ஜ்ஜுப் பெருநாளன்று கராச்சியில் லக்ஷக் கணக்கில் குழுமியிருந்த பிரம்மாண்டமான முஸ்லிம்கள் கூட்டத்தில் கலந்து தொழுதுகொண்ட காயிதெ அஃலம் முஹம்மதலீ ஜின்னாஹ் அவர்கள், பாக்கிஸ்தானின் கவர்னர் ஜெனரல் என்னும் ஹோதாவில் வெளியிட்ட ஈதுச் செய்தி வருமாறு:-

“அல்லாஹுத்தஆலா யாரை நேசிக்கிறானோ அவர்களை அதிகமும் சோதிக்கிறான். நபி இப்ராஹீம் அவர்களை அல்லாஹ் என்ன கட்டளையிட்டான்? அவர் அதிகமும் நேசிக்கம் பொருளைப் பலியிடச் சொன்னான். இப்ராஹீம் நபியும் அக்கணமே தம் புதல்வரை (நபி இஸ்மாயீலை)ப் பலியிடச் சித்தமானார். இன்று கூட ஆண்டவன் பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலுமுள்ள முஸ்லிம்களைச் சோதிக்கிறான். நம்மிடமிருந்து எராளமான பெருந் தியாகத்தை அவன் எதிர்பார்க்கிறான். சமீபத்திலே நிலைநாட்டப்பட்ட நம் அரசாங்கம் நம் எதிரிகள் இழைத்த கொடுமையால் இன்னம் புண்ணில் ரத்தம் கசிந்து வடிகிறது. பாக்கிஸ்தானை நிலைபெறுத்துதற்காக உதவி செய்தார்கள் என்னும் காரணத்துக்காக இந்தியாவிலுள்ள நம் சகோதர முஸ்லிம்கள் பழி வாங்கப்படுகின்றனர். நம்மைச் சுற்றிலும் பேரிருள் கவிந்துகொண்டிருந்த போதினும் நாம் அரண்டுவிடவில்லை. ஏனென்றால், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காட்டிய அதே தியாக புத்தியை நாமும் காட்டுவோமானால், ஆண்டவன் நம்மைச் சூழ்ந்து நிற்கும் இருண்ட மேகங்களை, விலக்கி விட்டு அருள் மாரியை அன்று போல இன்றும் சொரிவானென்பது நிச்சயமாக எனக்குத் தெரியும்.

“எனவே, ஈதுல் லுஹாவாகிய இன்று—கீழ்க்கண்டவாறு பிரதிக்கினை யெடுத்துக் கொள்வோம்:- எவ்வளவு கடிய சோதனை ஏற்பட்ட போதினும் நம் லக்ஷியத்தில் கொண்டுள்ள சிறந்த அரசாங்கத்தை அழகாய் அமைப்பதில் நாம் எள்ளளவும் பின் வாங்கோம்; மேலும், நம் குறிக்கோளைப் பெற்றுக் கொண்டுவிடுவதற்காக நம்மாலான அத்தனையையும் தியாகம் புரிவோம்!

“மிக நீண்ட சரித்திரத்தில் நாம் எத்தனையோ முறை நம் எதிரிகளால் பெருமுயற்சி செய்து எடுத்துக்கொள்ளப்பட்ட அத்தனை கொடுமைகளையும் எதிர்த்து வெற்றி பெற்றதேபோல், இப்போது ஏற்பட்டுள்ள சோதனை மிகமிகப் பெரிதாயிருந்தும் நாம் மீண்டு விடுவோமென்றே நான் திடமாய் நம்புகிறேன். அப்படிப் பெறும் மீட்சியால் இருளடர்ந்த இரவினின்று வெளிப் போந்த ஜய சீலர்களாகவும் பலமிக்கவர்களாகவும் நாம் திகழ்வதுடன், நம் அரசாங்கமானது வெறும் வாழ்க்கை நடத்துவதற்காக மட்டுமின்றி, நல்ல வாழ்வு வாழ்வதற்காகவும் ஸ்தாபிக்கப்பட்தென்பதை உலகினர்க் குணர்த்துவோம்.”

அகில உலக முஸ்லிம்களுக்கு

“இந்தப் புனித நாளில் நான் என்னுடைய கண்ணியமான பெருவாழ்த்தை உலகிலுள்ள சர்வ முஸ்லிம் சகோதரர்களுக்கும், என் சார்பாகவும், பாக்கிஸ்தானில் வாழும் மக்கள் சார்பாகவும் பிரகடனப் படுத்துகிறேன். இந்த வாழ்த்துக் கூறவேண்டிய மகிழ்ச்சிக்குரிய தினத்தில் கிழக்கு பஞ்சாபிலும் அதனை அடுத்துமுள்ள பிராந்தியங்களில் 50 லக்ஷம் முஸ்லிம்கள் படும் கவலையாலும் கண்ணீராலும் மங்கிக் கிடக்கின்றனர். இந்தப் புண்ணியமான தினத்தில் ஆண்களும் பெண்களும் குழுமுகிற ஒவ்வொரு ஸ்தலத்திலும், வீடிழந்து, பொருளிழந்து, மக்களையிழந்து, உணவிழந்து, உறவிழந்து கண்ணீரும் கம்பலையுமாக நின்று தவித்துப் பதறிக்கிடக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் முதலிய சர்வ அகதிகளையும் ஞாபகத்திலிருத்திக் கொண்டு ஆண்டவனைத் தொழுது துஆ கேட்பார்களென்று நம்புகிறேன். உலகின் எந்தப் பாகத்திலிருந்த போதினும், ஒவ்வொரு முஸ்லிமும் இந்தக் கொடூரமான பயங்கர சோதனையில் சிக்கித் தவிக்கும் பெருங் கூட்டத்தினருக்கு ஆபத்தை விலக்கவும் கைகொடுத்துக் காப்பாற்றவும் தத்தம்மாலான சகோதர வாஞ்சையான உதவியையும் ஒத்துழைப்பையும் ஈந்து ஆதரிப்பார்களாக என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். பாக்கிஸ்தானை அழிக்க உலகின் எந்தச் சக்தியாலும் ஆகாது. எவ்வளவுக் கெவ்வளவு தியாகம் புரியும்படி நாம் நிர்ப்பந்திக்கப்படுகிறோமோ அவ்வளக் கவ்வளவு, நெருப்பிலிட்டுத் தூய்மையாக்கி எடுக்கப்படும் தங்கத்தைப் போலப் பிரகாசத்துடன் மிளிர்வோம். ஒழுங்கான திட்டப்படி நாம் நம்மாலான எல்லாவற்றையும் சீர்திருத்தி, ஒரு மிகப் பெரிய தேசத்தை நிலைநாட்டப் பாடுபடுவோமாக. பாகிஸ்தான் ஜிந்தாபாத்!”

– பா. தாவூத்ஷா, பீ. ஏ.


தாருல் இஸ்லாம், நவம்பர் 1947
பக்கம்: 3

Related Articles

Leave a Comment