைவர்களாக, ஐந்தாம் படையினராகக் கருதுவது எவ்வளவு பரிகசிக்கத் தக்கதாயிருக்கிறது!
|
இம்மாதிரி பொறுப்பற்ற விதத்தில் பிதற்றித் திரிவோர்க்கு மண்டையில் அடித்தாற்போலச் சென்ற 9-11-47 ஞாயிறன்று கலகத்தாவில் ஜனாப் ஹெச். எஸ். ஸுஹ்ரவர்தீ கூட்டிய “இந்திய யூனியன் முஸ்லிம் தலைவர்கள்” மகாநாட்டில், “நாம் நமது நாட்டக்காகவே உழைப்போம்: இதுவே நமது கொள்கையின் முக்கிய மூலதத்துவமா யிருந்து வருகிறது!” என்று சிம்மநாதம் புரிந்தார். ஏ, எங்களைப் பரம விரோதிகளாய் நினைக்கும் ஒரு சில ஹிந்து சகோதரர்காள். உங்களுக்கு இன்னம் என்ன வாக்குறுதி வேண்டும்? அன்று கல்கத்தாவில் கூடிய மகாநாட்டு மேடையில் இந்திய யூனியனிலுள்ள எல்லாப் பிரதம முஸ்லிம் தலைவர்களுமே தங்கள் நெஞ்சைப் பிளந்து ஹிருதயங்களை வெளியில் எடுத்து உங்கள் எல்லாரின் கண்முன்பும் காட்டிவிட்டார்கள். இன்னம் ஏன் வீண் சந்தேகம்?
ஜனாப் ஸுஹ்ரவர்தீயின் சில மணியான பேச்சுக்களைக் கேளுங்கள்:—
“இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் சமாதானத்துக்காகவும் ஒற்றுமைக்காகவும் தேசத்தின் அமைதிக்காகவும் இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே கூட்டுறவை நிலை பொறுத்தவும் பாடு படவேண்டும்.
“பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு தலைமையில் அமைந்துள்ள அரசாங்கத்தை நாம் மனப்பூர்வமாய் ஆதரிக்கிறோ மென்பதை உறுதியாகக் கூறுகிறோம்; இந்த ஆதரவும் வாயளவில் நின்றுவிடக் கூடிய வீண் வார்த்தையல்ல; ஆனால், உண்மையான, ராஜபக்தி விசுவாசத்துடன் கூடிய மெய்யான ஆதரவாகும்…”
இன்னம் என்ன வாக்குறுதி வேண்டும்? இங்கேயுள்ள ஒரு சில பொறுப்பற்ற ஆசிரியர்களின் ஆபாசமான பேனாவிலிருந்து வழியும் நாற்றம் பிடித்த சீழும் இரத்தமும் இந்த எம் வாக்குறுதியைக் கண்டேனும் வெட்கித் தலைகுனியுமா? பத்திரிகைகளின் ஆசிரியர்கள் என்ற பெயரை வைத்துக் கொண்டு, மிகவும் பொறுப்பற்ற முறையிலே முஸ்லிம்கள் மீது பாய்ந்து தாவும் படி தூண்டிவிடும் ஒரு சில மனிதத்தோல் போர்த்த பிரகிருதிகள் வாய்பொத்தி நிற்குமா?
நாம் இங்கு ஒரு முக்கியமான பெருமைமிக்க உண்மை யொன்றை மட்டும் கூற விரும்புகிறோம். அஃதாவது, இத்தென்னாட்டில், அதிலும் நம் தமிழ் மாகாணத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் வெறும் சகோதரர்கள் போல் மட்டும் ஒன்றித்து வாழவில்லை; ஆனால், இரட்டைப் பிறவியாக ஜனித்த இருவரைப் போல் கூடிக் குலவி மகிழ்ந்து வாழ்கின்றனர். நாம் முன்னே குறிப்பிட்ட ஆசாமிகளாகிய ஆசிரியர்கள் இன்னம் எவ்வளவுதான் முஸ்லிம்களைத் தூற்றியும் ஹிந்துக்களைத் தூண்டி விட்டும் எழுதி எழுதிப் பேனா முனையை முறித்துக் கொண்ட போதினும் கலகம் என்பதொன்று மூளப் போவதில்லை. என்றாலும், நம் முஸ்லிம் சகோதரர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் :—
முஸ்லிம்களை வசைபுராண மொழிகளால் நீசத்தனமாக வர்ணிக்கும் பத்திரிகைகள் இருக்கிற பக்கமும் திரும்பாதீர்கள். அப்படித் தப்பித் தவறி அந்தக் குரோத வாசகங்களைப் படிக்க நேர்ந்தால், பதறிவிடாதீர்கள். ரசூலுல்லாவை எதிரிகள் எவ்வளவோ இம்சித்தார்கள். அந் நபியைப் பின்பற்றும் நாம் அவர்கள் கைக்கொண்ட பொறுமையில் ஆயிரத்தில் ஒரு பங்கையாவது காட்டவேண்டும்.
இரண்டாவதாக, நம்மிடை வதியும் ஹிந்து சகோதரர்களை எக்காரணம் பற்றியும் சந்தேகிக்காதீர்கள்; வெறுக்காதீர்கள். இருட்டில்தான் விளக்குத் தேவைப்படும். அதைப் போல் முஸ்லிம்களாகிய நாம் காட்டும் ஜோதியைக் கொண்டுதான், இருளெனும் அந்த காரத்தில் விழுந்து கண்களை இறுக மூடிக்கொண்டு எடுத்ததற்கெல்லாம் நம்மை ஏசித்திரியும் “ஆசிரியர்கள்” விழிப்படைய வேண்டும். எனவே, பொறுமையென்னும் மதிப்பிலா மாணிக்கத்தை இழக்க வேண்டாம்.
மூன்றாவதாக, நம்மைக் குறித்துப் பொய்ப் பிரசாரம் புரியப்படுவதை மெய்யென்று யாராவது ஒரு ஹிந்து நண்பர் வாதாடினால், அவருடைய வாதம் எவ்வளவு அபத்தமான தென்பதை நீங்கள் உங்கள் செயல்களைக் கொண்டே நிரூபியுங்கள். இதை விடுத்து, வீண் தர்க்கத்தில் இறங்கி நிலமையை சீர்கேடடையும்படி செய்துவிடாதீர்கள்.
இறுதியாக, நம் முஸ்லிம் தலைவர்கள் மகாநாட்டில் நமது சார்பாக ராஜபக்தி விசுவாத்தைச் சிம்ம நாதம் புரிந்து வீரகர்ஜனை செய்த ஜனாப் சுஹ்ரவர்தீயின் முத்துப் போன்ற வார்த்தைகளை என்றுமே மறவாதீர்கள்.
முஸ்லிம்களுக்கு—அதிலும் இந்திய யூனியனில் வசிக்கும் நமக்கு, இது சோதனைக் காலம். சோதனை வந்து விட்டதே என்று கலங்காதீர்கள். மனத்தை நன்கு தேற்றிக்கொண்டு, நமது கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றி வருவோமாக!
முடிவில் நம் சகோதரர்கள்—ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சகோதரர்கள் நன்மைக்காக ஒரே ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம் : தோலெலாம் அழுகி, உறுப்பெலாம் குறுகி, ஊன் தண்ணீர் வழிந்தோடும் பயங்கரமான உருவம் படைத்த தீராத குஷ்டரோகமுள்ள மனிதனை யாரும் கட்டித் தழுவிக் கூடிக்குலவ விரும்பமாட்டாரல்லவா? அஃதே போன்று, “குஷ்ட ரோகம்” போன்று வெளிவரும் பத்திரிகைகளை, “குஷ்டரோகிகள்” போன்ற ஆசிரியர்களைக் கண்டு வியப்படையாதீர்கள். அவர்களுடைய பத்திரிகையைத் தீண்டாதீர்கள். அவர்களுடைய வார்த்தைகளைச் செவி யேற்காதீர்கள். நமக்கிருக்கும் சோதனை போதாதென்று அவர்கள் விலை மலிவாய்ப் பரப்பி வரும் அந்தப் பெரு வியாதிக்கு இரையாகாதீர்கள். கண்களை அகல விழியுங்கள். மக்களாக நிமிர்ந்து நடவுங்கள். நியாயமான வழிகளை விட்டு அநியாயமான வழிகளைத் திரும்பிப் பாராதீர்கள். சோதனைக் காலமென்னும் பயங்கரம் தானே நம்மைவிட்டு ஓடிப்போய் விடும்.
“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ(து) அஃதொப்ப(து) இல்.”
– பா. தாவூத்ஷா, பீ. ஏ.
தாருல் இஸ்லாம், நவம்பர் 1947
பக்கம்: 4 – 7